16: ஈச்சி எழல்

16: ஈச்சி எழல்

வெஞ்சுரம் நெஞ்சில் உலைய உடலை அசைக்காமல் இருண்ட குடிலின் கூரையை நோக்கியிருந்தாள் நிலவை. அவள் இக்குடிலுக்கு வந்து அரைப்பருவம் சென்றோடி விட்டது. இருளிலே இருந்து இருளிலே எழுந்து இருளிலே விழிகளைப் பார்த்து நாளெலாம் அமர்ந்திருப்பாள். நாளைக்கு ஒருவேளை கிழங்குகளோ புல்லரிசிக் கஞ்சியோ கொணர்வாள் மாதுமியாள். அவளைத் தவிர வேறு ஒருவருடனும் அவள் ஒரு சொல்லும் பேசுவதில்லை. அதிகாலையில் மாதுமியாள் வந்து அவளைக் காலைக்கடனுக்கும் குளிப்பதற்கும் அருகிலிருந்த குளத்திற்கு அழைத்துச் செல்வாள். முதல்ஒளி மண் விழுவதற்கு முன் குடிலுக்குத் திரும்பி விட வேண்டும் என நிபந்தனை கூறியிருந்தாள் நிலவை.

வெளிச்சம் அவளைத் துன்புறுத்தியது. அகலின் ஒளிக்கும் கண்கள் நீர்கசிந்தன. இருளை உற்று உற்று இருளை விழிகளென ஆக்கிக் கொள்பவளின் ஊழ்கமென உறைந்திருந்தாள். சீலதேகனும் தந்தையும் நினைவில் எழுவது நீங்கியிருந்தது. தாய் கமலசொரூபியின் வாசம் குடிலிலிருந்து அகன்றுபோனது. புலன்கள் ஒவ்வொன்றும் மயிர் உதிர்வதைப் போல் அகன்றன. அவளது செவிகள் பறையும் முழவும் கேட்கும் அவ் வனக்குடிலின் பேரிரைச்சல்களுக்கோ வேழங்களின் பிளிறல்களுக்கோ அதிர்வதை மறந்தன. புன்னொலிகளே அவளிடம் நெருங்கி வந்தன. அளவில் பெரியவைகள் உண்டாக்குவது பித்து. சிறியவைகள் உண்டாக்குவது ஊழ்கம். அவள் ஒவ்வொரு மென் உருள்விற்கும் தொடுகைக்கும் உடலை அவிழ்த்துக் காத்திருந்தாள். இருட் குடிலுக்குள் ஊரும் பூச்சிகளின் காலடிகள் அவளுக்குக் கேட்கத் தொடங்கின. பல்லிகள் ஊர்வதும் அவை கொட்டும் இச் களும் அவளது உடலை அதிர்த்தன. பொழுதின் இருப்பை உதிர்த்துச் சருகுக் குவியலெனக் கிடந்தாள்.

நடுநாழிகை கடந்து நிலவின் கரங்கள் எறிந்து மென் வெளிர் கதிர்கள் குடிலின் மேல் சரிந்து கிடந்தன. கொல்வேல் ஆடவர் குழுவொன்றைப் பிடிகாப்பிட்டு புலிப்படை வீரர்கள் மண்ணில் நிரையாக அமர்த்தியிருந்தனர். மண்ணில் உடும்பென ஈச்சி உழன்றபடியிருந்தாள். எரிவிறகுகளை மூட்டிக்கொண்டும் வந்தர்களுக்குக் குவளைகளில் நீர்வார்த்துக் கொண்டுமிருந்தனர் வீரர்கள். கள்வர் குழுவின் முதியவர் ஒருவருடன் நீலழகன் மான் தோல்களில் அமர்ந்து கதைத்துக் கொண்டிருந்தான். முதியவர் விழிகளில் அச்சம் மண்ணிற நரம்புகளைத் துடிக்க வைத்தது. நீலழகன் அவர்களின் ஆயுதங்களைக் களைந்து பிடிகாப்புகளை அகற்ற வேண்டாமென ஆணை கொடுத்தான். அவர்களைக் கைது செய்துவந்த குழுவின் தலைவன் யானன் “இவளை என்ன செய்வது” என ஈச்சியை நோக்கி விரல்களைக் காட்டினான். “குடிலில் சேர்” எனச் சொல்லிவிட்டு அலைசிகை விரியக் கிடந்த ஈச்சியை நோக்கி விட்டு இதழ்களில் கசப்பு ஊர்ந்து வரக் கைகளை இறுக்கிக் கொண்டு தன் குடிலுக்குத் திரும்பினான்.

நிலவையின் குடில் வாசலைத் திறந்து ஈச்சியை உள்ளே வீசினர் வீரர்கள். அவள் அரணையெனத் தவழ்ந்து உடல் எழமுடியாமல் மூங்கில் கழித் தரையில் படுத்து உதட்டை முணுமுணுத்த
படியிருந்தாள். நிலவையின் செவிகளில் ஈச்சியின் உதட்டின் சிற்றசைகள் முட்பற்றையென ஒற்றின. செவிகளை மூடிக்கொண்டு இருளை நோக்கினாள். அங்கு அசைவது யாரென அறிந்திலாள். எழுந்து அகலை எழுத்தாள். விழிகள் கூசி நீர்வரத் தொடங்கியது. ஈச்சியின் சிகை முதுகின் நடுவளவு வரை நீண்டு தூசுகளும் புழுதிமண்ணும் படிந்து அசைவின்றிக் கிடந்தது. அவள் அனுங்கிய இதழ்கள் கீழ்நோக்கியிருந்தன. “யார் நீ. இங்கிருந்து போய் விடு” எனச் சொல்லியபடி நிலவை அவளை ஒரு அரவைத் தீண்டுவது போல் கால்களால் தொட்டு அசைக்கப் பார்த்தாள். பதிலெதுவும் எழவில்லை. ஈச்சியின் மூச்சு விக்கி விக்கி நீண்டது. நிலவை அகலை நூர்த்து குடிலில் இருளை ஏற்றினாள்.

