நீர் என்பதும் ஒரு உயிர் வார்த்தை
நீ மோட்டர் சைக்கிள எடுத்திட்டு போவன் மச்சான், இல்லை சைக்கிள் என்டா நல்லமடா கதைச்சிட்டே போவம் என்றேன். ஆனால் உள்ளிக்கிருந்த பயம் இரண்டு வருடங்களாக மோட்டர்சைக்கிள் தொட்டதுமில்ல அதே வேளை லைசன்சுமில்லை, நண்பர்கள் இருவரும் அரைமனதாக சம்மதித்து ஒரே மோட்டார் சைக்கிளில் மூவரும் போவதென்று முடிவாகியது, எந்தத் தீர்மானமும் இல்லாமல் இடம் பற்றிய எந்த பிரக்ஞையும் இல்லாமல் ஒரு அசட்டுத்தைரியத்துடன் வெளிக்கிட்டோம்.
எனது நண்பனுடன் பேசி விட்டு முதலில் அவனது அத்தை வீட்டு கிணற்றை பார்த்துவிட்டு புறப்பட்டோம், மோட்டர் சைக்கிளை எடுத்தபோது அது எனது எல்லையை மீறி பாய்ந்தது, ஒரு நண்பன் குதித்துக்கொண்டான், வேற சைக்கிளென்டா நல்லது என்றான் இதற்கு முந்திய நிகழ்வுகளிலிருந்து வருவோம்.
நண்பனுடன் கதைத்தபோது அவன் அனல் பறக்கபேசினான், அவன் விரக்தியில் இருந்தான், ஒரு நாளைக்கு மூன்டு போத்தில் மினரல் வோட்டர் வாங்கோனுமென்டா எப்படி மச்சான், இவங்கள் சிலர் இத இயக்கம் செய்ததெண்டு சொல்லுறாங்கள். நான் சொல்லுறன் இது இவங்க தாடியளின்ட வேல தான் என்று ஆரம்பித்து அரசியல், அறிவியல் என்ற பல தள உரையாடல்களின் பின் தான் அந்த மோட்டார் சைக்கிள் பயணத்திற்கு தயாராகியது, வழி முழுக்க பாதினியம் இது வேற ஒரு சனியன் எத்தின கொமிற்றி போட்டு வெட்டினாலும் வளர்ந்து கொண்டே இருக்கு.
மோட்டார் சைக்கிள் புறப்பட்டது. ஏழாலை வடக்கு மெல்ல மெல்ல கடந்தபோது பத்து வீடுகளுக்கு ஒன்று என்டு தண்ணீர் தொட்டிகள். தண்ணீர் தொட்டியை பார்த்தபோது நான் கிரிசாந்தைக் கூப்பிட்டு’ தண்ணி தொட்டி தேடிவந்த கண்ணு குட்டி நான் என்ற பாடலை பாடினேன்’ இப்படியே கடந்தபோது எங்கே இறங்குவது எதை கேட்பது என்ற பிரச்சனை தான் இருந்தது.
அப்போது தான் போன் சிணுங்க எடுத்து பார்த்தேன், தெரிஞ்ச அக்காவின்ர கோல் ‘எங்கட அத்தவீட்ட சுதுமலையிலயும் எண்ண வந்திட்டாம்’ என்டா. சரி அங்கயும் போகலாம் என்றபடி நகர்ந்தோம், இரண்டாவதாக, கடை. அந்த கடையை கடை என்று சொல்வதை விட ஒரு சுப்பர் மார்கட் என்டு சொல்லலாம், ஆனா நாங்க அங்க வாங்கினது ஒரு தண்ணீர்ப்போத்தல்.
குடித்து கொண்டிருந்தபோது ஒரு ஐயா வந்தார் அவர் அந்த இடத்தில் நிக்கும் போது தான் தண்ணீர் பற்றிய பேச்சைத் தொடக்கினம்.
உண்மையாக அங்கே தண்ணீர் தாங்கிவைந்திருந்த வீடுகள் கொஞ்சம் பொருளாதார நிலையில் சற்று உயர்ந்த வீடுகளாகவே தோன்றியது, கதைத்தபடியே கிரிசாந்தை அந்த சிறுவர்களை நோக்கி அனுப்பிவிட்டு எங்கள் மோட்டார் சைக்கிள், நான்கு குடிமகன்கள்( அதாவது அற்ககோல் தண்ணி அருந்தியவர்களின்) சபையை அடைந்தது.
