83: புலரியாட்டம்

83: புலரியாட்டம்

“முன்னை நாள் களியென்பது அடுத்த நாள் வேடிக்கையே” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான் ஓசையிலான். அவனது இடையாடை புழுதியும் சேறும் கொண்டு ஆக்கியதைப் போல் நிறத்திருந்தது. அவனது குழலில் சிறுமலர்ப் பிசிறல்கள் ஒட்டியிருந்தன. காதின் ஒரு மணிக்குண்டலம் எவ்விடம் தொலைந்ததென செவித்துளையை உருட்டிக் கொண்டிருந்தான். அவன் முன்னே ஓளித்துண்டுகள் விழும் மூங்கில் சாளரத்தில் சாய்ந்தபடி திரிபதங்கன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். திரிபதங்கனின் மேலாடையற்ற உடல் போர்வேழத்தின் முகபாடமென மின்னிக் கொண்டிருந்தது. அவனது குழலை முடிந்து கொண்டையிட்டான். அவனருகே அவனது இடைவாள் சாளரக் கட்டில் வைக்கப்பட்டிருந்தது. காவற்கோபுரத்தின் அறையில் இளம் பனிக்காற்று கூவென்று இசைத்துக் கொண்டு நுழைந்தது.

பட்டினத்தின் புலரியொலிகளைக் கேட்டுக் கொண்டு துயிலில் நீங்கிக் கொண்டிருந்த கொற்றன் இன்னும் இன்னுமென அணைத்து உறங்கிக் கொண்டிருந்தான். எவரை அணைத்திருக்கிறேன் என எண்ணம் தளுக்கிட எழுந்தவன் அவனது இருபுறமும் துயின்றிருந்த நிரதையையும் திருதையையும் நோக்கி ஒன்றே போலிருவர் என எண்ணிய முதல் நினைவை மீட்டினான். ஒன்றே போல் அமைந்த தேகங்களில் ஒவ்வொரு இழையிலும் தாம் இன்னொருவரென எண்ணமளிக்கும் வண்ணம் தோன்றுபவர்களின் இருவதனங்களையும் மீண்டும் ஒருமுறை உற்றுப் புன்னகை புலர்ந்தான். நிரதையின் வதனத்தில் குறும்பின் கனிவும் திருதையின் கதுப்புகளில் களியின் திளைப்பும் கூடியிருக்கிறதென எண்ணிக் கொண்டான். அவர்களை நலுக்காமல் எழுந்தமர்ந்தவன் ஓசையிலானின் குழல் விரிசடையெனப் பிரிந்து அவன் தோள்களில் பரந்திருப்பதைக் கண்டான். திரிபதங்கனின் கனிவும் தோழமையும் நிறைந்த முகத்தை நோக்கிக் கொண்டிருக்க “நம் பெருஞ்சித்தர் எழுந்து விட்டார்” என அவனை நோக்குக் காட்டிச் சொன்னான் திரிபதங்கன். திரும்பி அவனை நோக்கிய ஓசையிலான் “ஓம். நான் புலவெனென்றால் அவன் சித்தன் தான்” எனச் சொல்லி கெக்கட்டமிட்டுச் சிரித்தான். அவனது தோள்கள் முறுக்குக் கலைந்து ததும்புபவை போல் ஆடின. புலரியிலேயே போதைத் தேனை எடுத்துக் கொண்டானா என எண்ணிப் புன்னகையெழ எழுந்து கொண்டான். அருகிருந்த நீள்போர்வையை எடுத்து நிரதையையும் திருதையையும் போர்த்தினான். கதகதப்பிற்குள் வாழும் பூனைக்குட்டிகளென அவர்கள் போர்வைக்குள் சுழன்று மறைந்தார்கள்.

