81: வெறுந்தேகம்
சிற்பனில் எரியத் தொடங்கிய சூர்ப்பனகையின் கொல்காம மூச்சின் தழல் கருவானில் மின்னிடும் உடுக்களில் பட்டெதிரொளித்தது. வீணையின் தொன்மையான தந்திகளில் தொல்லிசை எழுந்தது. பறைகள் ஆயிரமும் மூச்சென உயர்ந்து வெறித்தன. ஆயிரம் உடுக்குகள் தலைசிலுப்பித் தோல்கள் அதிர்ந்தன. ஈசனை எழுப்பும் இசையென்றானவையில் எழுந்தாள் சூர்ப்பனகை. சிற்பன் ஒருகணம் விழிமூடித் திறந்து ஆடலின் முதலசைவை ஊழ்கம் கொண்ட போது திருதிகாவின் மலர் முகம் மின்னிப் பூரணையென்று வானில் ஒளிர்ந்தது. விண்ணிலிருந்த ஒளிவட்டத் தண்மதியில் கரும் புன்னகையெனச் சூர்ப்பனகை சிற்பனை நோக்கிக் குமிழெனச் சிரித்து பல்லாயிரம் வண்ணக் குமிழிகளாக உடைந்து பரவிக் காற்றில் இறங்கிப் பொழியத் தொடங்கினாள். சிற்பன் விழிகள் இமைமறந்து உற்ற வேளை ஆழாழியில் குதிப்பவள் போல அவனுள் பாய்ந்தாள். சூர்ப்பனகை இறங்கிய மானுடர் காமத்தின் பெருவிழைவை மேனியெனச் சூடுவர். ஆடும் பொன்னம்பலத்தில் புடவியை ஆக்கிய விசைகளைப் போருக்கு அழைப்பர். மேனியே விழைவில் தூயதென்று ஆர்ப்பர்.
அக்கணம் வரையிலும் எவ்வாடலிலும் சிற்பன் சூர்ப்பனகையைக் கண்டுற்றதில்லை. தன்னில் தானழிந்து பிறரில் காமம் விளைந்து முற்றாத இளமையில் மேனிகசிந்து மோகம் மூத்துச் சொட்டத் திரண்ட விந்தும் மதனமும் எவரால் காணப்படுகிறதோ அவரே சூர்ப்பனகையை ஆடலில் காணமுடியும் என்பது ஆடல் முத்தோர் சொல். எக்கனவில் கண்ட தெய்வம் இங்கு என்னில் இறங்கியது என மேனியெழுந்து தரையில் ஓங்கி விழுந்து ஒருகரமே முழுதும் தீவாளென வானில் கூரென எழுந்து விதிர்த்த போது எண்ணங் கரைந்த சிற்பனில் ஆடல் தன்னைத் தொடங்கியது.
மண்ணில் நெளியும் சிறு புழுவில் துடிப்பதுவே காலமென்னும் பல்லாயிரந்தலை கொண்ட நாகத்திலும் நெளிகிறது என்றது இருள். தீயிலும் என்றது இருள். திசைகளிலும் என்றது இருள். இருளுருவனான தேளன் சிற்பனின் இருகரங்களிலும் அமைந்தான். இருகரும் விடக் கொடுக்குகளை வளைத்துப் போரெழுந்த தேளனின் கரங்களைக் குவித்துக் குடி நோக்கினான் சிற்பன். குடிகளை முழுச்சுற்று நோக்கி வெறிவிழிகளால் என வெருள் அளித்தான். குடித்திரள் மெல்ல அஞ்சிய ஒலி காற்றில் வெடித்து ஓலமென்று குரல்களை அளைந்து எழுந்தது. அஞ்சியவர் அவன் விழிகளை நோக்காது இமை தாழ்த்தனர். இளம் பெண்கள் நோக்கவிந்தவர்களென விழிமணிகள் ஆவியாகிக் கரைந்தெழுபவையெனத் தோன்ற அச்சக் கூக்குரல்கள் எழுப்பினர்.
தொலைவில் ஏதோ பிழைபடுகிறது என எண்ணமெழுந்த இளம் பாணன் துதியை ஆழ இழுத்து நெஞ்சை முற்றாய் நிறைத்து ஊதினான். யாதினியின் தொடையிருந்த விரல்களை மெல்லப் பற்றியாட்டியவன் “என்ன நிகழ்கிறது. ஏன் கூக்குரல்களும் அலறல்களும் எழுகின்றன” எனக் கேட்டான். யாதினி இளஞ் சூடான தாமரையென மேனியில் வெம்மை கூடி இளம் பாணனின் தோளணைவில் தாபம் சாரலடிக்க நின்றிருந்தவள் அந்த வினாவினால் துணுக்குற்று விழிதிருப்பி அம்பலத்தையும் அலறு குரல்களையும் நோக்கினாள்.