*

வெளியே துடியும் கிணையும் ஒலிக்கும் சத்தம் கேட்டு ஈச்சி புரண்டு படுத்தாள். உடல் நோவென எரிந்து கொண்டிருந்தது. விழிகளைத் திறந்து இருட்டை விழிகளால் தடவினாள். உடல் மெல்ல இருமி கிண்
கிண்ணென வலி காட்டியது. இருளிலிருந்து “யார் நீ. இங்கிருந்து போய் விடு” எனப் பெண் குரலொன்று வெருகின் குரலில் ஒலித்தது. உலர்ந்த பாசிபோன்ற உதட்டை விரித்து “நீர்” எனக் கசிந்தாள். மென் காலடியோசைகள் இருளில் நடந்தன. அவளின் உடலை அவளை விடப் பெரிய கையொன்று தொட்டணைத்து எழுப்பியது. நிலவையின் மார்பினில் சாய்ந்திருந்தாள் ஈச்சி. மூங்கில் குவளையின் வாய் விளிம்பு ஈச்சியின் உதட்டில் படர்ந்தது. பாறைக்குள் தேரையென தாகம் ஒளிந்திருந்தது. உலைப்பாறை மழை கொண்டது போல் குவளையைக் கவிழ்த்து நீரைக் குடித்தாள். இன்னொரு குவளையையும் நிலவை உதட்டில் வைத்தாள். குளிர்ந்த ஆற்று நீர் உடலில் நுழைந்ததும் மெல்லத் தலையெழுந்தாள் ஈச்சி. கண்கள் நொந்து கன்றியிருந்தது. “அக்கா, என்ன பொழுது இது. எங்கிருக்கிறேன். ஒரு குற்றும் வெளிச்சம் இல்லாமல் இருப்பது அச்சத்தைக் கொடுக்கிறது. அகலுண்டா” எனக் கேட்டாள் ஈச்சி. நிலவை குடில் வாயிலின் கதவை காற்பங்கு திறந்தாள். வாய்க்காலில் வெட்டிய வெள்ளமென ஒளி குடிலில் பாய்ந்தது. சிலந்தி வலைகளும் ஊரும் பல்லிகளும் அட்டைகளும் வசிக்கும் அக்குடிலில் வனதெய்வம் போன்ற ஒருத்தி இருப்பதைப் பார்த்து ஈச்சி மெல்ல உடல் எழுந்தாள். “உங்களையும் கைது செய்திருக்கிறார்களா அக்கா” என வினவினாள். “ஹ்ம்” என்ற ஒலி நிலவையின் உதட்டை விரிக்காமல் எழுந்தது. ஈச்சிக்குச் சிறுமியின் குறுவட்ட முகம். பாக்கு மென்று மஞ்சள் படிந்த சீரற்ற பல்வரிசை. கைகள் மெலிந்து முலைகள் வற்றியது போலிருந்தாள். வலக் காலில் செப்புக் காப்பு ஒன்றை அணிந்திருந்தாள். காதுகளில் இரண்டு மொட்டுக் குழைகள் ஆடின.
பட்டினி நிழலென அவள் உடலிலிருந்து விழுந்து கொண்டிருந்தது. உடலில் சிறு கன்றல் காயங்கள் தெட்டம் தெட்டமாகத் தெரிந்தன. வயிற்றில் ஒரு கைவிரலளவு செவ்வரி ஓடியது. உடலில் காய்ந்த மாட்டுச் சாணி வாசமும் பச்சையும் கரைந்திருந்தது. மேனியில் சேறும் அங்கங்கே புரண்டிருந்தது. போரிலிருந்து திரும்பியவள் போலிருந்தாள். “யார் நீ. உன்னை ஏன் கைது செய்திருக்கிறார்கள்” என நிலவை மெளனம் கலைந்து ஈச்சியை நோக்கினாள்.

ஈச்சி நிலவையின் வதனத்தை நோக்கினாள். சலனமற்ற குளமென விரிந்திருந்தது. அதில் தன்னைப் பார்த்துக் கொள்ள விழைபவளென
மூச்சு சீராகும் வரை அமைதியாக இருந்தவள் “என் பெயர் ஈச்சி. நாங்கள் வேடுவர் குடி அக்கா. வனங்களில் தேனும் கிழங்கும் விளையும் காலங்களில் கொண்டாடியும் வறுமை விரட்டும் காலங்களில் வில்லாடியும் வயிறு நிறைப்பவர்கள். நேற்றுப் பகல் எங்கள் கொல்வேல் ஆடவர் குழுவொன்று ஆநிரைகளைக் கவர்வதற்கென்று பட்டினத்தின் விளிம்பில் உள்ள கானகத்திற்குச் சென்றனர். நானும் விளையாட்டாய் என் தந்தையுடன் சென்றேன். ஆடவர் சொல்லும் கவர்தல் கதைகள் என்னுள் அச்செயலை நோக்கியறிய வேண்டும் என்ற விருப்பை ஆக்கியிருந்தது. குழந்தையிலிருந்து கேட்டு வளர்ந்த கதைகள் அவை.

