23: வெறியாட்டன் உரைத்தது

23: வெறியாட்டன் உரைத்தது

ஆடுக ஆடுக பேய்க்களியொன்றை
தேடுக தேடுக வெம்மார்பொன்றை
தீயினில் கருக செந்நாவென்றை
வேலினில் கூரிய கருநாவொன்றை
ஆடுக ஆடுக வெறியாட்டொன்றை
தேடுக தேடுக குறுவாளென்றை
குருதியில் மலரச் செம்பூவொன்றை
குருதியில் மலரக் கரும்பூவொன்றை.

வெறியாட்டன் சூர்விற்பன்

வனக் கொற்றவையின் கற்சிலையில் நீண்டிருந்த தளிர் நாக்கை நோக்கியிருந்தான் சத்தகன். அவள் பேயுருக் கொண்டு ஆடும் தோற்றத்தில் அந்த நாவு மட்டும் சிறு கருணையின் முனையென நீண்டு தழைத்திருப்பதாகத் தோன்றியது. செஞ்சாந்துகளும் மஞ்சளும் குழைத்துப் பூசிய கருங்கல் மேனியில் கூந்தல் நெளிநாகங்களென அலைந்துறைபவை. விழிகளில் இம்மைக்கும் மறுமைக்கும் முடிவிலா வாயிலில் தோன்றும் கல்லொளி. கரங்களில் வீசிய கொல்வேல். மிதிபடும் பூதபிசாசுகள் அலறும் கோலம் பாதங்களில். அழுத்தும் பாதத்தில் மின்னிடும் எழிலாடல். தீப்பந்த ஒளிச் சிதிலத்தில் மங்கிக் கலங்கலாகித் தோன்றும் அவள் வதனத்தில் எண்ணிலடங்காச் சினம் தன்னைத் தானே உமிழ்ந்தபடியிருந்தது.

வனக்குடில் சென்று நீலழகனின் புலிப்படையில் சேரும் அழைப்பாணையை குடித்தலைவர் துரும்பன் கொணர்ந்த போது கொல்வேல் ஆடவர் குடிகள் மகிழ்ச்சியில் ஆடினர். சத்தகன் அவர்களின் களியை நோக்கி எதற்காக இந்தக் களி என வியந்தான். படையில் சேர்வதென்பது போரில் மடிவதற்காக மட்டுமே. சத்தகன் கேட்கும் போர்க் கதைகளில் எஞ்சி மீள்பவர்கள் சொல்வது அதையே. கொல்வேல் ஆடவர் குடிக்கு அதுவொரு மகிழ்வளிக்கும் சேதி என எண்ணிக் கொண்டான் சத்தகன். நீலழகனின் அரசில் அவர்கள் தங்கள் குடியின் வீரமும் களம் கண்டது எனச் சொல்வதன் வழி தமக்கொரு அரச இணைப்பை ஏற்படுத்திக் கொள்ள விழைகிறார்கள். அரைவாசிக்கும் மேல் கிழவர்களும் முது பெண்டிரும் மீதியிருப்பவர்களில் வாலிபர்கள் நான்கில் ஒருபங்கு தான் இருப்பார்கள். அவர்களை யுத்தத்தின் வாயில் தின்னக் கொடுத்த பின் இவர்கள் எந்த அரசில் இடம் பெற்றுக் கொண்டாலும் அதில் என்ன மதிப்பு இருக்கப் போகிறது. தன் குட்டிகளைத் தின்று பேற்றுப் பசி போக்கும் வேட்டை நாய்கள் என தன் குடியை எண்ணினான்.