மெல்லிய புன்னகை குவிய “அதோ அன்னை சூர்ப்பனகை எழுந்திருக்கிறாள். நீங்கள் நல்லூழ் கொண்டவர் என்பது மெய்தான். என் இளவயதில் ஒரு முறை மட்டுமே பன்றித் தலை கொண்ட அன்னையின் சிற்றாலயத்தில் நிகழ்ந்த கலையாட்டில் அன்னை எழுவதைக் கண்டிருக்கிறேன். அன்னை எழுவது பலபருவங்களுக்கு ஒருமுறை மலரும் அரிதான மலர் நிகழ்கை போன்றது. குடியில் முற்றாத விழைவுகள் கூடி அவை அறுபடும் கணத்தின் முன் அன்னை தோன்றுவாள் என்பது குடி நம்பிக்கை. அவளை விழைவறுப்பவள் எனவும் சொல்வதுண்டு.
அன்னை எழுந்த ஆடலரோ கலையாடியோ கூத்தரோ விறலியோ பாணனோ அவர்களில் கலையென விழைவது அனைத்தையும் எரிக்கும் காமத்தின் தீயே. தீக்குழம்பினைக் கக்கும் மலைகளைக் கண்டதுண்டா பெருங்கவியே” எனக் கேட்டாள் யாதினி. நினைவில் எதுவோ ஒரு காட்சி இடறலெனத் தோன்றியவன் “இன்று அந்தியில் நீராடலின் பின் பன்றி தெய்வமென வீற்றிருக்கும் சிற்றாலயத்தில் தாமரைகளைப் பறித்து வைத்தேன். ஆனால் நீர்க்குமிழியில் அடைபட்ட காற்றென அந்த ஆலயம் குடிகள் தொடாது விலகிச் சுழிமையத்திலென உறைந்திருந்தது. நான் நீராடித் திரும்பிய போது எவரோ அகல் ஏற்றியிருந்தனர்” என்றான்.
சிதி இளம் பாணனில் முண்மாவின் முட்கள் எழுந்ததைப் போல் திடுக்கிட்டு எழுந்தாள். கர்ணிகையும் சிப்பியும் அவனை நிமிர்ந்து நோக்கினர். யாதினி அவனது விரல்களை அழுந்திப் பற்றிக் கொண்டாள். “மெய்யாகவே அக்குளத்தில் நீராடினீரா கவியே” என நடுக்குற்றவள் போலக் கேட்டாள் சிதி. பிழையென எதை இழைத்தோம் என அறியாத இளம் பாணன் நான்கு தேவியரின் முகங்களையும் நெளிவுடன் நோக்கினான். யாதினி இருளில் நெடுந்தொலைவில் ஒலிக்கும் நரியின் ஊளையென்றான குரலில் அச்சமும் விதிர்ப்புமெழ அவனை நோக்கிச் சொல்லெடுத்தாள்.
“பெருங் கவியே. எங்கள் குடிநெறிகளால் தொல்கதைகளால் நீங்கள் கட்டுண்டவர் அல்ல என்பதை நினைவில் இருத்தி மிகுதியைக் கேளுங்கள்.
விழைவின் மூதன்னையென எங்கள் குடி கொள்வது அன்னை சூர்ப்பனகையை. அவளது தொல்கதையை பாரதத்தின் இளையவருக்கு நான் உரைக்க வேண்டியதில்லை. விண்ணளந்த தெய்வத்தின் மானுட உருவின் மேல் காமம் கொண்டவள். காமமென்பதே நம் குடியில் காதலென்ற சொல்லின் நிகருணர்வு எனக் கொள்க. விழையும் எதையும் வெல்வதே அரக்கியர் நெறி. ஆனாலும் அவள் தெய்வத்தின் மேலான விழைவினால் அவனை நெருங்கினாள். பெண்ணின் விழைவு சுடர்வது மூக்கில் என்பது விழைவறிந்த மூதாதையர் சொல். அவள் விழைவை தெய்வங்கள் அறுத்தன. ஒருநெறியும் இன்னொரு நெறியும் மோதிக் கொண்ட விழைவின் போரில் மானுட நெறியென்ற ஒற்றைப் பேருண்மையை பாரதக் காவியங்கள் புனைந்தன. ஆனால் விழைவின் நாசி அறுக்கப்பட்ட பெண் வணங்கப்பட வேண்டியவள் என்பது குடி மரபு. அவள் எந்த அறத்தையும் மீறியவளில்லை. அவள் மீறியது வேறொரு நிலத்தில் முகிழ்நிலை அறமொன்றையே.
