96: தணல் மலர் : 02

96: தணல் மலர் : 02

“என்னவாயிற்று இளையோரே. களி காலத்திலும் கலைப் பூசல்கள் தேவையா” என்றார் வேறுகாடார். இளம் பாணன் எழுந்து சென்று சாளரத்தின் அருகிருந்த மரப்பெட்டியில் சாய்ந்து கொண்டு தீயிலைத் துதியை உறிஞ்சினான். “கலைப் பூசல்களுக்குப் பருவமோ பொழுதோ இல்லை கிழவரே. இது எளிமையான பூசல் தான். நான் சிற்பிகளைக் குறைத்துச் சொல்வதாக எண்ணிவிட்டார். ஒவ்வொரு கலை வடிவமும் அதற்குண்டான பிறிதொரு ஆழ்பார்வையைக் கொண்டிருக்கும். மானுட அகங்கள் எதனுடன் தன்னை இணைத்துக் கொள்ளுமென்பது சர்வ ஆச்சரியமான தற்செயல். விழைவு கொள்ளும் பெண்ணைப் போல” எனச் சொல்லி இருமல் போலச் சிரித்தான் இளம் பாணன்.

பொன்னன் உடலை ஒருக்கி அமைந்து கொண்டு “நானும் சற்று மிகையாகவே சினம் கொண்டேன். மேன்மையானதுக்காக நாம் நமது கீழ்மைகளை விலக்கிக் கொள்வது சினத்திற்கு மதிப்பளிக்கிறது. எனது அகத்தில் ஓடிக்கொண்டிருந்த எண்ணங்கள் வேறானவை. அதை நான் சினமென்று ஒருக்கிக் கொண்டேன். கலைப்பூசல் மேன்மையான பாவனை கொண்டது. ஆகவே என்னை இழந்து விட்டேன்” என்றான்.

விருபாசிகை மெல்லச் சிரித்துக் கொண்டு விழியைத் திறந்தாள். புலரியில் பூக்கும் புதுச்சூரியன்கள் போல விழிமடல்களில் கண்மணிகள் அவிழ்ந்தன. “இவர்களிடம் பூசல் மூட்டியவள் நானே. ஆடவரை பூசலிடவைத்து வேடிக்கை பார்ப்பது இனிய களியல்லவா” என்றாள். வேறுகாடார் சிரித்த போது விருபாசிகையின் தலையும் முலைகளும் ஆர்த்துக் குலுங்கின. கருந்துணிக்குள் இரண்டு பொற் கலசங்களென.

பொன்னன் அவளின் முலைக்குலுக்கலில் கோட்டுகள் துள்ளியாடி அமைவதை விழியோரத்தால் நோக்கினான். விருபாசிகை தன்னைக் காம்புகளால் நோக்குகிறாள் என எண்ணம் கொண்டு தலை திருப்பி சாளரத்தை நோக்கினான். மரப்பெட்டியில் சாய்ந்திருந்த இளம் பாணனும் அவளின் முலைகளை நோக்குகிறான் எனக் கண்ட போது சினம் குளிர்ந்து எரியத் தொடங்கினான். வேறுகாடார் தன் மந்தண விழிகளால் அவர்களுக்கிடையில் நிகழும் ஊடலை நோக்கிக் கொண்டு குறும் புன்னகை வீச விருபாசிகையின் கூந்தலை தந்தி போல மீட்டிக் கொண்டிருந்தார்.

விருபாசிகை தலையை உயர்த்தி பாம்பென எழுந்து கால்களைப் பின்மடித்து ஆடும் மேல்மேனி தீயிலை மயக்கில் நழுவ அகம் இனிய நீரூற்றில் நனைகிறதென எண்ணமெழுந்தாள். ஒரு வெளிநிலத்துப் பாணன். காதல் கொண்ட சிற்பி. காமம் வெல்லும் முதுகிழவன். மூவருக்கிடையில் அமைந்திட்ட முச்சுழலில் திளைக்கும் விசை கொண்டிருந்தாள். ஆடும் அவளுடலிலிருந்து மூச்சில் நறுமணம் கமழ்ந்து ஏறுவதை நோக்கிய பொன்னன் திணறல் கொண்டவன் போல அகம் பதைக்க நோக்கினான். இரைக்கெனக் காத்திருக்கும் முதுகழுதைப் புலியும் இளங் கழுதைப் புலியும் தன்னருகும் முன்னும் நிற்பதாய் எண்ணினான். அவள் தனக்கு மட்டுமே தான் என அகப் பிலவுகள் அதிர்ந்தெழக் கூவினான். இவ்வளவு எளிதில் உடைந்து சிம்புகளாகப் பறந்து தூளாவேன் என அவன் எண்ணியிருக்கவில்லை. அருகில் துயிலும் எவரேனும் எழுந்து வந்து இக்கணத்தை விலக்கி விட மாட்டார்களா என இரங்கினான். வேறுகாடார் சுவரில் சாய்ந்து நிமிர்ந்த போது அவரின் விழிகளில் பரவிய தாபத்தைக் கண்டான். காற்றூதச் சிரிக்கும் தழல் போல மினுங்கின விழிகள். இளம் பாணன் மீன் வரும் வரை அசையாது நிற்பவன் போல கழுத்தை உறுத்து நோக்ககலாது காத்திருந்தான்.

