37: சோம வதம்

37: சோம வதம்

வெண்மையும் சாம்பலும் கருமையும் மேனியெனக் கொண்ட வானவில் வண்ணங்களும் புள்ளிகளும் நட்சத்திரங்களும் மிகுந்த ஆயிரக்கணக்கான புறாக்கள் பட்டினத்தின் புகைப்பெருக்குக்கு அஞ்சி அரண்மனை முன் முகப்பை அண்டி மிதந்து செட்டைகளைப் படபடவென அடித்துக் கொண்டு மண்ணிறங்கியும் விண்ணளந்தும் சுற்றின. புகைப்பெருக்குத் தீண்டாத தூரத்திலிருந்த அரண்மனை முகப்பில் நின்றிருந்த நிலவை புறாக்களின் சிறகொலியால் மெய்ப்புக்கொண்டாள். ஏதென்றறியாத கணத்தில் விழிநீர் திரண்டு ஊற இமைகளை மூடிக்கொண்டு நின்றாள். உள்ளிருந்த சுவாசம் மெல்ல அசைந்தேற தித்திக்கும் நெகிழ்வில் அவள் நரம்புகளின் உவகையான வலியொன்று நின்றாடியது. அதை இன்னும் இன்னுமெனத் திளைக்க இமைகள் ஒன்றையொன்று ஒட்டிக்கொள்ள நீர்ப்பெருக்கு வழிந்தது. இனிமை இனிமை என அகம் கூவியது. இத்தனை இனிய கண்ணீரை அவள் முதன்முறை உகுத்தது ஈச்சி ருத்ரம் உயர்த்திப் பேரெழிலுடன் நின்ற பெருங்காட்சியில். ஈச்சியின் வதனம் நிலவைக்குள் ததும்பிச் சேர்ந்து நிறைந்தது.

ஈச்சி கண்களைத் திறந்து பெண்புலிகளை நோக்கினாள். சேறு பூசிய தாமரைக்குளம் யானைகள் உழக்கிய சேற்றுப் பள்ளமெனக் குலைந்து கிடந்தது. தீப்பந்தங்கள் தேர்களிலும் வீரிகளின் கரங்களிலும் மூசி எரிந்தன. நிலவு வானில் தோன்றியது. மேகங்கள் ஆடைகளின் பேராடல் நிகழுகையில் விரிந்தாடுவது போல் ஆகாயத்தை நிறைத்திருந்தன. காற்று வீசிப் பறந்து கொண்டிருந்தது. அதில் இருள் வீரர்களுடனான ஆடவர்களின் யுத்தவொலி கேட்டுக்
கொண்டிருந்தது. வெளியில் எழுந்து விண்கற்களென எரிந்து பறந்த எரியம்புகள் அருகெனத் தெரிந்தன.

ஈச்சியின் குரல் உதட்டிலிருந்து ஒலிப்பது போல் கேட்கவில்லை. உட்பிலவில் உறைந்த தொல்லரக்கியொருத்தி நாக்கொண்டு தன்னைச் சொன்னது போல் அவள் குரல் காற்றில் நிதானமாக எரியத் தொடங்கும் காட்டுத்தீயெனச் சொல்லில் ஏறியது.

“தோழிகளே. இன்று நாம் நம் தலைமுறைகள் அளித்த குருதிப்பலிகளுக்கு வஞ்சம் தீர்க்கும் மகத்தான நாள். எங்கள் மனைகளிலும் வீதிகளிலும் போர்களிலும் சிறைச்சாலைகளிலும் எங்கள் சோதரிகளை அன்னையர்களைத் தங்கைகளை முதுபெண்டிரைத் தந்தையரைச் சோதரரைக் காதலரை நண்பர்களைக் கொன்று உடலறுத்துச் சிதைத்து எரியூட்டி நிர்வாணப்படுத்தி கொடுகலவி கொண்டு சிறைப்படுத்தி சித்திரவதை செய்து அணுவணுவாய் நம்முடலில் தங்கள் போர்வெறியைத் தீர்த்த வெறிகொண்ட இழிவிலங்குகளை நாம் போர்க்களத்தில் வேலுக்கு வேல் நேராக நெஞ்சுக்கு நெஞ்சு நேராக விழிக்கு விழி நேராகச் சந்திக்கப் போகிறோம். அச்சந்திப்பை அவர்கள் நினைக்க அவர்களுக்கு உயிர்கள் அளிக்கப்படலாகாது. நம்மைக் காணும் அக்கணமே அவர்களின் இறுதிக் கணம். ஒரு நொடி தயக்கமும் வேண்டாம் தோழிகளே. அவர்கள் ஒவ்வொருவர் உடலிலும் எங்கள் குடிகளின் குருதியூறியிருக்கிறது. அவர்கள் எங்கள் பெண்களைக் கொடுகலவி புரிந்து அவர்கள் அழுத கண்ணீரையும் கெஞ்சல்களையும் கேட்டு மேலும் அழு இன்னும் கெஞ்சு எனக் கேட்டு அவர்கள் அழுதுகெஞ்சிய ஒலியைச் செவி நிறைத்துப் பேய்க்களியாடியவர்கள். அச் செவிகளை அறுக்குக. பெண்களின் கூந்தல்களை புரவிகளில் கட்டியிழுப்பர். வாளால் கூந்தலை அறுத்து அவர்கள் கைகளைப் பின்னி பிடிகாப்பெனக் கூந்தலில் சிறையிடுவர். தோழிகளே. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நாங்கள் பிடிகாப்பிடப்பட்டிருந்த கூந்தலை அறுக்கும் முதல் நாளிது. இன்று அவர்கள் நமக்கு எந்தப் பதில்களும் உரைக்கத் தேவையில்லை. எந்த இரக்கமும் உளத்தில் ஒருகணமும் எழலாகாது. முன்காண்பவர் அனைவரும் கொல்விலங்குகள். நீங்கள் தயங்கும் ஒரு நொடியில் உங்கள் தலைகளை அறைந்து வீழ்த்திக் குருதி குடிப்பார்கள். அவர்களின் குடல்களை உருவி நெஞ்சுக் குருதியை மேனி பூசியே இந்தக் கருமண்ணைக் கரைக்க வேண்டும். அவர்களின் பேயுடல்களில் ஏறிமிதித்து அமலையாடிடல் வேண்டும்.

