116: நீர்க்கொடி
மானுடர் அடையும் சிறுமைகளும் அவமதிப்புகளும் எண்ணவியலாத விசையை அரிதான சிலருக்கு அளிக்கின்றன. ஒன்றில் அவர்கள் கனிந்து நிறைவடைபவர்களாகவும் இல்லையேல் கனன்று பேரழிவின் ஊற்றுகளாகவும் மாறுவார்கள். ஒரு மானுடர் இன்னொரு மானுடரைச் சிறுமை செய்வதை இளையோர் களியெனவும் மூத்தோர் அச்சத்துடனும் நோக்குவது அதன் பொருட்டே. எண்திசைத் தோளன் படை நீங்கி விலகிய பின்னர் அவனது போர்க்கள வெற்றிகள் தூசியின் மேல் தூசிகள் படிவதென பின்னணைந்தன. எளிதாக்கப்பட்டன. அவனது வில்லும் வாளும் வென்றெடுத்த களங்கள் இளைய புலி வீரர்கள் விளையாடும் பயிற்சி ஆட்டங்கள் என உரைக்கப்பட்டன. கூத்துகளில் அவன் பாத்திரம் மங்கி மறையலாயிற்று. பாணர்கள் நாவுகள் முதலில் வேடிக்கையாவும் பின்னர் சொல்லின் மடிப்பில் இன்னொரு சொல்லென்றும் பிறகு மெளனத்திற்குள் இன்னொரு மெளனமென்றும் மறதிக்குள் நுண்ணிய மறதியென்றும் மறந்தார்கள். எவரேனும் மூத்தவர் ஒரு சொல்லில் அவனைத் தொட்டெடுத்து விட்டால் யாழின் தந்திகள் இசை பிசகின. வேய்குழல்கள் இடறின. இளைய பாணர்கள் சொல்கோர்க்கத் தயங்கினர். முதியவர்கள் அடுத்து எழும் சொல்லிற்கெனக் காத்திருந்து பின்னர் அடையும் மெளனத்தில் ஒரு பெருமூச்சை ஈன்றனர்.
வாகை சூடன் புலரி முதலே எண்திசைத் தோளனின் நினைவுகளால் நிரம்பிக் கொண்டிருந்தான். ஏழிசைக் கூத்தரை துயிலால் எழுப்பி தோளனைப் பற்றிப் பாடச் சொல்லிக் கேட்க விழைந்தான். பின்னர் அவரின் துயிலில் அவர் ஆறட்டுமென தீயிலைத் துதியை மூட்டிக் கொண்டு பெய்துகொண்டிருந்த இளமழையை நோக்கியிருந்தான். எவ்வளவு மென்னமையாக சிறு நீரூசிகள் போல வீழத் தொடங்கினாலும் ஒன்றின் பின் ஒன்று திரண்டு வெள்ளமென ஓடத் தொடங்கிய நீரை நோக்கியிருந்தான். சிறியவை அளவால் தம்மை முழுமை செய்து கொள்கின்றன. எத்தனை சிறிய நஞ்சாயினும் பல்லாயிரம் முறை கொட்டப்பட்ட பின்னர் பெருங்கடல்களையும் அதனால் திரைய வைக்க ஒண்ணும். அவமதிக்கப்படும் ஒருவன் ஆயிரம் கரவு வழிகளால் தான் அவமதிக்கப்பட்ட மேடையில் நுழைந்து கொண்டிருக்கிறான். வென்று அமையும் வரை அவன் நிறைவு கொள்ளப் போவதில்லை. அவன் என்பது மெய்யான அவன் மட்டுமல்ல. அவனென மண்ணில் நிகழ்ந்த அனைவரின் வழியும் அவன் வந்து கொண்டிருக்கிறான். அவனது இழப்பு வஞ்சத்தின் மூலமோ நிகர் வெற்றியின் எடையினாலோ நிகர் வைக்கப்படும். அனைத்துக் கருமத்துக்கும் ஒருவர் எங்கேயோ எடையைச் சமன் செய்தாக வேண்டியிருக்கிறது. அல்லது எதுவோ சமன் செய்து கொள்கிறது.
