66: பொற்தேர்
“ஐயமே அழகையும் அறிவையும் பெருமலையேறியின் காலில் சிறுகூழாங்கல்லென இடறி வீழ்த்துகிறது பொன்னா. இப்பொற் தேர் ஆயிரம் நுண்விழிகளால் பெருங் காலங்களில் கூடும் நுண்முனை அகங்களால் மேலும் நுணுக்கப்பட்டு இங்கு இங்கனம் ஆகிநிற்கிறது. மானுடர் ஆக்கிய அனைத்துக் கனவுகளும் இப்பொற் தேரைப் போன்றதே. எளிய உளமொன்றிற்கு இத்தனை பெருஞ்செலவு பகட்டெனவும் எதற்கென்றும் தோன்றும். வறுமையிலும் இன்மையிலும் உள்ளவர்க்குப் பகிர்ந்தளிக்கலாம் எனச் சொல்லும் நாவுகளும் உண்டு. ஆனால் மகத்தானவை எளிய உள்ளங்களுக்கானவை அல்ல. இம் மாபெருங் கலையாக்கம் மானுட உளக்கோலங்களின் அகவெழுச்சிகளின் ஆயிரமாயிரம் விரல் நடனங்களில் பொழிந்தது. இதன் ஒவ்வொரு பொன்னிழையும் பதிந்த அருமணிகளும் முத்துகளும் பவளங்களும் மானுட அகங்கள் தாம் அடைந்த கனவுச்சியின் சிறு நினைவாக இத்தேரில் சூடப்பட்டிருப்பது. இத்தேரில் நீ காணும் ஒவ்வொன்றும் எத்தனை காலமடிப்புகளில் ஊழிநடனங்களில் மீறி வந்ததென்று அறிவாயா. மகத்தானவை மட்டுமே அழிவுகளின் பின்னும் எஞ்சுபவை. மானுடத்தின் நினைவுப் பெருக்கில் இத்தேர் அழியாது என்றும் ஓடிக் கொண்டேயிருக்கும்.
கலையுள்ளங்கள் எளிய கனவுகளை மானுடருக்கு அளிப்பதில்லை. அவை பொன்னும் முத்தும் மரகதமும் மாணிக்கமும் வைரமும் படிகமும் குப்பைகளென வீசியெறியப்பட்டிருக்கும் தொல்சுரங்கத்தையே கையளிக்கின்றன. கலையென மண்ணில் நிகழ்வது எதுவும் மானுடச் செல்வத்தில் எந்த அருமணியை விடவும் மேலானது. மேலானதில் மேலானதென மானுடம் கண்ட கனவொன்றே இப்பொற் தேர். இதில் புடைந்திருக்கும் ஒவ்வொரு சிற்பமும் அதன் எழிலும் உன் ஐய விழிகளால் நோக்கும் பொழுது தன் அழகைக் கரந்து கொள்கின்றன. தான் விரும்பாதவன் தன்னை நோக்கும் பொழுது ஒளிந்து கொள்ளும் பேரழகியென” என்றார் முதுசிற்பி மங்கலச் செல்வர். அவரது விழிமணிகள் பொன்னை உருக்கி உருக்கி மீந்த பொற்துகள் கிண்ணங்களெனச் சுடர்ந்தன. மெல்லிய பொன்னுளிகள் நடுங்குவன போலிருந்தன முதுவிரல்கள். நகங்களின் இடுக்குகளில் பொன் சேர்ந்திருந்தது. அவரது பட்டாடையில் பொன்னிழைகள் மின்னியிழைந்தன. அவரே ஒரு பொற்சிலையென உரையாடுகிறார் என எண்ணினான் பொன்னன்.