பேரழகியும் தெய்வங்களுக்கு நிகரான விசையும் கொண்டவளை எங்கள் குடிகள் அன்னையென்று ஆக்கினர். முற்றா விழைவுகளை அறுத்து அவள் முன் படையலிட்டனர். சினந் தணியாதவளின் மூச்சு இந்தத் தீவின் ஒவ்வொரு இலைமடிப்புகளிலும் அலையென இன்றுமிருப்பது. விழைவை வெல்லுதல் மானுடர்க்கு அரிது. அவளே காமத்தை அளியெனக் கொடுப்பவள். என்று எந்நெறி முற்றுண்மை என எழுந்தாலும் அதைக் குலைக்க அவள் மண் நிகழ்வாள் என்பது முன்னோர் அச்சம். வேள்விகளை அழிப்பவள். நெறிகளில் பிறழ்வென்றானவள். பிறழ்வில் தெய்வங்களைப் போருக்கழைப்பவள்.
குடிகள் எளிய வாழ்நாளுக்கு இரந்து நிற்கும் தெய்வமல்ல என்பதால் அவளை யாரும் பொது நாளின்றி வணங்குவதில்லை. அவளது நீரகங்களில் வற்றா இளமையும் வாழ்வின் விசைகளும் கரந்திருக்கிறது எனச் சொல்வர். ஆனாலும் அதில் குடிகள் நீராட அஞ்சுவர். வாழ்வின் விசைகள் எம்மை எங்கு அலைத்து எவ்விடம் கைவிடுமென எவரறிவார். அறிக. அவளது ஆலயத்தில் சுடரேற்றப்பட்டு அறுபது பருவங்கள் ஒழிந்தன. இன்று நீங்கள் அவளது கால்படாத நீரகத்தில் நுழைந்ததே அவளின் வருகையை மண் நிகழ்த்தியிருக்கிறது. உங்கள் நுழைவிற்கொரு ஊழுண்டு. அதை முற்றழித்தே நீங்கள் மண் நீங்க இயலும். அதுவரை அவள் உங்களை நிழல் போலும் உங்கள் நிழல்படும் இடங்களிலிருந்து அரவம் போலும் எழுந்து நிலத்தை ஆள்வாள். அதுவே குடிச்சொல்” என்றவள் கரங்கள் வியர்த்து மெல்லிய நடுக்குடன் சொற்களை அணையிட்டு நிறுத்தினாள்.
ஐவரும் குடித்திரளில் ஆடும் நிழல்களில் நெளியும் அரவுகளைக் கண்டனர். இளம் பாணனில் நாகங்களின் தாழை வாசனை எழுவதை நாசிகூர்ந்து மயங்குபவர்கள் போல் அவனைத் தொட்டளைந்தனர். சிற்பன் அம்பலத்தில் எரிவிண்மீன் சரிவது போல் விழுந்தான். கணைகள் எழுவது போல் விண்ணெழுந்தான். கரங்களில் காலங்கள் அவிழ்ந்தன. வீணைகள் பெருக்கெடுத்தாடி ஒவ்வொரு காலின் கழலையும் அறுப்பவை போல விம்மின. உடுக்கிசை மயக்கென எழுந்து கூந்தல் பறந்து விரிய ஆடிய குடிகளில் மெய்மறந்து விதிர்த்தன. மேனிகள் அடித்துக் கொல்பவையென மோதின. வெறிகாமத்தில் கழுத்தை அழுத்திப் புணர்பவர்களென விழைவு முற்றி மேனிகள் சரிந்து விழுந்தன. சிற்பன் பித்தாகி அம்பலத்தில் கரைந்து ஊற்றியும் எழுந்து இறுகியும் அவிழ்ந்து சினந்தும் வரையற்று ஆடலானான். அவனில் எழுந்த பித்து ஒரு நுண்வாசனையெனக் காற்றில் பேரலைகளை வீசியார்த்தது.
ஒன்றை ஒன்று வேட்டை கொண்டு துரத்துவதென மானுடர் இருளில் வனத்திடை ஏகினர். ஆடல் வெளி தாண்டி இருளலைகள் குதித்துக் கால்கொண்டு பரவி கரங் கொண்டு அணைத்து பட்டினத்தை நெரித்துக் கழுத்தை இறுக்கியது. இளம் பாணனின் மேனியில் உறைந்த வியப்பைக் கர்ணிகையின் துடிவிரல்கள் கால்விரல்களைப் பற்றிய போது எழுந்த அதிர்வு துலக்கியது. யாதினி அவன் கழுத்தை நாகத்தின் தலை கழுத்தில் ஊர்வது போல் நாசியால் உறிந்தாள். சிதி அவன் மார்பை நீரள்ளும் வேழத்துதி போல் மணந்து இழுத்தாள். சிப்பி கிளையில் எழுந்து நின்று அவன் நுதலை நுனி மூக்கினால் முகர்ந்தாள். அவனின் நறுமணமென எழுவதை நான்கு மூக்குகளும் உறிந்தன. காற்றால் அள்ளுண்டு மிதப்பவனென மேனி நடுங்கி உடல் கூசிப் பற்கள் ஆடிடக் கரங்களால் கிளைகளைப் பற்றினான் இளம் பாணன்.
