07: சித்த விளி

07: சித்த விளி

ஆடற் சித்தனின் சாம்பல் ஊறிய மேனியில் நெளிகாற்றொன்று மோதி கடுங்குழலைக் கலைக்க முடியாமல் அஞ்சி விலகி இன்னொன்றாக உருமாறிச் சென்று மறைந்தது. பல பருவங்களாக ஆறுகளிலும் குளங்களிலும் ஆழியிலும் குளித்துத் துணியால் உலர்த்தாமல் வெய்யிலில் காய்ந்த சடை இறுகியிருந்தது. தடித்த கரும் புருவங்களின் நுனிகள் கூர்ந்திருந்தன. இடைத்துணி புரளக் காட்டின் விளிம்பிலிருந்து பட்டினத்தின் பெரும் பாதைக்குள் நுழைந்தார். நூராத தீக்கங்குகளென விழிகள் கனன்று கொண்டிருந்தன.

சுழல்விழி மனைவாசலில் சிகை பிரித்துக் கோதியபடியிருந்தாள். கையாடியை மரத்தூணில் சாய்த்து வைத்திருந்தாள். அதில் தெரியும் தன் பிம்பத்தின் எழிலை ஒருகணம் யாரோ எனத் துணுக்குற்றாள். தன் சமவயதுச் சிறுமிகளை விடவும் தன்னுடைய மேனியும் வடிவும் வேகமாக வளர்கிறது என எண்ணினாள். புருவங்கள் இரண்டும் சிறு கோடாக வளர்ந்த காடுகள் என சடைத்திருந்தன. அவள் வதனத்தின் முதல் விளியாய் அந்தப் புருவங்கள் செழித்து வளர்வதைப் பார்த்துப் புன்னகைத்தாள். சிறிது தொலைவில் ஆடற் சித்தனின் விறுநடையைப் பார்த்தவள் எழுந்து பரபரத்து மனையுட் புகுந்தாள். “தந்தையே, தந்தையே, ஆடற் சித்தர் வருகிறார்” எனத் தங்கிட தத்தரை விளித்தாள். தங்கிட தத்தர் தாம்பூலத்தைத் துப்பி விட்டு வாயை அலசிக் கொண்டு உடல் பணிய வாசலுக்கு வந்தார். “வாருங்கள், சித்தரே, நேற்றே உங்களை எதிர்பார்த்தேன். மூநாளில் நாகதேவித் திருவிழா. நீங்களின்றிக் குடிகள் வருந்துவர். காவலிட எல்லா ஏற்பாடுகளும் தொடங்கிவிட்டன”.

ஆடற் சித்தர் கால்களை ஒன்றன் மீது ஒன்றாகக் குழைத்துப் போட்டு நேர்முதுகுடன் அமர்ந்து தத்தரை நோக்கினார்.

“எங்கிருந்து திரும்பியிருக்கிறீர்கள் சித்தரே” என வினவினார் தத்தர்.

“ஆடலிறையின் பாதம் ஒளிரும் மலையிலிருந்து” என இசைக்கிண்ணத்தின் அடர் குரலில் பதிலிறுத்தார் சித்தர்.

“பேரிறையின் பாதம் காண எனக்கும் ஒரு நாள் வாய்க்க வேண்டும்” எனச் சொல்லி ஒரு இடைவெளி விட்டு “அரசரைக் கண்டீர்களா” என வினவினார்.

தத்தரின் கண்களைச் சிலநொடி அசைவற்று நோக்கிவிட்டு “அவன் தன் ஊழை அறியும் காலம் முற்றிற்று. இந்த மண் தன்னைத் தான் ஆடித் திரும்பவும் ஆடலுக்குச் சித்தமாயிருக்கிறது. அதனைக் காணவே ஈசன் என்னை அனுப்பினான்” என்றார் சித்தர்.

மூச்சைச் சீராக இழுத்துக் கொண்டு “சித்தரே, எனக்கு உங்கள் சொற்களின் அர்த்தம் விளங்கவில்லை. ஆனால் ஈசனின் ஆணை அதுவென்றால் தேவியின் ஆணையும் அதுவாகவே இருக்கும். நடப்பதை நாம் பார்க்க மட்டுமே முடியும்” என்றார் தத்தர்.