“இனிய கனவுகளில் வாழ்க்கையை முற்றுறாமல் புலவனும் சித்தனும் வீரனும் வாழ முடியுமா” எனச் சொன்னான் ஓசையிலான். அவனது குரலில் இளஞ் சிறுவர்களுக்குரிய பேதமையும் மிதப்பும் களியும் உருகியோடுவதைக் கண்ட திரிபதங்கன் மெல்லச் சிரித்துக் கொண்டிருந்தான். தீயிலைத் துதியை அகலில் மூட்டிக் கொண்டு இழுத்து வளையமென உதட்டைக் குவித்து ஊதினான் ஓசையிலான். “வாழ்க்கை இம்மாயப் புகை வளையங்கள் போன்றன” எனச் சொன்னவனின் தோளில் அறைந்த கொற்றன் “உனது தத்துவ வகுப்புகளில் மாணாக்கர்கள் துயிலப் போவது உறுதி. நேற்றிரவு நீ மாபெரும் போர்த்தளபதி ஆகப் போவதாய்ச் சொன்னாயே. தத்துவமும் போரும் இணையாதவை” எனச் சொல்லி திரிபதங்கனைப் பார்த்து “என்ன சொல்கிறீர் மாவீரரே. உங்கள் போர்க்களங்களில் தத்துவங்கள் உண்டா” எனக் கேட்டான். திரிபதங்கன் புன்னகை விரிந்த முகத்துடன் “நாம் தத்துவங்களைச் சொல்லிக் கொள்வதில்லையே ஒழிய தத்துவங்களுக்காவே நாம் போரிடுகிறோம். போரில் நெறிகளை விட நாம் நின்றிருக்கும் அறங்களின் தத்துவார்த்தமான உறுதியே எங்களின் ஆற்றலெனப் பெருகக் கூடியது. நம்பியிருக்கும் குடிகளுக்காக என மட்டும் போர்கள் நிகழ்வதில்லை கொற்றனே. அவர்களை ஆளும் தத்துவம் எதுவென்பதே குடிகளின் ஆன்மா” என்றான். “இவனது சித்த கபாலத்திற்குள் தத்துவங்கள் இல்லை பதங்கா. அவனிடமிருப்பது கவிஞனின் தாங்கொணா உணர்ச்சிகளின் உள்ளம். நேற்றைய பொழுதில் நிரதையும் திருதையும் நுண்ணிய அடுக்குகளால் எவ்விதம் துவிதைகளென ஆகிறார்கள் என இவன் சொல்லிய போது மெய்யாகவே அதிர்ந்து விட்டேன். இவன் அகத்தால் நோக்குகிறான். அகவிழிகள் கொண்டு புடவியை நோக்குபவர் கவியும் காதலரும் மட்டுமே” எனச் சொன்னான் ஓசையிலான். “ஓம். நானும் இவனது கவிச்சொற்களை விட அதற்குள் நுணுகுவதை மட்டுமே நோக்குவேன் என ஊழ்கம் கொண்டிருக்கும் அகவிழிகளையே எண்ணிக் கொண்டிருந்தேன். விண்மீன்களின் கீழ் ஒற்றைக் கரமுயர்த்தி நிரதையை நோக்கி இவன் சொல்லிய சொற்கள் காவியம் போலிருந்தன. இருநாழிகைக்குள் அவள் தொடாத அவளின் தொலைவுகளிலிருந்து அவளை இழுத்து வந்தான். இவன் சொல்லச் சொல்ல விழியிடை நீண்ட மலர்ப்பாலத்தால் அவள் ஓடி வந்து இவனை உளத்தால் அணைத்ததைக் கண்டேன். ஒரு பெண்ணை. அதுவும் நிரதை போன்ற இளம் புலியின் சீறலும் தினவும் கொண்டவளை இங்கனம் வசியம் கொண்ட இன்னொரு ஆண்மகனை நான் கண்டதில்லை” எனச் சொல்லிச் சிரித்தான் திரிபதங்கன்.

“எவனடா என்னை மயக்கியது” எனப் போர்வைக்குள்ளிருந்து குருளைக் குட்டி ஒலியெழுப்பினாள். “எவராலும் இயலாது புலிக்குட்டியே. நீ கொஞ்சம் துயில் கொள். இது ஆடவர் பேச்சு” எனச் சொல்லி மூங்கில் சாளரக்கட்டில் அமர்ந்து கொண்டான் கொற்றன். “ஓ. கொற்றனா. என் காதலா. உன்னை” எனச் சொன்னவள் அங்கனமே துயிலில் வழுகி வீழ்ந்தாள். “அவள் காதலையும் காமத்தையும் ஒழித்தால் ஒரு மழலை” என்றான் திரிபதங்கன். “ஓம்” எனத் தலையசைத்தான் கொற்றன். திருதை போர்வையால் தலையை நீட்டிக் கொற்றனைப் பார்த்து “மாயக்காரா” என அழைத்தாள். “மாயங்கள் புரிந்தது நீ தான் மாயையே” எனச் சொல்லி இளநகையுற்றான் கொற்றன். “கவிப்போர் மீண்டும் தொடங்கி விட்டது” என நகைத்துக் கொண்டு சொன்னான் ஓசையிலான்.

