101: அரக்கனின் காதல்

101: அரக்கனின் காதல்

சத்தகன் தன் பெருங்கரங்களால் இளம் வீரர்களை தோள்களில் அறைந்து கொண்டு இன்சொற்கள் கூவிக்கொண்டு நலன் விசாரித்தபடி அவர்களை நோக்கி வாழ்க்கையைப் பற்றி ஓரிரு சொற்கள் சொல்லி நடந்து சென்றான். மேகங்கள் எங்கிருந்து எழுந்தவையென நோக்கி நின்ற சுடர் மீனனைக் கண்டதும் உவகை மின்னொளியென விரியும் முகத்துடன் அவனது செவிக்குண்டலங்கள் சிற்றாலய மணிகளெனக் குலுங்க மார்புகள் பெருவேங்கையினுடையதைப் போல ஒருங்கி ஒளிகொள்ள கைக்காப்புகளும் சிறிய கணையாழிகளும் சர்ப்பக் குட்டிகள் அவனில் விளையாடுகின்றன எனத் தோற்றியது. சுடர் மீனன் அவனது பேருரு நெருங்கிக் கொண்டிருந்த போது இயற்கையான ஊன் வாசம் கொண்ட விலங்கு மணமும் காட்டின் பசுந்தழை வாசங்களும் எழுவதைக் கண்டு வியந்து கொண்டான். பின்னர் அவனை எண்ணிச் சிரித்தான்.

“வணக்கம் பெருந்தளபதி. களியிரவு பற்றிய பாடல்கள் அனைத்திலும் நீங்கள் தான் காவிய நாயகர் என அறிந்தேன். இடிகள் முழக்கமிடுவதை ஒப்புமைக்காக சத்தகன் நெஞ்சறைந்து கூவியது போல மேகங்கள் அறைகின்றன என புலரியில் கள்ளருந்திய முதுவீரனொருவன் வந்து அரசருக்குப் பாடிக் காட்டிவிட்டுச் சென்றார். இன்னொருவர் சொன்னார் பெருந்தளபதி களிகாரன். போர்க்களிகளில் அமலையாடி. மஞ்சக் களங்களில் வெருண்டோடி என. அச்சொற்களைக் கேட்ட அரசர் புண் வலிக்க வலிக்கச் சிரித்தார்” என்றான் சுடர் மீனன்.

சத்தகன் சற்று நாணங் கொண்டு “மிகையாகக் கள்ளருந்தி விட்டேன். என் பிலவிருந்த விலங்கு சிறிது நேரம் ஆடிச்சென்ற மேடை நான்” எனச் சொன்னான். அவனது குரலில் இனிமை குழைந்தது. சத்தகனைக் கண்ட புலி வீரர்கள் அமர்ந்திருந்த இடங்களிலிருந்து எழுந்து ஒருக்கப்பட்டிருந்த இடங்களுக்குத் தாவிச் சென்று நிலை கொண்டனர். விரிந்த பெருங்கரு வேர்களென நீண்ட மீசையை நீவி நிமிர்த்திக் கொண்டு சுடர் மீனனை நோக்கிய சத்தகன் சுடர் மீனனின் குழலில் நரைகள் இருளில் வெள்ளி நூல்களென ஓடுவதைக் கண்டு சிரித்தான். “உங்களுக்கு வயதாகி விட்டது மருத்துவரே. குழலில் வெள்ளி முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இனி முழுது வெண்மை ஆகாமல் ஓயப் போவதில்லை. மணநாள் காணாமலேயே உங்கள் இளமை சென்றொழிந்து விட்டது” எனச் சோகமாகச் சொல்பவன் போல முகத்தை வைத்திருந்தான். “இது போன்ற மானுட காரியங்களில் எப்பொழுதிருந்து ஆர்வங் கொண்டீர்கள் பெருந்தளபதி. அடுத்தவரின் மணநாள் குறித்துச் சொல்லெடுப்பவர் தனது உள்ளத்தில் அந்த விருப்பினை ஆழப் பெற்ற பின்னர் நாணங் கொண்டு பிறருக்கென உசாவுவது வழமையென்பது குடிச் சொல்.

