தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை

தும்பி: அருகும் கனவுகளின் பேரிறக்கை

ஐந்து வருடங்களுக்கு முன் எமது பசுமைச்சுவடுகள் அமைப்பு தொடங்கி சிறுவர்களுக்கான உரையாடல்கள், கதைகூறல்கள் ஆரம்பித்த காலகட்டங்களில் கிரிசாந் மூலமாக தும்பியின் அறிமுகமும், தன்னற வெளியீடுகள் பற்றியும் அறிந்தோம். செயற்பாட்டு தளங்களில் வாசிப்பின் தொடரியக்கத்திற்கு இவை இரண்டின் மூலமாகவும் பெற்றுக்கொண்ட வாழ்வென்பது கனவு போலிருக்கின்றது. அவையே என்னைச் செதுக்கி இருக்கின்றன. குக்கூ மற்றும் தன்னறத்தின் வெளியீடுகளாக எமது அமைப்பிற்கெனப் பெற்றுக்கொண்ட புத்தகங்களில் வாழ்வதற்கான கருணையும், எளிமையும் மட்டுமே திருப்பத் திருப்ப சொல்லப்பட்டன. எனக்குள் இருக்கும் என்னையும் , என் குழந்தைமையை நானறியவும், தயக்கமே இல்லாமல் இயல்பாக எல்லோரோடும் ஒட்டிக்கொள்ளவும் ஆழ்மனதில் முத்துவினதும் சிவராஜினதும் சிரிக்கும் கண்களே துணையாக இருந்தன. எனது வழித்தடத்திற்கான வெளிச்சமாக அவர்களை எனக்குள் நிரந்தரமாக இருத்திக்கொண்டேன். முத்து தம்மோடு இணைந்து கொண்டது பற்றி சிவராஜ் எழுதிய பதிவு இன்றைக்கும் கண்ணீரோடு என்னை அணைத்துக்கொள்கின்றது. எமது சொற்கள், செயல்கள் எங்கே கொண்டு போய் சேர்க்கும் என்பதற்கு இவை சான்று. மைவிழி செல்வி, முத்து ஆகியோரின் இணைவும் ஆழியாள் கர்ப்பத்திலிருந்து பிறந்து வளர்ந்து வருவது வரை தும்பியின் ஒவ்வொரு கதைகளும் அவளுக்கு எவ்வாறிருக்கின்றன என்பது பற்றிய சொற்களும் உயிர் நிறைந்தவை. ஆழமானவை. தவிக்கும் கணங்களில் தோள்தட்டி விரல் பற்றியமரும் தோழமையின் அன்பென ஊறி நிற்பவை. காயப்பட்டு மேலெழ முடியாத ஒவ்வொரு கணங்களிலும் இப்படியான மனிதர்களின் வாழ்வே என்னை பற்றி வைத்திருக்கின்றது. செயல் புரிவதன் ஊக்கத்தை விருட்சமென வளர வைத்துக்கொண்டிருப்பவை. அவர்களைப் போன்ற ஆத்மார்த்தமான கண்களையும், மனிதர்களையுமே தேடியலைந்து கொண்டிருக்கின்றேன்.

புறச்சூழல் பொறிகளுக்குள் சிக்காமல், அதற்குள் உழன்று திரியாமல் மேலெழுந்து பறக்க வைக்கின்ற இறகுகளை உடையன தும்பியின் அத்தனை தொகுப்பும். ஆரம்பத்தில் அதன் பணப்பெறுமதி தொடர்பில் குழப்பங்களிருந்தது. இன்றைய “டச் ஸ்கிரீன்” காலகட்டத்தில் ஒரு தட்டு தட்டினால் அத்தனையும் வந்து சேர்ந்து விடுகின்றது. வாசிப்பு, குறைவு, இப்பத்தை பிள்ளைகள் எங்க வாசிக்கினம்? இப்படி சொல்கின்ற எத்தனை பெற்றோரும், ஆசிரியர்களும் அவர்களுக்கு பரிசாகவேனும் ஒரு புத்தகத்தை வாங்கிக் கொடுக்கின்றோம். அவர்கள் சொல்கின்ற கதைகளைக் காது கொடுத்துக் கேட்கின்றோம்? வாசிப்பின் பரிணாமங்களில் தும்பியின் வடிவமைப்பும் கதைத்தேர்வுகளும் ஆசுவாசமளிப்பவை. இவை அத்தனைக்கான உள மாற்றமாக எம்மை வந்தடைந்தது தான் தும்பியின் வெளியீடுகளும்.

