93: குருதி வேலன்

93: குருதி வேலன்

முன்முகப்பின் மேற்கூரையின் மேல் ஆயிரக்கணக்கான புறாக்கள் குறுகுறுத்துக் கொண்டிருக்குமொலிகள் பாதத்தில் ஆற்றங் கரை மணல்கள் உருள்வது போலத் தோன்றியது சுவடிகைக்கு. அவளது ஒளிக்கூச்சலிடும் விழிகளை அசைத்து புறாக்களின் குதுகுதுப்பான மேனிகளை நோக்கினாள். ஒவ்வொன்றும் பருத்தவை போலத் தோன்றின. கழுத்தின் ஆரங்களில் மென்காலையொளி சங்கிலிக் கதிர்களென மயக்காடியது. எழுந்து பறந்து மீண்டும் கூரையிலேயே அமர்ந்து கொண்டன. குளிர் வீசும் காற்றில் மார்புகள் விறைத்துக் கொள்ள எழுந்து சென்று கோட்டைக்கு அப்பால் விரிந்திருக்கும் பட்டினத்தை நோக்கினாள். சிற்றாலயங்களில் சங்குகள் முழங்கி மணிகள் ஆர்க்குமொலிகள் கேட்டன. காளைகளின் கொம்புகளில் ஆடிய மணியொளிகள் பொன்னென மயக்கின. பட்டினத்தில் சாலை முதிய நாகமொன்று பெரிய இரையை விழுங்கிய பின் மெல்லப் புரள்வது போல நாளை மாற்றிக் கொண்டிருந்தது.

சத்தகன் அவளருகில் வந்து நின்று தனது இருபெருங் கரங்களையும் கற்சுவற்றில் ஊன்றிக் கொண்டு காற்றில் பனையோலையென விசிறல் கொண்ட குழலுடன் பட்டினத்தை நோக்கினான். விடியலின் பனி உருகிக் கொண்டிருந்தது. காற்றில் நறும்புகைகள் விரைந்து வந்து பனிவிலகும் இடங்களை நிரப்பிக் கொண்டிருந்தன. அடுமனைப் புகைப்படிகள் மேகங்களை நோக்கி நீண்டு கொண்டிருந்தன. ககனத்தில் பறந்தொழிந்து கொண்டிருந்த பறவைகளின் பெருக்கை விழிமலர நோக்கி புன்னகை கொண்டிருந்தான். ஒவ்வொன்றையும் அன்று தான் முதற் காணும் இளவிழிகளை அவன் கொண்டிருந்தான் என எண்ணினாள் சுவடிகை.

“பட்டினம் நோக்க விழையவில்லையா. மாமதுரைச் செல்வியே” என்றான் சத்தகன். அவனது குரலின் கார்வை இனியதென ஒலிக்க விழைகிறது என எண்ணங் கொண்ட சுவடிகை “எங்கள் பட்டினம் உங்களுடையதை விட மும்மடங்கு பெரியது. இப்பட்டினத்தில் நான் காண விழைவது எதுவாக இருக்கும் தளபதி. நான் தேசங்களைக் கால்களாலும் கலன்களாலும் புரவிகளாலும் கடந்தவள். சலிக்காத பயணியென்று எவருமில்லை. எனது கால்கள் மண்ணில் உலாவ விரும்பவில்லை. கதைகளே நான் விழையும் மெய்யான யாத்திரை” என்றாள். “ஆஹ். அது நல்லதல்லவோ. அமர்ந்த இடத்திலிருந்தே புடவியைச் சுற்றியறியும் கலை” எனச் சொல்லி உரக்க நகைத்தான். அவனில் தோன்றிய தோழமை பாவம் அவனைச் சிறுவனென மாற்றியிருந்தது. “தளபதி நீங்கள் கண்டதிலேயே அழகிய நிலமென்று எதைச் சொல்வீர்கள்” என்றாள் சுவடிகை.
ஆழ்ந்து சிந்திப்பவன் போல முகத்தைத் தூக்கி உதட்டை ஒருக்கி சிலையென நின்ற சத்தகன் காலங்களில் உறைந்தான். அரைக்கணமும் பொறுக்க முடியாத சுவடிகை “சொல்லுங்கள்” எனச் சிணுங்கினாள். அவளின் குரல் காற்காப்புகளில் ஒலிக்கும் முத்துமணிகளின் ஒலியென எண்ணிக் கொண்டான் சத்தகன்.