எனக்கு வயது ஏறத்தான் செய்கிறது. ஆனால் போர்க்களத்தில் வயதான வீரனுக்கும் மருத்துவ நிலையில் முதுமை கொள்ளும் மருத்துவருக்கும் இருக்கும் விரிவான வேறுபாட்டை நீங்கள் அறிவீர்கள். முன்னையவர் மூப்பெய்தி மருத்துவ நிலையை அடையும் பொழுது பின்னையவர் நோய்களை நுணுகி அறிந்து களம் நுழைந்திருப்பார். இளமை போருக்குரிய தெய்வம். முதுமை மருத்துவருக்குரிய தெய்வம்” என்றான் சுடர் மீனன். “ஆஹ். நீங்கள் ஏதோ கிழவர் ஆனவர் போல் சொல்கிறீர்களே. உங்களுக்கு ஒரு பெண் பார்க்கலாம் என எண்ணியிருந்தேன். ஆனால் இனி கழுதைகளைத் தான் உங்களுக்கு மணம் செய்து வைக்க வேண்டும். முதுமையில் உங்களைச் சுமக்க அவை உதவக் கூடும்” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான். குழந்தையின் கெக்கலிப்புக் கொண்ட அவனது சிரிப்பு மருத்துவ நிலையில் ஒளடதமென ஒலித்தது. இளம் வீரர்கள் இருவர் சுடுபால் குவளைகளைக் கொணர்ந்து அளித்தனர். சத்தகன் ஒரே மடக்கில் கவிழ்த்து அருந்தினான். குவளையில் எஞ்சிய கடைசித் துளியென முழுக்குவளைப் பாலும் ஒருகணத்தில் உள்ளே விழுந்தது. அவனுக்குச் சுடுபாலைக் கொடுத்த இளம் வீரன் அருகிருந்தவனுக்குக் காட்டி ரகசியக் குரலில் “பறவை எச்சமிட்டு அது நேரே வாயில் விழுவதைப் போல” என்றான். அவன் முழங்கையால் அவனது மார்பில் அறைந்து “வாயை மூடு. அவரது கரத்தில் சிக்கினால் கல்உரலில் சிக்கிக் கொண்ட சுண்டெலிகள் ஆகிவிடுவோம்” எனச் சொன்னான்.

அவர்களின் மந்தணச் செயல்களை நோக்கிய சத்தகன் குவளையைக் கொடுத்த பின்னர் மீசையைத் துடைத்துக் கொண்டு “நீங்கள் தான் அரசருக்கு என்னைப் பற்றிய துர்வரிகளைப் பாடினீர்களா” என அச்சுறுத்துபவன் போல முகத்தை வைத்துக் கொண்டு கேட்டான். ஒரு கை இடையிலும் மறுகை இளம் வீரனின் தோளிலும் இருந்தது. அவனுக்கு அச்சத்தில் குரல் வெளிறத் தொடங்கியது. சத்தகன் தன் வயிற்றின் மேலேறிக் குடலை உருவி அமலையாடும் காட்சிகள் கண்ணில் தோன்றின. முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகள் வானிலிருந்து சொட்டியனவா என நிமிர்ந்து வான் நோக்கிய சத்தகன் தன்னைக் கொன்று விண்ணேற்ற வாயில் தேடுகிறான் என எண்ணினான் இளம் வீரன். அவனது நாவில் அச்சம் ஒரு சொல்லதிர்வென எழுந்தது “நானில்லை பெருந்தளபதி. நான் இப்பொழுது தான் பணிக்கு வந்தேன். இவனிடம் கேளுங்கள்” என்றான். அருகிருந்தவன் புருவங்கள் சுருங்க முகம் கோணி “பெருந்தளபதி. உங்களை வேடிக்கை சொல்லிச் சொல்லாடியவர்கள் முது வீரர்களே. அவர்கள் எப்பொழுதோ சென்று விட்டார்கள். யாரையேனும் சில பாணர்களைக் கைது செய்து அழைத்து அப்பாடல்களை இயற்றியவர்களின் பெயர்களைப் பட்டியலிட்டு அவர்களையும் கைது செய்து சித்திரவதை செய்யலாம். அதற்கான காவல் நிலையில் நானும் பங்கெடுப்பேன்” என மண் மீது ஆணையிடுபவன் போன்ற பாவனையுடன் சொல்லிக் கொண்டிருந்தான்.