பிரகாஷ் உடைய ஒவ்வொரு ஓவியங்களும் அவை சொல்லும் கதைகளும் அத்தனை நுணுக்கமானவை. அதில் வருகின்ற வீடு, சிறுமி, சிறுவன், அம்மா, அப்பா, தாத்தா, பாட்டி, பூனை, நாய், குருவிகள், எறும்புகள், பூக்கள் , செடிகள் என அத்தனை பேரும் வாழுகின்ற ஒரு ஓவியம் போதும். ததும்பத் ததும்ப பேராறுதலைக் கொடுக்கக் கூடிய அந்த முகங்களை இப்போது நினைவில் கொள்கின்றேன். ஒவ்வொரு முன் அட்டைகளில் ஊரும் குழத்தைகளின், முதுசங்களின் கனவும் வாழ்வும் கொண்ட புகைப்படங்கள் ஈர்த்துக் கொள்பவை. சிறு நூலிழைகளால் நெய்யப்பட்ட இதமான உடுதுணிகளின் கனமென ஒட்டிக்கொள்பவை. முத்துவினது, மைவிழி செல்வியினது, ஆழியாழினது, சிவராஜினது ஈறு தெரிய கண்களாலும் மனதாலும் சிரிக்கும் அவர்களின் அக ஓவியங்களை அணிந்து கொண்டிருப்பதற்கு அவர்களது வாழ்வும் குழந்தைகளின் கனவை ஆற்றி ஆறுகின்ற மனதின் பரவசமும் இன்றைக்கு என்னை ஆக்குபவையாகவே இருக்கின்றன.

தும்பியின் விடைபெறல் பற்றிய செய்தி பார்த்ததும் தும்பியில் வெளியாகியிருந்த “கடைசி பூ” கதை மட்டும் தான் எனக்குள் ஓடிக்கொண்டே இருக்கின்றது. இந்த போரும் வாழ்வும் வெறுமனே ஆயுதங்களாலும், அதிகாரங்களாலும் நடப்பதல்ல. வாழ்வை அதற்கான பிடிப்பை இல்லாமல் செய்கின்ற ஒவ்வொரு மனச்சீர்குலைவிற்கும் எவையெல்லாம் காரணமாக இருக்கின்றதோ அவை குழந்தைகளிடத்தில் உரையாடப்பட வேண்டியவை. தும்பியில் வருகின்ற மொழிபெயர்ப்புக் கதைகளின் ஆழம் வாழ்வதற்கான பேரிறக்கைகளை வளர வைப்பவை.

தும்பியின் ஒவ்வொரு கதைகளையும் மீள வாசித்தபடியே இப்பெருங்கனவை தூக்கிச் சுமக்க முடியாமல் சோர்ந்து போயிருக்கும் நெடுந் தொலைவிலுள்ள மனிதர்களை எப்படி ஆற்றுப்படுத்துவதென அல்லல்பட்டு அலைந்தபடி இருக்கின்றது மனம். வசைகளாலும், நெருக்கடிகளாலும் சூழ்ந்து போயிருக்கின்ற ஒவ்வொரு மனிதர்களும் காட்டிய அந்த ஒற்றையடிப் பாதையின் விரிவு வார்த்தைகளற்ற பெருங்கனவின் வெளிச்சம். அவர்களே ஆசிரியர்களாக மாறி வழிநடத்துபவர்களாக இன்றைக்கும் இருக்கின்றார்கள். எனது பிரார்த்தனை எல்லாம் தும்பி தொடர்ந்து வெளிவருவதற்கு என்னவெல்லாம் மாற்று வழிகள் இருக்கின்றன என்பதைப் பற்றியதாகவே இருக்கின்றது.