விருபாசிகை மூவரின் முகத்தையும் அள்ளிக் கொள்பவளைப் போலப் பார்த்து மயக்கில் விரிந்த பித்தின் களிச்சிரிப்பில் மலர்ந்தாள். பொன்னனை ஒரு இளம் பிள்ளையை அழைப்பவள் போலக் கைகாட்டிக் கொஞ்சி அழைத்தாள். “இங்கே வா பொன்னா” எனச் சொல்லிய போது தன்னை மட்டுமே அவள் அழைக்கிறாள் என எண்ணி அச்சொல்லின் குழைவில் கரைபவன் போலப் பிரிந்து துதியால் உறிபடும் புகையைப் போல அவளை நோக்கிச் சென்றான். விருபாசிகை அருகு சென்றவனை தன் மயக்கும் பனிமலைக் குவைகள் போல் குமிந்த மார்புகளில் அவன் தலையைப் பற்றிச் சாய்த்துக் கொண்டு “இவன் என் பிள்ளை. இனியவன். தடுக்கிடுபவன். தடுக்கி விழுபவனைத் தாங்கவே முலைகள் கொண்டு பெண்ணுடல் ஆக்கப்படுகிறது பாணரே” எனச் சொல்லி இளம் பாணனை நோக்கிச் சிரித்தாள். அவளது தளிருலவு கரத்தினால் செவிகள் வருடப்படுவதில் இம்மை மறந்து துயிலெழுந்தவன் போலானான் பொன்னன். வேறுகாடார் உரக்கச் சிரித்தபடி “தடுக்கி விழுவதே அந்த முலைகளால் தானே” என்றார். பொன்னனைத் தடவிய கரத்தை எடுத்து அவரது மார்பில் மெல்ல அறைந்தாள். பறவையின் சிறகடிப்பொன்று பட்டு விலகியது போல என எண்ணினான் பொன்னன். வேறுகாடார் அறைந்த அவளது கரத்தைப் பற்றியிழுத்து தன் இடையில் அமர்த்திக் கொண்டு அவளின் வதனம் நோக்கிப் புன்னகைத்தார்.

அவள் பின் தலையால் சூரிய ஒளி செம்மஞ்சள் பனித்திரைப் போல விரிந்திருந்தது. கூந்தலில் துள்ளியெழுந்த சிறுமயிர் குழவிகள் ஒளியில் நுண் மண் வண்ணம் சுடரக் கைகளைக் காற்றில் நீட்டின. கழுத்தின் நரம்புகள் இளந்துடிப்பில் நடுங்குவது காற்றிலாடும் கொடியெனத் தோன்றியது. கருந்துணி கீழிறங்கி விலகி முலையிடைச் சரிவுகளில் எழுந்த கோலமயக்கில் இளமை வழிந்து ஓடியது. வேறுகாடார் முகத்தை இருபெரும் மலைகளுக்கிடையில் ஒழிந்து கொள்ளும் சூரியன் போலப் புதைத்துக் கொண்டார். விருபாசிகையின் கழுத்திலும் முதுகிலும் மெய்ப்புல்கள் எழுவதை நோக்கினான் பொன்னன். உதடு சுழிந்து ஓஹ் என்ற ஒலியாகிக் குவிந்தது. கூவிச் சினக்கும் குயிலென எண்ணினான் இளம் பாணன். பொன்னனின் முகத்தில் துயரமெழுவதை நோக்கியவன் அவன் அவளைக் காதலிக்கிறான் என எண்ணிக் கொண்டான். வேறுகாடாரின் வெண்கூந்தற் பந்தை கரங்களில் அள்ளிய விருபாசிகை சிம்மத்தின் பிடரியைக் கோதிவிடுபவள் போல விசிறிச் சிலுப்பினாள். முகத்தை ஒற்றியொற்றி அவளின் மார்புகளில் விளையாடிய வேறுகாடார் நிமிர்ந்து அவள் நுதலில் முத்தமிட்டார்.

