12: சுழல் எழல்
ஆடற் சித்தரின் சொற்கள் சுழல் விழிக்குள் கலங்கிக் கலங்கி மண்கலயத்தில் நாணயங்களின் புரள்வென உருண்டன. வெளியே பகலின் வெளிச்சம் பதுங்கிக் பின்னால் கொண்டு நகர்ந்து கொண்டிருந்தது. பகல் முழுவதும் சித்தரின் சொற்கள் உருண்டு உருண்டு உடலைத் தாள முடியாமல் நடுமுற்றப் பஞ்சணையில் படுத்திருந்தாள். அவள் தன்னை அதுவரை வளர்ந்து முகிழ்க்கும் சிறுமியென்றே எண்ணிக் கொண்டிருந்தாள். சித்தரின் விழிகளில் ஒளிர்ந்த முதற் பார்வையில் தானொரு சிறுமியல்ல என்பதை உணர்ந்தாள். சில நாட்களாகவே உள்ளில் குறுகுறுத்த ஒன்றைச் சொற்களாக்கி அவளிடம் சித்தர் அளித்திருக்கிறார் எனக் கண்டு கொண்டாள். தன்னை உடலென அவள் உணர்ந்த முதற்கணம் மெளனக் குளத்தின் ஆழத்தில் தானொரு தாமரைத் தண்டென அறிந்தாள். நீரின் ஆழமும் அதன் பச்சையிளம் பாசி வெளிச்சமும் அவளுள் எழுந்து எழுந்து கரைந்தன.
நினைவு அறிந்த நாள் முதல் நாகதேவியே அவளுக்கு அன்னை. தங்கிட தத்தர் கோவில் பணிகளிலேயே தேக்கமென அமைந்து கிடப்பார். அவள் தன்னைத் தானே ஆடியில் பார்த்துக் கொள்ளாமல் வளர்ந்த பாவை என முதுபெண்டிர் சொல்வர். ஆனால் சில நாட்களாகவே ஆடியில் தோன்றும் ஒருத்தியை அவள் அறிகிறாள். சிறுகாட்டின் கரையுள்ள தாமரைக் குளத்தின் நீராடியிலேயே முதலில் அந்தப் பெண்ணுருவைக் கண்டாள். விரிந்த அலைக்கூந்தல் காற்றில் எழ ஆகாயம் பின்னே திரையென உறைய அந்தப் பெண் சுழல் விழியை நோக்கினாள். அவளே தான் என நீராடியைத் தொட்டாள். விரல் தொடக் கலங்கிய குளத்தில் விரிவளையங்கள் அதிர்ந்து பரவ அப்பெண் ஆழத்துள் மூழ்கி மறைந்தாள்.
பின்னர் வந்த நாட்களில் வாலிபர்களின் குறும்புப் பார்வைகள் அவளில் ஊர்கின்ற வேளைகளில் அதை அவள் உள்ளூர விரும்பத் தொடங்கியிருந்தாள். ஆனால் எதனால் அந்த விழைவை அடைந்தாள் என்பதை அவள் அறிந்திருக்கவில்லை. பூசாரியின் மகளென்பதாலும் நாகதேவி உடலிறங்கும் கன்னி என்பதாலும் அவளிடம் கேலிப்பேச்சுகளைப் பேசவும் உடலின் களிகளை எள்ளியாடவும் தோழிகளோ முது பெண்டிரோ அமையவில்லை. ஆண்களின் விழிகளை அவள் பக்தியின் கண்களிலேயே அறிந்திருக்கிறாள். தலையில் மஞ்சளும் குங்குமமும் கொட்டி நீருற்ற உடலில் இறங்கும் நாகதேவிக்கு முன் அவர்கள் பணிந்து பயம் கூர்ந்து நிற்பார்கள். அவர்கள் விழிகளில் அவள் காண்பது அச்சம். தங்கிட தத்தரின் விழிகளில் அவள் ஒரு குழந்தை.
