26: ஒற்று உரைத்தது

26: ஒற்று உரைத்தது

நெடுத்து வளர்ந்த தேக்க மரங்களுக்குள்ளால் அமைந்த ஒற்றையடிக் காட்டுப் பாதையில் வேறுகாடார் இடாவத்த நகரின் எல்லையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். வண்டியோட்டிகள் சொன்ன தகவல்களின் படி இடாவத்த நகரின் மையத்தில் வழமைக்கு அதிகமாக நூற்றுக்கணக்கில் சிங்கை நகர் வீரர்கள் அலைந்தபடி
இருந்திருக்கிறார்கள். புரவிகளும் இருள் வீரர்களும் நகரின் விளிம்புகளில் உள்ள குடில்களில் தென்பட்டிருக்கிறார்கள். நகரில் தேம்பவாவி நுழைந்திருப்பதாக உறுதியற்ற தகவல் ஒன்றை முதுவண்டியோட்டியொருவர் கூறினார். வேறுகாடார் பாதி நரை கூடிய வெண்ணிறமும் கருமையும் கலந்த குழலை விரித்து வண்டியோட்டி வேடத்தில் கையிலொரு விரட்டுக் குச்சியுடன் நடந்து நகரில் மண்ணால் குழைத்து மூங்கில் இலைகளால் வேயப்பட்ட சத்திரத்தின் திண்ணையில் அமர்ந்து பாக்கை எடுத்து வாயில் போட்டுக் கொண்டு அங்கிருந்த தமிழ்க்குடி வண்டிலோட்டிகளுடன் உரையாடிக் கொண்டிருந்தார். சிங்கைக் குடியின் வணிகர்கள் சிலர் தமது பொதிகளை தீவின் கிழக்கு முனைக்குக் கொண்டு செல்லும் விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். நீண்ட திண்ணைகளிலும் தரையிலும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கதைத்துப் பேசியபடி கலவையான பறவைகளின் குரல் ஒலிகளென அவை குமைந்திருந்தன.

அன்றைய இரவு பேயாட்டு நிகழ்வொன்று அருகிருந்த காளி தேவி ஆலயத்தில் இடம்பெற இருப்பதாகவும் அங்கு இரவு உணவு கிடைக்கும் என்ற செய்தியும் சத்திரத் திண்ணையில் பரவியது. வண்டியோட்டிகள் எழுந்து ஆலயத்தைச் சுற்றியிருந்த தென்னங் கீற்றுகளாலான ஓலையிழைவுகளின் நேர்த்தியை நோக்கி அவை நட்சத்திரம் கோளம் நூறிலை மலர் எனப் பல்வேறு வடிவங்களில் பின்னப்பட்டிருப்பதை நோக்கியும் வேடிக்கைகளைப் பகிர்ந்து கொண்டும் பொதுமக்களுடன் கலந்து கொண்டனர். வேறுகாடார் நீரில் மீனனெக் குடிகளுக்குள் கரைந்தார்.

ஆலயத்தின் பூசாரியின் குடில் நெய்ப்பந்த வெளிச்சத்தால் பசுங் குருத்தென அவிழ்ந்திருந்தது. உக்கிரரூபத்தில் அமைந்த காளியின் ஆலயம். செம்மை நிறம் ஒன்றே எங்கும் பரவியிருந்தது. அங்கிருந்த தீப்பந்தங்களும் செந்தீயெனச் சுழல்வதாகவே தோன்றியது. வேறுகாடார் பலமுறை இந்த நகருக்கு வந்திருக்கிறார். ஒவ்வொரு மனித முகங்களும் அவருக்கு ஏதோவொரு வகையில் அறிமுகமானவை. அங்கிருப்பவர்கள் யாரேனும் சிறு அசைவில் தன்னை அறிந்து கொள்ளக் கூடுமென ஒவ்வொரு முறையும் நுட்பமான வேறுபாடுகள் கொண்ட வேடங்களை அணிவார். சிங்கைக் குடிகளின் அன்பில் அவர் மனம் நெகிழ்ந்து அங்கேயே சில நாட்கள் தங்குவதுமுண்டு. வசுதா என்ற சிங்கை மொழி பேசும் பெண்ணுடன் அவருக்கு அணுக்க நட்பொன்றும் இருந்தது. பிற எதுவுமற்ற வெளியில் அவர்கள் இருவரும் மட்டுமேயான உலகு ஒன்றும் இருந்தது.