சத்தகன் உரக்கச் சிரித்தான். இடிகளின் ஒப்புமை என எண்ணிப் புன்னகை கொண்ட சுடர் மீனன் அவனது களியின் அடுத்த செயலை நோக்கிக் காத்திருந்தான். “செல்க. சென்று அருகிருக்கும் பாணர்களை இங்கு கொணர்க. பெருந்தளபதியின் களியாட்டுகளைப் பற்றிய பாடல்களுடன் வருவோருக்கு மூன்று பொன் நாணயங்கள் என உரையுங்கள். இதுவரை பாடியிருக்காதவன் கூட வரும் வழியில் ஒன்றை இயற்றி வரக் கூடும்” என்றான் சத்தகன். சுடர் மீனனின் நீள்விழிகளில் புலரியில் களி வேடிக்கையுடன் தொடங்கவிருக்கிறது என எண்ணிக் கொண்டான். இரு இளம் வீரர்களும் “ஆணை. பெருந்தளபதி” எனச் சொல்லிய பின் விலகிச் சென்று நூற்றுவரில் ஐவரை அழைத்துக் கொண்டு பாணர்களைத் தேடிச் சென்றனர்.

சுடர் மீனனை நோக்கிய சத்தகன் “அரசரின் உடல் நிலை எப்படியிருக்கிறது மீனா. யவன மருந்துகளால் ஏதேனும் பயனுள்ளதா” என வினவினான். சுடர் மீனனின் முகத்தில் ஒரு கணத்தில் வானிருட்டுக் கவிழ்ந்து ஒட்டியது. “அவருடைய தேகம் கடுமையான காயங்களாலும் இடையறாத அலைச்சல்களாலும் நோயை மீற முடியாது உலைத்தழிவதை ஒவ்வொரு தினமும் நோக்கியிருப்பது உளத்தை அரிக்கிறது பெருந்தளபதி. தந்தையின் நோயை அகற்ற முடியாத மருத்துவங் கற்றவனின் நிலையை ஒவ்வொரு நாளும் உணர்கிறேன். யவன மருந்து ஒரு புதிய மயக்கு மட்டுமே. அவரை ஒரு நாழிகை துயிலில் ஆழ்த்துகிறது. அவருள் எழும் எண்ணங்களையும் கனவுகளையும் அழிக்கும் வல்லமை கொண்ட ஏதேனும் மருந்தையோ மயக்கையோ தெய்வங்கள் தான் இனி அருள வேண்டும். அவரது கனவுகள் ஈடு இணையற்ற விரைவுடன் அவிழ்பவை. உக்கிரமானவை. ஒவ்வொரு கனவிலும் தான் இறந்து பிறப்பதாக சில நாட்களுக்கு முன்னர் சொன்னார். மெய்யே என எண்ணத் தோன்றும் கனவுகளில் மூழ்கி அமிழ்ந்து அழிவதைக் காண்கிறார். பேரழிவுகள். ஊழிகள். அவரது கனவுகளில் புரள்கின்றன. ஓயாது துர்க்கனவுகள் அடிக்கும் கரையெனத் தன்னை உணர்கிறார். அவருக்குள் எழும் எண்ணங்களின் துண்டு முனையின் கூரையே அவர் சொல்கிறார் என எண்ணுக்கிறேன். அவரை முழுதறிந்தவர் என எவரேனும் உளரா” என்றான் சுடர் மீனன். அவனது சொற்களைக் கேட்டுக் கொண்டே நீலர் துயின்றிருந்த குடிலின் முன் குட்டிக்குக் காவலிருக்கும் அன்னைப் புலியென நடந்து கொண்டிருந்தான். கனவுகளிடமிருந்து நீலனைக் காப்பேற்றுவேன் என குழந்தை போல எண்ணிக் கொண்டு.

