62: புரவி அரசன் : 02
உயம்பவின் விழிகளில் மினுங்கிய சினம் செங்கருவிழிகளென அழல் கொண்டிருந்தது. லாமக தன் பொற்சிறகுகளை அம்புச் சிதறலென உலுப்பி உயம்பவை நோக்கிச் சொல்லற்று நின்றது. உயம்ப மெல்லக் கனைத்து அமர்ந்தபடியே குரலை நாணேற்றியது போல் பேசத் தொடங்கியது. “விண்புரவி அரசரே. இன்றுடன் உங்கள் ஆதிக்கம் முடிவடைய வேண்டும். புரவி நெறியெனச் சொல்லப்படுபவை மந்திரச் சுனையில் கலந்த நஞ்சு எனக் கண்டேன். பாதாளப் புரவிகள் தாம் விழையும் போது எங்கும் செல்லும் உரிமை கொண்டவையெனவே நெறி மாற்றி எழுதப்படல் வேண்டும். நாங்கள் உங்களின் போர்க்கலன்களும் பலிப்புரவிகளும் அல்ல. எங்களுக்கென்ற வாழ்வின் நியமங்களை நாங்களே வகுத்துக் கொள்கிறோம். இச்சுனை இன்று முதல் எங்களதும் என நெறி வகுக்கிறேன். ஆற்றல் அனைவருக்கும் பொதுவானது. மண்ணும் விண்ணும் பாதாளமும் சரிநிகர் சமானமானது. குடிகள் அனைவரும் உரிமையின் முன்னும் சட்டத்தின் தராசிலும் ஒருபடித்தானவர்கள். இத்தனை காலம் நெறிகளால் தளையுண்டது இன்றுடன் முடிகிறது. நாம் விரும்பினால் உங்களின் போர்களில் பங்கெடுப்போம். அரசுசூழ்தலில் எமது மூத்தோரும் அமர்வர். இறுதி முடிவின் ஏற்பு சரிபாதி பாதாளப் புரவிகளின் விருப்பினாலும் அமைதல் வேண்டும். இனி மேல் கீழ் நடுவென எதுவுமில்லை. அனைத்தும் தட்டையான புல்வெளியில் தீர்மானமாகும்.
நீங்கள் இதனை மறுத்தால் போர் வென்று உங்கள் நெறியைக் காத்துக் கொள்ளலாம்” என்றது உயம்ப. லாமக அதன் சொற்களால் சினம் தழலுறப் பொற்சிறகுகள் விம்மிப் படபடக்க முன்னிரு கால் தூக்கி உயர்ந்து மண்நின்றது. அதன் விழிகள் பொற்சிவப்பென ஆகியது. “அறிந்து தான் பேசுகிறாயா மூடனே. இது தொல்புரவிகளால் வழி வழியாகக் கொடித்தொடர்ச்சியாக அளிக்கப்பட்ட உரித்துகள். விண்ணவரே மண்ணையும் பாதாளத்தையும் ஆள்பவர்கள். விண்ணிருந்தே அனைத்தும் அறியப்படும். உனது குடிகள் நெறியற்றவர்கள். மண்ணையும் விண்ணையும் அறியாதவர்கள். அவர்கள் விண்புரவிகளைப் பணிவதனாலேயே இத்தனை காலம் பாதாள உலகு காக்கப்பட்டது. மந்திரச் சுனையின் நீரை அருந்தியதால் நீ விண்புரவி ஆகுவதில்லை. இது இயற்கையின் நியதி. போர் என்றால் போரே கொள்வோம். உனது எளிய கனவுகளுக்கும் பிதற்றல்களுக்கும் உன் குடி முழுதழியும். எம்மைப் பணிந்து சிரமேற்பவர்கள் பாதாளத்தை மீண்டு ஆள்வார்கள்” என்று சீறல் கனைப்புடன் சொல்லி முடித்தது.