அந்தியில் கூத்திற்கென வந்திருந்த மீன்பாடும் பட்டினத்தின் இளையவர்கள் வாகை சூடனின் மனைக்கு அருகில் வண்டில்களை ஒருக்கிவிட்டு சத்திரத்தில் பூசலிடும் ஒலிகள் கேட்டுக் கொண்டிருந்தன. வாகை சூடன் எழுந்து தலைமுழுகி மேனியைத் துடைத்து விட்டு எளிய துவைத்து உலர்ந்த ஆடையை அணிந்து கொண்டான். செம்மை கலந்த இரத்தினத்தின் ஒளிவீசும் பட்டாடையின் மெல்லிய சுருக்கங்களை நீவிக் கொண்டான். முகத்தை ஆடியில் நோக்கி நுதலில் மெல்லிய ஒளி கூடியிருப்பதைக் கண்டான். தாடியை ஒருக்கி ஒற்றைக் கரத்தால் குழலைக் கிளறிக் குலைத்துப் பின்னால் உதறிக் கோர்த்து விட்டு தனது மொழிக்கையை பட்டாடைக்குள் வாளென ஒழித்துக் கொண்டான். ஆடியில் தன்னைத் தான் நோக்கிய போது இளமை இன்னும் முடிய முன்னரே அகம் முதிர்ந்து கிழவனாகிவிட்டேன் என எண்ணிச் சிரித்துக் கொண்டான். அவன் மனையிலிருந்து வெளியேறும் வரை மனை அணிப்பெட்டி போல அமைதியாக இருந்தது. அவனது காலடிகள் புறவாயிலைக் கடந்ததும் அணிபெட்டி மலையிலிருந்து விழுந்தோடுவதென மனைக்குள்ளிருந்து ஒலிகள் எழுந்தன. ஏழிசைக் கூத்தரின் மேலே கரடியின் தோலால் ஆக்கப்பட்ட போர்வையை போர்த்திய வாகைசூடன் அவரை ஒருகணம் கரடியென்று எண்ணி அதற்கும் சிரித்த பின்னர் இளமழையில் நனைந்து கொண்டு பாடுமீன் பட்டினத்தின் கூத்தர்களை நோக்கி வர விரைந்தான்.
அவன் செல்லச் செல்ல கால்கள் விரைவு தளரத் தொடங்கின. அங்கிருக்கும் எவருக்கும் தன்னைத் தெரியாது. தன்னைத் தெரியாவிட்டாலும் பரவாயில்லை. எண்திசைத் தோளனைத் தெரியவில்லை எனச் சொன்னால் மனம் காந்திவிடும். துயர் எவ்வளவு பெருகினாலும் பெருகியே தீருவேன் நிறையவே மாட்டேன் என அடங் கொண்ட உணர்ச்சி. இன்று அதன் பீடத்திற்கு மீண்டுமொருமுறை சென்று கொண்டிருப்பதாக உணர்ந்தான். செம்மண் வீதியில் நீர் பெருகி தளதளத்து வழிந்து மண்வண்ணத்தில் ஓடியது. காகங்களும் நிலக்கிளிகளும் நாகணவாய்களும் அங்கங்கு எதிர்ப்பட்டன. காகங்கள் இளமழை வெள்ளத்தில் குளித்துக் கரைந்து கொண்டிருந்தன. அவற்றின் தலைச்சிறகுகள் முண்மாவின் முட்கள் போல எழுந்து நின்றன. சில உதறிக் கொண்டன. சில இறக்கைகளுக்குள் அலகைக் கோதி கொத்திக் கொண்டிருந்தன. தேங்கிய சிறு வெள்ள மண்கரைசல் குளங்களில் ஆடிடும் குழவிகள் என எண்ணிக் கொண்டு சத்திரத்தின் திண்ணையில் சென்றமர்ந்தான் வாகை சூடன்.