சுழல் விழி நீர்ச்சிரட்டையைக் கொணர்ந்து சித்தரின் முன் வைத்து வணங்கி நின்றாள். “குழந்தை, உனது காலம் வந்துவிட்டது. அடுத்த ஆடலின் அரசி நீ தான். உனக்கு அவன் கொடுக்கப்போவதை எவராலும் தடுக்க முடியாது” என அவளைப் பார்த்துச் சொல்லிக் கொண்டு அவளை அருகழைத்தார். தத்தரைப் பார்த்து “ஒரு நாழிகை நான் குழந்தையுடன் கதைக்க வேண்டும்” என்றார். தத்தர் கேள்வி முகம் எழுவதை அடக்க முடியாமல் குனிந்து வணங்கி மனையுட் சென்றார்.

சுழல் விழி தரையில் அமர்ந்தாள். தலை தாழ்ந்து சித்தரின் பாதங்களைக் கடைக்கண்ணால் நோக்கினாள். அவிழ்ந்த இரண்டு அல்லிகள் போல் உட்பாதங்கள் வெண்ணிறமாக இருந்தன. இத்தனை காதங்கள் நடந்தும் குழந்தையின் பாதங்கள் போன்று அவை எப்படி இருக்கின்றன என வியந்தாள். ஆடற் சித்தர் இசைக்கிண்ணத்தின் ஒலிபோன்ற குரலில் பேசத் தொடங்கினார்.

“குழந்தை, இந்தப் பட்டினம் இதுவரையான தனது குற்றங்களினால் மூழ்கிக் கொண்டிருக்கிறது. குடிகள் தங்கள் குற்றங்களை மறந்து முன்செல்ல விழைகின்றனர். கொன்றவரும் கொல்லப்பட்டவரும் ஒருநாளும் அழிவதில்லை. எஞ்சியவர்களின் உளங்களில் அவர்கள் முடிவற்று வாழ்வார்கள்” எனச் சித்தர் தொடர்ந்தார்.

சுழல் விழி இத்தகைய கடினமான சொற்களை பெருமாலை கோர்க்கும் சிறுகரங்களென ஒன்றின் பின் ஒன்றாகப் பொறுக்கி உள்ளத்தில் வைத்து இணைத்துக் கொண்டிருந்தாள்.

“நீ அறியமுடியாத விளையாட்டில் ஆடப்பட இருக்கிறாய். உனக்குரிய ஆற்றலை உன் அன்னை கொடுப்பாள். நீ அறிய வேண்டியது ஒன்று மட்டும் தான்”

சுழல் விழி தாழ்ந்திருந்த கண்களை உயர்த்திச் சித்தரைப் பார்த்தாள். அவர் ஊழ்கத்தில் விழிமூடிக் கைகளை அடிவயிற்றில் குவித்து எங்கிருந்தோ ஒலிக்கும் சொற்களை எதிரொலிப்பவர் போல் அமர்ந்திருந்தார். மூடிய விழிகளிலிருந்து பரவசத்தின் முடிவின்மை பரவிக்கொண்டிருந்தது. தன் செவி மட்டுமே தான் என ஒருங்கித் தன்னை ஒவ்வொரு சொல்லையும் ஏந்திக்கொள்ளும் மண்பாத்திரமென ஆக்கிக்
கொண்டாள்.

அவரின் குரல் புலியின் மென்னுறுமல் போன்று ஒலிக்கத் தொடங்கியது. “உடலை உடலால் களைவதன் யோகமே உனக்கு இம்மண்ணில் அளிக்கப்பட்டிருக்கிறது குழந்தை. உடலே உனது தெய்வம். அண்டத்தில் இருப்பதுவே பிண்டத்திலும் இருக்கிறது. உன்னுள் ஈசனும் அன்னையும் இருநாகங்களெனக் குடி கொள்கின்றனர். அவர்களை உன் முதுகுப் புற்றிலிருந்து சிரசிற்குள் செல்ல அனுமதி. நீ அவர்களைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. அந்த நாகங்களே உன் ஆற்றல். என் ஈசனும் உன் அன்னையும் இருசர்ப்பங்களென ஒவ்வொரு மனிதரின் உடலிலும் உறைகின்றனர். குடிகள் அவர்களை அச்சத்தில் வணங்குகிறார்கள். நீ உனது அச்சத்தினை ஆள்க. நீ எதை விழைகிறாயோ அதை அடைக” என்றவாறு தணிந்த ஆற்றின் குரலில் இறுதிச் சொல்லைக் குவித்தார்.