பொற்தேரின் நூதனமான இடங்களை விழிகளால் உற்று மீண்டு பொன்னனை நோக்கிச் சிரித்தார். விரல்கள் காற்றில் முரசைத் தட்டுவன போல் அதிர்ந்து கொண்டிருந்தன. அவரது தூங்கும் வெண்தாடியில் மாலைக் கதிர்களின் பொன்னொளி மஞ்சள் தூங்கியது. அவருடைய மாணவர்கள் பொற்தேரின் நுட்பங்களைத் தங்களுக்குள் சொல்லிச் சொல்லி வியந்து கொண்டிருந்தனர். அவர்களது குரல்கள் நாகணவாய்க் கூட்ட ஒலிகள் போல் செவிகளில் கேட்டுக் கொண்டிருந்தன. மங்கலச் செல்வர் பொன்னனை அழைத்துத் தேரின் பிடிகளைக் காட்டினார். “ஏறிக் கால்வைக்கவும் தொட்டு மேலேறவும் மேலேறி நின்று பற்றிப் படித்து வீழாமல் நிலைகொள்ளவும் பொன்னே பிடியான இப்பெருந்தேர் ஓர் வாழ்க்கைத் தத்துவம் பொன்னா” எனப் புன்னகைத்தார். அவரது விழிகளில் பொன்னை அளந்து அளந்து கரைத்துக் கரைத்து வார்த்து வார்த்து புடைத்துப் புடைத்து மினுக்கி மினுக்கி பொன்னைப் பொன்னின் மேன்மையில் கொண்டு நிறுத்தும் நுண்மையுடன் ஒளிவீசியது.
“பொன்னே புடவியை அளக்கும் அலகு. இந்த நிலத்தின் தொல்கதைகளின் படி இத்தீவு செல்வத்தின் அதிபதி குபேரனின் மண்ணுலக அரண்மனை. அவனது அத்தனை செல்வமும் கற்பனையும் வளமும் இம்மண்ணில் பொன்னென விளைந்த காலமொன்றிருந்தது. பொன் அளவற்றுச் சிந்தியிருக்கும் மண்ணில் எது புடவியை அளக்கும் அலகென நின்றிருக்கும் பொன்னா. மனைகளும் வீதிகளும் பொன்னால் இழைக்கப்பட்டன. பொன்னால் மேனி நிறைத்துக் காற்றிடை வெளியின்றிக் குடிகள் தம்மைப் பொன்னால் உடுத்திக் கொண்டனர். பொன்னார் மேனியர்கள் எனச் சொல்லலாம். அவ்வளவு பொன் அளிக்கப்பட்டால் பொன்னென்பது மண்ணில் உதிர்ந்த தூசுக்குச் சமம். குபேரன் தன் செல்வத்தை அளித்ததன் மூலம் இத்தீவைப் பித்தாக்கினான்.
அழகாய்த் துலங்குவதால் அல்ல. தன் அருமையாலேயே புடவியில் பொன் மதிப்புக் கொண்டிருக்கிறது. அருமையென்றிருப்பவையே செல்வம். நிறைந்து ததும்பும் எதுவும் பொருளிழக்கும். அரிதென நின்றிருக்கும் எதுவும் காலவெள்ளத்தில் பெரும்விலை கொடுக்கப்பட்டுக் காக்கப்படும். ஒவ்வொரு உலோகமும் அதன் அளவினாலேயே மதிப்பிடப்படுகிறது. வெள்ளியும் செப்பும் ஈயமும் துத்தநாகமும் பொன்னினும் கீழானவை ஆனது பொன்னின் அழகினால் அல்ல அரிதினால். அரிதென ஆவதை மானுடர் நுட்பங்களால் மேலும் அரிதென மண்ணில் நிலைக்கச் செய்கிறார்கள். பொன் விளையும் குபேரனின் நகரில் மனைப் பொருட்கள் முதல் படைக்கலன்கள் வரை பொன்னின் பிரதிமைகளே. சூரியன் மண்ணைத் தொட்ட போது தன் கண்களைக் கூசிக் கொள்ளும் ஒளிவீச்சுடன் குபேரனின் தீவைக் கண்டது. பொன் அனைத்தையும் மயக்கிவிடக் கூடியது. விழிகள் பொன்னால் மயக்கடைந்தவர் மீள்வது அரிதினும் அரிது. பொன்னை விட அரிது. தனது ஒளிரும் தழல் வண்ணத்தில் மின்னும் தீவில் குபேரனின் முன் விழிகள் கசிந்து நீர்கொள்ள மண்வந்தது சூரியன்.
