19: லீலி எழல்
விழிகளில் நீர்பெருக்கு அணைந்த போது லீலியா இளம் மஞ்சென ஆனாள். கடற்கரையில் அலைந்தும் பெட்டிகளின் மேல் தாவியும் கலகலத்தும் கொண்டிருந்த குடிகள் அவளுடைய நெடிய உருவைக் கண்டு விழி மலைத்து நோக்கினார்கள். செலினி ஒரு வாத்தைப் போல கரங்களை ஆட்டி மணலில் கால்களை விசிறிக் கொண்டு லீலியாவின் அருகில் வந்தாள். புருவங்களின் மேல் வைக்கப்பட்டிருந்த மயிற் பீலி வர்ணக் குற்றுகளாலான கண்களை நோக்கினாள். “லீலி, என்னவாயிற்று உனக்கு புலக்காட்சி ஏதேனும் எழுந்ததா” என கீச்சென்ற அவளது சிறுபட்சிக் குரலில் கேட்டாள். லீலியா தலையை ஒரு முறை அசைத்து பின் கைகளை நீட்டினாள். தன் இருகைகளையும் தூக்கி குழந்தையென ஏறி அவள் தோள்களில் அமர்ந்து கால்களைச் சுற்றிக் கழுத்தில் போட்டுக் கொண்டு “போகலாம் புரவியே” எனச் சிரித்துக் கொண்டு சொன்னாள். கழுத்திலிருந்த செலினியின் பாதங்களை கையுறையணிந்த தன் கரங்களால் பற்றிக் கொண்டு நீயிராவின் அருகில் வந்தாள் லீலியா. கருத்தத் தேரொன்று வாலைச் சுழற்றி இருமுவது போல் கனைத்துக் கொண்டு நின்றாள் நீயிரா. லீலியாவைச் சுமக்கக் கூடிய ஒரே புரவி உலகிலேயே நீயிரா மட்டும் தான் எனக் கந்தோஸ் பிலிப்பு அடித்துக் கூறுவதுண்டு.
லீலியா புரவியின் தோற் சேணத்தில் இடக்காலை வைத்து முதுகில் தாவி ஏறினாள். நீயிரா தன் தோழி ஏறியதைக் கண்டு கனைத்து முன்னிரு கால்களையும் தூக்கி வணக்கம் வைத்தாள். தன் சிறுதேரின் அருகில் நின்றுகொண்டிருந்த நீலழகன் “இவர் தான் குறி சொல்பவரா” என மொழிபெயர்ப்பாளரிடம் கேட்டான். “ஓம். இவர் தான் யவனத்தின் லீலியா. அவர் கரைகடந்து முதன்முறையாக வந்திருப்பது இந்த மண்ணுக்குத் தான் அரசே. அவரைத் தெய்வமென அங்கு மதிப்பர். மந்திரங்களும் அறிந்தவர்” எனச் சொன்னான் பாரததேச மொழிபெயர்ப்பாளர் சென்னியன். நீலழகன் லீலியாவின் பெருவுருவை விழிகளால் அளந்தான். வெண்ணிற ஆடை மலையைப் போர்த்தியிருக்கும் மெழுகுப் பனி போல் அசைந்தது. அவள் புரவியில் அமர்ந்து நோக்கிய போது காப்பிரிகளும் யவனப் பணியாட்களும் வண்டில்களில் பொருட்களை ஏற்றியபடி முன்செல்லத் தொடங்கினர். வழிகாட்டி வண்டிலொன்றில் கந்தோஸ் பிலிப்பு ஏறிக் கொண்டான். லீலியாவின் விழிகள் தன்னை உற்று மீள்வதை ஒரு சாட்டையின் சொடுக்கென உணர்ந்து விழிகளை விலக்கிக் கொண்டான் நீலழகன்.
நெடுத்த பனை மரங்களில் காற்று உரசும் ஒலி அவை தீப்பற்றி விடுமோ என அச்சமெழ வைக்கும் வீதியால் நீயிரா தன் முதல் அயல்மண் பயணத்தைத் தொடங்கினாள். அவளது கால் பழகாத செம்மண் தரை அது. புழுதி அவளுக்குப் பழக்கப்பட்டது தான். மூச்சை உந்தி வேகமென எழுந்தவளின் தோல்வாரை இழுத்து “மெல்லப் போ நீயிரா. நாம் இருட்டில் இந்த மண்ணை நோக்கிச் செல்வோம். இங்கு எழுந்த புலக்காட்சியில் கடுங்குருதி வண்ணத்தில் பேருருக் கொண்ட ராட்சத வேழங்கள் மனிதத் தலைகளை மிதித்துக் குருதி செம்பழக்கலவையென மணலில் தெறிப்பதைப் பார்த்தேன். கடலிலுலும் கரையிலும் முடிவற்றுப் பிணங்கள் அளையுண்டன. குழந்தைகளும் பெண்களும் ஆண்களும் முதியவரும் குருதிக் கடலில் கைகளை உயர்த்தி வானை நோக்கினர். விரிந்த இறக்கைகள் கொண்ட கழுகொன்று கடலை நிலவின் ஒளிவட்டமெனச் சுழன்று அங்கிருந்த கற்சிலையொன்றின் மேல் அமர்ந்தது. அதுவொரு நாகத்தின் சிலை. அதன் விழிகளில் ஊதவண்ண ஒளி எழுந்து கொண்டிருந்தது. வேழங்கள் தங்கள் பெருங்கைகளால் குழந்தைகளைத் தூக்கி தம் தந்தங்களில் அறைந்து சொருகின. விக்கித் துடித்த குழந்தைகளை ஒரே சுழட்டில் தலையை அசைத்து கடலில் எறிந்தன. அவை குருதியின் மீது விழுந்து மிதக்கும் குருதிமலர்களென மிதந்தன. கழுகு ஒவ்வொன்றையும் உற்று நோக்கியபின் எழுந்து சூரியனின் திசையில் சென்று மறைந்தது. மனிதர்களின் கேவல் என்னை அலற வைத்து நீர் பெருகியது நீயிரா” எனச் சொல்லிக் கொண்டு இருளில் மீன் எண்ணை வாசனை எழ எரியும் தீப்பந்தங்கள் வண்டில்களில் முன்னே நிரை நிரையாச் செல்வதைப் பார்த்தாள் லீலியா. எறும்புகள் தம் உணர்கொம்புகளில் தீயேந்திச் செல்வது போல் அவை சீரான வரிசையில் சென்றன.
