18: உசை எழல்
முதற் சொல்லை உசை கேட்ட போது அது ‘நீலா’ என்றொலித்தது. தன் பசுஞ் சிறகுகளைக் கொத்தி அப்பெயர் தனக்குள் எங்கேயிருக்கிறதென்று தேடிச் சலிப்பவள் உசை. ஒவ்வொரு பீலியாய்க் கொவ்வைச் சொண்டால் கீறி இது தான் நீலாவா என பார்ப்பவள். ஆலம் விழுதுகளைக் கயிறாகக் கட்டியிழைத்த மரக்கூண்டில் தன் தாய்க்கிளி நூற்ற கூட்டின் தும்புக் குவியலில் அயர்ந்து படுத்திருந்து அப்பெயரைக் கனவில் கேட்பவள்.
நீலழகனின் குடிலில் எந்நேரமும் அகலெரியும். அங்கு வரும் தோழர்கள் அவனை நீலா என விளிப்பதைக் கேட்டுக் கேட்டு அச் சொல் அவளுள் ஒரு மந்திரம் போல் ஒலிக்கத் தொடங்கியது. ஒருகணமும் இருள் நுழைய இயலாத குடில் நீலழகனுடையது. உறங்கும் பொழுதும் நீலழகன் அகல் நூர்ப்பதில்லை. உசை தனக்கு அளிக்கப்பட்ட கூண்டினுள் குறுக்காக நீட்டப்பட்ட நீள் தண்டில் இருந்தபடி தலையை வலமும் இடமும் சாய்த்து உறங்கும் நீலழகனின் முகத்தில் விழும் மஞ்சளொளியை நோக்குவாள். “இவர் தான் என் தந்தையா. நான் இவரைப் போலவா இருக்கிறேன்” என எண்ணிக் கொள்வாள். ஒவ்வொரு காலையும் மதியமும் மாலையும் சிறு
நறுக்குகளாக வெட்டி வைக்கப்பட்ட கனிகளையும் விதைகளையும் நீலழகன் இலைகளில் கொணர்ந்து கூண்டின் கதைவைத் திறந்து அளிப்பான். உசை கொத்தி கொத்தி அதைப் பரிசோதித்து நீலழகனை நோக்கி நோக்கி உண்பாள். “இல்லை இவன் என் அன்னை” என அத்தருணங்களில் எண்ணிக் கொள்வாள்.
ஒவ்வொருநாளும் ஒளியெழாத அதிகாலைப் பொழுதில்
உசையின் கூண்டுக் கதவைத் திறந்து அவளைத் தன் தரை மெத்தையில் அமர்த்திய பின் குடில் வாயிலைச் சாற்றிவிட்டு வெண் புள்ளிகளும் கருமண்ணிறமும் நடுவே கருங்கோடும் அதில் வெண் விண்மீன்களும் உள்ள உலர்ந்த மான் தோலில் நீலழகன் ஊழ்கத்தில் அமர்வான். கால்களை ஒன்றன் மேல் ஒன்றாகக் கட்டியடுக்கி கைகளை மூவிதழ் விரித்து இருஇதழ் ஒற்றி நீட்டியபடி முதுகுத்தண்டை நெடும் பனையின் நேரெனத் தூக்கி விழிகளைத் தன் சிறகுகள் போல் மெல்லத் தாழ்த்தி மூடிக் கொள்ளும் நீலழகனை நோக்கிவிட்டு உசை தத்தித் தத்தியும் மெல்லக் கால்களை அரக்கியும் மெத்தையில் நடை பயில்வாள். சின்னஞ் சிறகுகளை விரித்துப் பறந்து மெத்தையில் விழுவாள். தரையிறங்கி மேலேறுவாள். கூண்டிற்கும் மெத்தைக்குமிடையில் கனவிலொரு பாதை செய்து அதில் சென்று மீள்வாள். நீலழகன் விழிதிறந்த பின் உசையைத் தேடுவான். அவன் தேடுவான் என எண்ணி மெத்தையில் வந்தமர்ந்து அவன் விழிதிறக்கக் காத்திருப்பாள் உசை. அவன் விரிந்து முதற் காண்பவள் தான் தானெனச் சிறகுகளை விரித்து நான் இங்கிருக்கிறேன் எனக் கீச்சுவாள். அவன் இதழ்கள் திறந்து சிரித்துக் கொண்டே “உசைக்கு என்ன பழம் வேண்டுமின்று. கொய்யாவா மாங்கனியா” எனக் கேட்டபடி உசையைத் தன் கைகளுக்குள் வைத்துச் சூடேற்றுவான். கதகதப்பில் சிறகுகள் கிடக்க அவன் விழிகளையும் சுருள் கேசத்தையும் ஒளிரும் மீசையையும் நறுக்கிச் சீராக்கப்பட்ட தாடியையும் ஒவ்வொன்றாக நோக்குவாள்.
