முதுவான் கவிதைகள்
உலகிலே பேசப்படும் மொழிகளிலெல்லாம் காதல் அரும்பவும் தழைக்கவும் பூக்கவும் கூடிய யாவிலும் உள்ள பொதுத்தன்மைகள் மாறாது. காதல் எங்கு பூப்பினும் அதன் சுகந்தம் பரவிக் கொண்டேயிருப்பது. ஆதார விசைகளில் காதல் உண்டாக்கும் மாயங்கள் ஒன்று போலவே தோன்றுவது மானுட இயல்பு.
கேரளப் பழங்குடிகளில் பதினொரு மொழிகளில் பதினெட்டுக் கவிஞர்களின் கவிதைகளை நிர்மால்யா மொழிபெயர்த்து தன்னறம் பதிப்பக வெளியீடாக ‘கேரள பழங்குடி கவிதைகள்’ எனும் பெயரில் வெளிவந்திருக்கிறது.
இத் தொகுப்பில் அசோகன் மறையூர் (1988) இடுக்கி மாவட்டம், எலும்பள (குண்டள) பழங்குடியினர் குடியிருப்பில் பிறந்தவர். இயற்பெயர் அசோகமணி. முதுவான் பழங்குடியைச் சேர்ந்தவர். ‘பச்சை வீடு’ கவிதைத் தொகுப்புக்காக கேரள சாகித்திய அகாதெமியின் கனகஸ்ரீ விருது பெற்றவர். இவரது இரண்டு கவிதைகளில் சில வரிகளால் மிதக்கும் கவிதை, காட்டுப் பறவைகள் தங்கள் குரல்களால் நெய்யும் சங்கீதக் கூடுகள் போல் காதலை முடைகின்றன. முதுவான் என்ற மொழியின் பெயரிலேயே ஒரு கவிதை இருக்கிறதல்லாவா. முதுவான்!
*
காடு
பூவெல்லாம் உதிர்ந்திருக்கும்
தேனெல்லாம் விளைந்திருக்கும்
கொடியும் கூட வாடியிருக்கும்
கொடிக்கடியில் தேங்காயும் விளைத்திருக்கும்
கிழங்கெல்லாம் முதிர்ந்திருக்கும்
இப்போது தண்ணீருக்கும் தாகமெடுக்கும்
மரமெல்லாம் காயாகும்.
பச்சை நாகம் படம் விரிக்கும்
புள்ளிப்புலி வழி மறிக்கும்
காட்டு ஆனை குத்திக் கொல்லும்
காட்டுமாடு வெட்டிக் கொல்லும்
வெளிச்சம் விலகாமல் நின்றாலும்
உனக்காகக் காத்திருந்து அந்தியாகும்.
அந்தி மறைந்தாலென்ன
என் காத்திருப்பு முற்றுப் பெறுமா?
சூடிய பூ வாடிப் போகுமா?
என் கல் வளையல் உடைந்து விழுமா?
பட்டினி வந்தாலும்
நெல்லறை காலியானாலும்
பஞ்சமே வந்தாலும்
போக வேண்டுமா நீ
இன்றைக்கே போக வேண்டுமா?
*
பச்சை வீடு
நாம் நிற்கும் மூலையில்
பதினாறு காலடி நான் வடக்கிலும்
பத்துக் காலடி நீ கிழக்கிலும்
வெட்டியெடுத்த பதினாறுக்குப்
பத்து தூண் நாட்டி,
மேல்கூரை பதினைந்து
கைமரத்தைப் பரப்பி வைத்து
மூங்கில் இலை வேய வேண்டும்
காற்றுவரும்
தடுக்கு வைத்துக் காற்றைத் தடுக்க வேண்டும்
அகழ்ந்த மண்ணில்
தண்ணீர் தெளித்து
முழங்கால் வரை புடவையை இழுத்துச் செருகி
மிதித்துக் குழைத்து
மண்சுவரை எழுப்ப வேண்டும்
பிரம்புக் கதவும்
மூன்று கல்லைச் சேர்த்து வைத்து
குத்தியெடுத்த நெல்லை
புதுநீரில் கொதிக்க விட்டு அவித்த
முதல் சோற்றை வாரியெடுத்து
நீயும் நானும்
சேர்ந்து நின்று
சாமிக்குப் படைக்க வேண்டும்
குங்குலியம் கொஞ்சமாக எடுத்து
மூங்கில் குழலில் இட்டு
முதல் விளக்கை ஏற்ற வேண்டும்
புதுப்பாயும் குடையும்
அங்குமிங்குமாக மாட்டி வைத்து
முழுவீட்டையும் ஒழுங்குபடுத்தி
திண்ணையில் அமரும்போது
நிலவு வரும்
நட்சத்திரம் வரும்
உனக்குள்
ஒருபோதும் நான் மறையாத
கனவு வரும்.