71: மலைமேல் பனி
ஒருவரை ஒருவர் முழுதுள்ளத்தால் ஒருமுறையாவது முழுதுவெறுக்காத காதலர்கள் புடவியில் இல்லை என எண்ணிக் கொண்டான் மாதுளன். எல்லாக் காதலின் விதையிலும் எதனாலோ தீர்மானிக்கப்பட்ட ஒருதுமிக் கசப்பும் அளிக்கப்படுவது காதல்நெறியென யாரோ குடிமயக்கில் சிற்பக் கூடத்தில் உளறிய சொற்கள் அவனை ஈக்களென வந்தறைந்து கொண்டிருந்தன. நிலவையின் அருகே நின்றிருந்த பெய்யினியின் கூந்தல் காற்றில் வளைந்து எழுந்து நூல்களென ஆடியமைந்தன. சிற்பங்களை அவனது விரல்கள் நுணுகும் தோறும் அவன் அகத்தை அவனே குடைகிறான் என்ற எண்ணத்தை அவனால் விலக்க இயல்வதில்லை. கல்லும் பொன்னும் மரமும் இரும்பும் வெள்ளியும் மானுடர் கண்ணுக்குப் பொருள்களாவது சிற்பியின் கரத்தினால் தொடப்படுகையில் என அவனது ஆசிரியர் மங்கலச் செல்வர் முதல் நாள் வகுப்பில் சொல்லிய பின் அவை கொண்டு தெய்வங்களை மண்ணெழுப்ப வேண்டியது நம் தொழில்நெறியெனச் சொன்னார். அவன் அகம் தெய்வங்களை எண்ணியெண்ணிக் கற்பனையில் திளைப்பது. கானகத்தின் நெடும் பாதைகளிலும் ஆற்றின் தீரங்களிலும் நடையிடும் பொழுதும் ஆழிக்கரை மேலே வான் நோக்கி விரிந்து விண்மீன் கோலங்கள் கூட்டித் தொடும் போதும் மாதர் எழிலுடல் எழும் எத்திக்கிலும் பார்வை தீண்டும் போதும் எங்கிலும் அவன் தேடுவது தெய்வமொன்றையே.
ஈச்சியின் முகத்தை முதலில் மண்ணில் கிறுக்கிய புலரியின் கனவை அவன் அடியாழமெங்கும் தேடியும் அடைய முடியாது தவித்துக் கொண்டிருப்பான். என் கனவில் எங்கனம் நிகழ்ந்தது நானறியாதவரின் கொல்கருணை வதனம். பாணர்களும் குடிகளும் ஆக்கிய சொற்கள் என் ஊழ்க நதியில் கலந்தது எம்மாயத்தால். நான் அறியாத ஒன்றை எவர் எனக்கு அளித்தது. அவனது வினாக்கள் ஒவ்வொன்றும் அவன் ஆக்கிய தெய்வங்களைப் போல் புன்னகையுடன் அமைதியாக அவனைத் தொடர்ந்தன. எது அவனுள் அவனென அவன் ஆசிரியரும் கல்விச் சாலைத் தோழர்களும் எண்ணும் மாகற்பனையின் ஊற்றென அவனே அறியாதது அவனை வாட்டும் தீச்சொல்லென அகத்தில் ஒட்டியிருந்தது. அறியாமை அளிக்கும் ஆணவத்தில் அவனால் ஏறியமர ஒண்ணுவதில்லை. அறியாமையே மானுடர் சூடும் அணிகளில் முதன்மையானது என்பார் மங்கலச் செல்வர். அதை தெய்வங்களுக்கு அளிக்கலாகாது என்பது நெறி. தெய்வங்கள் நம்மால் விழிதிறக்கப்படுபவை அல்ல. அவை திறந்து கொள்ள நம்கரங்களை எடுத்துக் கொள்கின்றன. தனது காலைத் தானே வாயில் வைத்து அறியும் குழவியெனத் தெய்வங்கள் நம் ஒவ்வொருவரையும் அறியும் விழைவு கொண்டவை. ஆக்கியதாலேயே மானுடர் தெய்வங்களின் கைப்பாவைகள் ஆவதில்லை. புடவி வேறு நியதிகளால் ஆளப்படும் விந்தை. தெய்வங்கள் தம்மைப் பிழைத்துக் கொள்ள ஆடும் விளையாட்டு.