பட்டின எல்லைக்குள் நுழையும் பொழுது விற்களையும் எறிவேல்களையும் தயார்ப்படுத்திக் கொண்டோம். ஆளுக்கு இரண்டு பிடிகயிற்றுக் கட்டுகளை இடையில் சுற்றியிருந்தோம். நான் மரக்கிளை போன்ற ஒரு தடியில் வேல்முனை கட்டிய தடிவேலை வைத்திருந்தேன். பாறைகளில் உரசி வேல் முனைகளைத் தீட்டிக் கொண்டோம். அந்தி வானம் சரிந்து செஞ்சிவப்பென அடவியைக் குளிரொளியால் எரிப்பது போலிருந்தது. பெரு மரங்களின் நிழல் இருட்டின் தூண்களை வனத்தில் விழுத்தியது. சூரியன் அழியத் தொடங்கிய முதல் தொடுகையை நெடுமர உச்சியிலிருந்து நோக்கிய சாரன் மெல்லிய காட்டுப் பறவையின் குரலில் குவிக் குவிக் குவிக் என முச்சங்கேதத்தால் அறிவித்தான். எங்கள் குலதேவி கொற்றவையை வணங்கிவிட்டு கொல்வேல்களையும் விற்களையும் எடுத்தோம். கரிய மண்ணை உடலிலும் முகத்திலும் பூசிக்கொண்டோம். இலையாடையை இறுக்கி உடலில் எஞ்சியவற்றை மறைத்தோம். வனவிளிம்பைக் கடந்து பட்டி திரும்பிக் கொண்டிருந்த ஆநிரையொன்றினுள் காட்டு முயல்களெனத் தாவி அரணைகளென ஊர்ந்தும் கன்றுகளென மடிந்தும் நடந்து பட்டி சேர்ந்தோம். வரும் வழியிலேயே எத்தனை மாடுகளைச் சாய்த்துச் செல்வதென தந்தை சூர்வேழர் கணக்கிட்டுக் கொள்வார். அவர் எம் குடியின் தலைமகன். அவரின் கவர்தலின் ஞானம் வேட்டையாடும் ஓநாய்களுக்குரியது. மூக்கினால் வாசனைகளைப் பிரித்து சேற்றின் திசையென்ன என்பதை அறிபவர். எங்கோ வனத்தின் அடுக்கில் மறைந்திருக்கும் சுனையின் கிளிக்குரலைக் கேட்டறிபவர். அசையாமல் நிற்கும் இருளில் வேழத்தை உணர்பவர். அவர் முன்னால் சென்று பட்டியில் மாடென ஒளிந்தார். நானும் ஏழு ஆடவரும் அவருடன் சேர்ந்து கொண்டோம்.

மாட்டுச் சாணத்தின் மணம் பட்டியை மலக்குவியலென ஆக்கியது. நான் அதுவரை இவ்வளவு மாடுகள் கொண்ட பட்டியைப் பார்த்ததில்லை. சிறுவர்களுடன் எலிவேட்டை ஆடியிருக்கிறேன். ஆனால் என் கண்முன் நின்றிருப்பது வளை வாள் போன்ற கொம்புள்ள தினவு கொண்ட ஆயிரக்கணக்கான பசுக்களும் காளைகளும் கன்றுகளும். அவை வால்களைச் சுழற்றி ஈக்களை விரட்டிக்கொண்டும் நாக்களைப் புரட்டித் தோல்களை நக்கியபடியும் இருந்தன. முதுமாடுகள் அமர்ந்து இரைமீட்கத் தொடங்கின. எழுந்து நிற்கும் மாடுகளை சாய்த்துச் செல்வது கடிது. இளம் மாடுகள் பட்டி மேய்ப்பனின்றி வனம் நுழைந்தால் காட்டு விலங்கென ஆகக் கூடியவை. திமிறி ஓடுபவற்றைப் பொழுதெல்லாம் அலைந்தாலும் பிடித்துக் கொள்ள இயலாது. கன்றுகளைச் சாய்ப்பது இருப்பதில் சிறந்தது. அருகில் ஈச்சையால் வேய்ந்த சிறு மனைகளில் தீப்பந்தங்கள் எரிந்தன. ஐந்திலிருந்து ஏழு பேரளவில் இருக்கலாமென தந்தை விரல்களால் சொன்னார். மாடுகளின் குமைவிலும் சாண நாற்றத்திற்குள்ளும் இது என் முதல் கொள்ளை எனும் நினைப்பில் உடல் வியர்த்து புறந்தலையிலிருந்து ஊற்றிய வேர்வை நெஞ்சில் வடிந்தது. தொடைகள் ஈரமூறி கருமண் கரையத் தொடங்கியது.

