21: சங்கு உரைத்தது

21: சங்கு உரைத்தது

ஆங்கிவன் அளித்த அடு தமிழ்ச் சங்கே ஓங்கி நீயுரை
ஆழி வயிறு புக்குவேன் செருச்சேறு பூசுவேன்
தூமிகு வெண்சங்கே நீயுரை
ஏதற்ற பெம்மான் எந்தை குலப் புலி
ஏற்றிய நுண்சங்கே நீயுரை
கூடிய விறலியர் பாணரும் பொருநரும் கூறிய கூர்வாள் தடங்கை சேர்த்தவன்
காணிய கனவைக் கண்டதும் உற்றவன்
கேளிர் என நின்று களஞ் சேர் விண்சங்கே.

பாணன் ஏழிசைக் கூத்தன்

புலரியின் முதற் புள் பாடத்தொடங்கிய வேளை வனத்தின் எல்லையில் கூடியிருந்த புலிப்படை வீரர்கள் கரிகொண்டு பல்துலக்கி ஆற்றில் உடல் கழுவினர். மானினதும் பன்றியினதும் வற்றல் துண்டுகளை பகிர்ந்துண்டனர். இருநூறு வாள் வீரர்கள் நூறு எறி கவண் வீரர்கள் ஐம்பது கதை வீரர்கள் நூற்றியிருபது வில் வீரர்கள் வெண்மையும் கருநிறமும் மண்ணிறமும் கொண்ட புரவிகள் சிறுதேர்கள் எட்டு வேழங்கள் கொண்ட சிறுபடையுடன் எண்திசைத் தோளன் படைநடத்தல் திட்டத்தை நோக்கியபடியிருந்தான். வனப் பனி மென்புகையென அவர்களைச் சூழப் பரவியிருந்தது. மண்கலங்கல் நிறமான ஆறு அலைகளற்று நீண்ட சறுக்கும் ஒற்றை மீனெனத் தன்னைத் தான் நீந்தியபடி நகர்ந்து கொண்டிருந்தது.

வேழங்களின் கவசங்கள் நீரினடியில் மினுங்கும் தங்கமென ஒளிவீசிக் கொண்டிருந்தன. புரவிகள் தோலணிகளால் அணியேற்றப்பட்டிருந்தன. புரவிகள் கனைத்து இருமும் ஒலி காட்டின் விலங்குகளையும் பறவைகளையும் எச்சரித்தபடியிருந்தன. எறி கவண் வீரர்கள் புதியவர்கள். அவர்களின் வேல்கள் அவர்களின் முழக்கக் குரல்களைப் போலவே கூர்மையானவை. ஆனால் போர்ப்பயிற்சியற்ற கொல்வேல் ஆடவர்கள். எறிந்து கொல்லுதல் இயலும் போர்ச் சங்கேதங்களையும் ஒருங்கிணைவையும் ஆக்குவது கடினம். அவர்கள் தங்கள் தனிக்குறி மொழியிலேயே போரில் பேசிக் கொள்வார்கள். அவர்களது தலைவர் துரும்பர் நீர்காணது வறண்ட பாறை வேர்களைப் போல் விரிசடை தூங்கத் தனது குழுவினர் ஊன் வற்றலுக்குச் சண்டை பிடிப்பதைத் தடுத்துக் கொண்டும் பங்குபிரித்தலை வழிநடத்திக் கொண்டுமிருந்தான். எவ்வளவு உண்டாலும் இவர்கள் வயிறுகள் நிறைவதில்லை என எண்திசைத் தோளன் எண்ணுவதுண்டு. எரிகல்லின் மேல் விழும் நீர்த்துளிகள் அவை. துரும்பர் தனது பங்கு ஊன் வற்றலுக்காகச் சண்டையிடத் தொடங்கிய போது சிரித்துக் கொண்டு மீளவும் வரைபடத்தை நோக்கத் தொடங்கினான்.

வாட்படையின் தலைவன் தேவமின்னன் வீரர்களுடன் நகைத்துக் கதைத்தபடி தனது வீரக் கதைகளைச் சொல்லி வீரர்களை மகிழ்வித்தபடியிருந்தான். வேழங்களில் மூத்தவனான விரியனுக்கு இன்று “உடல் நிலை கொஞ்சம் சுகமில்லை” என வேழவீரன் செங்கதிர்ச்சூடன் சொல்லிச் சென்றான். எண்திசைத் தோளன் விரியனை நோக்கினான். விரியனின் வலக் கண்ணிலிருந்து மெல்லிய நீர்க்கோடு ஒன்று ததும்பிக் கொண்டிருந்தது. பின்னங்காலில் ஒன்றை மெல்ல மடித்தபடி எடையைச் சமன் செய்ய முயன்று கொண்டிருந்தான். காட்டு வழியில் அவனுக்கு ஏதோவொன்று கால்களில் ஏறியிருக்கிறது என நினைத்தவன் மருத்துவக் குழுவிலிருந்த சுடர் மீனனை அழைத்து விரியனை நோக்கச் சொல்லி ஆணையிட்டான். மருத்துவக் குழுவினர் பருத்திப் பஞ்சுக் குவியலையும் நீண்ட துணிப்பந்தையும் மருந்துச் சாறுக் குவளைகளையும் கொண்டு சென்று விரியனை நோக்கினர். விரியன் ஆகாயத்தில் தெரியும் மேகங்களை நோக்கியபடி உடலை நீங்கி நின்றான்.