நீலழகனின் அரசின் கீழ் அமைந்து கொண்டால் கொன்று உணவு தேடும் வேட்டை வாழ்க்கையிலிருந்து நின்று வயல் விதைத்து வாணிபம் செய்யும் காலம் வருமென்று எண்ணுகிறார்கள் போலும். ஆனால் போரில் தோல்வியென்றால் என்னவாவது. சிங்கை நகரின் படைபலத்தை சத்தகன் நேர் நோக்கியிருக்கிறான். வழிக்கொள்ளைக்கென வனம் மருங்கிய போது ஆயிரமாயிரமாய் தேள்கள் படைகொண்டு வருவது போல் அவர்கள் ஆயுதங்களைத் தூக்கியபடி சென்ற காட்சியை அவன் அகக்கண்ணில் மீளக் கண்டான்.
அவர்கள் கருத்த இருளில் அசைந்து செல்வது பூதகணங்களின் படையொன்று செல்வதை முடிவில்லாமல் பார்க்க சாபம் பெற்றவனின் விழிகள் வாய்த்தது என எண்ணச் செய்யும் தொகைப் பெருக்கு அவர்கள். தேள்களை எதிர்க்கும் எறும்புகளின் போரிது. இதில் சில வன எறும்புகள் கூடி என்ன செய்யப் போகின்றன. அவன் எண்ணங்கள் கலைந்து கலைந்து குளத்தில் பாசியென மூடிக்கொண்டன.

வனக்குடில் புகும் வாலிபர்களுக்கு அருளாட்டு வழங்கும் நாள் கொற்றவையின் தளிர்நாவைப் பார்த்த போது போரில் தானொரு நாவனெ ஆவது போல் எண்ணிக் கொண்டான். தன் குடியினர் அவள் பாதத்தில் மிதிபடும் பூதபிசாசுகள். பின் அந்த எண்ணத்தை எண்ணி உள்ளூர வருத்தமெழுந்தது. தான் மட்டும் பிழைத்துக் கொண்டால் அப்பால் என்ன. அழிந்த குடியின் குருதியை அள்ளிக் குடிக்கும் நாவெனத் தன்னைக் கண்டு துணுக்குற்றான். தான் மட்டும் பிழைக்கும் ஆசை ஒரு நா என எண்ணி குருதித்தாலத்துடன் வந்த வெறியாட்டனை நோக்கினான்.

முதுகிழவன். அவன் சொல்லும் சொல்லின் பொருள்கள் அவனே அறியாதது. அது எந்த மொழியென்றும் எவரும் கேட்டதில்லை. அவன் அவனது தொல்மொழியில் பேசும் ஒரு கிளி என எண்ண மெல்லிய சிரிப்பு சத்தகனில் கூடியது. “இவன் போர் வெல்வான். போர் இவனால் வெல்லப்படும்” எஞ்சிய சொற்கள் வெறியாட்டனின் தொல்மொழியில் எழுந்தது. எல்லோருக்கும் அதே புகழ் மொழிகளும் அதன் பின் வெறிமொழியும் கொண்டான். “தீயிலை உருண்டைகளை உண்டு விட்டு இவன் போதையில் ஆடுகிறான். நாங்கள் கால்களில் விழுகிறோம்” என எல்விளன் காதில் உரைத்தான். சிரிப்பு மேலுமெழத் தன்னைக் கட்டுப்படுத்தியபடி தன் அன்னையை நோக்கினான் சத்தகன்.

திருவிழாவில் ஒவ்வொரு பொருளையும் நோக்குபவளைப் போல் எதுவுமறியாமல் உவகையில் அவள் முகம் பூரிப்புக் கூடியிருந்தது. சத்தகனது வெற்றுடம்பு பாறைக்கல்லைப் போன்றது கரங்களால் முழுமானைத் தூக்கித் தோள்களில் போட்டபடி நடப்பான். அவன் எறிகவணில் முயல்கள் அந்தரத்தில் விழும். வேல் எறிந்தால் சிறுத்தைகள் வாய் பிளந்து அரண்டு மாயும். அவன் தாய் அவனது உடலை அறிவாள். அதன் கொல்நுனியின் வேட்கையை அறிவாள். “அவனுக்கு யுத்தகளம் ஒரு விளையாட்டு அரங்கு சாளரி. அவன் ஆடியமைகையில் சிம்மங்கள் உயிர் பழுத்த இலைகளெனச் சரியும்” என அவள் தனது மூத்த மகளுக்குச் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளது மகிழ்முகத்தை நோக்கிய சத்தகனுக்கு அவள் யுத்தத்தை ஒரு வெறியாட்டு என எண்ணிக் கொண்டிருக்கிறாள் எனத் தோன்றியது. ஆடி முடிந்ததும் குருதியைத் துடைத்துக் கொண்டு விடியலில் குடில் திரும்பலாம் என எண்ணுவாள் என நினைத்து தன் விழிகளை கொற்றவையின் கொலைச்சிற்பத்தில் கண் பொருதினான். என்றும் தணியாத அவள் சினமுகத்தில் நிழலும் தீயும் ஆடியாடி அலைந்தபடியிருந்தன.