குபேரன் பொன்னால் படிகளிடப்பட்ட தடாகத்தில் மலர்ந்திருந்த பொற்தாமரைகளில் அமர்ந்து கலவி கொண்டிருந்த பொன் வண்டுகளை நோக்கியிருந்தான். சூரியன் அவன் முன் தோன்றிய போது புதிதாகச் செய்யப்பட்ட பொற்பாவையொன்றை அங்கே வைத்திருக்கிறார்கள் என எண்ணிச் சூரியனை நோக்காது பொன் வண்டுகளின் காதல் மயக்கைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தான். அவன் மேனியெங்கும் இழைந்த பொன்னின் நகைகளை அதில் பதித்திருந்த அருமணிகளைக் கண்ட சூரியன் அவனது அழகற்ற உடலை அப்பொன் நகைகள் மெருகெனக் கூட்டி அழகென அமைத்திருக்கிறது என எண்ணியது.
“வணங்குகிறேன் அரசே” என்றது சூரியன். அப்போது தான் அதுவோர் மானுடன் எனக் கண்டான் குபேரன். “யார் நீ. இங்கு என்ன செய்கிறாய். உன் மேனியெங்கும் பொன்னென மின்னுகிறதே. ஏதேனும் சாபம் கொண்டாயா” என நகைத்துக் கொண்டே கேட்டான். சூரியன் அவன் முன் உடலைச் சற்று வளைத்து “நானே பகலவன் அரசே. இப்புவியையும் இக்கோள் மண்டலத்தையும் ஒளியால் உயிர்விப்பவன்” என்றது. “ஆதவனா. வருக வருக. இவ் எளியோனின் குடிலுக்கு வருக” என்று சொல்லியபடி சற்று நிமிர்ந்து அமர்ந்து கொண்டு வணங்குபவனைப் போல் கைதூக்கி விட்டுக் கைகளை இருபுறமும் தழையவிட்டு அமர்ந்தான். குபேரனிடமிருந்த சோர்வையும் மதிப்பின்மையையும் உணர்ந்த சூரியன் சிலகணங்கள் நின்றது. பின் சொல்லெடுத்து அவனது அகத்தை அறிய எண்ணியது.
“அரசே. மண்மேல் நான் கண்ட மாளிகைகளில் இத்தீவே மகத்தான எழில் கொண்டது. எனது தழலின் பிரதிபலிப்பைத் தாங்காது எனது விழிகளே கூசுகின்றன. உங்களது கற்பனையில் உருவான இந்தத் தீவுக்கு ஈரேழு பதின்னான்கு உலகங்களிலும் நிகரிடம் இல்லை. உங்களிடம் சில வினாக்களைக் கேட்க விழைகிறேன்” என்றது சூரியன். சொல் என்பது போல் கைகாட்டினான் குபேரன்.
“இத்தனை செல்வம் கொண்டிருந்தும் தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாகத் தோன்றவில்லை. உங்கள் மேனியில் சலிப்பின் பாவனையையே சூடியிருக்கிறீர்கள். அது எதனால்” என்றது சூரியன்.
நீண்ட காலம் கழித்து ஒருவர் தன்னிடம் வினாக்களுடன் வந்ததைக் கண்ட குபேரன் உற்சாகமானான். அவனது ஞானமனைத்தையும் திரட்டி தங்கஆல் அமர்ந்து போதிப்பவனென எண்ணிக் கொண்டு பதிலளிக்கத் தொடங்கினான். “கதிரவனே. தீயில் ஒளியெனச் சுடருவதே மண்ணில் பொன்னென அமைந்தது. நான் புவியின் அனைத்து அருமணிகளையும் பொன்னையும் செல்வங்களையும் ஆக்கியவன். காப்பவன். ஆனால் அளிப்பவன் அல்ல. பொன்னை அளிக்கும் போது மானுடர் சித்தம் பேதலிக்கின்றனர். தங்கமோ செல்வமோ அளியென அளிக்கப்படலாகாது. அது உழைத்து ஈன்று கொள்ளப்பட வேண்டியது. உழைப்பற்ற செல்வமே இந்தத் தீவின் சாபம்.