சுழல் விழி நிரம்பிய மண்பாத்திரமென எடை
கொண்டிருந்தாள். ஆடற் சித்தர் விழி திறந்து நீரை அருந்தினார். மனையைத் திரும்பிப் பாராமல் காற்று மணிலிருந்து எழுந்தது போல் சென்று மறைந்தார். சுழல் விழி அந்த வெறும் நீர்ச்சிரட்டையைப் பார்த்தபடியிருந்தாள்.

தத்தர் வெளியே வந்து ” சித்தர் என்ன சொன்னார் சுழலி” என வினவினார். “அவர் சொன்ன சொற்கள் என்னுள் மந்திரம் போல் விழுந்தது தந்தையே. அவற்றை மீளச் சொல்ல நா வரவில்லை. கட்டுண்டது போல் கிடக்கிறது” என்றாள். “பரவாயில்லை சுழலி. சித்தரின் சொற்கள் அப்படித் தானிருக்கும். காலம் விளைய உனக்கே விளங்கும்” என்றார் தத்தர். சுழலி நீர்ச்சிரட்டையை எடுத்துக் கொண்டு மனைக்குள் புகுந்தாள். அவளின் கருங்குவளை விழிகள் தம் சுழல்வை மறந்திருந்தன.

*

முதல் நாள் திருவிழவிற்கு ஆடற் குழுவினர் தங்கள் பரிவாரங்களுடன் பெருவீதியால் நடந்து வந்தனர். குடிகள் சுற்றி நின்று குழுவினரின் பலவர்ண ஆடைகளையும் எள்ளல் பேச்சுகளையும் நடுவில் ஊர்வலம் போன பளிச்சென்ற வர்ணத் துணிகளால் போர்த்திய பொன்னிழைகள் கொண்ட பல்லக்கினையும் ஆரவாரத்துடன் பார்த்துக் கொண்டே திருவிழாப் பணிகளைச் செய்தபடியிருந்தனர். குழுவினருக்கு முன் முதல் ஆளாக சிற்பன் நடந்து சென்றான். அவனது தாடியையும் மீசையின் கூர் மிடுக்கையும் பார்த்துப் பெண்கள் ஒருவரையொருவர் கண்காட்டிக் கொண்டனர். அவன் பட்டினத்தின் குடிகளை நோக்காது அரண்மனையின் திசை நோக்கிச் சற்றுத் தூக்கிய முகத்துடனும் விழிகளுடனும் நடந்து கொண்டிருந்தான். விறைப்பு என்றும் நிரந்தரம் என்பது போல் அவன் நடை அமைந்திருந்தது. முதல் நாள் திருவிழாக்களில் சிற்பனின் பேராடல் தீவு முழுவதும் பிரசித்தம். அந்த ஈசனே இறங்கி வந்து தேவியை அழைப்பது போலிருக்கும் எனப் பாணர்கள் பாடினர். அந் நேரத்தில் அவனது உடலில் வளையாத பாகங்களுண்டா அபிநயிக்காத பாவங்கள் உண்டா எனக் குடிகள் விழி அலைந்து தேடுவர். ஆடலின் போது அவனில் ஆடலன்றி எதுவுமிருக்காது. எந்தவொரு பார்வையிலும் சுற்றியிருக்கும் எவரையும் அறிந்ததான துணுக்குறல் ஒரு கீற்றுக்கூட இருக்காது. பார்ப்பவருக்கு ஈசனையே காண்கிறோம் என்ற தோற்ற மயக்கு எழும்.

குழுவின் மற்றைய நாற்பது பேரும் யானைக் கூட்டம் அசைந்து அலமலந்து வருவது போல் வாணிபக் கூடங்களிலும் சதுக்கங்களிலும் சத்திரங்களிலும் நின்றசைந்து வந்தனர். பல்லக்கைத் தூக்கி வந்த எண்மரும் ஒரே தாளத்தில் கால்கள் அசையப் பெருவீதியின் நடுவிலேயே வந்து கொண்டிருந்தனர். திருதிகா தனது இடப்பக்கப் பல்லக்குத் துணியைச் சுட்டுவிரலால் மெல்லத் திறந்தாள். குழுவைப் பார்க்கும் குடிகளை வேடிக்கையாகப் பார்த்தபடி வந்தாள். இறுதி நாள் ஆடலில் சிற்பனும் தானும் ஆடப்போகும் ஈசனும் தேவியும் ஆட்டத்தின் கணங்களை நெஞ்சில் தாளமிட்டபடி அகக்கண்களால் பார்த்தபடியும் கற்பனையும் நேர்த்தோற்றமும் கலங்கிக் கலங்கித் தோன்ற உள்ளே அசைந்து பின் சாய்ந்து சரிந்து கொண்டாள்.