வில் வீரர்களின் தலைவர் மூத்த ஆசிரியர் உகும்பரின் இளவல் சாகும்பர் விற்களைப் பரிசோதித்தபடி இறுக்கமாக நடந்து கொண்டிருந்தார். அம்பறாத் தூணிகளை நோக்கினார். அம்புகளின் கூர்களை நகத்தால் தேய்த்துப் பார்த்தார். வில்வீரர்களில் பெரும்பாலானவர்கள் அவரின் மாணவர்கள். அவர்கள் ஆசிரியரின் முன் தலையைத் தாழ்த்தி உடலில் பணிவை அமர்த்தி நின்றார்கள். அவர் முன் சென்றால் அவர்களின் படை ஒரு பெரும் வானவில்லென ஆகி அதன் கூர்முனையென சாகும்பர் கூர்வார். “எதிரிகளுக்கு அம்பினால் பேசினால் மட்டுமே நாம் என்ன சொல்ல வருகிறோம் என்பது புரியும்” என சாகும்பர் தன் வீரர்களுக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

கதை வீரர்கள் தங்கள் கதைகளை மண்ணில் நிரையாக அடுக்கிவிட்டு உடற் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அவர்களது தசைகள் விம்மிப் பொருதின. வியர்வையில் உடல் நனைந்து சொட்டியது. அவர்கள் முகங்களில் கடுமையான பாவனையொன்று இருந்தது. கதை வீரர்களின் தலைவர் உதிரரின் விழிகளிரண்டும் இரு கதைக் கோளங்கள் போல் உறைந்திருக்கும். கரங்களிரண்டையும் கோர்த்து கதையை அவர் தலைமேல் தூக்கி சுழற்றி நிலத்தில் அறைந்தால் ஊற்று நீர் எழும் என குடிகள் பேசுவர்.
ஆற்றின் தீரத்தில் நெடுத்த மலைப்பாம்பென தமிழ்க்குடிப் படை வீரர்கள் அணியணியாக வளைந்தமர்ந்திருந்தனர்.

இதையெல்லாம் நோக்கியபடி கிளைகள் வான்மரம் என சடைத்துக் காற்றை தாலாட்டியபடியிருக்கும் வேப்பமரமொன்றின் அடியில் சிறுதுணியொன்றை நிலத்தில் விரித்து அதில் தலைசாய்த்துப் படுத்திருந்தான் பாணன் ஏழிசைக் கூத்தன். மேலே தலையை உயர்த்தி வேப்பமரத்தின் காற்றலைவை நோக்கினான். அப்பால் மிளிர்ந்து அடவிக்கு மேல் ஆடும் கதிரவனின் முதல் ஒளிக் குழவிகளைப் பார்த்துப் புன்னகைத்தான். அகம் மலர்ந்து மலர்ந்து ஒளியென ஆவதாய் எண்ணிக் கொண்டிருந்தான். அவனுடன் ஐந்து முழவிசை வாத்தியக்காரர்களும் பன்னிரு பறையாளர்களும் கூடியிருந்து வெற்றிலை பாக்கைக் குதப்பித் துப்பி அவை பறவைகளின் எச்சங்களென மரத்தின் மடியில் கணத்திற்கு ஒவ்வொன்றென வீழ்ந்தபடியிருந்தது.

ஏழிசைக் கூத்தன் நேர்நிற்கப் போகும் முதற் களப் போரிது. அவன் நேர் நின்று நோக்கி அதைப் பாட வேண்டுமென அழைக்கப்பட்டிருந்தான். புலிப்படைகளின் அணுக்கன். தனது குழலைக் கொண்டையாக முடிந்தபடி தனது ஓலைச்சுவடிகளை எண்ணியடுக்கி எண்திசைத் தோளனை நோக்கினான். அவன் விழிகள் ஒற்றறிய முடியாதவை. எப்பொழுதும் ஆடியின் வெறுமை துலங்குபவை.

