24: வேழம் உரைத்தது
குருதி வெண்கோட்டு விரிவேழமே
நீயுரை
எங்கோன் ஆற்றிய செங்களம் மிதித்த உன்கோற் கால்கள் எக்கனம் பொருதின எவ்விசை ஏகின
கொல்வேழ் குறும்பா
நின் திசை நோக்கிய என் துதி நீண்டிலை
ஆயிரம் ஆயிரம் பொன்னெதிர் கதிரே
மாகரம் தூக்கி நின் சூர்முகம் போற்றி வேழ்முகன் மீதினில் ஆணை
போர்வெறி மீதினில் ஆணை படுகூர் மின் உருகம் மீதினில் ஆணை
வான் உம்பர் மண்ணெதிர் நின்றாலும்
தூகரிமாமுகமும் மாகரிநீள்கரமும் என் சேயோன் கழற்கே.
பாணன் சென்னிச்செம்மலர்
விரிந்த அரசமிலை போன்ற முகத்தில் நீள் துதி தூக்கி காட்டில் எழுந்துகொண்டிருந்த மணத்தை நுகர்ந்தான் விரியன். தொலைவில் தன் கூட்டத்தை வாசனையெனப் பின்னிக் கொண்டு அவன் கால்கள் அசைந்தன. வெண்கல மணிகள் உருளும் ஓசையும் மெல்லிய மயக்கும் எழ விரியன் வனக்குடிலின் அருகிருந்த சிறுகாட்டில் வேருடன் வீழும் அரசமரத்தைப் போல் சரிந்து விழுந்தான். அவன் துதிக்கை முகத்தில் தொங்கும் காலனெ எடை கொண்டிருந்தது. துதியைத் தூக்கி நுகரவும் புரட்டவும் முடியாமல் இமைகளை மூடிக் கொண்டிருந்தான். இமையின் சிற்றிடை வெளியால் விழிநீர் கொட்டியது. காட்டு இலையான்கள் அவனை மொய்த்து மொய்த்து செவிகளின் அடியில் ரீங்கரித்தன. அதன் சில்லொலி விரியனை மேலும் துன்புறுத்தியது. செவியைத் தூக்கி ஆட்ட எண்ணினான். இரும்பு இலை என அசைய மறுத்தது. அவன் நெஞ்சு தோய்ந்து இறக்கப் போகிறேன், என் கூட்டம் விட்டுத் தனிக்கப் போகிறேன் என அஞ்சினான். தன் மேனியில் எறும்புகள் ஊர்கின்றன என உணர்ந்து வாலில் எஞ்சியிருந்த சிறுதுடிப்பை அசைத்தான். சித்தம் கலங்கி தன் கூட்டம் ஆடியார்க்கும் குளமென அகம் குலைந்தான்.
வயிற்றில் மருந்துச் சாறு வார்க்கும் போதம் எழுந்தது விரியனுக்கு. மனிதக் குரல்கள் அவன் செவியில் பட்டு நெஞ்சை அரட்டியது. தழைகளின் வாசனை துதியில் நுழைந்து கனவில் பேருருக் கொண்ட நான்கு தூய வெண் இறக்கைகள் முளைக்க இக்கானகத்தை விட்டு மேலே மேலே என பறந்து செல்வதாய் எண்ணினான். அவன் விரிமுகத்தில் புன்னகையென ஒரு நெளிவு படர்ந்தது. எத்தனை நாள் அப்படியே இருந்தான் என அவன் போதம் கொள்ளவில்லை. துதியில் விழிகள் பார்வையற்று விழித்துக் கொள்ள வனத்தின் மலர்மணங்களை நுகர்ந்து கொண்டிருந்தான். இன்னும் உயிருடன் இருக்கிறேன். இன்னும் சித்தம் அழியவில்லை என வியந்து கொண்டு துதியெழுவதை நோக்கிக் கூர்ந்திருந்தான். அவன் வளியில் கிடைத்தது மானுட வியர்வைகளின் கார்மணம். விழிகளை அசைந்து மெல்லிய கீற்று எழுவதை நோக்கியபடி எங்கோ ஆழக் குகையிலிருந்து அதை நோக்கியிருந்தான் விரியன்.