வனக்குடிலில் புலிப்படைகள் வழங்கிய பயிற்சிகளில் அவனுக்கு அமைவு கூடவில்லை. ஏற்கெனவே இறுகிப் பாறையான உடலுக்கு எதற்கு இத்தனை பயிற்சிகள். கொல்வதற்கு எதற்கு ஊழ்கப் பயிற்சி. ஆயுதங்களைத் துடைப்பதும் ஒரு பயிற்சியா. அணியாய்ச் செல்வது எதற்கு. ஒவ்வொரு சந்தேகத்துடனும் துரும்பரிடம் சென்று முறையிட்டுக் கொண்டேயிருப்பான். ஒருமுறை அவனது தொல்லை தாங்காது “உதிரரிடம் போய்க் கேள்” என அனுப்பிவிட்டார். அவன் தன் தடித்துருண்ட உலோகக் கால்களால் தாவித் தாவி நடந்து சென்று உதிரரின் முன் நின்றான். “ஆசிரியரே, இந்தப் பாறைப்பந்தை வைத்து என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். இதனால் எப்படி வீரர்களைக் கொல்ல முடியும்” என துடிக்கும் மீனைத் தொண்டைக்குள் வைத்திருப்பவனைப் போல் கேட்டான்.

உதிரர் கதையால் ஓங்கி நிலத்தில் அறைந்து “இந்த அடி உன் உடலில் விழுந்தால் நீ பிழைத்துக் கொள்வாயா மூடனே” என்று கர்ச்சித்தார். அவன் “ஓம். நான் பிழைத்துக் கொள்வேன்” என அசைவின்றிச் சொன்னான். உதிரர் ஒரு கணம் அவன் விழிகளை நோக்கினார். உதிரரின் விழிகளில் என்ன இருந்தது என அவன் அறியவில்லை. அதை அறியும் எண்ணமும் அற்றவன் போல் தன் இடக்கையை இடையில் ஊன்றியபடி சிறுகுன்றின் தினவுடன் நின்றான். “இவனை கதை பயிற்சிக்கு அனுப்புக” எனும் ஆணை மட்டும் துரும்பருக்கு வந்தது. “நல்லவேளை நான் உன்னிடம் இருந்து தப்பித்துக் கொண்டேன்” என ஓலையைப் பார்த்தபடி துரும்பர் புன்னகைத்தார்.

கதை பயிற்சி செய்பவர்கள் புலரி முதல் அந்தி வரை பாறைகளைப் போல அங்குமிங்கும் அமர்ந்திருப்பார்கள். ஊழ்கப் பயிற்சியின் போது தான் வேட்டையாடிய கரடிகளை எண்ணிச் சிரித்துக் கொண்டிருக்கும் சத்தகனை தீயிலை புகைத்தது போலிருக்கும் செவ்விழிகளால் அவனை அறைவது போல் பார்ப்பார் உதிரர். அவன் இவ்வுலகிலே தன்னைத் தவிர ஒருவரும் இல்லையென்பது போல் சிரித்துக் கொண்டு விழிமூடி அமர்ந்திருப்பான். வியப்பை அடக்க முடியாத உதிரர் ஒருமுறை “ஊழ்கத்தில் அப்படி எதைக் கண்டு நகைக்கிறாய் வெற்றனே” எனக் கேட்டார். “நான் கொன்ற கரடிகளைக் காண்பேன் ஆசிரியரே. உங்களின் உயரமுள்ள கரடிகள். சிலவேளைகளில் நான் கொன்றது உங்களைத் தானோ என எண்ணிக் கொள்வேன்” என சிறுவனைப் போல தலைக்கு மேலே கரங்களைத் தூக்கியபடி சொன்னான். கதை வீரர்கள் சிரிப்பு வாய்க்குள் எழ அவர்கள் கன்னங்கள் கதைக் கோளங்கள் போலாகின. உதிரர் மேலும் சினம் கொண்டு “என்னைக் கொல்லத் தான் நீ இங்கு வந்திருக்கிறாய் மூடனே. போ அந்தக் கதையை எடுத்து வா. என்னுடன் போரிடு” என அழைத்தார். “நல்லது ஆசிரியரே” எனச் சொல்லி வேங்கை மரத்தடியில் சாற்றி வைக்கப்பட்டிருந்த சிறிய கதையொன்றை எடுத்துக் கொண்டு உதிரரின் முன் வந்து அதைத் தோளில் வைத்தபடி அமைதியாக நின்றான். “மந்தி. மந்தி” எனச் சொல்லிக் கொண்டு தன் கதையை எடுத்துக் கொண்டு வெண்மணலால் வட்டமாகப் பரப்பட்ட பயிற்சிக் களத்திற்குள் நுழைந்தார்.