“மாமதுரைச் செல்வியே. நான் நிலங்களில் ஊரும் விலங்கல்ல. மண்புழு போன்றவன். அதன் ஆழங்களினாலேயே அதன் அழகை எடுத்துக் கொள்கிறேன். இயற்கையின் பேரழகைப் பாணர்களின் சொற்களிலேயே நான் சொல்லிச் சொல்லி தொட்டெடுப்பதுண்டு. மெய்யான அழகு எதனால் உண்டாகிறது. அது அழகு தானா. மலர்களில் வண்ணமா வாசனையா குலைகளா மாலைகளா எது அழகு என அறியேன். மரங்களில் வசந்தமா இலையுதிர் காலமா கூதிரின் பெருக்கா இளவேனிலின் இனிமையா எது அவற்றில் அழகென எழுகிறது என்பதை நோக்கும் விழியற்றவன். ஆறுகளில் பெருகும் நீரா ஆழங்களில் ஓடும் நண்டுகளா மீன்களைக் கொத்தி உண்ணும் கொக்குகளா வனங்களின் செறிவா பெரும் புல்வெளிகளா மேகங்களில் கார்வதா வெளிர்வதா பல்லாயிரம் வண்ணமூறிச் சிவக்கும் அந்திகளா இரவா இரவில் அவிழும் விண்மீன்களா நிலவா நிலவில் பிறையா அரையா முழுமையா கருநிலவா எது விழிகளை மயக்காட்டுகிறது என சொற்களால் அளக்க அறியேன்.

நான் அறியும் இயற்கை என்பது என் அகத்தில் உறையும் இன்மையை நிரப்பும் வெளியின் ஊற்றையே. என்னைக் கேட்டால் அனைத்து நிலங்களும் கடல்களும் பருவங்களும் நிலைகளும் அழகே எனச் சொல்வேன். ஒவ்வொன்றிடமும் மானுட அகத்தை நிரப்பும் களிகொள்ளச் செய்யும் எதுவோ ஒன்று நிகழ்ந்து கொண்டேயிருக்கிறது. ஆழிக்கரையில் மடிநிறையச் சிப்பிகளைச் சேகரிக்கும் இளஞ் சிறுமிகளைப் போல இயற்கையை மடிநிறைக்க விழைகிறேன். ஒரு விளையாட்டென” என்றான் சத்தகன்.

அவர்களது சொல்லாடலை நோக்கிய நிலவை ஓசையின்றி எழுந்து தானகியுடன் இடைநாழிகைக்குள் புகுந்து மறைந்தாள். முன்முகப்பின் குளிர்க்கற்கள் பாதங்களில் சில்லிட்டன. சத்தகன் பட்டினத்தை நோக்கி விழி விரிய நின்றபின் “மானுடரும் அழகே பெண்ணே. பட்டினங்கள் கரங்களாலான அழகு. கிராமங்கள் கரங்கள் மெல்லத் தொட்டதன் அழகு. வனக்குடில்கள் வனத்தில் வனமென அமையும் அழகு. போர்க்களங்களும் அழகே. குருதியில் ஆடிடும் பேய்க்களிகள் அழகு. கொல்லும் கணங்களில் வெறிக்கும் தழல் அழகு. அழகின்றிப் புடவியில் எதையும் செய்ய மாட்டேனெனச் சொல்லும் தெய்வங்கள் அழகு” என்றான். சுவடிகை மெல்ல விரல்களால் காற்றை அளந்து கொண்டே தனது கூந்தலை ஒருக்கி முன்னே தவழவிட்டாள். பாறையின் மேலே தாவிடும் கருநதியெனச் சுழன்று பாய்ந்தன கூந்தலின் மயிரிழைகள். சத்தகன் அவளை நோக்கிய பின் மெல்லச் சாய்ந்து கற்சுவருடன் ஒட்டிக் கொண்டான்.