ஒவ்வொருவர் விழிகளும் ஒன்றென உணர்க. ஒவ்வொருவர் கரங்களும் ஒன்றென ஆகுக. ஒவ்வொருவர் இதயங்களும் ஒன்றெனத் துடிக்குக. களம் புகும் நேரம் நாம் அன்னையர் அல்ல. மகள்கள் அல்ல. சோதரிகள் அல்ல. தோழிகள் அல்ல. காதலிகள் அல்ல. கொன்று குருதி குடித்தே இதயத்தின் வெந்தீ அணைக்கும் குருதிக் கொற்றவைகள். உதிரம் பூசியே கல்லை உயிர்ப்பிக்கும் தொல்தெய்வங்கள். நம் குரலை அவர்கள் கேட்கும் பொழுது அவர்களின் குலைகள் நடுங்க வேண்டும். எரியம்புகளை விழிகளில் எய்யுங்கள். வாள்களால் நெஞ்சைக் கிழித்தெறியுங்கள். குருதியை அள்ளிச் சடைப்பின்னல்களில் பூசிக்கொள்ளுங்கள். இக்கணம் நீங்கள் என் கரங்களெனவும் கால்களெனவும் ஆகுங்கள். உங்கள் அன்னை தெய்வங்கள் உங்களுடனிருப்பார்கள். இன்று நாம் களம் காணும் வெற்றி ஆயிரமாயிரம் ஆண்டுகள் முன்னால் வேலெறிந்து சிம்மங்களை வென்ற அன்னைகளின் கொல்வெறியின் கரங்களை நாங்கள் அடைவதற்காக. இன்னும் ஆயிரமாயிரம் ஆண்டுகள் பின்னால் நம் குழவிகள் இதயங்களில் உறையும் புதிய கொற்றவைகளை எழுப்புவதற்காக” அவள் குரல் ஓர் உச்சியிலிருந்து இன்னொரு தொலைவறியா உச்சிக்கென ஒலித்தெழுந்து சென்றது. நிலவை விழிகளில் நீர் புரண்டு ஓடியது. இச்சிறு உடலுக்குள்ளிருந்து கொட்டிய சொற்களை செவிகுளிர அள்ளினாள். பெண்புலிகள் விழிகளில் அழல் நரம்புகள் விம்மின. புஜங்களிலும் கால்களிலும் துடி இறுகி வேலென மின்னியது. ஓவ்வொருவர் உள்ளும் அவர்களறிந்த அவர்களிழந்த ஒவ்வொரு பெண்ணும் அன்னையும் சிறுமியும் குழவியும் காதலனும் சோதரரும் போர்க்கலன்களென எழுந்தனர். பேய்கள் உலைத்த பேருடல்களென ஒவ்வொரு உடலும் விறைத்திருந்தது. சொல்லிற்கினியாள் அவள் கையில் வைத்திருந்த வேலை இறுக்கி உடைத்து விடுபவள் போல பிடித்திறுக்கினாள். அவ்வேலை சோமசேனனின் குரல்வளையென உணர்ந்தாள். வேலை ஓங்கி நிலத்தில் குத்தி தேரில் அறைந்து “போர்” எனக் கூவினாள். நிலவை உதடுகளைக் கடித்து வாளை உருவி வானில் சுழற்றி தன் தேரில் அறைந்து “போர்” என உறுமினாள். பெண் புலிகளின் உதடுகளில் போர் ஒரு நடுக்கெனச் சொல்லாகியது. பின் அது வஞ்சமென உதடுகளை உந்தியது. கொல் என நாக்கள் துடித்தன. குருதி. குருதி. கொன்றவர்களின் குருதியென அகங்கள் தீப்பிடித்தாடின. ஈச்சி ருத்ரத்தின் வாயில் உதட்டை வைத்து பல்லாயிரம் பல்லாயிரம் கொற்றவைகளின் உயிர்மூச்சென இடைவிடாது மின்னி முழங்கி மயிர்க்கூச்செறியும் இடிகளின் வெறிக்கூச்சலின் பெருந்தாளமென எழுந்த பெண் புலிகளின் போர்வெறிக் கூச்சல்களுக்கிடையில் பேரிடியின் ஒற்றை நாதாமெனச் செவிகளை அறைந்தெழுந்து உடல்களை ஊடுருவிப் பாய்ந்து ருத்ரத்தை முழங்கினாள்.

ஒவ்வொருவரும் அவரவர் படைப்பிரிவில் ஒருங்கினர். நிலவை புரவியில் ஏறினாள். சொல்லிற்கினியாள் தேரில் ஏறிக்கொண்டாள். ஈச்சி கொல்வேல் மகளிருடன் புரவிகளில் ஏறினாள். புரவிகளும் தேர்களும் தம்மில் ஏறியவை தெய்வங்களென அறிந்து உடல்களில் மெய்ப்புக் கொண்டன. விசையை உடல்களாக்கி மின்னலின் கூர்முனைகளெனக் காற்றைக் கிழித்துக் கனைப்பொலி எழுப்பியபடி விரைந்து சீறியெழுந்தன. களத்திசை ஓடின தேர்களும் புரவிகளும்.