செம்மண்ணின் நடுவே வெண்மணல் பரப்பி அதில் நீர்தெளிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் மூங்கில் தண்டுகளால் இடையளவுக்கு வேலி அமைக்கப்பட்டிருந்தது. உதிரர் கருமையும் பழம்பாசியினதும் நிறங் கொண்ட உலோகக் கதையுடன் நின்றார். சத்தகன் அங்கும் இங்கும் குருளைக் குட்டியென நடந்து உதட்டில் புன்னகை தவழ மணலில் கால்களைப் புதைத்து அதன் குளிரை உடலுணர்ந்து இன்புற்று நடந்து கொண்டிருந்தான்.

அங்கிருந்த கதை வீரர்கள் விழி விரிய வெண்மணல் பரப்பை நோக்கினர். அப்பால் வேல்களை வைத்து எறிந்து பழகிக் கொண்டிருந்த துரும்பர் படையும் இணைந்து கொண்டு “அகூஹ்க்” என ஒலியெழுப்பி சத்தகனை உற்சாகப்படுத்தியது. பெருங் கரடிகள் உயரத்துடன் இருவரும் கதைகளை வைத்தபடி நின்று ஒருவரை ஒருவர் நோக்கினர். உதிரர் கதையை இடக்கையில் நிலம் நோக்கிப் பிடித்திருந்தார். முதல் அறையை உதிரர் ஓங்கி வீசிய போது சத்தகன் விலகிக் கொண்டான். “முதல் விலகல். உங்களுக்கு என் வணக்கங்கள் ஆசிரியரே” எனப் புன்னகைத்தபடி சொன்னான். உதிரர் சினம் கொண்ட கரடியெனக் கதையை மலர்ச்செண்டு போல் சுழற்றி வீசத் தொடங்கினார். அவர் கரங்களில் கதை சுழல்வதை மெய்மறந்து நோக்கி நின்றனர்கள் வீரர்கள். அது ஒரு குழந்தையின் விளையாட்டுக் கொட்டான் என அவர் கைகளில் சுழன்று ஆடியது.

சத்தகன் குன்றிலிருந்து உடைந்து உருளும் பாறைத் துண்டுகளைப் போல் அந்த வட்டத்தில் சுழன்று வளைந்து உருண்டான். “எங்கே ஓடுகிறாய் தேரையே. வா. வந்து எதிர் நில்” எனக் கூவினார் உதிரர். அச்சொல்லால் சற்றுச் சினமேறிய சத்தகன் ஓங்கி அவரின் கதையில் அறைந்தான். தீப்பொறிகள் மின்ன இருவரின் கதைகளும் மோதின. வெண்மணல் வட்டத்தினைச் சுற்றி வீரர்கள் குழுமி நின்று கைகளைத் தட்டிச் சீழக்கையொலி எழுப்பினர்.
உதிரர் ஒரு கரத்திலிருந்து மறுகரத்துக்குக் கதையை வீசி அந்தரத்தில் பாய்ந்து பிடித்து மண்ணில் அறைந்தார். வெண்மணல் பிளந்து பிளந்து நிலவில் தோன்றும் பாறைகளெனப் பள்ளங்களாகின.
அவர் கோபத்தில் கதையை வீச மலர் முகத்துடன் அவரின் கதையை மெல்கணத்தில் சரித்துருள வைக்கும் கோணத்தில் தட்டிநகர்த்தினான் சத்தகன். உதிரர் கரத்திலிருந்து கதையெழுந்து அவன் மார்பை நோக்கி விரைந்த மெய்க்கணத்தில் சத்தகனின் கதை அதை அறைந்து வீழ்த்தியது. கதை மண்ணில் தலையறுந்து கிடந்தது. துரும்பர் படை நெஞ்சில் கைகளால் அடித்துக் கொண்டு “அகூஹ்க்” “அகூஹ்க்” என வெற்றியொலி எழுப்பியது. சத்தகன் தன் கால்களை மடித்து அவரின் பாதங்களில் தன் கதையை வைத்துவிட்டு “நன்கு கற்றிருக்கிறேனா ஆசிரியரே” எனக் கேட்டான். உதிரர் நடுங்கும் செங்கரங்களால் அவனைத் தோள் தொட்டு எழுப்பினார். “என் கதையை உடைத்த முதல் வீரன் நீ தான் சத்தகா. நான் உன் ஆசிரியர் என அறியப்படுவேன். அதுவே எனக்குப் பெருமை” என விழியில் நீர்திரள நாத்தழுதழுக்கக் கூறினார்.

