67: அம்பலம்

67: அம்பலம்

நூற்றுக்கணக்கான மரங்கொத்திகள் கொத்தி அறைவதைப் போல் அம்பலத்திலிருந்த தச்சர்களின் மரவுளிகள் ஒலியெழுப்பின. கீழும் மேலும் நீர்க்கலயங்களிலிருந்து புழுதியணைக்கும் பணி இடைவிடாது பெய்து கொண்டிருந்தது. ஈரம் ஊறித் ததும்பும் தாமரை இலை போல் ஆடியது நிலம். லட்சம் பேர் சுற்றியமர்ந்து நோக்கும் வண்ணம் மா அம்பலம் உயர்ந்து நின்றது. பெருந்தச்சரும் மன்றுத் தலைவர்களும் உரையாடிக் கொண்டு நின்றனர். அம்பலத்தை நோக்கியிருந்த சுழல் விழி குளிரும் மலரென அம்பலம் பனங்குற்றி மேல் முளைத்து நிற்கும் அழகை வியந்தாள். அம்பலத்தினைச் சுற்றிலும் மேலிருந்து கீழாக தீப்பந்தங்கள் சொருகும் இடைவெளிகளில் நெய்யூற்றிய பந்தச் சுருள்கள் அடுக்கப்பட்டிருந்தன. சுற்றிலும் நெடுத்திருந்த மரங்களில் தீயொளியைப் பெருவிரிவாக்கும் வகையில் குவிவாடிகள் பொருத்தப்பட்டிருந்தன. நெருப்பின் மேடையில் பெருந்தீநெளிவென ஓர் ஆடல் நிகழவிருப்பதைத் தன் அகக்கண்ணில் இருத்தி நோக்கி நின்றாள்.

அம்பலத்தில் ஏறியிறங்கிய வாலிபர்களின் தசை முறுக்குகளையும் அவர்களது சிரிக்கும் முகங்களையும் விழுந்தெழும் குழல்களையும் காதணிகளையும் மார்புகளையும் நோக்கியவள் ஆடவரின் மார்பும் ஓர் அம்பலம் தான் என எண்ணிக் கொண்டாள். அதில் தீரா நடமிடும் நித்திய கன்னிகையெனத் தன்னை எண்ணிய போது அவளில் நாணம் முகை விட்டு மலர்க்கொத்தென மார்பைச் சிவத்தது. மார்பின் இளவிழிகள் தனக்கும் இப்புடவியைக் காட்டு என விம்மின. அவள் முகத்தில் நீர்க்குமிழிளெனச் சிரிப்புக் குமிழ்த்து விரிந்து கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான குடிகளிடையில் இளம் ஆடவர்களின் உடல்கள் மட்டும் அவளுக்குக் குவிவாடியில் தோன்றும் தீச்சுழல் பெருக்கென எழுந்து கொண்டிருந்தன.

அம்பலம் தன் விரிவினால் அவளது விழிகளை அகலித்தது. திசைகளற்ற வெளியே அம்பலம். திசைக்கொன்றாய் நின்று நெரியும் எழில் கொஞ்சும் ஆடவர்களைக் கற்பனையில் உண்டாக்கினாள். சுழலும் கூந்தல் நெளிவில் ஒவ்வொரு அலைமடிப்பிலும் ஒருவன் தூங்கினான். இடையில் அம்பலத்தில் ஏறுபவர்களென ஏணிகொண்டு ஆயிரக்கணக்கானவர்கள் தொல்யாத்திரையென ஊர்ந்தனர். தொடைகளின் இடையில் கூசும் இளங்காற்றெனப் பல்லாயிரத்தவர் சிற்றெறும்புகளென நிரைசென்றனர். அவளது அருகில் நின்றிருந்தவர்கள் அவளது சிற்றெழில் மேனியை நோக்கியிருப்பதைக் கண்டவளின் கால்கள் மஞ்சுக் குவியல்களென எடையற்று நீந்தின.