வனக்குடிலின் மருந்தகக் குடிலின் முன்னே வயிற்றில் அடிபட்டிருந்த விரியனுக்குச் சுடர்மீனனும் அவர் தந்தை அலகரும் சிகிச்சையளித்துக் கொண்டிருந்தனர். அவன் போதம் கொண்டு விழி திறந்திருப்பதை சுடர்மீனன் மூச்சு வாங்க ஓடிவந்து நீலழகனின் சொன்னான். நீலழகன் விரியனின் அருகில் வந்து முழந்தாளில் அமர்ந்து அவன் நெடுமுகத்தைக் குழந்தையென வருடினான். அக்கரங்கள் அவனில் படுவதை உணர்ந்த விரியனின் துதிக்கை அவன் வாசத்தை இழுத்து உள்ளே நிறைத்துக் கொண்டது.
விரியன் எழுந்த பின்னர் அவனைச் சுற்றிப்போடப்பட்டிருந்த இரும்பாலான காற்சங்கிலிகளை நோக்கினான். சுடர் மீனன் விரியனின் தந்தங்களை நோக்கியிருந்தான். வளைகூர்ந்த இரண்டு கொல்வாள்களென அவை நீண்டு அமைந்திருந்தன. “அம்சங்கள் கொண்ட வேழம்” என அலகர் நீலழகனுக்குச் சொன்னார். “நம் படைக்கலனுக்குப் பொருத்தமாயிருக்கும். பாகர்களை அழைத்துப் பயிற்சியளிக்கச் சொல்லுங்கள். வேழங்கள் எப்படையிலும் அதன் ஆன்மாவாக அமைபவை. வேழத்தின் பிளிறல் வீரர்களின் அகத்தில் பட்டுமுழங்கும் போதெல்லாம் தான் ஒரு வேழமென்பதை அவர்கள் உணர்வார்கள். நம்மிடமிருக்கும் வேழங்களில் இவனே விரிந்த முகமும் கூர்ந்த தந்தங்களும் போரிளமையும் கொண்டவன்” என்றார் அலகர். “ஓம். விரியன். இவனை விரியன் என்றே அழைக்கவிருக்கிறேன்” என்றான் நீலழகன். “நற்பெயர்” என்றார் அலகர். விரியன் தன் வலவிழியால் நீலழகனை நோக்கித் துதியை நீட்டி அவனை உணர்ந்தான். “அவன் உங்களை அறிந்து கொண்டான் நீலரே. இனி அச்சமில்லை. அவன் உங்களின் மகவென எண்ணியமைவான்” என்றார் பாகர் விளங்கரும்பர்.
வனக்குடிலில் பயிற்சியிலிருக்கும் வீரர்கள் விரியனுக்கு விளாம்பழங்களையும் தழைகளையும் கொணர்ந்து வைப்பார்கள். வாழைப்பழங்களைத் தாராய்க் கட்டி அதில் விரியனும் தாங்களும் உண்ணும் வேகம் என்ன எனப் போட்டிகள் வைப்பார்கள். அசகாளன் விரியனை வெல்லும் ஆவலில் தோலுடன் வாழைப்பழங்களை உண்டு கொண்டிருந்த போது பழங்களை உண்பதை நிறுத்தித் தன் துதியால் அவனை நெட்டித் தள்ளினான் விரியன். அசகாளன் சுருண்டு மண்ணில் விழுந்தெழுந்தான். “குறும்பன்” “குறும்பன்” எனக் குரல்கள் எழுந்து கைகளைத் தட்டிச் சீழ்க்கையடித்தார்கள் சக வீரர்கள். மண்ணில் புரண்டெழுந்த அசகளன் “விரியா. நீ செய்வது முறையல்ல. போட்டியில் என்னை வெல்ல முடியாமல் என்னைத் தள்ளி விட்டாய்” எனச் சொல்லிக் கொண்டு முன்னேறிய அசகளனின் மேல் வாழைத் தாரைப் பிடுங்கிக் கதையெனத் தூக்கி எறிந்தான். “மாகளன். விரியன். மாகுறும்பன்” என சிரிப்பொலிகள் கூடியெழுந்தன.