குடிகள் எதை இயற்றுவதெனத் தெரியாது தங்கக் கப்பல்கள் செய்து அயல்தேசங்கள் சென்று அடிமைகளை வாங்கி வருகின்றனர். அடிமைகளுக்கும் தங்கத்திலேயே சங்கிலிகள் செய்து அணிவிக்கிறார்கள். தங்கத் தட்டுகளிலேயே அடிமைகளும் உண்கிறார்கள். செல்வம் மானுடர்க்கு கரவின் உச்சத்தை அளிக்கிறது. அடிமைகளிடமிருந்து செல்வத்தைக் காத்துக் கொள்ள அடிமைகளைக் கொண்டே கருவூலங்களை உண்டாக்குகிறார்கள். செல்வத்தைக் கரந்து வைப்பதே அதன் மதிப்பை உண்டாக்குகிறதென அறிந்த பின்னர் குடிகள் செல்வத்தை அளவிட்டு அளிக்கிறார்கள். ஈடாக உழைப்பைப் பெற்றுக் கொள்கிறார்கள். மெல்ல மெல்லக் குடிகளுக்கும் அடிமைகளுக்குமிடையில் ஒரு வணிக உறவுவலை உருவானது. ஆனால் குடிகள் சேம்பலாளிகள் ஆனார்கள். அடிமைகள் வல்லமை உள்ளவர்களாகவும் நுட்பங்களை அறிபவர்களாகவும் மேலும் செல்வத்தைக் கரப்பவர்களாகவும் ஆனார்கள். மெல்ல மெல்லக் குற்றங்கள் பெருகத் தொடங்கின. கொலைகளும் களவுகளும் அன்றாடம் என் அரண்மனைக் கதவில் தூங்கும் பொன்மணியை அசைத்துக் கொண்டேயிருந்தன.
அந்த ஒலிகளால் நான் துயில் நீத்தேன். என் படைகளை அனுப்பிக் குற்றவாளிகளைச் சிறையிட்டேன். சிறையில் குற்றம் புரிபவர்களைத் தங்கக் கழுவில் ஏற்றினேன். பொன்னின் மீது விழைவு கொண்ட மானுடரைத் தண்டனைகள் அச்சுறுத்துவதில்லை. அவர்கள் தங்கத்தில் தாகம் கொண்டவரென என் அரண்மனையைத் திருடத் தொடங்கினர். என் காவலர்களைக் கொல்லத் தொடங்கினர்.
பெரும் போர் மூண்டது. அயல் தேச அடிமைகளால் இத்தீவில் நான் அமர்த்திய குடிகள் முற்றழிந்தனர். விழைவைப் பெருவிழைவு வென்றது. ஆனால் வென்ற அடிமைகள் புதிய பெருங்கலங்களைச் செய்து கொண்டு மேலும் புதிய அடிமைகளை வாங்கச் செல்லத் தொடங்கினர். இந்த நச்சுச் சுழலில் என் அரண்மனை மத்தாய்ச் சுழலத் தொடங்கியது. அந்த எண்ணமே என்னைச் சோர்வுக்குள் தள்ளியது. மண்ணில் பொருளென ஆகும் எதுவும் என் பொன்னினாலேயே மதிக்கப்படுகின்றது. ஆனால் பொன் மானுடரை மயக்கி விழுத்தும் நஞ்செனவும் ஆகிறது. இந்த வரமும் சாபமும் நான் அளித்தது எனக் குடிகள் வசைபாடுகின்றனர். செல்வம் குவிந்தவர் குடிகளின் பார்வையில் கரவின் தெய்வமெனவே நின்றிருக்க முடியும்.
நான் செல்வத்தில் அதிபதியென வரம் கொண்டவன். செல்வமே எனது சாபமென்று ஊழ் எனக்கு வகுத்திருக்கிறது” என்றான் குபேரன். அவனது தடாகத்திலிருந்து தங்க ஓடுள்ள ஆமைகள் படிகளில் ஏறி அசைந்து கொண்டிருந்தன. சூரியன் அவனது செல்வத்தை விழிதிறந்து நோக்கியது. குடிகளின் முகங்களை எழுந்து பறந்து சுற்றி வந்து உற்றது. ஒவ்வொருவரிலும் குபேரனின் வதனத்தில் கண்ட அதே சோர்வின் வரிகள் படிந்திருந்தன. குடிகளில் தெறிக்கும் சோர்வே குபேரனிடம் ஆடிப்பாவையென எழுவதைக் கண்டது சூரியன். புதிய அடிமைகளிடம் புடவியை வென்று பொன் கொள்ளும் விழைவு அவர்களை சோர்வற்ற மகிழ்ச்சியிலும் பொன் தேடும் ஊக்கத்திலும் மூழ்கடித்திருந்தது. அதுவும் ஒரு மயக்கே என அறிந்த சூரியன் குபேரனிடம் திரும்பி வந்தது. “அரசே. உங்களின் துயர் போக்க என்னிடம் ஒரு யோசனை உளது” என்றது. குபேரன் தன் இருகைகளையும் அறைந்து தட்டி “சொல்லுக கதிரோனே. நான் எங்கனம் மீள்வது” எனக் கூவினான்.
