119: சிலைப் புன்னகை

119: சிலைப் புன்னகை

தானென்பவள் பலிகொள்ளும் தெய்வம் என்பது போல சாய்மஞ்சத்தில் அமர்ந்து தீயிலையின் வெண்நரைப் புகைச்சுருள்களை ஊதிக் கொண்டிருந்தாள் விருபாசிகை. உதட்டில் ஈரலிப்பின் தகதகப்பு மினுங்கியது. செவ்வட்டையின் மயக்கு தேகத்தில் மழைநீரென.

பொன்னன் முத்தினியின் குழலை இருபுரியாக்கி பின்னிக் கொண்டிருந்தான். அவளது தேகம் அவன் முன் ஊழ்கத்திலென அமைந்திருந்தது. காலை உணவின் பின் தேகம் மீண்டும் முழுமை கொண்டு நிறைவு பெற்றிருப்பதை ஒவ்வொருவரும் எண்ணிக் கொண்டனர். எவ்வளவு பசித்திருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உண்ணும் போது சொல்லின்றி விழியசைவுகளால் பரிமாறிக் கொண்டனர். சுட்ட கிழங்குகளும் அப்பங்களும் மஞ்சத்தறையில் நிறைந்து கமழ்ந்தது. வயிற்றில் முதல் உணவுத் துண்டு விழுந்த போது மயக்கின் மாயத் திரை விலக்கி அனைத்தையும் உண்ணும் வயிறெனும் தீ எரிந்து நா நீட்டி உண்ணத் தொடங்கியது. வயிற்றில் உணவு ஓடுவதை பொன்னன் நோக்கி நகைத்தான். முத்தினி என்னவென விழியால் கேட்க. இல்லையெனத் தலையசைத்து வயிற்றைப் பார்த்தான். குறும்பான குழவியின் மூக்குச் சுருக்கு விளையாட்டைக் காட்டிய முத்தினி மேலுமொரு கடி அப்பத்தை உண்டாள். சுடுபாலில் கரைந்த பனங்கட்டி அமிர்தமென நாவில் பரவியது. சுவை நரம்புகள் ஒவ்வொன்றும் புலன்வாய் நீட்டி ஒவ்வொரு பரு உணவையும் பாலையும் விழுங்கின. வயிறு நிறைந்த பின்னரே புவியில் அனைத்தும் ஒளிகொள்கின்றன என்ற குடிச்சொல்லை வாய்க்குள் சொல்லிக் கொண்டான் பொன்னன்.

நெடுநாழிகையாகப் பெய்து கொண்டிருந்த இளமழை இக்கணம் தான் துவங்கியது என்பது போல அளவு மாற்றமின்றி தூவிக்கொண்டிருந்தது. குளிர் நீண்ட நேரம் அமைந்த பொழுதுகளால் மேனிகள் அனலடங்கி வயிற்றின் கடைசி நெருப்பு எழுந்த போது உண்ணத் தொடங்கியிருந்தனர். உண்டி முடிந்த பின்னர் இனிய சோர்வொன்று ஆழ்த்தியது. மஞ்சங்களில் சிறுதுயில் கொண்டனர். பொன்னன் இக்கணங்களை பொழுதழிக்க விழையாமல் ஒவ்வொன்றையும் விழிகளால் தொட்டளைந்து கொண்டிருந்தான். முத்தினியின் துயில் கோலம் புலரியில் கண்டதற்கும் இப்பொழுதுக்கும் எத்தனை தொலைவுகள் கடந்து எவ்வளவு அறிந்தவள் ஆகிவிட்டாள். செழியையின் கூந்தல் மணம் தன் நாசியிலேயே தங்கி விட்டதை நோக்கி சிரித்துக் கொண்டான். விருபாசிகை துயிலும் அழகில் குழந்தைகள் தோற்றுவிடும் என நெஞ்சுக்குள் சொல்லிக் கொண்டான். மூன்று பேருடல்கள். அதே கணம் மூன்று மெய்யழகுகள். முப்புரி ஆறு. தேவியொருத்தியின் முப்புரிக் கூந்தல். ஆதிசிவன் எரித்த முப்புரங்களும். மூன்று கூர்முனை விழிகள் கொண்ட சூலம். மூன்று தெய்வங்கள். மூன்று செயல்கள். மூன்று நன்மைகள். மூன்று இனிமைகள். மூன்று இளங் கனவுகள். அவன் சொற்களால் தன்னை வருடிக் கொண்டிருந்தான். யானையின் குஞ்சி மயிரென விருபாசிகையின் நெற்றியில் சுருண்ட சில கீற்றுக் கூந்தலிழைகளைக் காற்று விலத்தி விலத்தி அமர்த்தியது. எவர் விளையாடிக் கொண்டிருக்கும் பாவை அவள் என எண்ணினான் பொன்னன்.