அவளருகில் வந்த விறலியர் குழுவொன்று ஆடவருடன் பூசலிட்டுச் சென்றது. அவர்கள் ஆடவரை எள்ளியும் கேலிசெய்தும் பேசுகையில் அவர்களது நாவுகளில் ஒன்றெனத் தான் முளைத்து நின்று ஆடுவதாக எண்ணிக் கொண்டாள். பிறகு ஒவ்வொரு நாவிலும் நிலக்கிளிகளெனத் தத்திப் பறந்து சொல்லெடுத்தாள். ஆடவரை இழிவு செய்கையில் தான் எத்தனை உவகை மகளிரில் பிறக்கிறது. உலைத்து ஒவ்வொன்றையும் செல்லும் வழியில் கலைத்து அடுக்கிச் செல்லும் தென்றலின் சுழிநடனமென மகளிரை எண்ணினாள். தானும் ஒரு தென்றலாட்டம் என உள்ளூர நடந்தாள். அவளிடம் திசைகளற்ற அம்பலமொன்று அகத்தில் விரிந்திருந்தது. அதன் ஒவ்வொரு திசையையும் அவள் ஐயமுற்றாள். தவறெனத் தானே எண்ணிக் கொண்டாள். அச்சம் ஒவ்வொரு வழியிலும் முதற் பூதமெனக் காவலுக்கிருந்தது. அதன் வாடை எழுகையிலேயே பயணத்தைக் கைவிட்டுத் திரும்புவாள். இக்களி விழவில் அவள் கொண்ட விழைவனைத்தையும் திறக்கும் முதற் சொல்லை ஆடற் சித்தர் அளித்திருந்தார். அவர் சொல்லாய் அளித்தது அவளில் அணைமேவி ஆர்ப்பரித்த அலைக்குதிப்பின் விழைவின் குற்றமின்மையை.

காமத்தைக் குற்றமென வகுப்பது எது.

அகிலத்தின் அனைத்து விலங்குகளும் காமத்தினால் விழைவு கொண்டவை. எண்ணிப் பல்லாயிரமாய்ப் பெருக்கும் மானுடரே காமத்தின் அம்பலங்கள். நெறிகளாலும் ஒழுங்கங்களாலும் அவை கட்டப்படுகின்றன. மூத்தோர் சொற்களில் விழும் நூறு நூறு மரச்சுத்தியல்களின் ஒலிகள் அம்பலத்தைச் சீராக்கியபடியே இருக்கின்றன. காமத்தில் உடலுக்கென்று உயிரியல்பான ஒழுக்கமென ஒன்றில்லை. புணர்வும் புணர்வின் நிமித்தமுமே ஆன களியென மண் நிகழ்ந்தவை மானுட விலங்குகள். கலைகளாலும் கற்பனைகளாலும் விலங்கிலிருந்து எழுந்து புடவியாளும் அதிகாரம் கொள்ளும் வேட்கையைச் சூடியவர்கள். பற்றாத திரியில் தீயிற்கான காத்திருப்பைப் போல யாக்கைகள் காமத்தின் அருட்டலுக்கென விழித்திருக்கின்றன.