பெய்யினியின் சிறுமெலிகொடியுடலும் சிற்றாலயங்களில் வைக்கப்படும் துணைத்தெய்வங்களின் அளவான மேனியும் எவரால் எங்கு காணப்பட்ட கனவு என வியப்பான். அவளை வீதிகளிலும் மனைத் திண்ணையிலும் குளத்திலும் விளையாட்டுத் திடல்களிலும் காணும் போதெல்லாம் அவனது விழிகள் அவளில் சிற்றுடலென எழும் பேரழகு எதுவென எண்ணிக் கொள்வான். அறிய முடியாத கருமையின் குழைவும் அனைத்தும் சிறுகச் சிறுக நுணுக்கிய பாகங்களும் கொண்டவள். மேனி சிறுத்தவளின் விழிகளில் முழுவீச்சுடன் ஓர் பேருடல் எழுகிறது என எண்ணிக் கொள்வான். அவளது விழிகளை மயக்கின்றி அவனால் நேர்நோக்க இயன்றதில்லை. அவளது தோழிகள் மாதுளன் உன்னை உற்றுப் பார்க்கிறான். சிலை வடிக்கப் போகிறானடி எனக் கேலி பேசும் போது அகம் நெகிழ அவள் முலைகள் கரைந்து காணாமலானவை போல் மறைவது எப்படியென அவன் தன்னைக் குடைந்து கொள்வான். எத்தனை ஆயிரம் பெரும் எழிலிகள் வாழும் மண்ணிது. எத்தனை ஆயிரம் விண்ணகச் சிற்பிகள் ஆக்கிய களியுடல்கள். மந்தண உடல்கள். அதிகனாக்கள். மீன்கண்ணிகள். சர்ப்ப தேவிகள். வேழ முலையிகள். கொல் காமினிகள். அசுர தேவதைகள். காணாத ஆபரணங்கள். தீராத சுரங்கங்கள் என எத்தனை அம்சம் கொண்ட பெண்களைக் கண்டிருப்பான். ஒரு சிற்பியின் கண் அவன் காணும் உடலில் முதலில் நோக்குவது அதன் அழகையே. ஆனால் கண்ட அடுத்த கணம் அவனகம் அதில் எது பிழையுற்றுள்ளது எனக் கண்டுபிடித்து எறிந்து தொலைத்த ஏவற் பாவையைத் தேடிக் கண்டடைந்து மனை கொண்டு வரும் குழவியென அவனுள் ஓடி வந்து நீட்டும். தீராது குறை காணும் விழி கொண்டு ஆகுபவன் தான் சிற்பியென அவன் தந்தை அவனுக்குச் சொல்வதுண்டு. முழுதை ஒரு சிற்பி ஓராயிரம் தடவைகளிலும் பல்லாயிரம் கனவுகளிலும் கூட அடைவதில்லை. அவன் கரங்கள் ஆக்காத பிறிதொரு முழுமையை மட்டுமே அவனால் முழுது காண முடியும்.
காதலே மானுடரில் பிழைபடும் உறுப்பை நிவர்த்திக்கும் மந்திரம்.