“போர்க்களமும் அழகா தளபதி. மானுடரை மானுடர் கொன்றழிக்கும் கணங்களும் அழகா. அது குரூரமில்லையா” என்றாள் சுவடிகை. அவளது முகத்தை நோக்கி அவள் உதடுகளின் மென் துடிப்பைக் கண்டவன் நகைத்துக் கொண்டு “அழகு தான் செல்வி. பருப்பொருட்கள் அவற்றின் இயற்கையினால் அழகுறுவதில்லை. நோக்கும் விழிகளுக்குப் பின்னிருக்கும் அகமே அழகை அளிப்பது. இயற்கையென்பது முடிவற்ற வடிவங்களின் தொகைப்பெருக்கு. நேற்றைய களியிரவில் வானை நோக்கினேன். எத்தனை விண்மீன்கள் துடித்து நீந்தின. பொன்னொளிர் கொண்ட மின்மினிகளென. மயக்கில் நோக்கிய போது அவை தொலைவில் ஊரும் பொன்வண்டுகளெனத் தோன்றின. ஒவ்வொரு உடுக்களையும் விழிக்கயிற்றால் பின்னி உருவங்களை ஆக்கி அழித்துக் கொண்டிருந்தேன். மேகங்களை நோக்கியிருக்கிறீர்களா. முடிவற்ற கோலங்களின் ஆடல்கள் காற்றினால் வனையும் நீர் உலோகங்கள் அவை. வீழ்ந்த பின்னர் நிலைக்கும் அழகுகளை அடுக்கிக் கலைப்பவை உதிர்ந்து மண்ணில் உலையும் சருகிலைகள்.

குருதி சிந்தித் தெறிக்கும் அழிகளத்திலும் நிலைக்கும் படரும் கருகும் அனைத்தும் அழகென்றே ஆவது. என் அகம் குருதியை ஒரு எண்ணமெனக் காண்கிறது. விடுதலைக்கென ஒரு வீரரும் கொல்வதற்கென ஒரு எதிரியும் ஆடிடும் களமென நான் அதை நோக்குவதில்லை. என் முதற் களம் முதலேயே நான் அறிந்து கொண்டது அது. இரண்டு மானுட விழைவுகள் குருதியினால் வரைந்து கொள்ளும் மாபெரும் ஓவியமே போர்க்களம். களிக்கூச்சலிடும் போர்க்களத்தை கண்டிருக்கிறீர்களா. அவை முயங்கலை விட விரைவு கொண்டவை. கலவிகளை விட வெறிகொண்டவை. முனகல்களை விட உச்சம் கொண்டவை. முத்தங்களை விட வெறியுறுபவை. நான் பார்த்த போர்க்களங்களில் மானுடர் உயிர்க்கணங்களைப் பற்றிக் கொண்டு புரிந்திடும் ஆடல்களனைத்தும் இங்கு அளிக்கப்படும் பொருள்களுக்காக மட்டுமே நிகழ்வதில்லை. ஓர் ஆதி இச்சையென போர் மானுடரில் எழுந்து படம் விரிப்பதைக் கண்டிருக்கிறேன். பேரழகர்களென மானுடர் எழுவது தம்மைத் தாம் கொல்லும் விலங்கென உணர்ந்து கரத்தில் விசையுடன் படைக்கலன் பூண்கையிலேயே. வெறியில் பித்தில் திகைப்பில் அவர்கள் போர்க்களம் ஏகுவது சிலகணங்கள் மட்டுமே அவ்விலங்கென வாழும் உச்சத்தின் பொருட்டேயே.

காவியர்களும் குடிச்சொற்களும் போரை அதன் விசையை அழித்து பிறிதொன்றாக்கிக் கொள்வதன் மூலம் வாழ்வின் ஆதார விசைக்கு எதிரான திசைகளில் எடையை வைக்கிறார்கள். அழிவெனும் மானுட விசை அஞ்சத்தக்கதே. ஆனால் மானுடர்கள் இச்சைகளாலும் நோக்கற்றும் ஆகுந்தோறும் புடவியில் போர்கள் மானுடரில் வசந்தமெனத் தோன்றுகின்றன. இலைகளைத் துளிர்த்து மலர்களைச் சூட்டி போர்களை வரவேற்கிறது காலம். பறவைகள் பாடி முறைமைச் சொற்கள் கூறுகின்றன. காமத்தை மானுட உச்சமென மறுநிகர் வைத்து எழும் சொற்கள் போரின் ஆயிரம் மடங்கு பெருமலை விசையின் எடையை நிகர் வைக்கும் எளிய முயற்சியே. ஆனால் ஒவ்வொரு கலவியின் பின்னும் மானுடம் தழலை நோக்கிப் பாயும் பூச்சிகளென போரை நோக்கி விரைகின்றன.