ஓசையிலானும் திரிபதங்கனும் எழுந்து காவற்கோபுரத்தின் மூங்கில் பாதையால் நடந்து செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்த கொற்றன் தீயிலையை மூட்டிப் பற்ற வைத்தான். திருதை ஒளிரகல் விளக்கின் தீமணி விழிகளெனச் சுடருற்று அவனை நோக்கினாள். “கள்ளியே” எனச் சொல்லெடுத்த கொற்றன் தன்னை நோக்கினான் எனக் கண்டு நாணங் கொண்டு போர்வைக்குள் ஒழிந்து கொண்டாள். பின் மெல்ல வெருகென எழுந்து காவலறையின் வாயிலைச் சாற்றி விட்டு மெய்மேனியுடன் நடந்து வந்து சாளரக் கட்டில் அமர்ந்தாள். தாமரைகள் மலர்ந்திருந்தன போல் புலரிக்குளிரில் காம்புகள் விடைத்திருந்தன. காற்றில் ஆடும் கூந்தலில் இளைய நறுமணங்கள் புதிதாய்ச் சேர்ந்து கொண்டிருந்தன. நீர்க்குடுவையை எடுத்து அவளிடம் நீட்டினான் கொற்றன். அவள் அருந்திக்கொண்டிருந்த போது கழுத்தில் நீரோடும் அருவியென எண்ணிக் கொண்டான். உடலின் சோம்பலை முறித்துக் கொண்டு நீரை அருகிருந்த துணியில் ஒற்றி முகத்தையும் மேனியையும் துடைத்துக் கொண்டாள். அவள் நீர்முழுக்காடிய தெய்வச் சிலையென மதமதர்த்து மினுங்குவதைக் கண்டவன் புன்னகையை மலர்களெனத் தூவிக்கொண்டிருந்தான். தீயிலைத் துதியை வாங்கி இழுத்துக் கொண்டு சாளரத்திற்கு வெளியே சாலையை நோக்கினாள். கொற்றன் அசையாது அவளின் மேனியையே நோக்கிக் கொண்டிருந்தான். சாலையை நோக்கிக் கொண்டே “என்ன கவியே புலரிக்குக் காமத்தின் வரிகள் இல்லையா” எனக் கேட்டாள். “புலரிக்கு முத்தங்கள் மட்டுமே உண்டு தேவியே” என்றான். “பின்னர் யாருக்காகக் காத்துக் கொண்டுள்ளீர்” என்றாள். அவளது குரலில் தேனின் சுவை இன்னும் பரவுவதைக் கேட்டவன் “நேற்றைய இரவை நான் எண்ணியிராத உலகங்களுக்கு அளித்திருந்தேன். நினைவுகள் இனியவை என்று ஒருங்கியிருக்கின்றன. நன்றி” என்றான். “களிக்காதல்கள் அற்புதமானவை கொற்றா. உனது கரங்களும் விழிகளும் எங்களைப் போலவே ஒன்றேயானவை. நீ மேனியை விழி தொடும் பதத்தில் தொடுகிறாய். உன்னில் மென்மை ஒரு குளிரும் தீச்சுடரென அலைகிறது” என்றாள்.

“பெண்ணை அறியாதவன் நான். ஆகவே பெண்ணை அறியும் தகுதி கொண்டவனும் ஆகிறேன். உனது மூச்சில் நான் கண்டதும் அதே குளிர்ச்சுடரையே. அதுவே உன் விழிகளும் என்றாகியிருக்கிறது” எனச் சொல்லிக் கொண்டே அவளின் பின் சாய்ந்து கொண்டு அவள் கழுத்தில் முகத்தை அமர்த்திச் சாலையை நோக்கினான். கூந்தலில் பரவியிருந்த சுகந்தம் அவனை மிதத்தியது. முதுகும் பிருஷ்டமும் அவனில் உரசும் பொழுது குளிரும் பாவையென எண்ணிக் கொண்டான். திருதை திரும்பி தீயிலையை இழுத்து அவன் உதட்டில் ஊதினாள். புகையிடைச் சுருள் வெளியில் இரு வெள்ளி மீன்களின் கருமணி விழிகளைக் கண்டவன் அவை புலரி தோறும் புதியவை என எண்ணினான். அவளின் உதட்டின் சிறுதுடிப்பை நோக்கியவன் குனிந்து அவளை உறிஞ்சிக் கொண்டே அன்னத்தின் தூவிகள் சிறகடித்துக் கொள்வது போல் முத்தமிட்டுக் கொண்டு புகையை உறிஞ்சினான். கருமையின் அழகுநுனிகளென விளைந்த அவளின் முலைக் காம்புகள் விடாயின் மேனியுருவென உருக்கொண்ட அவனது மார்புக் காம்புகளில் மோதி அருட்டின. திருதை அவனது மார்புக் காம்புகளை நாவால் தொட்டாள். பனியாடை நழுவும் மரங்களென அவனது உடல் மெய்ப்புக் கொண்டது. ஒளித்துண்டுகள் இருவரின் மேனியிலும் புலரியின் போர்வையென விழுந்து கொண்டிருந்தது.