அவன் உசைக்குச் சொல்லிய முதற் சொல் ‘தமிழ்’. அவள் சிறு செவிகளில் அச்சொல்லை அவன் பலநூறு முறைகள் உச்சரிப்பான். அவள் அதைத் தன் பெயரென்றே எண்ணிக் கொண்டாள். உசை என்பது யாரோ. நான் தமிழ் என தனக்குள் சொல்லிக் கொள்வாள். தமிழ் என நீலழகன் உச்சரிக்கும் பொழுது அவன் வதனத்தில் சுடரும் ஒளியை அவள் அன்னையின் உவகையெனக் கண்டாள். பலமுறை சொல்லி அழைக்கும் பொழுது தந்தையின் தேடுகைக் குரல் என எண்ணிக் கொண்டாள். தனது குறுநாக்கை உழட்டி உழட்டி அச் சொல்லை அவள் ஒலியென ஆக்கமுடியாமல் தவிப்பதைப் பார்த்து நீலழகன் விழிகள் விரியப் புன்னகை புரிவான்.
நீலழகன் குடிலில் இல்லாத பொழுது ஒரு பெண் வந்து அவனது அறையைத் துழாவுவாள். கையில் கொணரும் மலர்களை அவன் மெத்தையில் பரப்பி வைப்பாள். உசையினருகில் வந்து “நீலன் எங்கே உசை” எனக் கேட்பாள். அவளைச் சந்தேகத்துடன் முகம் திருப்பி நோக்கிக் கொண்டு அன்னையின் செடுக்குடன் “யார் நீ. எங்களது கூட்டில் உனக்கு என்ன பணி” எனக் கிளிமொழியில் கேட்பாள். “ஓ. வெளியில் போயிருக்கிறாரா. அவர் திரும்பியதும் நான் தான் இந்த மலர்களைக் இங்கே வைத்தேன் எனச் சொல்வாயா. என் செல்ல உசையல்லாவா. என் கிளிப் பெண்ணல்லவா” என முகம் நாணி தன் ஆரம் போல் சிவப்பவளை சிலநாட்களிலேயே கவனிப்பதை குறைத்துக் கொண்டாள் உசை. அவள் தன்னுடன் கதைக்க வரும் பொழுது அவளிடமிருந்து விலகி சிறுகொழுவுகள் போன்ற கால்களைத் தூக்கி நான்கு அடிகளை வைத்து நகர்ந்து திரும்பிக் கொள்வாள். “அடியே உசை. உனக்கு என்னடி இவ்வளவு செருக்கு. அதுசரி நீலனின் குடிலில் தானே நீ வளர்கிறாய். அவரிலிருப்பது உன்னிடம் கொஞ்சமாவது இருக்கும் தானே” எனச் சிரித்துக் கொண்டே சொல்லுவாள். “இவள் தனக்கும் தன் தந்தைக்கும் இடையில் என்ன செய்கிறாள்” என்பதை அறியாத உசை தன் கோபமான முகத்தை மாற்றாமல் அமர்ந்திருப்பாள்.