இளம் பாணன் சாலினியைத் துரத்திக் கொண்டு ஓடிவந்து காகங்கள் குளித்துக் கொண்டிருந்த சேற்று நீர்க் குளத்தில் வண்டிச் சகடம் ஓடுவது போல உருண்டு விழுந்து எழுந்து ஓடினான். சாலினி விரைந்து ஓடி திண்ணையில் தாவி வாகை சூடனின் முதுகின் பின் ஒழிந்து கொண்டாள். வாகை சூடன் அவளைத் தன் முதுகில் முளைத்த சிறகை நோக்குபவனெனத் திரும்பித் திரும்பி நோக்க அவனது பார்வைக்குள் அவள் ஒழிந்து கொண்டு குளிர் குட்டி விரல்களால் அவன் முதுகில் தொட்டுத் தொட்டு நீங்க வாகை சூடனின் மேனியில் மெய்ப்புல்கள் எழுந்தன. இளம் பாணன் வாகை சூடனை நோக்காது சாலினியை அழைத்துக் கொண்டே திண்ணையில் ஏறினான். சாலினி பாயும் சிறுமுயலென வாகை சூடனுக்கு அப்பால் நகர அனிச்சையாய் வாகை சூடனின் வெட்டுண்ட மொழிக்கரம் அவளைத் தொட பட்டாடைக்குள்ளிருந்து வெளிவந்தது. காற்றில் விரல்களின்றி அறியாத ஒரு விலங்கென எண்ணித் தயங்கி உடம்புடன் சேர்ந்து கொண்டது. இளம் பாணன் வாகை சூடனின் கரத்தை நோக்கிய பின்னர் “தாங்கள் போர் வீரரா அண்ணா” என்றான். வாகை சூடன் அவன் முகத்தை நோக்கிய பின்னர் சாலினியை நோக்கினான். அவள் திண்ணைக் கூரையால் துமித்துக் கொண்டிருந்த நீர்க்கொடியொன்றை அளைந்து கொண்டிருந்தாள். ஒவ்வொரு துமியும் எவ்வளவு கால இடைவெளியில் திண்ணையில் விழுகிறதெனக் கணித்து அதற்கு ஏற்றபடி கையில் ஏந்திக் கொள்ளும் விளையாட்டை ஆடத் தொடங்கினாள்.
இளம் பாணன் அவனது மெளனத்தைக் கண்டு மெல்லிய தயக்கத்துடன் அருகமர்ந்தான். வாகை சூடனின் உறுமா மேனியில் வடுக்களும் அம்புகளால் வரையப்பட்ட நரம்புகளும் அவனை நோக்கி எவராவது அக்கேள்வியை கேட்க முடியுமா என்பது போலத் தோன்றியது. தயங்கிய இளம் பாணன் “மன்னித்துக் கொள்ளுங்கள் வீரரே. நான் அயலகன். பாரதத்தின் தென்னகத்திலிருந்து வருகிறேன். பாணர் குடியைச் சேர்ந்தவன். வேறுகாடாரின் நண்பன்” என்றான். வேறுகாடாரின் பெயரைக் கேட்ட வாகை சூடன் இளம் பாணனைத் திரும்பவும் முகம் தூக்கி நோக்கினான். “உங்களிற்கு ஆயுள் பலமிருந்தால் அந்த முதுநாகத்தின் நஞ்சிலிருந்து பிழைப்பீர்கள்” என்றான் வாகை சூடன். இளம் பாணன் வேறுகாடார் இவர் வாழ்க்கையிலும் எதையோ கெடுத்து வைத்திருக்கிறார் என எண்ணிக் கொண்டு உரையாடலின் பாய்மரத்தை திருப்ப எண்ணி “நான் உங்களது பட்டினத்திற்கு வந்து இருநளாகின்றது. இனிய குடிகள். அரிய விழவு. மாபெரும் அரசர். நீங்கள் நற்காலத்தில் வாழக் கிடைத்தவர்கள்” என்றான். அச்சொற்களால் சினம் கொண்ட வாகை சூடன் “இருதினங்களில் இக்குடிகளை அறிந்து விட்டீர்களா பாணரே. இவர்கள் பாதாளம் பிளந்து விழுங்கப்படும் நாளைக் காணவே நான் இன்னும் உயிர் தரித்திருக்கிறேன்”என்றான்.