அழியாத விசையே அழகென்றாவது. அங்கனமே எனில் போரே புடவியின் அழகனைத்தும் விரியும் பெருங்களம். மானுட எல்லைகள் பரிசோதனை செய்யப்படும் ஆய்வு களம். நீதிகளும் அறங்களும் புடமிடப்படும் உலைக்களம். வாழ்வும் மரணமும் முத்தமிட்டுக் கொள்ளும் காமக்களம். தெய்வங்களும் மானுடரும் ஒருவரை ஒருவர் எதிர்நிற்கும் பலிகளம். புடவியை ஆளும் பெருநியதிகளுக்கெதிரக மானுடக் கூட்டம் உரைத்தெழும் வஞ்சினக் களம். ஓம். அது அங்கனமே தன் குரூரத்தில் கொப்பளிக்கும் குருதியை அழகென்றாக்கிச் சுடர்கிறது” என்றான். அவனது விழிகளில் குருதிவண்ணம் தோன்றி ஒழிவதாக எண்ணினாள் சுவடிகை.

“ஹ்ம். இளங்காதலியிடம் காதலனைப் பற்றிக் கேட்டதைப் போல போர்த்தளபதியிடம் போரின் குரூரத்தை வினவியது என் குற்றமே” என்றாள் சுவடிகை. கீச்சிடும் குரலில் ஒரு அகவலும் இழைவதைக் கேட்ட சத்தகன் கலகலவெனச் சிரிக்கத் தொடங்கினான். “போரை நான் காதலிக்கவில்லை மாடமதுரை உலவு பெண்ணே. மானுடக் காதலின் போதாமைகளை நிறைக்கும் பெருங்காதலொன்றைப் பற்றியே நான் உரைத்தேன். எளியவர்கள் போரை அழிவெனக் காண்பவர்கள் அல்ல. அவர்கள் போரின் விசைகளை ஒவ்வொரு நாளிலும் பிறிதொரு நாடகமென நிகழ்த்தி வாழ்ந்து மீள்கிறார்கள். உயிரச்சம் அவர்களைப் போரை வெறுப்பவர்களென பாவனை கொள்ளச் செய்கிறது. மெய்போரை வீரர்களின் தலையில் சுமத்துபவர்கள் எளிய குடிகளே.

நீங்காத போரே அவர்கள் அகச்செருக்கு விழையும் வாழ்களம். சொல்லில் போர். வஞ்சங்களில் கீழ்மை. புகழில் விடாய். கனவுகளில் களி. அரசருக்கும் அரசன் நான் என எண்ணாத ஆடவன் உண்டா. பேரரசிகளுக்கும் பேரரசி தான் என எண்ணிக் கொள்ளாத பெண் உண்டா. தயங்கித் தாழ்ந்து விலகும் ஒவ்வொருவரும் அகத்தில் நூறு நூறு குறுவாள்களைச் சுழற்றிக் கொண்டு தாம் வெல்லும் களங்களுக்கெனக் காத்திருக்கின்றனர். அதுவரை அவர்கள் அருந்தும் நஞ்சே வெறுப்பு. வெறுப்பில் திரையும் நஞ்சே காழ்ப்பு. சொல்லில் எரியவிடும் வெறுப்பின் கரிப்புகையென மானுடரில் எழுவது. வஞ்சமென நீலவெளிச்சம் உகுப்பது. பிறரை அழித்துக் குருதி குடித்துத் தன்னைத் தான் வளர்த்துக் கொள்வது. இவை அனைத்தும் போரை விடக் குரூரமானவை. குருதியை விடப் பெருகிக் கொண்டிருப்பவை. எளிய மானுடர் அதையெண்ணிச் சொல் பகரார். அதுவே அவர்களின் ஆழக்கிடக்கையென அறிந்தாலும் அதனை மீற ஒண்ணார்.

பெரும் போர்க்களங்களை நான் எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் வஞ்சமும் கீழ்மையும் வெறுப்பும் கொண்ட எளிய மானுடரை என்னால் எதிர்நிற்க இயலாது. அவர்கள் மெய்யான தீமையின் இருளால் ஆனவர்கள். அவர்களைக் கொன்றழிக்க எந்தப் படைக்கலனாலும் இயலாது. இம்மானுடரின் கீழ்மைகளுடன் போரிட்டு அழிவதை விட குருதிப் பலி கேட்கும் போர்த்தெய்வத்தின் முன் சென்று வீழ்வேன்” என்றான் சத்தகன்.