மேகத்திலிருந்து மெல்லிய நீர்த்துமிகள் காற்றில் உலைந்து மிதந்து சத்தகனின் தாடியிலும் மீசையிலும் விரிகரு நெற்றியிலும் ஒற்றின. அவை அணிகளென மின்னுவதைக் கண்ட சுடர் மீனன் “மழை வலியைப் பெருக்குவது. குளிர்கையில் அவர் நெஞ்சுப் புண் தன் ஆழத்துக் கோட்டிலிருந்து மீண்டும் விறைத்து அம்பை விடுவித்த நாணென அதிரத் தொடங்கும். அவருக்கு அருகிலேயே எந்த நேரமும் ஒரு மருத்துவ மாணவர் உடனிருந்தாக வேண்டுமென ஒருக்கியிருக்கிறேன். யவன மயக்கை எவ்வளவு காலம் அளிப்பது. அதனால் உண்டாகக் கூடிய மேலதிக விளைவுகளும் நமக்குத் தெரியவில்லை. இம்மருந்தைப் பற்றி யவனக் குழுவினரிடம் சற்று விரிவாக அறிய வேண்டும்” என்றான்.

“அவர்கள் குழுவுடன் வந்திருக்கும் மொழிபெயர்ப்பாளினி ஒருவரை நான் அறிவேன் மீனா. பெயர் சுவடிகை. மதுரை மாநகரிலிருந்து வந்திருக்கிறார்” என்றான் சத்தகன். காதல் நோய் கொண்ட ஆணின் விழிகளைக் கண்ட சுடர் மீனன் “அகம் கொள்ளும் நோய்களையும் அறியும் விழிகள் கொண்டவரே மருத்துவர் என என் தந்தை சொல்வதுண்டு பெருந்தளபதி. தங்கள் விழிகளில் நோயின் கோடுகள் விரிவதைக் காண்கிறேன். உவகையான நோய்” என்றான்.

சத்தகன் மெல்ல உறுமலுடன் “அவ்வளவு எளிதாகவா என் விழிகளில் அது தெரிகிறது. ஆனால் அப்பெண் அதைக் கண்டவள் போலவே காட்டிக் கொள்ளவில்லையே” என்றான். “ஆக. புலரியில் கண்டு இருநாழிகை பெயர்வதற்குள் நோய் பரவிவிட்டிருக்கிறது. அபாயமான நிலை தான் பெருந்தளபதி. நான் மருத்துவம் அறிந்தவன் மட்டுமே. பெண்களின் அகவுலகை தெய்வங்களே கூட அறிய முடியாது என்பர். அவர் ஏன் உங்களை அறியாதவர் போல நடந்து கொள்கிறார் என்பதை நான் எங்கனம் அறிய இயலும்” எனச் சொல்லி குறும்புடன் புன்னகை பூத்தான்.

மருத்துவக் குடில்களின் அருகில் மெல்லிய தூவல்களாக மழை விசிறிக் கொண்டிருக்க காற்றில் ஈரம் தடித்து வந்து கொண்டிருந்தது. குழல் காற்றில் ஊதி விரிய நின்ற சத்தகன் குழம்பிய விழிகளுடன் “இதை நான் யாரிடம் கேட்பேன் மீனா. எவர் எனக்கு உதவ முடியும். பெண்ணை அறிந்த ஒருவரையும் எனக்குத் தெரியாதே” எனச் சொன்னான்.

 சுடர் மீனன் வரங் கொடுக்கப் போவபன் போல முகத்தை வைத்துக் கொண்டு “ஒரே ஒருவரை நான் அறிவேன். ஆழத்தில் இக்குடியின் ஒவ்வொரு பெண்ணும் அவரை அறிவாள்” என்றான். “பீடிகை அமைத்தது போதும் மீனா. எவரவர். நான் அவரை அறிவேனா” என்றான் சத்தகன். “ஓம். பெண்களில் அவர் அறியாததை பிறிதெந்த ஆணும் அறிந்திருக்க இயலாது. ஞானியரும் பெண்களுமே கூட பெண்ணைப் பற்றி அறியாததை அவர் அறிவார்” என்றான் சுடர் மீனன். அவனை அறைபவன் போலக் கையைத் தூக்கிய சத்தகனிடமிருந்து ஈரடி பின்வைத்து விலகி நின்று மெல்லிய புன்னகையுடன் மந்திரம் ஒலிப்பவன் போல குரலை ஒருக்கி “வேறுகாடார்” என்றான். சத்தகனின் முகத்தில் ஆயிரம் மதவேழங்களின் மதனம் சுரந்து ஊறியது. களிச்சிரிப்பு வெட்டி எழுந்தது. “ஆஹ். அவரே பெண்ணை அறிந்த ஒரே மானுடன். அவரிடம் ஆலோசனை கேட்பதே நல்லது” என மீசையை நீவிக் கொண்டு உளத்தில் தானறியாத உவகை பீறிடுவது எந்த ஊற்றுகளிலிருந்து நோக்கிக் கொண்டிருந்தான்.