விருபாசிகையே முதலில் விழித்தாள். விழித்த போது அம்மருள் இருளில் விழிகள் இரு கூர்கருங் குருவிகள் எனச் சிறகடித்தன. அவன் இமைப்புக்குள் இமைப்பெனச் சிறகடித்துத் துடித்தான். அவள் உதட்டில் ஏந்திய சிறு புன்னகை அவனைத் தழலாக்கியது. முத்தினி எழுந்த போது அவர்களுக்கிடையில் விரிந்திருந்த நோக்கு விசையில் துடித்துப் பறக்கும் செண்பகமென கரங்களை விரித்து பொன்னனை அணைத்துக் கொண்டாள். பொன்னனின் கன்னத்தில் முத்தமிட்டு “சிற்பியே. என் கூந்தல் இழைகளை உங்களால் சிலையென்றாக்க இயலுமா” என்றாள். பொன்னன் சிரித்துக் கொண்டே “அங்கனமே தேவி” என்றான். கூந்தலின் இருபுரிகளையும் மலர்மாலை கோர்ப்பவரின் நோக்கா விழியுடன் விரல் புரியும் நடனம் கொண்டு பின்னிக் கொண்டிருந்த பொன்னன் மான்கொம்பு போன்ற சிற்ப நெளிவுகளும் செதுக்குகளும் கொண்ட தீயிலைத் துதி மேல் காய்ந்து நறுமணம் வீசும் தேவ இலை மலர்களை கசக்கி அடுக்கும் விரல்களின் நடனத்துடன் தனது விரல்கள் இணை நடனம் புரிகிறதென எண்ணினான்.

விருபாசிகை இமை தழைத்து புகை ஊதுகையில் அனலுக்கு முன் புகையென அவள் தோன்றினாள். கற்சிலைகளில் குங்கிலியப் புகை பரவி விரிவதென தீயிலை அவளில் மலர்ந்து அவளை புகையாற்றியது. அவளது மேலாடையும் இடையாடையும் இளஞ் செவ்வண்ணம் கொண்டிருந்தது. புத்தாடையின் புதுவாசனை அவளில் பரவியது. கூந்தல்களில் பூசியிருந்த கத்தூரியின் இன்மணம் தேவருலகென அவனை எண்ணச் செய்தது. புவியில் தான் எத்தனை நூறு இன்பங்கள். இதுநாள் வரையில் சிற்பக் கூடங்களிலும் கல்விச் சாலையிலும் கிடந்து பயின்ற அனைத்தும் அளித்தது அறிவிற்கு இன்பமென்றே எண்ணியிருந்தான். அறியா இளமையில் முதிரா மனங் கொள்ளும் அறிதலின்பம். ஒவ்வொன்றையும் சொல்லென்றாக்கி மனத்திருத்துகையில் எழும் ஆணவத்தின் தெய்வம். அதுவே இளையோரை முதலில் எடுத்துக் கொள்வது. சிரசை உடைக்காமல் குருதி சிந்தாமல் அது அகல்வதில்லை. பெண் அந்த சிரசை உடைத்துக் கொள்ளும் பலிபீடம்.