“உங்களுடைய சொற்களிற்கிடையிலும் பின்னாலும் ஆயிரமாயிரம் காரணங்களும் கதைகளும் ஆற்றுள் புதர்களென உறைவதை உணர்கிறேன். ஆனால் இச்சொற்கள் நெறியென்றோ அறமென்றோ அவைகளில் ஒலிக்கத் தக்கவையல்ல” என்றாள் சுவடிகை. அவளது குரலில் மெல்லிய பரிவின் சுனையொன்று முதற் கல்லில் முட்டிச் சுழித்தது.

“நானும் அதை அறிவேன். ஆனால் அவைகளிலும் நான் இதையே கூறியிருக்கிறேன். இம்மண்ணில் நிகழும் போரில் மானுடரின் அனைத்துக் கீழ்மைகளும் ஆழிக்குள் வாழும் பூதங்களென அலைவதை நோக்கியிருக்கிறேன். மேலெழுந்து பல்லிளித்துச் சிரித்து வெறிக்கூச்சலிடுவதை நடுக்குடன் அஞ்சியிருக்கிறேன். நான் அஞ்சுவது அவர்களையே. போரை ஆக்குபவர்களை. அதற்கான காரணங்களை நிரையிடுபவர்களை. அதற்கான நியாயங்களை மன்றுகளில் நின்று சொல் சொல்லெனப் பெருக்குபவர்களை. போரில் வீயூகம் வகுப்பவரும் சென்று தங்கள் தலைகளைக் கொடுப்பவரும் எளியோரே. மெய்யான போர்விழைவிகள் போரில் காயமுறுவதில்லை. உயிர் நீப்பதில்லை. அவர்கள் வீரர்களல்ல. தந்திரக்காரர்கள். மானுடரில் அவர்கள் நித்தமும் பிறக்கிறார்கள். தீராது அதன் பெருக்கில் சுழிக்கிறார்கள். போர்களைத் திறக்கிறார்கள். உயிர்கள் மடிவதை எண்ணி இரக்கம் காட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் மடிவதில்லை பெண்ணே. அவர்கள் உடல் மாசற்று அமைகிறது. அவர்களது வாழ்வு குற்றமற்று அறியப்படுகிறது. எளிய வீரர்களும் தலைவர்களும் கொல்லப்பட்ட எதிரிகளின் வாழ்க்கைகளுக்கும் சேர்த்து குற்றவுணர்ச்சியில் அலைக்கழிகிறார்கள். அவர்களின் குடும்பங்களுக்கும் சேர்த்து துயிலை இழக்கிறார்கள்.

எங்கள் பேரரசர் நீலழகர் மெய்யான துயிலறிந்தது எப்போது என்பதை எவரும் அறியார். துயிலில் திடுக்கிட்டு விழிப்பவரை ஆற்றுபவரென எவராலும் அவரின் அருகிருக்க இயலாது. புலரி வரை நடுங்கிக் கொண்டேயிருக்கும் புயற் காற்றிடை தீபமென அவரை எண்ணிக் கொள்வேன். அணையாது நிலைகொள்ளாது குன்றாது எரிந்து கொண்டே இருப்பவர். அவரின் மேல் சுமத்தப்பட்ட ஒவ்வொரு சொற்களையும் கொண்டு மொத்த மானுடப் பழியையும் அவரின் தலைமுறைகளையும் மூடிப் போர்த்து விட இயலும். எவருக்காக அவர் வாளேந்தினாரோ. எவரின் கண்ணீருக்கென அவர் வஞ்சினம் உரைத்தாரோ. எவரின் குருதிக்கு நிகரெனத் தன் சிரசை வைத்தாரோ அவர்களே அவரை வெறுப்பதை பழிசூட்டுவதை தனித்துக் கைவிடுவதை எண்ணிப் பார். மானுடம் எவ்வளவு கீழ்மையானது. வரலாற்றின் பாலைவனத்தில் யாவரும் ஒரு துகள் மணலே. ஆனால் நீலழகர் பாறையின் மேல் கைவிடப்பட்ட ஒரு துளி மணல். தீராது வெந்து கொண்டிருக்கும் யானத்தில் இதயத்தைப் பிய்த்து அதை மடியாது காப்பதைப் போன்றதே குடிகள் அவருக்கு அளித்த நிலை” எனச் சொல்லிய சத்தகன் வேறெவருக்கோ உரக்கச் சொல்பவனென பெருங்குரலில்
“நான் அங்கனம் குற்றவுணர்ச்சி கொள்ள மாட்டேன். குடிகளறிக. தெய்வங்களறிக. நான் அறங் கொண்டவன் அல்ல. அறங் கொண்டரே தன் செயல்களுக்கு முன் முழுதுகொண்டு தலை கொடுப்பவர். அவர் தலை கொடுப்பது குடிகளின் முன் அல்ல. அவர் ஏற்றுக் கொண்ட பேரறங்களின் முன். நான் ஏற்றுக் கொண்ட அறமென எதுவும் இங்கில்லை. நான் எனது அண்ணனையும் அக்கையையும் அன்பு கொள்கிறேன். மண்ணில் தழைத்த மாபெரும் அறத்தெய்வங்கள் அவர்களே. அவர்கள் சொல்லே என் வாக்கு. அவர்கள் இடும் பணியே என் செயல். அவர்கள் அடியொற்றி நடப்பதே என் பணி. அவர்கட்கென தலை கொடுப்பதே என் வாழ்வு” என்றான் சத்தகன். அவனது குரல் மெலிந்து தீப்பற்றி எரிந்து மேலும் மேலும் முளாசி விரைவது போல எழுந்து கொண்டிருந்தது. மார்புகள் விரிந்தடங்கின. தோள்கள் துடித்தமைந்தன. செவிக் குண்டலங்கள் சுழன்றன. பெருவிழிகள் நிலைத்த நோக்குக் கொண்டன.