அருகே இருக்கும் நகரான இடாவத்தவில் தன் படையினருடன் தமிழ்க்குடி எல்லைகளைத் தாக்கியழிக்கும் ஏற்பாடுகளில் தேம்பவாவி அமைந்திருக்கிறான் என்ற ஒற்றுச் செய்தி இரவோடு இரவாக நீலழகனின் வனக்குடிலுக்கு வந்து சேர்ந்தது. தூதுப் புறாவின் கால்களில் சிறு ஓலையில் ஒரு வரியில் குவிந்த சங்கேதச் சொற்களை நோக்கியதும் அவன் அகக்கண்ணில் அது காட்சியென உருக்கொண்டது. முன்னிரவில் படைகளை அழைத்துத் தாக்குதல் திட்டத்தை நீலழகனும் அவனது படை வியூகிகளான இன்மரும் செழிய விற்பரும் வெல்தேர் அழகரும் விளக்கினர். குடிலில் உறங்கிக் கொண்டிருந்த கூத்தனுக்கு அழைப்பாணை வந்தது. யானன் அவனை எழுப்பிப் “போர்” என ஒலித்தான். கலங்கிய விழிகளைத் துடைத்து “என்ன” என விளித்த பின் தான் உறங்குவது வனக்குடிலில் என்ற போதம் எழுந்தது.

படைவீரர்களின் முன் இன்மர் வரைபடத்தின் எல்லைகளையும் நகரின் தோற்றத்தையும் காட்டி நின்றார். நெய்ப்பந்த ஒளியில் இன்மரின் முகம் தகதகத்துக் கொண்டிருந்தது. கைகளை வாளென வீசியும் நீட்டியும் ஒவ்வொரு குறியையும் துலக்கினார். படைவீரர்களின் விழிகள் அதிலிருந்த குற்றுகளையும் வட்டங்களையும் சதுரங்களையும் திரிகளையும் சூலக்குறிகளையும் தம் அகக்கண்ணால் விரித்து நகரையும் போரையும் கற்பனையில் உண்டாக்கின. கூத்தனுக்கு பழந்துணியில் தொடங்கிய ஓவியம் ஒன்று முற்றுப் பெறவில்லை என்ற எண்ணமெழுந்தது. கொட்டாவி விட்டுக் கொண்டும் உறக்கம் கலைந்து கலைந்து எழுவதைக் கட்டுப்படுத்த முடியாதவனின் விழிகளுக்கு வெளவாலொன்று தூங்குவது போல் அந்த வரைபடம் தோன்றத் தொடங்கியது. விபரணங்கள் முடிந்த பின் ஒரு வேழத்தில் ஏறியதும் பின் மூங்கில்கள் நெரிசலாக வளர்ந்து நீரைத் தொட்டு அலையும் ஆற்றங்கரையில் சேர்ந்தமையுமே நினைவிருக்கிறது. தன் ஆடைகளைச் சரிசெய்து கொண்டு இறங்கி காட்டில் சிறுநடை போனான். தீயிலை மலர்களைத் தன் கொம்பில் சேர்த்து புகைத்துக் கொண்டே சிங்கை நகரின் எல்லைக்குள் தான் வந்து நிற்பதை உணர்ந்தான். மூச்சு சற்று அடைப்பது போன்றிருந்தது. தீயிலையால் இருக்குமென்று நினைத்தான். காட்டில் நெடிதும் பரந்தும் விரிந்து நிற்கும் மரங்களையும் அதில் தூங்கிய மந்திக் கூட்டங்களையும் பார்த்தான். அவன் நெடுநாள் எதிர்பார்த்திருந்த நாள் இப்படி அவனறியாமலே அவன் முன் நிகழ்ந்து வந்துவிட்டதை எண்ணி கால்களை வெறி நடனமெனச் சுழற்றி துள்ளியாடினான். சிரித்தான். சொற்களை உளத்தில் அலசி அலசிக் காய வைத்தான்.

போரை நேரில் காண வேண்டும். அதில் வீரர்கள் சிந்தும் குருதியை நோக்க வேண்டும். அவை மென்சிவப்பா கடுஞ்சிவப்பா. தலைகள் எப்படி அறுகின்றன. வாள்களும் வேல்களும் உரசும் போது தீப்பற்றுமா. அவற்றில் குருதி எப்படிப் பாயும். புரவிகள் எப்படிப் பிணங்களைத் தாண்டும். வேழங்கள் எப்படித் தேர்களை உடைக்கும். அம்புகள் வீழும் நீர்வீழ்ச்சியெனவும் எழும் புட்கூட்டமெனவும் ஆகுவது எங்கனம். போரின் ஒலி என்ன. அதன் நிறம் என்ன. கணங்கள் எவை. வெல்வதன் களியென்ன. அவனுக்கு ஒவ்வொன்றையும் உற்று விழிகளால் நிறைத்து அதைச் சொல்லால் நிகழ்த்த வேண்டுமென்ற உற்சாகம் எழுந்ததும் கொம்பைத் துணியில் சுற்றி வைத்து விட்டுப் படைக்கலன் வரிசைகளை நோக்கித் திரும்பினான். அவன் போர்க்களம் என நினைத்தது நீண்டும் விரிந்தும் இருக்கின்ற புற்கள் அற்ற ஒரு விளையாட்டு மைதானம். அவன் கேட்டு வளர்ந்த பாரதக் கதைகள் போலவோ இராவணப் போர் போலவோ உக்கிரமும் காவியத் தன்மையும் கொண்டவையாக அவை இருக்கும். மாய அரக்கர்கள் எழுந்து விண்ணிலும் மண்ணிலும் போர் புரிவர். மடிய மடியப் போர்வீரர்கள் கறையான்களென வந்துகொண்டேயிருப்பர். மாலை முடிந்ததும் வெற்றி அறிவிக்கப்பட்டு குடில் திரும்புவர். இதுவே அவனுள் நிகழ்ந்து நிகழ்ந்து திரும்பும் போர். போரைப் பார்க்கவே புலிப்படையின் அணுக்கனானான் ஏழிசைக் கூத்தன். போரின் பாடல்களைப் பாடுபவருக்கே குடிகளிடம் மதிப்பிருந்தது. காதலும் காமமும் கேட்டுப் பரத்தைகள் கூட மகிழ்வதில்லை. அவர்களும் போர்ப்பாடல்களையே காதல் பாடல்களெனக் கேட்கிறார்கள்.