காமம் மீறப்படுகையில் குற்றமென்றாகிறது. எதை மீறுகையில் குற்றம். நெறியென அதுவரை வகுக்கப்பட்டிருப்பதை மீறுவதே குற்றம். அனைத்துக் குற்றங்களும் பல்லாயிரம் முறை புடவியில் நிகழ்ந்த பின்னரே ஒன்றைக் குற்றமெனக் குடி நெறி சொல்கிறது. காலம் இடம் பொருள் எனக் குற்றம் மூன்று தன்மைகளினால் நெறியில் தருக்கத்தை உண்டாக்குகின்றன. நெறியில் அனுமதிக்கப்படாதவை விதைக்குள் முளை போல மானுடரில் உயிர்ச் சுடரை ஏந்தி நிற்கின்றன. அவை முளைத்துத் தன்னைத் தருவெனத் தருக்கி மலர்த்தி நிற்கையில் நெறியெனும் தொல்மரம் அதனைத் தன் வனத்தில் ஏற்கிறது. இன்று புதிதாய்ப் பிறந்ததென வாழ்வு நிகழ்வதேயில்லை. தொல்காலம் தொட்டு நீண்டிருக்கும் நெறி வனத்தில் ஒவ்வொரு குழவியும் பிறந்து தவழ்ந்து வளர்கிறது. பெரும்பான்மைக் குழவிகள் நெறிவனத்தின் விருட்சங்களில் தமக்குரியவற்றை எடுத்துச் சேர்த்து உரமாகி மடிகின்றன. அரிதான குழவிகள் விருட்சங்களை இணைத்துப் புதிய மலர்த்தருக்களைக் கற்பனையில் உண்டாக்குகின்றன. கலை ஓர் ஆற்றலென மண் நிகழ்ந்த குழவிகள் அனைத்தையும் ஒற்றையெனவும் அனைத்துக்கும் நிகரான இன்னொன்றைத் தனதெனவும் ஆக்கிக் கொள்கின்றன. காமம் வகுக்கப்பட்டிருப்பது சொற்களால். சொற்கள் அர்த்தங்களை மாற்றியுடுத்திக் கொண்டிருக்கும் சர்ப்பங்கள். காலவழுவெனத் தோன்றுகையில் தம் ஆடையை உதிர்த்து அவ்விடம் மீளாமலேயே அடுத்த ஆடையைத் தம்முடலில் உண்டாக்கிக் கொள்ளக் கூடியவை. உதிர்த்த ஆடைகள் உக்காத வரை மண்ணில் நெறியெனச் சில காலம் நின்றிருக்கும். அனைத்தும் சாம்பலாகும் என்பது போல் அனைத்து நெறிகளும் ஒரு நாள் உக்கும். அதன் சாரத்திலிருந்து புதியதொன்று மேலும் அகன்று திகழும். திகழ்ந்து மடிந்து மீண்டும் பிறிதொன்றாய் விரிந்து திகழும்.

சுழல் விழிக்கு குடி நெறிகள் என அளிக்கப்பட்டிருப்பவைக்கு எட்டாத தொலைவிலேயே அவள் அகம் என்றும் நின்றிருப்பதை அறிந்திருந்தாள். அது கெடுதியானது என எண்ணி அதைச் சொல்லாகவோ செயலாகவோ மாற்றாது கரந்து வைத்தாள். கரப்பது மிகையென்றாகிச் சேர்ந்த விழைவுப் பெட்டகமென நின்றிருந்தவளின் அகம் இன்று தன் திறவுகோலைக் கண்டுகொண்டது. அவள் ஓர் அம்பலம். திசையற்றவள். திசைக்கொன்றெனக் குலைந்து மீளக் கூடியவள். நெடுங்காலம் நீர் தேடி அலைந்தவள் கண்ட சுனை முனையென அம்பலத்தை நோக்கியிருந்தாள் சுழல் விழி.

*

கொற்றனும் ஓசையிலானும் பெருவீதியால் நடந்து செல்லும் ஆயிரக்கணக்கான குடிகளிடை நத்தைகளென மேனியால் நடந்து சென்றனர். ஒவ்வொரு உடலையும் தரையென ஊர்ந்தபடி கடந்தனர். ஆடவரதும் பெண்டிரதும் மேனிகளை உரசினர். தீயுருட்டும் கற்களை உரசுவது போல் அவர்களின் மேனிகள் பற்றிப் பற்றி அணைந்தன. சிறு முலைகளில் தோள்கள் உரசுகையில் தயிர்க்கட்டியில் தடவுவதாக எண்ணினான் கொற்றன். பிருஷ்டங்களில் தற்செயலாய் விரல்கள் தொடுகையில் மின்மினியளவு வெளிச்சம் அவனுள் தோன்றி மறைந்தது. இடைகளை விழிகளால் தொட்டு மேனி மெய்ப்புக் கொண்டான். கூந்தல்களின் ஆயிரம் பெருக்குகளையும் அவற்றின் நறுமையையும் நாசி கொண்டு இழுத்தான். கழுத்துகளின் வளைவுகளையும் நீள்வுகளையும் குறுத்தல்களையும் விரிவுகளையும் மெலிந்தவைகளையும் கண்டு அவனது உதடுகள் ஒட்டிக் கொண்டன. விழிகளை நோக்குந் தோறும் விண்மீன்கள் அந்தியில் பெண்களிடமிருந்து பிரிந்து சென்று விண்ணேறி அமரும் தீச்சிமிழ்கள் என எண்ணிக் கொண்டான். எத்தனை தளிர்கள். எத்தனை துள்ளல்கள். மயக்கும் முழுத் தூண்டில்களையும் எறியும் ஆழி விழிகள் அவனை இழுத்துக் கொண்டன. தீயிலை மயக்கில் சிவந்த விழிகள். முருக்கம் பூவின் தூவெண்விழிகள். ஒவ்வொரு விழிகளும் ஓயாமல் எதையோ சொல்லிக் கொண்டிருந்தன. எதையோ வியந்து கொண்டிருந்தன. எதற்கோ ஆடல் கொண்டிருந்தன.