பட்டினத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த பெருவளைவை நோக்கினாள் லீலியா. அதில் தீப்பந்தங்கள் சிகையலங்காரம் செய்தவை போல் சுற்றிலும் இருந்தன. ஒரு பெரும் புலி தன் கூர்ப்பற்களை வளைத்து முன்னிரு கால்களையும் தூக்கி நிற்பது போன்ற வளைவு பலகைகளால் சுற்றி வளைத்து அமைக்கப்பட்டிருந்தது. அத்தோரண வளைவில் துணிகளில் ஓவியங்களை வரைந்திருந்தனர். சிறிய சிறிய நுட்பமான வளைவுகளும் வண்ணச் சாயங்களின் குழைவுகளும் அவளது விழிகளை நெகிழ்த்தின. துணிகளில் தீற்றப்பட்டிருந்த மலர்களை அவள் முன்னெப்போதும் கண்டதில்லை. அவை மஞ்சள் ஒளியில் படபடக்கும் பொழுது உயிர் கொண்டு அசையும் மலர்க்காடு போல் தோன்றின.
வாயிலின் அருகிலிருந்தே ஆயிரக்கணக்கான மனிதர்கள் கூட்டங் கூட்டமாகப் பட்டினத்தினுள் செல்வதை நோக்கினாள். தலையில் துணியைக் கட்டியிருக்கும் ஆடவர்கள். இடையில் உள்ள துணிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வண்ணம். செவ்வண்ணம் வெண்மை மென்மஞ்சள் கடுநீலம் செங்காவி என ஏராளம் வண்ண இடைத்துணிகள் அசைந்தன.
குழந்தைகள் சிறிய தழையாடைகள் அணிந்திருந்தன. இலைகளால் ஆக்கப்பட்டு நார்களால் துன்னப்பட்டிருந்தன. தழையாடைகளிலும் வண்ண மலர்கள் இழைக்கப்பட்டிருந்தன. மகளிரின் முகங்களில் கருமையின் பல வண்ண பேதங்களைக் கண்டு ஒவ்வொன்றாய் வேறுபிரித்துக் களைத்தாள் லீலியா. மஞ்சளும் வெண்மையும் கலந்த முகங்களும் பருக்களும் வாழிப்பும் கொண்ட வதனங்களும் அவளை அவர்களை நோக்கி விழி விலத்தாது உற்ற வைத்தன. ஆண்களும் குழல்களில் மலர் சூடியிருந்தனர். பெண்கள் மலர்களைக் கூந்தலாய்ச் சூடியவர்கள் போலிருந்தனர். ஒவ்வொரு உடலும் ஒரு மலர்வனம் என எண்ணிக் கொண்டாள் லீலியா. மலர்களிலிருந்து எழுந்த நறுமணமே அங்கு காற்றாய் வீசுவதை நுகர்ந்து நுகர்ந்து மயக்கு எழுந்தாள். மரங்களினடியிலும் சத்திர வாயில்களிலும் இருந்து எழுந்த புகைந்து பரவும் தேவ மலர் இலைகளின் இன்மணம் அவளை தான் சுவர்க்கத்தில் நுழைந்து விட்டேனோ என எண்ண வைத்தன. பாட்டும் இசையும் மலர்வாசனைக்கு அடுத்து காற்றில் எழுந்து அவள் செவிகளை அடைந்தன. தந்திகளில் அதிர்ந்து நடமிடும் விரல்களிலிருந்து எழுந்த கீதம் அவள் செவிகேட்டிராத ஒலிக்குழைவை விரித்தது. முழவுகளும் பறைகளும் கொம்புகளும் வீணைகளும் சிறுமுரசுகளும் புல்லாங்குழல்களும் மண்ணிலும் காற்றிலும் இருந்து மிதந்து வானத்தின் சுவரில் எதிரொலித்துத் திரும்பவும் சுழல் காற்றுடன் வீசும் மழையெனப் பட்டினத்தை நனைத்தபடியிருந்தது. நீயிராவில் நகர்ந்து சென்ற லீலியாவை இளம் பாணன் மதுச்சாலை வாசலில் வைத்து இருகணப்பொழுது கண்டான். வெண்மந்தியொன்று பின்னின்று குழலிழுத்தவனைப் போல அலறியபடி மதுச்சாலைக்குள் ஓடி அழிந்தான்.