பஞ்சணையில் கால்களை ஊன்றி எழுந்து கைகளை விரித்து உடலை நாணேற்றிச் சோம்பலை முறித்தாள். முழுதும் நாண் கூடிப் போரெழுந்த வில்லின் துடியுடன் உடல் முற்றி நின்றாள். மாலை கவிழ்ந்து மஞ்சளாய்ப் பூத்து விழுந்தது. விரிந்த சுழல் விழிகளால் ஒளியைக் கூர்ந்து அறிந்து கொண்டு புறவாசலால் குளத்தை நோக்கிய பாதையில் நடக்கத் தொடங்கினாள். அவள் அறிந்தது முதல் தினம் ஒவ்வொன்றாய் உயிர் பெறும் சிறுகாடு அது. தோட்டத்தில் நின்ற வெட்சி இலைகளின் மீது ஊர்ந்து கொண்டிருந்த பொன் வண்டொன்றைக் கைகளில் பிடித்துப் பொத்திக் கொண்டாள். அதன் மென்கூர்முட்கால்கள் உள்ளங்கைகளில் உருள மேனி நெளிந்தாள். உள்ளங்கையை அள்ளியபடி கைகளை விரித்து பொன்வண்டின் மேனியை நோக்கினாள். மஞ்சளும் கருமையும் ஒளியெனக் கலந்து கொட்டிக்கொண்டிருந்த அந்தியில் அதன் உடல் மாயநிறங்களின் ஒளிக்கூச்சலென மிளிர்ந்து ஒளிர்ந்தது. தனது விரிந்த அலைக்குழலைக் கோதிச் சுற்றியணைத்து வலத்தோளால் வழிய விட்டாள். மென் மயிர்க்கால்கள் ஒற்றை வழிப் பாதையில் கசியத்தொடங்கிய ஈரத்தில் அமிழ்ந்து நடந்தன.
அந்தியின் ஒளிப் பொழிவில் அவளும் பொன்னென ஆனாள். பொன்னொச்சி மலர்களின் தீராத மஞ்சள் அவளில் குடியிருந்தது. வதனத்தில் சரக்கொன்றையின் மஞ்சள். கால்களில் வாகையின் மஞ்சள். இடையில் கொத்துப் பொன் விளக்குகள் இருளுளில் சுடரும் மஞ்சள். வெய்யில் விளையாடும் கழுத்தில் பழம் தங்கத்தின் பொன் மஞ்சள். நாசியில் படர்வது அரும்பும் வியர்வையைக் கூட மூக்குமின்னியின் சுடரெனக் குழைந்து கூர்க்கும் மின்மஞ்சள். தாமரைக் கூர் மார்புகளில் எலுமிச்சையின் முற்றிய இள மஞ்சள். அவள் மஞ்சளினால் திருமேனி ஆனவள். அல்லிகளால் வெள்விழி அளிக்கப்பட்டவள். கருங்குவளைகள் கண்மணிகளென ஆனாவள். இருள் கொண்ட யட்சிகள் இருவர் கைகள் தொட்டபடி வளைந்து கூர்ந்தது போல் புருவங்கள் சூடியவள். சிறுபலாச் சுளைகளின் பாதியெனச் செவிகள் பெற்றவள். பாதம் தழைத்து நடக்கும் பொழுது மான்கால்கள் பூண்பவள். ஒவ்வொன்றும் ஒரு துள்ளலென நடப்பவள். மழையில் நனையும் வெட்சி மலர்களென ஈர உதடுகள் உடையவள். செவ்விரத்தம் மலர் வர்ண நாவேந்தியவள். பாகின் தொண்டையில் உதித்தவளென இனிகுரல் பாய்ச்சுபவள்.