மாடங்களில் ஒழுகிப் படர்ந்து வெய்யிலொளி நகரை மினுக்கிக் கொண்டிருந்தது. குடிகளின் கசகசவென்ற குரலொலிகள் திருவிழாவின் முதற்பாடலென ஒலித்துக் கொண்டிருந்தது. திருவிழாவிற்கான ஆயத்தங்களைச் செய்ய ஒவ்வொருவரும் ஊர்மன்றிற்குச் சென்று தமக்கிட்ட பணிகளை மன்றுத் தலைவர் சங்கநாதரிடம் கேட்டபடியிருந்தனர். ஒவ்வொரு பணியாய்ச் சொல்லிச் சொல்லி யாருக்கு என்ன சொன்னோமென மறந்து வந்தவர்களுக்கெல்லாம் பணிகளை வாரிவழங்கிக் கொண்டிருந்தார் சங்கநாதர். குறிப்பெடுக்கும் ஓலையுடன் அமர்ந்திருந்த துடியன் வெறுப்பால் உட்காய்ந்து கொண்டிருந்தான். ஓலைகள் குவிந்து கொண்டிருந்தன. இவரோ தர்மப்பிரபு என்ற பாவனையுடன் பணிகளைச் சொல்லிக் கொண்டேயிருக்கிறார். அங்கு சென்று பார்த்துப் பணிகள் நடக்கிறதா எனக் கண்காணிக்கவேயில்லை.

துடியன் தன் ஊழை நொந்து கொண்டு ஓலைகளைக் குற்றிக் கொண்டிருந்தான். ஆடற் குழுவினர் மன்றால் நடந்து செல்வதைப் பார்த்தவன் ஓலையைக் கொண்டு எழுந்தான். “மூடனே, எங்கே எழுகிறாய். இங்கே எவ்வளவு பணிகள் இருக்கிறது. ஆடற் குழு வந்ததும் அலை பாய்கிறதா உளம். தொலைத்து விடுவேன். நான் போய் வணக்கம் செலுத்தி விட்டு வருகிறேன். நீ அசையக்கூடாது” என உத்தரவுகளைப் பிறப்பித்தபடியே தொந்தியைத் தடவியபடி பருத்த பன்றியைப் போல் நடந்து சங்கநாதர் மன்று வாயிலுக்குச் சென்றார். துடியன் எதுவும் பேசாமல் அவர் போவதையே பார்த்தபடி இருந்து விட்டுச் சாளரத்தால் எட்டிக் குழுவைப் பார்த்தான்.

சிற்பனின் முன் சென்று சங்கநாதர் இருகரங் கூப்பி வணங்கினார். சிற்பன் இறுக்கம் குலையாத உடலுடன் வணக்கம் செலுத்தினான். “வாருங்கள் சிற்பனே, நலமா?” பல்லக்கைப் பார்த்தபடி “குழுவினர் அனைவரும் நலமா” எனப் புன்முறுவலுடன் கேட்டார். “யாவரும் நலம் தலைவரே. நாங்கள் அரசரை இப்பொழுது சந்திக்கலாமா” என வினவினான். “இல்லை சிற்பனே. அரசரை அந்தியில் தான் சந்திக்கலாம். இன்று யவனக் குழுவொன்றும் வர இருக்கிறது. அவர்களை நேரே சென்று அழைக்கவிருக்கிறார் அரசர். ஆயிரந் தான் இருந்தாலும் அவர்கள் கடல் கடந்து வருகிறார்கள் இல்லையா. அது போக அவர்கள் பெரும் நிபுணர்கள் என்றும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். முன்னோர்களின் ஆவிகளுடன் பேசுவார்களாம்.
நமது பட்டினத்துக்கு முதல் முறையாக வருகிறார்கள். மன்னரே சென்று அழைப்பது தானே முறை” என்று குரலில் கொஞ்சம் கூடுதல் அக்கறையைக் குழைத்துச் சொன்னார் சங்கநாதர்.