மருத்துக் குடிலிலிருந்து இளம் மாணவன் சாந்தன் வெளியேறி வந்த போது பூமிதன் அடுத்த வேளை நோக்குதலுக்காக காத்து நின்றான். சாந்தன் சுடர் மீனனின் அருகில் விரைவாக நடந்து வந்தான். அவனது குழல் முடிந்து கட்டப்பட்டிருந்தது. முகத்தில் வியர்வை வழிந்து கழுத்தில் ஓடி ஒளிர்ந்து கொண்டிருந்தது. குடிலுக்கு வெளியே வீசிய கார்மேகங்களை அழைத்து வந்த காற்றில் உடல் மெல்ல மெய்ப்பு கொள்ள அருகு வந்தான். சுடர் மீனன் இருகரங்களையும் நீளத் தொங்க விட்டு மெல்லிய கழுத்துக் கூனலுடன் அவனை நோக்கினான்.

“ஆசிரியரே. அரசர் எதிர்பாராத வண்ணம் நோய் நீங்கி வருகிறார். நெஞ்சுப் புண் உலர்ந்திருக்கிறது. விழிமணிகளில் அருட்டலின்றி மூநாழிகை துயின்றிருக்கிறார். தற்போது விழித்து எழுந்து மேனியைத் தானே வியந்து நோக்கிக் கொண்டிருக்கிறார். தங்களை அழைத்து வரச் சொன்னார்” என்றான் சாந்தன்.

சுடர் மீனனும் சத்தகனும் விரைவு கொண்ட இரு சேவல்களென ஓடினர். குடிலில் நுழைந்த போது ஐந்து மண் விளக்குகளில் தீ சீராக கூரை நோக்கி நீண்டு ஒளிகூர்ந்திருந்தது. பூமிதன் நீலனின் தோள்களைத் தொட்டு ஆராய்ந்து கொண்டிருந்தான். நீலனின் முகத்தில் புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. நெடுநாள் வலி நீங்கியவனின் முகத்தில் வியப்பு தவித்துக் கொண்டிருந்தது.

