அலைகளிற் தோணியென நங்கூரமிட்ட வீடு

அலைகளிற் தோணியென நங்கூரமிட்ட வீடு

நீதிக்கான மொழியைக் கவிதை பலவகைகளில் பயின்று வருகிறது. அறத்தை வகுத்துரைத்தல், அது கவனம் கொள்ள வேண்டிய எல்லைகளை மறுவிரிவு செய்தல், அதனுள் அதுவரை ஒலிக்காத தன்னிலைகளின் குரல்களைப் பாடவைத்தல் என்று அதன் பயில்வுகள் பல.

மொழிக்குள் உருவான பெண் தன்னிலைகளின் நீதியும் வாழ்வுமாகிய குரல்களில் கோபத்தின் நுனி நாக்கென மொழி திரண்டவர் மாலதி மைத்ரி. அவரது கவிதைகளில் மீள மீள மொழியின் எல்லைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றது. அன்றாடத்தின் நெருக்கடிகளால் தகிக்கும் மொழி நிலம் அவருடையது.

அவரது கவிதைகளுக்குள் ஓசை கொண்ட நாக்கள் எழுகின்றன. அதன் இசை உட்குமுறும் லாவாவும் பாறையும் ஒன்றின் கீழ் ஒன்று அசைந்து நகரும் ஒலிகொண்டவை. பொறிபொறியென்று பாறையும் லாவாவும் உரசுவது போல் அவரது கவிதைகள் மொழியின் மேல் அசைகின்றன. வாழ்வின் வேட்கையும் அதன் பலநூறு கனல்வுகளும் கனவுகளும் அவரது கவியுலகின் உருவாக்கத்துடன் தமிழுக்குள் நுழைந்தன.

(மாலதி மைத்ரி)

*

படுகளம்

முன் இரவில் இறக்கத்தில்
நமது வாசலைக் கடந்து
இருட்டின் எல்லையை
நூல் பிடித்து வெளியேறுகிறோம்
அகன்ற வீதிகளை நோக்கி

தெருவிளக்குகள் எங்கோ ஒளிதெறிக்க
நமது நிழலின் முன்பின்
ஆட்டங்களில் தடுக்கிக்கொள்கிறோம்
இடுப்பில் துணிமூடிய சட்டியுடன்
நாய்கள் அங்கொன்றும்
இங்கொன்றுமாகக் குரைத்துப் பார்க்கும்
பழகிய வாசனைபிடித்து அடங்கும்

அவரவர் தெருக்களில் அவரவர்
பிரிகிறோம்
குடித்தனக்கார
ஆண்டைகளின் வாசலை நோக்கி

தெரு வாசலில் வெளிச்ச
சட்டத்துக்கு அப்பால் நின்று
குரலெடுப்போம்
அம்மா அன்னம் போடுங்க
கூடப்படிக்கும் பொடிசுகள்
எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும்

ஏகாலி வந்திருக்காம்மா…
அம்பட்டவன் வந்திருக்காம்மா…
தோட்டி வந்திருக்காம்மா…
சக்கிலி வந்திருக்காம்மா…
குடிப்புள்ள வந்திருக்காம்மா…

ஏண்டி உன் அப்பன், ஆத்தா வரலியா
ஒனக்கு நேரங்காலமே தெரியாதா
இப்பத்தான் சாப்பிடப்போறோம்
இருட்டுல நின்னு பூதங்காக்காதே
தோட்டத்துப்பக்கமா வந்து ஓரமா நில்லு

ஐயா…
தஞ்சம் கொடு
உணவு கொடு
தண்ணி கொடு
வேல கொடு
மண்ணு கொடு
வாழ்வு கொடு
உயிரு கொடு
கொடு… கொடு… கொடு… கொடு…

வரிசைகள் நீண்டுகொண்டே இருக்கின்றன

உடலே பெரும் பிச்சைப் பாத்திரமாக
வாய்ப்பிளந்து நிற்கிறோம்
எல்லாக் காலங்களுக்குள்ளும்

எல்லாத் தர்மங்களும்
நமது பாத்திரத்தில்
இடப்படுகின்றன
அவை ஒரு பழகிய
விலங்கெனப் படுத்திருக்கிறது.