இளம் பாணன் வேறுகாடரை நோக்கி “கிழவரே. எனக்குப் பட்டினம் சுற்றிக் காட்டுகிறேன் எனச் சொல்லி அழைத்து வந்து இங்குள்ள மஞ்சங்களில் புரள வைக்கிறீர்கள். இது தகுமா” எனக் கேட்டான். வேறுகாடார் இளம் பாணனை நோக்கித் தலையை நீட்டி “இதுவும் உலகறிதல் தான் இளம் பாணரே. ஒரு முழுப்பட்டினமும் சுற்றி அறிய விழைந்தாலும் அறிய முடியாததை ஒரு பெண்ணின் மேனியில் அறியலாம் என்பது மூத்தோர் சொல்” என்றார். “அந்த மூத்தவர் நீங்கள் தான் என்பதை நானறிவேன். எனக்குப் பசிக்கிறது. உணவு வேண்டும். முத்தங்களை மட்டுமே உண்டு வாழ முடியாதல்லவா” என்றான். அவன் குரலில் எழுந்த பாவனைச் சினத்தை நோக்கியவர் பொன்னனைத் திரும்பி நோக்கினார். தன் முதற் களத்தில் எதிரிகளிடம் மண்டியிட்டு அவமானப்பட்ட இளம் வீரனைப் போல நின்றிருந்தான். வேறுகாடார் இளம் பாணனை நோக்கி “உனது விருப்பம் புரிகிறது இளம் பாணரே. மன்றுக்கும் களி வீதிகளுக்கும் செல்லலாம்” எனச் சொல்லி எழவிருந்தவரை சுவற்றில் சாய்த்து கழுத்தில் இருகரத்தாலும் கொல்பவள் போலப் பற்றி “தீயை எழுப்பிய பின் மஞ்சத்தில் எரிந்தே ஆகவேண்டும்” என்றாள். அவளது குரலில் அழல் மூண்டிருந்ததைக் கண்டவர் “எதை எரித்தால் என்ன. எரிந்தால் சரி. இதோ பொன்னன் இருக்கிறான். கல்லையே மலரைப் போல நுண்ணித் தொட்டு அவிழ்ப்பவன். அவனுடன் சொல்லாடிக் கொண்டிரு. நாங்கள் சற்று உணவுண்டு தெருவலைந்து மீள்கிறோம்” என்றார். விருபாசிகை மூச்சை ஆழ இழுத்த பின்னர் “சென்றொழியுங்கள்” என்றாள்.

வேறுகாடாரும் இளம் பாணனும் எழுந்து விருபாசிகையையும் பொன்னனையும் நோக்காது வாயிலால் கடந்து கூடத்திற்கு வந்தனர். இளம் பாணன் விழிப்பீலியெனத் திறந்திருக்கும் பதும்மையின் மணிக்கதவத்தை நோக்கினான். மெல்லிய மூச்சை இழுத்துக் கொண்டு “செல்வோம்” எனச் சொல்லிய போது வேறுகாடார் இளையவர்களின் முதற் காதல் மயக்குகளையும் ஏங்கல்களையும் தவிப்புகளையும் கண்டு சிரித்துக் கொண்டார். இளையவர்கள் என்றும் பெண்ணை அறிய முன்னரே அவள் முன் தலை கொடுக்கக் காத்திருக்கிறார்கள். பெண்ணின் கனிவென்பது ஒரு மயக்காடல். அவளின் குரூரமே மெய்மை. அங்கனம் காண்பவனில் ஏக்கங்களும் தவிப்புகளும் ஒழிந்து தயக்கங்களும் குழப்பங்களும் மிகும். எப்பொழுதில் குளிரும் எக்கணத்தில் மேனி சுட்டுத் தீய்க்குமென அறியாத தணல் மலர் போல என எண்ணிக் கொண்டார்.