விருட்சங்களின் கொப்புகளில் வாலிபர்கள் அமர்ந்தும் தொங்கியும் விளையாடினர். அவர்கள் மேனிகள் நன்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சித் துண்டுகளென நினைத்துச் சிரித்தாள் லீலியா. பெண்களின் சிரிப்பலைகள் இவ்வளவு அழகாய் ஒலிக்கும் அவற்றைப் பார்ப்பது இத்தனை எழிலாய் தோன்றுமென அவள் எண்ணியிருக்கவில்லை. எத்தனை விதமான முகங்கள். வேழங்களில் அமர்ந்து செல்லும் பெண்கள் கூட்டம். நகைத்து ஒருவரை ஒருவர் கூச்சலிட்டு உற்சாகத்தை நறுங் காற்றென ஆக்கி அங்கிருந்தவர்களிடம் மேலும் மேலுமென விசிறினர். புரவிகளில் வந்த ஆடவர்கள் அவர்களை வழிவிலத்திச் செல்லுமாறு கைகளை அசைத்துக் கூச்சலிட அவர்கள் மேல் மலர்களை வீசி முடியாது எனத் தலையசைத்து நகைத்தனர். ஒவ்வொரு உடலும் தசைக்களியெனத் துள்ளி விம்மின. சிறு கரங்களில் மின்னும் கையாரங்கள் சங்கு வளைவிகள் முத்துக்களைக் கோர்த்த மாலைகள் குலைந்து குலைந்து மென்னொலியின் இசையொன்றை உண்டாக்கின. கழுத்துகளில் மின்னிய தங்கமும் வெள்ளியும் கலந்த ஆபரணங்கள் இழைவுகளின் குவியல்களென மின்னின. நீலமும் சிவப்புமென இரத்தினக் கற்கள் மேனிகளில் சுடர்ந்தெரிந்தன. உடல்களில் வியர்வைகளும் நறுமணத் தைலங்களும் கலந்தெழுந்த வாசனை அவளை மேலும் மேலுமென நாசியுறியச் செய்தது.
மனைகள் ஒவ்வொன்றும் ஒளிக்கடல் விரிவில் எறிந்திருக்கும் வைரக்கற்கள் என சுற்றி தகதகக்கும் ஒளிகளால் மின்னிச் சுடர்ந்து நிறங்கள் கரைந்து நீண்ட பெரும் நகைக்குவியெனக் கிடந்தன. முன் வளைவுகளில் இலைகளும் கரும்புகளும் தென்னங் கீற்றுகளால் பின்னப்பட்ட பல்வடிவத் தோரணங்களும் ஆடியசைந்தன. வாசல்களில் போடப்பட்டிருந்த கோல ஓவியங்களை நோக்கினாள் லீலியா. மனை வாசல்களில் சாணம் மெழுகப்பட்டு காய்ந்து கரும்பாசியென அமைந்திருந்தன முற்றங்கள். அவற்றில் விரிவட்டங்கள் நாகங்கள் வேழங்கள் சூரியன் சந்திரன் புள்ளிகள் வளைவுகள் கூர்கள் சரிவுகள் பின்னல்கள் என ஒவ்வொரு வாசலிலிலும் ஒன்றைப் போலில்லாத இன்னொரு ஓவியம்.
முது பெண்டிரும் மழலைகளும் ஏறியும் தாவியும் நகைத்தும் விளையாடினர். கள் அப்பங்களும் கிழங்குகள் வேகும் வாசனையும் பன்றிகளும் ஆடுகளும் மாடுகளும் சேவல்களும் மான்களும் ஊன் சோற்றில் கொதிக்கும் வாசனை நகரின் வீதிகளை விருந்திலைகள் எனத் தோன்றச் செய்தது.
முன்னால் செல்லும் வண்டில்கள் அலைக் குமைவில் சிக்கிக் கொண்டவை போல் சரிந்தும் அசைந்தும் ஊர்ந்து அசைவதை நோக்கினாள். செலினி வண்டிலொன்றின் மேல் ஏறிநின்று விழிகளில் கூச்சல் தெறிக்க களிவெளியை நோக்கி நிற்பதை லீலியா பார்த்துப் புன்னகைத்தாள். நீயிரா புதைசேற்றிலிருந்து எழுபவளைப் போல ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் விடுபட்டு முன்னேறினாள். கடலை விட நீண்ட பயணமாய் மானுடக் கடல் விரிவதை எண்ணி லீலியாவின் அகம் ஆயிரமாயிரம் இதழ்கள் பெற்ற பெருமலரென விரிந்து கொண்டேயிருந்தது. வீதியில் அவளைக் கடந்த குடிகள் ஒருகணம் திகைத்து நோக்கி விலகாமல் உறைவதைப் பார்த்து உள்ளூரச் சிரித்தாள். அவள் செல்லும் வீதிகளிலோ மேடைகளிலோ இது வழக்கம் தான்.
வண்டில்கள் நகரைக் கடந்து மெல்லிய இருள் பரவியிருந்த பெருவீதியொன்றால் சற்று வேகமெடுத்துச் செல்லத் தொடங்கின. மனிதர்கள் குறைந்த வீதிகள் அவை. நீயிரா மூச்சை மிருதுவாக்கிக் கொண்டு தலையை முன்னோக்கி அசைத்து ஓடத் தொடங்கினாள். வண்டில்கள் ஒருபுறம் திரும்பி அருகிருந்த வீடுகளில் நிற்க ஆரம்பித்தன. வெண்ணிறப் புரவியில் வந்த வீரனொருவன் கந்தோஸ் பிலிப்புடன் உரையாடி விட்டு நின்று கொண்டான். எண்மர் அடங்கிய சிறுகுழுவைத் தேர்ந்து விட்டு மிகுதி ஆட்களுக்கு ஆக்க வேண்டிய பணிகளைக் கடகடவெனச் சொன்னான் கந்தோஸ் பிலிப்பு. எண்மரும் அருகிருந்த ஈரடுக்கு மனைக்குச் சென்று குளித்து இருநாழிகை துயில் கொண்டு எழுந்தார்கள். லீலியாவும் செலினியும் தனியகம் ஒன்றிற்குச் சென்று உடல் அலசியபின் ஓய்வெடுத்தார்கள்.
