98: ஊர்தி : 02

98: ஊர்தி : 02

வேறுகாடார் நிமிர்ந்து கொண்டு உலகளந்தோனின் வருகையை நோக்கிக் கொண்டிருந்தார். “வருக. இளையோனே. பணிகள் ஒருக்கியாயிற்றா” என்றார். “நான் சென்ற பணிகள் எப்போது முற்றுறாமல் போயிற்று மூத்தவரே. அனைத்தும் சிறப்பாய் நிகழ்ந்தன. களியாடி உங்கள் இளமை மீண்டிருக்கிறது போல முகம் பிரகாசமாக இருக்கிறது” எனச் சொல்லிச் சிரித்தான். வேறுகாடார் புன்னகையுடன் “நீயில்லாத களி அற்புதமாய்த் தானிருக்கும் இளையோனே” என்றார். உலகளந்தோன் உறுமல் போலச் சிரித்துக் கொண்டு தன் வலக்கையைத் தூணில் ஊன்றி “மெய்தான். இத்தகைய களிகளுக்கிடையில் ஞானியருக்குப் பணியென எதுவும் இல்லை” என்று சொல்லி ஞானப் புன்னகை சூடினான்.

இளம் பாணன் சிப்பியுடன் அமர்ந்திருந்து உலகளந்தோனை நோக்கினான். விந்தையான பாவனைகள் கொண்டவன் என்பதை சிலகண உடலசைவுகளிலேயே கண்டு கொண்டான். வேறுகாடார் அவனைச் சீண்டிக் கொண்டிருப்பதையும் முதன் முறையாக அவரை ஒருவன் வெல்லும் தோரணை கொண்டிருப்பதையும் பார்த்து அவர்களை உற்று நோக்கத் தொடங்கினான். அவன் நோக்குவதைக் கண்ட வேறுகாடார் அருகழைத்து “இவர் தான் மாவீரர் உலகளந்தோன். இவர் அளக்காத துமி நிலமும் கடலும் உலகினில் இல்லை. களம் சென்றால் வெற்றியின்றித் திரும்ப மாட்டார். ஆனால் எப்பொழுதாவது தான் போருக்குச் செல்வார்” எனச் சொன்னார். இளம் பாணன் பணிவான புன்னகையுடன் அவரை நோக்கித் தலையசைத்து “நான் தென்னகத்துப் பாணன். களி நோக்க வந்திருக்கிறேன். வேறுகாடாரின் நண்பன்” என்றான். உலகளந்தோன் அவன் சொல்லியதைக் கேட்டு வயிறு ஒடிபவன் போல மடங்கிக் கண்களில் நீர் வரச் சிரித்தான். “வேறுகாடாருக்கு நண்பரா. அவருடன் எவராவது நண்பராய் இருக்க முடியுமா எனக் குடிகள் கேட்பார்கள். அப்படி இருப்பவன் உலகிலேயே இல்லை என வீரர்கள் சொல்வர். அப்படி இருப்பவன் ஒரு மூடன் என நானே என்றோ சொல்லியிருக்கிறேன்” என்றான் உலகளந்தோன்.

வேறுகாடார் உலகளந்தோனை அருகழைத்து அமரச் சொன்னார். இளம் பாணன் இவர்கள் என்ன வகையான நட்புக் கொண்டவர்கள் என உய்த்தறிய இயலாமல் தானும் அமர்ந்து கொண்டான். அப்பாலிருந்த இரு விறலிகளும் இளம் பாணனைக் கண்ணால் காட்டி கேலி சொல்லிச் சிரித்துக் கொண்டிருந்தனர். சிப்பியும் இருதியாளும் விடைபெற்று மன்றுக்குச் சென்றனர்.