விருபாசிகையோ மூன்று பலிபீடங்களின் மேல் வீற்றிருக்கும் பெருங்கொற்றவை என அமர்ந்திருந்தாள். அவளை எண்ணிய போது அகம் சொற்களால் ஒன்றை ஒன்று முட்டி மோதிக்கொள்ளும் காளைகளின் போரென ஆகுவதை எண்ணி வியந்து கொண்டான். அவன் அவளை நோக்கிய முதற் கணம் அவள் அமர்ந்திருந்தது இச்சையின் பீடத்தில் என எண்ணியிருந்தான். அதற்கெனத் தலையைக் கொடுத்தால் தன்னை அளிக்கும் தெய்வம் என எண்ணியிருந்தான். பின்னர் அவளுடன் சொல்லாடுகையில் அறிவின் பீடத்தில் சொற்களை அவியாக்கி யாகத்தை முழுதுநிறைத்தால் சொல்லின்றி அவளிடம் அமையலாம் என எண்ணினான். இப்பொழுதோ அவள் அனைத்துக்கும் மேலேயும் அனைத்துக்கும் உள்ளேயும் அனலெனவும் விழைவுச் சுனையெனவும் நின்றிருக்கும் அகங்காரத்தின் மேல் பீடமிட்டு அமர்ந்திருக்கும் பெருங்கொற்றவை. இப்போது அவள் கொள்ளப் போவது முழுமுற்றான பலியன்றிப் பிறிதில்லை. ஒரு சொட்டும் மிச்சமற்ற குருதி கேட்பவள். நிழல் நுனியும் எஞ்சலின்றிப் பணிய வேண்டியவள்.

அவள் அங்கே சொல்லின்றித் தன் இமை வாள்களுடன் அமர்ந்திருக்கும் சிம்மம். அவளை அவன் நோக்கினான். பிறிதொரு காலத்தில். பிறிதொரு தாமரைக் குளத்தில். வெண் தாமரைகள் சூடியிருந்த பின்னந்திப் பொழுதில். வானம் சூட்டிகையெனக் கன்னம் சிவந்திருக்க. நாரைக் கூட்டங்கள் பல்லாயிரமாய்ச் சிறகுகள் கூர்ந்து விரித்து ஒலியெழிப்பி மிதக்க. முழுச்சூரியன் பொலி குங்குமச் சாந்தென ஆகாயத்தில் அமிழ. விருபாசிகை குளத்தின் நடுவே லிங்கமென எழுந்த கரும்பாறையின் உச்சியின் மேலே ககனத்தின் நீலஒளியில் விழிசாற்றி அணைந்திருந்தாள்.

அவன் ஒவ்வொரு தாமரை இலைகளும் அசைந்து படிவதை நோக்கினான். நீரில் இலைத்தலைகள் ஒற்றியெழுந்தன. அதன் மேல் சின்ன நீர்த்துளிகள் படிகக் கற்களைக் கொட்டிய வயலென விளைந்திருந்தன. வெண் தாமரைகளின் வண்ணம் விழிகளுக்குக் கூசியது. பின்னர் விழிகளென்றாகியது. ஒவ்வொன்றும் கூம்பும் இருகரங்களென வான் நோக்கி உயர்ந்திருந்தன. சிலவை தாழ்ந்து வளைந்திருந்தன. சிற்சிறு வண்டுகள் ரீங்கரித்து நுண்ணிதின் இசைப்பரப்பில் மிதந்து கொண்டிருந்தன. விருபாசிகை எழுந்து நின்று இருகரங்களையும் அகலித்து காற்றை சுவாசித்தாள். நெஞ்சு நிறைந்து கொள்ள களி கொண்ட சிறுமியென மெல்லக் குதியிட்டாள். நாணினாள். கருஞ்சிலையொன்று காலெடுத்து ஆடுவதை நோக்கியவன். தாமரைகளின் கூம்பு நுனிகளில் கால் வைத்து நடந்தான். அவை ஒவ்வொன்றும் மலரிதழ் முத்தமொன்றை உள்ளங் கால்களில் அருளின. நாரைகளின் குழைவொலி காற்றை நுரைக்கச் செய்து ஊதியது. அங்கிருந்து நுரையில் ஒட்டிய சிறுபஞ்சு இறகென அவன் உச்சிக்குச் சென்று நிலைத்தான்.