மன்றுகளிலும் சத்திரங்களிலும் போரின் கதைகளே களியூட்டும் அரட்டைப் பொருள். ஒவ்வொருவர் வாயிலிருந்தும் ஒரு போர் ஓராயிராமாய் மீள மீள நிகழும். விழிகள் திரையென ஆக வீரர்கள் சொல்லும் கதைகளை வாய்திறந்து விழிகள் நீங்காது சிறுவர்கள் கேட்டபடியிருப்பர். போர் ஒரு களி. உடல்கள் மோதி வேழங்கள் தாவியாடி அங்கங்கள் சிதைத்து அம்புகள் ஆற்றுப் பெருக்கென மடை திறந்து வாள்கள் காற்றை இரண்டாய்க் கிழித்து வேல்களில் தொங்கும் எதிரிகளின் தலைகளை கூட்டமாய் குவித்து அதன் மேல் பறக்கும் புலிக்கொடியின் படபடப்பை ஒவ்வொரு சிறுவனும் கனவில் கண்டான்.

தனது கச்சை இறுக்கி அதிலிருந்த வெற்று ஓலைச்சுவடிகளை விரல்களால் தடவிப் பார்த்தான் கூத்தன். எனது காவியமே பொறுத்திரு. களம் கண்டு சபையேறிய பின் உன்னை வைரமெனக் களஞ்சியங்கள் போற்றும். விழக்காலங்களில் உன் சொற்களை விறலியரும் பாணர்களும் பாடியாடுவார். நீ அழியாத ஒன்றென ஆகுவாய் என் காய்ந்த ஓலையே. இன்னும் கொஞ்ச வேளை தான். முழவுகள் ஒலிக்க படை நகர தலைகள் தெறித்து விழும். எழுத்தாணியின் கூரை நோக்கினான். அவன் அகத்தின் அக்கணமெனக் கூர்ந்திருந்தது.

சிறு கொம்பின் ஓசையும் நடப்பதைப் போன்ற முழவின் மென் ஓசையும் எழத் தொடங்கின. படை மெல்ல மெல்ல ஊர்ந்து இடாவத்தவின் முதல் மனைக்குடித் தெருவினை தூர நின்று நோக்கியது. உச்சிக் கிளைகளில் ஏறிய வீரர்கள் தொலைகாண் கருவியால் நகரை நோட்டமிட்டனர். எழுந்து விரியாத தாமரைக் குளம் போல் இடாவத்த அமைதி கொண்டிருந்தது.

போர் நிகழவிருப்பது நகருள் என்ற எண்ணம் ஏழிசைக் கூத்தனுக்குள் மெல்லிய சலிப்பை எழ வைத்தது. நகருள் எங்கு நின்று அவன் போரை நோக்குவது. சிங்கை வீரர்கள் தன்னைப் பிடித்துக் கொண்டால் என்னவாவது. ஒரு வேளை பார்த்த கணமே அவர்கள் அவனது தலையையும் கொய்யலாம். உள்ளில் நடுக்கம் மெல்ல எழுந்து முழவின் தோலென ஆடியது.