எது மானுடரில் இன்மணம் ஆகிறதோ அதுவே காம விழைவின் தொல்வாயில் எனச் சூர்ப்பனகைகள் அவனிடம் சொல்லினர். ஒவ்வொரு மேனியும் உறிவது அவனுள் எரியும் தீயின் சுடர்ப்பை. சுடர்ப்பில் கசியும் கரும்புகை வாசனயை. வியர்வையின் தொல்லூற்றில் அசையும் விளைநிலங்களைச் சூர்ப்பனகைகள் மூக்குகளால் உழுதார்கள். இளம் பாணனின் இருகரங்ககையும் தூக்கி மேற்கிளையில் பிடித்துக் கொண்டு யாதினியும் சிதியும் அவன் கையிடை மயிர்ச்செறிவை முகர்ந்து மயக்காடி எழுந்து கரமுழுதும் சுவாசித்து மார்பின் குமிழ்கள் வரை நிறைத்துக் கொண்டார்கள். அவன் பெருஞ்சிங்கங்களிடை சிக்கிக் கொண்ட இளம் மானெனத் துடித்தான். பசியற்று உயிருடன் விளையாடுவதைக் களியென்று எண்ணுபவை போல் அவனைச் சுகித்தனர் நால் தேவியரும்.
வேறுகாடார் மேற்கிளையில் மந்திகள் குதித்தாடுவது போல் கிளைகளும் இலைகளும் குலுங்கி ஆர்ப்பதைக் கண்டு சிரித்துக் கொண்டிருந்தார். நாவல் மரத்தடியில் நின்றிருந்தவர்கள் வசியப்பட்டவர்கள் போல் ஆடல் வெளியை நோக்கி எழுந்து ஓடினார்கள். மேனிகளிடம் காமமென்ற விழைவெழாது போரொன்று மூண்டது போல் ஆடல் வெளி திமிறியது. புரவிகளின் போர் என எண்ணிக் கொண்டார் வேறுகாடார். கால்கள் வலிக்கிறது எனச் சொல்லிய இருதியாள் கீரிமேட்டின் வெண்மணலில் அமர்ந்தார். அருகமர்ந்த வேறுகாடார் “இக்களிகள் இன்று வெகுதொலைவு நம்மை விட்டுச் சென்று விட்டன இருதி” என்றார். இருதியாள் இருகைகளையும் பின் தூண் என ஊன்றிக் கொண்டு குடிக்களியை நோக்கிப் புன்னகையில் மணியொளி பூண்டிருந்தார். வேறுகாடாரைத் திரும்பி நோக்கியவர் அவரின் வெண்குழல் கற்றைகள் மயக்குற்று ஆடுவன போல் தோன்ற “உங்கள் வெண்நரையில் இன்னும் மயக்காடுகிறதே காடரே. காமத்தைத் துறந்த ஆணென்று மண்ணில் எவருண்டு. அழித்தோ ஒழித்தோ வெல்வதே இயல்வது. இல்லையெனில் அவரறியாத அகப்புற்றில் அச்சர்ப்பம் தன் கணத்திற்கெனச் சுருண்டுறங்கியிருக்கும்” என்றார்.
வேறுகாடார் உடலை முறித்து நெட்டிகளை ஒடித்துக் கொண்ட பின்னர் “நான் எதையும் துறந்தவனல்ல இருதி. களியில் வெற்றுத் தேகங்கள் வெற்றுச் சதைகளைப் பின்னிக் கொள்கின்றன. அகம் அறியாத காமம் நிறைவும் கனவும் கொள்வதில்லை. வெறுந்தேக வேட்கை விரைந்தழிவது. அதற்குப் பொருளென்ற ஒன்றில்லை. காமத்தின் விழைவுகளை நுண்மையாக அழிப்பதே காமத்தைக் கட்டற்றதாக்கும் விழவு என்பது முன்னோர் அறிதல் என எண்ணுகிறேன். இன்னும் இருநாளில் இவர்கள் ஒருவரை ஒருவர் எங்கனம் நோக்குவர். மயக்கில் மயக்காகி மேனிகள் முயங்கிடினும் அகத்தில் குரூரமெனச் சொற்களால் சொல்லப்பட்டு நெறிகளாக வகுக்கப்பட்டுக் கதைகளால் மீள மீள ஊன்றப்பட்ட எளிய குடிகள் இக்கனத்தைத் தாங்க மாட்டார்கள். களியும் நெறியென்று யாத்தவர் மேதை. ஆனால் ஊழ்கத்திலென நிகழும் களி எளிய குடிகளுக்கு வாய்ப்பதில்லை. இளையோருக்கு உடலறிதல் என்ற இன்பம் மட்டுமே புரக்கப்படுவது. புரத்தல் என்பது மிகுதியாகக் கொடுக்கப்படுதல் எனவும் வகுக்கும் சொல்லின் நுண்மையே இக்களி.