மூங்கில் பாதையில் நின்று கொண்டு பட்டினச் சாலையை நோக்கிய ஓசையிலான் “எங்கிருந்து இத்தனை புதிய மானுடர்கள் எழுந்து வருகிறார்கள். கார்காலத்தில் ஈசல்களெனக் களிதேடி வந்து கொண்டிருக்கிறார்கள். தீரவே போவதில்லையென்ற இன்பம் மானுடருக்கு அளிக்கப்பட்டிருக்கிறது” என உணர்ச்சி மேலிடச் சொல்லிக் கொண்டிருந்தான். திரிபதங்கன் மெல்லச் சிரித்து “நாம் காணும் ஒவ்வொருவரும் நேற்றிருந்தவர் அல்ல. இன்று வந்திருப்பவர்கள் நேற்றைய இரவை அறிந்தவர்கள் அல்ல. இவர்கள் வேறு மானுடர்கள். மானுடக் களிகள் தீர்ந்து விடுபவை வீரா. ஏக்கங்களென எண்ணி எண்ணி அடுத்த முறைக்கென நினைவுகளைச் சுமந்து கொண்டு திரும்ப வேண்டியவை. அன்றாடம் களியே வாழ்வென உள்ள குடியென்று ஏதேனும் புடவியில் அமைய ஒண்ணுமா. அரசுகள் நிலைக்க இயலுமா. நெறிகளைச் சொல்லவும் கேட்கவும் எவரேனும் எஞ்சியிருப்பார்களா. இக்களியென்பது மானுட ஓய்வுகாலம். மானுடம் தன் மாபெருந்தேரை எங்கேனும் ஒருகணம் நிறுத்தி மூச்சு விட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. போர்களால் வடுக்கொண்ட குடிகள் சிலநாட்கள் தெய்வங்களையும் நெறிகளையும் தொலைத்துவிட்டு ஆதியில் தாம் யாரோ அதுவொன்றாகி ஆடும் களமிது. இங்கு தெய்வங்களை வணங்குவது. வா. வந்து எங்கள் மானுடக் களியை நோக்கு எங்கள் தெய்வங்களே என அறைகூவுவது போன்றது” என்றான். அவனது குரலில் மெல்லிய கார்வை எழுந்ததைக் கேட்டான் ஓசையிலான்.

வீதியின் இருமருங்கிலும் வாசல்களில் அமர்ந்து கொண்டு முதியவர்கள் களிப்புடன் சொல்லாடிக் கொண்டிருந்தனர். சிலகணங்கள் சாலையை உற்று நோக்கிய ஓசையிலான் “இளையோரைக் காணவில்லையே பதங்கா. எங்கும் முதியவர்களும் குழந்தைகளுமே ஓடிக் கொண்டும் சொல்லாடிக் கொண்டும் இருக்கிறார்கள். நேற்றைய இரவெனும் பூதம் இளையோரை உண்டு விட்டதா” எனச் சொல்லிச் சிரித்தான். “ஓம். இளையோரும் தேகவிழைவு கொண்டோரும் மாலையில் தான் விழிக்க முடியும். இரவில் நிகழ்ந்த ஆடல்களும் கலவிகளும் புணர்ச்சியொலிகளும் விலங்களையும் வேட்கை கொள்ளச் செய்ததைப் பார்த்தோமில்லையா. நினைவிருக்கிறதா” என்றான் திரிபதங்கன். “எப்படி நினைவொழிய இயலும். புரவிகள் காமத்தில் கனைப்பெழுந்த போது என் ஆண்குறி தானுமொரு புரவியென விசை கொண்டிருந்தது. வேழங்கள் மதநீர் சுரந்ததைக் கண்டு பாகர்கள் அஞ்சியோடினர். முனகல்களும் களிப்பேச்சும் அடங்க வைக்கப் புலரி வரை ஓயாது இசைத்த குழல்களும் யாழ்களும் பறைகளும் இனிமேல் எக்கரம் வந்து தொட்டாலும் ஓசை கொள்ளுமா எனத் தெரியவில்லை. அனைத்தும் இங்கனம் தங்கள் தொல்மெளனத்துள் திரும்பியிருக்கும்” என்றான் ஓசையிலான். அவனது விழிகளை நோக்கிச் சிரித்த திரிபதங்கன் “அங்கனமே களியாடிய தேகங்களும் தங்கள் தொல்பிலவில் துயிலுக்கும் மெளனத்துக்கும் திரும்பியிருக்கும். களியை ஒளடதமென அளந்து எடுத்துக் கொண்டவரே இன்றைய பொழுதையும் இரவையும் இன்னுமொரு நாளையும் கடக்கும் ஆற்றல் கொண்டிருப்பர். அருமணிகளும் வைரங்களும் பொன்னும் கொட்டிக் கிடந்த மந்தணச் சுரங்கமொன்றின் வாயிலென நேற்றைய இரவு திறந்திருந்தது. அக்காட்சியைக் கண்டு விழைவு முற்றி அதில் அலைந்து தொலைந்தவர் மீள்வதற்குக் காலமுண்டு. தேர்ந்து நிதானமாக ஒவ்வொன்றையும் நோக்கித் தன் விழைவெதுவென உற்று எடுத்தவர் செல்வங் கொண்டவராகிறார். அனைத்தையும் விழையும் எளியவர்கள் அடையவும் எஞ்சவும் ஏதுவுமற்றவர்கள். அவர்கள் விழைவின் பாலையில் தேரைகளென உறைபவர்கள்” என்றான்.