சாரனும் குறிஞ்சன் மாமாவும் வேல்களை ஒன்றாக உரசினர். அவர்கள் முன்சென்று மனையிலிருப்பவர்களைத் தாக்கு அனுமதி கோரும் குறியது. தந்தை குவிக் என ஒற்றையொலி எழுப்பினார். அரை நாழிகைக்குள் மனையிலிருப்பவர்கள் அலறுவதும் ஓடுவதும் கேட்டது. பானைகள் உடைந்து நொறுங்கும் ஓசை மாடுகளின் செவிகளில் விழுந்தது. எழுந்து ஒரு மாட்டின் முதுகில் கைகளால் தடவியபடி தீப்பந்தங்களைச் சாரன் நீரில் முக்கியளிப்பதை
பார்த்தேன். மேய்ப்பன்களின் கதறலைக் கேட்டு அமர்ந்த முதுமாடுகள் எழுந்தன. ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டு காதை உதைக்கும் ஒலியில் கதறத் தொடங்கின. எனது நெஞ்சம் தடதடவென அடித்துக் கொள்ளத் தொடங்கியது. கரங்களில் இருந்த தடிவேல் நடுங்கியது. அதனை நிலத்தில் ஊன்றி உடலை உறுக்கினேன். தந்தையும் மற்றவர்களும் மாடுகளையும் கன்றுகளையும் நிறத்திலும் குறிப்பிலும் பிடிகயிறுகளால் பிணைக்கத் தொடங்கினர். சாரன் அலறும் ஒலியைக் கேட்டதும் தந்தை கயிற்றை என் கரங்களில் கொழுவிவிட்டு குறுவாளையும் எறிவேலையும் எடுத்துக் கொண்டு மாடுகளை மோதியும் தள்ளியும் பட்டியைக் கடந்தார். நிலவின் ஒளியில் அவர் ஓடுவது ஒரு வேட்டை நாய் என எண்ணத் தோன்றியது. முன்னால் குவிந்தபடி வேகத்தைக் கால்களிலும் கூர்மையை விழிகளிலும் கூட்டியபடி விரைந்தார். நானும் மற்றவர்களும் ஐந்து மாடுகளையும் மூன்று கன்றுகளையும் இழுத்து பட்டியை விட்டு வனம் செல்லும் பாதைக்குள் திருப்பினோம். அவை சீறி முரண்டன. எனது கரங்களில் அவற்றை இழுத்து அசைக்கும் சக்தியில்லை. ஒவ்வொன்றும் ஒரு யானையென அசைய மறுத்தன. அவற்றின் வால்களைக் கிள்ளியும் ஒலிகளை எழுப்பியும் பட்டியைக் கடக்க முயன்றோம்.

பட்டியிலிருந்தவை ஆறு தீப்பந்தங்கள் மாத்திரமே. அவற்றின் ஒளியை நோக்கி மீன்கள் துள்ளுவதைப் போல் மாடுகள் முட்டி மோதிக் குவிந்தன. நாங்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு இருட்டுக்குள் அந்த மாடுகளையும் கன்றுகளையும் இழுத்துச் சென்றோம். ஒரு மாடு வளைந்து தலையாட்டிய பொழுது அதன் இடக் கொம்பு என் வயிற்றில் கீறியது. என் கையிலிருந்த பிடிகயிற்றை இழுத்து வெண் மாடொன்று பட்டியால் பாய்ந்தது. அதனுடன் இழுபட்டு அங்கம் சாணியிலும் மண்ணிலும் கற்களிலும் அளைந்து கீறியது. உடலில் குருதித் துளிகள் சினைத்தன. ஆனால் வலியெழவில்லை. தந்தை என்னவானார் என அருகிலிருந்த சாம்பன் அத்தானிடம் கேட்டேன். “அவர்கள் மீள்வார்கள் ஈச்சி. நாம் வனத்திற்குள் நுழைய வேண்டும். அது தான் நம் பணி” என உரைத்தார்.

குடியில் பசியுடன் காத்திருக்கும் குழந்தைகளின் முகங்கள் உளத்திலெழுந்தது. ஒரு அரைக்கணம் எங்கள் குடிதெய்வம் கொற்றவையின் விழிகள் என்னைத் தொட்டு விரிவதைப் போல் மெய்யுணர்வு சில்லிட்டது. எழுந்து மாடுகளைப் பிடிகயிற்றால் கழுத்தை இறுக்கினேன். மாட்டின் புட்டத்தில் மூன்று பலத்த அடிகளைத் தடிவேலால் அடித்தேன். மருண்டு ஓடிய வெண்மாட்டில் சிலதடங்கள் ஓடிப் பின் ஒருகாலை வேல் அடியென ஊன்றி தாவி மாட்டின் வெள் முதுகில் ஏறியமர்ந்து அடவியை நோக்கிக் கொம்பைத் திருப்பினேன். சில கணங்களில் அம்மாடு புரவியென ஆகியது. என் உடலில் ஒட்டியிருந்த கருமண் சாந்து குழைந்து வடிந்து ஊற்றியது. அடவியிலிருந்து குளிர் காற்றெழுந்து மேனியை கொற்றவையின் தண் கருங் கூந்தல் என மோதியது. அகம் ஒரு கணம் கொல்வேல் மகளிர் எனக் கூவிக் கொண்டது. புன்னகைத்து நிலவை நோக்கி விழிகளை உயர்த்தி பின் பட்டி மனையை நோக்கினேன். பட்டி அரண்டு மாடுகள் கலைந்து நாற்றிசையும் குழறியபடி பாய்ந்து ஓடுவது தெரிந்தது. ஒன்றின் மேல் ஒன்று தாவிக் குதித்தன. கன்றுகளை உந்தித் தள்ளின. பட்டி மனைகளில் இருபதுக்கும் மேலே தீப்பந்த ஒளிகள் சுழன்றெரிந்தன. அகம் ஒருகணத்தில் அனலணைந்தது. வனத்தின் விளிம்பு வரை மூன்று மாடுகளையும் இரு கன்றுகளையும் தான் எங்களால் சாய்க்க முடிந்தது. இதயம் வால்நுனியில் கட்டி எரிவிறகின் மேல் தூங்கும் முயலெனத் துள்ளி மடிந்து கொண்டிருந்தது.