விளங்கரும்பரின் மேற்பார்வையில் விரியன் பயிற்றுவிக்கப்பட்டான். “இளவேழங்களைப் பயிற்றுவது கடினம். அவை காடு பழகியவை. கூட்டமறிந்தவை. அவற்றின் நினைவுக்குள் கூட்டம் என்றுமிருக்கும்” என விரியனை நோக்கியபடி நீலழகனுக்குச் சொன்னார் விளங்கரும்பர். “எங்களை அவனது கூட்டமென அவன் உணர்ந்து கொண்டால் அவனும் நம்முடையவனே” எனச் சொன்னான் நீலழகன். “அவன் பயிற்சியில் முன்னேறி வருகிறான். அவனுக்குள் அலைபடும் கனவொன்று அவனை உறுத்திக் கொண்டிருக்கிறது. அவன் பயில்வான். ஆனால் களம்புகும் போது என்ன செய்வான் என உரைக்க முடியாது. அஞ்சி ஓடக் கூடும்” என்று அச்சம் கலந்த குரலில் சொன்னார் விளங்கரும்பர்.
வனக்குடில் வீரர்களின் விளையாட்டுப் பாவையென விரியன் ஆன போது இருபருவங்கள் பெயர்ந்திருந்தன. புலரியில் அவனின் தோலில் தூங்கிய நீள்கயிற்று முடிச்சுகளில் பாதங்களை வைத்து ஏறினான் நீலழகன். தன் கரங்களால் விரியனின் தலை மயிர்களைக் கோதினான் நீலன். தன் துதியை மேலே தூக்கித் தன் கூச்சத்தைச் சொன்னான் விரியன். துதிக்கையின் மென்விழிகளில் தன் வலக்கரத்தின் உள்ளங்கையைக் குவித்து வைத்தான் நீலழகன். அக்கரங்களின் வாசனையை உள்ளிழுத்து மெல்ல அசைத்து அவனை உணர்ந்து கொண்டு தன் பயிற்சியில் கற்ற ஒருகால் உயர்த்தலில் எழுந்தான். “நன்கு கற்றிருக்கிறாய் இளவலே. நன்று. நன்று” எனச் சொல்லிச் சிரித்தபடி விரியனின் செவிகளின் பின்புறம் தன் கால்களைப் போட்டுக் கொண்டான். “நடையொன்று போவோமா” என விளங்கரும்பரைக் கேட்டான் நீலழகன். “போகலாம். அவன் தயார்” என்றார்.
வனக்குடிலுக்கு வந்தது முதல் அருகிருக்கும் தாமரைக் குளத்திற்கு நடைபோய் பழகியிருந்தான் விரியன். விரியனின் பெருங்கால்கள் மண்ணில் ஊன்றி நடப்பதை ஒவ்வொரு உதையென எண்ணி அவன் மேல் அமர்ந்திருந்தான் நீலழகன். தேக்குகளும் வீரைகளும் பாலைகளும் நிறைந்த தாமரைக் குளத்தின் காட்டு வீதியால் போவது விரியனுக்குப் பிடித்தமானது. தன் துதிக்கரத்தால் வீரைகளையும் சிறு செடிகளையும் தொட்டுத் தொட்டுப் பார்த்தபடி விரியன் நடை போய்க் கொண்டிருந்தான். புலரியின் பறவைகள் எழுந்து வனம் இசைப்பரப்பனெ ஆகியது. சிறு மான்கூட்டமொன்று விரியனின் பின்னே தயங்கி