வசுதா தீங்குரலில் அவரை யட்சன் என விளிப்பாள். அது அவளே அவருக்குச் சூட்டிய பெயர். வசுதா ஆலயப் பூசாரி துவலபாகுவின் மகள். நீர்க்கரையொன்றில் ஆடை துவைத்துக் கொண்டிருந்தவளை பெருமுதலையொன்றிடமிருந்து காத்தார் வேறுகாடார். அன்று அவரை “இக்கரையில் வசிக்கும் யட்சரா நீங்கள்” என வதனம் பொலிந்த நகையுடன் கேட்டாள் வசுதா. அவள் நீள் குழல் ஒரு நதியெனத் தலையிலிருந்து கால்கள் வரை விரிந்திருக்கும். அதில் கருமை வெளிச்சமெனக் குடிகொண்டிருக்கும். காட்டின் பலவண்ண மலர்களை அவள் சூடுவது அவளின் வனப்பை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு தெய்வம் என எண்ணச் செய்யும். அவள் மேனி பாலில் மெழுகப்பட்ட வெண்ணிறக் கடல். தழைத்துக் குலுங்கும் முலைகள் பச்சை இளநீர்களின் தண்மையும் விரிவும் கொண்டவை. நீண்ட கழுத்து கொக்குப் போல் மிருதுவானவை.
வெண்ணையால் வார்க்கப்பட்ட சிலை மடிப்பென இடை கொண்டிருப்பாள். அவள் பாதங்களையும் விரல்களையும் நோக்கியபடியே வேறுகாடார் இம்மையிலிருந்து உம்பருலகு சென்று மீள்வார். அவரின் யட்ச பாவம் முற்றியது அவள் மேனியெழுந்த வனப்பின் எழிற்குலைவில் என எண்ணுவார். அவள் அவரது மார்பளவு உயரம் கொண்டிருந்தாள். அவரை அருகே நிற்கவைத்து “என்னை மணந்து கொள்கிறீரா யட்சரே. இவ்வுயிர் நீங்கள் எனக்கு அளித்தது” எனக் கிளியின் கெஞ்சு குரலில் அளைவாள். வாள் முனைகள் எழும் களங்களில் எல்லாம் இத்தேவி எழுந்தால் அவை மண்ணில் மண்ணெனச் சரிந்து அவள் பாதம் தொடும் என எண்ணிக் கொள்வார்.

வசுதா ஒரு வெண்நாகமென அவருக்குள் வாழத் தொடங்கினாள். ஒருநாள் இரவு இருவரும் அவரின் குழலின் நரையொன்றைத் தொட்டு அதைப் பிடுங்கி நான் இதை குறிசொல் தட்டில் வைக்கப் போகிறேன் எனச் சொல்லி ஓடினாள். அப்போது அவள் தந்தை துவாலபாகு அங்கிருக்கவில்லை. வேறுகாடர் உடல் உலுக்கப் பெற்றவராய் அவள் பின்னே ஓடிச் சென்று “நிறுத்து வசுதா. வேண்டாம்” எனக் கெஞ்சினார். அவள் வெண்ணிற நீள்துணி சுற்றி மூச்சுச் சீராக எழுந்தமைய காளியின் முன்னிருந்த சோழிகளினாலும் காட்டு முதுமரங்களிலிருந்து குறிகளாக்கி எடுக்கப்பட்ட வழிகாட்டும் சங்கேதங்களாலும் நிறைக்கப்பட்டிருந்த குறிசொல் தட்டில் நரையை வைத்தாள். ஒற்றை அகலிலிருந்து நெய் ஊறி ஊறித் தட்டில் விழுந்தது. அது நெய்ப்பெருக்கென ஒவ்வொரு குறிச்சொல்லிலும் உருகி மரக்குறிகள் மிதக்கத் தொடங்கின. வசுதா மின்பட்டவள் போல் துள்ளி அன்னையின் முன் விழுந்தாள். உடல் விம்மிக் கைகள் ஊன்றாமல் காற்றில் எழும் சுடரென எழுந்தாள். விழிகள் தீப்பட்டவையெனச் சுருங்கிச் சுருங்கிக் குறிசொல் தட்டை நோக்கின. பின் மெளனமான குரலில் அவள் உதடுகள் சொற்களை முணுமுணுத்தன. அவர் அவளின் பின் இருகைகளும் தளர்ந்து கொடியெனத் தூங்க நின்று கொண்டிருந்தார். அவரின் கருநிழல் வசுதாவின் கூந்தலில் படர்ந்தது.