நீண்ட புல்வெளியும் பெரு மரங்களும் கொண்ட பட்டின மத்தியில் அமைந்த சிறுகாட்டின் கரையில் வைக்கோல்களாலும் தென்னோலைகளாலும் வேயப்பட்ட குடில்களின் முன்னே இருந்த பெருவெளியில் நெருப்பை மூட்டி ஆயிரக்கணக்கில் சுற்றியமர்ந்து சிறைப்பிடித்து வைத்திருந்த தமிழ்க்குடிப் பெண்களை கூட்டுக் கொடுகலவி புரிந்து கொண்டிருந்த இருள் வீரர்கள் புரவிகளினதும் தேர்களினதும் கனைப்பொலிகள் திரண்டு வருவதைக் கேட்டுக் கள் வெறியிலும் தீயிலைப் புகை மயக்கிலும் சினமேறிக் கூவியெழுந்தனர். சோமசேனன் தன் படையாட்களைக் கத்தியறைந்து தான் புணர்ந்து கொண்டிருந்த இளம் பெண்ணின் தலையைத் திருகி உடைத்துத் தூக்கி எறிந்தபடி “கொல்க” எனக் கர்ஜித்தான். கொடும் ஓசையுடன் அவன் சொற்கள் வெடித்தன. இருள் வீரர்கள் தங்களை நோக்கி வரும் எரியம்புகளை அருகே மின்னி வீழும் வால்மீன்களெனக் கண்டனர்.

எண்திசைத் தோளன் ஆணையிட ஆயிரக்கணக்கில் எரியம்புகள் வனத்துள்ளிருந்தும் பட்டின வெளியிருந்தும் எழுந்தன. ஆணைச் சங்குகள் விம்மியேறின. வாகை சூடன் வனத்தின் முனையிலிருந்தான். எண்திசைத் தோளன் பட்டின முனையில் அன்ன வடிவப் பெருந்தேரில் நின்றபடி சரப்பெருக்கெனக் கூவினான். இருளில் எழுந்த எரியம்புகளின் இருமுனைப் பெருக்கும் இரண்டு பெரும் நெருப்புச் சிறகுகளென எழ இருவரின் படைகளாலும் இருவரும் வானில் சிறகுளெனத் தம்மை விரித்தெழுந்தனர். கணமோயாத அம்புக் கீசல்கள் காற்றை உலோக நுனிகளால் ஒலிக்கச் செய்தன. சோமசேனன் வனத்தையும் பட்டினத்தையும் நோக்கி இருபிரிவாய்ப் படைகளை அனுப்பினான். இருட்படையின் பயிற்சியற்ற விற்படை எய்த அம்புகள் நீர்ப்பெருக்கில் துள்ளி விழும் மீன்களென மண்ணிற்குத் திரும்பிக் கொண்டிருந்தன. குடில்கள் பற்றியெரியத் தொடங்கின. அவை மூண்டு வானளாவ எரிபவை போல அப்புல்வெளி இருள் வீரர்களை வெறிகொள்ளச் செய்தது. தாம் அகப்பட்டு விட்டதை உணர்ந்த இருள் வீரர் படை கதைகளையும் வாள்களையும் தூக்கியபடி புரவிகளில் ஏறி முன்வந்தனர். சோமசேனனைச் சுற்றி ஐநூறுக்கும் குறையாத படைகள் அவனைப் பாதுகாத்தன. சிங்கைப் படைக்குச் சேதி அனுப்பும் புறாவினை வானிலேயே அடித்து வீழ்த்தினான் வாகை சூடன். மேலும் மேலுமெனப் விண்ணெழுந்த புறாக்கள் இலக்குப் பிசகாத அம்புகளால் எரிந்து சுழன்று தரை வீழ்ந்தன.

புல்வெளியிலிருந்து பட்டின முனை நோக்கிப் புரவியிலும் தேர்களிலும் வந்த இருட் படைகளைச் சத்தகனும் அவனது படையும் மழலை நுழைந்த விளையாட்டுத் திடலெனக் காண்பவர் அனைவரையும் அடித்து நொறுக்கினர். உதிரரும் தன் பங்கிற்கு வன முனையில் குருதியாடினார். கழுகின் நகத்திற்குள் சிக்கிக் கொண்ட மண்புழுக்களென இருள் வீரர்கள் உருக்குலைந்து கொண்டிருந்தனர். கதைகள் மோதிக் கொள்ளும் ஒலி பாறைகள் ஓங்கி அறைந்து கொள்வதைப் போல் வெளியை இடித்தன.