விருபாசிகை பொன்னனைத் திரும்பி நோக்கிய போது சினங் கொண்டு மேனி அழல் பற்றியெரிபவன் போல மஞ்சத்தில் விலகி அமர்ந்திருந்தான். அவன் விழையும் தண்டனையை அவளுக்கு அளிக்கக் காத்திருக்கும் காதலனைப் போல. ஒரு தீச்சொல்லில் அவளை எரிய வைக்கக் காத்திருந்தான். ஒரு சொல். ஒரு விழியசைவு. ஒரு அறியும் விலக்கம். எதுவும் இக்கணத்தில் அவளை அழிக்கும். பின்னர் அவளை நோக்கிப் புன்னகை புரிய எண்ணினான். நானிருக்கிறேன் எனச் சொல்ல விழைந்தான். என் கருணையின் கீழ் நீ வாழாலாம் என எண்ணினான். நான் பிறரைப் போல அல்ல என அவளுக்குக் காட்ட விரும்பினான். இந்தப் புடவியில் உனக்கு நிகராக நான் எதையும் வைக்க மாட்டேன் கண்மணியே எனச் சொல்ல உந்தினான். எண்ணிக் கொண்டிருந்த போது எண்ணங்கள் முகத்தில் தோன்றி புன்னகையும் கருணையும் ததும்பின.

விருபாசிகை அருவருப்பான முகபாவனையுடன் சுவரில் சாய்ந்து கொண்டாள். அவனுள் எழும் எண்ணங்களை வாசித்தவள் போல சீற்றங் கொண்டாள். “பொன்னா. ஆணின் கருணையின் முன் நான் ஒருபோதும் நின்றிருக்க மாட்டேன். நான் வெல்லப்படும் பொருளல்ல. இணைந்தாட வேண்டிய களம் நம்முன் திறந்திருக்கிறது. நான் யாருக்கும் உடமையல்ல. யாரையும் உடமையாக்கிக் கொள்ளவும் நான் விழையவில்லை. உன்னில் எழுபவை இங்கிருக்கும் சாதாரண குடி ஆண்களிடம் வெளிப்படுவது. அதனை நான் வேரடி நுனி வரை சென்று வெறுக்கிறேன். நான் காட்டெரி. நீயும் என்னுடன் எரியலாம். அல்லது காற்றைப் போல விலகிச் சுழன்று செல்லலாம். ஆனால் அணைக்க முடியாது” என்றாள். அவள் குரலில் எழுந்திட்ட ஆணையின் அதிர்வொலிகள் அவனில் அறைந்து திகைக்கச் செய்தன.

நடுக்கம் கொண்டவன் சித்தமதிரக் கூவல்களெழ எழுந்து கொண்டான். விலகி ஓடிவிடு ஓடிவிடு என அகம் விரட்டியது. தேகம் வசியப்பட்டது போல அசைய மறுத்து கால்களில் சிக்கிக் கொண்டது. எடை முற்றிய கனியைத் தூக்குவது போல தன் முகத்தை உயர்த்தி விருபாசிகையை நோக்கினான். அவளது முகத்தில் தீப்பிழம்புகள் எரியும் ஆகாயம் வெடித்துக் கொண்டிருந்தது. கண்ணீரை நெய்யென எண்ணும் எரி அவளென எண்ணிக் கொண்டான். அவளின் முன் என்ன சொல்லி அக்கணத்தைக் கடந்து விடலாம் எனத் தவிதவித்தான். தொண்டையில் ஈரமுலர்ந்து வற்றியது. குரல் காற்றில் நிகழமாட்டேன் என மறுத்து ஒழிந்து கொண்டது. மா எனும் சொல் உதட்டில் விரிய அவளின் முன் வந்து முழந்தாளில் நின்றபடி திக்கிச் சுழன்று “அம்மா” என்றான். அச்சொல் விருபாசிகையின் செவி தொட்ட கணத்தில் எரிதீமலை குளிர்ந்து கனிந்து வடிந்து பெருகி விழியால் ஊற்றியது. கணத்தில் அவள் அன்னையென்றானாள். முன்னிற்பவனின் அனைத்துப் பிழைகளும் பொறுப்பவள் அன்னை. நடுங்கி ஆடும் அகம் கொண்ட ஆணிற்கு மடியென விரிந்தவள் அன்னை. குற்றம் பொறுக்கும் ஒரே தெய்வமென மானுடர் கண்டடைந்த பெருந்தெய்வம் அன்னை. தெய்வங்களும் அஞ்சும் ஒற்றைச் சொல். ஒற்றைப் பேரிருப்பு. ஒற்றை மூச்சு.

விருபாசிகை நீர்வடிந்த முகத்துடன் அள்ளியணைத்து அவனை முத்தமிட்டாள். நெஞ்சிலிட்டு இறுக்கினாள். இதயம் கரைந்து முலைகளாகி விம்முகிறது என எண்ணினாள். ஊறும் கனிவை ஊட்டுபவளென முலையை எடுத்து அவன் உதட்டில் வைத்தாள். கன்றறிந்த மடியென விழிமூடி உறிஞ்சத் தொடங்கினான். காற்றை அமுதென எண்ணி.

TAGS
Share This