வசுதா அரவம் தீண்டி நஞ்சு உடலில் மெல்ல ஏறி மயக்கு எழுந்து உலகு மாய்வதென உடல் தளர்ந்து உயிரின் ஒவ்வொரு கொழுவையும் பற்றிச் சொற்களை உரக்கச் சொல்லத் தொடங்கினாள். “நீ நாகன். நாகனின் விழிகள் அறியாத நச்சின் உருவெனத் தம்மை ஆக்கிக் கொண்டவை. அவை தீண்டாமல் பாலில் கலக்கப்பட விடத்துளியெனச் சிம்மக் குடியில் விழுந்து விடத் துடிப்பவை. நீ ஆழக் கசந்து திரண்ட நஞ்சு. உன்னை அவர்கள் அறிய முடியாது. நீ அவர்களின் நஞ்சிலிருந்தும் உன்னை நஞ்சாக்கிக் கொள்பவன். உன்னை அவர்களால் வேறுபிரித்து அறியமுடியாதபடி ஆக்குவது அந்த ஆழ்நஞ்சின் ஒற்றுமை. நீ உன்னை அன்றி உன் நிழலையும் நம்பமுடியாதவன். நீ அறியாத சில கணங்களில் உன்னையும் நீ நம்புவதில்லை. உன் வேடங்களால் அவற்றை நீ மறைக்கிறாய். அதில் நீ வெல்லவும் கூடும். ஆனால் அறிக நாகனே. மண்ணில் உயிரென உதிக்கும் ஒவ்வொன்றும் எதானால் விழைவு கொள்கின்றதோ அது உனக்கு விழைவெனக் கூடாது. அதுவே உன் சாபம். உன் நஞ்சை ஒவ்வொரு உடலசைவிலும் இறுக்கும் கயிறென உணர்வாய். அதுவே உன் தளை. நீ விழைய முடியாதவற்றை விழைவாய். அதன் பொருட்டே உயிர் தரிப்பாய். நீ நாகங்களின் இருளாழங்களால் ஆளப்படுபவன். உனக்கு இருளே வாழும் மனையென ஆகும். எக்கணமும் நீ நேசிக்கும் ஒருவரையும் அவ்விருள் காக்க ஒண்ணாது. அவர்களை நீ சாபமென விலகுவதையே நீ திரும்பத் திரும்பச் செய்வாய். அதுவே உன் தண்டனை. விலகும் தோறும் அவர்கள் உன்னில் ஆழ நுழைகிறார்கள். அவர்கள் நுழைந்து நுழைந்து உன் இருள் நீங்கமுடியாத பள்ளமென ஆவதையும் அதில் அவர்கள் மூழ்கிப் பரிதவித்து இறப்பதையும் நோக்கியிருக்க நீ வகைப்பட்டவன். உன்னால் ஆற்றப்படும் எதுவும் உன் நஞ்சால் விழைவது என நீ அறிவாய். அதுவே உனக்கு அறிதல். அறிந்த நெறிகளின் கூடுகள் தூங்கும் முதுமரத்தின் அடியில் இருசுள்ளிகள் சொல்லாக் கணத்தில் பற்றிய கொடுதீ உன் இருப்பு. நீ அழிவின் பொருட்டு அழிவை அறிவாய். எத்துயரும் எழாத உன் அகம் உனக்கு முன்னிருந்த எல்லா நாகங்களிற்குள்ளும் நெளிந்த ஒன்று. எரியும் உயிர்களில் நீ உன் துயிலை அடைகிறாய். நீ வலிய காலம் வாழ்வாய். நோவறியா வாழ்வின் பிடிநுனியில் அத்தனையும் உருப்பெற்று ஒவ்வொரு அணுவாய் மடிவாய்” எனச் சொல்லிக் கொண்டிருந்த வசுதாவின் முன் முழந்தாளில் நின்றுகொண்டு குலுங்கிக் குலுங்கி அழத் தொடங்கினார் வேறுகாடார். அவள் கரங்களைப் பின்னிழுத்து கூந்தலால் வாயை இறுக்கி கொக்கின் கழுத்தைப் பிடிப்பதைப் போல் அவள் கழுத்தை ஒருகணம் வருடிப் பற்றி குறுவாளால் வெட்டிக் கீறினார். அவள் எந்த எதிர்ப்பையும் உடலால் எழுப்பவில்லை. காதலனின் நெஞ்சில் துயிலும் இளங்காதலி எனச் சரிந்து மார்பில் ஒடுங்கினாள். அவள் விழிகள் அவரின் கண்ணீர் வழிந்து சொட்டிக் கொண்டிருந்த விழிகளையே நோக்கின. அவள் விழிகளில் எந்தக் கேள்வியும் இல்லாத வெண்புன்னகையொன்று சிலகணம் தவழ்ந்தது. வெண்ணைக் கட்டியொன்று வாள்பட்டுக் கரைவது போல் அவள் கழுத்து வழுகி அசைந்து குருதி சீறியது. குருதி அவள் வெண்ணாடையை ஒரு செம்மலரென ஆக்கியது. அவர் வசுதாவின் மூடிய விழிகளைச் நோக்கி சிலகணம் நின்றார். குட்டி கொல்லப்பட்ட நாகம் அவ்விடம் நீங்கிச் செல்வது போல் இருளில் சென்று மறைந்தார்.

வசுதாவைக் கொன்ற பின் அவர் ஆலயத்துக்கு வருவதில்லை. நெடுநாட் கழித்து அவர் இடாவத்தவிற்கு வந்திருந்தார். தேம்பவாவி நகருக்கு வந்திருக்கிறான் என்றால் ஆலயம் வந்து அருளாட்டுப் பெற்றே தாக்குதலுக்குச் செல்வான். பேயாட்டு வேடத்தை ஆலயப் பூசாரி துவலபாகு கரும்மையால் தொட்டு தன் குடிலில் அமர்ந்தபடி இடத்தொடங்கினார். அவர் தன் முகத்தை ஆடியில் நோக்கிய பின் சுருக்கங்களில் மேலும் மேலுமெனக் கருமையை அப்பிக் கருமையைச் சதையென இட்டுநிரப்பித் தன் முகமென ஆக்கினார். விழிகள் இரண்டும் வெண்கங்குகளெனச் சுடர்ந்திருந்தன. செங்குழம்பின் சாற்றிலிருந்து எடுத்து இரு பற்கோடுகளைக் கீழுதட்டின் கீழ் வரைந்தார். அவை உயிர் பெற்று எழுந்து தான் ஒரு பேயென ஆகிவருவதை நோக்கி உளம் கலைந்தெழுந்தார். விரல்கள் நாட்பட்ட பழக்கத்தில் தன்னைத் தான் வரைந்து கொண்டன. தென்னங்கீற்றுகளை நார்த்திரிகளாக்கி நெய்த தழையாடையை இடையில் சுற்றினார். வெண்தாமரை மலர்களால் நெய்யப்பட்ட கிரீடத்தை அணிந்து கொண்டார். தழைந்திருந்த மார்பில் மேலும் கருங் கோடுகளை வரைந்தார். உடல் கருமை கருமையென எழுந்து ஆடிகொள்ளாப் பேயொன்று அதிலிருந்து எழுந்து அவருள் வந்தமைந்தது.