“அரசே. மானுடர் தம் விழைவுகளால் மட்டுமே இயக்கம் கொள்ளும் எளியவர்கள். அவர்களுக்கு அளிக்கப்படும் மிகை எதுவுமே பொருளற்றவை. அவை அவர்களைப் பித்தாக்கும். காதலோ காமமோ செல்வமோ ஆற்றலோ எது மிகைக்கினும் அது நஞ்செனவே அகக்கலயத்தில் திரையும். அவர்களுக்கு அளிக்கப்படும் செல்வத்தின் மதிப்பை உணர்த்த அது அரிதெனவும் நுண்மையெனவும் உச்சக் கற்பனைகளால் மண்ணில் எல்லைதொடாத வண்ணம் உண்டாக்கப்பட வேண்டும். விண்ணுலகின் முதுசிற்பிகளை நான் உங்களுக்கு அளிக்கிறேன். உங்களின் செல்வத்தின் அரியவை அனைத்தும் ஒருக்கி ஒரு மாபெரும் பொற்தேரை ஆக்குங்கள். விண்ணும் மண்ணும் வியக்கும் பெருங்கற்பனையில் அத்தேர் மண் நிகழட்டும். கலையின் நுண்மையே செல்வத்தின் எல்லையென்பதாகுக. நுட்பமானதே பெறுமதி கொள்ளட்டும். எளிமை கீழிறங்கும் பொழுது மானுடர் நுண்மையை நாடியாக வேண்டும். நுண்மையால் பயிற்றுவிக்கப்படும் அகம் சிறுகச் சிறுகத் தன் விழைவுகளை உதிர்க்கும். நுண்மையே மானுட அகங்களை புடவியின் கீழ்மைகளையும் துயர்களையும் நுணுகி விலத்தும் பார்வையை அளிக்கும். அவ்வண்ணமே உங்களின் மீட்பு நிகழும்” என்றது சூரியன். தங்கப் படிக்கட்டிலிருந்த குபேரன் எழுந்து இருகரங்களையும் தலைமேல் குவித்து “ஆயிரங் கரங்கள் கொண்டு அணைக்கின்றவரே போற்றி” என்றான். சூரியன் புன்னகையுடன் அருளும் கரம் தூக்கி அவனை வாழ்த்தி மறைந்தது.
விண்ணுலகின் ஆயிரத்து எட்டுச் சிற்பிகள் மண் வந்தனர். குபேரனின் கருவூலத்திலிருந்து தேர்ந்த ஆபரணங்களையும் செல்வங்களையும் உருக்கியும் அடித்தும் சிறுத்தும் நுணுக்கியும் பதினெண் திசை கொண்ட மாபெருந் தேரை வரைபடமென ஆக்கினர். பின்னர் அதன் ஒவ்வொரு இழையையும் பொன்னால் உண்டாக்கி அருமணிகளால் அழக்கூட்டி கற்பனையால் அதன் செல்வப் பெறுமதியைக் கற்பனைக்கு எட்டாத வெளிக்கு உயர்த்தினர். எங்கிலும் இத்தகைய தேர் நிகர்த்த ஒன்று உண்டாக்கப்பட்டதில்லையென மானுடரும் விண்ணவரும் தெய்வங்களும் உரைத்தன. இருளிலும் பகலிலும் தேரின் ஒளி பரிசோதிக்கப்பட்டது. ஒவ்வொரு முனையிலும் நுண்மை நுணுகப்பட்டது. மேலும் மேலும் முனைகள் முனையப்பட்டன. பொன் மேலும் பொன்னாகியது. பொன்னைத் தாண்டி ஒரு மாகற்பனையின் தசையென நின்றிருந்த போது செல்வம் நிகரில்லா எழில் கொண்டது. பொற்தேர் உருவாக்கப்பட்ட பின்னர் முதல் வெள்ளோட்டத்தில் விண்ணவரும் மண்ணவரும் பாதாளத்தவரும் தெய்வங்களும் தீவு வந்தனர். களியும் பெருக்குமென நிகழ்ந்த மாபெரும் விழவில் இப்பொற்தேர் அசைந்து குபேரன் அதில் எழுந்தருளிய போது குடிகளின் விழிகளில் நீர்ப்பெருக்கோடியது. கரங்கள் வானெழுந்து வணங்கின. விண்ணவர் அருட்கரங்கள் காட்டினர். பாதாளத்தவர் பணிந்து தேர்ச்சில்லில் தலைதொட்டு வணங்கினர். தெய்வங்கள் திசைக்கொன்றாய் அமர்ந்து தேரினை ஒளிகூட்டின.