ஓசையிலான் ஆடவரின் மேனியழகை நோக்கினான். இள விழிகளில் குத்திடும் அம்பு முனைகளின் வீச்சை. மதுவில் ஊரும் வண்டுகளெனும் விழிமயக்குகளை.
மார்புகளின் காம்புகளில் குவிந்திட்ட கருமொட்டுகளை. கரங்களை உயர்த்தி நடமிட்டு நடக்கையில் அக்குளின் மயிரென்னும் தோகைச் சிறு மயிர்களை. குழல்களில் தோன்றி அமர்ந்த மலர்கள் அவர்கள் வதனங்களுக்குச் சூட்டும் புத்தழகை. நுதல்களில் நீறுகளை. குங்குமத்தை. சந்தனத்தை. சாந்துப் பொட்டுகளை. செவிகளில் குழைகளின் ஊஞ்சலாட்டத்தை நோக்கி நின்று மெய்ப்புல்கள் தன்னுள் ஒவ்வொரு அங்கமாய் எழுந்து சிலிர்ப்பதைக் கண்டான். ஆணுடல் என்பது சிலைகளின் காமம் என எண்ணிக் கொண்டான். ஆணைக் காமுறும் அகம் சிலைகளின் முழுமையை எண்ணிக் கொள்கிறது. அதன் சொல்லற்ற மெளனம் ஒரு மந்தணமென ஈர்க்கிறது. ஆணின் தளையற்ற உடல் அடையப்பட உந்தும் விசையை அளிக்கிறது. வெல்லப்படும் அம்பலமென்பது ஆணின் உடலென மண்ணில் நிகழ்ந்தது என எண்ணிக் கொண்டான் ஓசையிலான். போர்க்களத்தில் இரு ஆண்கள் மோதிக் கொள்வது நெறிகளால் அனுமதிக்கப்பட்ட முத்தமென எண்ணி அக்கற்பனையைத் தானே வியந்தான். தோள் தொட்டு அணைத்து நின்று களியாடும் ஆடவரின் தோலில் எழுந்த வியர்வையின் இன்மணம் அவனில் போதையை வார்த்தது. வியர்வையை அருந்தும் தாகம் நாவெனத் திரண்டது. தன் குறி விறைப்பதைக் கண்டவன் மெல்ல நகைகொண்டு மேலும் மேலும் ஆடவரின் அங்க நெளிவுகளின் நடன பாவங்களை விழியுற்றான். உற்றுத் தன்னை மறந்தான். மேனிகள் உரசி உரசி பற்றிய தீயென விறைகுறி முட்டும் கள்க் கலயமென முற்றி நிற்பதை அறிந்து நாணம் கொண்டான். கரங்களை முன் குவித்துக் குறியை அடக்கிக் கொண்டான்.

ஆணும் ஆணும் கொள்ளும் காதலில் அறிந்ததும் அறிய விழைவதும் இரண்டு கிணங்களில் தம்மை ஊற்றிக் கொண்டு ஒன்றையொன்று நிரப்பிக் கொள்கின்றன. நெறி வழியே ஆணுக்கும் பெண்ணுக்குமென காதல் தளையிடப்பட்டிருக்கிறது. காமம் உயிர்வழியேயானது. அதன் விருப்பின் விசைகள் நாம் எண்ணியிரா இழைவுகளினால் பலகோடி வண்ணங்களால் புனையப்பட்டது. ஆணும் பெண்ணும் குழவி பெற்றுக் குடி நீட்டும் சடங்கில் நிலைபேறுடையவர்கள். ஆனால் ஆணும் ஆணும் பெண்ணும் பெண்ணும் கொள்ளும் காதலும் காமமும் நெறியின் எளிய தருக்கங்களை உதறி விழைவின் மெய்மையில் விண்ணேறுபவை.