ஆலயத்தின் முன் நெய்ப்பந்த வெளிச்சங்களின் கீழ் நூற்றுக்கணக்கான குடிகள் கூடியிருந்து அரற்றியபடி நகைத்துக் கொண்டிருந்தனர். துவாலபாகு தன் கரங்களிலிருந்த தென்னோலைத் தண்டினால் ஆக்கப்பட்ட இருவாய்த் தீக்கொள்ளியை வாயில் கவ்வினார். கலயத்தின் செங்குழம்பு கொதிதிரவமென அவர் விழிகளில் தோன்ற அவருள் அக்கணம் வரை எழாத கொல்தெய்வமொன்று கால்வழியாக அவரைக் கவ்வியெழுந்து மூடிக்கொண்டது. வெந்தழல் கூந்தல் கொண்ட உக்கிர காளியின் முன் நின்று செருக்குச் சிரிப்பொன்றை உதிர்த்தார். அவள் பாதங்களை நோக்காது விழியையே நோக்கினார். அங்கிருந்த விரிமுரசும் மத்தளமும் வாசிக்கும் இரு
வாத்தியக்காரர்களுக்கும் அந்நோக்கு எச்செய்தியாகவும் மாறவில்லை. அவர் இடக்காலைத் தரையில் மிதித்துக் காளியை நோக்கி வலக்கையைப் போ என்பது போல் விலக்கினார். அவர் அகம் அச்சொல்லென எழுந்து போ போ என அவரைச் சுற்றித் அரூபத் தாளங்கள் ஒலித்து வெறிக்க ஆடத் தொடங்கினார். அவருள் எழுந்த கொல்தெய்வம் வாத்தியக்காரர்களை விழிநோக்கியபோது அரண்ட அவர்களின் விரல்கள் தோலில் அதிர்ந்து உதைக்கத் தொடங்கின. அவை தாளத்திலிருந்து தாளமின்மைக்கும் குலைவிலிருந்து மேலும் குலைவுக்குமென குதித்து விலகி இடறி இசைக்கத் தொடங்கின. அவர் வலக்கரமும் இடக்கரமும் முன்பின் ஒருவரை ஒருவர் பார்க்கலாதெனத் திரும்பித் திரும்பி அசைந்து பொருள் கொண்டன. இடக்காலும் வலக்காலும் பொருந்தாத ஒன்றிலிருந்து விலகும் தாளம் அவிழ்க என்ற கொல்தெய்வத்தின் வாக்கை ஏற்று மாறி மாறி முறை பிறழ்ந்தாடின. ஒன்றை ஒன்று நோக்காதிருக்க ஒன்றை இன்னொன்று பொருந்தாதிருக்க ஆடலின் வழி வாக்குரைக்க அக் கொல்தெய்வம் திமிறி எழுந்தது.

அவர் குழலில் இருள் எழுந்தமைந்ததை நோக்கிய வேறுகாடார் அங்கிருந்து செல்ல எண்ணினார். குடிகளுக்குள் அரவொன்று நுழைந்தது போல் நடுக்கமும் குழப்பமும் மேலெழ தேம்பவாவி தன் பேருருவை நகர்த்திக் கொண்டு முன்வந்தமர்ந்தான். அவன் துவாலபாகுவின் ஆடலை நோக்கி விழிகூர்ந்த போது அது அவரல்ல என்பதை அகமறிந்து மெல்லிய இழிபுன்னகையொன்று உதட்டில் தூங்க அசைவற்ற சாம்பல் விழிகளால் அவரை விலத்தி குடிகளை நோக்கினான். குடிகள் அவரின் ஆடலிலிருந்த குலைவினால் அகம் நெருக்குற்றுக் குழப்பம் கூடியிருந்தார்கள். ஏவல் வீரனொருவனை அழைத்துக் குடிகளை அமைதியாக்கச் சொன்னான். ஏவல்வீரன் முன்நின்று வாளை அசைத்து அமைதியெனச் சுட்டு விரலை உதட்டில் வைத்து பின் தேம்பவாவியை நோக்கி விரலைக் காட்டினான். குடிகள் பெட்டிக்குள் அணையும் அரவுகளென உள்ளணைந்தனர்.

துவாலபாகுவின் வாயில் பற்றியிருந்த தீக்கொள்ளியை அவரது நாக்குத் தொட்டுத் தொட்டு உருட்டியது. அதன் அதிர்வில் உருண்ட தீக்கோலில் இருந்து சொட்டிய தீத்துளிகள் பசுந் தென்னோலை நார்களில் பட்டுப் பட்டு அழிந்தன. காற்றின் விசையில் அவர் குழல் அலைந்தும் மிதந்தும் ஆடியது. உடலில் தாளம் சிலகணங்கள் ஆழ்ந்த அமைத்திக்குள் நுழைந்து மேலும் அமைதிக்குள் ஆடலைத் தொடர்ந்தன. பொறுமையிழந்த தேம்பவாவி குருதித் தாலத்தை எடுத்துக் கொண்டு காளியின் காலடியில் வைத்தான். துவாலபாகுவின் கையிலிருந்த சிறுகோலால் அத்தாலத்தை தட்டி விழுத்தினான் கொல்தெய்வம். தேம்பவாவி சினந்து திரும்பி துவாலபாகுவின் விழிகளை நோக்கினான். அவருள் எழுந்த கொல்தெய்வம் நாமட்டுமென எழுந்து விசை கொண்டு பிரண்டெழுந்தது. தேம்பவாவி விழிகளில் எந்தக் கலக்கமுமற்று ஆடலை நோக்கியபின் கைகளால் ஏவலருக்கு ஆணைகளை இட்டபடி இருளில் சென்று மறைந்தான்.