அன்றிலிருந்து இன்று வரை இந்த மாபெரும் பொற்தேர் ஈரேழு பதின்னான்கு உலகங்களிலும் நிகரற்ற செல்வமென்றாகியது. இதை மிஞ்சும் கற்பனை எழுந்தால் மட்டுமே இதன் மதிப்புக் குன்றும். ஆனால் காலத்தால் மூத்ததாக நின்றிருக்கும் இத்தேர் இனி எதனாலும் வெல்லப்பட முடியாதது. காலமென்னும் அருஞ்செல்வமும் இத்தேரின் மதிப்பை அளவற்றதாக்கியிருக்கிறது. அறிக பொன்னா. காலத்தில் அரிதென நின்றிருக்கும் பெருங்கற்பனையின் முன் எம்மானுடரும் எளியோரே. இத்தேரை மேலும் மதிப்புயர்த்தும் ஒன்றே இதன் மேல் நிகழ முடியும். ஒவ்வொரு யுகமடிப்புக்கும் மேலும் சில நுண்மைகள் இத்தேரில் அமைக்கப்படுகின்றன.
இம்முறை இத்தேரில் மேலும் செல்வமென அளிக்கப்பட்டிருப்பவை நூற்றியெட்டு மாவீரர்களின் மெய்யுருக்களின் சில இழைவுகள். கொடிமுகப்பின் கீழே மாவீரி. வில்லில் நிகரிலா போர்க்காளி சொல்லிற்கினியாள் சிறுபாவையென விண்ணோக்கி அம்பு கூர்ந்து வில்லேந்தி முழந்தாளில் நின்றிருக்கும் யுத்தரூபம் இழைக்கப்பட்டிருக்கிறது. ஐந்து மூத்த சிற்பிகள் அன்னையென நின்றிருப்பவளை ஆக்கினோம். இருபது இரவும் பகலும் நோன்பு நோற்றோம். ஒருவேளை உணவுடன் மெய்யகலாது விழியை வரைபடத்தில் உற்று விரல்களால் வழித்து அறிவும் அறிதலும் கடந்து கலையின் பித்துக்கணங்களுக்கெனத் தவமியற்றி அமர்ந்தோம். கையின் சிறு அசைவும் ஊழ்கம். உளிமுனையே அகவிழியென இருத்தி மாகளத்தாளை இப்பொற்சிலையில் அமர்த்தினோம். படபடக்கும் புலிக்கொடியின் நேர்கீழே வானுற்று நிற்கும் போர்ச்செல்வியென்றாகுவாளாக எனச் சொல்லிக் கொண்டோம். அவள் முகத்தை மானுடர் நோக்கலாகாது என்று விண்ணமைத்தோம். விழிதிறந்த பொற்கணத்தில் அம்முடிவை ஐவரின் அகமும் கூடியெடுத்தது. ஓம். இவ்விழிகளை மானுடர் நோக்க வேண்டுமெனில் அங்கு அவ்வண்ணம் வானுயர்ந்தே அடைய இயலும்.