விருபாசிகையின் உதடுகள் விரிந்தபடியிருக்க இமைகள் தெறிக்கும் தங்க அட்டியலின் விழிச்சுடர்மணியென ஒளிவீசியது. இரு கறுத்த இரத்தினக் கற்களென அவற்றை அவன் நோக்கினான். அவளில் சிற்பங்களின் எழில் கூடுவது எங்கனெ அவன் அகம் துழாவியது. இளங்களிற்றின் துதியென நுனியில் புலன்கள் விரிய அவளது மேனியை அரிந்தான். தொல்மரங்களின் அடிக்கருமை கொண்ட தேகம். மெழுகுக் கருமை. கூந்தலின் நிலையழகு மரச்சிற்பத்தில் வளர்ந்த சிறுபூவேர்களின் கொத்துக்களென நீண்டிருந்தன. விருபாசிகை நாரையின் குழை குரலில் சொல்லெடுத்தாள். தன் அவியைத் தானே கேட்கும் தெய்வமென.

“சிற்பியே. இச்சையின் அருகை நீங்கள் அடைந்து கடந்தீர்கள். சொல்லில் அமைதி கொண்டு அறிவினை அகன்றீர்கள். எஞ்சியிருப்பது இளையவர்கள் சூடிக் கொள்ளும் வெற்றாணவம். பெண் என்பவள் ஆள்தலின் பொருட்டு நித்திய விழைவு கொண்ட பெருவேட்கை. அதன் முன் நீங்கள் அறிய வேண்டியவை உள. அவற்றை நீங்கள் தலை கொடுத்தே அறிய முடியும். சொல் கொண்டு சிரசை அறுத்து அமைக. சொல்க. எதன் பொருட்டு முற்றழிந்து என் முன் கிடப்பதாய் தோற்றங்காட்டும் உங்களின் மெய்யகம். தன் கரவு வழியொன்றைக்கு என்றைக்குமெனத் திறந்திருக்கிறது. ஆண் எனும் ஓட்டைக் கலயத்தில் நிரம்பத் தவிக்கும் பெண் முடிவிலாது பெருகிக் கொண்டேயிருப்பது அக்கலயம் நிறையாதென்பதால். அது பிழை கொண்டதென்பதால். அது பிறிது என உணர ஒண்ணாத போத மயக்கால். நான் அதை அறிவேன். அதற்கு அப்பால் வழிவதும் நானே என உணர்ந்தவள். மேனிகளின் தவம் எரிவதாலேயே நிகழ்கிறது. அகங்கள் பிறிதொரு யோகத்தின் வழியே மெய்மையை அறிய முடியும். நான் கனன்று பிறந்த கேள்வி. என் கேள்விகளை நீங்கள் செவி கூர்ந்து அகம் திறக்க வேண்டும். உரைப்பது பொய்யென அறியுங் கணம் இக்கனவு மாயும்” என்றாள்.

பொன்னன் தன்னுள் ஒடுங்கி தன் இருளில் ஊர்ந்து அமர்ந்து கொண்டான். “வினவுக” என்ற சொல் அவன் அகத்திலிருந்து நேராய் ஒலித்தது.

“சிற்பியே. ஆணின் காமம் என்பது எது” என்றாள் விருபாசிகை. அவளது உதடுகள் பிரியாது அச்சொற்கள் காற்றில் ஒலித்தன. தற்செயல் கணமொன்றில் ஊழ்கம் கண்டவனென அவன் அவ் வினாவை நாவில் படர விட்டான். எளிய அம்பு போன்ற முனை கொண்ட கேள்விகள் ஆபத்தானவை. ஆண் என்பவன் வினாக்களை அஞ்சும் விலங்கு. பெண் என்பவள் கேள்விகளின் தெய்வம். இந்த முரண் ஓயாத ஆடலை ஒருகணம் இமை கூர்ந்து நோக்கிய பொன்னனது அகம் புன்னகையிலென விரிந்தது.