மானுட யாக்கைகளின் விழைவுகள் கனவுகளால் பெருகுபவை. களிவிழவு நிகழ வேண்டுமென மன்றில் முடிவெடுக்கப்பட்ட போது எழுந்த மெளனமே களிவிழவில் இன்று கிளர்ந்தெழும் அலறல் பேரோசை. மீறப்படுவதென அளிக்கப்படும் எதுவும் நிலையற்றது. நிலையின்மையே யாக்கையைப் பொருளுள்ளதாக்குவது போல் காமத்தையும் களியுள்ளதாக்குகிறது.
இன்னொருவரால் தொடப்படும் வரை என் விழைவுகள் என்றும் காத்திருந்தவை அல்ல. முதல் விசையிலேயே மேனிகளைத் தொட எழுபவன். இளம் பெண்ணோ முதியவளோ எதுவும் எனக்கும் பொருட்டென்று ஆனதில்லை. ஆனால் வெறுந்தேகம் எனும் சொல் என் காம ஊழ்கம். விழைவுகள் வற்றியுலரும் கண்ணெட்டாத தொலைவுகள் கொண்ட பாலையில் உதிக்கும் மாபெருஞ் செஞ்சூரியன் அச்சொல்” என்றார் வேறுகாடார்.
இருதியாள் தன் மேலாடையைக் காற்றில் திறந்து முலைகளைக் களிப்புழுதிக்கு அளிப்பவள் போல் அயர்ந்து படுத்தார். வெண்மணலில் ஒரு நீள்நதியென. அனந்த சயன பாவனையில் அருகில் சரிந்த வேறுகாடார் காற்றில் கூடிய குளிரில் விடைத்து நின்ற இருதியாளின் வலமுலைக் காம்பைச் சுட்டுவிரலால் வலம் வந்து இடம் வந்து மேலேறிக் கீழிறங்கி அலைய விட்டார். இருதியாள் கரங்களைத் தலையணையாக்கி விண்மீன்களை நோக்கியிருந்தார். நாவல் மரக்கிளைகள் நலுங்கின. வான்மதி இனிமையால் தகிப்பவள் போல் ஏறிவந்தாள். “என்னில் கனவென எழுவது எதுவென்று அறிவீரா காடரே” என்றார்.
“சொல்லில் எழாது ஒருவர் கனவை இன்னொருவர் அறிவதில்லை இருதி. சொல்லில் எழும் கனவுகளில் ஆண் பெண் என்ற இருபெரும் தொன்மைச் சுடர்கள் இக்கணம் வரையான காலப்பெருக்கில் சுழிந்தவற்றின் பாவனைகள் சுவறியிருக்கும். சுடரில் சுவறும் செம்மையெனவும் அதைச் சொல்லலாம்.
ஆண் வேறு நிலை கொண்ட கனவாளன். பெண் வேறு நிகர் கொண்ட கனவாளினி. இருவர் கனவுகளும் எங்கும் பிரிந்து கலந்து இணையும் அழிமுகங்கள் தோன்றுவதில்லை என்பதே மெய். அவரவர் கனவை அவரவர் சொல்வதில் அடையப்படுவது களியை விடத் துயரளிக்கக் கூடியது. ஆனாலும் மானுடர் துயரைக் களியை விட விழைகின்றனர். துயரளவுக்கு குடிகள் ஒவ்வொரு நாளும் விழையும் போதை பிறிதில்லை. அதனாலேயே காவியங்கள் துயரால் போதையூற வைக்கப்படுகின்றன. மேன்மையான துயரங்களென அவை முன்வைப்பவை மெய்யில் ஒருகணத்தில் ஒழியக் கூடியவை. ஆனால் அது அவ்வண்ணம் எளிதில் கலையவிட மானுடப் பெருக்கு விழைவதில்லை. துயரைப் பலகோடியாய்ப் பெருக்கினால் ஒழியக் களியின் தித்திப்பை அறிய முடியாத விலங்குகள். அல்லது சுவையறிபடாமல் போகும் நோயெனவும் அதைச் சுட்டலாம். முகர்தல்களற்று நோக்குகளற்றுத் தொடுதல்களற்றுச் சுவைகளற்று ஒலிகளற்று எக்களி மண்ணில் பொருளுள்ளது. இதில் எதுவோ ஓர் புலனின்பம் கூட ஒற்றை போதையென மானுடரை வீழ்த்தவல்லது. எல்லாம் மாயையே என்பது சித்தர்கள் சொல். எல்லாம் வீழவே என்பது இந்த எளியோன் சொல்.