“இளையோனே வன நிலைகள் எப்படியிருக்கின்றது” எனக் கேட்டார் வேறுகாடார். “பணிகள் சீராக இடம்பெறுகிறது மூத்தவரே. வீரர்கள் எக்கணமும் வனத்தில் செவியூன்றி விழிகூர்ந்து இருக்கிறார்கள். நாம் அஞ்ச வேண்டியதில்லை. இக்கணம் போரென மூண்டால் லட்சம் குடிகளும் படைக்கலன் ஏந்தி கொன்று வெல்வார்கள்” என்றான் உலகளந்தோன். “களியில் மிகையாக மூழ்கும் குடிகள் போரிடும் ஆற்றலை இழக்கிறார்கள் இளையவனே. நமது குடிகளில் வீரமும் அறத்திறனும் கொண்ட ஆயிரக்கணக்கான வீரர்கள் ஏற்கெனவே மண்ணுக்குள் விதைக்கப்பட்டு விட்டார்கள். எஞ்சியிருப்பவர்கள் சில ஆயிரங்களே. குடிகள் செல்வம் மிகுவதாலும் உயிரஞ்சி வாழ்வதாலும் கடுமையான இழப்புகளாலும் கடந்த கால துயர வரலாறுகளாலும் காயப்பட்டிருக்கிறார்கள். உள்ளூர அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். எக்குடிக்கும் தன் சொந்த மகிழ்ச்சியே முதன்மையானது. ஆயிரம் அறங்கள் முன்வைத்து எழுந்தாலும் போரென்பது அழிகளம் மட்டுமே. அங்கு குருதியில் நாம் உருவாக்கும் அரசுகள் மேலும் குருதிப் பலிகேட்டே நிலைக்க இயலும். குடிகள் இந்த முறைமையை வெறுக்கிறார்கள். அவர்களில் எழும் வசவுகளும் மந்தணக் குற்றச் சாட்டுகளும் அதிகாரத்திற்கு அஞ்சியே இருட்டில் ஒலிக்கின்றன. நான் காண்கிறேன். ஒவ்வொரு விழிகளுக்குள்ளும் ஒடுங்கிடும் வன்மத்தை. ஒவ்வொரு வாயிலும் உமிழும் கசப்பை. ஒவ்வொரு செயலிலும் வெளிப்படும் வெறுப்பை.

இங்கு நாம் பார்த்துக் கொண்டிருப்பது பலிபீடத்திற்குச் செல்லும் முன் ஆடிக் களிக்க விழையும் பெரும் விலங்குக் கூட்டத்தை. நம்பிக்கை என்ற விடிவெள்ளி முளைக்காத வானத்தை. எதனாலும் இக்குடிகள் எழுச்சி கொள்வார்கள் என நான் எண்ணவில்லை. களியே அதற்குச் சான்று” என்றார் வேறுகாடார்.

உலகளந்தோன் புன்னகையுடன் “மூத்தவரே. முதியவர்களுக்கு எப்பொழுதும் அடுத்த கணமே புடவி அழியப் போகிறது. அனைத்தும் சீர்கெடுகிறது. இளையவர்கள் நெறிகெட்டு அலைகிறார்கள். நாமில்லாத காலத்தை இவர்கள் எங்கனம் கடந்து செல்வார்கள் போன்ற மிகையான கவலைகளே எஞ்சும். நான் காண்கிறேன். இளையவர் முகத்தில் புதிய பிரகாசத்தை. குடிகளுக்கிடையில் இழைந்து புதுப்பிக்கப்படும் உறவுகளை. கிழக்கும் வடக்கும் இணைந்து ஒரு நிலத்தில் திரண்டிருப்பது போர்க்களத்தைத் தவிர்த்தால் இங்கு மட்டுமே. களியொரு கருப்பை. இங்கிருத்து எத்தகைய குழவிகள் பிறக்குமென்பதை எவரறிவார். காலம் தன் மர்மமான புன்னகையை அவிழ்க்கும் போது அறிந்து கொள்வோம்” என்றான்.