பின் பாய்ந்து ஓடியது. விரியன் உடலை அசைத்துக் கொண்டான். “அவை மான்கள் விரியா. நாம் எதிர்கொள்ள வேண்டியவை சிம்மங்களையும் கரடிகளையும். உன் பெருங்கால்களில் நசுங்க இருப்பவை அவை தான். உன் தந்த வாள்களில் குருதியே மலர்மாலை. வேழங்கள் புகும் களங்களில் அவையே வீரர்களின் ஆன்மாக்களின் ஒலியென அலகர் சொன்னார். அது மெய்தான் என உன் பிளிறல் கேட்கும் ஒவ்வொரு புலரியிலும் அந்தியிலும் உணர்கிறேன். உன் குரல் பெரும் போர்க்கலமென எழக்கூடியது இளவலே” எனச் சொல்லிக் கொண்டிருந்த நீலழகனின் சொற்களை உடலால் உணர்ந்தவனென மெல்லப் பிளிறி அமைந்து நடந்தான் விரியன். தாழ்ந்திருந்த பாலை மரக் கொப்பினை மடித்து உடைத்த நீலழகன். பால்முற்றி மஞ்சள் முத்துகளெனத் திரண்டிருந்த பாலைப்பழங்களை உண்டு கொண்டிருந்தான். பால் வாசத்திற்குத் தன் துதியை அலைத்து மேல் நோக்கினான் விரியன். “இளவலே, நீ குறும்பன் எனப் படைவீரர்கள் சொல்லக் கேட்பதுண்டு. அது மெய்தான்” எனச் சொல்லிச் சிரித்துக் கொண்டு இன்னொரு கிளையை ஒடித்து அவனிடம் நீட்டினான். “எட்டினாலே அவனால் பறிக்கக் கூடியவை தான் அக்கிளைகள். உங்களின் கரங்களால் கொடுக்க வேண்டுமென உங்களைப் பணிய வைக்கிறான். வேழங்கள் மானுடரைப் பணிய வைப்பதில் உவகையடைகின்றன நீலரே” என விளங்கரும்பர் தன் கறைப்பற்கள் விரியச் சிரித்தார். “பெண்களும் வேழங்கள் தான் இல்லையா கரும்பரே” என நகைத்துச் சிதறினான் நீலழகன். “நீங்கள் எந்த வேழத்தைச் சொல்கிறீர்கள் என நான் அறியேன் ஐயனே. நான் எளிய பாகன். ஆனால் ஒன்றை அறிவேன். மத்தகம் சுழற்றித் தந்தம் ஏற்றிக் கொல்லும் இவ்வேழம் ஒரு குழந்தை. ஆனால் கொலையும் புரிவது. கொலை புரியும் குழந்தை. பெண்ணும் அப்படியென்றே தோன்றுகிறது நீலரே” எனச் சொன்னார் முதுபாகர் விளங்கரும்பர். “நீங்கள் சொன்னால் மெய்யாய்த் தானிருக்கும் கரும்பரே. மத்தகங்களுக்குப் பதில் முலைகள் கொண்ட வேழங்கள்” என மெல்நாணத்துடன் விழிமயக்கில் எதையோ நினைந்துற்றவன் போலச் சிரித்துக் கொண்டான் நீலழகன். “ஓம் நீலரே, இரண்டும் தான் வீரர்கள் குத்திச் சாக விரும்பும் கூர்முனைகள்” எனச் சொல்லி நகைகொண்டு தலைத்துண்டை அவிழ்த்துத் தோளில் போட்டபடி நடந்தார் முதுபாகர்.