காதலற்று மானுடர் புரியும் எதுவும் நினைவு தங்காதவை. காதலே நினைவின் வலைகளில் ஆடும் சிலந்தி. எட்டாயிரம் கால்கள் கொண்டு ஒவ்வொரு உள்ளத்திலும் வீற்றிருக்கிறது. மானுட நினைவெனும் பெருவலை பின்னுவது தூபிகை எனும் மாபெரும்பெண் சிலந்தி. கோடி கோடிக் கால்களும் கோடி கோடி விழிகளும் கொண்டவள். மானுடரில் காதல் உதித்த போது அதிலிருந்து வலையவிழ்ந்து ஊரத் தொடங்கியவள். ஒவ்வொரு காதலிலும் எட்டாயிரங் கால்களும் இருவிழிகளும் அடைவாள். சிற்பங்களிலும் ஆலயச் சிலைகளிலும் மனையில் காதலில்லாத இடங்களிலும் எங்கிலும் அவள் தன் இரு விழிகளையும் எட்டாயிரங் கால்களையும் அனுப்புகிறாள். அங்கிருந்து ஓயாது வலைகளைப் பின்னிக் காதலை அளித்துப் புடவியுடன் இணைக்கிறாள். தூபிகை காதலின் நிழல்படாத இடங்களில் வாழ்பவள். அங்கிருக்கவென மானுடருக்கென அருளப்பட்ட இருள் தெய்வம். சிற்பிகளின் கனவில் மட்டுமே தூபிகை தெய்வமெனத் தோன்றுவாள். எட்டாயிரம் உளிக்கால்கள் கொண்ட தொல்சிற்பி.
வலைபின்னும் போது மானுடரில் பெருங் காதலின் முடிச்சுகளில் அரிதாகக் கால்கள் சிக்கிக் கொள்கையில் அவள் ஒரு சிற்பியைத் தேர்ந்தெடுக்கின்றாள். அவன் கனவில் தோன்றும் கற்பனையால் தம் முடிச்சுகளை அவிழ்த்து மேலுமொரு சிலந்தியாய் உருக்கொள்கின்றாள். சிலந்தியும் சிற்பியும் புணரும் கனவே சிலையென்றாகிறது என்பது சிற்பர்களின் மந்தணக் கதை.
தன் கனவில் உதித்த ஈச்சியை விரல்களில் வலையென விரித்தவள் தூபிகையென எண்ணிக் கொண்டிருந்தான் மாதுளன். தன்னைச் சிலந்தியுடன் புணர்வதாக எண்ணிக் கொள்கையிலெல்லாம் அச்சிலந்தி எளிய சிறு கால்களுடன் சிறுமுகையெனத் தளிர்த்த வதனத்துடன் பெய்யினியாகவே தோன்றும். பெய்யினி எதனால் தன்னை ஈர்க்கிறாள் என்பது போல் ஆயிரம் குடையும் வினாக்களுடன் அலைபவனை ஆசிரியரும் தோழர்களும் மகத்தான சிற்பியாய் விளங்கப்போகும் பெருங்கலைஞன் எனச் சொல்வது அவனே அறியாத அவனது ஊழ் என எண்ணிக் கொள்வான். ஊழின் வலையைப் பின்னும் சிலந்திகளும் அவற்றை அறியப் போவதில்லை. எளிய மானுடனுக்கு ஏது விடுதலை. வலையில் விழுந்து தங்கிச் சிலந்தியிடமே தன்னை உண்ணக் கொடுப்பது வரை காத்திருக்க வேண்டியதே இயலக்கூடியது. அதுவரை வலையில் துளித்த ஒளியில் விசிறும் வானவில்லென ஒரு வாழ்வை அவன் கண்டான். ஏழு வண்ணங்களில் ஏழு பெய்யினிகளை.