நீலனைக் கண்ட சத்தகன் பெருங்கேவலுடன் முழந்தாளில் அமர்ந்து அவரது மேனியை நோக்கத் தொடங்கினான். அவரது விழிகளில் திரும்பியிருந்த ஒளியையே ஊழ்க ஒளியெனக் கண்டு அமர்ந்திருந்தான். சுடர் மீனன் அருகே சென்று கைவிரல்களைத் தொட்டு நோக்கினான். இளஞ் சூடான விரல்கள். விழிகளில் வெண்மை திரும்பியிருந்தது. விழிக்கீழ் பகுதுகிகளில் செம்மை திரும்பியது. நாசியிலும் சீரான மூச்சு. அனல் குறிந்திருந்ததை புறங்கையை வைத்துச் சோதித்தான். புன்னகை மெல்லப் பரவ “தாங்கள் எழுந்து சற்று வெளியில் உலாவுவது மேலும் நல்லது” என்றான். தலையசைத்த நீலனைத் தூக்கச் சென்ற சத்தகனை நீலன் இடைமறித்து தானே எழுந்து கொண்டான். சத்தகன் உரக்கச் சிரித்தபடி “பெரும்புலியை எழுப்ப வாலை நீட்டிய எலி நான்” எனச் சொன்னான். “இவ்வளவு பெரிய எலியை என் வாழ்நாளில் பார்த்ததில்லை” எனச் சுடர் மீனன் சொல்லிச் சிரித்தான். நீலன் இருவருக்கும் இடையில் நடந்து மருத்துவக் குடில் வாயிலைத் தாண்டி வெளியே வந்து இளமழை கொட்டும் விடியலை நோக்கினான். வெள்ளி தூவல்கள் சிந்தும் காலை அவனை வாழ்த்துவதைப் போல மென்மையாக வீழ்ந்தன. புலி வீரர்கள் தங்கள் நிலைகளில் நின்றபடி முழுதுடலாலும் நீலனை நோக்கினர். ஒவ்வொருவர் உடலிலும் சூடான செங்குருதி பாயத் தொடங்கியது. அவன் இருக்கும் வரை வெல்வது உறுதி. அவன் தளர்வது உடலின் ஆதார நரம்புகள் பெயர்வதைப் போன்றது. அவன் எழுந்தான். எழுந்தான் என அகங்கள் கூவின. சத்தகன் மெல்ல முன்சென்று நீலனைச் சிரிக்க வைப்பவனென இளமழையில் கூத்தனென ஆடினான். புலிவீரர்கள் சிரித்தனர். சிலர் கன்னக் கதுப்புக்குள் சிரிப்பை அடக்கிக் கொண்டனர். சிலர் கீழுதட்டுக் குழிக்குள் ஒழித்துக் கொண்டனர். சத்தகன் எவரையும் நோக்காது இளமழையின் முன் சிறுமழலை போல ஆடினான். நீலன் மெல்லச் சிரித்துக் கொண்டு அவனுக்கென்று கொணர்ந்த மரப்பெட்டியில் அமர்ந்து கொண்டான்.

பாணர்களைக் கைது செய்யச் சென்றிருந்த இருபுலி வீரர்களும் அவர்களது குழுவினரும் நான்கு பாணர்களை மழைச் சாரல் படிந்த குழல்களும் கரங்களில் யாழ்களும் தோள்களில் துணிப்பைகளும் அசைய வீழ்ந்து புரண்டு சேறாகிய ஆடைகளும் அரைய நடந்து வந்தார்கள். அவர்களின் பின்னே உரக்கச் சிரித்துக் கொண்டு வேறுகாடாரும் இளம் பாணனும் வருவதைக் கண்ட சத்தகன் வேறுகாடாரை நோக்கிக் கூவிக்கொண்டு ஓடினான். வேறுகாடார் இவன் என்னை அணைத்தே கொன்று விடுவான் என அஞ்சி விலகிக் கொள்ள விழிகளை மூடியபடி காதல் கொண்டு அணைக்க வந்தவனின் கரங்களுக்குள் இளம் பாணனை தள்ளி விட்டார். இளம் பாணன் பெருமந்தியிடம் சிக்கிய தேன்வதையெனப் பிழியபட்டான். “என்ன வேறுகாடாரே துரும்பென இளைத்து விட்டீர்கள். உண்பதில்லையா” எனக் கேட்டவன் விழிதிறந்து இளம் பாணனைக் கண்டதும் அஞ்சிக் கீழே போட்டான். தரையில் குட்டியென விழுந்த இளம் பாணனைத் கரங் கொடுத்துத் தூக்கிய வேறுகாடார் “பெருந்தளபதி. நான் முதியவனாகி விட்டேன். எளியவன். தாங்கள் கைது செய்யது வரச் சொன்னதாக இந்த மாவீரர்கள் சொன்ன போது அஞ்சியே நாங்கள் இங்கு வந்தோம்” என்றார். சத்தகன் இடையில் கைகளை ஊன்றிக் கொண்டு “நீங்களா. அஞ்சியா” எனச் சொல்லி உரக்கச் சிரித்தான். “வாருங்கள். அரசரும் நோய் வற்றி நன்நிலையில் இருக்கிறார். உங்களைப் பார்த்தால் மகிழ்ச்சி கொள்வார். இவர் யார். நம்மவர் போலத் தெரியவில்லையே” என்றான் சத்தகன்.