“ஆணிடம் காமம் தானே அஞ்சும் தன் தீதெய்வமென உக்கிரமானது. தானே ஒழிக்கமுடியாத தனது மூததையென வேர் கொண்டது. அவனது கனவுகள் தீமையால் வளர்க்கப்பட்டவை. பொதுநெறியை யாக்கும் அவன் கரங்கள் நடுங்குவது அதன் பொருட்டே. ஒவ்வொரு சொல்லுக்கும் அவன் அஞ்சுகிறான். பிறக்கும் பொழுதே உண்ணப்பட்டுக் கொண்டிருப்பவனைப் போல அவன் அறங்களை உச்சரிக்கிறான். அவனது மெய்யறம் இன்னும் பிறிது. அதை அவனால் கட்டுப்படுத்த இயலாது என்பதே அவன் அஞ்சக் காரணம். அதை அவன் அவளைக் கொண்டு வெல்ல விழைந்தான். தானில்லாத பிறிதொன்று. தான் அஞ்சுவதை எளிய குழவியென அச்சமின்றியும் நடுக்கமின்றியும் அவையுரைக்க இயல்வது. அதுவே பெண். பெண் விழைவதை அளிப்பது எளிது. இயல்வது. இருப்பது. பெண் இருப்பவற்றாள் ஆனவள். ஆண் நேரெதிர் துருவத்தில் பனிமலைகளில் வாழும் வெண்கரடிகள். அவை கனவில் ஆழ்பவை. இயல்பாலேயே அடங்காதவை. கட்டுறாதவை. ஆண் விழைவதை அளிப்பது கடிது. இயல்வதல்ல. இருப்பதல்ல அது. அதை நிலைநாட்டுவது கனவை மண்ணில் மாயங் கொண்டு ஆற்றுவது போன்றது. ஆகவே பெண் எப்பொழுதும் வெல்கிறாள். அவள் சொல்லே முடிவாகிறது. அச்சொல்லை நிலை நிறுத்தும் பொருட்டே மண்ணில் கலைகள் பொலிகின்றன. ஆணெனும் ஆதியிருட்டில் விழுந்து பற்றிய காட்டெரி பெண். அவளை அவன் எக்கணமும் வெல்ல அனுமதிக்க இயலாது. அவன் சிரசு அடங்காமையில் நின்றிருக்க வேண்டும். அதுவே ஆண். ஆணின் காமம் நிகரற்ற கனவு கொள்வது. அதை அறியும் பெண் அதைப் பெருக்கும் பெண் அவனை வெல்கிறாள். அவன் சிரசின் மீது குதியிட்டு எழுகிறாள்.

நான் சொல்கிறேன். ஆணை வெல்ல ஒரு போதும் பெண் விழைதல் கூடாது. ஆணும் அவ்வாறே. இங்கு வெல்லப்பட வேண்டியதும் ஈட்டப்படத் தக்கதும் மகிழ்ச்சி ஒன்றே. அறமுள்ள மகிழ்ச்சி. அறமற்ற மகிழ்ச்சி எனத் துவிதங்கள் ஏதுமில்லை. விழைவுக்கு இட்ட சங்கிலிகள் நெரியும் குமைவிலும் அதற்கு அப்பால் எவரோ அக்கனவை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். புவி எல்லையற்றது. மானுடர் கருணையவற்றவர். பொதுநெறி என்பது காப்பின் பொருட்டே. அதற்கு மேல் அதற்குப் பொருளென எதுவுமில்லை. ஆணின் ஆழிருள் போல இருண்டது புடவியில் வேறொன்றில்லை. அதை எங்கனமும் விளக்க இயலாது. சாரமாக ஆண்களை போதமின்மை கொண்ட விழைவின் பேரிருட் குழவிகள் என வகுக்கலாம்” என்றான்.

விருபாசிகையின் வதனம் மாலைச் சூரிய ஒளியில் கரும்பேரொளி கொண்டு துலங்கியது. தாமரை இலைகளின் நீர்த்துளிகள் ஒவ்வொன்றிலும் அவளுருக்கள் நீந்தின. காலமின்மையின் அதிர்கணத்தில் கையில் வீணையேந்தினாள். பித்தனின் கனவென பொன்னன் நிலையழிந்தான். சிறகுகள் அவனை அள்ளிக் கொள்ள காற்றில் ஏகினான். எய்யப்பட்ட அம்பென.

விருபாசிகை வீணையின் தந்திகளில் இலைத்தழைப்பைக் காற்றென வருடினாள். அவளது அகம் அவளை அவளே தொட்டுக் கொள்ள அளிக்கப்பட்ட மெய்யுருவென வீணை நாதமிசைத்தது. நாரைகள் குனிந்து குளவெளியை நோக்கின. அருகு மரங்களில் கொக்குகள் கொத்துக்காடாய்ப் பூத்துப் பொலிந்தன. கொக்குகளின் வடிவில் அங்கே வானத்தின் செவிகள் கூர்ந்திருந்தன. இசைக்கும் ஒவ்வொரு தந்திக்கும் சொல்லை எழுப்பும் குரலிருந்தது. “பொன்னா” என விளித்தது வீணை.