ஒருகணம் அவனில் எழுந்த பெருஞ் சிம்மத்தைக் கண்ட சுவடிகை அகத்தில் நடுக்குக் கொண்டாள். காற்றில் அதிர்வலைகளென வெப்பம் பரவி மேனியில் வீசுகிறதென எண்ணி மெய்ப்புக் கொண்டாள். அவனது உறைமுகத்தில் நெரியும் புருவங்களிரண்டும் கரிய வானவில்களென எண்ணமெழுந்த கணத்தில் காதலின் தூவானத்தில் நனையத் தொடங்கினாள் சுவடிகை. எக்கணத்தில் அவனை விழைந்தேன் என்பதை அவளால் எவ்வளவு துழாவியும் அறிய முடியவில்லை. எப்படி எப்படியென தலையை உதறி வியப்புடன் தனக்குள் தான் கேட்டுக் கொண்டாள். எதையெண்ணிப் புடவியை அழகாக்குகிறேன் என அறியாத மலர்கள் போல அவளது அகம் விரிந்து கொண்டேயிருந்தது. அடிவயிற்றிலிருந்து புன்னகை அவிழ்வதை முதல்முறையென உணர்ந்து அதில் அதுவென திளைத்திருந்தாள் சுவடிகை. பிறிதொரு வெளியில் பல்லாயிரங் கரங்கள் கொண்ட மானுடப் பெருக்கின் கீழ்மைகளின் முன் மார்பில் வெடித்தறைந்து அகூஹ்க் அகூஹ்க் எனக் கூவியபடி ஒரு கொல்வேல் ஆடவச் சிறுவன் கூர்ந்து அவர்களின் வீழ்த்துமிடம் நோக்கி மெல்ல நகர்ந்து முன்சென்றான். அவன் வலக்கரத்தில் பளபளக்கும் கூர்முனை கொண்ட வேலில் குருதி துளிர்த்திருந்தது. அவனது குழலெங்கும் ஊறிய குருதி அடர்ந்து வழிந்தது. விழிகளில் கனலுற்று நோக்கில் அழியாத பற்றுக் கொண்டு உறுத்து நின்றான்.

