மெய்த்துயர்
வணக்கம் கிரிசாந்,
இருத்தலியம் என்றால் என்ன? இது கவிதைகளில் பயன்படுத்தப்படுகிறதா?உதாரணங்கள் தர முடியுமா?
கவிதைகளுக்கும் கோட்பாடுகட்குமான சம்பந்தம் என்ன? கவிதைகள் கோட்பாட்டின் பிரகாரமாகத்தான் எழுத வேண்டுமா?இந்த கவிதையில் இன்ன கோட்பாடு என எப்படி அடையாளம் காண்பது?
உங்கள் கவிதைகள் எந்த கோட்பாட்டின் பிரகாரம் அமைந்தது?
லலிதகோபன்
*
வணக்கம் லலிதகோபன்,
தத்துவம் எனும் அறிவுத் தளத்தில் நானொரு வாசகன் மட்டுமே. தத்துவங்களை முறையாகவோ அல்லது முறைசாரமலோ பயின்றவனல்ல. எனது ஆர்வத்தின்பாற்பட்டு வாசித்தவையே பெரும்பாலானவை. ஆகவே தத்துவம் சார்ந்த கோட்பாட்டு விசயங்களில் எனது கருத்துகள் அபிப்பிராயங்கள் மட்டுமே.
எனது அறிதல் கருவி இலக்கியம். இலக்கியம் பல்வேறு அறிவுத்தளங்களுடன் ஊடிழை உறவைக் கொண்டது. ஆகவே அதனூடானான மென் அறிமுகங்கள் எனக்கு உண்டு.
எனது புரிதலில் உலகின் தத்துவ மரபு மிக நீண்டதும் விரிவானதும். அது ஒவ்வொரு காலகட்டமும் மாறும் பொழுது விரிவாகிக் கொண்டே செல்வது. இன்றைய காலகட்டத்தை பின்னைப்பின் நவீனத்துவ காலகட்டம் எனச் சொல்லும் தரப்பினர் உள்ளனர். மேலைத்தேய, கீழைத்தேய மரபுகளில் தத்துவம் ஒரு விரிவான அறிதல் கருவி. இலக்கியம் தத்துவம் போன்றே இன்னொரு அறிதல் கருவி.
இருத்தலியல் பற்றிய எனது ஓரளவு விரிவான வாசிப்பு எஸ். வி. ராஜதுரை எழுதிய இருத்தலியமும் மார்க்சியமும் எனும் நூலே. அதனைத் தவிர எளிய அறிமுக நூல்களை வாசித்திருக்கிறேன். காம்யூவின் அந்நியன், காப்காவின் விசாரணை போன்ற நாவல்களும் நீட்ஷேயின் சில நூல்கள், சார்த்தர் பற்றிய விடுதலையின் பாதைகள் எனும் நூலையும் வாசித்திருக்கிறேன். மேலதிகமாக சில கட்டுரைகளும் உரைகளும் பார்த்திருக்கிறேன். இருத்தலியமோ, பின்நவீனத்துவமோ அல்லது எந்த தத்துவமோ தனக்கான அடிப்படைக் கேள்விகளைக் கொண்டு விரிவடைவது.
இருத்தலியம் சுருக்கமாக நான் ஏன் இருக்கிறேன்? இந்த வாழ்க்கைக்கு வழங்கப்பட்ட அர்த்தங்கள் இருக்கிறதா? வாழ்க்கையின் நோக்கம் என்ன? போன்ற கேள்விகளுக்கான விரிவான தன் தரப்பை உருவாக்கிய ஒரு சிந்தனைத் தொகுப்பு. இந்தக் கேள்விகளை பல தத்துவங்கள் வேறுவேறு கோணங்களில் ஆராய்ந்திருக்கின்றன. இந்தக் கேள்விகளே என்னை இலக்கியத்தை நோக்கித் திருப்பியவையும். ஆனால் இத்தகைய கேள்விகள் இருக்கின்றன என்று அறிய முன்னரே இத்தகைய கேள்விகள் ஒவ்வொருவருக்குள்ளும் எழக்கூடியவை. வாழ்வுக்கு என்ன பொருள்? என்று அறிய விழையாத சிந்தனைகள் எதுவுமில்லை. இருத்தலியம் தன் நோக்கில் வாழ்க்கைக்கு நிச்சயிக்கப்பட்ட அர்த்தங்கள் எதுவுமில்லை. ஒருவரது தேர்வுகளே வாழ்க்கையை உண்டாக்குகின்றன. அவற்றுக்கு அவரே பொறுப்பு வேண்டும் என்றும் கருதுவது.