பெய்யினி மாதுளனை முதல் நோக்கிய போது அவளின் முகத்தில் அரணைக்குட்டியின் நுனிவால் சிவப்பென சிறுபருக்கள் முகிழ்த்திருந்தன. அவை கருமையில் மின்னும் இரத்தினங்களென எண்ணினான். காதல் வருகையில் அனைத்தும் கவியில் இணையும் சொல்லனவே ஆகும். ஒரு பருவும் இன்னொரு உவமையும் ஒரு முழுச்சொல்லிணைவு. அதை ஆக்கும் தூபிகை அதில் மானுடரை இறுக்கிக் கட்டுகிறாள். சிற்பக் கூடத்தில் ஈச்சியின் முகத்தைக் காண வந்திருந்த அரசியுடன் சேடிகளில் ஒருத்தியென வந்து நின்றாள் பெய்யினி. அரசி நிலவையின் இடையளவே அவளின் உயரம். ஈச்சியின் தங்க முகத்தை மூநாழிகை இமைக்க மறந்து நிலவை நோக்கியிருந்தாள். அவளது பேருடலின் அருகே எலிக்குஞ்சென அருகிருந்த பெய்யினி ஈச்சியின் முகத்தையும் நிலவையின் முகத்தையும் மாறி மாறி நோக்கிக் கொண்டிருந்தாள். இரண்டுமே ஒருவரின் ஆடிப்பாவையென எண்ணிக் கொண்டிருப்பவளென அவளது முகத்தில் வியப்பு ஒளிவீசியது. விழிகளில் அவ்வொருமையைத் தேடும் விழைவு கூடியிருந்தாள். மங்கலச் செல்வரும் நூறு மாணாக்கர்களும் அயலகச் சிற்பிகளும் கூடத்திற்கு வெளியே கூடியிருந்து சொல்லாடிக் கொண்டிருந்தனர். மங்கலச் செல்வரின் காலடியில் அமர்ந்திருந்த மாதுளனின் தோளில் அவர் முதுகரங்களைக் கிளையைப் பற்றியிருக்கும் பறவையின் கால்களென ஊன்றியிருந்தார்.
அரசியிடமிருந்து அழைப்புடன் வந்தாள் பெய்யினி. அவளுடன் மேலும் இரு சேடியர் உடன் வந்தனர். அவ்விருவரும் அவளை விட உயர்ந்தவர்கள். இரு கோழிகளுக்கு இடையில் நடக்கும் குஞ்சென எண்ணிக் கொண்டு உதட்டில் நகைபரவ அமர்ந்திருந்தான் மாதுளன். மங்கலச் செல்வரின் அருகு வந்தவர்களில் நன்கு வளர்ந்திருந்தவள் “பெருஞ்சிற்பரே. அரசியர் அன்னையின் சிலையை வடித்தவரை அழைத்து வரச் சொன்னார்” என்றாள். அவளது சொற்களில் வெளிப்பட்ட ஒருமையை உணர்ந்த மங்கலச் செல்வர் மெல்லச் சிரித்துக் கொண்டு “அன்னையின் சிலையை வடித்தவரென்பது அவ்வெண்ணத்தை முழுதாய் அமைத்தவர் என்பதல்லவா பொருள். அரசி சொற்களில் தேர்ந்தவர் எனக் கேட்டிருக்கிறேன். இன்று கண்டேன். மாதுளா அவர் அழைத்திருப்பது எளிய கரங்களையல்ல. கனவு கண்ட விழிகளைக் காணவே அவர் விழைகிறார். நீ சென்று நற்சொல் பெற்று மீள்வாயாக” எனச் சொன்னார். அவரது குரலில் பெருமை பொன்னில் தீயெனச் சுடர்ந்ததைக் கண்ட மாதுளனின் தோழர்கள் நாகணவாய்க் கூட்டமென ஒலிகொண்டனர். மாதுளன் தான் அச்சிலையை வரைந்தவன் என்பதை நம்ப இயாலதவள் போல் விழியில் வினாவெடை தாங்காது நடந்து சென்றாள் பெய்யினி. அவள் நடக்கும் பொழுது ஒற்றைக் காற்று இருதூண்களுக்கிடையில் அடித்துச் செல்கிறது என எண்ணியபடி அரசியின் முன் சென்று பணிந்து நின்றான் மாதுளன். முறைமைச் சொற்களெதுவும் அவனிடம் எழவில்லை.