மெய்யில் அதிர்வொன்று பட்டு இனிய நறுமணம் எழுந்ததைப் போல அவன் மெய்ப்புக் கொண்டான். அக்குரல் கற்பூர மலையொன்றைத் மோதியணைத்த சிறுதீச் சுடரென பற்றிக் கொண்டது. தழலின் குரலில் வீணை வினவியது. “பொன்னா. ஆணுக்குக் காதலென்பது எது”.

சிறகுகளின் படபடப்பு நீங்கி விண்ணிலிருந்து இறங்கும் நாரையின் கூர்மையுடன் அவன் குரல் ஒலிக்கத் தொடங்கியது. கொக்குகள் ஒவ்வொன்றும் கழுத்தை உயர்த்தி அலகை விரித்து ஓம் என ஒலித்தன. அங்கனமே ஆணொருவன் தன் இருளை மெய்மேனியுடன் அளிக்கும் சடங்கை அவை துவங்கின. “அறிக. சூர்ப்பனகையே. ஆணின் காதல் மானுட நன்மை. ஆண் காதலற்று நிகழ்ந்திருந்தால் மானுடம் என்றோ அழிந்திருக்கும். ஆண் மானுடத்தின் போர்க்கவசமென அணியப்பட்டவன். பெண் அதன் சதை தோல் உடம்பென ஆக்கப்பட்டவள். கருவால் அது வெம்மையை நாடியது. அனலால் ஆண் குளிரை நாடுகிறான். இங்கு அனைத்தையும் துவிதமெனக் கீறாய்க் கிழிப்பது இவ்விலகலே. சிற்பமும் நிழலும் போல அவை எப்போதும் இரண்டு. ஒன்றென்று உரைக்கும் ஒவ்வொரு தத்துவமும் இணையும் புள்ளிகளால் அனைத்தையும் ஒருக்க முனைபவை. வாழ்க்கையோ விலகும் புள்ளிகளால் அழகு கொள்வது. ஒன்றின்மையே அழகெனப்படும். பிரம்மம் என வேதங்கள் உரைப்பது ஒன்றல்ல. பலநூறு ஆயிரம் வண்ணங்களின் ஓவியத் திரையில் கோடி கோடி சித்திரங்களின் பெருவிரிவே பிரம்மம் எனப்படுவது.

ஒரு சிற்பி தன் தத்துவத்தை ஒன்றில் வகுக்க முடியாது. நெருப்பின் நிழலை நோக்கியறிய இயலுமா. மானுட வண்ணங்களின் கொண்டாட்டம் மூலங்களில் சாரத்தை வகுத்துக் கொள்கின்றன. ஆணின் காதல் அச்சாரத்தினை பொதுநன்மையின் பொருட்டு அவியாக்கும் வேள்வி. காதலின்றிக் காமம் கூடாதென நெறிகள் தோன்றியது முதலே மானுடத்தின் நிலைகொண்ட வாழ்க்கையில் சமூகங்கள் உண்டாகின. ஒருவகையில் காதலே குடிகளின் மைய விசையை இழுத்திருக்கும் மாய ஊழ். காதலெனும் பீப்பாய்க்குள் காமம் எனும் மது ஊற்றப்பட்டு தொல் கடற்கரையில் புதைக்கப்பட்டிருக்கிறது. காதல் பழையதாக ஆக ஆக அது மதிப்புடன் எழுந்து வரும். நுண்மையாகும். விரியும். தன்னைத் தான் பெருக்கிக் கொள்ளும்.