அவன் அவரை அணைத்துக் கொண்டு “என் ஆசிரியர் என் ஆசிரியர்” எனக் கூச்சலிட்டான். துரும்பர் படை “அகூஹ்க்” “அகூஹ்க்” என முழங்கியது.

*

துரும்பர் படை ஓணான்களைப் போல் வளைந்து அம்பெல்லையால் நகர்ந்து கொண்டிருந்தது. துரும்பனின் அருகில் இன்னொரு பெரு ஓணான் என சத்தகன் ஊர்ந்து கொண்டிருப்பதை நோக்கினார் உதிரர். “சிங்கை வீரர்கள் எதிர்கொள்ளப் போகும் கொடிய படை இவர்களாய்த் தானிருக்கும். அச்சமும் இரக்கமும் அற்றவர்கள். போரென்றால் போர் என அறிந்தவர்கள். தயங்கிப் பின்நகரும் கால்களற்றவர்கள்” என தனக்குள் சொல்லிக் கொண்டிருந்தார்.

துரும்பர் தன் தாக்குதல் திட்டத்தை எண்திசைத் தோளனுக்குச் சொல்லிக் கொண்டிருந்த பொழுது முன் வாயிலில் கரடிகளைப் போல நின்ற சிங்கை வீரர்களை நோக்கிக் கொண்டு உலோகக் கால்கள் நிலைகொள்ள முடியாமல் இங்கும் அங்கும் நகர்ந்தபடியிருந்த சத்தகனை நோக்கிக் கொண்டிருந்தார் உதிரர். அவன் விழிகளில் கோபம் அழலென எரிந்து கொண்டிருந்தது. வறண்டு சுருண்ட கேசத்தை சிலுப்பிச் சிலுப்பி எதையோ முணுமுணுத்து உமிழ் நீரைத் துப்பிக் கொண்டிருந்தான்.

அவன் அசைந்து கொண்டிருக்கும் பருத்த கதாயுதம் என எண்ணினார் உதிரர். மிகச்சரியான ஆயுதம் மிகச் சரியான இடத்தில் தன் கணத்தை அடைகையிலேயே அது போரில் பயன் கொள்வது. சத்தகன் தன் கணத்தைக் கண்டுற்றவன் என நடந்து கொண்டிருக்கிறான். அவனுக்கான கணம் அளிக்கபட வேண்டும் என தன் வெண்குழலை சிலுப்பிய பின் உதிரர் “அகூஹ்க்” என அவனைப் பார்த்துக் கூவினார். துரும்பர் படையும் “அகூஹ்க்” “அகூஹ்க்” என எதிரொலித்தது. சத்தகன் தன் ஆசிரியரை நோக்கி களிவெறியுடன் “அகூஹ்க்” என முழங்கினான்.

துரும்பர் தன் படையிடம் திரும்பி திட்டத்தை விளக்கினார். “கொற்றவையின் முன் குருதியிட்டு நாம் எழுந்தது இக்கணத்திற்கெனத் தான் வீரர்களே. மண் தான் நமது கொற்றவை. அவளை நாம் காக்க வேண்டும். தேம்பவாவி ஒரு மலைப்பூதம். அவன் தலையைக் கிள்ளி கொற்றவையின் பாதத்தில் வைப்போம். வீழ்ந்து மண் வணங்குக” என உறுமும் குரலில் ஆணையிட்டார் துரும்பர்.