இருட் படையின் இருபுறமும் நின்ற புலிகளின் வாள்வீரர்கள் புல்வெளியில் இறங்கி இருள் வீரர்களுடன் போர் புரிந்து சிறகுக்குள் அவர்களை இழுத்தனர். கதைவீரர்கள் இருட் படையின் தேர்களையும் புரவிகளையும் அறைந்து துவம்சம் செய்துகொண்டிருந்தனர். சோமசேனன் தன் அணுக்கப் படையொன்றைத் திரட்டிச் சிங்கைப் படைக்குத் தகவலளிக்க அனுப்பினான். புலிகள் எதிர்பாராத தருணமொன்றில் சதையை அம்பு கிழிப்பதைப் போல் இருட் படையின் சிறுபிரிவொன்று புலிப்படையில் நுழைந்து வெளியேறியது. அவர்களைப் பின் தொடர ஆணையிட்ட எண்திசைத் தோளன் அதன் ஆபத்தை உணர்ந்து பின் வாங்கச் சொன்னான். அரை நாழிகைக்குள் முரசுகளும் வேழங்கள் பிளிறும் ஒலியும் பேரிரைச்சலென வந்து போர்க்களத்தை அறைந்தன. ஆயிரக்கணக்கான சிங்கை வீரர்களின் அரச பிரிவொன்று யானையின் துதிக்கை வடிவில் களம் புகுந்தது. பட்டினப் பகுதியிலிருந்த புலிப்படை வீரர்கள் பின்னணைந்து சிறகைத் தாழ்த்தத் தொடங்கினர். வேழப்படை நுழைந்து புலிகளின் தேர்களை அறையத் தொடங்கிய போது “பின்னணைக” எனச் சங்குகள் முழங்கின. புலிகள் ஒற்றைச் சிறகென ஆகினர். வாகைசூடன் தன் படையுடன் வெளிபுகுந்தான். நீண்ட துதிக்கையை எதிர்க்கும் ஒற்றைச் சிறகெனக் களம் மாறியிருந்தது. சோமசேனன் வெறிச்சிரிப்புச் சிரித்தபடி “கொல்க” என இருட் படைக்கு ஆணையிட்டான். அவர்கள் திரண்ட பாறைவடிவங்கள் கொண்டு சிறகை மோதி மோதி அழித்தனர். நூற்றுக்கணக்கில் புலி வீரர்கள் மடிந்து கொண்டிருந்தனர். எண்திசைத் தோளன் கொற்றவைப் படையைப் பின்னணைத்து தமிழ்க்குடி எல்லைகளுக்குள் திரும்பச் சொல்லிய ஆணையை பன்னிரு புரவி வீரர்களிடம் அளித்தான். வழியெங்கும் சிங்கை வீரர்களால் வெட்டியெறியப்பட்ட தகவல் குழுவில் மூவரே ஈச்சியின் முன் குருதியொழுக நின்றார்கள். “சிங்கைப் படையும் நுழைந்து ஒருங்கி விட்டன. மூவாயிரம் பேர் கொண்ட பெரும்படை அங்கு யானையின் துதிக்கையென நம் வீரர்களை அறைந்து வீழ்த்துகிறது. கொற்றவை படையைத் தமிழ்க்குடி எல்லைகளுக்குள் திரும்பச் சொல்லி எண்திசைத் தோளனின் ஆணை” என மூச்சை இறுக்கிக் கொண்டு சொன்னான் புரவியில் வந்த வீரன். ஈச்சி அவனை நோக்கி ஒருகணம் உற்றாள். படைகளை ஒருக்கச் சொல்லும் ஆணையை சங்கொலிப்பவர்களுக்குச் சொன்னாள். முச்சங்கு ஒலித்தது. பேரிடியொன்று மின்னெலென விரிந்து வருவது போல் ருத்ரம் அப்புல்வெளியில் ஒலியறைந்தெழ கொற்றவைகள் களம் புகுந்தனர். நிலம் ஒருகணம் தாழ்ந்து எழுந்தது. புரவிகள் இருகால்களிலென புற்களில் மிதித்து விரைந்தன.

சோமசேனன் வெறிக்கூச்சலிட்டபடி உரக்கச் சிரித்து எரியும் குடில்களின் முன்நின்று பேய்க்களியாடியபடி நின்றான். ஈச்சி வியூகத்தை வேங்கையின் கூருகிர்களென மாற்றும் சங்கேத முரசை ஒலிக்கச் செய்தாள். பறையும் முழவும் முரசுகளும் ஒலித்தறைந்து பரவியது. கொற்றவை படையின் புரவிகளின் சீறல் கனைப்பைக் கேட்டு சிங்கையின் வேழங்கள் துதிதாழ்த்தி அத்திசையை நோக்கின. புல்வெளியை இரண்டாகப் பிரித்து சிங்கையின் அரசபடை துதிக்கையென நீண்டு இருட் படையையும் புலிகளையும் பிரித்தது. எண்திசைத் தோளன் ருத்ரத்தின் பேரொலி கேட்டு நீலன் எழுந்தான் என மெய்ப்புல் எழ வெளியை நோக்கினான். ருத்ரம் எழுந்தது ஈச்சியின் கரங்களிலென நோக்கியவன் பின்னணைக எனக் கூவினான். அரை நாழிகையில் துதிக்கையைக் கீறி அப்பால் நின்று ஆடியபடியிருந்த இருட் படைக்குள் கொற்றவை படை நுழைந்து பிரிந்து இறங்கியது. கொற்றவைகளின் கொல்வேல்கள் இருட் படையின் விழிகளைக் குத்தின. வாள்கள் மலர்த்தண்டுகளெனத் தலைகளைச் சீறியறுத்தன. வேங்கையின் கூர் உகிர்கள் இருட் படையைக் குத்திக் கிளறியது. கொற்றவைகளை நோக்கிச் சிங்கைப் படை திரும்பித் தாக்கத் தொடங்க சத்தகன் மாமந்தியென எழுந்து “அகூஹ்க்” என நெஞ்சறைந்து கூவினான். கொல்வேல் ஆடவரும் மகளிரும் இருமலைகளில் மோதி மோதி எதிரொலிக்கும் பேரிடியின் அதிர்வுகளென அகூஹ்க் அகூஹ்க் அகூஹ்க் எனப் பெருங்கூச்சல்கள் எழுந்தன. சிங்கைப் படையின் துதிக்கை இரண்டாகப் பிளந்தது. சத்தகன் தன் படையுடன் கூவியபடி தேர்களிலும் புரவிகளிலும் தாவி கொற்றவைகளுடன் இணைந்து கொண்டு இருட்படையின் மார்புகளையும் தலைகளையும் தன் மலைக்கரங்களால் அறைந்து உடைத்து வீழ்த்தினான். அவன் படையும் கதைகளையும் வேல்களையும் சுழற்றியபடி பேய்க்களியாடியாது. உதிரர் உடைந்த துதிக்கையில் நின்றிருந்த எட்டு வேழங்களைத் தன் படையுடன் சென்று அறைந்து வீழ்த்திக் கொன்றார். துதியின் தண்டுப்பகுதியை எண்திசைத் தோளனும் வாகை சூடனும் இரு மாபெரும் எரியம்புகளென விரிந்து பட்டின வெளியை நோக்கி விரட்டினர்.