“அவ்வாறே ஆகுக” என்ற உயம்ப பாதளப் புரவிகளினை நோக்கிக் கனைத்து ஒலியெழுப்பியது. இளம் புரவிகள் கூட்டம் உயம்பை நோக்கி உந்திப் பறந்தும் ஓடியும் வந்தன. “மேற் சுனையை அருந்துக இளவல்களே. மூத்தோரையும் அழைத்து வருக. பூதகணங்களுடனான போர் முடிந்தது. இனி நமக்கான போரைத் தொடங்க வேண்டும்” என்றது. இளம் புரவிகள் யாருடன் போர் என அறியாது உயம்பவின் விழிகளை நோக்கி நின்று பதற்றமடைந்தன. “போர் விண்புரவிகளுக்கு எதிராக. இனி நாம் பாதாளமும் மண்ணும் விண்ணும் ஆள்வோம்” என்றது. சினத்துடன் லாகம பறந்து சென்று விண்புரவிகளை ஒருக்கியது. அங்கு நிலவிய கனைப்பொலிகள் நாகங்கள் நுழைந்த களம் போல் தோற்றியது. மூத்த பாதாளப் புரவிகள் உயம்பவின் முன்வந்து “என்ன செய்கிறாய் மைந்தா. விண் புரவிகள் எல்லையற்ற ஆற்றலும் மதிநுட்பமும் கொண்டவை. நமது குடிகள் மூர்க்கர்கள். நம்மை நெறிகளால் கட்டுவதே நம் குடி வாழும் வழி. அதனாலேயே இயற்கை நம்மைப் பாதாளத்தில் வைத்துள்ளது. மண்ணும் விண்ணும் நமக்குத் தொலைவானவை. மேலும் விண்புரவிகளுடன் மோதினால் நம் குடி அழியும். நம் பெண்புரவிகள் விண்ணில் அடிமைகளென வாழும். இது நமக்குத் தேவையற்றது. லாகமவிடம் சென்று உன் சொற்களுக்கென மன்னிப் கேள். பதிலுக்கு உன் சிரசைக் கேட்டாலும் கொடுத்துக் குடி காத்து நில்” என்றனர்.
உயம்ப எழுந்து நின்று தன் கருஞ் சிறகுகளை உலுப்பி உடலைத் தினவெடுத்து ஒரு காலை அருகிருந்த பாறை மேல் வைத்தபடி சொல்லியது “மூத்தோரே உங்களின் காலங்கள் இருளில் இருள் மடிவுகளில் தேங்கிய சேற்று நீர்போல முடிந்து விட்டவை. எமது காலம் எங்களின் நெறிகளாலேயே ஆக்கப்படும். விண்புரவிகள் ஏற்கெனவே எங்களை அடிமைகளெனவே கருதுகின்றன. நாங்கள் அவர்களின் களப்பலிகள். தொண்டுப் புரவிகள்.
நான் அதை ஏற்கப் போவதில்லை. வானெழுந்து நிற்கின்ற சிகர உச்சிக்கு நான் சென்று விட்டேன். அங்கிருந்து அனைத்தையும் நோக்கியும் விட்டேன். என் விழிகள் அக்கனவிலிருந்து இனி மீளா. நமது குடி காக்கப்படுவது ஆயிரமாயிரம் இறப்புகளின் மேலென்றாலும் நான் அதைப் புரிவேன். வருங்காலம் வெல்பவர்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கும். எளிய நற்சிந்தனைகள் கோழைகளின் கூடாரம். நீங்கள் திரும்பிச் சென்று எங்கள் பெண்களிடமும் குழந்தைகளிடம் இந்த நற்சிந்தனைகளைச் சொல்லுங்கள். நாங்களே வழி வழியாக விண்புரவிகளின் அடிமைக் குடிகளென வாழ்கிறோம் என விளக்குங்கள். அவர்களை விண்புரவிகள் அடிமைகளாக்காமல் இருக்கவே பாதாளத்தில் அடிமைகளாக ஒழிந்திருக்கிறோம் எனப் போதியுங்கள். விண்ணும் மண்ணும் எங்கள் தலைகளைப் பலியிட இயற்கை அமைத்த பலிமேடைகள் எனச் சொல்லுங்கள்.