நீலழகனின் குடிலுக்கு வேறு ஆட்களுடன் அவளும் வந்தால் உசை கத்த ஆரம்பித்து விடுவாள். உசை ஏன் கத்துகிறாள் என்பதை அறியாத நீலழகன் “என்ன உசை. பசிக்கிறதா. கனி தரவா” எனக் கேட்பான். பிறகு வந்திருப்பவர்களில் யாரோ ஒருவரை உசை அடையாளங் காண்கிறாள் என்பதை நீலழகன் கண்டு கொண்டான். நீலழகன் நகருக்கோ போருக்கோ சென்று மீளும் வேளைகளில் தன் குடில் ஒருங்கியிருப்பதையும் தூசுகளற்று இருப்பதையும் நோக்கியிருக்கிறான். உசைக்கு உணவு கொடுக்க மாதுமியாள் தான் வந்து செல்வாள். அவள் தான் ஒருக்கியிருக்கிறாள் என நினைத்துக் கொள்வான். ஆனால் மெத்தையில் ஆம்பலும் அல்லியும் தாமரைகளும் வெண்மல்லிகளும் வாகைகளும் கொண்டல்களும் மலர்மஞ்சமெனக் கிடக்கும் மெத்தையை மாதுமியாள் தொடுவதில்லை. இது யாரின் குறும்பு எனத் தெரியாது விழிப்பான். அவன் யாரிடமும் இந்த மலர்களைப் பற்றிக் கேட்கத் தயங்கினான். உசையிடம் சென்று முறையிட்டான். “உசை யார் இந்த மலர்களை இங்கே வைப்பது. உனக்குத் தெரியும் தானே. சொல்” என மென்குரலில் கேட்பான். உசைக்குச் சந்தேகம் வலுத்தது. தந்தையின் குரலில் ஏன் இந்தத் தண்மையும் குழைவும் என அறியாமல் அவன் கதைப்பதைக் கேட்டபடியிருப்பாள்.
ஒருநாள் மாதுமியாளிடம் குடிலில் வைத்து நீலழகன் “ஏன் இவற்றைச் சுத்தம் செய்வதில்லை” எனச் சற்றுக் கடினமான தொனியில் கேட்டான். மாதுமியாள் குறும்பான முகத்தில் வழிந்த கன்னமயிர்களைக் கோதிக் கொண்டு “நான் என்ன கண்டேன் நீலழகரே. மஞ்சத்திலேயே அவை முளைக்கின்றனவோ என எண்ணினேன். இல்லையென்றால் யாராவது அன்புடன் வைத்த மலர்களாக இருக்கும். நான் எப்படி அந்த மலர்களை அகற்ற முடியும்” என சொன்னாள். “விளையாடாதே மாதுமி. யார் என்று சொல். இந்த விளையாட்டிற்கு நான் கடுமையாக வினைபுரிவேன். சொல்” எனக் கெஞ்சும் குரலில் குழையும் நீலனைப் பார்த்து வெடித்துச் சிரிக்கத் தொடங்கினாள் மாதுமியாள். “அழகரே, உங்கள் மஞ்சத்தில் மட்டுமல்ல அகத்திலும் யாரோ மலர்களைக் கொட்டிவிட்டார்கள். இனி அவற்றை அகற்ற இயலாது. நீங்கள் தான் புலிப்படைத் தலைவராயிற்றே. உங்கள் ஒற்றர் படையைக் கொண்டு தேடுதலைத் தொடங்குங்கள். அல்லது இதோ நிற்கிறாளே உசை இவளிடம் கேளுங்கள். இவள் தானே எந்நேரமும் குடிலில் இருக்கிறாள். இவளும் அவளும் தான் தோழிகள்” எனச் சொல்லி விட்டு ‘அவள்’ என தனது வாய் உச்சரித்ததை எண்ணி இதழைச் சுழித்து பின் உதட்டை உள்மடித்துக் கொண்டு சிரித்தபடி நீலழகனுக்குள் தவித்து அவிழவிருக்கும் சிறுவனைக் கண்டு நகைத்தாள்.