இன்னொரு போன் ‘மச்சான் பத்திரமா சேர்ந்திட்டியோடா’ ஓமடா
குடிமகன்களில் சற்று கறுத்த வில்லன் லுக் அடித்தவர் முதல் ரெரரான லுக்கில இருந்ததாலும், இந்த தண்ணி பற்றி கேட்டதும் வில்லனுக்கே வில்லன் வந்தமாதி அடங்கி பதில் சொன்னார், இதிலிருந்தே விளங்கியது எவ்வளவு பெரிய பிரச்சனையா இது உருமாறி இருக்கெண்டு, அவர் மெல்ல எங்கள உள்ளுக்க கூட்டிக்கொண்டு போய் தொட்டியையும் கிணத்தையும் காட்டினார் மிக அதிகளவான எண்ணெய் செறிவு, யதார்த்தன் கேட்டான்.
இத நீங்கள் எப்ப அவதானிச்சனியள் ?
அவதானிக்க எல்லாம் இல்ல தம்பி பிள்ளையளுக்கு பள்ளிக்கூடத்தில சொல்லி விட்டவயாம் , நாங்களும் முதல் நினைச்சம் யாரோ யாரின்டயோ கிணத்துக்குள்ள, ஒயில கலந்து போட்டாங்களென்டு பேப்பரிலயும் இது பெரிய செய்தியா வரேல தானே, பிறகு தான் பக்கத்து வீட்டுக்காரர் சொல்ல தான் விளங்கிச்சு என்டார், இந்த தருணத்தில் கிரிசாந் அந்த வீட்டுக்கார அம்மாவிடம் கேள்விகளை அடுக்கிக் கொண்டிருந்ததான்.
நானும் யதார்த்தனும் வெளியே வர அந்த கராச் கூட்டத்தில் ஒரு இருபத்தைந்து மதிக்கத்தக்க வெத்தில போட்டு வாயில் நிரப்பியபடி ஒரு இளைஞன் புதிதாக இணைந்திருந்தான், அடிக்கடி அண்ண என்டு எங்கள கூப்பிட்டார், பரம்பரை பணக்காரனாக இருக்க வேண்டுமென அவரின்ட பேச்சில விளங்கியது ‘ அண்ண நாங்கள் சின்னவயசில இருந்தே பணத்தில குளிச்சனாங்கள் என்டதால இந்த பணம் என்ன எல்லாம் செய்யுமென்டு எங்களுக்கு தெரியும், பணமிருந்தா எங்களுக்கு பிடிக்காதவன் வீட்டு கிணத்தில எண்ணைய கலந்து விடலாம் அப்பிடி யாரோ செய்த வேல தான் இது’
அப்ப இங்க வாற தண்ணி உங்களுக்கு காணுமே?
‘ஒரு நாளைக்கு மூன்டு பவுசரில வருது காணதே குறைய குறைய அடிக்கிறாங்கள்
ஆனா என்னென்டா அண்ண காலமயில அந்த கூட்டத்துக்க நிக்கேலாது, வேணுமெண்டா நாளைக்கு காலம வாங்க
எவ்வளவு கூட்டம் என்டு பாக்கலாம்’
இந்த தண்ணி எங்க இருந்து வருதென்டு தெரியுமே என்டன்.
‘எங்களுக்கு தெரியாதண்ண வாறாங்கள் அடிக்கிறாங்கள், நாங்கள் வேலைக்கு போறதால இத கவனிக்க நேரமில்ல’
நீங்க கேக்கறத பார்த்தா இனி பவுசர்காரனுக்கு பின்னால எங்கட பொஞ்சாதியள தான் அனுப்போனும் என்டிட்டு நமட்டு சிரிப்பொன்றை விட்டார்.
அண்ண இந்த ஒழுங்கைக்கு போங்கோ நிறய ஓயில் பாக்கலாம் என்டு, எதிர இருந்த ஒழுங்கய காட்டினார் நாங்கள் மெல்ல இறங்கினம். அடுத்ததாக போன வீட்டுக்கு முன்னால ஒரு இலந்தை மரம், ‘எலந்த பழம் எலந்த பழம் ஆ செக்க செவந்த பழம்’ என்று பாட ஒரு சிறுவன் வீட்டிலிருந்து எட்டி பார்த்தான்’ உனக்கு இந்த பாட்டு தெரியுமே ‘இது தேனாட்டம் இனிக்கும் பழம்’ ஓம் என்டான்.
அம்மா அப்பா நிக்கினமே?
‘அம்மம்மா அம்மம்மா’ ஒரு அறுபது வயது நிரம்பிய அம்மா வந்தா நாங்கள் இதுக்கு தான் வந்தம் என்றதும் எங்கள ஒரு ரட்சகர்கள் அல்லது தேவைதைகளிடம் தமது குறைகளை முறையிடும் மக்களை போல் இடைவிடாது விரக்தி வாசகங்களால் நிரப்பினர், ராங் மிகவும் தூரத்தில இருக்கு எடுத்திட்டு வாறது கஸ்ரம் என்டா அந்த அம்மா, யாருமே இங்க வந்து கவனிக்கல என்டார் ஐயா, ஆனால் அதில் நின்ட இன்னொரு ஐயாவோ சேர்பக்சல் விளம்பரம் குடுப்பவர் போல ‘கற நல்லது’ என்ற டயலொக்கின் பகுதி இரண்டாக ‘ஓயில் நல்லது’ என்ற மாதிரி பேசிக்கொண்டிருந்தார்.