அனைத்தும் மேல்நிற்க தன்னைத் தாழ்த்துகிறேன் என்பதைப் போல் நுண்மையான அகங்காரம் பிறிதில்லை. எளிய குடிகள் தெய்வங்களையும் அரசர்களையும் நெறிகளையும் கலைகளையும் பேருண்மைகளையும் தொல்சொற்களையும் உயரத்தில் வைப்பதே தாம் கீழாக நின்று கொண்டு துயரை அருந்திக் களியாடவே” என்றார் வேறுகாடார்.
“எங்கிருந்து எங்கோ செல்லும் உங்கள் இயற்கை மாறவேயில்லை” எனச் சொல்லிச் சிரித்த இருதியாளின் மார்புகள் குலுங்கி வேறுகாடரை இளங்கன்றென நக்கின. ஈரமின்றி உலர்ந்த மலரிதழ் போல் தழைந்த உதட்டால் இருதியாளின் முலைக் காம்பைப் பற்றி இழுத்துக் காற்றில் உயர்த்தி அந்தரத்தில் உதடிலிருந்து நழுவவிட்டார் வேறுகாடார். அதிர்ந்த முலைக நா நாவெனக் கூவியது. இருதியாள் அச்சொற்களை அகத்திலெனக் கேட்டு நகைத்தார். இடக்காலை மடித்து உயர்த்தி அமைந்தார் இருந்தியாள். இருதியாளின் இடையாடையால் தன் பெருங்கரத்தை தழலோடையென வழியவிட்டு அல்குலைத் தொட்டுப் பின்னர் முலையைப் பற்றி மெல்ல நாவால் தடவி உறிஞ்சிக் கொண்டே அல்குலைக் கிளைந்து கொண்டிருந்தார். இருதியாள் கிளைகளின் ஊடில் தெரிந்த ஐவரின் முகர் காமத்தைக் கண்டு கொண்டிருந்தார். காணுந் தோறும் கனவு கிளைத்து அல்குல் அவிழ்ந்தது. வேறுகாடாரைத் தொட்டு “அங்கு” என இருவிராலால் காட்டினார். சரிந்து படுத்தவர் கிளையிடையில் தெரியும் அசைவுகளில் ஒளிச்சாறு பாயும் அங்கங்களை நோக்கினார். இருதியாள் அவரது இடையாடையின் மேல்தொட்டு ஆண்குறியை உலர்துணியில் கனியெனப் பிசைந்து உருவினார். மேலும் கீழுமென உருவுகையில் உருகித் ததும்பும் மெழுகை வழியும் விரல்களால் தொடுபவரென எண்ணிக் கொண்டார் இருதியாள்.
“பிறர் கலவியும் காமமும் மோகமும் நோக்குவது மானுடரில் இன்பமென்றாகுவதைக் குற்றமென வகைப்பதை இக்கணம் மீறுவதா களி” எனக் கேட்டார் இருதியாள். இருதியாளின் விரல்கள் வேய்குழல் பற்றுவது போல் விரல்களால் தொடுவதை இனிமையென எண்ணிக் கொண்டிருந்தவர் விழிகள் மெல்ல மேற்கிளையில் யாதினியின் கூந்தலிழைகளைப் பிரித்து முகர்ந்து ஆழிவாசம் நுகரும் இளம் பாணனின் சிற்றுதடுகளில் வெளிரொளி படிந்து கனவிலெனத் தோன்றுவதைக் கண்டார். “பிறர் விழைவை அறிய விரும்பாத மானுடர் உண்டா இருதி. மானுடர் ஏதாவது ஓர் ஆற்றலால் பித்தாகுவர் எனில் அது பிறருளம் அறியும் சித்தியாலேயே. மானுடருக்கு அது வசப்படுமெனில் புடவியென ஒன்று நின்றிருக்க இயலாது. நாளும் பொழுதும் போரும் வஞ்சமும் தீமையும் அழிவும் பெருகும். நாம் எண்ணுவதை விடக் கற்பனையை விடக் கொடியது மானுட எண்ணங்கள் எனும் பேருலகு. ஒன்றென நிற்கையில் வேறொன்றனவும் பிறருடன் கலக்கையில் பெரும் பிறழ்வெனவும் ஆகி நிற்பது. மானுடர் எளிய வஞ்சங்களும் கீழ்மைகளும் கொண்டவர்கள். எதனாலும் நிரப்ப முடியாதவர்கள். முழுப்புடவியாளும் ஆற்றல் கிடைத்தாலும் அடுத்த கணம் அண்டங்களை வெல்லும் கனவு காணத் தொடங்குபவர்கள். வெல்வதென்பது அழிவில் தொடங்குவது. எத்தனை ஆயிரம் விசைகள் நம் குடியில் போரின் எழுகையை உண்டாக்கியது என்பதை நானோ நீயோ நீலரோ நம்மை ஆக்கிய தெய்வங்களோ கூட அறிய இயலாது.