காவற் கோபுரத்தின் மேல் நின்று நோக்குகையில் ஓசையிலான் மெல்ல வியப்பு மேலிட “களிக்குக் காவலென நின்றிருந்த வீரர்கள் தெய்வங்களை விட மேலானவர்கள் இல்லையா பதங்கா. மானுடர் தீரா விழைவு கொண்டு ஆர்த்தெழுந்து காமமும் கலவியும் வேடிக்கைகளும் சூழ்ந்திருந்த பட்டினத்தின் அழி நெறிகளைத் தங்கள் காவல் நெறியை மீறாது காத்திருக்கிறார்கள். நெறி மீறலைக் காக்கும் நெறி எத்தனை விந்தையானது” எனக் கூவினான். “அதுவே புடவியின் நியதி வீரா. நாம் மானுடர் எனும் பெருக்கின் கரைகளென நின்றிருப்பவர்களை நோக்குகிறோம். கரை கடந்தால் வற்றியுலரும் பேராறே மானுடம். அதன் கரைகளும் ஆழங்களும் அழிமுகங்களும் மானுட இயற்கையை அறிந்தவர்களால் காவலிடப்படுகிறது. மெய்யாக அறிதந்தவரின் மேல் மானுடம் கொள்ளும் வியப்பும் மதிப்பும் அதனால் உண்டாகுவதே. நேற்றைய களிக்குக் காவலிருந்தர்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்படும். இது ஒரு சுழற்சி. இச்சுழற்சியின் உச்சியில் நிற்பவர் நமது அரசரே. அவர் இக்களியின் மெய்த்தெய்வம். அவர் களியில் கலக்காது நின்றிருப்பவர். விசையும் ஆற்றலும் கொண்ட இப்பேராற்றைத் தன் அறக் கரங்களால் கரையிட்டிருப்பவர் அவரே. அவரே நம் அழிமுகம்” என்றான் திரிபதங்கன். அச்சொற்களால் உணர்சி மேலிட்டு விழிநீர் கசிந்த ஓசையிலான் “ஓம். அவரை நான் என் அகமென அறிவேன். களிக்கு வெளியே குடிக்கு வெளியே தெய்வமென்று நின்றிருப்பவர். நம் குடியறமெனவும் மீறலெனவும் ஆகி அருள்பவர். அவரை நேற்று நான் கண்டேன். அவரை வாழ்த்திச் சொற்கள் சொன்னேன். அவரது விழிகளில் நாம் தேடத் தேடத் தொலையும் ஆழமும் நெருங்க நெருங்க நம் ஆடிப்பாவை அவரெனத் தோன்றும் மாயமும் வியப்பே. இப்பொழுது எண்ணினாலும் என் தொண்டையில் நோக்கொண்ட உப்புநீர் கரைகிறது பதங்கா. அவர் நம் தெய்வம். தெய்வமென நாம் வணங்கக் கூடிய நம் குடியின் ஒரே மானுடர்” எனச் சொல்லி கசிந்த நீர்விழியால் வானை நோக்கி மேகக் குவைகளை நோக்கி மூங்கில் பாதையில் இடக்காலை உதைந்து கரங்களை மூங்கில் தட்டியில் அறைந்து “அவருக்காக என் உயிரையும் கொடுப்பேன்” எனக் கூவினான். திரிபதங்கன் புன்னகை தவழும் உதட்டுடன் “பல்லாயிரம் நாவுகளில் ஒலிக்கும் ஒற்றைப் பெருங்குரலும் இதுவே” என்றான்.

அவர்களின் தலைக்கு மேலே காற்றில் ஆயிரக்கணக்கான நாரைகள் கத்தியபடி அலகுகளை நீட்டிக் கொண்டு பறந்து சென்று கொண்டிருந்தன. பறக்கும் போர்வையென எண்ணிக் கொண்டான் ஓசையிலான். “மானுட நெறிகள் குலைந்தோடும் இப்பெருநதியில் எஞ்சுவது என்ன பதங்கா” என்றான். “மிச்சமின்றி விழைவை அழிக்கவே மதுவும் ஊனும் தீயிலையும் காமமும் கலவியும் ஆடலும் பாடலும் கவியும் கட்டற்ற பெருக்கும் களியில் அனுமதிக்கப்படுகிறது. இங்கு ஒருவர் தன்னை முழுதளிக்க வேண்டும் வீரா. தன்னுள் தான் சுருண்ட நத்தைகள் தம் கோதுகளை விட்டு வெளிவந்தாக வேண்டும். மாரிகாலத் தவளைகளென விழைவுக் கூச்சல் எழுப்பும் அகங்களை ஊழ்கமெனத் திரட்டிக் கொள்ள வேண்டும். களியின் மெய்யான மயக்கு கட்டற்றது எனும் புதிர்ச்சொல். அது பார்ப்பதற்கு முற்றானதென்றும் நிகழில் அறிய அறிய எட்ட முடியாததென்றும் தொட்டு விலக முடியாததென்றும் தோன்றுவது. நீ நேற்றைய இரவில் கண்டவர்களில் இன்று நினைவென எஞ்சுபவர்கள் எவர். பெரும் அனுபவம் எனச் சுட்டக் கூடியதாக உன்னுள் விழுந்தவை எவை” என்றான் திரிபதங்கன்.