ஒரு நாழிகைக்குள் பட்டி மனைகளில் ஒளியேறியது. எங்களின் பின்னிருந்து சிலர் இருளில் அசைந்து முன்வந்து இறுக்கிப் பிடித்தனர். என்னை ஒருவன் கரங்களால் பின்னிருந்து இறுக்கிய போது என் முலைகளில் கைபட்டவுடன் துள்ளிக் கைவிலக்கினான். நான் அதிர்ந்து கொண்டிருந்தேன். என்னுடன் இருந்த ஏனையவர்களையும் என்னையும் பின்புறம் கையிறுக்கிப் பிடிகாப்பிட்டார்கள். எங்களை வசவு சொல்லி ஏசியபடி மனைக்குக் கூட்டிச் சென்றனர். செல்லும் வழியெல்லாம் ஒட்டி வாடிய நுணல்களெனக் குந்தியிருக்கும் என் குடிக் குழந்தைகளின் முகங்கள் என் அடிவயிற்றிலிருந்து எழுந்து கண்களில் நீர் முட்டி அடக்க முடியாமல் வழியத் தொடங்கியது.

பட்டி மனை முற்றத்தில் வெட்டப்பட்ட தந்தையின் தலையைப் பார்த்ததும் அகமழிந்து வீழ்ந்தேன். விழித்த பொழுது வனக்குடிலில் புலிச்சின்னம் தீட்டப்பட்ட கொடிச்சீலையின் முன் என்னைப் போட்டிருந்தார்கள். எங்கள் குடியின் ஆடவர்கள் எல்லோரும் பிடிகாப்பிட்டபடி இருப்பதைப் பார்த்தேன். கண்கள் நோவில் வலியெடுத்து மீண்டும் சரிந்தேன். சில நாழிகை கழித்துத் திரும்பவும் என்னைத் தூக்கி வந்து இந்தக் குடிலின் மூங்கில் தரையில் வீசினார்கள். உங்கள் குரல் குகைக்குள் ஒலிப்பது போல் கேட்டது. நீ யார். இங்கிருந்து போய்விடு எனச் சொன்ன போது நான் எங்கிருக்கிறேன் என்ற கேள்வியால் மீண்டும் சித்தமழிந்து விழிகள் மூடிக் கொண்டன” என தன் கதையைச் சொல்லி முடித்து இன்னொரு குவளை நீரைக் குடித்தாள் ஈச்சி.

நிலவை விழிகளிலிருந்து நீர் இரு கோடுகளாக வடிந்து கொண்டிருந்தது. ஈச்சி அவளின் கரங்களைத் தொட்டு “அக்கா, நாங்கள் எங்கே இருக்கிறோம். என் குடிக் குழந்தைகள் என்னவாகியிருக்கும். ஆடவர் யாவரையும் இம்முற்றத்தில் கண்டேன். மகளிரும் குழந்தைகளும் என்னவானார்கள். சொல்லுங்கள் அக்கா” என விசும்பத் தொடங்கினாள். நிலவை வெறித்த விழிகளில் கனல் கட்டி ஈச்சியை நோக்கியிருந்தாள். ஒரு நாழிகை கழிந்து மாதுமியாள் சுடுகிழங்குகளுடன் வாயிலுள் நுழைந்தாள்.

ஈச்சி பேயைப் போல அந்தக் கிழங்குகளைக் கடித்து அதைப் பற்களால் மெல்லாமல் விழுங்கினாள். நிலவையும் மாதுமியாளும் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். இரண்டு கிழங்குகளை முழுவதும் விழுங்கியவள் கடைசிக் கிழங்கை எடுத்த போது ஒரு கணம் துணுக்குற்று நிலவையை நோக்கிக் கிழங்கை நீட்டினாள். நிலவையின் கண்களில் மீண்டும் நீர் பெருக்கெடுத்தது. இம்முறை கைகளை ஓங்கிக் குடில் சுவற்றில் மாரிலறைவதைப் போல் அறைந்தாள். குடில் ஒருநொடி விரிந்து சுருங்கியது. மாதுமியாளை நோக்கி “உன் புலிப்படை வேந்தன் இவளின் பசிக்கு என்ன சொல்கிறான். இவள் குடிக் குழந்தைகளின் வயிற்றில் காற்றை நிறைத்து அவனுக்கொரு அரசு வேண்டுமாமா. சொல் மாதுமி. இவள் குடி மகளிரும் குழந்தைகளும் எங்கே” என வேல்கள் நகங்களில் உரசும் பொறியென எழுந்தாள்.

மாதுமியாள் ஒருகாலைப் பின்னால் நகர்த்தி பின் தன்னை ஒருங்கிக் கொண்டு “அவர்கள் உண்டு பசியாறிவிட்டார்கள் நிலவை. இது அவர்கள் சுட்ட கிழங்குகள் தாம். நேற்று மாலையில் ஆடவர்களைக் பிடிகாப்பிடச் சொல்லிவிட்டு எமது குடில்களில் கொணர்ந்து சேர்த்த மகளிருக்கும் குழந்தைகளுக்கும் சோறும் கருவாடும் கொடுத்தார்கள் வீரர்கள். மகளிர் கண்ணீருடன் தங்கள் இன்னல்களை நீலழகனிடம் சொல்லி முறையிட்டார்கள். அவர் எல்லாக் கதைகளையும் நிதானமாகச் செவியேற்றார். அவர்களின் இன்னல்களையும் பசியையும் கேட்டு விழிகள் கலங்கி நீர் கோர்த்து அமர்ந்திருந்த நீலழகனை நான் பார்த்தேன் நிலவை. அவன் நாம் எண்ணுபவனல்ல என்பதை ஒவ்வொரு நாளும் மேலும் ஒருதுளி அதிகமாக உணர்கிறேன். இரண்டு சிறுவர்கள் அவனது மடியிலேயே உறங்கினர். அவர்களின் அன்னையர்கள் வந்து அவர்களைக் கேட்ட பொழுது அவன் அவர்களை நிற்கச் சொல்லிக் கைகளால் காட்டி அவர்கள் உறங்கட்டும் எனத் தலைகளை வருடினான். அன்னையர் இருவரும் அவன் முன் முழந்தாளில் நின்று சொல்லெழாமல் அழுதுகொண்டு நின்றதைப் பார்த்தேன். அவன் என் நெஞ்சில் இப்பொழுது குடித்தெய்வம் நிலவை. அவன் கரங்கள் குழந்தைகளை வருடியபோது அன்னையின் முலையில் சுரக்கும் முதற்பாலின் ஈரம் பரிந்தது. அவன் குடி மகளிரின் கதைகளைக் கேட்ட போது முதுதந்தையின் செவிகள் மகள்களுக்காகத் திறந்திருப்பவை போல் விரிந்திருந்தன. பசி என்ற சொல்லை அவர்கள் விளக்கி முடித்த பொழுது அவன் கரைந்த உப்பின் வெண்மையென ஒளிர்ந்தான்” என மெல்லிய உறுதியான குரலில் சொல்லி முடித்து விட்டு ஈச்சியை நோக்கினாள் மாதுமியாள்.