முன்முகப்பில் இதுவரை தெய்வங்களைத் தவிர எம்மானுட உருவும் அமைக்கப்பட்டதில்லை. குபேரனின் காலத்திலும் இராவணனின் பொற்காலத்திலும் கூட அங்கு தெய்வங்களே எழுந்தன. தெய்வமென மண்வந்த நீலழகரின் காலத்திலேயே மானுடர் முன்முகமென இத்தேரில் அமர ஒண்ணியிருக்கிறது. அன்னை ஈச்சியின் கொல்கருணை வதனம் நூற்றியிருபது நாட்கள் நூற்றியெட்டுச் சிற்பிகளால் உண்டாக்கப்பட்டது. அயல் தேசங்களிலிருந்தெல்லாம் சிற்பிகள் வரவழைக்கப்பட்டு பொன்னின் ஒவ்வொரு திண்மையும் மென்மையும் உண்டாக்கப்பட்டுப் பொய்ப்பாவைகள் செய்தார்கள். அறுபத்து நான்கு ஈச்சிப் பாவைகள் ஒளிரும் கூடத்தில் நின்றிருந்த வேளை இதில் எவரும் அவரல்ல என அகம் கூசி நின்றுவிட்டோம். ஒருவராலும் அவர் முகத்தின் உக்கிர கணத்தை அடைய இயலவில்லை. எங்கள் கனவுகள் அவரின் முகங்களால் நிறைந்தன. முதுபாணர்கள் தங்கள் பாடல்களால் கலைக்கூடத்தின் சுவர்கள் அதிர்ந்து உடையும் இசையுடன் அவரது போருச்சங்களைப் பாடினர். ஒவ்வொரு சொல்லும் தயங்கிப் பின்வாங்கச் சொல்லாலும் அவரைப் பாடவியலவில்லை எனக் கண்டோம். புவியில் அனைத்துக்கும் எல்லையுண்டு. மானுட மேன்மைகளின் சில உச்ச சிகரங்களில் ஏறி நின்று தெய்வமென ஆகும் மேன்மக்களை வடிவமைக்க சொல்லாலும் உளியாலும் வண்ணங்களாலும் இசையாலும் நடனத்தாலும் எதனாலும் இயலக் கூடியதல்ல. அவை அவர்களின் முன் எளிய மானுடர் சாற்றும் தூமலர்களெனவே ஆக இயலும். எங்கள் கனவுகளின் ஆணவத்தை அன்னையின் நினைவுகள் அணைத்தன. முதுசிற்பிகளும் மாணாக்கர்களும் பாணர்களும் அமர்ந்து விவாதித்து எதனால் அவரைத் தொடமுடியவில்லை என ஓயாது சொல்லெடுத்தோம். சொற்கள் தீயில் பொன்னென உருகின. உருகும் பொன்னில் எளிய ஈக்களென அகங்கள் அமர்ந்து கொதியில் மூழ்கின.
ஈச்சியின் இப் பொன்முகத்தை முதலில் கனவுற்றவன் எங்களிலேயே மிக இளைய சிற்பியான மாதுளன். நூறாவது நாள் புலரி வரை சொல்லாடி அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தோம். கலைக்கூடமெங்கும் நிறந்திருந்த ஈச்சியின் பாவைகளில் தீப்பந்தவொளி பட்டு மின்னி மண்ணில் தீநெளிவுகளென நிழல்களைக் கலைத்துக் கொண்டிருந்தது. திரைச் சீலைகளைப் படபடத்த இளங்குளிரான காற்றில் நித்திராதேவி எங்களை வருடியாழ்த்தினார். இளஞ் சிற்பியின் கரத்திலிருந்த சிறுமரவுளி அசைந்து கொண்டிருப்பதை மூத்தவர் ஒருவர் கண்டு வந்து என்னை எழுப்பினார். அங்கு சென்று தீக்கடல் ஒளியில் நின்று நோக்குகையில் உளமதிர்ந்து உவகை கூடியது. அது தான் அம்முகம். ஈச்சியென்பது கருணையில் நிகழும் கொலை. கொலையால் உண்டாகும் விடுதலையின் தவிர்க்க இயலாமை. கருணையும் விடுதலையுமென அமைந்த இருவிழிகளை அவனது கரம் வரைந்து முடித்து அவரின் வதனக் கோட்டைக் கீறத் தொடங்கியது. நாங்கள் வரைதோல்களில் அவற்றைக் குறிப்பெடுத்தோம். அமைதியில் உறைந்திருந்த கலைக்கூடத்தில் காற்றும் தீயும் பேசிக்கொள்ளும் ஒலிகள் மட்டுமே எழுந்தன.