இளம் பாணன் தனது குழலைக் கோதி தலையில் ஒட்டியிருந்த ஈரத்தை நோக்கினான். உள்ளங்கைகளில் நீரீரம் பரவிக் குளிர்ந்தது. தான் அகப்படக் கூடாதவரிடம் அகப்பட்டு விட்டோமோ என எண்ணியவன் பிறகு தன்னை ஒருக்கிக் கொண்டு “மானுட நோக்குகள் ஒன்று இன்னொன்றைப் போல் அமைவதேயில்லை. அதுவே இயற்கை. நான் எளிய நாடோடி. பெரும் பற்றுகள் இல்லாதவன். எக்குடியும் அழியும் வண்ணம் சாபமிடத் துணியாதவன். உங்களின் சொற்கள் இத்தனை வஞ்சத்துடன் ஒலிப்பதைப் போல வேறு சிலர் உரைப்பதையும் கேட்டிருக்கிறேன்” ஒருகணம் சொல்வதை நிறுத்தி அவனை விழி நோக்கிக் கொண்டே அவனைச் சாட்டையால் அடிக்கும் எண்ணத்துடன் அடுத்த சொற்களைக் கவனமாகப் பிடித்தான். “உங்களைப் போலவே எனது நண்பர் வேறுகாடாரும் இத்தகைய வஞ்சத்தைக் குடிகளின் மேலே சொன்னார்” என்று சொல்லிய பின்னர் வாகை சூடனின் முகத்தை நோக்கினான். அவனது முகம் காந்தலுடன் எரியும் நெய்யற்ற திரியென விம்மி விம்மிச் சுடர்ந்தது.
வாகை சூடன் எழுந்து விலக எண்ணியும் பின்னர் அங்கேயே அமர்ந்து கொண்டான். சாலினி ஓடி வந்து தன் ஈரம் பட்ட கையால் வாகை சூடனின் மொழிக்கரத்தில் தொட்டாள். இங்கே விரல்கள் முளைக்குக என ஆணையிடும் குழந்தை தெய்வத்தைப் போல. ஒருகணம் இளம் பாணன் இதழ்களில் புன்னகை விரிய வாகை சூடனை நோக்கிய பின் “இவளும் பாதாளம் பிளந்து நரகு செல்ல வேண்டுமா வீரரே” என்றான். வாகை சூடன் சாலினியை நோக்கினான். அவள் மீண்டும் நீர்க்கொடி பற்றியாடச் சென்று விட்டாள். அவளது சிறு கேசம் குலைந்து தோள்களில் படிந்திருந்தது. பூவுக்குத் துணியாடை சுற்றியது போல அவளது மேனியில் ஆடை பந்தம் போல சுற்றப்பட்டிருந்தது. அவளது மெலிகால்களும் விரல்களும் துள்ளிக் கொண்டேயிருந்தன. வாகை சூடன் ஒருகணம் நோக்கிய பின்னர் “இல்லை பாணரே. இவள் இங்கேயே இருக்கட்டும்” எனச் சொல்லிச் சிரித்தான். இளம் பாணன் புன்னகை மாறாமல் “மானுடர் காலங்களைச் சபிக்கலாம். வாழ்க்கையைக் கசந்து கொள்ளலாம். ஆனால் மெய்யாகவே குழந்தைகளைச் சபிக்கும் நாவொன்று மண்ணில் பிறக்க முடியுமா. அவர்களை நரகுக்கு அனுப்பச் சொல்ல எந்தக் கொடூரனுக்கும் அகம் எழுமா. இந்த விந்தையைத் தான் புலரி முதல் எண்ணிக் கொண்டிருக்கிறேன் வீரரே. எதனால் மானுடர் குழவிகளை இத்தனை அரிய பீடத்தில் அமர்த்துகிறோம்.