எட்டுப் புரவிகளில் ஏறிக்கொண்டு செலினியை அழைத்து லீலியாவையும் கூட்டி வரச் சொன்னான். செலினி மூச்சிரைக்க ஓடி வந்து “லீலி நம்மை அரண்மனைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். நாம் அங்கு தான் தங்கப் போகிறோம்” என சிரித்துக் கொண்டு குறும் பற்களைக் காட்டி பின் நாக்கை உருட்டிக் குவித்து மூச்சு வாங்கினாள். நீயிராவில் தாவியேறி லீலியாவின் முன்னே அமர்ந்து கொண்டாள் செலினி. வெண் புரவியில் வந்த வீரன் தீப்பந்த வெளிச்சத்தால் வழிகாட்டியபடி போனான்.
அரண்மனையை நெருங்க நெருங்க இருளில் நுழைவது போல் தோன்றியது. பின்னால் ஒளிப்பெருகெடுத்தாடும் நகர் முன்னே இருட்கடல். அரண்மனையின் திசையில் சிலநூறு நெய்ப்பந்தங்களின் ஒளி நீண்டு பரந்து தெரிந்தது. மழைக்கும் தனக்கும் சொந்தமில்லையென்பது போல் கிடக்கும் தன் பாலைவனங்களைப் போல் களிக்கும் தனக்கும் தொடர்பில்லையென அரண்மனை மெளனமாய் இருப்பதை நோக்கினாள். மெளனம். இருள் மெளனமொன்று அரண்மனையைக் கவ்வியிருந்தது. ஒலிகள் அங்கு எழுகின்றனவா எனக் காதுகளை நீட்டி உணர முயன்றாள் லீலியா. புரவிகளின் கனைப்போசையும் குளம்படிகளின் தாளமும் மட்டுமே ஒலியெனக் கேட்டவை. வாசலில் ஒரு நாகத்தின் பெருவாய் போல் சிலையொன்று அமைந்திருந்தது. அருகில் சிவந்த மலர்கள் காய்ந்து போயிருந்தன. குதிரைகளை அங்கிருந்த தொழுவக்காரரிடம் கொடுத்து விட்டு வாயிலைக் கடந்தனர். முன்வாயிலில் வீரர்களே இல்லையென்பதை நோக்கினாள். உள்ளே செல்லச் செல்ல இருள் இருளென அகம் தவித்து லீலியாவைப் பின்னோக்கி இழுத்தது. கந்தோஸ் பிலிப்பு பெரிய சத்ததுடன் சிரிப்பது அரண்மனை என்ற பெரும் பூதத்தைத் துயில் எழுப்பி விடுமோ என அஞ்சினாள் லீலியா.
அரண்மனை வளைந்து வளைந்து செல்லும் சர்ப்பத்தின் நெளியுடலெனப் பாதைகளைக் கொண்டது. உள்வீதிகளில் நெய்ப்பந்தங்கள் எரிந்து வழிகாட்டின. தன் குழு முன்சென்று விட்டால் அரண்மனையெனும் சர்ப்பம் தன்னை விழுங்கி விடுமோ என அஞ்சிய லீலியா செலினியைத் தன்னுடன் வரச் சொல்லி அவளை இழுத்துத் தன்னுடன் சேர்த்துக் கொண்டாள்.
விருந்து மண்டபத்தில் அமைந்த நீள் வட்ட வடிவமுடைய கல்லால் பொழிக்கப்பட்ட மேசையில் குழுவினருடன் அமர்ந்து கொண்டாள். பெரிய வாழையிலைகளில் வரகரிசிச் சோறும் மண் கலயங்களில் மானும் மயிலும் சேவலும் கொதிக்கக் கொதிக்க வைக்கப்பட்டிருந்தது. முப்பது கலயங்களில் விதவிதமான கறிவகைகள் மணம் பரப்பி துடித்தெழும் நாக்களென ஆவியெழுந்து கொண்டிருந்தன.
சிறு கலயங்களில் மஞ்சள் பொன்னென ஒளிர்ந்து நெய் வாசனை கமழ்ந்த பருப்புக் கலயமொன்றை வாயில் வைத்து உறிஞ்சிக் குடித்தான் கந்தோஸ் பிலிப்பு. குடித்து விட்டு “ஆஹ்” என வியப்பொலி எழுப்பி முழுவதையும் குடித்தான். அங்கு நின்று கொண்டிருந்த மொழிபெயர்ப்பாளர் இது குடிப்பதற்கல்ல உணவில் கலந்து உண்பதற்கென அவனுக்கு விளக்கிக் கொண்டிருந்தார். செலினி ஒவ்வொரு கலயமாய் நோக்கி வாசனையை நுகர்ந்து சப்புக் கொட்டினாள். யாரும் பார்க்கவில்லையென்று உறுதிப்படுத்தியபின் குழம்பில் கிடந்த சேவலின் தலையொன்றை எடுத்து உறியத் தொடங்கினாள். லீலியாவின் வயிற்றிலும் பசி உழன்றது. பட்டின வீதிகளில் எழுந்த கறிவாசனைகள் அவள் வயிற்றை அமிலக் கடலெனப் புரட்டிக் கொண்டிருந்தது.