அங்கிருந்த அதீத அமைதி அங்கிருந்த பெண்களையெல்லாம் கூடத்தின் பாவைகளில் ஒன்றெனத் தோற்றியது. மேலும் நோக்கியவன் அவர்கள் எவருடலிலும் இமைச்சாற்றலும் திறத்தலும் தவிர அசைவே எழவில்லை எனக் கண்டான். அத்தகைய அமைதி அவன் யார் முன் நின்று கொண்டிருக்கிறேனெனச் சிலகணம் அவனை உறுத்தியது. காற்றில் அலைபடும் தொங்குதிரைகள் படபடத்த ஒலிமட்டும் பெருமுரசுகளெனச் செவியில் அறைந்தன. பாதிமுடிக்கப்பட்ட மர ஆசனம் ஒன்றில் அமர்ந்திருந்த நிலவையின் விழிகளிலிருந்து வழிந்து ஊற்றிக் கொண்டிருந்த கண்ணீர் அவரது ஆடையை நனைந்து ஊறியிருப்பதைக் கண்டான். விழிகளைத் தாழ்த்திக் கொண்டு சிலையென அமர்ந்தான் மாதுளன்.
நெடுமூச்செறிந்த ஒலிகேட்டு நிமிர்ந்தவனை நிலவை வலக்கரத்தால் அழைத்தார்.
“இளையவரே. ஈச்சியை நீங்களா கண்டது” எனக் கேட்டார். “வணங்குகிறேன் அரசியாரே. அன்னையின் வதனத்தை சொல்லாலோ கற்ற நுட்பங்களாலோ நான் அறியவில்லை. நானறியாத ஏதோ ஓர் கணத்தில் அன்னை என் கரங்களை எடுத்துத் தன்னைத் தானே மண்ணில் வரைந்து கொண்டார். நான் ஒரு உளி மட்டுமே” என்றான். அவனது பாவனை சூடிய பணிவைக் கண்ட நிலவை சிரித்துக் கொண்டார். விழிநீரைத் துடைத்து விட்டு “அருகு வருக இளையவரே. எக்கரத்தால் அவளை வரைந்தீர்கள் என நான் நோக்க வேண்டும்” என்றார். அவரது குரலில் அவன் அறிந்த தமக்கைகளின் அன்னையரின் குரல்கள் எதிரொலிப்பதெனக் கேட்டவன் எழுந்து சென்று முழந்தாளில் நின்று கொண்டு அவனது வலக்கரத்தை மலரளிப்பவன் போல் நீட்டினான். பெய்யினி அவனது தேகத்தைச் சந்தேகத்துடன் நோக்கிக் கொண்டிருந்தாள். நிலவை அவனது விரல்களைத் தொட்டுத் திருப்பி உள்ளங்கையை நோக்கினார். சிறு தளிர்கள் போல் ஆடின விரல்கள். அவரது பெருங்கரத்திற்குள் ஒரு விளையாட்டுக் கரமென உறைந்து நின்றது மாதுளனின் வலக்கரம். அவனது விரல்களை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொண்டு அவன் விரல்களில் அழுத்தி முத்தமிட்டார் நிலவை. அதைச் சற்றும் எதிர்பாராத சேடிகள் உயிர்பெற்று எழுந்து மேனிகள் அதிர்ந்து அசையத் தொடங்கினர். அவர்கள் எவரையும் நிலவை அருகழைத்துத் தொட்டது கூட இல்லை. இந்த எளிய சிற்பியின் கரத்தில் அரசியின் முத்தமென்பது எண்ணியே இராத காட்சி. நிலவை சிரித்துக் கொண்டே அவன் குழலைத் தடவி வருடினார். அவன் அன்னையின் மடியமர்ந்த குழவியென அச்சம் மறந்து நாணிக் கொண்டிருந்தான். அவனது விரல்களெங்கும் நடுக்கு மறைந்து இனிமை கூடியது. நிலவை அவனது இள விழிகளை நோக்கி “எக்கனவில் நீ அவளைக் கண்டாயெனச் சொல்வாயா இளையவனே” என்றார். அக்கேள்வியால் அகம் தவித்த மாதுளன் “மெய்யாய் அது எக்கனவென அறியேன் அரசியாரே. நூறு நாட்கள் இக்கூடத்தில் அன்னையின் சிற்பத்தை உண்டாக்குவதற்காக அனைத்துப் பணிகளும் அல்லும் பகலும் நடந்து கொண்டிருந்தன. ஒவ்வொருவர் தொட்ட கனவும் பொன்னில் கரைந்த போது இதுவல்ல நான் கண்டது எனக் கூவியபடி பித்தர்கள் போல் வரைதோலை நெருப்பில் எறிந்து வஞ்சம் கொண்டவர்கள் போல் எரியும் நெருப்பையே நோக்கியிருந்தனர்.