சூரியன் எழுந்து இரு
நாழிகை. பனியின் திரை நீங்காத இடாவத்த ஒரு வனத்தின் சித்திரக் காட்சியென அசையாமல் விரிந்திருந்தது. இடாவத்தக் காட்டின் விளிம்பிலிருந்து நாரையின் கூரலகு வடிவிலான புரவிப்படை தன் ஆயத்தச் சங்கேதத்தை எழுப்பியது.
எண்திசைத் தோளனை நோக்கிய தேவமின்னன் தன் கூர்வாளை ஒரு சுழற்றுச் சுற்றி முன் என்று நீட்டியமைந்தான். புரவியின் தோலில் முரசின் கோலென மிதித்தான். அது புரண்டு செல்லும் ஆற்றின் அலைகளென ஏனைய புரவிகளுக்குள்ளும் எழ அவை கூர்ந்து முகம் நீட்டியபடி பாய்ந்து தாவின. முழவும் பறையும் மின்னியெழெ போரின் முதற்கணம் தன் மெளனத்தை ஒருகணத்தில் உடைத்தது. கருத்த ஈரமூறிய மண்ணைக் குதிரைகளின் குளம்புகள் கொத்திப் பிரட்டியபடி மனைகளுள் சென்று புகுந்தன. கதை வீரர்களும் வில்வீரர்களும் மெல்லோட்டத்துடன் தமது சிறு தேர்களை உசுப்பினர். அவர்களின் புரவிகள் நான் நானென உந்தியெழுந்தன. வேழங்களின் மூத்தவன் விரியன் முழவும் பறையும் காதை உரச எரியும் பாறையென ஓடத் தொடங்கினான். அவன் பின்னே அவன் படை சென்றது. கொல்வேல் ஆடவர் குழுவின் போரொலி முழவுகளையும் பறைகளையும் மேவி ஒலித்தது. நூறு வீரர்களின் குரல்களும் ஒரே குரலின் நூறு நாக்களென ஒலித்தெழுந்தன. வெறியாட்டு எழுந்த விழிகளுடன் கவண்களைச் சுழற்றியபடி தம் வேல்களால் உதைத்துக் கொண்டு அதிலேயே பறப்பவர்கள் போல் துள்ளி மிதந்தனர். எண்திசைத் தோளன் தன் மெய்ப்படையுடன் நகர் புகுந்தான். இரு வில்வீரர்கள் ஏறிய சிறுதேரில் தொற்றிக் கொண்டான் ஏழிசைக் கூத்தன்.

சிறிய மண் மனைகளைக் கடந்ததும் விரிந்த பெருவீதிகள் தோன்றின. காட்டிலைகளால் வேய்ந்து மண்ணால் எழுப்பப்பட்ட சத்திரங்களும் வாணிபத் தலங்களிலும் குடிகள் சிதறியிருந்தனர். நகரில் அரைப்பகுதிக்கும் மேலே வனம் நிறைந்திருந்தது. வனத்திற்குள் ஒரு நகர் என எண்ணிக் கொண்டான் கூத்தன். வீதிகளின் நடுவே இறந்த சிங்கை வீரர்களின் உடல்களைக் கண்டான். தமிழ்க்குடி வீரர்கள் தேம்பவாவியின் இடாவத்த அரண்மனையை நெருங்கிய சங்கேத ஒலி காற்றில் எழுந்தது. கூத்தன் “நான் முன்னரங்கில் இருக்க வேண்டியவன் புரவிகளை விரைவாகச் செலுத்துங்கள்” எனக் கூச்சலிடத் தொடங்கினான்.

சிங்கை நகர்க் குடிகள் கைகளைத் தூக்கியபடி சத்திரங்களில் குமிந்தனர். புரவிகளில் வந்த வாட்படை வீரர்கள் ஐம்பது பேர் அவர்களைச் சூழ்ந்து நின்றனர். மூன்றாவது சங்கேத ஒலி காற்றில் எழுந்த போது தாக்குதல் உச்சமடையத் தொடங்கியதை எண்திசைத் தோளன் உணர்ந்தான். கோட்டை போன்ற அமைப்பைக் கொண்ட அரண்மனையைச் சுற்றிலும் ஓடிய கரும்பச்சை நிற அகழிகளில் வாய்பிளந்து காத்திருக்கும் பெரு முதலைகள் குருதி மணம் கொண்டு கரையேற உன்னின. அவற்றின் தோல்களை நோக்கிய சாகும்பர் அவை பாறையில் கொப்பளங்கள் முளைத்திருப்பதைப் போல் என எண்ணினார். ஒவ்வொன்றும் பாதி யானை அளவிருந்தது. முதலையின் உடலில் காற்பங்கு அதன் வாய். அகழி முதலைகள் போரில் பிறந்து குருதி குடித்து வளர்ந்தவை போல் தலையசைத்து நீரில் மூழ்கி மூழ்கி எழுந்து வாய்பிளந்து நின்றன.