ஈச்சியின் முகம் தணிந்த மேகமென வெளுத்திருந்தது. “அக்கா, குழந்தைகள் பசிதீர்ந்தல்லவா. அது மெய்தானே. என் தந்தை அதற்காகத் தன் தலையையும் கொடுப்பேனச் சொல்வார். அவர் வெட்டப்பட்ட தலையின் குருதியில் எங்கள் குழந்தைகள் பிணி நீங்கியிருப்பதை அவர் விழிகள் எங்கிருந்தும் நோக்குமென்றே தோன்றுகிறது. உறைந்து குருதி சிவக்கக் கிடந்த அவரின் தலை என்னுள் என்றும் இனி மறையப் போவதில்லை. அவர் ஒவ்வொரு குழந்தையின் வயிற்றிலும் நீரென ஊறுவார்” எனச் சொல்லிவிட்டு சாய்ந்து படுத்தாள்.

நிலவை ஈச்சையின் அருகில் அரங்கி இருந்து அவளின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டாள். புழுதி படிந்த அவளின் சிகையைச் சிக்கு நீக்கினாள். மாதுமியாள் மருந்துச் சாற்றை சிறுகலயத்தில் கொணர்ந்தாள். மயிற்பீலிக் கொத்தொன்றையும் அருகில் வைக்க நிலவை அவளை நிமிர்ந்து பார்த்து “நீ செல் மாதுமி. நான் இவளைப் பார்த்துக் கொள்கிறேன்” என்றாள். இத்தனை நாட்களில் அவளின் இருள் படர்ந்து அடர்ந்திருந்த வதனத்தில் தண்மையின் சுனையொன்று கனிவதை நோக்கி உளம் மெல்ல மலர்ந்தாள். “பிறரின் புதுத் துயர். நமது துயர்களை எப்படிப் பழையவைகளாக்கிச் சுருக்கி விடுகின்றன” என தனக்குள் எண்ணியபடி குடில் வாயிலை மேலும் திறந்து ஒளியை உள்ளே அனுப்பினாள்.

மாலையில் துயில் கலைந்து எழுந்த ஈச்சி நிலவை தன்னை மடியிலே வைத்தபடி சாய்ந்திருப்பதைப் பார்த்து மெல்லிய சிரிப்பு உதட்டில் விரிய அவளது விரல்களைத் தொட்டாள். வாயிலின் வெளியே ஆடிக் கொண்டிருந்த காட்டு மல்லிப் பூக்களை நோக்கியிருந்த நிலவை காந்தள் போன்ற மென்விரல்களின் தீண்டலால் அதிர்ந்து திரும்பினாள். ஈச்சியின் முகத்தைப் பார்த்த போது அவளிடம் புன்னகை தழைத்தது. “சென்று நீராடி வா ஈச்சி. உனது காயங்களுக்கு மருந்திட வேண்டும்” என்றாள் நிலவை. “எனது காயங்கள் ஆறிவிடும் அக்கா. நான் வேடர் குடிப் பெண். எங்களின் குருதி மருந்தெனத் தானே ஆகிக் கொள்ளக் கூடியது” எனச் சொல்லி சிறுமுகம் விரித்து காட்டு வெண்மல்லியெனச் சிரித்தாள்.

மாதுமியாளுடன் குளத்திற்குச் சென்ற ஈச்சி நீருள் மூழ்கி அதில் ஒரு அல்லி இதழென மிதந்தாள். மஞ்சளை அரைத்து ஈச்சியின் காயங்களின் மேல் பூசி சற்றுக் காயவிட்டு மீண்டும் நீரில் அலசச் சொன்னாள் மாதுமியாள். ஈச்சி மேனியெங்கும் மஞ்சளைத் தடவினாள். கருமண்ணில் செம்மை குழைந்து இன்னதென்று அறியாத புதுவண்ணத்தில் நீரிலிருந்து எழுந்தாள் ஈச்சி.