வேறுகாடார் மெல்லிய சிரிப்புடன் “நான் திசைகளும் நிலங்களும் கடந்து சென்று நோக்கி வந்தேன் இளையவனே. காலம் ஒவ்வொரு நிலத்திலும் ஒவ்வொரு மர்மப் புன்னகையுடன் அவிழ்கிறது. விரைவாக மாறி வருகிறது. வணிகப் பாதைகள் உலகை ஒருங்கிணைத்து வருகின்றன. பாணர்களை விட வணிகர்களே குடிகளை இணைத்து நாடுகளின் எல்லைகளை விரிப்பவர்களாக இருக்கிறார்கள். போரும் வீரமும் மண்டியிடாத மானமும் வழக்கொழியப் போகிறது. செல்வம் புதிய அரசனாக மானுடரை ஆளப் போகிறது. களியே விற்பனைப் பண்டம். மானுடர் அளவுக்குச் சோர்வுள்ள விலங்குகளை என்றாவது நீ கண்டிருக்கிறாயா. உழைப்பை விரும்பும் மானுடரென எவருமில்லை. ஆகவே தான் உழைத்தால் மட்டுமே வாழ்வெனும் நியதியை இயற்கை அளித்திருக்கிறது. குடிகளின் மிகைச் செல்வம் களிகளை நோக்கியே நகர்ந்து கொண்டிருக்கிறது. போரும் வீரமும் ஒரு தொல்கதை வரலாறென கண்முன்னே ஆகிப் போவதைக் காண்கிறேன்.

பெருங்கனவுகளை நோக்கி முழுவிசையுடன் செல்லாத குடிகள் அழிவை நோக்கி அதை விட விரைவாகச் செல்கின்றனர். மானுடருக்குப் பெருங்கனவுகள் அளிக்கப்படுவது வாழ்வின் பொருளின்மையை நிரப்பிக் கொள்ள. கூட்டமாய்த் திரண்டு மானுடம் ஒன்றென உணர்ந்து கொள்ள. கீழ்மைகளை ஒழித்து மேன்மையானவற்றின் ஒளியில் நின்று கொள்ள. தன்னைத் தானே வகுத்துக் கொள்ள. பெருக்கிக் கொள்ள. தொகுத்துக் கொள்ள. விரித்துக் கொள்ள. இப் புடவியில் மானுடம் நிலைப்பதற்கான பயில்வை அறிந்து கொள்ள. ஆனால் நாம் இலக்கற்றவர்கள் ஆகிவிட்டிருக்கிறோம். திசை வெள்ளியைச் சூடிக்கொள்ளாமல் நெடுயாத்திரைகளை நாம் செல்ல இயலாது. எளிமையில் தினத்தில் நாழிகையில் வாழும் எளிய குடிகள் தங்கள் கனவுகளை தொகுத்து அறியாமல் இனி முன் செல்ல இயலாது. அதுவே வரலாறு” என்றார்.

உலகளந்தோன் மெல்லச் செருமிக் கொண்டு “பெருங்கனவுகள் கொண்டவர்கள் குடிகளை நம்பி அல்ல. தான் எனும் தன்னாற்றலால் தன்னறத்தால் மானுடருக்கென தம் வாழ்வை அர்ப்பணித்துக் கொள்கின்றனர். கனவுகளை நோக்கி தலையே முதலில் செல்லும் அதன் பின்னேயே பல்லாயிரங் கால்கள் கொண்ட எளிய குடிகள் தலையைப் பின் தொடர முடியும். தலையாய் அமைபவரே தலைவர். அனைத்து மானுடரும் அனைத்து வகையிலும் தகுதி கொண்டவராய் அமைவதென்பது எப்பொழுதும் இயலாத நிலை. குடிகள் நொதிக்கும் உலைக்குமிழ்கள் போன்றவர்கள். நூறு நூறு முறை கொப்பளித்தபடியிருப்பார்கள். பெருங்கனவென்பது கலயத்தை நிரப்பியுள்ள நீர். பொங்கும் அன்னமே மானுட விடுதலை. பரிமாறுவதாலேயே மானுடர் இத்தனை நெடுஞ்சங்கிலியை வரலாற்றின் யுக முடிவுகளின் பின்னும் இழுத்து வந்து சேர்க்க இயன்றிருக்கிறது. நம்பிக்கை என்பது பொய் மூத்தவரே. ஆனால் நம்புவதே மருந்து” என்றான்.