*

சுடர் மீனன் மருத்துவக் குடிலின் வாயிலில் நின்று பனித்திரை அவிழ்வதை நோக்கி நின்றான். எத்தனை பருவங்களாகக் கிழிந்து உதிரும் திரைகள் என எண்ணிக் கொண்டான். மருத்துவக் குடில் அரண்மனையின் கிழக்கு திசையில் சிறுசோலைக்குள் அமைக்கப்பட்டிருந்தது. மருந்துக் களஞ்சியங்களும் ஒளடதக் குறிப்பு ஓலைகளும் தனித்தனிக் குடில்களில் ஒருக்கப்பட்டிருந்தன. நீலழகனின் துயிலா நோயும் மேனிப் புண்களும் நாட்பட்டுக் கசந்து பெருகியவை என சுடர் மீனனின் தந்தை சொல்லிக் கொண்டிருப்பார். அவற்றை எங்களால் முழுதகற்ற இயலாது. அவரது ஆயுளை நீட்டிக்கவே நாம் மருந்தளிக்கிறோம் என்பதை மறவாதே என மந்தணக் குரலில் சொல்வார். நீலழகனின் துயிலுக்கென பலதேசங்களுக்கு அலைந்து மருந்துகளை கொணர்ந்து சோதித்தார்கள். ஆனால் பயனென எதுவும் நிகழவில்லை. அவரின் துயில் மேனியில் ஏற்பட்ட நோயினால் அல்ல. அகத்தினாலேயே உண்டானது என்றனர் முதுமருத்துவர்கக். அவரது பிணியை நோக்குவது இனி இயலாது. வலியின்றி உறக்கமளிக்கும் மருந்துகளை அளிப்பதே இயலக்கூடியது என்றார்கள். யவனத்திலிருந்து அளிக்கப்பட்ட மருந்து ஒரு போதைப்புகையெனவே அவரைத் துயில வைக்கிறது. இருப்பினும் அதனாலும் ஒரு நாழிகைக்கு மேல் நீலனுக்குத் துயில் அளிக்க இயலவில்லை. துயிலாத கனவு கொண்டோன் என அவனைப் பாணர்கள் பாடுவதன் பொருள் குடிகளுக்கு எழுச்சியளிப்பது. ஆனால் மெய்யில் அதுவொரு நோய். அவனை உலைத்து அழிக்கும் தீச்சொல்.

மருத்துவக் குடிலைச் சுற்றிலும் நூறு புலிவீரர்கள் அங்குமிங்கும் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர். சிலர் குடில்களில் சாய்ந்தபடி புலரித் துயிலின் இனிமையில் மூழ்கியிருந்தனர். நீலழகனை எப்பொழுதும் அகலாத கவசமென எங்கும் உடன் செல்பவர்கள். தமிழ்ச்செல்வன் அவர்களை இளவயதில் இருந்தே தெய்வத்தைக் காக்கும் சிறுதெய்வங்களென ஆக்கியிருந்தார். நீலனின் நூறு நிழல்கள். நூறு புலிக் குட்டிகளால் காக்கப்படும் முதுபுலி என புலிவீரர்கள் அவர்களைச் சொல்வதுண்டு.

சுடர் மீனன் தனது வாழைப்பூ வண்ண ஆடையை உதறிக் கொண்டு மரக்குற்றியொன்றில் வந்தமர்ந்தான். குயில்கள் இரண்டு ஒன்றை அழைத்து இன்னொன்று கூவுவதைக் கேட்டபடியிருந்தான். புரவியொன்றின் குளம்படி ஓசைகள் அவனை நெருங்கி வர எண்ணம் கலைந்து நோக்கினான். வெண்ணிறம் கொண்ட புரவியில் செங்குருதி வண்ண ஆடையணிந்து புத்த துறவியொருவர் வருவதைக் கண்டான். அருகில் நெருங்கி வர வர அது கிரியவெல்ல எனக் கண்டு இளம் புன்னகை கொண்டு கையசைத்தான். மழிந்த தலையில் சூரிய ஒளி மண்கலயத்தில் ஒளிர்வீசுவது போலத் தோன்றியது. கனிந்த புன்னகை வீசிய முகத்துடன் சுடர் மீனனுக்கு அருகில் புரவியை நிறுத்தித் தாவி இறங்கினான் கிரியவெல்ல. அவனது துறவடை தீச்சுவாலைகளென விரிந்தெழுந்து அணைந்தது.

“வணக்கம் மருத்துவரே” என்றான் கிரியவெல்ல. “வணக்கம் துறவியே. நெடுந்தூரம் வந்திருக்கிறீர்கள். ஏதேனும் முக்கிய காரணமா” என வினவினான். “ஓம். அரசருக்கெனச் செய்தி கொணர்ந்தேன். தலைமைத் துறவி மகாசோதி அரசரைச் சந்தித்து உரையாட விழைகிறார். அதற்கான பொழுதைக் கேட்டுவர என்னை அனுப்பினார்” என்றான். அவன் சொல்லும் பொழுது அவனது துறவாடையை மெல்ல ஒருக்கியபடி சொற்களை அடுக்கினான். “நல்லது. அரசரும் அவரைச் சந்திக்க விழைவதாக நேற்றுச் சொல்லியபடியிருந்தார். பொழுதை அவரிடம் உசாவிய பின்னர் செய்தியை மடாலயத்திற்கு அறிவிக்கச் சொல்கிறேன்” என்றான் சுடர் மீனன். “அவ்வண்ணமே ஆகுக. நான் வந்த பணி முற்றிற்று” என்றான். “எங்கே இவ்வளவு விரைவாகச் செல்கிறீர்கள் துறவியே. புலரியில் சில நற்சொற்கள் கேட்பது நாளுக்கு நல்லதல்லவா” எனச் சொன்ன சுடர் மீனன் சிரித்தபடி அருகமரச் சொல்லிக் கரங்களால் அழைத்தான். வீரனொருவனை அழைத்து சுடுபால் கொணரச் சொன்னான்.