இருள் சாய்ந்து குடிலுக்குள் நிறைந்திருந்த போது திரும்பியவள் உள்ளே அகலெரிவதைப் பார்த்துப் புன்னகைத்தாள். மாதுமியாள் மூன்று காய்ந்த தேவ இலை மலர்களையும் மூங்கிலில் ஆக்கிய புகையிழுப்பானையும் ஈச்சிக்குக் கொடுத்தாள். கள்வர் குலமகளிர் வலிநீக்கும் என ஈச்சிக்குக் கொடுக்கச் சொல்லி மாதுமியாளிடம் கொடுத்திருந்தார்கள். ஆம்பலால் துன்னிய தழையாடையை அணிந்து கொண்டு ஈச்சி குடிலுள் நுழைந்தாள். காலின் செப்புக் காப்பும் காதின் குழைகளும் வண்ணம் திரும்பி மெல்லென மின்னிக்
கொண்டிருந்தன. அடவியின் குளிர் காற்று அன்னையின் மூச்சென அவளை ஆற்றியது. சிகையை முடிந்து கொண்டை போட்டிருந்தாள். ஒரு காட்டு மல்லிகைச் சரத்தை குடிச் சிறுமிகள் அவளுக்கென அனுப்பியிருந்தனர். அச்சரம் கழுத்தில் ஆரமென அவளைக் கிளியாக்கியது.

நிலவை மருந்துச் சாற்றைச் சற்று சூடுகாட்டி மயிற் பீலியொன்றை அக் கலயத்தின் மேல் வைத்திருந்தாள். ஈச்சி உள்ளே நுழைந்து “மருத்துவிச்சியே தயாரா” எனச் சிறுமியின் குழைவுக் குரலில் கேட்டாள். தோழியென அகமுணர்ந்த நிலவை “வாருங்கள் நோய்ப் பெண்ணே. இப்படி அமருங்கள்” எனக் கைளைத் தாழ்த்தி நிலத்தைக் காட்டி முறுவல் கொண்டாள். குடிலின் வாயிலைச் சாற்றிய ஈச்சி நடுவில் வந்தமர்ந்து தன் மார்க்கச்சைத் தழையாடையை அவிழ்த்தாள். மெல்லிய இரண்டு கூர்க் கோட்டுகளுடன் தூங்கிச் சரிந்திருந்தன இளங்குறு முலைகள். கழுத்தில் சூடிய காட்டுமல்லிகைச் சரம் வெண்பற்களெனக் கழுத்தைக் கவ்வியமர்ந்திருந்தது. தேவ இலை மலர்களைக் கைநகங்களால் நறுக்கி உள்ளங்கைகளில் ஏந்தி அதை நாசியால் முகர்ந்து உடலை ஏற்றினாள் ஈச்சி. நிலவை அவளின் பின்னால் அமர்ந்து மருந்துக் கலயத்தின் மென்சூடான சாற்றை முதுகில் வரியென ஓடிய செங்கோடுகளில் மயிற்பீலியால் ஒற்றத் தொடங்கினாள். முதல் தொடுகையில் ஈச்சியின் முலைக் கோட்டுகள் விழித்தன. அவள் தேவ இலை மலர்களை புகையிழுப்பானில் உள்ளே நுழைத்து இறுக்கிக் கொண்டாள். நிலவை எழுந்து அதை அகலில் மூட்டி ஒருதடவை உறிஞ்சிய பின் அவளிடம் கொடுத்தாள். நிலவையின் விரிந்த பெருந்தோற்றத்தின் நிழல் ஈச்சியின் மேல் விழுந்தது. நறும்புகையை தலை தாழ்த்தி ஊதிய போது அகலில் சிவந்து கொள்ளும் அவளின் விழிகள் கொற்றவையெனத் தோன்றியது.

ஈச்சி புகையிழுப்பானை வாங்கி குடில் புகைக்குள் தொலையுமளவு புகைத்தாள். நிலவை மயிற்பீலியை ஈச்சியின் கழுத்தில் இருந்த சிறு புண்ணில் தோய்த்தாள். மஞ்சள் குழைந்து ஈச்சியில் ஒளிகொண்ட கருமஞ்சள் நிறமும் அவள் விழிகளின் கடுநீலக் கறுப்பும் ஒளிர்ந்து துடிகொண்டன. கழுத்தில் வழிந்த சுடுசாற்றின் சாரலொன்று அவள் முலைகளின் மீது விம்மி விழ அல்குலில் சிறு நாத் துடிப்பொன்றை உணர்ந்து மேனி துள்ளினாள். நிலவை பின்னிருந்து இருகால்களையும் பரத்தி அவளைச் சுற்றிப் போட்டபடி மயிற்பீலியால் காயங்களை வருடியபடியிருந்தாள். ஈச்சி நிலவையின் மார்பில் சாய்ந்தாள். காட்டின் பெருமுயல்களின் செவியின் மென்மையும் சூடும் புறந்தலையால் உடலேறியது. குடிலில் நிறைந்த இன்புகையும் மருந்துச் சாற்றின் நெடியும் கலந்து இனிய குழைவை உண்டாக்கின. வெளியே துடியும் முழவும் இசைக்கும் ஓசை கேட்டது. யாரோ ஒருவரின் வாயிலிருந்து எழுந்த வேங்குழலின் நாதம் ஒரு மலர்ப்பற்றையெனக் குடிலுக்குள் எறிந்து கொண்டிருந்தது. நிலவை ஈச்சியைத் தன் இடப்புயத்தில் சரித்து வைத்து அவளின் வயிற்றிலிருந்த செவ்வரியில் பீலியை முத்தினாள்.

நிலவையின் முகத்தை நோக்கியபடி புகையை இழுத்துக் கொண்டிருந்தாள் ஈச்சி. நிலவையின் விழிகளில் தீயிலையின் சிவந்த இழைகள் அணியென ஒளிர்ந்தன. அவளின் பேரிதழ்கள் தேன் தேறல் தட்டுகளென ஈச்சியின் விழிகளில் சொட்டின. நாவால் உதட்டை நனைத்துக் கொண்டு நிலவையின் நாசியினருகில் சென்று அவளின் விழிகளை உற்றாள். இருசூடான தீயிலை மூச்சுகளின் கொல்வாசனைகள் அடவிவியின் மயக்கு மலர்களும் புதுநெல்லுமென
ஒன்றையொன்று பின்னிக் கொண்டு இருவர் நாசியிலும் நுழைந்து மீண்டன.