இளம் பாணன் சாலையால் சிரித்து அளவளாவிக் கொண்டு செல்லும் குடிகளை நோக்கினான். தோலென்பது அணிந்திருக்கும் ஆடையெனத் தோன்றியது. ஒவ்வொரு உடலும் தோலின்றி குருதியும் சதையுமாய்ப் புலனாகியது. குருதிச்சதைகள் என எண்ணிக் கொண்டான். எங்கும் மானுடர் ஆழத்தில் ஒருவரே. தேசங்களும் நோக்குகளும் களிகளும் சடங்குகளும் நம்பிக்கைகளும் மாறுபட்டிருந்தாலும் அனைவரையும் தழுவிச் செல்வது ஒரு பெருநதி. எண்ணிக் கொண்டிருந்த போதே அவன் விழிகளில் நீர் பெருகியது. சூரியனின் இளமஞ்சள் ஒளியில் முதியவர்களும் சிறுவர்களும் ஆடிக் கொண்டும் பாவனை பூண்டு நாடகத்தில் எழுந்தவர்கள் என்றும் விளையாடிக் கொண்டிருந்தனர். அன்னையர் சில கணங்களில் முழுது மறையப்போகும் நிலவின் வட்டத் தட்டைக் காட்டியபடி தங்கள் மழலைகளுக்கு அன்னம் குழைத்து ஊட்டினர். இளையவர்கள் புரவிகளைத் தடவி மூக்கில் கரம் வைத்து மூச்சை நோக்கி தோளைத் தடவிக் கொடுத்து அவற்றை நோக்கிக் கதைத்துக் கொண்டிருந்தனர். அத்திரிகளின் வண்டில்களில் பூசணிக்காய் வயிறுகள் பெருங்குமிழிகளென ஏறியிறங்க வணிகர்கள் துயின்று கொண்டிருந்தனர். மனைகளிலிருந்து அகிற் புகை வாசம் எழத் தொடங்கியிருந்தது. காவல் நிலையில் வீரர்கள் சீரான தாளத்துடனும் பொலிவுடனும் சிரித்துக் கதைபேசி பணியில் ஈடுபட்டனர். மன்றின் முன் நின்ற துடியன் சொற்கேளாத குடிகளை நோக்கி முகத்தில் சலிப்பின்றி ஓலைகளை வாசித்துக் கொண்டிருந்தான். நிலக்கிளிகளும் நாகணவாய்களும் கிளிகளும் புறாக்களும் காகங்களும் ஒலிகளை எழுப்பிக் கொண்டு பறந்தமர்ந்து கொண்டிருந்தன. காற்றில் ஆடிய மரக்கிளைகளில் எஞ்சிய பனிக்காற்றும் உனக்குத் தானெனெ அவனை வந்து பனிக்காற்றாய் தழுவின. மானுடரே. என் மகவுகளே என அவனுக்குள்ளிருந்து எழுந்த குரல் கனிந்து சொட்டிய போது விழிநீரைத் துடைத்துக் கொண்டு சிரிக்கத் தொடங்கினான். கன்னங்கள் பிளப்பவை போல விரிய. புருவங்கள் உடைபவை போல நெரிய. மூக்கில் நீர் வடிய. மேனியில் மெய்ப்புல்கள் எழுந்து உடல் நடுக்கம் கொள்ளச் சிரித்துக் கொண்டிருந்தான்.

உலகளந்தோன் அவனை நோக்கிய பின் “தென்னகப் பாணரே. என்னை நீங்கள் சந்தித்தது உங்களின் முன்னோர்கள் புரிந்த நல்லூழால் என உடன்படுகிறேன். அதற்காக கண்ணீரால் எனக்கு நீங்கள் நன்றி சொல்ல வேண்டியதில்லை” என்றான் வேறுகாடார் உலகளந்தோனின் தோளில் அறைந்து சிரித்துக் கொண்டு அப்பாலிருந்த விறலிகள் இருவரும் கண்ணீரில் கசிந்து கொண்டிருந்த இளம் பாணனை நோக்கி அகம் அன்னையென எழத் தவித்திருந்தை நோக்கினார். விழிகளில் அவனையன்றி பிறிதெதையும் அவர்கள் நோக்கவில்லை. வேறுகாடார் புன்னகையுடன் அவன் என்றும் அன்னைக்கென ஏங்கும் எளிய மகவு என எண்ணினார். அதனாலேயே பெண்கள் அவனை மார்பில் ஏந்திக் கொள்கின்றனர். மலையின் மார்பில் அருவியென.

TAGS
Share This