மண்ணில் மானுடர் கொள்ளும் காதல் எதுவும் தூயதே. காதலென ஆகும் எதுவும் எளிய விழைவுகளின் தீமைகளை வெல்கின்றன. காமத்தின் விழைவுகளின் பேராற்றில் அனைத்து நதிகளும் சேரும் கழிமுகங்கள் உண்டு. குடிநெறிகளின் கரைகளை விரிவாக்கிப் பெருகும் காதலே ஆடவரும் ஆடவரும் மகளிரும் மகளிரும் கொள்ளும் காதல் என எண்ணினான் ஓசையிலான். திசையற்ற அம்பலம் போல் உடலற்றதே காதலும் காமமும் என உரத்து வாய்விட்டுக் கூவினான். குடித்திரள் அவனை நோக்கி “ஹோய் ஹோய்” என உற்சாகக் குரலெழுப்பி ஆரவாரித்தது.

*

அம்பலத்தின் இடப்பக்க நெரிசலில் ஒயிலையும் சிரித்திரியும் புகழ்விழியும் அதிசூடியும் சாலினியும் கனாச்சிற்பியும் உழிஞையுமெனத் தோழிகள் படையொன்று சுழற் காற்றென விரைந்து கொண்டிருந்தது. எங்கிருந்து நோக்கினால் அம்பலம் மிகத் துல்லியமாகத் தெரியும் என விளக்கியும் வகுத்தும் சொல்லி வந்தாள் அதிசூடி. மருத மரங்கள் வரிசையாய் நின்ற விளிம்பினருகில் ஆறு குவிவாடிகள் ஒற்றை நிரையாய் பொருத்தப்பட்டிருந்தைக் கண்டவள். அதுவே பொருத்தமான இடமெனச் சுட்டினாள். அங்கிருந்து நோக்கும் போது ஒளிப்பெருக்கில் ஆடல் தெரியும். அதே வேளை ஆடவரின் விரும்பாத் தொடுகைகளைக் கடப்பது எளிதெனத் திட்டத்தைச் சொன்னாள். அதுவும் சரிதானெனத் தோழியர் ஒத்தனர்.

இப்பெருங் கூட்டத்தில் துடியனை எங்கே காண்பதென உளம் வாடியிருந்தாள் ஒயிலை. காமவிழவென்று வந்த பின்னர் இன்று தான் முதல் முறை அவள் தனது மெய்யை மெய்யான ரூபத்தில் அவன் முன் எழக் காட்டலாம் என எண்ணியிருந்தாள். துடியனின் இளவிரல்கள் தன் உடலை எங்கனம் தொடும் என எண்ணியெண்ணி நடந்தாள். இந்த உடல் உனக்கு மட்டும் தான் துடியா என உரக்கச் சொன்னபடி அவன் வாயில் தன் முலைகளைச் சொருகுவதாக எண்ணிய போது விழிகளில் மோகத்தின் மயக்கும் சிறகுகள் எழுந்தன. அல்குலில் ஆயிரம் துடிவிரல்கள் அளைந்தன. காமம் பெருக்கெனத் திரண்டு ஒற்றைப் பேரருவியாய் அம்பலத்திலிருந்து வழிகிறதென எண்ணிக் கொண்டாள் ஒயிலை.

காமம் காதலால் நெறியிடப்படுகிறது என எண்ணினாள் ஒயிலை. அவளது மேனியை அவள் புடவியில் ஒரு மந்தண வாயில் என எண்ணியிருந்தாள். ஒருவர் மட்டுமே உள்நுழையும் வாயில். ஒருவருக்கு மட்டுமே உறைவிடம் கொடுக்கும் உள்ளங்கையளவு அகம் கொண்டவள். ஒருவனில் உறையும் ஓராயிரம் நிலங்களையும் காலங்களையும் தட்ப வெப்பங்களையும் அறிந்து அளக்க ஓர் ஆயுள் போதாது என எண்ணினாள். காதல் கூராத ஆடவர் பெண்டிரைத் தொடுவது இழிசெயல். பெண் விருப்பின்றி அவளை நெருங்குவது ஆணெனும் விலங்கின் அதிகார போதை. பெண் விருப்பறிந்து அவளை விலகிச் செல்பவன் அவள் பார்வையில் மேலானவன். அவ்வளவு எளிமையான மரியாதைகள் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையில் போதுமானவை என எண்ணியிருந்தாள். காயம் குடையும் வண்டெனப் பெண்ணுடலைச் சுற்றுபவர்களைக் கண்டால் விழிகள் அனலாவாள்.