குடிலில் செந்தாமரைகளின் தூவிகள் பரந்து தளதளத்தன. மூன்று அகல்கள் நெய்யிட்டு ஏற்றப்பட்டிருந்தன. மஞ்சத்தில் படுத்திருந்த பெண்ணின் மார்பில் நின்றிருந்த உசை சிறுநடை நடந்து சிறகுகளைச் சிலிர்த்துக் கொண்டாள். நடையிலிருந்த கோபத்தை உசையின் முகத்தில் கண்ட பெண் “என்ன உசை இன்னும் கோபமா என் மீது” என்றபடி ஒருதுண்டு மாங்கனியை நீட்டினாள். உசை தன் வளை சொண்டுகளால் அதை இரு கொத்துக் கொத்திவிட்டுத் தலையைத் திருப்பியபடி நடந்தாள். “கோபம் தானா கிளிப்பெண்ணே. எனக்கும் கோபம் தான் உன் மீது. நீ ஒருமுறை கூட அவரிடம் என் பெயரை உச்சரிக்கவில்லைத் தானே. அவர் என்னை அறிந்தது போல் விழியே கொள்வதில்லை. உனக்குத் தெரியுமா உசை, ஆடற் சித்தர் என்னிடம் சொன்னார் நீலன் தான் என் துணையென்று. அவருக்கு நான் துணை.
அரசு சூழ்தலைப் பற்றி உனக்கென்ன தெரியும் உசை. என்னை மணந்து கொண்டால் வேளாண் குடி ஆதரவும் அவருக்கு இருக்குமாம். அதேபோல் அவரின் நிலையில்லாத போர்வாழ்வு வீரனுக்குரியது. அவரை எந்தப் பெண்ணும் விரும்பி மணம் புரிய மாட்டாள். வீரனென்றால் உனக்கு யாரென்று தெரியுமா உசை. உனக்கு இந்தக் குடிலை விட்டால் என்ன தெரியும். அந்த வாகை மரமும் வனக்குடிலும் தானே உன் உலகு” சற்று நிறுத்தி யோசிப்பவள் போல் கைகளை நாடியில் வைத்து எழுந்தமர்ந்து உசையை மெத்தையில் அமர்த்தினாள். “நானும் போரைப் பார்த்ததில்லை உசை. கேட்டிருக்கிறேன். அது கொலைக் கருவிகள் ஒன்றுடன் ஒன்று பொருதும் களம். எந்தக் கருவி எதை வெல்லுமென்பது எப்போதும் நிலையில்லாதது. போரில் தோல்வியைப் போலவே வெற்றியும் நிலையற்றது. பேச்சுவார்த்தைகள் என்பவை இன்னொரு போருக்கான ஒத்திகைக் களங்கள். போரே ஆடவர்கள் பேசிக் கொள்ளும் களம். அங்கும் அவர்கள் உன் போன்று புரியாத மொழியில் தான் பேசிக் கொள்வார்கள். வாள்களினதும் வேல்களினதும் கதைகளினதும் விற்களினதும் அம்புகளினதும் தேர்களினதும் வேழங்களினதும் புரவிகளதும் போர். அதை மானுடர் இயற்றுவர். தம் சொற்களெனவும் பதில்களெனவும் மொழிபெயர்ப்பர்.