ஒவ்வொருவரும் பேரழிவை விழையாத நாளில்லை. அழிந்து தான் மட்டுமே எஞ்சும் கனவில்லாதவர்களும் இல்லை. எஞ்சிய தான் காணும் புடவியைச் சமைக்க விரும்பாதவரும் இல்லை. அழிவென்பது வேட்டை நாயின் பேற்றுப் பசி. களியென்பதும் அழிவே. நத்தை விரைவில் அழித்துக் கொள்ளும் சடங்கு.
அங்கு ஒருமேனியை இன்னொரு மேனி முகர்ந்தாடும் நடனத்தை நாம் இங்கிருந்து நோக்குகிறோம். வேறெவரோ வேறெங்கிருந்தோ நோக்குகிறார். தெய்வங்களை நம்பும் மானுடர் தம் அனைத்துச் செயல்களும் தெய்வங்களால் நோக்கப்படுகிறது என நம்புகிறார்கள். இல்லையா. தெய்வங்கள் காண அனுமதிக்கப்பட்ட காமத்தைக் காண நாமும் அனுமதி கொள்கிறோம். இதில் குறையென எழுவது குற்றமென உடல் மீறுகையில். கொடுகலவி நிகழ்கையில். ஒருவர் விரும்பாமல் நிகழும் எதுவும் தீங்கே. இங்கு வெளியில் காமம் பிறர் முன் நிகழ்தல் நெறியென்றாகியிருக்கிறது. விழைகையில் இணையும் எதுவும் எதோ ஓர் அறத்தில் எப்பொழுதோ தோன்றியவையே. எவ்வளவு எண்ணியும் மானுடர் புதிய குற்றங்களைப் புரிவதில்லை. அவை ஏற்கெனவே நிகழ்த்தப்பட்டவை. அதில் ஒரு நுண்மையைக் குறைக்கிறார்கள். அறத்தை நோக்கி அக்குற்றம் பெருமூங்கிலென வளைவது வரை இழுத்துக் கட்டுகிறார்கள். தாம் ஆக்கிய சொற்களில் நிலை கொண்டு தம் குடி காக்கிறார்கள். சொற்களே புடவியை ஆளும் மெய்த்தெய்வங்கள் என்பதல்லவா முதுஞானம்” என்றார் வேறுகாடார். சிதியின் இளமுலையின் கருங்கோட்டுகளில் இளம் பாணன் மூக்குரசி நிற்பது கருவைரமொன்றை மூக்கில் அணிந்திருப்பது போலத் தோன்ற உதடு விரித்து மென்நகை கொண்டார் வேறுகாடார்.
இருதியாள் சிதியின் கருங்கரும்பென நீண்ட கால்களில் பொலியும் சதைக் குவிவையும் அவ்வுடலில் சிலகணம் சென்று அது உணருவதை அடையும் விழைவும் கொண்டார். அக்கால்களையே உறுபவரைக் கண்ட வேறுகாடார் “அவை இளம் புரவிகளின் மினுக்குள்ளவை அல்லவா இருதி. நாம் பிறிதொன்றின்றி ஓர் அணிச்சொல்லின்றி எந்த அழகையும் நோக்குவதில்லை. சொல்லற்ற அழகே புடவியில் இல்லை. அழகைச் சொற்களாக்கும் கலையே கவிதையென்றாவது” என்றார். இருதியாள் மேனியதிரச் சிரித்தெழுந்து “கவி பாவம் பூண்டிருக்கிறீர்களா இளையவரே. உங்களில் எழும் எண்ணற்ற பாவங்களினாலேயே நீங்கள் பெண்களை வெல்கிறீர் என்பதே பட்டின மந்தணம்” எனச் சொன்னார். அவரது தழைநுரை முலைகள் தூங்கியாடின. காற்றில் இளங் குளிர் மெல்ல ஏறிக் கொண்டிருந்தது. வேறுகாடாரும் எழுந்தமர்ந்து குடித்திரளின் களியாடல்களை நோக்கிய பின் அம்பலம் எப்போது வெறுமையுற்றது என எண்ணினார். வெற்றம்பலம் ஒரு கணம் அவருடலில் புழு மடிவென நெளிந்தது.