அவனது குரலில் ஓடிய விளையாட்டுத்தனம் இளம் பாணனை எரிச்சலூட்டியது. தானே முன்வந்து அவனுடன் போரிடப் போபவன் போல நின்று கொண்டு “நான் தென்னகத்துப் பாணன். களிபார்க்க வந்திருக்கிறேன். வேறுகாடாரின் நண்பன்” என்றான். வேறுகாடார் சிரித்தபடி “இது என்ன காப்பு மந்திரமா இளம் பாணரே. எங்கும் ஒன்று போலவே உச்சரிக்கிறீர்கள்” எனச் சொல்லி அவன் தோளில் கைவைத்து “இவர் பெருந்தளபதி சத்தகன். அளப்பரிய களங்களை வென்றவர். பெருங்களிகாரர். உங்களுக்கு இவரைப் பிடிக்கும் என எண்ணுகிறேன். இரண்டு களிகாரர்கள் எப்பொழுதும் நண்பர்களாகவே வாய்ப்புகள் அதிகம்” எனச் சொல்லி குறும்புச் சிரிப்புடன் சத்தகனை நோக்கினார். சத்தகன் “புலரியிலேயே உங்களைச் சந்திக்க வேண்டுமென எண்ணியிருந்தேன் மூத்தவரே. எனக்கு ஆலோசனை தேவை” என்றான். வேறுகாடார் என்ன என்பது போல முகத்தை ஒருக்க “பெண்கள் பற்றி” எனச் சொல்ல இளம் பாணன் விழுந்து விழுந்து சிரிக்கத் தொடங்கினான். கால்கள் தள்ளாட வேறுகாடாரைப் பற்றிக் கொண்டு கண்ணீர் கசியச் சிரித்தான். “பெருந்தளபதி. ஆலோசனை கேட்பதோடு நிறுத்தினால் நல்லது. அப்பெண்ணிடம் கிழவரை அறிமுகம் செய்தால் அதன் பின்னர் என்றோ ஒருநாள் அதற்காய் வருந்துவீர்கள். நான் வருந்தாத பொழுதே இல்லை” எனச் சொல்லிச் சிரிப்பைத் தொடர்ந்தான். சத்தகன் அச்சத்துடன் நோக்க வேறுகாடார் ஆதூரமாய்த் தோளை அணைத்துக் கொண்டு “இளையவனே அவர் விளையாடுகிறார். நான் என் இளையவனின் வாழ்வுடன் விளையாடுவேனா. அரசரைச் சந்தித்த பின்னர் எவர் என்று சொல் இன்று அந்தியில் அவள் உன் மடியில் இருப்பாள். நான் உறுதி சொல்கிறேன்” என்று வேறுகாடார் சொன்ன போது எந்தக் குழப்பமும் இன்றி அது அங்கனமே நடக்கப் போவதாக தெய்வம் வாக்களித்து விட்டது என எண்ணி மகிழ்ந்து ஒரு எத்தல் துள்ளி நடந்த சத்தகனை நோக்கிய நீலன் சுடர் மீனனை நோக்கி “என்னவாயிற்று இளையவனுக்கு. ஆடுகிறான். துள்ளுகிறான்” என்றார். சுடர் மீனன் சத்தகனை நோக்கிய பின் குனிந்து மந்தணக் குரலில் “இளையவர் காதல் கொண்டிருக்கிறார். மாமதுரையிலிருந்து வந்திருக்கும் பெண் ஒருத்தியிடம். வேறுகாடாரிடம் ஆலோசனை கேட்கச் சொன்னேன். அவர் ஒப்பியிருப்பார் என எண்ணுகிறேன். ஆகவே தான் துள்ளல்” என்றான். நீலன் மேனியதிரக் குலுங்கிச் சிரிக்கத் தொடங்கினான். அவன் குழந்தை போலச் சிரிப்பதைக் கண்ட வேறுகாடாரின் கண்கள் பனித்து எழ விழிகளை வெட்டுபவர் போல இமைகளால் கண்ணீரை அறுத்தார். தூவல் துளியொன்று இளம் பாணனில் பட வானை உயர்ந்து நோக்கினான். வானில் மழைத் துமிகள் சின்னஞ் சிறு காதல்களெனப் பொழிந்து காற்றில் ஆடின.