திரிபதங்கனின் குழல் மூங்கிலில் தழல் நாற்றுகளென ஆடிக்கொண்டிருந்தது. ஓசையிலான் அதை நோக்கிய பின்னர் “பதங்கா. நான் என்னை அறுத்துக் கட்டிக் கொள்ள என் ஆசிரியரால் அனுப்பப்பட்டவன். எனது அகம் விழைவுகளால் அலைக்கழிவது. மானுட விழைவுகள் எல்லையற்றவை என்பதைச் சொல்லால் அறிவேன். ஆனால் நிகரில் நான் கண்டது இக்களியிலேயே. ஆடலில் தம்மை மறந்து மானுடர் சுழன்ற போது தொல்தீயின் முன் அமர்ந்திருந்த என் மூதாதையரைக் கண்டேன். ஒன்றை இன்னொன்றாகவே மானுடரால் அறிந்து கொள்ள இயலும். ஆடல்கள் நெளியும் தொல்தீயென்றால் களிக்கூச்சல்கள் போரில் கொல்லும் போது எழும் வெறியோசைகள் எனச் செவிகளில் ஒலித்தெழுந்தன. ஆஹ். கலவியின் முனகல்களோ பித்தாக்கும் கூக்குரல்களையோ விடவும் ஆயிரம் மடங்கு கொல்லோசைகளைக் களிவெளியில் கேட்டேன். வசைகள் பாடல்களெனப் பொருளளித்தன. கூவியழைக்கும் பெயர்கள் வசைகளெனக் கேட்டன. எதற்கு மானுடருக்குப் பெயர். எதற்கு ஓருடலை இன்னொரு உடல் பெயரிட்டு அழைக்கிறது எனச் சினம் வந்தது. நான் நீயென்னும் பகுப்புகள் அகன்று நீயொரு உடல் நானொரு உடல். இம்மாபெரும் களியே நம் மாபெருந்தேகம். அறிக மானுடரே. ஆழத்தில் நாமெல்லாம் ஒரே ஊற்று. என்னில் நஞ்சென ஓடும் குருதியே உங்களிலும் தத்தளிக்கிறது. களியென்பது நஞ்சை உண்ணும் நஞ்சின் குழவிகளுக்கே எனக் கூவினேன்.

முத்தமிட்ட உதடுகளுக்கு தொட்டுசாவிய விரல்களுக்கு பார்வைகளில் உரசிக்கொண்ட கற்களுக்கு மார்புகளுக்கும் ஆண்குறிகளுக்கும் பிருஷ்டங்களுக்கும் பின் கால்களுக்கும் எழும் கனவுகளுக்கும் விழையும் கணங்களுக்கும் என்னை நானே அறியா விசைகளால் கொடுக்கப்பட்டேன். மானுடர் திரளெனக் கொள்ளும் விழைவுகளை ஆளும் தெய்வங்கள் நேற்றே நம் மண் நுழைந்து தம் விதிகளை ஒவ்வொருவர் நுதலிலும் எழுதியதைக் கண்டேன். ஒருவர் எனவோ நினைவெனவோ எவரும் எஞ்சாமல் விசையின் ஈர்ப்பு மட்டும் ஓர் அதிகனவென நரம்புகளில் சில்லிடுகிறது பதங்கா. நானும் நீயுமோ இங்கு யாருமோ பொருட்டற்று மானுட விழைவுகளும் இச்சைகளும் தம்மைத் தாம் ஆடும் உடல்களை அளிப்பதே களி” என்றான் ஓசையிலான். அவனது சொற்கள் மேல் மேல் எனப் பற்றியெரிந்து செல்வதைப் புன்காதலுடன் நோக்கி நின்றான் திரிபதங்கன்.

“உனக்குள் ஒரு கவியிருக்கிறான் தோழா” எனச் சொல்லிச் சிரித்தான் திரிபதங்கன். “நம் ஒவ்வொருவருக்குள்ளும் கவியும் கூத்தனும் காமனும் எழுந்தாடிய பிறகு இங்கு எவர் எது இல்லை” என்றான் ஓசையிலான் புன்னகையுடன். “ஆஹ். உன் தத்துவனை மறந்து விட்டேன்” எனச் சொல்லி மூங்கில் தட்டியை அறைந்து சிரித்தான் திரிபதங்கன்.