ஏழிசைக் கூத்தன் போர்க்களத்தை அடைந்த போது கோட்டையின் வாயிலில் நின்ற சிங்கை வீரர்கள் அம்புகளை இடைவிடாது எய்தபடியிருந்தனர். தங்கள் கவசங்களைத் தூக்கித் தடுத்தபடியும் ஒளிந்தபடியும் புரவிகளில் சரிந்தும் அம்புகளை விலத்திய புலிகள் கோட்டைக்குச் செல்லும் வாயிலை உடைத்தால் மட்டுமே உட்செல்ல முடியுமெனத் தயங்கி நின்றனர். மலையேறும் ஆறுகளெனப் புலிகளின் அம்புகள் கோட்டையை ஏகின. சிங்கை வீரர்கள் அவற்றை எளிதாகத் தடுத்து மண் விழும் பெருமழையின் வேகத்தில் அம்புகளைப் பொழிந்தனர்.

பெரிய கரடிகளைப் போன்று நின்ற சிங்கையின் படைக் கூட்டமொன்று வானரங்கள் போல் குரல் எழுப்பியபடி கரும் பாறைகளை வாயிலில் நின்ற வீரர்கள் மேல் எறிந்தனர். முன்வரிசைப் புலிகள் மடியத் தொடங்க “பின் வருக” “பின் வருக” என ஆணை எழுந்தது. படை பின்வாங்கி ஒருங்கிணைய முயல்வது எரியும் கூட்டில் தேனீக்கள் அணைவதென கூத்தனின் விழிகளில் படர்ந்தது.

ஆயிரக்கணக்கில் சிங்கை வீரர்களின் படை குன்றென எழுந்த கோட்டையின் சுவர்களில் ஏறி நின்றபடி வெறிக்கூச்சல் எழுப்பினர். ஒரு நாழிகைக்கு பத்தாயிரம் அம்புகளெனப் பறந்து வீழ்ந்தன. குற்றுயிராய்க் கிடந்த வீரர்களின் உடல்கள் அம்புகளைத் தாங்கும் பயிற்சிப் பாவைகள் போலாகின. எண்திசைத் தோளன் உடல் விதிர்விதிர்க்க தலைவர்களைக் கூட்டினான்.

“இக்கோட்டை வாயிலை உடைக்காமல் நாம் உட் செல்ல இயலாது. புறத்தால் சென்று தாக்கினாலும் அதுவே வழி. இரண்டு வாயில்கள் மட்டுமே கொண்ட கோட்டையிது. இதற்குள் சென்று தேம்பவாவி பதுங்கிக் கொள்வான் என நாம் கணிக்கவில்லை. அவனை ஒரு வீரனென நினைத்தது நம் தவறு” என சாகும்பர் சினக் குரலில் சொன்னார். சிம்மத்தின் பிடரியென அவர் வெண்குழல் எழுவதை நோக்கினான் கூத்தன்.

துரும்பர் தன் பற்களில் ஒட்டியிருந்த வற்றலின் துண்டுகளை நகத்தால் தோண்டியபடி “நாங்கள் செல்கிறோம் தளபதி” என ஒரு வரியில் சொன்னார். “நீங்கள் எப்படிச் செல்வீர்கள் துரும்பரே. நாற்திசையும் படைகள் சூழ்ந்திருக்கின்றன. நீங்கள் கோட்டை வாயிலில் ஏறினால் கூட அவர்கள் அங்கே ஆயிரக்கணக்கில் திரண்டிருக்கிறார்கள். நாங்கள் சிறுபடை” என திகைப்புடன் கேட்டான் எண்திசைத் தோளன். “ஆஹ், முதலைகள் நீந்தும் அகழிகளில் அவற்றுக்கு நடுவில் கோட்டையில் ஏறிச் செல்ல கல்வாளிப்புகள் அமைந்திருக்கின்றன. இடப்புறமுள்ள பகுதியில் வாயில்கள் இல்லையென்றபடியால் அங்கே வீரர்கள் குறைவு. இருநூறு பேர் தான் இருப்பார்கள். அவர்களில் வில்வீரர்களும் குறைவு. வாயில்களை நோக்கியே அவர்கள் படை திரண்டிருக்கிறது. உள்ளே செல்கிறோம். வாயிலைத் திறக்க முடிந்தால் வெல்கிறோம். இல்லையேல் வீரமரணம் எய்துகிறோம். நாங்கள் வெற்றியின்றிப் போரிலிருந்து திரும்பிச் செல்வதில்லை தளபதி” என தன் சடைபோன்ற வறண்ட உறுதியான குரலில் சொன்னார் துரும்பர்.