நான்கு பாணர்கள் குடில் வாயிலொன்றில் மழைக்கு ஒண்டிக் கொண்டிருந்தனர். இரு புலிவீரர்கள் அணை போல காவலுக்கிருந்தனர். நீலனின் மேற்தேகத்தைப் பட்டினால் போர்த்தி மூடினான் பூமிதன். குழலை பின்னால் சரித்துக் கொண்டு மூவரும் தன் குடிலை நோக்கி வருவதை நோக்கினான் நீலழகன். வேறுகாடார் மையத்திலும் இளம் பாணன் வலப் பக்கமும் சத்தகன் இடப் பக்கமும் உடன் வந்தனர். ஒருகணம் அரசர் எழுகிறார் என எவரோ தனக்குள் ஒலிப்பதைக் கேட்ட நீலன் புன்னகை கொண்டான்.

வேறுகாடார் குழலை முடிந்து கொண்டு பணிவான பாவனையுடன் அரசரின் அருகு நின்றார். “இளையவனே. இன்று நாட்டில் நாம் முன்னெதிர் கொள்ளாத பெருஞ் சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. நாம் உடனடியாக முழுப்படையும் ஒருக்கியாக வேண்டும்” என்றான் நீலன். சத்தகன் உடைவாளில் கைவைக்கச் சென்று அங்கு அதை அவன் அணியவில்லை எனக் கண்டு நாணியபடி “இதோ செல்கிறேன் அரசே. என்ன சிக்கல் நேர்ந்தது. கவலை வேண்டாம். நாங்கள் அனைவரும் இங்கிருக்கிறோம்” என்றான் சத்தகன். குறும்புக்கு முன்னர் பூனையின் விளையாட்டுத்தனமான முகம் பூணும் நீலன் “யாரோ மதுரையிலிருந்து ஒரு பெண் வந்திருக்கிறாராம். அவரது இதயத்தை எவனோ கள்வன் திருடி இருக்கிறானாம். அரசவையில் முறைப்பாடு எழுந்துள்ளது. குடிகளை முழுதும் சலித்துத் தேடியாவது அக்கள்வனைக் கண்டு பிடித்தாக வேண்டும். இல்லையேல் நம் மண்ணுக்கு அபாயம் உண்டாகும். மதுரையை எரித்த கொற்றவையைப் போல நம் பட்டினத்தை அவர் அழித்து விடுவாரோ என அஞ்சுகிறேன்” என்றான் நீலன்.

அவன் சொல்லச் சொல்ல சத்தகன் உருகி விழும் மெழுகுப் பாவையெனக் கரைந்து கொண்டிருப்பதை உதட்டில் புன்னகை வீச நோக்கினர் அனைவரும். அரசவை நடுவே மெல்ல மெல்ல ஆடைகளை இழந்து வருபவனைப் போல தேகம் நடுக்குக் கொண்ட சத்தகன் தன்னை மீட்டுக் கொண்டு “அரசே. அது நான் தான். என்ன தண்டனை வேண்டுமானாலும் கொடுங்கள்” என்றான். வேறுகாடார் தலையில் அடித்துக் கொண்டு “அரசே. இதை விளையாட்டெனக் கூடக் கண்டு கொள்ளாத நம் பெருங்குழந்தைக்கு இன்னமும் மணவயது ஆகவில்லை” என நொந்து கொள்பவர் போலச் சொன்னார். நீலன் புன்னகையுடன் “இளையவனே. தண்டனை உண்டு. நீ சென்று அவளைக் கரம் பிடித்து. நாளை என்னிடம் கொணர வேண்டும். நான் மணநாளைக் குறிக்க ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறேன். இது என் ஆணை” என்றான். போருக்கு ஆணை கிடைத்தவனைப் போல விறைத்து நின்ற சத்தகனைப் பார்த்து மீண்டும் அனைவரும் அரசன் இருப்பதையும் மறந்து சிரித்தனர். இளம் பாணன் சத்தகனை நோக்கி அவனுள் எழும் குழந்தையைக் கண்டு வியந்து கொண்டான். கொல்லும் அரக்கனின் சிலையில் குடியிருக்கும் குழந்தையின் ஆன்மா என எண்ணிக் கொண்டான்.

TAGS
Share This