ஒரு புரட்சிகர குட்மோர்னிங்
ஒரு புத்தக நிகழ்வில் நானும் பேச்சாளர்கள் பட்டியலில் உள்ள அழைப்பொன்றை முகநூலில் அதன் ஏற்பாட்டாளர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். வெளியானதுதான் தாமதம், சிலர் பாய்ந்து விழுந்து அதற்குக் கண்டனமும் கடும்விசனமும் தெரிவித்திருப்பதாக நண்பர்கள் சொல்லினர்.
இனிய நண்பர்களே, இனிமேல் இது வழமையாக நடக்கப்போகிற ஒன்று. கண்டன அறிக்கைகள், முகநூல் புரட்சிகள், வசைகள், பேரணிகள், மாநாடுகள், உருவ பொம்மை எரிப்புகள் எல்லாம் இனிமேல்த்தான் கோலாகலமாக நடக்கவிருக்கிறது. இனி நான் எழுத்தாளர். என் உள்ளுணர்வை மதித்தே முன்செல்வேன். அது கண்ணிவெடியை, சப்பாத்தின் அடியின் உயரம் காணாதென்று பொருத்திக் கொண்டு நடப்பதைப் போன்றது. எதிர்காலத்தில் பாலைய்யா படங்களைப் போல் அசாத்தியமான சண்டைக் காட்சிகள் முகநூலில் நிகழவும் வாய்ப்பிருக்கிறது.
இந்தப் புரட்சியாளர்களின் கருத்துகளின்படி, இவன் ஒரு மோசமான மனிதன், ஆகவே இவனையெல்லாம் எதுக்கு இலக்கியம் பேச விடுகிறீர்கள், சமூகத்தை இவனிடமிருந்து காத்தே ஆகவேண்டியது தார்மீகக் கடமை என்று கோபம் கொப்பளிக்க பேசிக்கொண்டிருந்ததாகக் கேள்விப்பட்டபோது, உள்ளபடியே நெஞ்சு விம்மி, காது ஒரு கணம் அடைத்துக் கொண்டது. இப்படி நித்திரை கூட சரியாக இல்லாமல், அந்தக் கொஞ்ச நேர உறக்கத்தின் கனவிலும் புரட்சியும் சமூகநீதியும் மட்டுமே பேசி வாழும் இந்த சமூகநீதிக் காவலர்களுக்கு வரலாற்றினை உருவாக்கும் என் போன்றவர்கள் சார்பாக ஒரு நினைவுக் கோப்பை வழங்கி வைக்கப்பட வேண்டும்.
அதன் அடியில் பின்வரும் கூற்று பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டு வழங்கப்பட வேண்டும்.
“தோழர்களே, வேளைக்குப் படுத்து நித்திரை கொள்க, உங்களால் புரட்சி லேட்டாகிக் கொண்டிருக்கிறது”
*
போகன் சங்கரின் இந்தக் கவிதையுடன் ஒரு புரட்சிகரமான குட்மோர்னிங்..
எல்லா காலங்களிலும்
வேகமாக முன்னேறிச் செல்லும்
பீரங்கிகளின் குறுக்கே
சாலையின் மறுபுறமுள்ள
மலரைப் பறிக்கக் கடக்கும்
சிறுமிகளைப் போல்
சில கவிஞர்கள் இருப்பார்கள்
அவர்கள் அறிவற்றவர்கள் எனில்
அறிவற்றவர்கள்தான்.
துணிவற்றவர்கள் எனில்
துணிவற்றவர்கள்தான்.
நான் என் அறிவாலும்
துணிவாலும்
அவர்களைக் காப்பேன்.