போருக்கு இன்னொரு முகமும் இருக்கிறது உசை. அதுவொரு அழிகளம். அழிவு முடிவில்லாமல் நிகழும் களம் ஏன் இவ்வளவு பித்தளிக்கிறது ஆடவருக்கு என்று தெரியுமா உனக்கு. அவர்கள் சொற்களை நம்புவதில்லை உசை. சொற்கள் பொருளற்றவை என்பதை ஒவ்வொரு ஆடவரும் உள்ளூர நம்புகிறார்கள். அதனால் தான் அவர்களுக்குப் பெண்ணிடம் பேச சொற்களிருப்பதில்லை. அவளிடமும் ஏதாவது வாளும் கேடயமும் ஒளிந்திருக்கிறதா என அஞ்சுகிறார்கள். எந்நேரமும் ஒரு யுத்த களமின்றி அவர்கள் நிம்மதி கொள்ள வேறொரு வழியில்லை. அதனால் தான் பெண்கள் சொற்போர் வல்லவர்கள் ஆகின்றனர். ஆணால் வெல்ல முடியாத போர்க்களம் அதுவொன்று தான். பெண்ணின் சொற்களைத் தேளின் கொடுக்குநுனி என்று சொன்ன பாணனொருவனைப் பார்த்து கைகளைத் தட்டி ஆர்ப்பரித்த ஆடவர்களை இந்த படைக் குடிலில் பார்த்தேன். அவனை என் இருகரங்களால் தூக்கித் தரையில் ஓங்கியறைய வேண்டும் போலிருந்தது. பிறகு நீலழகன் மட்டும் அந்தச் சொல்லுக்குப் புன்னகைக்காமல் இருந்ததை நோக்கினேன் உசை. அவன் விழிகள் தாழ்ந்திருந்தது. படை வீரர்களின் கூச்சல்களுக்கிடையில் தன் கரங்களை அசைத்து “வேறு பாடுக பாணரே” என அவர் சொன்ன போது அதில் ஒரு ஆணை இருந்தை அங்கிருந்த பெண்கள் ஒவ்வொருவரும் உணர்ந்தோம் உசை. அதுவொரு வீரனின் அம்சம். மெய்வீரன் வெல்லமுடியாத போர்க்களங்களை விழைபவன் உசை. அங்கு எழுவது தேளின் கொடுக்கா வேழத்தின் துதியா என அவன் நோக்குவதில்லை. தன்னிடமிருப்பதைக் கொண்டு அப்போரைச் சமநிலை ஆக்குபவனே வீரன்.
போருக்கு மூன்றாவது முகமும் இருக்கிறது கிளிப்பெண்ணே. போரென்பது நிகழும் வெளியால் தீர்மானிக்கப்படுவதல்ல. மெய்யான போர் காற்றைப் போல எங்குமிருக்கிறது உசை. எனக்கும் உனக்குமிடையில் கூட” எனச் சொல்லி உசையின் தலையைச் சுட்டுவிரலால் தடவினாள் அந்தப் பெண். உசை சற்றுத் தலைதாழ்ந்து பின் சிலுப்பிக் கொண்டாள். “போரில் மோதிக்கொள்வது உளங்கள். போரை ஆக்கிக் கொள்பவை அதன் அகங்காரங்கள். எதன் பொருட்டும் போரொன்று குருதி சிந்தாமல் மண்ணில் நிகழ்வதில்லை. ஆனால் உளங்களில் நடக்கும் போரளவுக்குக் காயங்களை உண்டாக்கும் வல்லமை படைக்கலங்களுக்கு இல்லை உசை. சிலநேரங்களில் ஆயிரம் காயங்கள் ஒன்றுடன் ஒன்று மோதித் தங்களைத் திறந்து குருதியை அளிக்கும் பலிமேடையெனப் போரை எண்ணியிருக்கிறேன். பலிமேடைக்குச் செல்லும் பொழுது ஆயுதங்களுடன் செல்பவர்களை எந்த விசை உந்துகிறது உசை. சொல் கிளிப்பெண்ணே. எனக்குத் தெரியும். அவர்கள் ஒரு ஆடலின் நெளிவென ஒளிகொள்ளும் உச்சமொன்று போரிலேயே ஆடவருக்கு வாய்க்கிறது. அதே வாளை ஆடவரின் அகங்களைக் கீறி அதன் உச்சத்தில் குருதியுண்ணும் நா பெண்ணுக்குமிருக்கிறது. இருவரும் மோதி ஒருவரும் வெல்லமுடியாத இந்தப் போர் புடவியில் ஓய்வேயில்லாதது. என்றாவது போர்கள் மடிந்தால் மானுடர் அழிவர் உசை. போரே அவர்களின் விழைவு. அவர்களை ஆக்கும் பெருவிதி. இந்த ஆடலில் நானொரு நெளிவு. நீயொரு நெளிவு. நம் தலைவனும் ஒரு நெளிவு. அவர் கொஞ்சம் அழகிய நெளிவு” எனச் சொல்லிக் கலகலவென அகம் கலைந்து எழுந்தாள்.
