கனவுச் சொல்
“சர்வ வல்லமை படைத்த தேவன்
ஒரு பெண்ணின் கையில்
அவனை ஒப்படைத்தான் ”
– Venus Lu Furs –
மீண்டும் ஒரு கனவு பற்றி:
முதலில் கொஞ்சம் இசை, நான் எல்லாவற்றையும் விட இசையில் மௌனமாயிருக்கிறேன். மௌனமென்பது ஆடலும் துள்ளலும் நிறைந்த மௌனமே. கடந்த நாட்களில் நான் கேட்டவற்றில் அற்புதமான சில கோர்வைகளை உனக்கு அனுப்பியிருந்தேன். ஒவ்வொரு மரமும் அசையும் இசையாய் என் மேல் விழுந்து கொண்டிருக்கிறது. புது வீட்டில் வெட்ட வெளியில் நித்திரை கொள்கிறேன். இங்கே இன்னமும் மின்சார இணைப்புக் கொடுக்கவில்லை. அற்புதமாக இருக்கின்றன இரவுகள். இந்தக் கடிதத்தை ஆகாயத்தின் கீழே, மணல் மேட்டில், லாந்தர் விளக்கின் வெளிச்சத்தில் எழுதுகிறேன், தீ, காற்றில் ஆடியபடி, நிழல்கள் சர்வ அழகுடன் படர்ந்து நிற்கிறது. நான் உனக்கு அனுப்பியவை “Nostalgic “தன்மை கொண்ட இசைக் கோர்வைகள். இங்கே நித்திரை வரும் வரை வானம் இசையாய் மலர்ந்து கொண்டிருக்கும்.
நிலாவெளியில் மேகங்கள் நுரைத்து மோதி நட்சத்திரங்களும் புகுந்து கொள்வது மாபெரும் கோலமாய், நடைபெற்று முடியாத இசை அரங்காய் என் மேல் பொழிந்துகொண்டிருக்கும்.
உன்னுடன் ஆடுவது. நீ ஆடுவது. நான் பார்ப்பது. பூமியே சுழன்று என் கைகளில் வந்து ஆடுவது போல் அத்தனை மிதமாய் ஒரு பூ நெகிழ்வது போல் ஒரு வயலின் கதறியழுவது போல், ஒரு காதல் வெடிப்பது போல் நீ அசைந்து கொண்டிருப்பாய். ஒவ்வொரு வயலினின் விம்மலிலும் வார்த்தைகளில் நிரவமுடியாத சோகம் தெறித்து நீ கரைந்து விடுவது போல் நிற்கிறாய். மோகமும் இசையும் கலப்பது எந்தளவு போதையானதென்பதை உனக்குச் சொல்கிறேன். இமைகள் மூடிய உன் வாசம் ஒரு யுகத்தாலானது போல் மாற்றுகிறது அந்தக் கணத்தை. கணமே உடலாகி, என் உடலே நீயாக ஆடுகிறோம், ஆடுகிறோம், ஆடிக் கொண்டே ,அத்தனையும் சுழன்று வீழ்ந்து மறைகிறது. நான் ஒரு பெண் .நான் ஒரு ஆண் எல்லாவற்றையும்கடந்த அந்தத் தருணத்தில் மகிழ்ச்சியை ஒரு நோய் போல் உணர்கிறது உடல், அத்தனை நெருக்கமாய், வேறு வழியற்று.
பெண்ணுடல் பற்றியெழும் பருவம்
காடு, மழையால் வெறித்து நின்று ஆடும் பேய்க்காடு. இரவு, அத்தனை வெளிச்சமான இரவு, எப்படி அந்தப் பேய்மழையில் சாத்தியம் என்று தெரியவில்லை. ஆனால் நீ நிற்கிறாய். மோகமே உருவான ஒரு பெண் தெய்வத்தைப் போல், ஆடையற்று, நித்தியமான ஒரு சிலையைப் போல், தேகம் நிறம் மாறுகிறது, மழை ஒரு ஆசீர்வாதத்தைப் போல் உன்னைப் புனிதப்படுத்துகிறது. கண் இமைகள் சர்ப்ப நாக்குகளைப் போல் விரிந்து, அசைந்து பின் மூடியிருக்கிறது. இரைக்காகப் பதுங்கியிருக்கும் வேட்டையாடும் விலங்கொன்றின் கண்கள் எனக்கு.
நீ அசைகிறாய். காடே அசைகிறது. பூமி அசைந்து உன் பாதத்தை வாங்குகிறது.
மதமதெர்த்தெழுகிறது காடு, காடே ஒரு நடனமாய், காடே ஒரு உடலாய், உயிர்கொண்டெழுந்து வெறியேறி, பூக்கள் விழுந்தளைந்து, கொட்டி, பரவி, வனமே வாசமாய் எழுந்து பித்தேறி வெருளும் யானையைப் போல் காடு அலறுகிறது. பறவைகள் விரிந்த கண்களுடன் உறைந்திருந்தன.
தீயாலானதொரு நேசம், உடல் விட்டெறிந்து பறந்து வருவது போல் உன்னிடம் நெருங்குகிறேன். பல்லாயிரம் ஈட்டிகளின் ஒரே இலக்கைப் போல் உன் உதடுகள் குவிகின்றன. பொருந்துகிறேன். நிசப்தம், இருட்டு. கரைதல், ஒடுங்குதல், உறைந்து நிமிர்ந்து பார்த்தேன். மதமதர்த்து ஆடுகிறது பூமி, மதமதர்த்து எழுகிறாய் நீ, மதமதர்த்த முலைகளில் தழுவியிறங்குகிறேன். காமமே ஒரு மொத்த வனத்தின் கர்ப்பத்தில் எரிவது போல் நீயும் நானும் பிணைந்து கொண்டோம். பள்ளங்களில் பாயும் வெள்ளாட்டுக் குட்டிகளின் காலுதைப்பைப் போல் ஒவ்வொரு தொடுகையும் குத்தி, நிமிண்டி. பிரபஞ்சமே ஒவ்வொரு துளியாய்க் கொட்ட, அடங்கி அடங்கி எழுகிறது மூச்சு, திணறுகிறது. மழை கொட்டி மூச்சடங்கி காமமெழுந்து கடலே திரண்டு ஓடுவதை போல் பாய்கிறோம்.
பற்றி விறாண்டி, கடித்து, உண்டு, கொன்று, என் மேல் ஏறி இறங்கும் பெருவிலங்கொன்றை வேட்டையாடி உண்கிறேன். கடித்து, ரத்தம் தளும்பிய விரல்களால் உன்னை ஆரத்தழுவுகிறேன்.
கனவில் எரிந்தோம் ; கனவாய் எரிந்தோம் ; கனவே எரிந்தது.
மனித துயரமும் அபத்தமும் மேலெழும் போது உனது காதலை ஒரு முத்தமாய், உயிர்ப்பிக்கும் ஒரு மருந்தாய் உணர்கிறேன்.
முத்தகோடி முத்தங்கள்.
(2015)
( புதிய சொல்)