“உங்கள் கனாக்களில் வேழங்கள் வருவதுண்டா ஐயனே” எனக் கேட்டார் விளங்கரும்பர். “உண்டு கரும்பரே. ஆயிரமாயிரம் கருவேழங்கள் நிறந்த பெருவெளியில் ஒளிரும் ஒரு வெண்யானை. வானம் கார் திரண்டு கருவேழங்களின் திரையென ஆகி மேகங்கள் மோதியபடியிருந்தன. அவற்றின் நீள் தந்தங்களென மின்னல்கள் கூர்ந்து விரிந்து சடைத்தன. வெண் மத்தகமும் பளிங்குத் தந்தங்களும் வெண் மயிர்களும் கொண்ட யானை மேலே அந்தரத்தில் மிதந்து கொண்டிருக்கும் வெண்குடை சுழன்றது. வெண் முத்துகள் கோர்க்கப்பட்டு இழையிழையாகத் துன்னப்பட்டிருந்தது. குடையிலிருந்து வெண்ணொளி எழுந்து நிலாவட்டம் போல் வெண்வேழத்தைச் சூழ்ந்தொளிர்ந்தது. மாகரும் வேழங்கள் தங்கள் தந்தங்களை உரசியபடி அதைச் சூழ நின்றபடி துதிக்கைகளைத் தூக்கி மதங்கொண்டு பிளிறி அவ்வெளியே பிளிறல் பெருக்கென ஆகியது.
மகத்தான தனிமையில் ஒரு மகத்தான வெண்கற்குழைச் சிற்பமெனெ மண்ணில் ஊன்றி நின்றது வெண்யானை. மயிர்கள் காற்றில் ஆடும் வேர்கள் எனத் தோன்றின. விழி மட்டும் உயிருருக் கொண்டு திறந்திருந்தன.
அசைவற்றுத் தன் வெள்ளுடலில் ஊழ்கம் கொண்டது போல் நிலைத்து விழிதிறந்திருந்தது. அதன் உடலில் கருமையென்றெழுந்த விழிமணிகளின் நோக்கில் ஒரு வெண்வெறுமை படர்ந்திருப்பதை சில போது கண்டிருக்கிறேன். அதைச் சூழ நின்ற வேழங்களின் துதிக்காற்று புயலென எழுந்தாலும் அதன் துதிநுனிகள் மண்திரும்பி மேல் எழுவதில்லை. அதன் விழிகளை நோக்குந்தோறும் விழித்துக் கொள்வேன். அவற்றில் துலங்கும் ஒன்றுமில்லாமை என்னை அச்சம் கொள்ள வைக்கிறது கரும்பரே” எனச் சொன்னான் நீலழகன்.
“அது ஐராவதம் நீலரே. இந்திரனின் யானை. யானைகளின் அரசன். திசைகளைக் காக்கும் காவல் தெய்வங்கள் ஒவ்வொன்றும் யானைகளிலேயே எழுந்தருளுவதாகப் புராணங்கள் சொல்கின்றன. இந்திரனின் மணவிழா வாகனமாகவும் ஐராவதம் இருந்ததாகச் சொல்லப்படுவதுண்டு. தேவர்களின் அரசனைச் சுமக்கும் வெண்யானையின் விழிகளில் இருப்பது ஒன்றுமில்லாமை என்பது நாம் உணரக் கூடியதே நீலரே. அது வேழங்களின் பேரரசன். பேரரசர்களின் விழிகளில் துலங்கும் ஒன்றுமில்லாமை அது. அவ்விழிகள் ஒரு ஆடி நீலரே” என்றார் முதுபாகர். நீலழகனின் உளத்தில் சொற்கள் சோற்று இலையான்களென எழுந்தெழுந்து அமைந்தன. பின் எதுவும் கூடாமல் மெளனத்தில் ஆழ்ந்தான். “ஒரு வேளை மணவிழவில் தோன்றும் ஐராவதத்தின் விழிகளில் படர்வது பெண்களின் விழிகளில் மின்னும் ஒன்றுமில்லாமையோ. அறியமுடியவில்லை ஐயனே” எனச் சிரித்து அவனை மண்ணிறக்க முயன்றார் விளங்கரும்பர். அவன் இறக்கைகள் அணிந்து கொண்டு மிதக்கும் வேழமென விரியனில் எழுந்து கொண்டிருந்தான்.
விரியன் செவிகளால் தட்டி நீலழகனின் கால்களை உலுக்கிய போது தொலைவு மீண்டவன் திரும்பினான். முன்னே செந்தாமரைகள் முகம் விரித்து ஆயிரமாய் மலர்ந்திருக்கும் மலர்க்குளம். வானில் மேகங்கள் திரண்டு சூரியனை மறைத்துக் கொண்டு குளத்தை நோக்கிப் பரவிக் கொண்டிருந்தன. “அம்மேகங்கள் மழை கொண்டு வருகின்றன நீலரே. விரியனைக் குளிப்பாட்ட அவை உகந்த நீராட்டு சாதனம்” எனச் சிரித்துக் கொண்டே தேங்காய்ப் பொச்சால் துன்னப்பட்ட கழுவுநார்களை எடுத்து நீலனிடம் நீட்டினார்.
குளத்தில் மென்சரிவாக உள்ளிறங்கும் சேற்றுப் பரப்பில் கால்களை நுழைத்துக் குளிரை அளைந்தான் விரியன். வானிலிருந்த மழையின் ஈரம் அவன் துதியையும் உடலையும் அடைந்திருந்தது. சுற்றிலும் ஈரம் கசிந்த காற்றால் அகம் கலைந்து குழந்தையெனச் சேற்றில் மிதித்துத் துதி நீட்டிப் பிளிறினான். நீலனுக்குள்ளிருந்து புன்னகை தாமரையிதழ்களென அவிழ அவன் மலர்ந்தான். தன் துதியை நீட்டித் தண்டுகளுடன் தாமரைகளைக் கொய்து நீலழகனிடம் நீட்டினான் விரியன். “கொல்வேழம் ஒரு தோழனும் கூட நீலரே. வேழம் தோளனென ஆனவருக்குக் காதல் மலர்ச்செண்டு கைசேரும். வாங்கிக் கொள்ளுங்கள். காதலில் எழும் உளவண்டுகளுக்கு வேழன் மலரளிப்பவன். மகாகுறும்பன்” எனச் சொல்லி நகைத்தபடி குளத்தில் இறங்கினார் கருவிளம்பர்.
நீர் ஒரு பேராடியெனத் துலங்கிக் கொண்டிருந்தது. விரியன் தன்னை அதில் நோக்கினான். மேகங்களின் பிரதிபலிப்பு நீரை மேலும் மேலும் சாம்பலில் நெளியலையாகும் துணிவிரிவென ஆக்கியது. அதன் மேல் நாரைகள் கூட்டமொன்று கூரலகு வடிவில் பறந்து சென்றது. நீலழகன் அப்பறவைகளின் குரலொலியையும் வடிவையும் நோக்கிக் கொண்டிருந்தான். விரியன் தன்னுள் மெல்ல அமைந்து நீர்தெளிந்த குளமென அகம் விரிந்தான்.
தன் மேலிருப்பவன் தான் என அறிந்தான். அவனுள் அலைபடும் வனத்தைத் தன் அகத்துதியால் தொட்டெடுத்தான். அவன் தன்னில் ஓர் அங்கமென ஒருங்கியமைவதை உடலுணர்ந்தான். தலையில் முளைத்த இறக்கை என நீலனை எண்ணியவன் துதியால் நீரையள்ளிக் குளத்தில் கொப்பளித்தான். துமிகளில் சிலகணங்கள் வானவில்லொன்று மின்னி மறைந்தது. அதன் வண்ணங்களை நோக்கிய நீலழகன் தான் அமர்ந்திருப்பது தன்னில் என அகமுணர்ந்தான். விரியனின் துதிநுனித்துடிப்பைத் தன் உளம் என எண்ணினான். கணம் தோறும் ஆயிரம் புலன்நுனிகளால் வெளியை அளைந்து கொண்டிருக்கும் தன் நெஞ்சு உள்ளில் நீண்ட துதிக்கரம் என எண்ணினான். விரியனின் முதல் தொடுகையில் அவன் உளம் அறிந்தது அவனைத் தான். வனம் விரியனின் அன்னை. நான் அவன் தோழன் என உளம் எழுந்த சொற்கள் விரிந்து கயிற்றேணிகளென விண் நீண்டது. வேழம் என்பது கொலை புரியும் குழந்தை என்ற சொல் அவனுள் பட்டுப்பட்டு மின்னியது. மழை வலுத்து நடந்து வரும் ஓசை வனத்தில் எழ தன் வெற்று மார்பில் காற்றின் தீரம் எழ குழல் கலைந்து புரவியென்றாகி நீலன் உந்திப் பாய்ந்தான் ஆடிக்குளத்தில். விரியன் தந்தை மேல் தாவும் குட்டியென அவனைத் தொடர்ந்து உள் நுழைந்தான்.
கறைப்பற்கள் விரியச் சிரித்தபடி வேழனினதும் நீலனினதும் களியைப் பார்த்துக்கொண்டே “களிகொள்க இளவல்களே. குழந்தையென ஆகுபவர்கள் கொல்லும் உயிர்கள் அக்குழந்தையில் எழும் வியப்பில் மடிபவை. அவை வாழ்வின் பொருட்டு அழிக்கப்படுபவை. அச்சினம் அதன் மெய்யுரு. ஆகவே அவை அறிதெலன ஆகுபவை. களி கொள்க இளவல்களே” என இருகரங்களையும் சிறகென விரித்துத் துள்ளிக் குதித்து மழையை நோக்கி நோக்கி மயிலென நெளிந்தார் முதுபாகர் விளங்கரும்பர்.
*
காலில் கட்டியிருந்த சிறு சீழ்த்துண்டை வெட்டியெடுத்த பின் மருந்து நனைத்த துணியால் விரியனின் பாதத்தைக் கட்டினான் சுடர் மீனன். விரியன் மெல்லிய அசைவுடன் வனவிளிம்பில் நின்றுகொண்டு போர்க்களத்தை நோக்கியிருந்தான். போர்க்களத்தில் வில்வீரர்கள் திரும்பிய போது அவன் அருகிருந்த கிளையொன்றை ஒடித்து அதன் இலைகளை நுகர்ந்து பார்த்து வீசினான். நீண்ட நடையால் சலித்திருந்தான். தேம்பவாவியின் கோட்டை மேலிருந்து சிங்கை வீரர்கள் கூவுவதைப் பார்த்த விரியன் தன்னை விளையாட அழைக்கிறார்கள் என நினைத்துத் துதியை மெல்ல ஆட்டியபடி கழுத்து மணிகளைக் குலுக்கிகொண்டு நின்றான். அவனது மத்தகத்தில் பொருந்திய தங்க முகபாடத்தினால் அவன் தனது சகாக்களை நோக்கினான். அவர்கள் ஒருவரையொருவர் விழிகளால் நோக்கியபடி களத்தில் வீரர்களின் ஓட்டங்களை நோக்கினர்.
துரும்பர் படை அகூஹ்க் என எழுந்த போது விளங்கரும்பர் தன் அங்குசத்துடன் விரியனின் அருகில் வந்து நின்றார். “விரியா, இன்று களம் உன் கால்களால் மிதிபட வேண்டும். உன் பிளிறலால் சிங்கைப் படைகள் அதிர வேண்டும். உன் சினத்தை இன்று நீ மதகுடைக்க வேண்டும்” எனச் சொல்லிக்கொண்டு அவன் துதியை வருடினார். அவன் இலையான் விரட்டுவது போல் தலையை ஆட்டிக் கொண்டிருந்தான்.
அவன் துதிக்கைப் புலனின் முதல் விழி நீலனின் மணத்தை அறிந்தது. வனம் அறிய முன்னர் விரியனின் துதி அறிந்தது. அவன் இங்கு எங்கோ தான் ஒளிந்து கொண்டு தன்னுடன் விளையாடுகிறான் என எண்ணிக் கொண்டான். பின் ஒவ்வொரு விழியாய் மலர்ந்து அவன் நெருங்குவதை உணர்ந்து துதிக்கரம் அவன் திசையில் நீண்டது. ருத்ரம் முழங்கியொலிக்க வீரர்களின் கூச்சல் அணைகடந்தது. அந்தக் களிக் கூச்சலின் வெளியில் எழுந்த புழுதிக் காற்றில் ஒவ்வொரு புலனும் நீலனை அறிய உடல் மிதந்து மிதந்து தான் பேருரு ஆகிறேன் என விரியன் எண்ணிக் கொண்டான். அவன் புரவி நெருங்க நெருங்க விரியனில் பேருருக் கொண்ட இறக்கைகள் முளைத்தன. அவன் பறந்து சென்று நீலனைத் தூக்கி விடுபவன் போல அலைந்து கொண்டே பிளிறினான். வேழக் கூட்டம் அப்பிளிறலை எதிரலையாக்கியது. பறைகளும் முழவுகளும் பின்னியெழுந்தன. ருத்ரத்தின் குவி முனையை உதட்டில் பொருத்தி முழங்கியபடி ஆடற் சித்தருடன் கலைந்த வியர்வைக் குழல் புரள நீலழகன் களம் வந்தான். நீலழகனை விழி தொட்ட விரியன் இருகால்களில் எழுந்து அவனை வணங்கினான். நீலழகன் புரவியை விரியனின் அருகே சாய்த்து “இளவலே, இன்று சிம்மங்களை வேட்டையாடும் நாள். நீ என் கனவில் மின்னும் வெண்யானை என ஒளிரும் நாளிது என மெய்யுற்றேன். நாம் இணைந்து களம் காண்போம். உன் பிளிறல் எங்கள் ஆன்மாவைத் திறக்கும் ஒலியென எழுக” எனச் சொல்லி அவன் துதியை வருடித் தலையை ஒற்றினான். வேழ வீரர்கள் ஒருங்கினர். எண்திசைத் தோளன் நிலமையை சுருக்கிச் சொல்லிக் களத்தைக் காட்டினான். நீலழகனுடன் களம் வந்த ஐநூறு வீரர்களும் பெருமழைக் காட்டில் கரைமேவும் ஆறென உடலெழுந்து களம் நுழைந்தனர். புரவிகளின் குதியோசை மெல்ல மெல்ல இடிமுழக்கமென ஆகியது. சாகும்பர் தனது படையை இடப்புறமாய் அனுப்பினார். அல்லியன் குரலெழுப்பியபடி “அவர் வந்துவிட்டார் இளவலே, அவர் வந்து விட்டார், போர் இனி நமதே” எனத் துரு வீரனை நோக்கிக் கூவினான். துருவீரன் தன் புரவியை உந்தி அல்லியனைக் கடந்து முன் செல்ல விழைந்தான். அல்லியன் அவன் புரவி முன் செல்வதை நோக்கிய பின் சுகவாசனை நோக்கி “அஞ்ச வேண்டியதில்லை. அவன் மரநிழலின் பாதுகாப்பிலிருந்து தப்பித் தாய்க்கோழியின் இறக்கைகளுக்குள் ஒளிந்து கொள்ள ஓடுகிறான்” எனச் சொல்லி நகைத்தபடி அம்புகளை நாண் ஒலி சென்று மீளும் வேகத்தில் செலுத்தத் தொடங்கினான்.
வேழவீரர்கள் களத்தில் விரியனை இறக்கினார்கள். புரவிகள் கடலெனச் சூழ வாயிலை நோக்கிச் சென்று
கொண்டிருந்த நீலழகனின் புரவியை நோக்கிய விரியன் அவைகளை மேவி அவனைத் தொட்டுவிடும் வேகத்தில் ஓடத்தொடங்கினான். அவன் முகபாடம் பொன்சிதறிய கிரீடமென மினுங்கித் ததும்பியது. விளங்கரும்பர் விரியனின் களஒலியைக் காட்டி “அவன் ஒரு பேரரசன்” என ஏழிசைக் கூத்தருக்குச் சொன்னான். அக் கணத்தில் துதியுயர்த்தி அவன் பிளிறிய ஒலியில் சிங்கைக் கோட்டை திசைகள் நெளிய ஆயிரமாயிரம் ஒளிச்சிதறல்களென உடைந்து கொண்டிருந்தது.