நான் இங்கிருந்து வென்று மட்டுமே திரும்புவேன். இல்லையேல் களத்தில் மடிவேன். என்றாவது இன்னொரு இளம்புரவி நான் கண்டதை அதுவும் காணும். அதன் விழிகளில் விடுதலைச் சுடர் மின்னும். அதன் தலையையும் பலிகேளுங்கள். இல்லையேல் தன்னைப் பலியிடவாவது அனுமதியுங்கள். அடிமையாய் வாழ மறுப்பது தான் புரவிகள் நெறியென்று என்றேனும் நீங்கள் அறிவீர்கள்” என்றது உயம்ப.
மூத்த புரவிகள் உயம்பவின் உறுதி மாறாத சொற்களைக் கண்டு அஞ்சி விலகின. எஞ்சிய பாதாளப் புரவிகள் மந்திரச் சுனையின் நீரை அருந்தி ஆயிரம் புரவிகளின் மூர்க்கமும் விசையும் கொண்டன. ஆண்டாண்டு காலம் இருளில் திரட்டிய நஞ்சைச் சீறின. அவற்றின் மூச்சொலிகள் களத்தில் அனல் காற்றை எழுப்பின. விண்புரவிகள் தங்கள் படைகளை பல்லாயிரம் சிறகுகள் கொண்ட சூரியன் என வகுத்தன. ஆறு இளம் புரவிகளை அழைத்துப் பாதாளம் சென்று எஞ்சியவர்களைத் திரட்டி மேல்வரச் சொல்லி ஆணையிட்டது உயம்ப.
களம் கனைப்பற்று அரைநாழிகை விழியுறுகையென உறைந்து நின்றது. சூரியனை வெல்லும் பருந்தென வியூகம் அமைத்தது உயம்ப. லாகம சூரியனின் நடு அச்சில் அடிமைப் பூதகணங்களின் மேல் எழுந்து மாகனைப்புடன் பனிப்பிரவாகமென உறைந்திருந்த காலத்தைக் கீறிப் பிளந்தது. உயம்ப ஒற்றைக் காலை உந்திச் சிறகெழுப்பி விண்ணெழுந்தது. இருளின் அத்தனை ஆற்றலும் ஒவ்வொரு நரம்பிலும் சுடர்வீச ஒளிரும் மாபெரும் சிறகுகள் கொண்ட பாறைப்புரவியென எழுந்து நின்றது. அதன் சிறகசைப்பில் புழுதிப்புயல்கள் எழுந்தன. விண்ணெழுந்த தங்கள் மீட்போனைக் கண்ட இளம் புரவிகள் பல்லாயிரம் இருள் நாட்களில் பாதாளம் சேர்த்து வைத்த மெளனத்தை உடைத்துச் சீறிக் கனைத்தன. விண் புரவிகள் மேனிகள் காந்த அடிமைகளின் கூக்குரல்களைக் கண்டு கோபத்தில் திமிறின. சக்கரம் கொண்டு ஓடும் சூரியனெனப் பாதாளப் புரவிகளை நோக்கிப் பாய்ந்தன.
இரண்டு மாபுயல்கள் ஒன்றை இன்னொறு தழுவிக் கடப்பதைப் போல் போர் வெடித்தது. புற்களும் ஆயுதங்களும் கவசங்களும் அடித்துச் சுழன்றன. புரவிகளின் மூர்க்கம் மண்ணிலும் விண்ணிலும் கனல் மழை பொழியச் செய்தது. ஆகாயத்தில் வந்து நின்ற தெய்வங்கள் புரவிகள் தமக்கிடையே மோதிக்கொள்வதைக் கண்டு விழியுறைந்து நின்றன. அப்போர் விண்ணும் பாதாளமும் மோதிக் கொண்ட ஆயிரமாயிரம் பெருங்கதைகளின் ஓசையெனக் காற்றை அலறடித்தது. விசையும் விசையும் தழுவிக் கொண்டு விலகின. பறவைகளும் வேழங்களும் புலிகளும் சிம்மங்களும் கரடிகளும் மந்திகளும் பாம்புகளும் முயல்களும் நரிகளும் கழுதைப் புலிகளும் தொலைமலைகளில் களத்தை நோக்கி விழியுறுத்தன.