நவீன தமிழ் இலக்கியத்தில் பலரும் இருத்தலியல் சார்ந்த கேள்விகளை அணுகுவதாகக் கருதுவது இந்த ஆதாரக் கேள்விகளின் பொதுத்தன்மையாலேயே. விரிவான தத்துவ வாசிப்பு மற்றும் பயிற்சியிலிருந்து இவை உருவாகியிருப்பதாக நான் கருதவில்லை.
உதாரணத்திற்கு நகுலனின் இந்தக் கவிதை,
“எனக்கு
யாருமில்லை
நான்
கூட”
இது ஓர் இருத்தலியல் சிக்கலுக்கான கவிதை விபரிப்பாக ஒருவர் கொள்ளலாம். அதற்கென நகுலன் இருத்தலியல் சார்ந்தவர் என்று கொள்ள முடியுமா? அந்தக் கோட்பாட்டில் நின்று கவிதை எழுதியவர் என்று வரையறுக்க முடியுமா? எந்தவொரு கவிஞரும் ஒன்றோ ஒன்றுக்கு மேற்பட்டதோ கோட்பாடுகளைக் கொண்டு கவிதை எழுதுவதில்லை. அவர் தனது காலத்தினை தன் நுண்ணுணர்வால் எதிர் கொள்பவர். அவருக்கு கற்றல் பின்னணி இருக்கலாம். தத்துவமோ இசையோ வேறு கலைகளோ ஆர்வமிருக்கலாம். அவை ஓரளவு செல்வாக்குச் செலுத்தக் கூடும். ஆனால் உன்னதமான ஒரு கவிதை, கோட்பாட்டில் நிகழாது. அது கோட்பாடுகளை மீறிய ஒரு தருணத்தில் திகழ்வது. கோட்பாட்டுக்கு அமையக் கலையை உருவாக்க முடியாது. அத்தகையவர்கள் எல்லாச் சூழலிலும் இருப்பார்கள். அதைக் கலகம் என்றோ புரட்சிகரமானதென்றோ அவர்கள் கருதக் கூடும். ஆனால் காலத்தின் பேராற்றில் இந்தக் கோட்பாடுகள் பருவங்கள் மாத்திரமே.
மாறாத சில அடிப்படைகளின் இயல்பை மனதால் துழாவிக் கொண்டேயிருப்பது கவிமனம். அது பிடிகிடைத்தால் கவிதை நிகழும். அதற்குக் கோட்பாடுகளோ தத்துவங்களோ எவ்வளவு உதவும் என்பது தெரியவில்லை.
ஆய்வாளர்களுக்கும் கல்விப்புலம் சார்ந்தவர்களுக்கும் கோட்பாட்டு பின்னணி முதன்மையாகத் தோன்றும், ஆனால் ஒரு இலக்கிய வாசகருக்கு அது தத்துவத்தின் பகுதி என்ற புரிதலிருக்க வேண்டும். இலக்கியத்தை அதில் போட்டுப் பொருந்துகிறதா இல்லையா என நாம் வருந்திக் கொள்ளத் தேவையில்லை. கோட்பாடுகளை அறிவதென்பது வாசிப்பை விரிவாக்கும் மனப்பயிற்சிக்கும் வாசித்தவற்றைத் தொகுத்துக் கொள்ளவும் உதவக்கூடியவை.