இன்று நீ காணும் இம்மகத்தான ஈச்சியின் பொன்முகம் ஒரு இளையவனின் கனவில் முளைத்த மாகனவு என்பதை அறிக. இளமை ஆணவத்தைக் கடந்து எளியதாகி பக்தி கொள்கையில் அதன் கனவுகள் தூய்மையென மண்ணில் நிகழ்கின்றன. எப்பொன்னும் நிகர் செய்ய முடியாத தூய்மையது. ஈச்சியின் முகத்தை நோக்கி நிற்கும் ஒருவர் அவரைத் தொல்தெய்வமென்றே எண்ண இயலும். வரைபடம் உருவான பின்னர் எந்தக் குழப்பமுமின்றி மகிழ்ச்சியும் கூச்சலுமென கலைக்கூடம் துள்ளியாடியது. உவகையில் சேர்த்துச் சேர்த்துச் செய்த பெருங்கனவென இன்று இத்தேரை மானுடக் குடிகளின் மகத்தான கற்பனையினால் ஓரடுக்கைக் கூட்டியிருக்கிறோம். இத்தேர் தன்னில் தானென ஒழுகக் கூடிய உருவையே அனுமதிக்கின்றன என்கிறன சிற்ப நூல்கள். இம்முகம் இங்கு அமைந்த பின்னர் இத்தேர் புன்னகையுடன் தன் புத்தணியை அகமகிழ்ந்து ஏற்றிருக்கிறது. என் காலத்தில் மேலுமொரு அணியைச் செய்து இத்தேரில் இணைப்பேன் என எண்ணவில்லை பொன்னா. ஆனால் இன்று மானுடம் எனும் பெருங்கனவில் இம்மகத்தான கலையாக்கத்தில் எனது விரல்களும் அமைந்தன எனும் நிறைவு அளிக்கும் உவகைக்கு ஈடாக எதை வைக்க இயலும். ஆக்குபவர் மட்டுமே அறியும் பேருவகையது” என்றார் மங்கலச் செல்வர்.
பொன்னன் விழிகளைக் கூர்ந்து அப்பொற்தேரை ஒவ்வொரு அணுவாக நோக்கினான். விண்ணவரும் மண்ணவரும் இணைந்து ஆக்கிய மாகனவைத் தான் நோக்கி நிற்கக் கிடைத்தமையை எண்ணிய போது அவன் மேனி மெய்ப்புக் கொண்டது. விழிகளில் கண்ணீர் உவகையில் ததும்பியது. மலர்ச்சரங்களால் அதன் பேரழைகை மறைத்துக் கொண்டிருந்த கனியிழையன் பொன்னனின் நிலையைக் கண்டு புன்னகைத்தான். “இப்பெருந் தேரை ஏன் மலர்களால் மறைக்கிறோம் மூத்தவரே” என மங்கலச் செல்வரை நோக்கிக் கேட்டான்.
“இன்றெனத் திகழும் காலத்தில் இயற்கை நமக்கு அளிக்கும் பெருங்கொடையே மலர்கள். மலர்களால் அணிசெய்யும் எதுவும் மானுடர் ஆக்கிய அனைத்தையும் தெய்வ நிலை எய்தச் செய்வன. பெண்ணும் தெய்வச் சிலைகளும் மலர்சூடி நிற்பதாலேயே பேரழகு கொள்கின்றனர். மலர்கள் எளிய குடிகளின் கனவுகளென்றும் நூலோர் சொல்வதுண்டு. மாபெருங் கனவுகளில் தங்களையும் சூடிக் கொள்ள விரும்பும் எளியவர்களின் கனவென மலர்கள் அங்கு தம்மை இழைந்து கொள்கின்றன” என்றார் மங்கலச் செல்வர். அவரது முதுமுகத்தின் பொன்னொளி சுடர்வீசிப் பறந்து கொண்டிருந்தது. நிரையாய் நின்றிருந்த பின் தேர்களின் முன் இம்மாதேர் ஒரு காணமுடியாக் கனவின் சிறுதுண்டெனத் தோன்ற விழிகளைச் சுருக்கித் தனக்குள் நகைத்தான் பொன்னன்.