சத்தகன் தேரில் அமர்ந்திருந்த உதிரரை நோக்கி ஓடி வந்தான். ” வாழ்த்துங்கள் ஆசிரியரே. நான் களம் புகுகிறேன்” என அவரை நோக்கி நெஞ்சு விடைத்து நின்றான். அவனை அருகழைத்து “உன் கணம் இதுதான் மகனே. நீ அழிக்கப் போவது சிம்மங்களின் கர்வத்தை. தமிழ்க்குடியிலும் சிம்மங்கள் இருக்கிறதென அவர்கள் இன்று உணர்வர். உன் கைவேல் அவர்கள் நெஞ்சு பிளக்கும் பொழுது எண்ணிக் கொள். நீ உன் தாய் கொற்றவையென. வெல்க” என அகம் மலர்ந்து அவ்வன வேங்கையை வாழ்த்தினார்.

அவன் தலையை ஒருமுறை மேல்கீழென ஆட்டிய பின் தன் படையில் இணைந்து கொண்டான். அகழியில் சத்தகன் பாய்ந்த போது பெரு முதலைகள் அரங்கி அசைந்தன. நீரில் எழும் யானையைப் போல் நின்ற சத்தகன் முதல் எழுந்த முதலையின் தாடையைப் காட்டுப் பலாவைப் பிளப்பதைப் போல் பிளந்தான். கூர்வேலை ஏந்தியபடி மந்தியெனக் கற்சுவரால் ஏறினான். மேல் நின்று திரும்பி உதிரரை நோக்கினான். கொல்வேழம் தேரெழுந்தது போல் களத்தை ஊடறுத்து வந்து கொண்டிருந்தார். சிங்கை வீரர்களை எலிகளைத் தூக்கி எறிவது போல் அறைந்து கால்தூக்கி அகழிக்குள் எறிந்தபடி முன்னேறினான் சத்தகன். வேலால் தலைகளைக் குத்திப் பிளந்தான். சுடு குருதியை அள்ளி முகத்தில் பூசினான். இடப்பக்க மேற்தளத்தில் துரும்பர் படை வெறியாட்டு ஆடியது. காட்டில் ருத்ரம் எழுமொலி கேட்ட போது உதிரர் மேற்தளம் ஏறிநின்றார். “ருத்ரம் வந்துவிட்டது. உதவிக்குப் படைகள் வந்துவிட்டன. கொன்று குவியுங்கள் பிசாசுகளை. அறைந்து பிளவுங்கள் வாயில்களை” என உதிரர் கர்ச்சித்தார்.

ஒடுங்கலான மேற்தளப் பாதையில் எதிர்பாராமல் நுழைந்து விட்ட காட்டு வெறி கொண்ட துரும்பர் படையைப் பார்த்து சிங்கை வீரர்கள் அலறி ஓடினர். துரும்பர் சிங்கை வீரர்களின் தலைகளை அறைந்தே கீழே விழுத்தினார். சத்தகன் கொல்வேல்களை எறிந்து காணும் ஒருவரையும் உயிருடன் விடுவதில்லை என முழுமுற்றாய் எழுந்தான். தன் வாழ்வில் இத்தனை முழுதாய் இதற்கு முன் தன் உடலை அறிந்திராதவனைப் போல் அப்பொழுது தான் மண்விட்டு எழுந்த ஆதிநரனைப் போல் போர்வெறியாடினான். அலறியோடும் வீரர்களைப் பார்த்து கொற்றவையென நாப்பிரட்டி ஓவெனக் கத்திக் கொண்டு அவர்கள் உடல் மேல் பாய்ந்தான். வெறுங்கரங்களால் நெஞ்சுகளை அறைந்து துடிப்பழித்தான்.

கோட்டையின் உள்ளிருந்து சீறி வந்த அம்பொன்று உதிரரின் வலக் கரத்தைத் தைத்து வெளிவந்தது. அவர் கர்ச்சித்தபடி தரையில் விழுந்தார். அவரது உலோகக் கதை கையிலிருந்து நழுவியது. தடித்த பூதமெனப் பின்வந்த சிங்கை வீரனொருவன் அவரைத் தூக்கி அகழியில் வீசினான்.