நிலவையின் வாளில் குருதி வடிய வடிய அவள் உளம் தாகம் தாகமெனத் தவித்தது. சூடான குருதி உடலில் தெறித்து வடிகையில் தன்னுடல் இன்னும் இன்னுமெனத் தவிக்கும் கொல்லாயுதம் எனத் துடிப்பதை நோக்கி நோக்கி விசை கொண்டெழுந்தாள். ஈச்சி கொல்வேலால் கழுத்துகளையும் விழிகளையும் குத்தியெறிந்தாள். கரத்தில் அகப்படும் வாளால் கரங்களையும் தலைகளையும் வெட்டி வீசினாள். இருட் படைகளின் விரல்களை அறுத்து நெஞ்சினுள் வாளைப் பாய்ச்சினாள். தம்முன் நிற்பது பெண்கள் எனக் கண்ட இருட்படை வீரர்கள் வெறிகொண்டு அவர்களைத் தாக்கினர். பெண்புலிகளைக் கால்கள் பிடித்துச் சுழற்றித் தலையறைந்து கொன்றனர். சொல்லிற்கினியாள் தன் தேரிலிருந்தபடி தன் படையுடன் எரியம்புகளை சோமசேனன் ஒளிந்திருந்த படைக்காப்பை நோக்கிச் செலுத்தினாள். வாகை சூடன் திரும்பித் தன் படையுடன் சொல்லிற்கினியாளுடன் இணைந்தான். நூற்றுக் கணக்கில் இருட் படை சிதறியோடுவதைக் கண்ட சோமசேனன் வசைகளைச் சொல்லியபடி முன்வந்தான். இருட்படையின் உள்ளே சோமசேனனை கொற்றவை படை நெருங்கிய போது பெண்புலிகளை இருட்படை கதைகளால் தாக்கியது. தேரொன்றின் மேலேறிக் எரிகல்லென மின்னிய கதையை எடுத்துச் சுழற்றியபடி மண்ணிறங்கினாள் நிலவை. குருதி சடைத்துப் பெய்த மழைக்காடென அவள் தேகம் விம்மித் தெறித்துப் புடைத்தது. கதையைத் தூக்கி அறைந்து இருட் படை வீரனொருவனின் தலையை பானையுடைப்பவளென நொறுக்கினாள். தலை கூழெனத் தெறித்தது. கணமும் திரும்பாது அடுத்தவன். அதற்கு அடுத்தவன் என கொலை வெறியாட்டு ஆடினாள். அவள் முன் சிம்மம் நுழைந்த ஆட்டுப் பட்டியென இருட்படை வீரர்கள் அஞ்சியோடினர். அவளின் பேருருவும் விழிவீச்சும் கொலைவெறித் தெய்வமொன்று அமலையாடித் தீர்க்கிறதென அச்சமும் அனற் புழுக்களென அவர்கள் உடலைத் துளைக்க அஞ்சியோடி விலகினர்.

மறுபுறம் சத்தகன் இரு கரத்திலும் இரு இரும்புக் கதைகளால் இருள் வீரர்களின் நெஞ்சறைந்து கொன்று குவித்தான். சிங்கைப் படை அஞ்சியோடத் தொடங்கியது. கொற்றவைகள் நாநீட்டிக் குலவையிட்டுக் கத்தியபடி சோமசேனனை நோக்கி விரைந்தனர். அவ்வொலிப் பெருக்கு சரிவிலிருந்து மேலேறும் நெருப்புப் பேராறென தான் இருக்கும் மேட்டு நிலத்தை நோக்கி எழுந்து வருவதைக் கண்டு சோமசேனன் விழிகொள்ளாச் சினத்துடன் தன் பெரும் கதையை நிலத்தில் அறைந்து கூவினான். புலிப்படையின் பறைகளும் முழவுகளும் முரசுகளும் மின்னித் துடித்துத் தோல்கள் கிழிந்தன. கிழிந்த தோல்களைப் பற்களால் கடித்தபடி நாண்கூட்டிப் பறையொலி எழுப்பினர் வீரர்கள். புரவிகளிலிருந்து குதித்திறங்கி மடிந்த இருட் படையின் உடல்களின் மேலேறி நின்று கொற்றவைகள் போர் தொடர்ந்தனர். சொல்லிற்கினியாள் கார்மிழலியிலிருந்து எரியம்புகளை கண்ணிமை இடைவெளியுமின்றி எய்தபடியிருந்தாள். சோம சேனனின் அருகிருந்த வீரர்கள் அவ்வெரியம்புகளால் அலறியபடி வீழ்ந்தனர். அவள் கரங்களை நோக்கினான் வாகை சூடன். பன்னிரு கரங்களுடன் எழுந்த குருதிக் கொற்றவையென விழியை சோமசேனனை நோக்கிக் குத்தி நிறுத்தி அவனைச் சுற்றி நின்றவர்களைச் சுழற் காற்றென அறைந்து கொன்று கொண்டிருந்தாள். ஈச்சி கொல்வேலை எறிந்தபடி சோமசேனனை நெருங்கிச் சென்றாள்.