காதலும் காமமும் வெறுவிழைவின் திளைவிசையல்ல. அவை உயிர்கள் ஆற்றும் யோகமென எண்ணினாள். தீராது முயன்று பயின்று தவறி மேலும் கற்பதே யோகமென்றாவது. பிழைவிடாது கற்பவர் எதையுமே கற்காதவர். அவரது கற்றல் கிளிக்குச் சொல்லிக் கொடுத்த மொழி. அதனால் புடவிக்கும் அவருக்கும் எந்தப் பயனும் நிகழ்வதில்லை. காதலனுடன் கொள்ளும் ஊடலும் ஒரு கற்றல் என எண்ணினாள். சினம் ஒரு தவம். பிரிதல் ஒரு ஊழ்கம். கூடல் ஒரு களி. கூடிய பின் சேர்ந்தணைந்து உறங்குதலே யோகத்தின் உச்சம் எனச் சொல்லிக் கொண்டாள்.

*

திருதையும் நிரதையும் ஆடும் இரு பொன்மலர்களென பெருவீதியால் நடமிட்டு விறலியர்களுடன் சொல்லாடிக் கொண்டு வந்தனர். சிற்பனின் ஆடலை நோக்கியிருக்க ஆயிரம் விழிகள் வேண்டுமெனச் சொன்ன இளம் விறலி தாரகையை ஓங்கி அறைந்த திருதை கள் மயக்கில் சுற்றிய விழிகளால் அவளின் விழிகளை உற்று திருதிகாவின் ஆடலிற்கான வேட்கை மட்டுமே சிற்பன் எனத் தான் உலகிற்கு அளிக்கும் பெருமெய்மை என்ற எண்ணம் கூச்சலிடக் கூவினாள். விறலிகள் குழு ஓம் ஓம் ஓம் என அவளை ஆதரித்தது.

“மேலும் கூறுக திருதை” எனத் தீயிலை மயக்கால் சிவந்து வதனம் தீயெனச் சுடர்ந்த நிரதை கூச்சலிட்டாள். “ஆடலின் மெய்ப்பொருள் தான் என்ன மகளிரே” என்றாள் திருதை. ஒருவரை ஒருவர் அறியாமையுடன் நோக்கி இல்லையெனத் தலையசைத்த போது முதுவிறலி நுதல் விழியாள் “ஆடலென்பது இணைவதில் பொருள்படுவது. ஒற்றை பாவமென்று இருக்கையில் தனித்தும் பாவங்களிடையில் பயணமொன்று நிகழ்கையில் யாத்திரையென்றும் உச்சங்களில் பொருள்படுகையில் இணைவுகளின் கூம்புச்சியிலும் நின்றாடும் ஒருதழலின் இருநாவுகள்” என்றாள். ஓம் ஓம் ஓம் எனக் கூவியது விறலியர் குழு. நுதல் விழியாளைக் கட்டியணைத்து மார்புகள் மோதி விம்மிப் பொருத அவளின் நெற்றியில் ஓங்கி முத்தமிட்டு “நீயொரு அற்புதம் கிழவி” என்றாள் திருதை.

“அறிக விறலிகளே என் இனிய குடிகளே. ஆடலென்பது ஒற்றைத் தழலின் இருநாக்குகள் என்றாள் முதுவிறலி. நான் ஊறும் தேனின் இருதுளிகள் என்பேன். ஆடலென்பது காமத்தின் ஆன்மீகம். தேன் சிந்தும் கூடென்பது மானுட யாக்கையே. இக்கூடு சிந்தும் தேன் எவை. காமத்தில் எச்சிலும் சுக்கிலமும் மதனமும் தேனே. அனலிடை பெருகும் மேனிக்காமத்தில் வியர்வையும் அரும்பும் தேனே. தேனில் கால் வைத்து உண்டு மயங்கித் தேனில் மடியும் லட்சோப லட்சம் தேனீக்களே உங்களுக்கு என் வணக்கம்.