சிற்பனின் வதனத்தில் சங்கநாதர் எதிர்பார்த்த எந்த மாறுதலும் நிகழவில்லை. “சரி, அரசர் விரும்பும் போது அவரை நாங்கள் சந்திக்கிறோம். எங்கள் குடில்களைக் காட்டுவதற்கு வழித்துணை ஒருவரை அனுப்ப முடியுமா” என வினவினான். “அதிலென்ன இருக்கிறது சிற்பனே, உங்களை மரியாதை செய்து அழைத்துச் செல்லவே நான் இவ்வளவு நேரம் இங்கே காத்திருந்தேன்” எனத் தன் தாம்பூலப் பெட்டியை எடுத்துக் கொண்டு பெரும் பன்றி படியிறங்கிச் சென்றது.

துடியன் பல்லக்கையே பார்த்துக் கொண்டிருந்தான். எந்த அசைவுமில்லை. மூச்சைச் சோகமாக வெளியேற்றிவிட்டு ஆடற் குழு அலமலந்து செல்வதைப் பார்த்தபடியிருந்தான். பல்லக்கில் இருந்து பரவிய நறுமணத்தின் காற்றொன்று அவன் மூக்கில் புகுந்து நெஞ்சை உந்தியது. ஒரு அடி முன்னே எடுத்து வைக்கப் போனவன் குழலைக் கோதிவிட்டுக் கொண்டு குவிந்து கிடந்த பணியோலைகளை எடுத்து அடுக்கத் தொடங்கினான்.

*

இரவில் நடுநாழிகையின் பின் அதிகாலை முதல் நாழிகை வரை முதலிரண்டு நாட்களும் காட்டுக்குள் குடிகள் செல்லக் கூடாது. வனம் முழுவதும் மிருகங்களிடம் காவல் கையளிக்கப்பட்டிருக்கும். மூன்றாம் நாளின் பெருங்களிக் கூடலன்று மட்டும் குடிகளிடமும் மிருகங்களிடமும் காடு பகிர்ந்தளிக்கப்படும். எத்திசையும் ஒளியும் இருளும் இசையும் ஒலிகளும் பரவியிருக்கும் மூன்றாம் நாள்க் காட்டை ஒரு முழுத் தெய்வமென எண்ணிக் கொண்டார் ஆடற் சித்தர். செப்பினால் ஆன காவற் தகடுகளில் வனதெய்வங்களைக் குடியிருத்திக் காவலுக்கு வைப்பது அவரின் பொறுப்பு. பட்டறைக்குச் சென்று செப்புத் தகடுகளில் பூசாரிகளைக் கொண்டு தாமரை, அல்லி, நாகலிங்கப்பூ ஆகிய மலர்களையும் புலி, யானை, மந்தி ஆகிய விலங்குகளையும் பருந்து, கழுகு, கூகை ஆகிய பறவைகளையும் ஆவாகனம் செய்யும் குறிகளையும் ஐம்பூத வடிவங்களையும் முக்கோண மற்றும் திரிசூல அமைவுகளையும் மண்ணில் வரைந்து காட்டினார். நூற்றியெட்டு இருபின்னல் நாகங்களைக் குறையின்றி செய்ய மூன்று தலைமைக் கொல்லர்களை நியமித்தார். அவர்கள் ஆயிரத்தியெட்டுச் செப்புத் தகடுகளை நன்னீரில் தோய்த்து சிற்றுளிகளால் குற்றிவரையலை ஆரம்பித்தனர். தத்தர் அங்குமிங்கும் அலைந்து கொண்டு எல்லாம் கவனமாக நடக்கிறதா எனப் பார்த்துக் கொண்டு சென்றார். ஆடற் சித்தர் தன் விழிகளைக் கூர்ந்து கிழக்கை நோக்கியிருந்தார். நாகதேவியின் கற்கோவில் முடி குத்துவாள் நுனி போல ஒளிவிட்டது.