இருவருக்கிடையிலும் பின்னிருந்த வேப்பமரம் இளங்காற்றை ஊதியபடி நின்றிருந்தது. சுடர் மீனன் வானை நோக்கியிருந்த பின்னர் கிரியவெல்லவைத் திரும்பி நோக்கி “சிங்கை புரியில் நிலமைகள் எவ்வாறிருக்கின்றன துறவியே. நம் காலத்தில் இப்போர் ஒழியும் நம்பிக்கை ஏதேனும் முளைத்திருக்கிறதா” எனக் கேட்டான்.

கிரியவெல்லவின் கன்னங்கள் குவிந்து இறுகின. மெல்லிய குரலில் “போர் ஒழிந்தே ஆகவேண்டுமென்பது எனது நெறி எனக்களித்த ஆணை. போரினால் மானுடர் தம் குன்றாத வாழ்வெனும் பெருவாய்ப்பை ஒவ்வொரு கணமும் இழக்கிறார்கள். மானுடம் தமது இச்சைகளால் இப்போரை பல்லாயிரம் மடங்குகளாக விரித்துக் கொண்டு பேராடிகளில் தங்களைத் தாங்கள் நோக்கி மகிழ்ந்து கொண்டிருக்கிறது.

சிங்கை புரி மக்களின் உளங்களில் போரின் மீதான வெறுப்பின் அடையாளமாகவே தினமும் எங்கள் மடாலயங்களை நோக்கி வந்து கொண்டேயிருக்கும் புதியவர்களைக் காண்கிறேன். மானுடர் தங்களைத் தாங்கள் ஒருக்கிக் கொண்டு தங்களை ஆளும் விசைகளை வெல்லும் வீரங் கொள்ளாமல் ஞானம் கனிவதில்லை. ஞானத்தை அடைவதற்கு எழ வேண்டியது மெய்யான பெருவீரமே. அது மயக்குகள் கொண்ட பலவளைவுகள் பின்னல்களென விரியும் பாதைகளின் பெருக்கு. அதில் மெய்யான ஞானியொருவரின் துணை எளியவர்களுக்குத் தேவையாகிறது. புத்தர் மண்ணில் நிகழ்ந்த கனிவின் ஞானம். மானுடரின் துயரச் சேற்றில் மலர்ந்த தாமரை. எங்களது மண்ணில் அவரது சொற்கள் விதைகளென விழுந்து கொண்டிருக்கின்றன. காலம் திரளும் பொழுது அவை மரங்களென வளரும்.

களிக்கூச்சல்களிடை அவரது குரல் மெளனம். படைக்கலன்கள் மோதும் ஒலிகளுக்கிடை அவரது சொல் அமைதி. வெறுப்பின் நுரையாழியில் அவரது சொல் புன்னகை. கீழ்மையின் பாதாளத்தில் அவரது சொல் ஒளி” என்றான் கிரியவெல்ல. அவனது சொற்களைக் கேட்டுக் கொண்டிருந்த சுடர் மீனனது முகத்தில் உதித்த சிறு புன்னகை கற்சிலையின் முன் வைக்கப்பட்ட புதுமலரெனத் தோன்றியது. கிரியவெல்ல சுடுபாலை அருந்திக் கொண்டு நீலனிருந்த குடிலை நோக்கினான். புலிகளால் காக்கப்படும் குகையெனத் தோன்றவும் நோக்கை விலக்கிக் கொண்டு ககனத்தில் விரிந்த நீலவெறுமையின் முன்னே மேகங்களைப் பார்த்தான். அவை ஒட்டிய பஞ்சுகள் போல அசையாது நின்றன.

TAGS
Share This