“அது தற்கொலை துரும்பரே” என தலையை இல்லை என்பது போல் அசைத்தான் எண்திசைத் தோளன். “நாங்கள் எங்கள் நிலத்தின் தற்கொலைப் படை தளபதி. போரென்றால் இறப்பு நிச்சயம். முன்னே வீழ்ந்திருக்கும் நூற்றுக்கணக்கான இளையவர்களின் முகங்களைப் பாருங்கள். நாம் வெல்லாமல் திரும்ப முடியுமா. இவர்களின் அன்னையர்களுக்குக் கொடுப்பதற்காவது தேம்பவாவியின் தலை வேண்டாமா. கொற்றவை எங்களுக்குத் துணை நிற்பாள். போரில் வென்று பேய்க்களியாடியே இன்று நகர் மீள்கிறோம்” என தன் பெருத்த தண்டுக் கைகளை உரசித் தட்டி தன் வீரர்களை நோக்கி “அகூஹ்க்” எனக் கத்தினார். நூறு வாய்களிலிருந்தும் ஆயிரம் கொல்விலங்குகளின் குரல் வெடிப்பென எழுந்த “அகூஹ்க்” களைக் கேட்ட சிங்கை வீரர்களும் புலிப்படை வீரர்களும் அத்திசையேயே நோக்கினர். வேழங்கள் முன் கால்களைத் தூக்கி பிளிறியபடி அமைந்தன. உடலில் புரளும் துடியை உணர்ந்து புரவிகள் கனைத்தெழுந்தன. உதிரர் “என் வீரர்களுடன் துரும்பருடன் செல்கிறேன்” எனச் சொல்லி கதையை அருகு நின்ற மரத்தில் அறைந்தார். அதன் தண்டு பெயர்ந்து ஆடிக் கிளைகள் கொட்டின. தன் கதையைத் தூக்கி கொல்வேல் படையினரை நோக்கி “அகூஹ்க்” எனக் கத்தினார். சுழல் மடிந்து பேரலை எழுவதென அக்குரல்களின் பேரிரைச்சல் தேம்பவாவியின் செவிகளை அறைந்தன.

போரின் முதல் அம்புகள் வீரர்களின் அறியாமையிலிருந்து எழுகின்றன. களத்தில் கொல்தலும் மரணங்களும் பெருகுகையில் தயங்குகின்றன. தான் ஒரு கொலைக்கருவி மட்டுமே என உணர்பவன் மட்டுமே முன் செல்கிறான். துரும்பர் படை ஒரு கொலைக் கருவியென உருத்திரண்டு நிற்பதை விழிகள் விரித்து நிற்க நோக்கினான் கூத்தன்.

“வாயில் திறந்த பின்னரே வாட் படை நுழைய வேண்டும். அதுவரை அம்புப் பெருக்கை நிகழ்த்தி அவர்களின் கவனத்தை திருப்புங்கள்” என்றார் உதிரர். “வேழங்களுக்கு இப்போது பணியில்லை. அவையும் வனத்தில் அமையட்டும்” என்றார் எண்திசைத் தோளன். கொல்வேல் ஆடவர்கள் ஒளிவிடும் தங்கள் வேல்களின் கூர்முனையைத் தூக்கி நிலத்தில் அறைந்து வீழ்ந்து மண்தொட்டு மீண்டும் தாவி எழுந்தனர்.

எழிசைக் கூத்தன் கோட்டையின் முன் நீண்டு கிடந்த பிணக்களத்தை நோக்கினான். நூற்றுக்கணக்கில் இளைய உடல்கள் அம்புகள் குற்றி அடங்கியிருந்தன. புரவிகள் உடலிலிருந்து குருதி குழைசோறென வடிந்து கட்டியாகியிருந்தது. சூரிய ஒளி ஏறி அதன் செம்மையும் மண்ணின் கருமையும் குழைந்து எழுவதும் குருதியின் நாற்றமும் குமைந்து வயிற்றைப் பிரட்டியது. போரின் முதல் இருநாழிகையிலேயே ஐந்தில் ஒரு பங்கு படையினர் மாண்டனர். ஆனாலும் போர் நிற்கப் போவதில்லை. கடைசி அம்பு எய்து அடங்கும் வரை போர் நீளப் போகிறது. அதுவொரு நீண்ட காலமென எண்ணிக் கொண்டான் கூத்தன். இந்த இரத்தச் சேற்றை எச்சொல்லால் பாடுவது. செங்குருதியின் பேராற்றில் ஓலையைச் சிறு படகனெ எண்ணி உளம் தோய்ந்து நின்றான்.

துரும்பரின் படை வீரர்கள் மண்ணில் ஊரும் ராட்சத ஓணான்கள் போல் தலையை நீட்டியும் தாழ்த்தியும் மண்ணோடு மண்ணாக ஓடும் நான்கு கால் உயிரியென இடமதிலை நோக்கி அம்பெல்லையால் ஊர்ந்து ஓடிக்கொண்டிருப்பது தெரிந்தது. உதிரர் தன் வீரர்களுடன் சிறுதேர்களில் அமைந்து அக்காட்சியைப் பார்த்துக் கொண்டே கதையில் கைபொருதி மாவேழமென நின்றார்.

“சிங்கை வீரர்கள் போர்
நெறியற்றவர்கள். வெல்தல் மட்டுமே அவர்களின் போர். கதை யுத்தமென முன் சென்றால் அம்புப் பெருக்கிட்டுக் கொன்றொழிப்பதை ஒரு விளையாட்டெனப் புரிபவர்கள். துரும்பரின் நெறியற்ற கொல்கருவி தான் அவர்களுக்குப் புரியக் கூடியது” என உதிரர் எண்ணிக் கொண்டார்.