சுழலும் காற்றிடை காற்றுகள் அறைபட்டு விலகுவது போல் புழுதிகளும் சருகிலைகளும் பறந்து உலைந்தன. பாதாளத்திலிருந்து எழுந்த ஆயிரமாயிரம் புரவிகள் மந்திரச் சுனையை அருந்திக் களம் ஏகின. கனைப்புகள் கூடிக் கூடி விண்ணும் பாதாளமும் எதிரொலிகளால் அதிர்ந்து கொண்டிருந்தன. ஆழிப்பேரலைகள் அடித்துக் கொண்டேயிருக்கும் கரையென மண் கரைந்து படிந்து விம்மித் துடித்தது. உயம்ப விண்ணிலெழுந்து சூரிய வியூகத்தின் நடுச்சில்லில் அமர்ந்திருந்த லாகமவை நோக்கி பேரீட்டியெனப் பாய்ந்தது. லாகம தன் பொற்சிவப்பான சிறகுகளை விதிர்த்துப் பெருக்கி விண்ணிலெழுந்து போரிடத் தொடங்கியது. விண்ணிலும் மண்ணிலும் பாதாளத்திலும் இரண்டும் கட்டிப் புரண்டன. மோதி அறைந்தன. சிறகுகள் குத்தி இரு மேனிகளிலும் குருதியோடியது. புழுதி படிந்து காயங்கள் அடைத்துப் புதிய காயங்கள் கீறி விழித்தன. இருபத்தியொரு நாட்கள் புடவியதிரப் போர் நிகழ்ந்தது. மழையும் வெய்யிலும் இரவும் பகலும் பாலைகளும் வனங்களும் ஆழிகளும் பனி நிலங்களும் குருதி சிதறி உலர்ந்தன.
லாகமவின் நெஞ்சைத் தன் சிறகுநுனிகளின் உலோக முனைகளால் கீறிக் கிழித்து துடிக்கும் அதன் இதயத்தை வீசியெறிந்து போரை முடித்தது உயம்ப. சீறல் அணைந்து கனைப்பு ஓய மந்திரச் சுனையினருகிலிருந்து அரசாசனத்தில் அமர்ந்தது. எஞ்சிய பாதாளப் புரவிகளும் விண் புரவிகளும் அதன் முன் நிரை நிரையாய் அணிவகுத்து நின்றன. விண் புரவிகளில் மூத்தோர் எழுந்து வந்து உயம்பவின் முன் தலை பணிந்து நின்றனர்.
உயம்ப தன்னுள் சீறும் குருதிப்பெருக்கை நோக்கியபடி உரத்த குரலில் “அறிக. இன்றுடன் அனைத்து நெறிகளும் அனைவரின் பொருட்டும் சமமானவை. இருபத்தியொரு நாட்கள் சிந்திய புரவிகளின் குருதிக்கு மறுநீதியென்று எதுவும் இருக்கலாகாது. வஞ்சமும் பகையும் முற்றுறட்டும். புரவிகள் எங்கும் வசிக்கலாம். எப்புரவியும் எவரையும் இணையெனக் கொள்ளலாம். ஒருவரை ஒருவர் தாக்குவதோ அழிப்பதோ இன்றுடன் முடிகிறது. நமது குடிக்குள் இனிப் போர் இல்லை. போர்க்களமென்றால் நம்மை அழிப்பவர்களுக்கு எதிராக மட்டுமே. ஆயிரமாயிரம் புரவிகளின் உதிரம் சிந்தி உண்டாக்கிய நீதி இதுவே. இதை மீறும் எவரும் கொல்லப்படுவர். பழைய நெறியும் மரபும் இங்கு இக்கணம் அறுகிறது”.