ஆணிடம் பெண் கொள்ளும் காதலே இந்த முரணை ஊன்றியிருக்கும் நிலம். இருட்டையும் ஒளியையும் போல கலக்க ஒண்ணாத துவிதங்கள் ஒன்றை ஒன்று நிரப்பிக் கொள்வதால் புடவி நிறங் கொள்வதைப் போல காதலால் மானுட வாழ்வு தழைக்கிறது. காதல் விந்தையான உணர்ச்சி. அன்பென்று சுட்டுவது தருக்கத்தின் படி சுயநலனற்றது. உயர்ந்தது. ஆனால் காதல் கீழ்மையானது. தன்னைத் தான் சார்ந்தது. ஆகவே அது ஆணைத் தேர்கிறது. ஆண் தன்னைவிழையும் பித்தன். பெண் அவனை விழையும் பித்தி. இரண்டு பித்துகள் எப்போதும் புவிக்குண்டு” என்றான்.

வீணை திவலைக் கரங்களால் வாசிக்கப்படுவது போல நுண்மையாக ஒலித்தது. அவனது குரலின் பின்னே சாமரம் விசுறுவதைப் போல அவ்வொலி ஒன்றியிருந்தது. விருபாசிகை விழிதிறந்து அவனை நோக்கினாள். “நீங்கள் வெல்லும் சொல்லையே தேர்கிறீர்கள். இக்களத்தில் தருக்கி வெல்வது எளிது. ஆனால் வென்றமைவது கடினம். நான் உங்களைக் கேட்கிறேன். பெண் விழைவது எங்கனம் பிழையென்றாகியது. அவளின் குரலில் சொல்லப்படும் கதையில் ஆணின் இருளே ஒழிக்கப்பட வேண்டியது. அவளது உள்ளுணர்வை ஐயுறத் தேவையில்லை. அவள் ஒரு புவியை ஆக்குகிறாள். ஆண் பிறிதொன்றை. இதில் எது மிகச் சரியானது என்பதை எவர் வகுப்பது” என்றாள் விருபாசிகை.

குளத்தில் பட்டதிர்ந்த மென்காற்றின் ஆடைத்தழைப்புகள் குழலை மோதி பொன்னனை உந்தின. பொன்னன் மெய்ப்புல்கள் எழ விழியெறிந்து புன்னகைத்தான். சிறுவனின் கூச்சல் குரலில் பாவ “இது பாம்பு பற்றியிருக்கும் தன் வால் தேவி. இதை நீங்கள் விழுங்கவும் முடியாது. விடவும் இயலாது. இது இங்கனமே நீடிக்கும். நான் எண்ணுவது தன்னறத்தை மட்டுமே. தன்னறமே பொதுப்பேரறத்தை விட மேலானது. அதுவே நூலோர் சொல்லும். ஆய்பவர் அறியும் எண்ணமது. மானுடர் என்றைக்கும் இங்கனமே உழல இயலாது என ஒவ்வொருவரும் கனவு காண்கின்றனர். ஆனால் அதுவே இந்தச் சிற்பத்தின் நுண்மை. அது எத்தனை பெரிய பாறையை பல்லாயிரம் புடைப்புகளால் உண்டாக்கிக் கொண்டே செல்வதைப் போல. கணமொழியாது கற்பனை கொண்ட ஒருவராலேயே இத்தனை மாபெரும் கதைகளைச் செதுக்க இயலும். சிலபொழுது அங்கனமும் இல்லாமல் போகலாம். பல்லாயிரம் துணிக்கைகளின் பெருநடனம் இந்த இருப்பென்று ஆகுதல் கூடுமா.

ஏன் இருக்கக் கூடாது. அணு உடைபடாத இடத்தில் அது பாறை. அணுவை உடைத்து அணுவை யாத்து சிற்பமென்று மாறும் பாறையின் தொல்வடிவே இக்கேள்விகள். மானுடம் இக்கேள்விகளை ஒவ்வொரு கணமும் எதிர்கொண்டாலும் புரவியில் செல்கையில் எதிர்காற்றுக்கு முகமென நீட்டியபடி முன்சென்றே ஆகவேண்டும்.

பெண் விழைவதே புடவியின் நெறிகள் என்பதே மெய். பெண்ணே யாத்து பெண்ணே காத்து பெண்ணே அழிப்பதே நெறிகள் என்றறிக. ஆண்கள் அதன் காவல் வீரர்கள் மட்டுமே. அங்கனமே புவியின் வரலாறு ஒழுகிக் கொண்டிருக்கிறது. ