108: அன்னைக்கடல்

108: அன்னைக்கடல்

மா என்று கடல் இரைந்து அழைத்துத் திரும்பும் ஓராயிரம் ஒலிகளைப் புலரி முதல் கேட்டபடி இளமழையின் சின்னக் காலடிகள் கரைமணலில் நடப்பதை ஓய்வேயில்லாமல் திண்ணையில் சாய்ந்தபடி நோக்கியிருந்தார் நீலனின் அன்னை உமையம்மாள். ஒவ்வொரு மா வும் ஒரு மழலையின் அழைப்பு என செவிகளில் குளிர் விரல்களால் தொட்டளைய உதிருடல் போலிருந்த முதிர்தேகம் மெய்ப்புக்கொண்டு கால்களை நீட்டிக் கொண்டு அமர்ந்திருந்தாள். இளவயது முதலே நீலக்கடலை புலரியில் நோக்கியிருப்பது அவளின் வழக்கம். “அலை எப்பொழுதும் தீரவே போவதில்லை உமை. சென்று அடுமனைப் பணிகளை ஒருக்கு. தந்தையை எழுப்பு” என அவளது அன்னை இரைந்து கொண்டே இருப்பாள். அலை அலையென அவளின் சொற்களையும் கேட்பாள். தன்னில் அலையடித்த கடலின் தீராத தவிப்பே நீலனைச் சுமந்தது என எண்ணிக் கொள்வாள். இளங் காதலனுடன் அலைகரையில் நண்டுகளைத் துரத்தி ஓடுகையிலும் படகேறி நிலவு பார்க்கச் செல்கையிலும் ஆழியின் இரைச்சலான மெளனம் அவளிடம் எதையோ கொடுக்கவென எண்ணியிருக்கிறது என எண்ணுவாள்.

நீலனின் தமக்கைகள் பிறந்து வளர்ந்த போதும் ஒரு கொடையின்மையை அவளது அகம் தாங்கிக் கொண்டிருந்தது. நீலனே கடைசி மகவு. அவனைச் சுமந்திருந்த காலத்தில் அக்கொடை நிகழ்ந்ததென அவளது ஆழகம் முற்றுறுதி கொண்டு விட்டிருந்தது. புலரியில் பேழை வயிற்றில் விழிதிறக்காது அசைந்து கொண்டிருக்கும் நீலனுடன் அமர்ந்து அலை கேட்பாள் உமை. அவன் கால்கள் ஊர்ந்து அலைகளில் நுரையெனத் தாவுகின்றது என எண்ணினாள். ஆழிருளின் மெளனமும் பேருலகங்களும் கொண்டெழுவான் என்றனர் கலையாடிகள். வாக்குக் கேட்கும் இடங்களிலெல்லாம் அவள் கருவில் சுமந்திருப்பது பேருருக் கொண்ட ஆழி முத்தொன்றை எனச் சொல்லும் பொழுதில் உவகை கூடி வயிற்றை மென் விரல்களால் தடவி ஆறுதல் கொள் என் முத்தே. என் பேழையில் கண் வளர்வாய் என அகத்திற்குள் பாடலெனச் சொல்லிக் கொள்வாள்.

நீலன் பிறந்தது முதல் தவழ்ந்து கரையேறி கடலைக் கை நீட்டி மா மா என அழைப்பதைக் கண்டு தமக்கைகளும் தந்தையும் கேலி செய்வதுண்டு. நீ வரங் கொண்டு பெற்ற மகன் ஆழியை மா வென அழைக்கிறான் என்பார்கள். அவன் மா எனும் சொல்லுக்கு அப்பால் நெடுங்காலம் எதையும் பயிலாமல் ஊழ்கம் கொண்டவன் போல கடலின் நுரைத்தெழும் பெருவாயை நோக்கியபடி இன்னொரு சொல் எழாதா எனக் காத்திருப்பவன் போலிருப்பான். ஆழியே எழுந்து வந்து சொல்லளித்தால் ஒழிய இவன் சொல்லெடுக்க மாட்டான். பிடிவாதங் கொண்டவன். அடம் எனத் தமக்கைகள் அவனைப் பழிப்பார்கள்.

அலைமடியில் முத்தே. ஆகாய வெண்ணிலாவே. இளங் காலைக் கதிரவனே. மலைமேலேறி நான் கொணர்ந்த மல்லிகையே. மாணிக்கச் சுடரே. அருமணியின் விழியே என ஒராயிரம் சொல் கூட்டி அன்னை அவனைத் துயில வைப்பாள். தாலாட்டுக் கேட்கும் பொழுது நீலனின் முகம் பிறிதொரு கனவின் இனிமையில் புன்னகைத்துக் கொண்டிருக்கும். அவனைத் தாலாட்டும் தனியிரவுகளில் தான் சுமந்து பெற்றது எந்த தேவனை என வியந்து ஒளிவீசும் அவன் இளங்கரு முகத்தை நோக்கியிருப்பாள் உமை. அவனை நாகதேவி ஆலயத்திற்கு முதல் முறை கூட்டிச் சென்ற போது சிணுங்கிக் கொண்டேயிருந்தான். இளமழை அச்சிணுங்கல் ஒலிகளை நினைவில் எழுப்பியது.

நீலனின் பிறவி மாதத்தில் அவனை ஆலயத்திற்கு அழைத்துச் செல்லும் எண்ணம் தந்தை சுந்தரமகிழருக்கு உண்டானது. அவன் பிறந்து மூ அகவை நிறையும் வரை தொலைவுகளுக்கு அழைத்துச் செல்ல அவர் விழையவில்லை. ஆனால் அவன் பிறவி மாதத்தில் ஓரெண்ணம் அவரை அவரறியாது உந்த அகவை நாளன்று விடியலில் செல்லும் முடிவை எடுத்தார். நீலனுக்கு மெல்லிய காய்ச்சல் அனலில் தாமரையிலையென தேகத்தில் கன்றது. தமக்கைகள் அவனைத் தோளிலும் மார்பிலும் போட்டுக் கொண்டு காளை வண்டிலில் சென்றனர். முழுநிலவு எறித்த கார்த்திகை மாதம். அலைகடல் தெறித்து உயர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது. விண்மீன் பெருக்கின் கீழ் காற்று சுழன்று மென் புயலென வீசிக் கொண்டிருந்தது. காளைக் கொம்பின் மணிகள் ஆடிக் கிலுங்கின.

நாகதேவி ஆலயத்தில் கலையாடி விளக்கை ஏற்றிய பின் குழுமியிருந்த சிறிய எண்ணிக்கையிலான குடிகளுக்கு வாக்குரைத்துக் கொண்டிருந்தார். நீலனின் குடும்பத்தினர் குடிகளுடன் சேர்ந்து கொண்டனர். இரு தமக்கைகளின் தோளிலும் கூந்தலிலும் தூங்கும் மாலைச் சரமெனத் தூங்கிய நீலன் சினந்து கொண்டிருந்தான். அவனைக் கீழே இறக்கிய பின்னர் கலையாடியின் உருவேறிய முகத்தை அஞ்சியபடி நோக்கினர் தமக்கைகள். நீலன் கல்பாவிய குளிரினால் சினந்து சினந்து தவழ்ந்து இருட் பிரகாரத்திற்குள் நுழைந்து விட்டான். அங்கிருந்த இருளைக் கதகதப்பென எண்ணிக் கொண்டான். கையில் கிடைத்த வேரொன்றைப் பற்றியபடி எழ முயன்றான். வழுக்கி விழுந்த பின்னர் வேரை இழுத்துக் கொண்டு தீபந்தங்கள் ஒளிர்ந்து கொண்டிருந்த பிரகாரத்தில் அவன் தவழ்ந்து சென்றான். கூடி நின்ற குடிகள் கலையாடியை நோக்கிக் கொண்டிருந்தனர். அவரது வாக்குகள் திசைக் கொன்றாய் பிய்த்தெறிந்த எலுமிச்சைகளெனப் பறந்தன. அன்னை தமக்கைகளை ஏசி நீலனை கூட்டி வரச் சொல்லிச் செவிகளில் உறுமினாள். இரு தமக்கைகளும் குடிகளை விலத்திக் கொண்டு தம்பியைத் தேடினர். அவன் புன்னகையும் சினமும் கலந்த முகத்துடன் அக்கைகளைக் கண்டு விரைந்து தவழ்ந்தான். மூத்த அக்கை இருளிலிருந்து கனியொன்றைத் தூக்கித் தோளில் வைப்பவளென அவனைத் தூக்கிக் கொண்டாள். இருகால்களையும் கழுத்தில் போட்டுக் கொண்ட போது அவனுக்கு அவன் அமைந்திருந்த பீடம் மெல்லிய உவகையைக் கொடுத்தது. வளர்ந்தவர்களுக்கு இணையான உயரத்தை அவன் கொண்டிருந்தான்.

அக்கையைப் புரவியென எண்ணிச் செல் செல்லென விரட்டினான். அவள் அவனை கைகளால் தட்டி பேசாமலிரு என முணுமுணுத்தாள். கலையாடியின் முன் சென்று அன்னையுடன் நின்று கொண்டாள் மூத்த தமக்கை பைந்தமிழி. இரண்டாமவள் உதய தாரகை தம்பியின் காலின் கீழ் நின்று கொண்டாள். அன்னை அவனைத் திரும்பி நோக்கிய பின் புன்னகைக்கும் அவன் முகத்தைக் கண்டு சிரிப்பு வர அடக்கிக் கொண்டு கலையாடியை நோக்கினார். சுற்றிலும் நறுந்தூபம் எழுந்து அலையலையாய்ப் பரவிக்கொண்டிருந்தது. புகையில் சிறகுகள் கொண்டவனென ஆடிக்கொண்டிருந்தான் நீலன். கலையாடி கையிலிருந்த திருநீற்றை நீலனின் குடும்பத்தின் மீது வீசியெறிந்து நெற்றியில் நீறிட விழைந்தார். நீற்றுபடலம் புகையென எழுந்த போது எவரோ அன்னையையும் அக்கைகளையும் நீறால் தாக்குகிறார்கள் என எண்ணியவன் போல கரத்தில் துடித்துக் கொண்டிருந்த சின்னஞ் சிறு குழவிக் கை போன்ற நாகத்தை கலையாடியின் மீது தூக்கி எறிந்தான் நீலன். நாகம் கலையாடியின் மார்பில் பட்டு விழுந்து சடைத்து விரிமுகம் கொண்டு சுழன்று இடைசுற்றி பைந்தமிழியின் முன் அமர்ந்தது. சுற்றை நோக்கித் தலை திருப்பி நிலத்தில் மும்முறை ஓங்கிக் கொத்தியது இளநாகம். நீலன் சினத்துடன் கலையாடியை நோக்கி விரல்களை நீட்டினான். மா மாவென்ற ஒலி மட்டும் கொத்தி விழும் விரைவுடன் எழுந்தது அவன் நாவில். குடிகள் விலகி வட்டமுருவாவாகியது. பைந்தமிழி நீலனை ஆலவட்டெமன தூக்கிச் சுழற்றியபடி அன்னையின் அருகில் ஒண்டிக் கொண்டார்.

கலையாடி விரிந்த சிவந்த விழிகளால் நீலனை நோக்கிய பின் குழவி நாகத்திடன் மண்டியிட்டு அமர்ந்து பிழை பொறுக்கும் படி கேட்டுக் கொண்டார். அன்னை அச்சத்துடன் நாகத்தை நோக்கினார். நாகம் சுழன்று வளைந்து தலை சுருக்காது இருட் பிரகாரத்துள் சென்று மறைந்தது. சுற்றிலும் எழுந்த கலவையான ஒலிகள் கலையாடியின் வெறி நாவெழுந்து சீறிய போது ஒற்றை ஒலிக்கெனச் செவி திறந்து காத்தது. கலையாடி பைந்தமிழியை நெருங்கி நீலனைத் தொட விரல்களை நீட்ட அவள் அனிச்சையாய் அவனை மார்போடு சேர்த்து அணைத்துக் கொண்டாள். சித்தம் குலுங்கச் சிரித்த கலையாடி ஓங்கும் ஆழிவெண்சங்கின் முழங்கு குரலில் “இவன் அன்னையராலும் நாகங்களாலும் காக்கப்படுவான். அவனது கரத்தில் படைக்கலமென வந்து ஏறியது நாகம். அவன் படைக்கலம் கொண்டு அன்னையரையும் நாகத்தின் குடிகளாகிய எம்மையும் காப்பான்” என்றார். கனவிலென அச்சிறு குடிக்குழு அச்சொற்களைக் கேட்டுக் கொண்டது.

பசித்தழும் பொழுது நீலனை யாரும் தூக்கிக் கொள்ளா விட்டால் தவழ்ந்தும் ஊர்ந்தும் அன்னையைத் தேடுவான். தமக்கைகள் அவனை விட்டு ஒழிந்து கொண்டு அழு. அழு எனச் சொல்லி விளையாட்டுக் காட்டினால் சினந்து கொண்டு கால்களை மடித்து தவம் புரிபவன் போல அமர்ந்து கொள்வான். அழுத கண்ணீரும் மூக்கு நீரும் சிந்தி ஓடினாலும் அவன் எழ மாட்டான். அன்னை வந்து தமக்கைகளைக் கடிந்து கொள்வாள். என் கண்ணே. முத்தே எனக் கொஞ்சிக் கொண்டு முலைப்பாலை குடித்தபடி விழிகளில் மயக்குக் கொண்டு விரல்களைக் காற்றில் மல்லிகை இதழ்களென விரித்து மெய்யை மறந்து பால் வடியும் கலமென தூங்குவான் இளநீலன்.

பால் குடிக்கும் பொழுது அவனது சிறு எலிப் பற்கள் காம்புகளைக் கவ்விக் கொள்ளும். விடாய் தீரும் வரை அருந்திய பின்னரே அவன் பற்பிடி அகலும். பிடிவாதம் கொண்டவன். அன்னையைப் போல. ஆழியைப் போல. நாகக் குழவிகளைப் போல என எண்ணுவாள் உமை. அவன் வளர வளர அவனைச் சூழவும் மெளனம் பேராழியெனத் திரண்டு அவன் ஆழாழத்தில் சென்று முத்தென அமைந்து விட்டான் என்றும் எண்ணினாள். தமக்கைகளுடன் மாலையில் சென்று ஆழிக்கரையில் விளையாடுவான். அவனே எழுந்தால் தான் அவனுக்கு விளையாட்டுப் பிடிக்கும். இல்லையென்றால் மனையைச் சுற்றிலும் அணில்களையும் கிளிகளையும் தேடியபடி அலைவான். சிறிய கவண் ஒன்றை அவனது தாத்தா அவனுக்கென ஆக்கிக் கொடுத்தார். அதை எந்நேரமும் இடையில் கட்டியிருப்பான். மாமரங்களில் உச்சியில் தூங்கும் கனிகளுக்கே அவன் கவணெறிவான். தமக்கைகள் அவனை வசைபாடி கீழே தூங்கும் கனிகளைக் கொய்து தா எனச் சொன்னாலும் அவன் நோக்குவது எது உச்சியிலும் உச்சியாகக் கனிந்திருக்கிறதோ அதுவே.

கவணுடன் நண்பர்களுடன் சண்டைக்குச் செல்வான். குறி பிசகாமல் அவர்கள் அங்கங்களை அடிப்பான். நாளும் பொழுதும் அவன் குறித்த குற்றங்களுடன் அன்னையர்கள் மனை வாயிலில் நின்று சண்டையிட்டுச் செல்வார்கள். யாரேனும் வருவதைக் கண்டால் ஓடிச் சென்று அன்னைக்குப் பின் ஒழிந்து கொள்வான். இடுப்பிலும் முதுகிலும் தொடைகளிலும் தழும்புகளுடன் வந்து நிற்கும் இளையவர்களைக் கண்டு அன்னை அவனிடமிருந்து கவணை வாங்கிக் கொண்டாள். “காரணமின்றி ஒருவரைத் தாக்குவது அறமில்லை நீலா” என அன்னை சொன்ன சொல்லை அவன் கேட்ட தருணத்திற்கு அப்பால் கவணை அவன் கனிகொய்யவும் தொட்டதில்லை.

இளையவர்கள் வாளும் வில்லும் பழகும் காலங்களில் அன்னைக்கு நெஞ்சில் ஒரு பேரலை கல்வடிவில் எழுந்து உறைந்து விட்டதைப் போலத் தோன்றியது. கல்விச் சாலையில் அவனை மந்தணன் என்றே நகையாட்டுப் பெயர் சொல்லி அழைப்பார்கள். அவன் ஆசிரியர்கள் முட்டை தானே திறந்து கொள்ளக் காத்திருப்பவர்கள் என அவன் முன்னே நின்றிருப்பார்கள். அவனோ சொல்லின்றி ஒவ்வொன்றையும் நோக்கினால் கற்றுக் கொண்டிருந்தான். அவனது அறிவு செயலிலேயே வெளிப்படுகிறது என்றார் உகும்பர். வாள் பிடித்துச் சுழற்றுகையில் அவன் விழிகளில் குடியிருக்கும் அமைதி ஆசிரியர்களை அச்சுறுத்தியது. இளையவர்கள் வாளைப் பிடிக்கும் பொழுது உக்கிரமடைந்து கொலை புரிபவர்கள் என பாவனை செய்து காற்றைக் கிழித்து கூச்சலிடுவார்கள். ஆனால் நீலன் வாளை ஒரு காற்றெனவும் காற்றை ஆயிரம் வாள்களெனவும் விலத்திச் செல்பவனென வாள் சுழற்றினான். வாளின் உடலை தொட்டுத் தொட்டு ஆராய்வான். ஒவ்வொரு படைக்கலனும் அவனுடன் மெளனமாக உரையாடுகின்றது என்றார் உகும்பர்.

படைக்கலன்களைச் சீராக அடுக்கி வைப்பான். எண்ணையிட்டுப் பேணுவான். அவன் வளர்ந்து கொண்டிருக்க அவனுள் சீர்மை கூடி வந்ததை அன்னையும் உணர்ந்தாள். ஒவ்வொன்றிலும் வயதுக்கு மீறிய நிதானம் கூடியிருந்தது. அவனது இளவிழிகளில் கூர்மை மீன்முள்ளின் நுனியெனத் தெரிந்தது. தோள்களில் பலம் கூடிய போது அகத்தைக் குவித்து ஊழ்கத்தில் அமரத் தொடங்கினான். ஆற்றலை எதற்கென்றோ கரந்து வைப்பவன் என.

அவனது சொல்லின்மை ஒரு மாய வசீகரத்தை அவனுக்கு அளித்தது. சொல்லாடும் பொழுதுகளிலும் எண்ணிய பின்னே சொல்லை எடுப்பான். சொல்லெண்ணிச் சொல்பவன் எனத் தோழர்கள் பகடி செய்வார்கள். மிகுதிச் சொற்களைக் காதலிக்காகக் கரந்து வைத்திருக்கிறான் என்றார்கள். அவனை ஒரு கொடும் பேய் வசியத்தில் ஆழ்த்தி அவனுடன் அது குடியிருக்கிறது என்றார்கள். சொல்லெடு சொல்லெடு என அவனை நசை செய்யும் பொழுது அம்பையும் வில்லையும் தூக்கிக் கொண்டு பயிற்சிப் பாவைகளை நோக்கி நின்று அம்புகளை எய்யத் தொடங்குவான். சலிப்பேயில்லாமல் அம்புகளை எய்வான். ஆறு நாழிகைகள் கூட பயிற்சிக் கூடத்திலேயே உணவும் நீருமற்றுக் கிடப்பான். எந்தப் போருக்கென இவன் இப்படிப் பயிற்சி செய்கிறான் என ஆசிரியர்கள் நகையாட்டுச் சொல்வார்கள்.

குடி அறங்களைப் பற்றியும் அரசு சூழ்தலைக் குறித்தும் நடக்கும் வாலிபர்களுக்கான பாடங்களின் பொழுதுகளில் ஆசிரியருக்குப் பணிவிடை செய்பவனென அங்கேயே அமர்ந்திருப்பான். அறங்கள் குறித்து மெய்யுசாவல்கள் எழும் நேரங்களில் அவற்றை காக்கையெனத் தலைகளைச் சரித்துக் கூர்ந்து கேட்பான். காவிய பாடங்களில் ஆயுத சாலையில் ஒழிந்து கொள்வான். கவிதையைப் பொய் எனத் தோழர்களிடம் உரைப்பான். வரலாறே மெய். வரலாற்றிலிருந்து நாம் கற்றுக் கொள்வது ஒன்றே மெய்யான பாடம் எனத் தருக்குவான். அவனுடனான விவாதங்களில் அவன் வயதுத் தோழர்கள் சலித்து எழுந்து விடுவார்கள். இவை பெரியவர்களின் குழப்பங்கள் நீலா. நாம் சென்று திருட்டுக் கோழி பிடிக்கலாம் என அழைப்பார்கள். அவன் இறுகிய பாறையைப் போல அமர்ந்து வெறுவானை நோக்கியிருப்பான்.

வாலிபர்கள் சொல்லாடும் இடங்களில் முதலில் தயங்கியும் பின்னர் உரிமையுடனும் சொல்லாடத் தொடங்கினான். ஆசிரியர்கள் அவனைக் கடிந்து கொண்டார்கள். ஆனால் சிலர் அவனை ரகசியமாக நோக்கத் தொடங்கினர். அவனுள் எதுவோ ஒன்று தகித்துக் கொண்டிருக்கிறது. வயதுக்கென அளிக்கும் கல்வியை அந்தத் தீ எரித்துச் செரித்து விடுகிறது என எண்ணினர். உகும்பர் அவனைத் தன் அணுக்கனாக்கிக் கொண்டார். அவருடன் இணைந்தே அமர்ந்து தன் வினாக்களைக் கேட்பான். அவை நேராக நெஞ்சில் பாய்ச்சும் வாள் முனைகளைப் போன்றவை. எது நோக்கப்பட வேண்டுமோ அதுவே மெய்யானது என்பான். குடி வரலாற்றைக் கனவில் காண்பவனெனக் கேட்டுக் கொண்டிருப்பான். வென்ற களங்களைப் பற்றிய சித்தரிப்புகள் எழும் வேளை அவனது வலக்கை மடிந்து இறுகி ஓம் என்பது போல முகம் கூர்ந்திருப்பான். அழிவுகளும் கொடுமைகளும் சொல்லப்படும் பொழுதுகளில் விழி மூடி ஊழ்கத்திலென ஒவ்வொரு சொல்லும் உருகும் தீயென அவனுள் பொழிவதென தேகம் இறுக்கி அமர்ந்திருப்பான். அக்கணம் அவன் அமைதி நிகரில்லாத ஒன்றை அவனுள் நிகழ்த்தியபடியிருக்கிறது என எண்ணுவார் உகும்பர். பல்லாயிரம் ஊழிகள் எரிதீயில் வெம்மையென அவன் நிகழ்ந்தான்.

TAGS
Share This