மேனி துள்ளக் குளத்தின் கரும்பாறைகளில் ஏறி மஞ்சையெனக் கூந்தல் விரிய நின்றாள். மறைகதிரவன் தன் எழிலெல்லாம் அழிய அவளில் பொன் மஞ்சளைப் பொழிந்தான். அகன்று பரந்த குளத்தில் தாமரைகள் பாதி திறந்தும் கூம்பியும் அசைந்தன. இலைகளில் ஓடியுருளும் நீர்வைரச் சில்லுகளைப் பார்த்தபடி நின்றாள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறு சூரியன் போல் இலைகளில் தவழ்ந்தன. வானில் நாரைக் கூட்டமொன்று கூரலகு வடிவில் பறந்து சென்றது. அண்ணார்ந்து வான் நோக்கினாள். காட்டிலிருந்து மாயன் எழுந்தது போல் குளிர் காற்றின் பொழிவு இலைகளை அலைத்தபடி குளம் நுழைந்தது. அவள் மஞ்சள் மேனியின் மயிர்கள் சிறு அம்புகளென உடலை நாணாக்கி காற்றை இலக்காக்கி எய்து கொள்ளடி எங்களை என எழுந்தன. அவள் தன் விழிகளைத் தாழ்த்தி பார்வையால் மேனியை வருடினாள். சிறு கரங்களின் விரல்களை நோக்கினாள். கோவிலில் சிற்பங்களைத் தொட்டு நோக்கும் பொழுது தேவியரின் விரல்களும் தனது விரல்கள் போலே இருப்பதை நோக்கியிருக்கிறாள். அன்னையைப் போலவே மகளின் விரல்களுமிருக்குமென எண்ணியிருக்கிறாள்.
மாயன் இம்முறை இருளென எழுந்து இளம் வெருகென நடந்து வந்தான். அவள் கருங்கற் பாறையில் அமர்ந்தபடி பாதங்களை நீரில் அலையவிட்டாள். குளத்தின் மீன்கள் பாதங்களை செம்பாசியென மயங்கி வாய் குவிந்தன. அவளுள் ஒவ்வொரு மீன் கவ்வலும் ஒரு துடிப்பென நரம்பேறியது. விழிகளை மூடித் தன் உடலை உள் நோக்கினாள். இதயம் துடிப்பது தடதடப்பென ஏறிவந்தது. காற்றின் குழைவில் காட்டு மல்லிகைகளிலிருந்தும் தாமரைகளிலிருந்தும் எழுந்த நறுமணத்திலிருந்து அவள் முன்னறியாத விரல்கள் குளத்திலிருந்து எழுந்து அவளில் அளைவெழுந்தது. அம்பைத் தழுவும் குவிவிரல்கள், மலர்களை எறியும் விரிவிரல்கள், குழலைக் கோதும் கிளர்விரல்கள், இடையில் ஊன்றி நிற்கும் மடிவிரல்கள், தோழர்களின் தோள்களை அணைத்து நிற்கும் அணைவிரல்கள், மீசையைத் தடவிக் கூர்க்கும் தழுவுவிரல்கள், குழந்தையின் மூக்கைப் பொத்தி இழுத்து விளையாடும் பிடிவிரல்கள், சோற்றைப் பிசையும் குழைவிரல்கள், யாழின் தந்தியில் நடக்கும் நனிவிரல்கள், யாருமற்ற பிரகாரத்தில் எழும் தேவியரின் கல்முலைகளை அளையும் ரகசிய விரல்கள்.. அவ்விரல்களை எண்ணிய போது ரகசிய விரலொன்று அவளில் ஏறித் தொட்டது. தன் உடலை ஓர் ரகசியமென ஆக்கி தனக்குள் ஒளிந்து கொண்டு விழிகளை மூடிக் கொண்டாள். அவ்விரல் கால் விரல் நுனியைக் குழந்தையின் செவ்விதழ் நாவெனத் தொட்டது.
உள்ளங்கால்களில் குஞ்சிமயிர் நெளிவெனச் சுழன்றது நெளிவிரல். கெண்டைக்காலின் முடிச்சை ஒரு பிரகாரமென எண்ணி வலம் வந்து பின் இடம் வந்தது சுற்றுவிரல். இளவாழைக் காலில் வழுக்கியபடி ஏறியது வழுவிரல். முழங்காலின் பின் வளைவு சேற்றில் நட்ட நாற்றின் மேனியென இறங்கி மீண்டது நுழைவிரல். சுழல் விழியின் இடக்கால் விதிர்த்து எழுந்து மடங்கியமர்ந்தது. பின்தொடையில் ஒரு சறுக்கு மரவீரனெனச் சலிக்காமல் ஏறியிறங்கியபடி துடித்தது துடிவிரல். கால்மயிர்கள் முண்மாக்களென எழுந்து தடித்தன. கழுத்தில் ஒரு அரூபவிரல் மின்னென எரியத் தொடங்கியது. தலைக்குள் நறும்புகை மணமெழுந்து புகையாய் அவிழ்ந்து பாறையில் படர்ந்தது கூந்தல்.