உயம்பவின் சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த புரவிகள் ஓம் ஓம் எனக் கனைத்தன. ஒவ்வொரு சொல்லுடனும் தம்மைப் பிணைத்துக் கொண்டன. மந்திரச் சுனை அனைவருக்கும் பொதுவானதென முடிவாகியது. விண்ணும் மண்ணும் பாதாளமும் உயம்பவின் ஆட்சியில் ஒன்றென ஆகிற்று. புரவிகள் விண்ணையும் பாதாளத்தையும் விட்டு மண்ணில் நிலை கொண்டன. உயம்ப மரணித்து ஆயிரமாயிரம் ஆண்டுகள் ஆன பின்னும் அதன் குரல் தொல்தெய்வ ஆணையென ஒவ்வொரு புரவியினதும் குருதியின் நினைவில் ஒலித்தது.
அசலவின் கனவிலென எழுந்த உயம்பவின் கருந்திரள் முதுகின் மேல் அசல அமர்ந்திருந்தான். தலையில் பொற்கிரீடம் சூடிய உயம்பவின் மேல் சிம்மக் கிரீடம் அணிந்து இருகாலிலென உயம்ப நின்றிருக்க மினுக்கும் வாளேந்தி நிற்கும் அசலவின் சித்திரம் ஓவியத் துணியில் ஆடி ஒளிவீசியது. செம்மையின் ஒளிக்கூச்சலில் புரவிகள் விண்திரும்பத் தலைசுற்றல் வந்தவனென ஓடி வாயிலின் வெளியே வந்து நின்றான் அசல. செலினி அவனைப் பின் தொடர்ந்து ஓடிச் சென்று மதுக்குப்பியொன்றை எடுத்துக் கொடுத்தாள். தாகம் தாகமென உலர்ந்த தொண்டையில் எரியும் தாகமென யவன மது உள்ளிறங்கியது. அருந்திச் சற்று ஓய்வு கொண்டவன் செலினியை அழைத்து அவள் தலையை மெல்லக் குலைத்துச் சிரித்தான். அவ்வளைவில் அவன் கண்டதென்ன என அறியாத செலினி அவனது சிரிக்கும் முகத்தைப் பார்த்துப் புன்னகைத்தாள். நீயிரா அப்பாலெனக் கனைத்து ஒலியெழுப்பியது. மரப்பெட்டியொன்றில் அமர்ந்த அசல மூச்சைச் சீராக்கி வெளியே தெரிந்த குடிகளை நோக்கினான். களிவெறியும் பேச்சும் உரத்த சிரிப்பொலிகளும் மதியத்தின் எரிபெருக்கை ஏளனம் செய்தபடி குளிர் கொட்டின. அசல செலினியின் குறும் மண்ணிற விழிச்சரிவுகளை நோக்கினான். அவள் அவனருகே வந்து மரப்பெட்டியில் அமர்ந்து கொண்டாள். மதுக்குப்பியைத் திருப்பிக் கொடுத்தான். அவள் இரு மிடறு அருந்தி உதட்டை ஒருக்கிக் கசந்தது என்பது போல் முகத்தைச் சுருக்கிப் புன்னகைத்தாள். அவளில் குறும்புடன் ஓடும் இளம் புரவியைக் கண்டவன் அவள் வலக்கையை எடுத்துத் தன் கையில் வைத்துப் பார்த்தான். பெருங்கரத்தில் முல்லை இதழ்களென அவளின் கரம் அமைந்தது. மென்சிறு இதழ் விரல்கள். சிறியது எதுவும் அழகானது என எண்ணிக் கொண்டான் அசல. பெரியவை கேட்பது பெரியவற்றை என எண்ணம் தோன்ற அவளைப் பார்த்துப் புன்னகைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டு எழுந்தான்.
குடிப்பெருக்கிடை மறைந்து உருவழிந்த அசலவின் தொடுகையின் கதகதப்பை பூவிதழ் உள்ளங்கைக்குள் பொத்தி விரல் மடல்களை மடக்கினாள் செலினி.