வேறுகாடார் மெய்யுணர்வு கொண்டார். வண்டிலில் இருந்த கூண்டுக்குக் வைத்திருந்த ஒற்றுப்புறாவின் கால்களில் செய்தியைக் குற்றிய ஓலையைக் கட்டினார். நகரிற்கு வெளியே சென்று புறாவை வனக்குடிலின் திசையை நோக்கி எறிந்தார். அது படபடத்து மறையும் வரை அதை நோக்கியிருந்தான். அதன் துடிப்பில் சிலகணம் வசுதாவின் கழுத்து எழுந்து மிதப்பது அவருக்குத் தோற்றமென எழுந்தது. வண்டிலில் இருந்த மதுக்குப்பியைக் கவிழ்த்து உடலை விடுவிக்க ஓடினார். முழுக்குப்பியையும் ஒரே மடக்கில் ஊற்றியமைந்தார். தீயிலையைச் சுற்றி புகையால் எரிவை மேலும் எரித்தார். விழிகளில் மயக்கு எழுந்து மின்னிட விழிகளில் கண்ணீரை நீரென எண்ணி வசுதா நடந்து சென்றாள். அதில் மூழ்கி நீள்குழல் வேர்களென விரியும் மலரென மிதந்தாள். உள்ளே உள்ளே என நீந்தியவள் அக்கண்ணீரின் ஆழத்தை அறிய முடியாமல் சென்றுகொண்டேயிருந்தாள். வேறுகாடார் நீரைக் கைகளில் அள்ளிக் குஞ்சு மீனைக் காப்பாற்றும் சிறுவனைப் போல விழிநீர் சிந்தாது முட்டிக்கொண்டிருந்தார். இமைகள் மதுவால் சரிந்து திரையென விழுந்த போது அந்த நீர்க்கயிற்றில் பற்றியபடி வசுதா கன்னங்களில் தூங்கினாள். வண்டிலின் பின் தட்டில் சாய்ந்து படுத்துக் கொண்டு வானை நோக்கினார் வேறுகாடார். விண்மீன்கள் ஒளிர்வு கூடிப் பின் அமைந்து சுடர்ந்தன.

வேறுகாடாரின் உதட்டில் விம்மிய சொற்கள் வெறும் காற்றென உழன்றெழப் பிதற்றிக் கொண்டிருந்தார். “உன் இதழமுதம் வேண்டும். நிறை முலைகள் வேண்டும். கனியிடைகள் வேண்டும். இன்சொற்கள் வேண்டும். உயிர் பற்றி உலகிழுக்கும் கொல் விழிகள் வேண்டும். இல்லை என்று சொல்லி ஓடி ஒழியாதே வசு. ஓம். உனைக் கொன்றவன் நான். என்னை நீ அறிவது என்னைக் கொன்று என் சிதையில் புணர் நெருப்பை ஏற்றுவதென உன் தெய்வங்கள் உனக்கு உரைக்கவில்லையா. எழு. சிதைத்தீயிலிருந்து எழு வசுதா. என் நாடிகளின் இழுமுடிச்சே. உன்னை எரிக்கவே என் அத்தனை சொற்களையும் வேடங்களையும் புனைகிறேன். ஒவ்வொரு இரவும் உன்னைக் கொன்ற பிறகு தான் துயில் என்னை ஏற்கிறது. உன்னைக் கொல்கையில் திறந்திருந்த விழிகளில் ஏன் அத்தனை அமைதி குடியிருந்தது. அது கொல்லும் அமைதி என் கண்ணே. நீ தான் என் கடைசிக் கொலை. அதன் சங்கிலியை என் கழுத்தில் என்றைக்குமாகச் சுமப்பேன். இன்னொரு கொலையை எழ என் கரங்கள் துணியவில்லை. இனியொரு போதும் அது கொலைக்கரமென ஆகலாகது என நீ எனக்கிட்ட விலங்கை உன் நினைவெனச் சூடியலைவேன். காணும் ஒவ்வொரு பெண்ணிலும் உன் அலைக்குழலின் ஆடலின் ஒரு துள்ளலை நோக்குவேன். முலையிடையின் வெம்மஞ்சத்தில் உன் கன்னங்கள் தேடுவேன். அவள்களின் விரல்களில் உன் நீள்விரல்களின் நாணத்தை மீட்டுவேன். கழுத்தில் குனிந்து முத்தமிட்டு என் கொலைத்தழும்பை அறிவேன். ஒவ்வொரு கழுத்திலும் ஒவ்வொரு முத்தத்திலும் நான் அத்தழும்பையே உணர்கிறேன். அதன் நோய்மையை வருடி வருடி என் நாவை வடுச்சதையென ஆக்குவேன். உன் பற்களின் வெண்மையை ஒவ்வொருவர் விழிகளிலும் தொட்டுத் தொட்டுத் துலக்குவேன். அறியாத ஆழங்களுக்கு அவர்களை இழுத்துச் செல்வேன். அங்கு அவர்களின் இதயங்களை என் விலங்குச் சூட்டால் பொசுக்குவேன். எரிபற்ற வைப்பேன். விலங்கெழத் தூண்டுவேன். விலகி நின்று நோக்குவேன். ஒரு அரைக்கணம் அவர்களில் உன்னுருத் தோன்றினாலும் அவளைக் கொல்வேன். ஒருகணம் கூட நோக்காமல் கொல்வேன். அறைந்து வீழ்த்துவேன். நீ வசுதா அல்ல எனக் கத்தி அவளின் செவிகளை அறுத்து குருதியுடன் அதைத் தின்பேன். காலம் அழிந்து நான் மண் புகுகையில் ஒவ்வொருத்தியின் எடையிலும் அமிழ்வேன். பாதாளங்களின் இருள் வளைவுகளில் நாகங்களுடன் புரளுவேன். என்னை மீட்க எவ்வழியும் இல்லாத இடங்களில் நானே என்னைப் பொருதிக் கொள்வேன். என் ஆயுளின் அத்தனை முடிச்சையும் இட்டவள் நீ. பேயே. கணங்களின் இச்சையே. என்னில் நாவெனத் துடித்து எரிபவளே. இரக்கமற்ற உன் விழிகளில் என் கூடு வேகட்டும். அதன் சதைகளில் எஞ்சிய நிணக்கூழில் நான் ஆடுவேன். ஓம். நான் எஞ்சும் காலம் முழுதும் என் நிணத்தை மணந்து அலைபவனாவேன். என் எல்லா விசைகளும் தளைகளும் உன் கழுத்தைப் பற்றிய கணம் என்னை விட்டு அகன்றன. நான் ஒரு தொல்விலங்கு மட்டுமே வசுதா. நீ மயக்கும் தீநுனி. அதில் நான் என்னை ஒழித்துக் கொள்வேன். இச்சைகள் என்னை நானென உன்முன் கிடத்தும் பெருநோய். அதை நீங்காது அணைத்துக் கொள்வேன். தீயில் தீ அணைவதில்லை. தீயில் தீ விலகுவதுமில்லை. என் விழைவுகளின் கொல்தொடு விளிம்பில் ஒரு குறுவாளின் கன்னக்கூர் நீ. அதில் என் தலையை வைத்து நானே என்னைக் கொல்வேன். நீ உரைத்தது நிகழும். நிகழ்ந்தே ஆகவேண்டும். நிகழ்த்துவேன்” என சொற்கள் வாயில் உமிழ்நீர்ப் பெருக்கனெ எழுந்து பின் வறண்டு மயக்கில் இருநாழிகை துயிலில் விழுந்தார் வேறுகாடார்.