எளியவை. போதம் அறியாதவை. விலங்குக் குட்டிகள் போல தம் உள்ளுணர்வால் வாழ்க்கையை எதிர்கொள்பவை. ஒவ்வொன்றையும் கற்றுக் கொள்பவை. ஒரு நாய்க்குட்டி எவருமில்லாமல் வேட்டை பழகுவதைப் போல. தன் அகத்தை பளிங்குக் கல் போல ஒளிர்ப்பவை. அறங்களற்றவை. கற்றுக் கொண்ட அறங்களிற்காய் முழுது நின்று வாதிடுபவை. பசியும் தாகமும் கொண்டவை. அழுபவை. சிரிப்பவை. எரிச்சல் கொண்டு தொல் தெய்வங்களைச் சபிப்பவை. வளர்ந்தோரை இளங்கன்றென முட்டி மோதுபவை. இனியவை. குரலில் சிறகுகளும் மலைத்தேனும் கொண்டவை. நடையில் வாத்துகளும் கோழிகளும் நாரைகளும் மான்களும் கரடிகளும் மந்திகளும் ஒவ்வொரு பறவையும் விலங்கும் தோன்றி மறைபவை. மலர் போல முகங்கள் கொண்டவை. இலைத்துளிர் போல விரல்கள் கொண்டவை. ஓவியங்கள் போல வசீகரம் கொண்டவை. அற்புதங்கள் போல மண்ணில் திகழ்பவை. எதனால் மானுடர் இத்தனை குழப்பமான குட்டிகளாக மண்ணில் தோன்றுகிறார்கள். பின்னர் விழைவும் இச்சையும் பெருகி மண்ணைக் குருதியாலும் வஞ்சங்களாலும் பகைகளாலும் சிறுமைகளாலும் நிறைத்துக் கொள்கிறார்கள். தோன்றும் பொழுதே முழுமை கொண்ட தெய்வங்கள் மடியும் பொழுது தீமை முற்றி மாய்வது என்ன வகையான புதிர். குருத்தின் மீது வஞ்சங் கொளாது வீழும் சருகோலைகள் அரிதானவை” என்றான் இளம் பாணன்.
“இளையவரே. உங்களின் நோக்கு செயல்களுக்கும் கடந்த காலங்களுக்கும் அப்பாலிருந்து இயங்குகிறது. அவை அத்தகைய இளகிய எளிய உணர்ச்சிகரங்களால் ஆனவை. நோக்குக. இக்குடியின் மறவர் படைகள் வருங்காலக் குழந்தைகளின் வாழ்க்கைக்கெனத் தொடங்கி அவர்களுக்கெனக் கருக்கட்டி உண்டாக்கிய படை குழந்தைகளின் தந்தையரையும் தாய்களையும் கொன்றொழித்தது. தமக்கையரையும் தமையன்களையும் சிறைக்கைதிகள் ஆக்கியது. முதுதாதைகளை சொல்லற்று அமர்த்தியது. அதிகாரம் மானுடரை நுண்கிருமிகளென வீழ்த்துகிறது. அதுவே மானுடர் எதிர்கொள்ள வேண்டிய மெய்ப்போர். அதிகாரம் இளமழையில் மெல்லிதாகிச் சுரந்து சாலை வெள்ளங்களாகி ஓடைகளில் நிரம்பி ஆறுகளில் பெருகி நீர்ப்பெருக்காகுவது போல அடுக்கடுக்காக அதிகாரமும் மமதையும் இணைச் சோதரரென மானுடரில் கூடுகின்றது. நாம் நம்மை அறியாமலேயே அதன் பீடத்தில் அமர்ந்தே சொல்லெடுக்கிறோம். அரசனுக்கு அரியணை போல. பாணருக்குச் சொல்லவை போல. வீரருக்கு வெல்லப்பட்ட எதிரியின் தலைமை யானையின் சிரசு போல. நாம் அங்கிருந்து நோக்குவது மமதையின் போதைப் புகையிலேயே. மெய்யினால் அறியப்படும் போதைகளில் தலையாயது ஒருவர் இன்னொருவரில் செலுத்தக் கூடிய அதிகாரத்தின் போதையே. அதையே போர் என்கிறோம். அதையே காமம் என்கிறோம்.