கோட்டையின் வலப்புறமாக புலிகளின் வில்வீரர்கள் அம்புப் பெருக்கை நிகழ்த்திக் கொண்டிருந்தார்கள். புலிகள் அம்புகளை எய்யும் நேரங்களில் உடல்களைக் கோட்டை மதிலுள் மறைத்து கீழே படுத்துக் கொண்டார்கள் சிங்கை வீரர்கள். ஒரு நாழிகை அம்புப் பெருக்கு முடிவடைவதற்குள் துரும்பரின் படைகள் அகழியில் குதிப்பதை நோக்கி “தற்கொலை” என அகம் கூவினான் கூத்தன். அவர்களின் வேல்கள் முதலைகளின் தாடைகளால் புகுந்து குருதி பீறிட அவை புரண்டு மிதக்கையில் சென்றவர்களும் கொல்முதலைகள் என எண்ணிக் கொண்டான்.

இருபது வீரர்கள் இடவாயிலை நோக்கி குறிபிசகாத அம்புகளை எய்து அங்கு நின்ற சிங்கை வீரர்களைத் தாக்கினர். அவர்களும் தரையோடு தரையாக ஆக துரும்பர் வாயில் வேலைக் கடித்துக் கொண்டு கல்வாளிப்புகளில் உடும்பென ஏறுவது தெரிந்தது. அவர் பின்னால் கொல்வேல் ஆடவர்கள் நீரேறும் உடும்புக் கூட்டமென அசைந்து கரும் பாறைச் சுவரில் ஏறினர். துரும்பரின் படை வீரர்கள் மேலே ஏறியதும் சிங்கை வீரர்களின் உடல்கள் அகழிக்குள் முதலைகளுக்குத் தீன்களென விழுந்தன. சிங்கை வீரர்களின் குருதி அகழியின் கரும்பச்சையில் சிவப்பு நதியென ஓடத் தொடங்கியது. கூட்டம் கூட்டமாய் பெருமுதலைகள் அவர்களின் உடல்களை நோக்கி நீந்தி வந்தன.

எண்திசைத் தோளனின் பின்புறம் காடு இரண்டாய்ப் பிளந்து பாதாள நாகங்களின் படைகள் தரை வந்தது போல் புரவிகளின் குளம்புகள் மண்கலைத்தெழுமொலி வனவிளிம்பை நோக்கி எழுந்தது. காற்றை லட்சம் கூறுகளாய் வெட்டும் ஓராயிரம் இடிகளின் பேரொலியென ருத்ரம் முழங்கி ஒலிப்பது புலிவீரர்களின் செவிகளை அடைய பிடரிமயிர்கள் துடித்தெதிர்ந்து சிலிர்த்துக் கூசின. வான்கிழிக்கும் மின்னலொன்று தம் மேல் இறங்கியவர்கள் போல
“ருத்ரம் ” ருத்ரம்” என வெறிக்கூச்சல் எழுப்பினர் புலிகள். ஒவ்வொரு வீரனின் தசைகளிலும் ஒராயிரம் வேழங்களின் விசை திரண்டது. வில்களில் நாண் அதிர்ந்து சுடர்ந்தது. அம்புகள் தமது இலக்குகளைத் தாமே தேடி எழத் தொடங்கின. விழி
முனைகள் பொருதுமிடத்தை ஒரு மின்கணத்தில் அம்புகள் தொட்டன. உதிரரின் படை வெறியெழுந்து முன்னேறி முதலைகளைக் கதையால் அடித்து விரட்டி மேலேறத் தொடங்கினர். முழவுகளும் பறைகளும் வெறியாட்டின் ஓசையுடன் முழங்கத் தொடங்கின. காற்றில் வீரர்களின் போர்வெறிக் கூச்சல்களும் அம்புகளின் கூர்நுனிகள் கோட்டையின் கற்பாறைகளில் மோதும் ஒலிகளும் புரவிகள் வெகுண்டு கனைக்கும் குரல்களும் விரியன் வனம் நோக்கித் துதி நீட்டி அலறிப்பிளிறிய வெஞ்சினவொலியும் பறையும் முழவும் ஒன்றுடன் ஒன்று போரிட்டெழுந்த கொல்கள வெறியிலும் எண்திசைத் தோளன் தன் தோள்களைச் சிலிர்த்து கவசத்திற்குள் உயிர் மீண்டவனென வனத்தை நோக்கினான். காடு ஒரு மா வில்லென வளைந்து நாணிழுத்து எழுந்த அம்பின் பேரொலியுடன் ருத்ரம் போர்க்களத்தை நெருங்கிக் கொண்டிருந்தது.

TAGS
Share This