கடந்த நூற்றியிருபது பருவங்களில் எத்தனையோ யுத்தங்கள் நிகழ்ந்து விட்டன. சிங்கை நகருடன் எத்தனையோ சமாதானத் தூதுகளுக்கு ஆடற் சித்தரும் சென்றிருக்கிறார். இரண்டு எதிர்த் திசைகள் ஒன்றையொன்று சந்திக்க முடியாததைப் போல் அவை நிகழும். இரு நாடுகளினதும் மொழிகள் வேறு. ஒருவரை ஒருவர் வெறுப்பதற்கு ஆயிரம் நியாயங்களைச் சொல்லிக் கொள்வார்கள். நியாயங்களுக்கு யுத்தத்தில் எந்த மதிப்புமில்லை என்பதை ஆடற் சித்தர் நன்கறிவார். ஒவ்வொரு முறை படையெடுப்பு நிகழும் பொழுதும் இருபக்கமும் குருதியாறு பெருகும். இளம் மனைவிகள் தம் துணையிழப்பர். தந்தைகளும் தாய்களும் மகவிழப்பர். குழந்தைகள் தந்தையையோ தாயையோ இழப்பர். இரண்டு அரசும் போர்க்களங்களில் மட்டுமல்ல பட்டினங்களை எதிர்த்தும் கைப்பற்றியும் கூடப் போரிட்டிருக்கிறார்கள். குடிகளின் இழப்பும் வகைதொகையின்றிப் பெருகியது. உள் நுழைந்து விட்ட கிருமி ஒவ்வொரு அணுவாய் உண்டு உடலில் வளர்வது போல மரணம் யுத்தத்தில் வளர்ந்தது.

அங்கங்களை இழந்த போர்வீரர்கள் தெருக்களிலும் மதுச்சாலைகளிலும் சத்திரங்களிலும் கூடிக்கொண்டே சென்றார்கள். இளம் விதவைகள் பெருகி அவர்களின் கண்ணீரால் ஆறு உப்பாகியது. நீர்க்கடன்கள் செய்யப் புதிய சடங்குகளை உருவாக்கினர். அலையும் ஆவிகள் தங்களைத் துன்புறுத்துவதாகக் காடுகளில் காவலிருக்கும் காவல் வீரர்கள் அஞ்சுகின்றனர். வீட்டு மிருகங்களும் பறவைகளும் காணாமல் போவது நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. கலையாடிகளும் மாந்திரீகம் செய்பவர்களும் பட்டினத்தை நோக்கிக் குவியத் தொடங்கினர். பித்துற்றவர்கள் முழுநிலா நாட்களில் வீதிகளை அலறி மிரளச் செய்தபடி அலைந்தனர். அங்கத்தில் பட்ட வடுக்களால் வலிகூடி மருத்துவக் குடில்கள் எந்த நேரமும் இயங்கிக் கொண்டிருந்தன. ஒவ்வொரு
வருடமும் பொதுநாளைத் தீர்மானித்து யுத்தத்தில் கொல்லப்பட்டவர்களுக்கான சாந்தி பூசையைப் பிரமாண்டமாகச் செய்வார்கள் அரசர்கள். அது குடிகளைச் சற்று ஆற்றியது. ஆனால் நீரில் ஆடும் நிழலென ஒவ்வொரு நீத்தாரும் உயிருடன் இருப்பவர்களில் ஓயாமல் விழுந்து கொண்டிருப்பதை நிறுத்த யாராலும் முடியவில்லை.

ஆடற் சித்தர் அருகிருந்த ஆற்றில் இறங்கி உடலை அமிழ்த்திக் கொண்டார். மறுகரை வரை உள்நீச்சலில் சென்றவர் அங்கிருந்த கற்பாறைக் குவியலில் ஏறி ஊழ்க முத்திரையில் உடலை அமைத்தார். பறவைகளின் சலம்பலும் ஆற்றின் கலகலப்பும் அருகில் தட்தட்டென்னும் சிற்றுளிகளின் கடகடத்தலும் பட்டினத்தின் ஒவ்வொரு குரலும் குழைந்து எழும் பேரிரைச்சலும் ஆடற்சித்தரின் செவிகளில் மோதிமோதித் திரும்பின. தன் கருநொச்சி இலைக் கால்களால் மெல்ல அடியெடுத்துக் கரைக்கு வந்த இளம் மயிலொன்று இணை தேடி எழுப்பிய அகவல் தனித்து ஒற்றை நாதம் போல் அன்றைய நாளின் மந்திரமென ஆடற் சித்தருள் எதிரொலித்தது. அவர் ஓர் அகவல் ஒலியெனக் கற்பாறையின் மேல் உள்ளணைந்தார்.

TAGS
Share This