*

மழைக்காலச் சிறுமி

வரிசை தப்பிய எறும்பு ஒன்று
வருகிறது தலையணை மேல்
அச்சுவார்த்த உடல்
சிறு அசைவுடன் நகர்கிறது

தலை தூக்கிப் பார்த்து
என்னைப் போலவே சிரிக்கிறது
வாயிலிருந்து சிறு தானியத்தைத் தவறவிட்டு

மீண்டும் தேடி எடுத்துக்கொண்டு போகிறது

மடியில் கட்டிவரும் என் அம்மாவின்
மரவள்ளிக் கிழங்கு வாசனையுடன்.

*

கடலை அழைத்து வருதல்

கடல் தன் தடயங்களால்
வீட்டை வளைய வந்துகொண்டிருக்கிறது.

துவைக்கப்படாத குழந்தையின் ஆடை
கடலின் வாசனையோடு
கொடியில் தொங்கிக்கொண்டிருக்கிறது
மூலையில் ஒதுங்கிவிட்ட குத்துமணல்
எதையாவது தேடும்பொழுது
கலகலக்கும் சங்குச் சிப்பிகள்
சட்டைப்பையில் கைவிடும்பொழுதெல்லாம்
விரல்களில் ஒற்றி வரும் மணலென
ஓவியரின் கழுவப்படாத நிறக்கிண்ணங்களைப்போல்
கடல் ஒவ்வொருவரிடமும் தங்கிவிடுகிறது

அலைகளில் வீடு நங்கூரமிட்ட
தோணியென அசைந்துகொண்டிருக்கிறது.

*

புலி

எனது வீட்டுத் தொலைபேசிப் பொறியருகில்
புலி நெடுநாளாய் அமர்ந்திருந்தது

அது எழுந்து நடந்தபோது
பொழுது இருட்டிவிட்டது
உறங்க எத்தனிக்கும் என்
காதருகே தன் சுடு மூச்சைவிட்டது
நான் பொய்யாகப் புரண்டு படுக்க
எல்லாரையும் தாண்டி எல்லாவற்றையும் தாண்டி
இடம்பெயர்ந்த அது
என் அருகே படுத்திருக்கும் என் மகளின்
அடிவயிற்றுச் சூடு தனது
முகத்தில் படியவெனப் படுத்துச் சுருண்டது
விடிந்ததும் கண்டேன்
என் மகளையும்
அவளுக்குப் பக்கத்தில்
ஒருபிடி அடுத்த தீவின் மண்ணையும்.

*

யானைக்கதை

முன்பு ஒருநாள் தன் அம்மா சொன்ன
கதைக்குள் இருந்த யானை ஒன்றை
என் அம்மா எனக்குப் பரிசாகக் கொடுத்தாள்
வெகுகாலம் கழித்து வெயில் தாளாமல்
யானையுடன் கடலுக்குச் சென்றேன்
மலைமலையாய் அலையெழுப்பி
நீருக்குள் புதைத்துப் புரட்டி
கிண்டிக் கிளறி வெளியே என்னைத்
தூக்கி எறிந்தது கடல்
கரைந்து மீந்த பாதித் தும்பிக்கையுடன்
கடலும் வானமும் ஒன்றாகக் கலந்து பிளிறியது
சோகத்துடன் திரும்பினேன்
ஊரே கூடி என்னை வேடிக்கைப் பொருளெனப்
பார்க்க
குழம்பிப் பின் திரும்பினேன்
தெருவெல்லாம் அலையலையாய் என் பின்னே
தொடர்ந்து வர
கடலில் கரைந்த ஒற்றை யானைக்கு
ஓராயிரம் தும்பிக்கைகளென
என் மகள் ஊருக்கெல்லாம்
ஒரு கதை சொல்லிச் செல்கிறாள்.