மேலும் அறிக. காமமே விழைவுகளில் மூத்தது. பெருத்தது. நெடுங்காலம் உயிரில் தழலென உடனிருப்பது. காமத்தைக் கடந்தவர் யாக்கையைக் கடந்தவர் ஆகிறார். பேரியற்கையில் ஒரு புல்லாயோ பூண்டாயோ உருக்கொள்கிறார். என் சக எளிய குடிகளே கேளீர். தகும் மேனிகளின் தேனை அருந்துக. தகா மேனிகளை தொடாது மீள்க. விரும்பும் பாவங்களைப் புணர்ச்சியில் ஆடுக. விழைவு ஓரடி சறுக்கினும் தயங்காது பின்வருக. மானுடம் என்பது எத்தனை பெரிய உடல்களின் பெருக்கு. உங்களின் ஆடலுடன் பொருதும் ஒற்றை உடல் தன்னும் கிட்டாதா போய்விடும். அஞ்சற்க. என் சொல் வாக்கெனவே ஆகும். உலகங்கள் யாவும் நானே மாயை. என் சொல்லே வேதம்.

அறிக ஆடவரே. இன்று என் மேனி ஆயிரம் உடல்கள் துடிக்கும் அம்பலம். என் அம்பலத்தில் ஆடுக காம விழவொன்றை. என் முலைகளில் அருந்துக வாழ்வின் விடாயை. என் அல்குலில் அடைக தவத்தின் வனத்தை. என் கூந்தலில் சூடுக அரிய மலர்களை. என் கழுத்தில் காண்க அருமணியின் ஒளிகளை. என் கரங்களில் அகப்படுக இளவாழைக் குறிகளே. பெருவாளின் முனைகளே. நான் விழைவதை என் வாய் உறிஞ்சும். நான் தொடுவதை என் அல்குல் பொருந்தும். தன்னைத் தன் முற்றதிகாரத்தில் ஆடும் அம்பலமே பெண்.

விழைவின் தெய்வங்களே மண் வருக. மானுடர் மேல் அலைக. எங்களுக்கு அருள் புரிக. நாங்களும் உங்களுக்கு அருள் புரிவோம். எங்களின் தெய்வங்களே எங்களைப் புணர்க. நாங்களும் உங்களைப் புணர்ந்து களிக்கிறோம். இதோ என் கால்விரல்கள். காமனே முத்தமிடு. இதோ என் இளமுலைகள். இந்திரனே உதடு குவி. இதோ என் தொடைகள். ஈசனே அமர்ந்து கொள்ளடா. இதோ என் கூந்தல் கிருஷ்ணா பீலி சூடு. இதோ என் காந்தள் விரல்கள் ஆடவரே சொடுக்கெடுங்கள். என் முன் பணிக தெய்வங்களே. என்னை வெல்க. வென்றாடுக. வென்று களிதீர்க்க. அலகிலா ஆடலின் அம்பலத்தின் முதல் வாக்கு இதுவென்றறிக” எனக் கூவியெழுந்த முரசின் இடிக்குரலில் உரைத்தாள் திருதை. அவளின் மேனியில் கரங்கள் புதிதாய் முளைத்தது போல் கண்ட விறலியர் குழு “மண்ணிறங்கிய மாயையே வருக. முதற் பெரு விழைவே எழுக. முற்றாது பெருகுக. முடிவிலாது எங்களை ஆள்க” எனக் கூவினர் ஆடவரும் இளம் விறலியரும். புன்னகைகள் பூக்கூடைகளெனச் சரிந்து கொட்டின. ஆடலும் பாடலும் போதையின் மயக்கும் விழைவின் நாவுகளும் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டு விதிர்த்து நடுங்கின. “விழைவே என் ஆற்றலே. காமமே என் தெய்வமே” என்றாள் நிரதை. அவளைச் சுற்றிலும் ஆடவர் எழுந்து பறப்பவர்கள் போல் ஆடிச் சிரித்தனர். அவள் ஒளியலையில் ஒளியானாள்.

TAGS
Share This