தன் சிற்றிதழ் அடுக்கை விரித்து புகையை நிலவையின் உதட்டில் ஊதினாள் ஈச்சி. நிலவையின் மார்புகள் கேணியில் ஊறிய ஈரச்சுனையென விம்மித் துளித்தன. தன் முதுகில் எழுந்த திரள்காம்பினை சிகையால் அரட்டினாள் ஈச்சி. நிலவை ஈச்சியின் சுவாசத்தை இழுத்து தன்னுள் நிறைத்துக் கொண்டாள். ஈச்சியின் தழையாடையிலிருந்த இழைகள் தாமே அவிழ்ந்தன. நிமிர்ந்து விழி நோக்கிய ஈச்சியின் காட்டு மல்லிகையின் பேரெழில் ஆரத்தில் அவளது முகம் குளிரும் தடாகம் என நிலவைக்கு தோன்றியது. வறண்டு உலர்ந்திருந்த தன் அடிச்சுனையை முகர்ந்து நக்குமொரு மான் என அவளின் இதழ்களை நோக்கினாள். ஈச்சி தன் உதட்டை நிலவையின் உதட்டுடன் ஒட்டிக் கொண்டு மூச்சைச் சுவாசித்தாள். துடியும் முழவும் இணைந்து கலந்து காற்றில் கூடின. வேங்குழல் கீதம் கூடிப் பிரிந்தது. வேழமொன்று அதிர்ந்து பிளிறிய பொழுது புலன்களின் விழிகளெல்லாம் உடலென ஆக ஈச்சியினை புயங்களில் தூக்கி பொன்மஞ்சள் குறுமுலையை வாய்க்குள் விழுங்கி நாவைப் பீலியென உருட்டினாள் நிலவை. ஈச்சியின் மேனி நாணறுந்த வில்லெனத் துள்ளியெழுந்தது. கரத்தில் பலம் எங்கிருந்து எழுந்ததென அறியாமல் நிலவையின் செவிகளுடன் அவள் தலையைக் கோதி தேன்வதையில் புதைப்பவளைப் போல அழுத்திக் கொண்டாள். நிலவையின் வாய் விதையுருட்டும் கிளியின் நாவென ஈச்சியின் காம்பைச் சுழற்றியது. முனகல்கள் ஒரு தொல்மொழியென நிலவையின் காதுகளில் ஒலித்தது. பின்னர் மூங்கில் தரையில் ஈச்சியை வளர்த்தி அவளின் மேல் நான்கு கால்களில் மா புலியென நின்றாள்.

இரு வாழைத் தொடைகளையும் விரித்து பிருஷ்டங்கள் எழில் குன்றுகளெனக் குமிந்திருக்க ஈச்சியின் மேல் தூங்கும் இரு பலாக்கனிகளை உருட்டிக்கொண்டு அவளின் கழுத்தை அவ் எனக் கவ்வினாள். கால்கள் வில்லென எழுந்து தலையும் சிறுபுறந் தோளும் தரையில் கிடக்க நிலவையின் அல்குல் மயிர்க் கொத்தில் தன் அல்குல் மலரை இடைத்துடியில் எழுந்து சாற்றினாள் ஈச்சி. சாற்றிக் கோர்த்தெடுத்தாள். இடக்காலை விரித்து கால்களை வெளியே எடுத்து நிலவையின் இடையால் சுற்றி சிறுமந்தி சுழன்று தண்டேறுவது போல நான்கு கால்களில் நிலவையின் முதுகில் பரந்தாள். நிலவையின் கழுத்தைப் பின்னிருந்து ஒரு அணங்கெனக் கவ்விச் சிறுகடிகள் கடித்தாள். நிலவை முனகியேற அவள் முலைகளை இருகுறுங் கரங்களின் காந்தாள் விரல்களால் அளைந்தாள். நாவில் எச்சிலைக் குழைத்து விரல்களில் பூசி பினைமாவென கொங்கைகள் பற்றினாள். நிலவையின் அல்குல் தேறல் கொண்டது. நான்கு கால்களில் நின்றபடி தலையை உயர்த்தி செவிகளைத் தின்னக் கொடுத்தாள். வலச்செவியைச் சப்பி உறிஞ்சியபின் உடலை உதறியெழுந்த ஈச்சி நிலவையின் முன் நான்கு கால்களில் பெருஞ் சிறுத்தையென நின்றாள். சிலகணங்கள் மேனிகள் ஒளிர்விட ஒருவரை ஒருவர் முழுதளந்தனர். கரங்கள் உயர்த்தி தோள்களைப் பற்றி உதடுகள் பின்னி உமிழ் நீர் வழிந்து அனல் முலைகள் மேல் பொழிய அவை முற்றி அழிந்தன. குழலின் ஓசை நின்ற போது நிலவையின் அல்குல் காட்டில் தேறலைக் குடித்தபடி வெறியில் தன் அல்குல் சீறும் சிறுத்தையொன்று அக்குடிலில் ஆற்றில் நீர் குடிக்கும் ஒலியெழுந்து கொண்டிருந்தது. குடில்  புன்னகைத்து இருளில் தாபத்தின் முனகலென அவிழ்ந்திருந்தது.

TAGS
Share This