உண்ட என் நலன்
காட்டின் கரையில் உள்ள விளையாட்டுக் களத்தில் யானைகள் உலவுகின்றன. மரங்களை முட்டிக் கிளைகளை இழுத்து மலர்களையும் கனிகளையும் கொய்கின்றன. மழை பெய்த சேற்று மண்ணில் அவை அழுந்திப் பதிக்கும் பாதங்களில் சேற்று நீர் நிறைகின்றது. ஒரு பெரும் மழைக்காலத்தில் காதலனுடன் கூடிக் களித்த இரவு நினைவு அந்தப் பாதங்களில் சேரும் நீர்போல உளத்தில் நிறைகின்றது.
ஊரில் உள்ளவர்கள் எது நினைப்பினும் நமக்கென்ன, காமம் வாட்டும் இதயத்தின் நோவை ஏற்கிறோமே, நாம் ஊரை அஞ்சி வாழ்வின் பரிசை இழப்பானேன் தோழி!
ஒரு உடலை இன்னொரு உடலுக்குத் தின்னக் கொடுத்தல் காமம் என்பதைத் தலைவி அறிவாள். அது ஒரு கணத்தில் தின்னக்கொடுப்பதும் இன்னொரு கணத்தில் தின்று களித்தலுமாகிய விளையாட்டு. யானைக் கூட்டத்திலிருந்து ஒரு பெருவேழம் தன் குற்றிக் கால்களை ஊன்றியபடி மனைக்கு வருகிறது. காமம் கொண்ட நெஞ்சைப் போல பசுமையின் நிறைவில் நின்ற ஒரு கிளையை முறித்து வீழ்த்த முயல்கிறது. காமமுள்ள மனம் நாருள்ள கிளை போல, லேசில் அது முறியாது. பெரிய கிளையைப் பலங்கொண்டு முறித்துவிட்டாலும் அதன் நாரின் மென்மையான இருப்பை ஒன்றும் செய்ய முடியாது. அவ்விருப்பின் நிலையே நம் நட்பு! கூடலில் கலையாத நாரின் தொடுகையை அறிந்தாயா தோழி!
*
கௌவை அஞ்சின் காமம் எய்க்கும்,
எள் அற விடினே உள்ளது நாணே,
பெருங்களிறு வாங்க முரிந்து நிலம்
படாஅ
நார் உடை ஒசியல் அற்றே,
கண்டிசின் தோழி, அவர் உண்ட என்
நலனே.
ஆலத்தூர் கிழார்