பாணர்களின் சொற்களில் எழுந்த அன்னை உறங்கிக் கொண்டிருப்பவர்களில் துர்கனவுகளென அறைந்து எழுப்பிக் கொண்டிருந்தாள். இங்கு வந்து சென்ற எவரும் மெய்யாகவே இது பித்தர்களை அடைத்து வைக்கும் கூடமென எண்ணமிலாது திரும்பவில்லை. எனது ஆசிரியர் உதடுகளில் எதையோ நடுக்குக் கொண்டு உச்சரித்துக் கொண்டேயிருந்தார். பாவங்களால் நிறைந்தவன் தெய்வம் தனக்கு அருளாது என அறிந்தவன் தன் தெய்வத்தை இறுதி முறை அழைப்பவன் போல் மன்றாடிக் கொண்டிருந்தார். எனக்கு இதனால் எவ்வித துக்கமும் இல்லை. நானொரு மாணாக்கன் மட்டுமே. இச்சிலை இங்கு அமைக்கப்படாவிட்டால் நான் இழப்பதென எதுவுமில்லை. வெறுமனே இங்கிருந்த மூத்தவர்கள் அன்னையின் முன் தோற்றுக் கொண்டிருப்பதைக் கண்டு நானும் தோழர்களும் அவர்கள் அறியாத வகையில் உவகை கொண்டிருந்தோம். இத்தகைய நெருக்கடி எங்கள் காலத்தில் எழுந்தால் ஒரே நொடியில் மாபெருங் கற்பனையில் தீர்த்து வைத்திருப்போம் எனச் சொல்லாடுவோம். பாணர்களிடம் ஒரு செப்புக் காசைக் கொடுத்து முதுசிற்பிகளாலும் காணப்பட முடியாதவள் அன்னை எனப் பாட வைத்துக் கேட்டோம்.
நான் கனவு கண்டு விழித்த புலரியின் முன்னிரவில் அவ்விதம் சில விறலிகளும் முதுபாணர்களும் நெருப்பைச் சுற்றியமர்ந்து யாழைத் தூண்டி ஈச்சியின் அழகைப் பாடிக் கொண்டிருந்தார்கள். அதுவோர் காதல் பாடல் போல் ஒலிக்க இளையவர்கள் ஒன்றாய்க் கூடி நெருப்பின் தழலாடலின் முன்னமர்ந்தோம். இளைய காற்று வீசியது. இப்பொழுதென அக்காற்றை அறிகிறேன். அக்காற்று என்னில் தழுவிய போது அதுவோர் மெய்யறிகணமென அகப்பல்லி கத்திச் சொன்னது. எதுவோ ஓர் விழி என்னைத் தொட்டது. அங்கிருந்து பாடிய விறலிகளில் முதிய ஒருவர் சரிவானை நோக்கி விழிகொண்டு விண்மீன்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். சரிந்து கீழே அமர்ந்திருந்த இளையவர் கூட்டத்தைக் கண்டவர் பேயெழுந்தவர் போல் சிரித்தார். சிரிப்பு இடியோசைகளுடன் உறுமலென எழுந்த போது நடுங்கி விட்டோம். மேனியில் மெய்ப்புல்கள் எழ அச்சம் நெஞ்சை உதைக்க அவரை நோக்கினோம். “அறிவீரோ இளையோரே. என் ஈச்சியின் காதலை. மாகளச் சூரி. செருக்களப் பூ. மலைமேல் பனி. என் கண்மணி. அவள் காதலை அறிவீரோ” என்றாள். அச்சொற்கள் வெறியைத் தாளமெனக் கொண்டிருந்தது. எறிந்த மூச்சை யாழென மீட்டியது.