குழந்தைகள் இதற்கு எதிர்த் திசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். அவர்களால் ஒரு போரை. ஒரு காமத்தை. ஒரு கொலையை. ஒரு வெறியை எண்ணவே இயலாது. அவர்களுக்கு அளிக்கப்பட்டவை பசியும் தாகமும் விளையாட்டும் களியும். அவை ஒவ்வொன்றும் தன்னை விழைவினால் பெருக்கிக் கொண்டு மானுடர் என குழவி வளர்கையில் அதனுள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு அளவில் வளர்ந்து நிற்கிறது. எது எவ்வளவில் பருத்திருக்கிறதோ அவ்வளவில் அவரின் ஊழ் அமைகிறது. இக்குழந்தைகள் காணும் போது அதிசயங்கள். வளரும் பொழுது இவர்களே நாம் தினமும் வசையுடன் எண்ணிக் கொள்ளும் எளிய குடிகள்” என்றான் வாகை சூடன். அவன் நீளமாகச் சொல்லெடுக்கையில் அதில் ஓர் இசைமை கூடியிருப்பதையும் அவனுள் கசப்பு கருங்கல்லில் பாசியென வளர்ந்திருப்பதையும் நோக்கினான் இளம் பாணன்.
வெள்ளம் திண்ணைகளைக் கடந்து ஒழிந்து கால்வாய்களில் கலந்தது. பட்டினத்தின் மேனியின் உருவை அப்பொழுதே பிறிதொரு திக்கில் நின்று நோக்கினான் இளம் பாணன். நீர் வடிகால்கள் கற்சாலைகளையும் செம்மண் வீதிகளையும் மேவிக் கொண்டு மண்ணுறை பிலவுகள் போல எங்கென்று அறியாது இருந்த உள் நீர்த்தடங்கள் வழி திறந்து கொண்டு சுழிக்கும் நீரை அள்ளிக் குடித்தன. பட்டினம் நீரால் மெல்ல மெல்லக் கழுவப்பட்டு புதிய நறுமணங்கள் எழுந்து பரவத் தொடங்கின. அடுமனைகளிலும் அன்ன சத்திரங்களிலிருந்தும் மதிய வேளைக்கான உணவுகளைத் தயாரிக்கும் ஒலிகளும் கிழங்குகள் வேகும் மணமும் எழுந்து பரவின. கலங்கள் உரசுமொலிகள் மழைக்காற்றில் பற்களைக் கூச வைத்தன. திண்ணைக்குத் திண்ணை மூண்டிருந்த தீயிலைத் துதிகள் ஊதிய புகையால் மயக்குண்டதென காற்று வீசி வீசி ஆர்த்து ஒவ்வொன்றிலும் மோதிக் கொண்டு விழுந்தெழுந்தது. மழைக்கு மதுவருந்திய பாகர்களும் வண்டிலோட்டிகளும் விறலிகளும் பாணர்களும் மதுச்சாலைகளுக்குள் பூசலிடும் ஒலிகள் பறவைகள் யுத்தம் புரிவது போல ஒலித்தது. யாழின் தந்திகளின் மேலே குழந்தைகள் ஓடி ஒலியெழுவதைப் போல சத்தங்கள் காற்றில் குலைந்தன. காகங்களும் நாகணவாய்களும் பேசிக் கொண்டன. மானுடக் குரல்கள் பல்லாயிரமாய் ஒலியெழுப்பும் பொழுது பிறக்கும் பொருளின்மையின் அமைதியில் திண்ணையில் சாய்ந்து கொண்டான் வாகை சூடன். இளம் பாணன் சாலினியின் உள்ளங்கையில் விழுந்த நீர்த்துளி அவளின் புறங்கையால் ஓடி நிலத்தில் சிந்தி நீர்ப்பெருக்கில் கலக்க விரைந்து கொண்டிருப்பதை நோக்கினான். சாலினியின் முகத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது நீர் சேர விழைந்த அகத்தின் தவிப்பு. தவிக்கும் குழந்தையே விண்ணேறும் நீர்க்கொடி என எண்ணினான் இளம் பாணன். பிறகு வாகை சூடனை நோக்கி அவனது மேனியை தனக்குள் சொற்களால் வரைந்து கொண்டிருந்தான்.