அரசனும் அரசியும் விருந்து மேசையில் எந்த ஆரவாரமுமின்றி வந்தமர்ந்தார்கள். அரசன் கந்தோஸ் பிலிப்புவின் முகத்தைப் பார்த்து புன்னகைத்தபடி இருகரங்களையும் மார்பில் குவித்து வணக்கம் சொன்னான். கந்தோஸ் பிலிப்பு அவன் செய்ததைப் போலவே கைகளைக் குவித்து வணக்கம் சொல்லி எழுந்தான். அவனை அமரச் சொல்லிக் கைகளைக் காட்டி விட்டு மயில் இறைச்சி இருந்த கலயத்தை எடுத்து மரக்கரண்டியால் அதைப் பரிமாறத் தொடங்கினான். அரசனின் செயலைப் பார்த்த செலினி கடகடவெனச் சிரிக்க ஆரம்பித்தாள். வறுத்து வைத்திருந்த மானின் இறைச்சித் துண்டொன்றை வாயில் போட்டபடி லீலியாவை நோக்கி உண் எனச் சைகை செய்தாள்.
அரசி நிலவை லீலியாவின் அருகிருந்த கற்குற்றியில் அமர்ந்தாள். லீலியாவின் தோற்றத்தை நோக்கி புன்னகைத்து விட்டு அவளின் தோள்களில் கைகளை வைத்து அவளுக்கு உணவை எப்படி உண்ண வேண்டும் எனத் தெரியாமல் நிற்பதைப் பார்த்து மெல்லிதாகச் சிரித்தாள். இலையில் வரகரிசிச் சோற்றை அகப்பையினால் எடுத்து வைத்தாள். பின் அங்கிருந்த ஒவ்வொரு கறியையும் இலைகளையும் கொஞ்சம் கொஞ்சமென இலையைச் சுற்றி கோலமென அடுக்கினாள். நிலவையின் விழிகளை நோக்கியவள் அவை கனிந்த மூதன்னைக்குரியவை என அகமறிந்தாள். அவள் ஆழுள்ளத்தில் ஒரு விசும்பல் எழுந்து விழிகளில் ஒரு துளியென நீந்தி அடங்கியது.
நிலவை கழுத்தில் ஒரு புலிப்பல் பொறிக்கப்பட்ட தங்க ஆபரணமொன்று மட்டுமே அணிந்திருந்தாள். இரு கரங்களிலும் பின்னிய பாம்புகளின் உடல்கள் போன்ற இரு காப்புகளும் விரல்களில் ஒரு மோதிரமும் அதில் சிறிய நீல இரத்தினக்கல்லும் பூண்டிருந்தாள். கையுறைகளைக் கழற்றாமல் இருந்த லீலியாவைப் பார்த்த நிலவை அவளது வலக்கரத்தை வாங்கிக் கொண்டு கையுறைகளைக் கழற்றினாள். உருகிய பனங்கட்டியும் பாலும் கலந்த மென்புள்ளிகள் கொண்ட அவளது கரத்தைப் பார்க்கும் மூன்றாவது ஆள் அவள் தான். கந்தோஸ் பிலிப்பு அவள் பிற மனிதர்கள் முன் உண்பதில்லை எனச் சொல்லிக் கொண்டிருந்தான். அங்கிருந்த குழுவினர் உண்பதைக் கொஞ்ச நேரம் நோக்கியபடி கரங்களை நிலவையிடம் கொடுத்து விட்டு உடல் மெல்ல அதிர மூச்சு எழ அமர்ந்திருந்தாள். கையின் நடுக்கத்தை உணர்ந்த நிலவை அதை இறுக்கிப் பற்றினாள். அவளின் கைகளில் ஆயுதம் ஏந்துபவர்களின் வலுவிருப்பதை அறிந்தாள் லீலியா.
ஏனையவர்கள் உணவுண்டு முடித்த பின் நீலழகன் அவர்களைக் கூட்டிக் கொண்டு அரச மண்டபத்தை நோக்கிச் சென்றான். கந்தோஸ் பிலிப்பு செலினியை நோக்கி “லீலியா உணவு உட்கொண்டதும் அழைத்துக் கொண்டு வா. நான் அரசருடன் அளவளாவி விட்டு வருகிறேன்” எனச் சொல்லி விட்டு விரல்களை நக்கியபடி எழுந்து சென்றான். விருந்து மண்டபத்தில் நிலவையும் செலினியும் லீலியாவும் அமர்ந்திருந்தனர். தானகி கலயங்களை அடுக்கி வெளியில் உள்ள பணியாட்களுக்குக் கொடுத்துக் கொண்டிருந்தாள். நிலவை அருகே வந்து லீலியாவின் முகத் துணியை இருவிரல்களால் பிடித்து தலையை மேவிக் கோதுவதைப் போல மேலே தூக்கி பின்னால் வழியவிட்டாள். ஒருகணம் விழிகள் அவிழ அவளின் பேரழகு உருகும் முகத்தை நோக்கினாள். இரண்டு வெண்ணல்லியிதழ்களென விரிந்த கண்கள். மண்ணிறமும் நீலமும் கலந்த கண்மணிகள் குழந்தையினுடையவை போல் பரபரத்தன. பரந்த விகாசமான வதனம். பனங்கட்டி கலந்த பால் நிறம் முகத்தில் பிரகாசமென தளிர்ச்சிறகு எழுப்பியது. இரண்டு புரவி வால்கள் போன்ற புருவங்களுக்கு மேலே மயில் பீலியின் கண்கள் போன்ற பொட்டுகள். இமைகளுக்கும் புருவங்களிற்கும் அஞ்சனம் தீட்டியிருந்தாள். மெழுகுச் சிலைகளின் வாளிப்பென அமைந்த நாசி. உதடுகள் இரண்டு இளஞ் சிவப்பு நதிகளென அலையடித்தது. அவள் நிலவையை நோக்கியதும் எழுந்த மென்நடுக்கம் அகன்று அகம் நெகிழச் சிரித்து முன்சாய்ந்து உணவை உண்ணத் தொடங்கினாள்.
அவள் உண்ணும் வேகத்தைப் பார்த்து அவள் இதற்கு முன்னர் உணவே உண்டதில்லையா என நிலவை வியந்தாள். பின்னர் அவர்கள் குழுவில் வந்த அனைவரும் அப்படித் தான் உண்டார்கள் என எண்ணி அமைந்தாள். நிலவை அவள் உணவு கொள்ளும் போது பார்த்துக் கொண்டிருக்கும் தோற்றத்தைப் பார்த்த செலினி அவளின் அருகில் வந்து அவளைத் தொட்டுப் பார்த்தாள். கல்மேசையில் ஏறிநின்று கொண்டு அவளின் கூந்தலைத் தொட்டு குழந்தை விழிகள் விரிய “அழகு. அழகு” எனக் கூவினாள். அவளின் விளையாட்டுகளை ரசித்த நிலவை அவளின் செம்மண்ணிறக் குழலில் ஒரு வெண்மல்லிப் பூவை வைத்தாள். குழந்தையின் குழலில் தூங்கும் மலரெனப் பூ சிரித்தது. லீலியா அவர்களின் விளையாட்டைப் பார்த்து விட்டு மேலும் மேலுமென உண்டாள். தானகி புதிய கலயங்களில் மேலும் கறிகளைக் கொணர்ந்து வைத்தாள். வாயில் உறைப்பு மிகும் பொழுது மூங்கில் குவளையிலிருந்த நீரைக் கவிழ்த்துக் குடிப்பாள். பின்னர் திரும்பவும் அதேகறியை எடுத்துச் சுவைப்பாள். “இவளுக்கு நமது சுவை நாக்கில் எழுந்து விட்டது தானகி” என லீலியாவைக் காட்டிச் சிரித்தாள் நிலவை. அவள் சிரிக்கும் பொழுது அவளிடம் ஒரு தோழி எழுவதை நோக்கினாள் லீலியா.
உணவு முடிந்ததும் அவளைக் கூட்டிக் கொண்டு முன் முக மண்டபத்திற்குச் சென்றாள் நிலவை. தானகி சென்று சென்னியனை அழைத்து வந்தாள். “அரசி உங்களிடம் பேச விரும்புகிறார்” என சென்னியன் மொழிபெயர்த்து லீலியாவுக்குச் சொன்னான். “அவருடன் அரசி பேசுவதை வேறு யாருக்கும் சொல்லக் கூடாது. அவர்களின் வழக்கப்படி நீங்கள் அவரின் முகத்தைப் பார்க்கக் கூடாது” என சொல்லியபடி கருந்துணி ஒன்றினால் சென்னியனின் விழிகளைக் கட்டினாள் தானகி. நிலவையும் லீலியாவும் முக மண்டபத்தின் வெளி விளிம்பிற்கு வந்தனர். கரும்பாறைகளைப் பொழிந்து செய்த தரை குளிர்ந்திருந்தது. தொலைவில் தெரிந்த நகரின் களிவெளிச்சம் சுடர்களின் திருவிழா எனத் தகதகத்தது. காற்றில் அசையாமல் நிற்கும் பெருங்கிளை போன்ற லீலியாவின் வலக்கரத்தைத் தொட்டாள் நிலவை. அவளின் விழிகளில் இதுவரையிருந்த கனிவும் குறும்பும் அகன்று துயரின் இருவிழியென அவ்வாசல் திறந்திருந்தது. லீலியா தன் மறுகையை அவளின் கரங்களின் மேல் வைத்து அவளின் கருமணிகளில் உறைந்திருந்த துயரை நோக்கினாள். ஒரு கணம் அவளைத் தானென அறிந்தாள். அவள் இதயம் தடதடக்கத் தொடங்கியது. செலினி சற்றுப் பயந்து விலகி நின்று கொண்டாள்.
செலினி சென்னியனிடம் சென்று “ஒரு சிறு கலயத்தில் உப்பு வேண்டும். அதை அரசியின் கைகளால் அவளுக்குக் கொடுக்க வேண்டும்” என லீலியாவைக் காட்டியபடி மெல்லிய குரலில் சொன்னாள். சென்னியன் தானகிக்குச் செய்தியைச் சொன்னான். தானகி உப்புக் கலயத்தைக் கொணர்ந்து நிலவையிடம் நீட்டினாள். “இதிலிருந்து ஒரு கை உப்பையள்ளி குறிசொல்லும் இப் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டும் அரசி” என மென்மையாகச் சொன்னாள். கலயத்தை வாங்கி அதிலிருந்து ஒரு கை உப்பை எடுத்து லீலியாவின் கரங்களில் வைத்தாள். காற்று அலமலர்ந்து வீசி நெய்ப்பந்தங்கள் நூர்ந்தன. நிலவு பின்னிரவின் வளைவில் சறுக்கி வீழ்ந்து கொண்டிருந்தது. விண் மீன்கள் நகரத்தின் பிரதிபலிப்பென ஒளிவீசின. முகமண்டபம் அமைதியில் உறைந்திருந்தது. லீலியா நிலவையைக் கற்தரையில் அமரக் கைகாட்டினாள். அவள் அமர்ந்த பின் அவளுக்கும் தனக்குமென உப்பு வட்டத்தை வரைந்தாள். நிலவையின் நேர்முன்வந்து முழங்கால்களை மடித்துக் கொண்டு கால்களின் மேல் அமர்ந்தாள். அவள் தனது மரக்கொப்புப் போன்ற பெருங் கரங்களை வானை நோக்கி உயர்த்தினாள். விரல்கள் தாமரையெனக் கூம்பியிருந்தன. மலைச் சிகரமொன்று எழுந்து பின்னர் தாழ்ந்து கொள்வதைப் போல் உடலை அசைத்தாள். வாயில் சொற்கள் அலைந்து துடிதுடித்தன. அகம் அள்ளியதைத் தாங்காத எடை கொண்டவையென உதடுகள் நடுங்கின. விழிகள் வானைத் தொட்டு விரிந்து பின் அமைந்தன. மூச்சு நீள்காற்றென ஓடத் தொடங்கியது. சென்னியனை லீலியாவின் அருகமர்த்தினாள் செலினி.
லீலியாவின் குரல் முதலில் ஒரு பசுவினதும் பிறகு ஒரு எருதினையும் போல் மாறிக்கொண்டே போய் ஒரு சொல்லில் நின்று பின் சொல்லாய் ஆனாள். “உனது மண்ணில் நான் நுழைந்த பொழுது குருதியின் மலர்களைக் கண்டேன். விரிந்த இறக்கைகள் கொண்ட கழுகொன்று சூரியனில் சென்று மறைந்து வீழ்ந்தது. உங்களின் காவல் தெய்வங்களில் ஒன்று உங்களை விட்டு நீங்கப்போவதன் துர்க்குறியது. உனது விழிகளில் இருப்பது ஆயிரமாயிரம் துயர்களின் பேரிருட்டு. உன்னால் அதற்கு ஒளியை இனியொருபோதும் ஏற்ற இயலாது. உனது குருதி உன்னுடையதைப் போல உனது துயரும் உனதே. இங்குள்ள மனிதர்களின் முகத்தில் துலங்கும் மகிழ்ச்சியின் அடியில் பாலைவனச் சர்ப்பங்களின் தோல்வளைவில் மினுங்கும் ஒளியைக் கண்டேன். அவை எவ்வளவு மினுங்குபவையோ அவ்வளவு நஞ்சும் கொண்டவை. உனது அரசு குருதியால் நடப்பட்டது. குருதியால் எழுந்தது. குருதியால் விளைந்தது. அது குருதியாலேயே அறுவடையும் செய்யப்படும். மண்ணில் சிந்தும் குருதியளவுக்கு எண்ணற்று விளையக்கூடிய விதைகள் வேறில்லை.
உனது எல்லை எதுவென்பதை நீ அறிவது மட்டும் தான் நீ கேட்க வேண்டிய கேள்வி. கேள் சொல்கிறேன்” என்ற லீலியாவின் எருதுக் குரல் அணைந்து பாலைவன தெய்வத்தின் அசரீரி ஒலிக்க ஆரம்பித்தது.
“உனது குடிகள் உனதல்ல. உனது அரசு உனதல்ல. உனது விருப்பும் வெறுப்பும் எங்கும் எவருக்கும் பொருட்டல்ல. மண்ணில் அமையும் அரசுகள் யாவும் ஆக்கியவரைக் கொன்றே பசி தீர்த்துக் கொள்ளும். தனது வேட்டையின் குருதியைத் தானே நக்கித் துடைத்து அழிக்கும் ஓநாய்களைப் போல அவை இன்னொரு வேட்டைக்கு முன் உடலைத் தூய்மையாக்கிக் கொள்ளும். உனது என்று நீ எண்ணுகின்ற கெடுவினைகள் எல்லாமே உனது மட்டுமல்ல. நீ அந்தக் கொந்தளிக்கும் கடலில் ஒரு சுழல் மட்டுமே. தான் ஏன் சுழல்கிறேன் எனச் சுழல் அறிவதில்லை. அறியவும் இயலாது. உன்னால் சிந்தப்பட்டது என நீ அறியும் குருதி எங்கும் சிந்தப்படச் சித்தமாயிருப்பது. உனக்கு என்று இங்கு எந்தத் தனிமதிப்பும் இல்லை என்பதை அறி. உனக்கு என்று எந்த வசவுகளும் இல்லை. உனக்கு என்று எந்தக் கண்ணீரும் இல்லை. அதேபோல உனக்கு என்று எந்தக் குருதியும் இல்லை.
உனது விழிகளில் அலைபடும் இருள் உனதல்ல. நீ கண்டவர்களின் இருளது. அவை ஆடிக்குள் சிக்கிய ஆவிகளென உன்னில் அகப்பட்டுக் கொண்டவை. உன் அகம் அறமென எண்ணியவையே உன் விழிகள். உன் அறத்தில் மட்டும் தான் அவை சிக்கியிருக்கின்றன. உதற முடியாத அறங்கள் நம்மை இருளாக்குகின்றன. விட்டுவிலகிய அறங்கள் நம்மை மேலும் இருளாக்குகின்றன. மண்ணில் நிகழும் போர் இந்த இரண்டுக்கும் இடையில் தான் என்பதை அறிவாயாக.
உன்னால் கட்டுப்படுத்த முடியாத போரில் நீயொரு சிறுதூவியின் விசையன்றிப் பிறிதில்லை. உனது அறங்கள் உனது சொந்த விலங்குகள். அவை உன்னில் விளைந்தவையுமல்ல. உன்னில் அழிபவையுமல்ல. அவை காலத்தின் பேரொழுக்கில் ஒரு சிற்றலை மட்டுமே. புடவியில் வாழ்வென்பது பலகோடிப் பலகோடிப் பேரொழுக்குகளின் நுரைச் சிரிப்பு. அதன் ஆழங்களையும் அகலங்களையும் விரிவுகளையும் சரிவுகளையும் அளக்கும் விழி மானுடருக்கு அல்ல. நீ கற்றவை அனைத்தும் கல்லாதவை அனைத்தும் இன்னும் கற்க எழாதவையும் சேர்த்த இப்பெருக்கில் நீயொரு துமி. உனது காலம் ஒரு துமித்தல்.