குடிலுக்கு வெளியே பேரோசையுடன் மழை நடந்து வந்து கூரையில் குதியோசைகூடி ஆடியது. அதன் தாளங்களைக் கேட்டபடி உசை பறந்து பறந்து கூண்டிலும் மெத்தையிலும் அமர்ந்தாள். “குளிர் தலைவனைப் போல வந்திருக்கிறது உசை. தலைவனுக்கு அஞ்சலாமா நீ” எனச் சொல்லி அவளைப் பிடிக்கப் பாய்ந்தாள் அந்தப் பெண். மூங்கில் கட்டுகள் ஒலியெழுந்தன. தாமரை இதழ்கள் ஒன்றை ஒன்று அளைந்து குடிலில் சொட்டிய நீர்த்துளிகளில் நனைந்தன.
உசை கூண்டின் மேல் ஏறிக் கொண்டாள். மெத்தையில் புரண்டு படுத்து அப்படியே உறங்கிய பெண்ணைத் தலை தாழ்த்தி உற்று நோக்கினாள் உசை. தாமரை மலரிதழ்களின் வாசனை குடிலை நிறைத்துத் தாமரைப் பெருக்கெனக் குடிலை மலர்த்தியது. வாயில் திறந்து வந்த நீலன் மெத்தையில் துயில்பவளை நோக்கினான். உசை எழுந்து பறந்து நீலனின் தோள்களில் அமர்ந்தாள். “இவள் தானா உசை” என ரகசியக் குரலில் கேட்டான். மழை இடிகளுடன் எழுந்து ஆடியது. மின்னல்கள் விழுந்து வெண்ணொளி சுடர்ந்து சுடர்ந்து நீலனின் தோளிலிருந்த உசை அஞ்சி அவனது குழலுடன் ஒண்டிக்கொண்டாள். திறந்திருந்த வாயிலால் வெளியே வந்த நீலன் மழைப்பெருக்கை நோக்கினான். வனக் குடில்கள் மழைக்கு ஒடுங்கிய பறவைகளென குவிந்திருந்தன. குடிலின் மேலிருந்த கொண்டல் பூக்கள் நனைந்து கொட்டியது. மயில்களின் அகவல்கள் எழுந்து அவை ஒளிந்து கொள்ளும் இடங்களைத் தேடி ஓடுவதைக் கேட்டபடியிருந்தான்.
வாயிலைத் திறந்து வெளியே வந்து மழையை நோக்கியபடியிருக்கும் நீலனையும் உசையையும் பார்த்தாள் நிலவை. ஒருகணம் அஞ்சியவள் பிறகு மெல்ல அடியெடுத்து தாழ்வாரத்தில் வந்து நீலனின் அருகு நின்றாள். உசை “நீலா. நீலா” என சொல் மிழற்றி எழுந்து நிலவையின் தோளில் சென்று அமர்ந்தாள். பின் திருடியைக் காட்டிக் கொடுத்த பாராட்டைப் பெற்றுக் கொள்ள நீலனின் தோள்களில் எழுந்தமர்ந்தாள். அவளின் ஈரச் சிறகுகள் நிலவையின் முகத்தில் நீர்த்துளிகளைக் கொட்டியது. “உசை உனக்கு விளையாட்டுக் கூடிவிட்டது. இப்படியா நீர் தெளிப்பது” என நிலவை கடிந்து கொண்டு உசையைப் பிடிக்கக் கைகளை நீட்டினாள். உசையும் நீலனும் சரிந்து நகர்ந்து அவளை நோக்கினர். நீலனின் விழிகளில் மின்னலின் வெள்வெளிச்சமொன்று பாய்ந்தது. அவன் விரிகுழல்கள் காற்றில் செல்லும் புரவியென அசைந்து கொண்டிருந்தன. முகத்தில் அவனே அவனுள் அறியாத பாவனை ஒன்று ஒளிர்ந்து கொண்டிருந்தது. அச்சமா நாணமா தவிப்பா அறியாமையா கனவில் நுழைந்த இன்மணத்தின் மயக்கா என அவனால் அறிய இயலவில்லை. உசை அவன் செவியருகிலிருந்த கொண்டலின் ஒருமலரைக் கடியொன்று கடித்தாள். நீலனின் உடல் விதிர்விதிர்த்து அகம் நடுங்கியது. அச்சம் தான். அவன் அஞ்சிய கணம் அவன் முன் நிற்கிறது. கரங்களும் கால்களும் சோர்ந்தன. விழிகளில் மட்டும் தேங்கியிருக்கிறேனென உயிர் தவித்தது. அங்கிருந்தும் என்னை போக்கி விடாதே என்னை எனக் கெஞ்சியது. அவனது முகத்தை நோக்கிய நிலவை “அஞ்சல் வேண்டாம் வீரரே. உம்மை நான் கொன்றுவிடப்போவதில்லை. உசையை எனக்குத் தருகிறீர்களா” என அவள் அவளுக்குள் இதுவரை இருந்தது என அறியாத பண்ணில் தழைத்த தன் குரலைத் தானே கேட்டு பின் முகம் தாமரையென விரிந்தாள்.