“நான் வேடங்களில் அலையும் நாடோடி இருதி. வேடந்தரிப்பது என் இயற்கை. மானுட இயற்கையென்றும் கூறலாம். எளிய மானுடர் வேடங்களைப் பொய்யென்று சொல்லிக் கொண்டு ஒரு நாளுக்குள் எத்தனை வேடங்கள் புனைகிறார்கள். ஒவ்வொரு மானுடருக்கும் ஒரு முகம் கொள்கிறார்கள். தான் எனத் தனித்தமைகையிலும் அவர்கள் தாம் என எண்ணும் எவருடனோ அமர்ந்திருக்கிறார்கள். சொல்லாடுகிறார்கள். அனைத்தையும் பகுத்துப் பிரித்து தான் பிறரிலிருந்து எங்கனம் மேலானவர் என எண்ணிக் கொள்கிறார்கள். சொல்லாய் ஆக்கி அனைத்துக்கும் மேலே எவருமறியா வெளியில் தருக்கி அமைகிறார்கள். அறிவாயா. அவர்கள் அமர்ந்திருப்பது அந்த வெற்றம்பலத்தில். அங்கு ஆடுபவரென எவருமில்லை. எண்ணங்களென எழுபவை இக்குடிகளின் மயக்குகளைப் போன்றவை. வெறுந்தேகம் எனும் சொல் என்னை அரிப்பதைச் சொன்னேன் அல்லவா. அச்சொல் என்றோ எவரதோ நாவில் ஓர் அறிதலாக எழுந்திருக்கும். அங்கிருந்து ஒவ்வொரு காலமும் மிதந்து ஒவ்வொரு மேனியிலும் தொட்டிருக்கும். அச்சொல்லின் இரைச்சலை விரட்டவே இத்தனை கூச்சல்கள். இத்தனை மயக்குகள். இத்தனை களிகள். வெறுமையளவுக்கு மானுடர் அஞ்சும் இடம் இன்னும் வகுக்கப்படவில்லை. எதுவுமின்றி. சொல்லின்றி. நுண்மையின்றி. பற்றின்றி. புலன்களின்றி. வஞ்சங்களும் பகைகளுமின்றி. கீழ்மைகளும் மேன்மைகளுமின்றி வெறுந்தேகமென எஞ்சியிருப்பதுவே ஆதி இயற்கை. அதற்குத் தொடுதலும் மறைதலும் அறிதலும் இல. அருமணியும் கூழாங்கல்லும் நிகர். காமமும் இன்மையும் ஒன்றே. தோல்வியும் வெல்லுதலும் பொருளற்றவை. வெறுந்தேகமென எழும் ஒன்றில் கனவுகள் அளிப்பதே துயரின் தொடக்கம். வானில் கோடி கோடி விண்மீன்கள் தொட முடியாத உயரத்தில் மின்னுவதைப் போல அதை ஒவ்வொரு கனவிலும் தொட்டுச் சிரிக்கும் குழவிகளைப் போல மானுடருக்குத் துயர் அளியெனக் கொடுக்கப்பட்டிருக்கிறது. களி ஒரு நோய் எனத் துயரை நோக்கி மானுடரை வழிநடத்துகிறது.
என்னில் சேர்ந்த அனைத்தும் நஞ்சினால் ஆன பெருங்கடலில் மீன்களெனத் துள்ளுவதைக் காண்கிறேன். ஒரு முத்தத்தை என் நஞ்சைப் பிறர் அருந்தக்கொடுக்கும் கிண்ணமென ஏந்தி நிற்கிறேன். நஞ்சின்றி அமுதேது” என்றார் வேறுகாடார். அவர் குரலில் நீரோடையெனப் பொலிந்த குளுமையைக் கேட்டிருந்த இருதியாள். அவரின் பேரிதழ்களை நோக்கிச் சிரித்தார். தனது விரல்களால் தொட்டுத் துழாவினார். மயிற் பீலியால் எனத் தடவினார். நஞ்சின் உதடுகளென எண்ணிக் கொண்டவர் “ஆலகாலமே ஆனாலும் அந் நஞ்சும் எனக்கு வேண்டும் காடரே” எனச் சொல்லிச் சிரித்தார். “விடமுண்ட கண்டினி” எனச் சொல்லி உரக்கச் சிரித்தார் வேறுகாடார். இருவரின் சிரிப்பொலிகளும் பெருங்கடலுள் சிரித்துக்கொள்ளும் மீன்களெனக் களிப்பெருக்கிடை ஒலியற்று உதட்டசைவென ஒளிர்ந்தது. சிற்பனின் தேகம் வான் நோக்கியெனச் சரிந்து வியர்வையூறி மயக்குற்றுக் கிடந்த அம்பலத்தில் நிலவு தன் பூரணத்தால் அவனை அணைத்து ஆற்றியது. சூர்ப்பனகையின் மார்பில் குழவியென அம்பலம் அவனை ஏந்தியது.