சுழல் வளைமயிர்கள் மழைக்காடென விளைந்த பொன்மஞ்சள் நிலத்தில் பாகுச் சதையெனத் திரண்ட அல்குல் மடல்களில் முதல் விரலெனத் தொட்டு வளையிதழின் தீரத்தில் உலைந்தது உலவுவிரல். சிரசின் நடுவகிட்டினுள் அல்குல் துடிப்பதை உணர்ந்தாள் சுழல் விழி. மூச்சு மூட்டிக் கொண்டது மேனி. கால்கள் இரண்டு மலைப் பாம்புகளெனப் பின்னி இறுக்கின விரலை. விரல் வெளிநடந்து இடை தொட்டது. தொப்புளின் சிறுகுழியைத் தாவி வயிற்றில் நகர்ந்து மார்புகளின் நடுவில் விரிந்த மென்மஞ்சள் வீதியில் தொடங்கியது அலைவிரல். மஞ்சட் கிண்ணமெனக் கவிழ்ந்த முலைகளில் பொற்கீரியெனப் புரண்டு புரண்டு ஒட்டியது புரள்விரல். கருநாவல் பழமென உருண்ட காம்பினை வெளியே வா வாவெனத் தட்டியது அழைவிரல். அழைவிரல் கேட்ட போது சுழல் விழியின் காதுகூசியது. கால் விரல் நுனிகள் காம்புகளென உணர்கொண்டன. அல்குல் ஒரு பெருங்காம்பென மென்கொம்பு நீட்டியது. கரங்கள் கற்பாறையில் விரிந்து கிடந்தன. விரல்கள் பாறையைப் பிழிந்து கொள்பவை போலப் புதிதாக முளைத்த பாசியை அள்ளியள்ளி நடுங்கின. கழுத்தில் ஏறிய சுழல் விரல் செவியால் தூங்கி கன்னத்தால் உருகி உதட்டில் தொட்டது. அல்குலிலிருந்து ஆயிரம் சிறுபட்சிகள் கூச்சலிட்டபடி விண்ணெழுந்தன. நடுங்கும் பெருமுரசத் தோலென அல்குல் ஆடியது.
உதட்டில் ஓடிய போது அவை மடந்தையின் நளிவிரல். மூக்கில் சரிந்து நாசிக்கூரையில் வழுக்கிய போது மழைவிரல். விழிப்பீலியைத் தொட்டபோது தொட்டால் சிணுங்கி விரல். புருவங்களில் இறகென மிதந்த போது தூவிவிரல், நெற்றியில் பிறை தேடிய பொழுது நிலவு காட்டும் காதல்விரல், வகிட்டின் ஒற்றைவழியால் அலைக்குழலில் தொலையும் போது தொலைவிரல், பின்கழுத்தில் வீழ்ந்து முதுகு தொடும் பொழுது நீர்க்குளம் விசிறி வானவில் அருளும் வேழத்தின் துதிவிரல், பின்தோள் வெளியில் நடக்கும் பொழுது வாளின் முனைவிரல், பிருஷ்ட்டம் ஏறித் துள்ளும் பொழுது மந்திவிரல்.
ஒவ்வொரு விரல்களும் ஒரு விரலென அவள் பொற் திருமேனியைத் தொட்டு எழுந்தன. கற்பாறையில் அவள் தானொரு நாவென நீண்டு படுத்திருந்ததை உளக் கண்ணில் கண்டாள். அது தன்னை உருட்டித் தானே நக்குவதை நோக்கினாள். கால் நாவைத் தலை நா நக்கியது. ஒரு சதையை இன்னொரு சதை பின்னியது. மேனி நனைந்து ஈரத்தூவியென விழி திறந்தாள்.