(மூஞ்சிக்கு முன்னால என்ன புகழ்ந்தா பிடிக்காது ‘ பாஸ் நீங்க விலேஜ் விஞ்ஞானி பாஸ் என நினைக்க தோன்றியது).
அடுத்ததாக அப்படியே ஒரு நாயுண்ணிப் பத்தையை கடந்து ஒரு கோவில் பிரதேசத்தை அடைந்தோம்.
அங்கே எதேச்சையாக எனது தூரத்து உறவினரை சந்திக்கும் சந்தர்ப்பம் வாய்த்தது, அவர்கள் வீட்டில் சிறுவர்களுக்கு கடி சிரங்கு, கொப்பளங்கள் புண்கள் வந்திருந்ததன, அவர்களுடன் பேசிய போது அவர்கள் எங்களுடன் அந்த சிறுவர்களை அனுப்பி வைத்தார்கள் மூன்று சிறுமிகள் இரண்டு சிறுவர்கள், இரண்டு சிறுவர்களுக்கும் கொப்பளம், புண்கள், ஒரு சிறுவனுக்கு ஆசனவாயில் எல்லாம் கொப்பளம் என தாயார் சொன்னார், அங்கே இன்னொரு அதிசயம், அங்கே இருந்த சிறுவன் ஒருவனதும் சிறுமி ஒருத்தியினதும் பெயர், ஆதித்தியன் மற்றும் ஆதிரை இது யதார்த்தனுக்கும், கிரிசாந்துக்கும் என்னை வதைக்கும் நல்ல சந்தர்பமாகியது, நேரம் கிடைக்கும் போதெல்லாம் யதார்த்தன் ‘ இந்த பேரென்ன இரிரேட் பண்ணுது மச்சி’ என சொல்லத் தவறவில்லை.
இவர்களுக்கு ஒருபடி மேலாக சிறுவர்கள், என்னை வைத்து தமது காமடிகளை நிறைவேற்றினர், சிறுவன் ஆதிக்கு சொல்வதை போல, ஆதி பேசமாட்டியோடா, ஆதி போன நோண்டாத, ஆதி டேய் இப்படி ஒரு விளையாட்டை நடத்தி கொண்டிருந்தனர். முதலாவது ஆதிரை வீட்ட போனம் அங்கயும் ஒயில். பிறகு சிறுவன் ஆதி வீட்ட போனம் அங்கே போகும் வழியில் எனது நண்பிக்கு இந்த படங்களை வைபரில் பதிவேற்றியபடியே சென்றேன். அவர் இது நிறைய பேருக்கு இருந்தா ஒரு மெடிக்கல் காம்ப் அரேஞ் பண்ணலாம் என்றார், பின்னால் வந்த சிறுமிகளோ எங்கள் மூவருக்கும் கொம்பு வைத்தபடி வந்தனர், அதிலும் கிரிசாந்தின் ஆங்கிலப் பேச்சு பிடிக்கா குட்டிப்பெண்ணோ கொம்பு வைப்பதில் எக்ஸ்பேர்ட் ஆக இருந்தாள், ஆதியின் வீட்டிலும் தாய் தந்தைக்கு எல்லாம் கொப்பளங்கள், இது என்ன காரணத்தால் உருவானது என்று தெரியவில்லை, ஆனால் இது கடந்த இரண்டு மாதங்களாக அதிகமாக இருப்பதாக சொன்னார்கள், திரும்பி வந்து வீட்டின் திண்ணையில் இருந்தோம், தேநீருக்காக காத்திருந்தோம், மிக அற்புதமான தண்ணியள்ள ஏழாலையின், தேநீர் கையில் கிடைத்தது, மைலோ தேநீரினுள்ளே குளோரின் வாசம் மிதந்தது.
‘நீர் என்னும் வீட்ட வரலயா’ மெசேச் அலறியது, இல்ல. யாழ்ப்பாணத்து நீர் இனி பழயமாதி வீட்ட வராது என ரைப் பண்ணிவிட்டு போனைப் பார்க்கிறேன்.
நீருக்குள் விழுந்து டிஸ்பிளே மங்கிய எனது போன் ஸ்கிரீன் மெல்ல அணைகிறது.
(பெப்பிரவரி 22, 2015)
ஆதி பார்த்திபன்