*

புலரியில் எழுந்தவர் தன் பொதிப்பையை எடுத்துக் கொண்டு சத்திரத் திண்ணையில் துயின்றவர்களைக் கலைத்து விடாமல் பாதங்களை மென்னதிர்வுடன் வைத்தபடி அருகிருந்த குன்றை நோக்கி நடந்து பிட்சுக்களின் குடிலை அடைந்தார்.

போர் தொடங்கி உச்சமென எழுந்த போது அருகிருந்த புத்த விகாரையின் அருகிருந்த பிட்சுக்களின் குடிலின் மேற்தளக் கூரையின் மீது சரிந்து படுத்தபடி கோட்டையை நோக்கி தொலைகாண் கருவிகளின் ஆடிகளை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு அங்கு நிகழ்பவற்றை நோக்கினார். அவரது நண்பரும் புத்த துறவியுமான உதயபூர்ணிகர் கீழே இருந்த வெண்கலத்தாலான பாசிப்பச்சைப் படர்ந்த புத்த சிலையின் முன் ஊழ்கத்தில் அமர்ந்திருந்தார். புத்தரின் மெல்லிதழில் இருந்த புன்னகை அவரில் பிரதிபலிப்பெனச் சுடரேறியிருந்தார். அகம் ஒரு மாயக்கணத்தில் உறைந்து விட்டது போல் அவரின் முகம் மலர்ந்திருந்தது. கோட்டையின் முன் மாயும் உயிர்களின் ஓலங்களும் போரிசையின் பெருங்கூச்சலும் எழாத தொலைவில் அவர் புத்தரின் அருகிருந்தார். அவரின் முன் அன்று கொய்த தாமரைகள் நீரிலாடிக் கொண்டிருந்தன. நீலழகன் களம் புகுந்ததைக் கண்ட வேறுகாடார் உளம் தெளிவடைந்து பின் கீழே இறங்கினார்.

விகாரையின் பின்னிருந்த சிறு நீல அல்லிக் களத்தில் நீரை அள்ளி உடலைச் சுத்தம் செய்தார். நீரால் வாயைக் கொப்பளித்துத் துப்பினார். கரும்பாறைகளிலால் வனையப்பட்ட அச்சிறுகுள நீர் அவரைச் சற்றுத் தூய்மைப்படுத்தியது என எண்ணிக் கொண்டார். பொதிப்பையை வாயிலில் வைத்த பின் தாளமற்ற கால்களால் நடந்து சென்று அங்கிருந்த அன்னவடிவ மேற்துண்டும் தாமரை வடிவ அடித்தண்டும் செதுக்கப்பட்டிருந்த தூணொன்றில் சாய்ந்து அமர்ந்து பூர்ணிகரை நோக்கினார். தன் குழலைப் பின்னிக் கொண்டையாகப் போட்டுக் கொண்டு உடலைத் தளர்த்தி அமைந்தார்.