காவற் கோபுரத்தின் உலர் மூங்கில்கள் சாரைப் பாம்புகள் பிணைந்து கொள்வதைப் போல் ஒளிர்மினுக்குக் கொண்டிருந்தது. ஓசையிலான் மென்நடையில் காவலறையை நோக்கிச் சென்றான். அவன் பின்னே அவன் நிழல் தொடும் தொலைவிலென திரிபதங்கன் பின் சென்றான். வாயிலைத் திறந்து நோக்கிய போது போர்வைக்குள் மூவரும் அணைத்துக் கொண்டிருந்தனர். கொற்றனின் தலை மட்டும் போர்வைக்கு வெளியே துரிஞ்சிலென நீட்டி இருகரமும் செட்டையென நீண்டு போர்வையை விரித்திருந்தது. அவனது ஆண்குறியை எவையோ பற்றி விழுங்குபவை போல் போர்வையில் நெளிவுகளாடின. ஓசையிலான் மெல்லக் கனைத்தான். சிவந்த வரிகள் நதிகளெனப் பாய்ந்த விழிகளைத் திறந்த கொற்றன் “புலரியாட்டம்” எனச் சொல்லிச் சிரித்தான். நிருதை போர்வைக்கு வெளியே தலை தூக்கி “பதங்கா. தேனுண்டா” என்றாள். “அதைத்தான் கடைந்து கொண்டிருக்கிறாயே. இன்னுமா தேன்” எனச் சொல்லிக் கண் சிமிட்டிச் சிரித்தான். சினந்து கொண்ட நிரதை ஆடையைத் தோளில் போட்டுக் கொண்டு மெய்மேனி தழைக்க எழுந்து வந்து அவனது மார்பில் அறைந்தாள். ஓசையிலான் அவர்களுக்கிடையில் எழுந்த இயல்பான நாணமின்மையைக் கண்டு வியந்து “தவறாக எண்ணிக் கொள்ள வேண்டாம் தோழர்களே. உங்களிற்கிடையில் காமமோ காதலோ இல்லையென்பதை நான் அறிவேன். மேனி மறந்த தோழமையையே காண்கிறேன். ஆனால் எங்கனம் உங்களிடம் இத்தகைய மேனி பொருட்டற்ற உறவு தோன்றியது. ஒருவரை ஒருவர் எக்கணத்திலும் விழைந்ததே இல்லையா” எனக் கேட்டான். அக்கேள்வியால் நகை கொண்ட நிரதை கரங்களைத் தட்டிச் சிரித்தாள். திரிபதங்கன் நாணங் கொண்டவன் போல் சாளரத் தட்டில் அமர்ந்து கொண்டான். ஒளிப்போர்வை அவனது முதுகில் படிந்தது. பனியுலையும் காற்று குழலை முன் தள்ளி அறைக்குள் நுழைந்தது. திருதையும் எழுந்து கொண்டாள். சோம்பல் முறித்துக் கொண்டவள் விழியைக் கசக்கித் தெளிவாக்கிக் கொண்டு கொற்றனின் மார்பில் புறந்தலையை வைத்துப் படுத்துக் கொண்டாள்.

நிரதை தீயிலைத் துதியை மூட்டிக் கொண்டு ஓசையிலானின் அருகு வந்தமர்ந்து அவனது விழியை உற்றபடி மெளனமாய் இருந்தாள். அவளது முலைகள் தங்கக் கிண்ணங்களென ஒளிர்ந்து கொண்டிருந்தன. “தோழரே. மனித தேகம் புறத்தின் மயக்கழகால் காமம் கொள்ளப்படுவதில்லை. எங்கள் பதங்கன் எந்தப் பேரழகனுக்கும் முன்னிற்கும் தெய்வமென்று ஆகுபவன். அவனது மெய் பெண்கள் விழையும் அத்தனை அணிகளும் சூடியது. ஆனால் அவனுடன் தோழியென்று ஆனவுடன் பெண்கள் உணருவது அவனுக்குள் உள்ள கனியும் தாய்மையை. அகத்தால் பதங்கன் ஒரு தாய். பெண் என்பது நெறிகளால் ஆக்கப்பட்ட பெண் என்றும் சொல்லலாம்” மெல்லத் தலையை இல்லையென்பது போல் ஆட்டி “உடலால் வனையப்படும் பெண்மையை அகத்தால் வனைக்கும் ஆண் என்றும் சொல்லலாம். அவனுக்கு முன் மெய்மேனியாகவோ கலவியிலோ கூட நின்றிருப்பதில் எந்த விலக்கத்தையும் நாம் அடையப் போவதில்லை. அவன் பூச்சற்ற ஆடி போன்றவன். அவனுக்கு அப்பால் நாம் நம்மையுமல்ல அழகிய மலர்ச்சோலையில் அமர்ந்து யாழிசைக்கும் இனியவன் ஒருவனையே காண்கிறோம். அவன் நம் முன் விழைவு கொள்ளாத் தேகமும் துணுக்குறாத அகமும் கொண்டிருக்கிறான். அதைப் பெண்கள் எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.

உங்களில் கூட அவனது அம்சத்தைக் கண்டேன் வீரா. காமத்தில் நாம் விழைவு கொள்ளும் இன்னொருவரின் விழியில் பதுங்கியிருக்கும் விலங்கை அறியாதவர் எவருண்டு. அதனிடம் விளையாடும் பெண்கள் உண்டு. அஞ்சும் பெண்களும் உண்டு. விலகுபவர்களும் விழைபவர்களும் கூட உண்டு. ஆனால் அறியாதவர் என எவருமில்லை. பதங்கன் என் தோழன். காற்றைப் போன்றவன். என் மூச்சைக் காப்பவனும் மகிழ்வளிப்பவனும் தோழனென்றாகுபவனும்” என்றாள்.