வானத்தில் விண்மீன்கள் முழுவதும் கண்திறந்து தங்கள் பொன்மஞ்சள் விழிகளால் அவளை நோக்கின. அவள் விழிகளுக்குச் சுழல்வு மீண்டது. இம்முறை அவை சுழல்வதில் ஒரு மயக்கு சிறகசைத்தது. மேனியில் ஒரு ரசம் கூடியது. தோற்றம் பொலிந்து மழைத்தாளமென ஆடியெழுந்தாள். காற்றின் அலைகளில் தன்னை உலர்த்திக் கொண்டாள். புன்னகை மலர்ந்த தண்டென ஆனாள். இன்னும் இன்னுமென விழைந்தாள். சிலிர்த்துச் சிலிர்த்து விரிந்தாள். உணர்ந்து உணர்ந்து நாணினாள். முகர்ந்து முகர்ந்து விம்மினாள். கேட்டுக் கேட்டு எண்ணினாள். விழித்து விழித்து அருந்தினாள். தொட்டு தொட்டு அறிந்தாள். புன்னகை புன்னகையென அவிழ்ந்தாள். குழைவு குழைவு எனக் கனிந்தாள்.
புன்னகையின் இருவிரிவு இதழ்களென ஆகின. கனிவின் இரு குழைவு முலைகளென ஆகின.
தொடுகையின் இரு அம்புகள் கரங்களென ஆகின. அறிதலின் பேரங்கம் தோலென ஆனது. அருந்துதலின் நாவென விழிகள் ஆகின. எண்ணுதலின் வாயிலெனச் செவிகள் ஆகின. விம்முதலின் இசையெனக் குரல் ஆனது. நாணத்தின் உருவென வர்ணம் எழுந்தது. விரிவின் அகழ்வெளியென அல்குல் திறந்தது. விழைவின் ஒரு மலர் என கூந்தல் நெளிந்தது.
மாயன் அவளின் ஆடலை அறிந்தான். அவள் ஆடலின் விசையில் பொற்பாதம் தூக்கியளந்தாள் தன்னை. கூந்தல் கீற்றுகள் அலைந்து விம்மின. விழிகள் மயக்கில் துள்ளின. கரங்கள் குலைந்து அள்ளின. முலைகள் தழைந்து குவிந்தன. இடை சரிந்து உலகை எதிர்ந்தது.
மாயன் காற்றை வாரியிறைத்து வானிலிருந்து கொட்டினான். ததும்பும் நீர்த்தரையில் கரங்களால் இலைகளைத் தொட்டெழுப்பிக் கொண்டே தாமரைத் தலைகளை உலுப்பினான். தாமரைகள் நறுமணக் காற்றென எழுந்து குவிந்து அவளில் உறைந்தன. மாயன் விண்மதியின் வெளிரொளியை அவளில் அள்ளிப் பூசினான். தாமரை இலைகளில் குழிந்த நீரென ஒளி அல்குலில் நிரம்பியது. கைகள் விரித்து ஆடியவளின் கரமிடை அக்குளில் போதையின் நறுமணமொன்று அன்று பிறந்தது. அதை மாயன் நாசியால் அள்ளினான். அவன் கரங்களும் உடலும் காட்டில் சரிந்து விழ மயக்கில் உலைந்து பெருங்காற்றின் கடைசி மூச்சென
மரங்களிலும் புதர்களிலும் மலர்க்கொடிகளிலும் படர்ந்து வீழ்ந்தான். கோடி கோடிப் பச்சை விழிகள் திறந்து வனம் கண்கொண்டு மின்னி விழித்தது. சுழல் விழி மாயனைப் பார்த்தாள். அவன் ஒவ்வொரு மின்மினியின் பசும் ஒளியிலும் அவளை நோக்கினான். பாறையிலிருந்து நீரரவு ஒன்று குளத்தில் பாய்ந்து தவளையைக் கவ்வி விழுங்கியது.