பூர்ணிகர் வேறுகாடாரின் நோக்கை உளத்தால் அறிந்து விழிகளை பறவைக் குஞ்சின் மென்சிறகெனத் திறந்தார். அவரது உடலில் கருஞ்சிவப்பு வண்ணத் துறவாடை தோலென அமைந்திருந்தது. மழிக்கப்பட்ட தலை குழந்தையினுடையதைப் போல் வசீகரம் கொண்டிருந்தது. அவர் குறும்புன்னகையிலிருந்து விலகாத தன் முகத்தினால் புத்தரை நோக்கினார். புத்தர் ஒரு ஆடியென அங்கு அமர்ந்திருந்தார். பின் திரும்பி வேறுகாடாரை நோக்கியவர் மேலும் புன்னகை அவிழ்ந்தார். வேறுகாடார் தன் தொலைவுகளிலிருந்து தன்னை ஒருக்கிக் கொண்டு எழுந்து அவரின் அருகில் சென்று “நலமா, நண்பரே” என் மென் குரலில் கேட்டார். தலையெழ ஒரு சிற்றசைவுடன் தாழ்த்தி புன்னகைத்தார். பூர்ணிகருக்கு வயது என்ற ஒன்று உடலில் அமைந்திருக்கிறதா என வேறுகாடார் எண்ணுவதுண்டு. எப்படியும் அவரை விட சிலவருடங்களாவது மூத்தவர். ஆனால் கனிதின்னும் குழந்தையின் வியப்பு அவரில் அமைந்த வயதை எக்கணமும் அவரில் எழாமல் மலர்ந்து கொண்டிருந்தது.

இருவரும் வெளியில் சென்று சிறுகுன்றில் அமைந்த அக்குடிலின் பின்னாலிருந்த கல்லிருக்கைகளில் அமர்ந்து கொண்டனர். “பயணம் நலமா” எனக் கேட்டார் பூர்ணிகர். “எங்கிருந்து எங்கு” எனக் கேட்டுவிட்டுப் பின் அக்கேள்வி ஒரு தத்துவக் கேள்வியா என எண்ணி புன்னகைக்கத் தொடங்கினார் வேறுகாடார். “எங்கிருந்தும் எவரும் எங்கும் பயணமாவதில்லை நண்பரே. அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டே நாம் எங்கும் செல்கிறோம். பயணம் காலத்தை மீட்ட நாம் ஆக்கிக் கொண்ட விரல்கள்” என பூர்ணிகர் கூறினார். தத்துவ விவாதங்களில் ஈடுபடுவது அன்றாடத்தின் மெய்ச்சுமையை அகற்றும் இனிய மது என வேறுகாடார் கற்றிருந்தார்.

“நண்பரே, நான் நாட்பட்ட புண்ணினால் ஆன காயம் கொண்டவன். என்னால் அதைச் சுமந்து கொண்டு எங்கும் வர இயலாது. இங்கே இக்கணம் ஒரு மலர்ந்த காயம் நான்” எனச் சொன்னார் வேறுகாடார். “காயங்களை மலரெனவா சொன்னீர்கள். அது நல்லது. காயங்கள் மலர்கள் தாம். அவை சேற்றிலும் மலர்க்கூடியவை. குன்றிலும் முகைக்கக் கூடியவை. மானுடர் தங்கள் காயங்களை மலரென அறிவது எவ்வளவு அற்புதமானது. இல்லையா” என்றார் உதய பூர்ணிகர். மேலும் சொற்களை ஊழ்க அடுக்கெனத் திறந்தபடி “காயங்கள் எவரிலும் நீங்காமல் அவிழ்ந்து கொண்டிருப்பதனால் அதை ஒரு மலர் எனக் கொள்வது நலமே. ஆனால் நாம் திரும்பச் சரிசெய்து கொள்ள முடியாத பாவங்களை விலத்துவது அறத்தின் பொருட்டே. அறங்களே நம் முதன்மைச் சேறு. அதில் ஆயிரம் மலர்கள் அவிழ்வதில் ஆச்சரியம் கொள்ளத் தேவையில்லை” என்று மெல்ல நகைத்தார் பூர்ணிகர். “எனக்கு அறமென்ற ஒன்றில்லை என தெய்வமொன்று உரைத்திருக்கிறது நண்பரே. நான் அறமற்ற விலங்கு மட்டுமே ஆகச் சபிக்கப்பட்டவன். எனது அறங்கள் கால இட நிலமைகளால் அலைக்கழிக்கப்படும் தூசுக்குவியலென என்னில் இருக்கக் காண்கிறேன். என் குடிகளின் பொருட்டு நான் அதைச் செய்கிறேன் என எனக்கு நானே சொல்லிக் கொண்டாலும் மாறாத காயங்களை அவற்றின் பொருட்டு எனக்கு நானே ஏற்படுத்தவும் செய்கிறேன். உற்று ஆழ நோக்கினால் அதுவொரு நல்ல காரணமும் தான். ஆனால் நான் எதனாலும் தீண்டாத ஒருவனாக உள்ளிருக்கிறேன். குற்றங்களும் குற்றவுணர்ச்சிகளும் என்னில கணங்களுக்குக் கணம் எழுவதும் மறைவதுமென உழல்கின்றன. நான் அவற்றை உதறவோ ஏற்கவோ இயலாத தொலைவில் என்னைக் கட்டி வைத்திருக்கிறேன். அது நல்லது தான். இல்லையேல் என்றோ என்னை நானே கொன்று கொண்டிருக்க வேண்டியவன்” எனச் சொல்லிய பின் அச்சொற்கள் பயனற்றவை என்ற எண்ணம் அவருள் எழுந்தது. குன்றிலிருந்து நெடுந்தொலைவு வரை விரிந்திருந்த காட்டின் மரங்களை நோக்கியிருந்தார் வேறுகாடார்.