திருதை வாயில் விரலைக் குவித்துச் சீழ்க்கையடித்துக் கைதட்டினாள். அவ் வாழ்த்தை வாங்கிக் கொள்பவள் போலத் தலை தாழ்த்தி அவளை நோக்கிச் சிரித்தாள் நிரதை. “நிரதை. இன்னும் இருநாளில் உன்னையும் காவியை ஆக்கிவிடப் போகிறது களி. பிறகு என்னால் துயிலவும் இயலாது” எனக் கூவினாள். நகைத்துக் கொண்டிருந்த திரிபதங்கன் நிரதையின் சொற்களால் அகம் கிளர்ந்து கொண்டிருந்தான். மெல்லக் குரலைச் செருமி “நான் ஆணையே விழைபவன் தோழா. பெண் எனக்கு நானே. இவள்கள் எனது தோழிகள். இவள்களது குறும்பும் என்னை நானென இருக்கும் நிலையை ஏற்கும் உளமும் இவர்களில் எனக்கு ஊறும் அன்பின் பெருக்கை நாள் தோறும் கூட்டி வருகிறது. தோழமையென நின்றிருக்கையில் அவர்கள் மெய்மேனியுடன் எழுந்து நின்றிருந்தாலும் நீங்கள் நோக்குவது அவர்களின் விழிகளையல்லவா. தோழமையென்பது ஒருவரின் மெய்யகத்தை இன்னொருவர் அறிந்து கொள்வது. அந்த நிர்வாணம் மட்டுமே தோழமையில் நோக்கப்படுவது. புறவுடலும் காமமும் கலவியும் எளிய ஆடல்கள். மெய்யகம் அறியும் ஆடலே புதிர்ச்சுழற் பாதை போன்றது. அதை ஒருவரில் நீங்கள் கண்டுவிட்டால் அவரென்பது பிறிதொருவரல்ல. நாணம் பிறரின் முன்னே எழுவது. நம்மில் நாம் நாணங் கொள்வோமா” எனச் சொல்லி நிரதையை நோக்கிக் கரங்களைத் திறந்தான். எழுந்து வந்து அணைத்துக் கொண்டவள் அவனது கன்னத்தில் முத்தி “என் தோழன்” எனத் திரும்பி ஓசையிலானை நோக்கிச் சொன்னாள். திருதை தலையைத் திருப்பிக் கொற்றனின் உதட்டில் முத்தமிட்டுத் திரும்பி “என் களிக்காதலன்” எனச் சொல்லிச் சிரித்தாள். அவர்களிடம் இழையுற்ற உறவுகளின் பின்னல்களில் முடிச்சற்ற சீரான பாதைகள் விரிகின்றன என எண்ணிய ஓசையிலான் எழுந்து சென்று திரிபதங்கனை அணைத்துக் கொண்டு “என் களிக்காதலன்” எனக் கூவினான். நிரதை ஓசையிலானை மெல்லத் தோளில் அறைந்து ஓசையிலான் துணுக்குற “முத்தமிட்டு ஆணையிடுவதல்லவா ஆண்மகவுக்கு அழகு” எனச் சொல்லி உரக்கச் சிரித்தாள். மெல்ல நாணம் கொண்ட ஓசையிலான் அவ் உணர்ச்சி அவனுள் எங்கிருந்தது எனத் தெரியாமல் மேனி மெய்ப்புக் கொள்ள விலகிச் சாளரத் தட்டில் அமர்ந்து தோளைச் சற்றுக் குறுக்கிக் கரங்களைக் கட்டிக் கொண்டான். “இப்பொழுது புரிந்ததா தோழா நாணமென்பது காதலில் பூக்கும் மலர். தோழமையில் முத்தம் ஒரு புன்னகை” என்றாள் நிரதை. ஓசையிலானின் நாணத்தைக் கண்ட நால்வரும் காவற் கோபுரம் பெருஞ்சிரிப்பெடுத்தது போல் சிரித்துக் கொட்டினார்கள். ஓசையிலான் தன் முதல் நாணத்தில் களிகூர்ந்திருந்தான். அக்கணம் அவனுள் அவன் குருதியின் குளிரை சித்தம் போதையென்று உணர்ந்தது. திரிபதங்கன் சாளரத் தட்டில் அவனருகே அமர்ந்து அவன் தோளில் மெல்ல அறைந்தான். கொற்றன் சிரித்துக் கொண்டே “புலரியாட்டமா” எனக் கூவியார்த்தான். நிரதை கொற்றனின் மேலே சரிந்து படுத்துக் கொண்டு சாளரத் தட்டில் அமர்ந்திருக்கும் இருவருக்கிடையில் விழும் ஒளிவளைவின் பின் உதிக்கும் மலர்ச் சூரியனை முத்தமிட்டாள். புடவி இனியது. ஒளியளிக்கும் கதிர்களோ இனியவை. புலரி இனியது. புலரி அள்ளியிறக்கும் பனிக்காற்று இனியது. புலரியின் ஒலிகள் இனியன. களிக்குப் பின் சேர்ந்தமர்ந்து சொல்லாடும் தோழர்கள் இனியவர்கள். வாழ்வு இனியது. இனிமை மகத்தானது.

TAGS
Share This