நீலன் உதட்டில் ஒரு மின்னல் தெறித்தது போல் வெண்சிரிப்பு நீந்தியது. மழை எற்றிய சாரல்கள் நிலவையின் குழலில் நீர்முத்துக்களென ஒளிர்ந்தன. இன்னொரு மின்னலின் வெளிச்சம் படபடக்க “உசை, நிலவையிடம் போகிறாயா” எனக் கேட்டான். உசை அவன் கேட்பதைப் புரியாமல் அவன் குழலுள் இன்னும் ஒண்டினாள். அவளை முதுகில் பிடித்து நிலவையிடம் நீட்டினான் நீலன். உசை “நீலா. நீலா” என மிழற்றினாள். “அவளை ஒரு குழந்தையைப் போல் பிடித்து கரங்களில் மேலே தூக்கிப்பிடித்து “வாடி கிளிப்பெண்ணே. இனி நீ இன்னும் பேசுவாய். கிளிகளிலேயே வாயாடியாக உன்னை ஆக்குவேன். என்னிடம் வருகிறாயா” எனக் கேட்டாள். உசை “நீலா. நீலா” எனக் கத்தினாள். “அவளுக்கு உன்னிடம் வரப் பிரியமில்லைப் போல நிலவை” எனக் குறும்பின் மெல் கொழுகொழும்பைப் பற்றிய குரலுடன் கேட்டான் நீலன்.
உசையைத் தன் இரு உள்ளங்கைகளிலும் பசுங்கொழுந்தென ஏந்திய நிலவை
“ஆஹ். என்னடி கிளிப்பெண்ணே. என்னிடம் உனக்கு அச்சமா. நீ அஞ்சுபளே உன் அன்னை. நீ ஒண்டுபவர் உன் தந்தை. வா என்னிடம்” எனக் குழலின் கீதமெனக் கொஞ்சினாள். மழையில் நனைந்திருந்த நீலழகனின் தேகத்தில் நீர் மெழுகென மிளிர்ந்து அவனை இன்னும் துலக்கியது.
கால்கள் தரையிலில்லை. உடலில் எங்காவது இருக்கிறதா என்பதையும் உணரமுடியாமல் அகமழிந்தவன் உசையின் தலையிலிருந்து முதுகுவரை தடவிவிட்டு “உசை” எனச் சொல்லி ஒருகணம் உசையை நோக்கி விழி உற்றிருந்த நிலவையை நோக்கினான். “உசை இனி உன்னுடையவள்” என்றான். நிலவை விழிகளை உயர்த்தாமல் உசையை விழிமுத்தி “உசை இனி நீ என்னுடையவள்” என காதலின் சுனைமுனையில் உதடு குவித்தவளென உடல் உயிர்த்து மேனி சிலிர்த்து மெய்ப்புற்கள் எழ நின்றாள். அவளின் அகமும் புறமும் மழையென எழுவதை மழை அறிந்தது. மழை தன்னை முற்றி தானே ஆடலென ஆடியெழுந்தது. ஆடும் மழை வெளியை நோக்கித் திரும்பிய நீலனைப் பின்னிருந்து உற்றாள் நிலவை. நீலனின் உறு தேகத்திலிருந்து ஆவிபிரிந்து மழையில் பறந்தது.