கவிதைகளை வாசிக்க மதிப்பிட சில அழகியல் அடிப்படைகளை ஒருவர் தன் வாசிப்பின் மூலம் உருவாக்கி கொள்ள முடியும். தன் உலகு பற்றிய பார்வையை தத்துவத்தின் துணை கொண்டு பரந்துபடுத்தலாம். அது ஒருவகையில் வாசிப்பை இன்னும் விரிவான தளங்களுக்குக் கொண்டு செல்லும். ஆனால் கோட்பாடுகள் செருப்புப் போன்றவை. கலையோ கால்கள். சில நேரம் பொருந்தும். சிலவேளை சேராது. கவிதைக்கு வரலாறு மற்றும் தத்துவத்தைத் தூக்கிச்சுமக்கும் பணி இல்லை என்றே நினைக்கிறேன். அது நாவலின் களம். நாவல்கள் விரிவான தர்க்கங்களுடனும் புனைவுப்பரப்புடனும் தத்துவத்தை உரையாடக்கூடிய வெளியைக் கொண்டவை. ஒருவகையில் வரலாற்றுணர்வு அனைத்துக் கலைஞர்களுக்கும் வாசகர்களும் பார்வை விரிவை உண்டாக்கக் கூடியவை. நாம் மானுட குல வரலாற்றின் பருமட்டான ஒரு சித்திரத்தை அறிவது நாம் எவ்வகையான காலத்தில் நிலைகொள்கிறோம் என்ற போதம் கொள்ளவே.
எனக்கு தத்துவம் மீது சில ஆர்வங்கள் உண்டு. அவை வாழ்வு குறித்து என்னை வேறு கோணங்களில் சிந்திக்கத் தூண்டும் ஒரு கருவி மட்டுமே. இலக்கியமே என்னை தத்துவத்தை விட சிந்திக்கத் தூண்டுவது. எனது கவிதைகளில் ஏதாவது கோட்பாடுகள் உண்டா என ஒருவர் தேடலாம். ஆனால் எனக்கு அந்த கோட்பாட்டுத் தேவை கவிதையை எழுத அவசியமற்றது. இருந்து உருவாக்கும் கவிதைகளில் எனக்கு நம்பிக்கையில்லை. அது சட்டென உதிரும் மின்னல். பற்றிக் கொள்ளும் மனத்தை வைத்துக் கொள்வதே என்னளவில் போதுமானது.
அண்மையில் வெண்முரசின் இமைக்கணத்தில் வரும் ஒரு வரி என்னை தொந்தரவுபடுத்திக் கொண்டிருக்கிறது. எந்தத் தத்துவத்தின் கேள்விகளை விடவும் என்னை அது அலைக்கழிக்கிறது. அது எப்படி சாத்தியம் என்பது இப்போது வரை பிடிபடவில்லை. மனம் கொந்தளித்துக் கொண்டே அவ்வரிகளை நினைத்துக் கொள்கிறது. ஒரு கவிஞருக்கு அத்தகைய தொந்தரவுகளே முக்கியமானவை.
யமன் கர்ணனுள் புகுந்து இளைய யாதவனாகிய கிருஷ்ணனிடம் தன் துயர்கள் குறித்து தாள முடியாமல் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது யாதவன் சொல்லுமொரு வரி, எந்தத் தத்துவத்தின் அறிகேள்விகளையும் விட இந்த இலக்கிய உண்மை ஒரு கவிஞருக்குப் பெறுமதியானது,
“மானுடர் எவ்வகையிலும் எங்கும் வெளிப்படுத்தியிருக்கும் அனைத்துத் துயர்களும் பொய்யே”
இந்த வரிகளிலிருந்து விரிந்து செல்லும் பதிலில் புனையப்பட்ட துயர்களுக்கிடையில் மெய்த்துயர் என்பது குழைத்துக்கட்டப்பட்ட மண்சுவருள் விதையென இருக்கும் என்று உரையாடல் நீளும்.
யோசித்துப் பாருங்கள், எங்கள் அன்றாடத் துக்கங்களை பிறரின் அறியக்கிடைக்கும் துயர்களை எவ்வளவு மிகையாக உருப்பெருக்கிக் கொள்கிறோம். அத்துயரில் மூழ்குவதாகக் கற்பனை செய்து கொள்கிறோம். அவை உண்மை தானா? அந்த உணர்வுகளுக்கு அர்த்தமென்பது நம்மால் ஆக்கப்பட்ட மிகையான கற்பனை என்பதை நெஞ்சம் அறியும் கணம் இருட்காட்டில் தனியே நடந்து களைத்து அமரும் போது ஓளிரும் புலியின் கண்களை நேருக்கு நேர் பார்ப்பதைப் போன்றது. அதற்கே நாம் இலக்கியத்தை வாசிக்கிறோம். ஆக்குகின்றோம்.
*
இமைக்கணத்தில் வரும் பகுதி :