சத்தகன் அந்தச் சிங்கை வீரனை நோக்கிப் பாய்ந்து கொல்வேலைத் தாடையால் செலுத்தி தலையால் வெளியே எடுத்து “ஆசிரியரே” எனக் கூவினான். அகழியின் கரையில் நின்ற வீரர்கள் அவரைத் தூக்கித் தேர்த்தட்டில் வைத்தனர். வலக்கரத்தால் குருதி சீற மயக்குற்று தேரில் சரிந்து படுத்தார் உதிரர். தரையில் கிடந்த கதையை எடுத்தபடி சித்தம் கலங்கி மோதும் வேழமென எதிர்ப்பட்ட ஒவ்வொருவன் தலையையும் மோதி அறைந்தான். தலைகள் கூழ்ப்பானையெனச் சிதறின. பாறைகளை வீசிக் கொண்டிருந்த கரும் பூதங்கள் போன்றிருந்த சிங்கை வீரர்கள் அவனது குருதி கொட்டிய பேயுருவைக் கண்டு அஞ்சி ஓடத் தொடங்கினர். ஒவ்வொருவராய் அறைந்து வீழ்த்தி அகூஹ்க் எனக் கத்தினான். துரும்பர் படையின் வெறியொலி அந்தக் கரும்பாறைக் கோட்டையில் எதிரொலிகளென ஒலித்தொலித்தெழுந்து அக்கோட்டை ஒரு பெரும் அகூஹ்க் என எழுந்தது. வாயிலில் நின்ற வீரர்களைக் கதை வீரர்கள் அடித்து வீழ்த்தினர். துரும்பர் படை வாயிலின் சுற்றுச் சங்கிலியில் நின்றவர்களைச் சங்கிலியால் அடித்தே கொன்று எறிந்தனர். மேனியில் குருதிச் சேற்றைப் பூசி தொல்தெய்வங்கள் இறங்கிய படையென காண்பவரைக் கொன்று அக்கணமே குருதி நாவில் தெறிக்க விழிகள் பிரட்டி அலறடித்தனர். சத்தகன் ஓங்கி உதைத்து வாயில் சங்கிலியை அவிழ்த்தான். அகூஹ்க் எனக் கூவியபடி சங்கிலியின் அச்சைச் சுற்றினான். முதலையின் வாய் பிளப்பதைப் போல் சிங்கைக் கோட்டையின் வாய் திறந்து கொண்டது.

சத்தகன் சினம் அடங்காத வெறியாட்டுடன் அந்தக் கோட்டையின் கற்பாறைகளில் கதையை ஓங்கி ஓங்கி அறைந்தான். ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடி முழக்கமென தேம்பவாவியின் இதயத்தில் விழுந்தது. வாட்படை வீரர்களின் புரவிகள் காற்றைப் பிரித்தபடி முன்னேறின. வாயிலில் இருந்த படைவீரர்களை அகற்றி வழியை உண்டாக்கினர் கதைவீரர் படை. துரும்பர் படையின் வெறிக்கூச்சலும் சிங்கை வீரர்களில் அலறலும் கோட்டையின் உள் மடிப்புகளில் கேட்டபடியிருந்தது. சத்தகன் மேற்தளத்தில் நின்றபடி வாயிலை நோக்கி விரைந்து கொண்டிருந்த புலிப்படையை பார்த்து அகூஹ்க் என அறைந்து கூவினான். இளங் கதிரவனின் பிரகாசிக்கும் முகத்துடன் வலக் கரத்தில் உருகம் ஏந்தி புரவியில் ஏறிய வெம்புலி என நோக்குக் கொண்டு நீலழகன் முன்னெழுந்து வர ஒருபுரவிக் கடல் அவன் பின்னே சிலிர்த்துச் சுழன்றெழுந்து உடன் வந்தது. புரவிக்கடலுக்குப் பின்னே எட்டு வேழங்களின் முகபாடங்களும் எட்டுச் சூரியன்கள் போல் மின்னித் தெறிக்க அவன் களம் புகுந்தான்.

TAGS
Share This