வானில் மேகப் பெருக்குச் சுழன்று விலகிப் பெருவட்டம் உண்டாகியிருந்தது. நிலா தெறித்து ஒளிர்ந்தது. வெளிச்சத்தில் நிழல்களின் பெரும்போரென கால்கள் அந்தரத்தில் மிதக்கும் போது வேழங்களிலும் தேர்களிலும் நிழல்கள் நடந்தன. தலைகள் உருளைக் கற்களென மண்ணில் நிழலாடின. குருதியின் சீறல் நிழல்கள் எங்குமெழுந்து ஓடின. புரவிகளின் கனைப்பொலியும் வேழங்களின் பிளிறல்களும் காற்றை உதைத்தெழுவது போல் வெளியேகி விரிந்தன. வெளிச்சத்திற்கும் இருள் நிழல்களுக்குமான போரெனக் களம் மாறியது.

நிலவை தன் கதையால் வேழமொன்றின் நீண்டு தொட முனைந்த துதிக்கையை ஓங்கியறைந்தாள். தேரொன்றின் உச்சியில் தாவி ஏறி அருகே நின்ற மா கரும் வேழமொன்றின் மேலிருந்த சிங்கைப் படையாட்களை கதையால் ஓங்கி அறைந்து கால்களால் தள்ளி வீழ்த்தினாள். அவள் உருவின் முழுவிசையில் விண்ணுக்கும் மேலுமொரு விண்ணுக்குமெனத் தாவியெழுந்தாள். இருளில் கூச்சல்கள் எழுந்தன. வெறியாட்டு வந்தவர்கள் போல் நிலவையை நோக்கி விழிதிகைக்கச் சீறல் குலவை கொட்டினர் பெண்புலிகள். சத்தகன் இருகதைகளையும் தூக்கியபடி அகூஹ்க் என அவளை நோக்கிக் கூவினான். வேழத்தின் குடையை அடித்து வீழ்த்திக் குருதிசொட்டும் கதையை காற்றில் சுழற்றியபடி பேருடலெங்கும் குருதிவழிந்து தடித்து ஊற்ற அவளின் பின்னற்கூந்தல் நாகசுழல்வென வால்துடித்து ஆடிச் சீறியது. கொல்விலங்கெனக் கர்ஜித்த நிலவையை நோக்கிய வாகை சூடன் நெஞ்சு விம்மி உளமெழுந்து ஆடினான்.

எண்திசைத் தோளன் தன் பேரிடிக் குரலால் சீறல் குலவையிட்டான். அதை அவன் படைவீரர்களும் எதிரொலித்தனர். போர்க்களம் எழுந்திட்ட குருதிக் கொற்றவையை வணங்குக என முரசுகள் முழங்கின. பறைகளில் தாளங்கள் தாவியாடிக் கிழிந்து கதறின. வேல்களும் வாள்களும் கதைகளும் மோதிய ஒலியலைகள் இருளைக் குளமென அலைத்தன. அக் காட்சியைக் கண்ட சோமசேனனின் கரங்கள் ஒருகணம் தழைந்து கால்விரல்கள் அறுபட்டவை போல் நடுங்கின. இருள் வீரர்கள் சொல்லழிந்து விலகியோடினர்.

சொல்லிற்கினியாள் சோமசேனனின் வலத்தோளில் ஒரு எரியம்பை பிசிறில்லாமல் நுழைத்தாள். அவன் அதைப் பிடுங்கி எறிந்தபடி ஈச்சியை நோக்கிப் பாய்ந்தான். அவள் சிற்றுருவம் அவனைச் சுற்றிச் சுழன்று திரும்பியது. ஈச்சியின் கொல்வேலைக் கதையால் அறைந்து உடைத்தான் சோமசேனன். சத்தகன் தன் கதையுடன் சோமசேனனை எதிர்கொண்டான். “இது எங்களின் போர் சத்தகா. நீ விலகு” என உறுமினாள் ஈச்சி. கதையை அவளிடம் நீட்டியபடி அமைதியாக நின்றான் சத்தகன். அவள் கதையை வாங்கி நிலத்தில் ஓங்கியறைந்து சோமசேனனின் கதையை அறைந்தாள். அவன் சுழற்றி வீசியபோது அதை ஒழிந்து பின் வந்து முதுகில் ஓங்கி அறைந்தாள். காட்டு விலங்கு போல் ஓலமிட்டு வெறிகொண்டான். அவனது பருத்த காளையுருவம் இருட்டில் பெருங்கொம்புகளுடன் நிற்பவனெனத் தோற்றம் கொள்ளச் செய்தது. நிலவை அவனை நெருங்கினாள். இருகதைகளுடன் இருபுறம் நின்றிருப்பவர்கள் பெண்கள் என்பதை அவனால் தாங்கவே முடியாமல் அவனது இருள் மொழியில் வசவுகளை உரக்கக் கூவியபடி கதையை வீசித் தூக்கி அருகிருந்த தன் வீரர்களை அறைந்தான். மண்ணில் ஓங்கி அறைந்து ஈச்சியையும் நிலவையையும் போருக்கு அழைத்தான்.

அவர்களைச் சுற்றி வானில் விரிந்தது போல் வட்டமொன்று விலகியது. மூன்று பேரும் கதைகளை நிலத்தில் ஊன்றியபடி அசையாமல் நின்றார்கள். இருட் படையினரும் சிங்கைப் படையினரும் சோமசேனனின் பின்புறம் ஒருங்கினர். புலிப்படையின் ஆண்களும் பெண்களும் ஈச்சிக்கும் நிலவைக்கும் பின்னால் திரண்டனர். போர் திரிசூலமெனச் சுருங்கிக் களத்தின் நடுவே குவிமையம் உண்டாகியது. மெல்ல மெல்ல அமைதி இருளென உறைந்தது. சோமசேனன் ஈச்சியை நோக்கிக் கதையால் எழுந்தான். அவனை இடப்புறம் ஒழிந்து கதையின் தண்டில் அறைந்தாள் ஈச்சி. கதை கை நழுவக் கரங்களைத் தூக்கி ஈச்சியின் கதையைப் பற்றி ஈச்சியுடன் சேர்த்துக் கதையைச் சுழற்றி வீசினான். நிலவை அசையாமல் நின்றாள். தனது பெருங்கதையைத் தூக்கி வாள் சுழற்றுவது போல் சுற்றியபடி மதங் கொண்ட வேழமென நிலவையை நோக்கிச் சினவிழிகள் கொதிக்க அலைக்குழல்கள் புரள எரிவேழமெனப் பாய்ந்தான். நிலவை கதையை நிலத்திலிருந்து ஓங்கிச் சுழற்றியபடி விலகி அவன் முதுகில் அறைந்தாள். சோமசேனனின் வாயிலிருந்து இரத்தம் கட்டித் துளிகளெனக் கொட்டியது. புலிப்படை வீரர்கள் உற்சாகத்தில் துள்ளிக் குதித்துச் சீறல் குலவைகள் அரவுகள் படையெழுவதைப் போல் திரண்டெழுந்தன. திரும்பி உறுமலுடன் நிலவையை நோக்கியவன் குருதியைத் துப்பிக்கொண்டு நிலவையை நோக்கி வந்தான். அவளை விழிநோக்கினான். நிலவையின் விழிகளில் அதன் பின்னே யாருமில்லை முன்னிருப்பது போருடலென எழுந்த தொல்மிருகம் எனக் கண்டான். கதையை இருகைகளாலும் பற்றிப் பிடித்து பித்தெழுந்து அவளைத் தாக்கத் தொடங்கினான். நிலவை விலகியும் ஒழிந்தும் பாய்ந்தும் கதை வீச்சிலிருந்து உச்சினாள். சிங்கைப் படைகள் தேர்களின் மேலும் வேழங்களின் மேலும் ஏறி நின்று அக்காட்சியை மெய்ப்புல்கள் எழ நோக்கி நின்றன.

சொல்லிற்கினியாள் படைகளை விலக்கியபடி முல்லையைக் கொன்ற கொல்வேலுடன் கதைக்களம் வந்து நின்றாள். ஈச்சி எழுந்து கொல்வேலொன்றை எடுத்தாள். நிலவை தன் கதையை ஓங்கி அம்பு பாய்ந்திருந்த தோளில் அறைந்தாள். சோமசேனன் விழிகள் கலங்கிக் குழம்பி பின் நிலைகொண்டான். ஈச்சி அவள் வேலை அவன் தொடையில் பாய்ச்சினாள். மரக்குற்றியில் குத்தியது போல் உள்நுழையாமல் விழுந்தது கொல்வேல். பறைகள் மெல்ல எழுந்தன. இருட்படை வீரர்கள் கூச்சலிடத் தொடங்கினார்கள். எண்திசைத் தோளன் அவர்கள் எக்கணமும் களம் பாய்ந்து கொல்லும் விலங்குகள் எனச் சொல்லி வீரர்களை நிரையிடும் ஆணையை எழுப்பினான். “கொல் அவனைக் கொல்” எனப் பெண்புலிகள் உரக்கக் கூவிக் குலவை கூடிப் பேய்க்களி வெறியெனச் சுழன்றாடியது. சிங்கை வீரர்கள் அக்குவிமையத்தை நோக்கி அம்புகளை எய்யத் தொடங்கினர். வாகை சூடன் தன் படையுடன் எழுந்து அம்புப்பெருக்கை அனற்பெருக்கால் எதிர்கொண்டான். சொல்லிற்கினியாளின் கரத்தில் கொல்வேலும் விழியில் சோமசேனனும் மட்டுமே நின்றிருந்தனர். சொல்லிற்கினியாளை முகம் நோக்கி வெறியுடன் உறுமியபடி வந்தான் சோமசேனன். ஒருமின் கணத்தில்
கொல்வேலை வானில் எறிந்து அவன் அதைத் தலையுயர்த்திப் பார்த்த நொடியில் அந்தரத்தில் எழுந்து கொல்வேலைப் பற்றி ஓங்கிச் சொருகி அவன் வலவிழிக்குள் பாய்ச்சி புறந்தலையால் வெளியேற்றினாள். ஆறு சோதரிகளெனப் பன்னிரு கரங்கள் விரித்தெழுந்து குருதி சிறிய அவன் முகத்தினை அசையாத கொல்முகத்துடன் மண் நின்று நோக்கினாள்.

புலிப்படை வெறியாட்டென எழுந்து இருட்படை வீரர்களை வெட்டிச் சாய்த்தனர். இருட் படை சிதறி வனங்களுக்குள் ஓட உதிரர் அவர்களை எலிகளென நசுக்கிக் கொன்றார். சோமசேனனின் நெஞ்சைக் கதையால் அறைந்து பிளந்தாள் நிலவை. வெறுங்கரத்தால் சோமனின் இதயத்தைப் பிய்த்தெடுத்துக் கரத்தில் தூக்கி உயர்த்திப் பிடித்தாள். பெண்புலிகள் விழிகளில் நீர்பெருக அவளை வணங்கினர். சொல்லிற்கினியாள் ஒரு வாளை எடுத்து சோமசேனனின் தலையை வெட்டி கொல்வேலில் ஊன்றினாள். ஈச்சி அவன் குடலை இழுத்து உருவிக் கழுத்தில் அணிந்து கொண்டு பேய்ச்சிரிப்புச் சிரித்தபடி அமலையாடத் தொடங்கினாள். சிங்கைப் படைகள் சிதறி ஓடின. இருட்படை வீரர்களைக் கொன்று ஓயாது அவர்கள் உடல்களைப் பாளம் பாளமாகச் சிதைத்தனர் கொற்றவைகள். ஆண் புலிகள் அவர்களின் பேய்க்களியைக் கண்டு அஞ்சி விலகினர். தேர்களையும் காயம்பட்டவர்களையும் ஒருக்கினர். தேரில் நின்ற வாகைசூடன் ஈச்சியையும் நிலவையையும் சொல்லிற்கினியாளையும் நோக்கினான். அம்மாபெரும் பிணக்குவியல்கள் மேலே அமலையாடிய பெண்புலிகளை விழியுற்ற போது அது போரே அல்ல பெருநடனத்தின் வீச்சில் நிகழ்ந்து முடிந்த கொலையாட்டு என உளம் குலைய அவ்வெறிபுரள் காட்சியை நோக்கி நின்றான்.

இளம் வீரர்கள் அவர்களின் ஆத்திரத்தை அஞ்சி களத்தை விட்டு வீதியில் திரண்டனர். போர் முற்றிற்று எனச் சங்குகள் முழங்கின. பட்டினம் திரும்பும் பாதைகளெங்கும் களிவெறிக் கூச்சல்கள் எழுந்தன. அங்கு நிகழ்ந்த போரொன்றை எந்த வீரனும் களத்தில் கண்டதில்லை. எந்தப் பாணனும் சொல்லாலும் கண்டதில்லை. அது கொற்றவைகளின் போர். கொலைவெறியாட்டின் அழிகரங்களென இம்மண்ணில் தோன்றிய ஒவ்வொரு தொல்தெய்வமும் தோளும் கரங்களும் வாள்களும் கதைகளும் கொல்வேல்களும் எரியம்புகளும் கொண்டெழுந்து ஆடி முடித்த வஞ்சினம்.

தமிழ்க்குடி எல்லையைத் தேர்கள் நெருங்கிய போது ஈச்சி நிலவையின் தோளில் சாய்ந்தபடி “அவனை அறைந்தே கொன்றிருப்பேன் அக்கா” எனச் சிறுமியைப் போலக் கூவினாள். “பார்த்தேன். உடும்பின் வாலைப் பிடித்துச் சுழற்றியெறிவதைப் போல உன்னை அவன் சுற்றியதை” எனச் சிரித்தாள் நிலவை. “கதையின் பிடியை விடாத உடும்பக்கா. என் பிடியைப் பற்றி உனக்குத் தெரியாதா” எனக் குழைந்து அவள் தொடையில் தலை சாய்த்துப் படுத்தாள். சொல்லிற்கினியாள் மறுதொடையில் துயில் கொண்டிருந்தாள். நிலவை விடியலில் முதற் கதிர்கள் மண்தொட உன்னுவதை நோக்கியபடி மடியில் துயின்ற இருவரையும் பார்த்தாள். ஒரு கணம் தெய்வங்களைத் துயிலாற்றி வைத்திருப்பவளென அவள் அகம் உருகிக் கரைந்தது. பின் அவர்களது காயங்களை நோக்கினாள். இருவரும் அப்படியொன்று இருப்பதையே மறந்து அன்னை மடியில் மகவுகளெனத் துயின்று கொண்டிருந்தனர்.

முன்முகப்பில் வானவில் கோடுகள் போன்ற கழுத்துக் கொண்ட புறாவொன்று வந்தமைந்து குறுகுறுத்தது. நிலவை விழிகளைத் திறந்து அதை நோக்கிப் புன்னகை அவிழ நின்றாள். லீலியா எழுந்து வந்து முகப்பில் நின்று ஆழியை நோக்கினாள். நிலவை அவளருகே சென்று அவள் தோளைத் தொட்டாள். முகம் மூடியிருக்கும் துணியை அகற்றியிருந்த லீலியாவின் இதழ்கள் சொல்லிற்கினியாளை நினைவூட்டின. லீலியா மெல்ல இதழ் விரித்துச் சிரித்தாள். முழுநிலவு போன்ற அவளின் விரிவதனத்தை
ஏந்துபவள் போல பிடித்துக் கொண்டாள் நிலவை. அவள் என்ன என விழித்து நிலவையை நோக்கினாள். ஒன்றுமில்லையென ஒரு ஆட்டலில் முகம் கலைந்து சிரித்த போது லீலியா நிலவைக்குள் எழுந்த தோழிகளைக் கண்டாள். வானை நிறைத்த புறாக்கள் ஆயிரமாயிரம் சிறகொலிகளால் விடியலை ஏந்திக் கொண்டு விண்ணுக்கும் மண்ணுக்கும் படபடத்தன.

TAGS
Share This