*

அதனதன் உலகம்

நினைவுகளை கொத்திக் கொத்தி
தோண்டி எடுக்கப்பட்ட புழுவாய்
மரங்கொத்தியின் அலகில்
சிக்கித் தவித்து
சிறு காற்று கிளை அசைக்க
பிடிநழுவி பட்டாம் பூச்சியாய்
திசைவிலகும் நீ

தழும்பாய் வளர்கிறது மரம்
இரை ஏமாற்றிய பசியுடன் பறவை
வானத்தை தன் சிறகுகளில்
சுருட்டி அமர்ந்திருக்கிறது
நீ எங்கு போய்விடுவாய் என்று

பறவையின் பார்வைக்கு அப்பால்
பாறைக்குள் விரிகிறது
தேரையின் இன்னும் ஒர் உலகம்.

*

நீரோடு போதல்

எனது கனவில் சிறுபூச்சியாய்
நீரோட்டத்தில் தலை காட்டியபடி
அண்ணாந்து மிதந்துகொண்டிருக்கிறாள்
பிறகு கைகளை நீட்டிக் காற்றை வாரியணைத்து
மூழ்கி எழ மாலை ஒளி வலையென நீருக்குள்
பரவுகிறது

குட்டிமேகங்கள் திட்டுத் திட்டாக
நகர்ந்துகொண்டிருக்க
சூரியன் ஒவ்வொரு மேகத்திற்குள்ளும்
மறையும்போது
மூழ்கித் தரைதொட்டு ஒருபிடி மண் அள்ளி
கரையில் வைத்துத் திரும்புகிறாள்
மேற்கே கரையொதுங்கும் சூரியனை
தவிர்க்க மீண்டும் மூழ்குகிறாள்
நீருக்குள் புதைவதில் உள்ள சுகமும் இதழும்
தாய்ப்பாலுக்குள் நிகழ்வதெனக்கொண்டு
அடி மண்ணைத் தொடுகிறாள்
வீடு திரும்பும் நினைவறுந்து

சந்தடியற்ற ஆறு அவளால் நிரம்பி
வழிந்து கரை தாவுகிறது.

*

ஒளியை அறுவடை செய்யும் பெண்கள்

நதி கலைந்த கருவெனப் பிசுபிசுத்துக்கிடக்க
நிலவை மறைத்து நிற்கும் தாழங்காடு

இருளை முக்காடிட்டு
அரிவாளும் சுரடுமாக நடப்பர்
ஆற்றங்கரைக்கு

பாம்பு தீண்டி இறந்தவளின்
நினைப்பு வந்தாலும்
அல்லாவே என்றபடிதான்
தாழையை இழுத்தறுக்கிறார்

புதர் அசைய அசைய
முள் கீறி நீரில் சிதைந்து கசியும் நிலா
தாழையோடு நிலவை அறுத்துக் கட்டி
தாயைக் காவல் வைத்து
மறைவில் மலம் கழிக்கும் மகள்

இரவுக் காற்றில்
பாம்பென நெளிந்து அசையும் தலையுடன்
வாழ்ந்த கதை இழந்த கதை பேசித்திரும்புகிறார்

சிலர் பறி முடைய
பகலைக் கண்டு அறியாத
மணமாகாப் பெண்கள் நிலவைக் கிழித்து
பாய்பின்னி மஞ்சள் ஒளியை
அறைக்குள் நிரப்பி உறங்குகிறார்.

*

மாலதி மைத்ரியின் நூல்கள்:

சங்கராபரணி – காலச்சுவடு

நீரின்றி அமையாது உலகு – காலச்சுவடு

நீலி – காலச்சுவடு

எனது மதுக்குடுவை – காலச்சுவடு

முள்கம்பிகளால் கூடு பின்னும் பறவை – அணங்கு

கடல் ஒரு நீலச்சொல் – அணங்கு

பேய் மொழி – எதிர்

TAGS
Share This