பூர்ணிகர் மெளனத்தை மெளனத்தால் மொழிபெயர்ப்பவர் போல் “குற்றங்கள் எதன் பொருட்டென்றாலும் ஆற்றப்படக் கூடாதவை நண்பரே. புத்தர் தன் மெளனத்தின் வழி நம்மிடம் சொல்லிக் கொண்டிருப்பது அதைத்தான். உணவுக்காகக் கூட கொலை கூடாதென்பது எமது நெறி. ஆனால் அது விலங்குகளை காட்சிக்குப் பழக்கும் செயலெனவும் தோன்றுகிறது. மானுடரை விலங்கிலிருந்து எழுந்து மானுடம் என்ற பெருக்கை ஆற்றுப்படுத்தவே புத்தர் மண்ணில் நிகழ்ந்தார். மானுடர்கள் கொலை விசை கொண்ட விலங்குகள். அவர்களின் இச்சைகளின் விழைவுக் குமிழ்கள் எக்கணமும் உடைந்து விடக் கூடியவை. ஆனால் நிலையற்ற அந்த இச்சைகளை ஊதி ஊதி அதன் விளையாட்டில் மானுட அகம் களிகொண்டிருக்கிறது. இந்த தீவில் நான் வந்தது முதல் கேள்வியுறும் அத்தனை குருதிக் கதைகளும் வெறும் குமிழ்கள் உடைந்து கொள்ளும் ஓசையெனவே மண்ணில் அமையும். அவற்றுக்கு எந்த மதிப்பும் இல்லை” என்றார் பூர்ணிகர்.

“அது மெய் தான் நண்பரே, நீங்கள் துறந்து அடைந்தவர். நான் துறப்பை அறியாதவன். என்னால் நீங்கிச் செல்லக் கூடியவை நான் கொண்டிருக்கும் அறங்களை மட்டுமே. அவையளவுக்கு எடை கொண்ட யானைகள் எங்கும் பிறப்பதில்லை. அவற்றை பழக்கும் அங்குசமும் என்னிடமில்லை. ஆகவே அதற்குத் தலை கொடுத்து மண்ணில் படுத்திருக்கிறேன். அவை சினம் கொண்டு என்றாவது என்னைக் கொன்றுவிடுமா என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்” என வேறுகாடார் கூறினார்.

“அந்தக் காத்திருப்பு சாகாதவர் வீட்டில் கடுகு தேடிய கதை தான் நண்பரே. இங்குள்ள அனைவரும் ஒரு அறத்தை இன்னொரு அறம் கொண்டு மீறுகிறோம். ஒரு தர்மத்தை இன்னொரு தர்மம் கூடாது என்கிறது. மானுடம் அறிந்த தர்மங்கள் மானுடரின் எண்ணிக்கையை விட மிகையானவை. அவற்றில் எதை எப்படித் தேர்வு செய்கிறோம் என்பது நம் பொருட்டேயன்றி வேறு எவர் பொருட்டும் அல்ல” என்றார் பூர்ணிகர்.

“அதை நானும் ஏற்கிறேன் நண்பரே. என் குடிகள் பொருட்டு என நான் சொல்லிக் கொள்ளும் ஒவ்வொன்றும் என் விருப்பிலிருந்து நான் தேர்ந்து கொண்டவையே. அதற்காக நான் குடிகளைக் காப்பாக நிறுத்தக் கூடாது. நானே என் இச்சைகளுக்கும் இழிவுகளுக்கும் பொறுப்பானவன். அது ஒரு நேரத்தில் சுயவாதையாகவும் இன்னொரு கணத்தில் பெரும் விடுதலையாகவும் என்னில் எழுகிறது. தாங்கள் அதை அறிந்ததுண்டா பூர்ணிகரே” என்று வினவினார் வேறுகாடார்.

“ஓம். அதை நான் ஒவ்வொரு கணமும் காற்றுக்கு அலைசுழிக்கும் தீயில் காண்கிறேன். அதன் நெளிவுகள் என்னை ஆச்சரியப்படுத்தும். அதே வேளை நின்றெரியும் அதன் திரியையும் நோக்குவேன். அது நான். என்னில் சுடர்வது அல்ல நான். நான் ஒரு திரி மட்டுமே நண்பரே. என்னில் தீயென எழுவது என் விழைவு. என் இச்சை. என்னால் என்னைத் துறக்க இயலாது. என் இச்சையையும் விழைவையும் நோக்கி நோக்கி அமைகிறேன். அதுவோ நெளிவு நெளிவு என என்னை உணர்த்துகிறது” என்றார் உதயபூர்ணிகர்.

அல்லிக் குளத்தில் விழுந்தெழுந்த காற்று அங்கிருந்த அரச மரத்தின் ஆயிரமாயிரம் இலைகளில் மோதி அதற்கு அப்பாலும் காற்றென விசை கொண்டு விரிவதை நோக்கிய இரு திரிகளென மெய்யுற்று அமர்ந்திருந்தனர்.

TAGS
Share This