துமிக்கும் காலத்திற்குள் உன்னை நீ எதுவொன்றாகவும் ஆக்கிக் கொள்ள இயலும். அது உனக்கு வாய்த்திருக்கிறது. ஒவ்வொரு உயிருக்கும் மண்ணில் அது வாய்க்கிறது. ஆனால் உயிர்கள் அதை அறிவதில்லை. சொல்லாய் அறியும் ஞானம் எதுவென்றாலும் வாழ்வாய் நிகழும் பேறு துமிக்குள் துமிக்கும் துமித் துமியில் ஒருவருக்கே அமைகிறது. அதையெண்ணி நீ வருந்த வேண்டியதில்லை. காலம் எல்லாத் துமிக்குள்ளும் ஒரு துமித்துளியை அருட்டியபடியிருக்கும். அதில் நெஞ்சு தோய்ந்து நனை. சிறகுலர்த்திப் பற. உனக்கு உன்னில் எது விளைகிறதோ அதுவே காலம். அதுவன்றிப் பிறவனைத்தும் பொய். உலகின் அறங்கள் சூரியனின் பற்கதிர்கள் போல்வன. அதன் வெளிச்சம் பகலை நிறைப்பது. உலகின் பாவங்கள் இருளின் கருமை போல்வன. அதன் இருட்டு எல்லாவற்றையும் எடுத்துச் செல்வது. இருளோ ஒளியோ எதையாவது நீ ஆக்க முடியுமா. அகல இயலுமா. இரண்டும் நீ தான். நீயென்ற ஒன்று இருளும் ஒளியும் ஆடும் ஊஞ்சல். எவ்வளவு வேகமாய் ஒளியை நோக்கி எழுகிறாயோ அதை விட வேகமாய் விசையுந்தி இருளுக்குள் செலுத்தப்படுகிறாய். இந்த ஆடலின் விசையில் உன் கால்கள் தரையில் படுவது போல் தோன்றுவது ஒரு தோற்ற மயக்கு மட்டுமே. அவை காலத்தில் உதைத்து முன்னும் பின்னும் தம்மைத் தாமே ஆடிச் சமநிலையடைகின்றன. நீ இருட்டை அறியாத ஒளியில்லை. ஒளியை அறியாத இருட்டுமில்லை. உனது உப்பு உன் கடல். உன் கடலில் நீயொருவள் மட்டுமே உப்பு” எனச் சொல்லி அகம் கரைந்து கைகளை முன்புறம் ஊன்றிய லீலியா மயக்கத்திலிருந்து எழுபவள் போல் புறத்தை விழிகசங்கி நோக்கினாள். விழிகளில் இரண்டு வைரங்கள் மின்னியிறங்கி உருகுவது போல் நிலவையின் கன்னத்தில் கண்ணீர் உருண்டது. உடல் பெரும் போரில் நுழைந்து மீண்ட வேழமெனச் சுமை தாழ்ந்திருந்தது. உடலை மெல்ல அசைத்து லீலியாவின் வலக்கரத்தைத் தொட்டாள். லீலியா குழந்தையின் கரமென அதைப் பற்றி நிலவையை நோக்கி விழி பொருந்தினாள். நிலவையின் அகம் விசும்பி எழுவதை ஒவ்வொரு மயிர்க்கணுவாய் கண்ணீர் அலைத்து வழிவதை லீலியா உடலுணர்ந்தாள்.
செலினி சென்னியனை அங்கிருந்து போகச் சொல்லிச் சொன்னாள். தானகி அவனை அழைத்துக் கொண்டு அரச மண்டபத்திற்குக் கூட்டிச் செல்லும் வழியில் திரும்பி மறைந்தாள். செலினி முகமண்டபத்தின் கல்மதில் மேல் வெருகென ஏறி நடந்து கொண்டிருந்தாள். விழிகளைத் துடைத்த நிலவை லீலியாவை நோக்கி ஒரு வெண் புன்னைகையை நீட்டினாள். லீலியா நிலவைக்குள் திரும்பிய அன்னையைக் கண்டு உளம் கனிந்தாள். எழுந்து நின்று நகரின் களிவெளியை நோக்கினர். நிலவு சாய்ந்து சூரியன் எழ இருநாழிகைப் பொழுதிருப்பதை விண்மீன்களை நோக்கிக் கணித்து லீலியாவுக்குச் சொன்னாள் செலினி. நிலவை தன் உடலை விட்டு அகன்ற ஒரு சர்ப்பம் திரும்பிப் பார்க்காமல் செல்வதை அகம் கூர்ந்து நின்ற பின் லீலியாவை அணைத்துத் தன் கரங்களால் அவளைத் தழுவினாள். லீலியா தன் வலக்கரத்தால் நிலவையின் முகத்தைத் துடைத்து விட்டு மார்போடு சேர்த்து அணைத்த போது அன்னையென அகம் சுரப்பதை உணர்ந்தாள். நிலவையின் கூந்தலிலிருந்து ஒரு வெண்மல்லி மலரை எடுத்து முகர்ந்தாள். பின் அதைத் தன் செவியில் சூடிக் கொண்டாள். செலினி அவளின் நிறைமுகத்தைப் பார்த்துவிட்டுத் தனது குழலிலிருந்த வெண்மல்லியை எடுத்து இடக்கையில் பிடித்தபடி சிரித்துக் கொண்டே கல்மதிலில் தாவித் தாவி நெருங்கி வந்தாள்.