அமைப்பின் மூலமாக கொடுக்கப்பட்ட சிறியளவு புத்தகங்களுடன் நூலகமொன்றை செயற்படுத்திக்கொண்டிருந்த காலப்பகுதியில் கதைகூறல் நிகழ்வொன்றிற்காக இரு ஊர்களிலும் உள்ள சிறுவர்கள் வந்திருந்தனர். இரண்டு ஊர்களுக்கிடையில் இருந்த சாதிய தடைகளைத் தகர்க்கும் சிறு புள்ளியாக தும்பியின் வெளியீடுகளோடு அறிமுகமானதை இங்கே மீட்டிக் கொள்கின்றேன். தூரம் மற்றும் சாதிய நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக நினைத்த வேளையில் அந்த நூலகத்தைப் பயன்படுத்த முடியாத சூழலில் தமக்காக நூலகமொன்றை செய்து தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். இதனடிப்படையில் உரையாடல்களிற்குப் பின் விதை குழுமத்தால் சிட்டுக்குருவிகள் புத்தகக்குடில் ஆரம்பிக்கப்பட்டது. தோழமை அமைப்பாக பசுமைச்சுவடுகள் அமைப்பும் இணைந்து கொண்டது. அதனை நிர்வகிக்கும் பொறுப்பும் அவ்வூரின் சிறுவர்களே பார்த்துக்கொண்டனர். இரண்டு நூலகங்களும் செயற்படத்தொடங்கிய காலங்களில் இருந்த அறிமுகம் அவர்களுக்கு தேவையான புத்தகங்களை, உதவிகளை பெற்றுத்தருமாறு உரிமையுடன் கேட்குமளவிற்கு மாறியிருக்கின்றது. கடந்த சில மாதங்களிற்கு முன்னர் தமக்கான சில பயிற்சிப் புத்தகங்களைக் கேட்டிருந்தார்கள். அவற்றுள் சிலதை வாங்கிக் கொடுத்திருந்தோம்.

இப்போது இரு ஊர்களின் குழந்தைகளும் ஒன்றாகியிருக்கின்றார்கள். உரையாடல்களில் தயக்கங்களின்றி பேசத் தொடங்கியிருக்கின்றார்கள். விளையாட்டுக்களில் சேர்த்துக்கொள்கின்றார்கள். இதுவே போதும், இதுவே போதும் அவர்கள் இனி பார்த்துக்கொள்வார்களென மனம் ஆறுதல் அடைந்திருக்கின்றது. நாமெல்லொரும் விரும்புவது இது ஒன்றைத்தான். “பண்புமாற்றம்” . இதை உருவாக்கியளித்ததும், கண்மலரும் சிரிப்புக்களும் நிறைவாகப்பற்றி போதையென ஆகியிருக்கின்றது.

எங்கு எப்படித் தொடங்குவது என்பது பற்றி நாம் எந்தப்புகார்களையும் கொண்டிருக்கத்தேவையில்லை. தும்பியின் உருவாக்கத்திற்கு உழைத்த அத்தனை பிஞ்சுக்கரங்களையும், மனங்களையும் மனதார அகம் நிறைத்துக் கொள்கின்றேன். என் வாழ்வின் அறமாக நெஞ்சிலிருத்திக் கொள்வதும் என்னை ஆக்கிக்கொள்வதற்கும் இந்த இரண்டு வரிகளுமே என்றைக்கும் போதுமானதாக இருக்குமென்பதை உளமார எனக்குள் இருத்திக்கொள்கின்றேன்.

“இப்பூமியில் எனக்கு மிகவும் அச்சம் தருவது, ஒரு குழந்தைக்கு நான் செய்த சத்தியம் தான்.”

ரஜிதா

TAGS
Share This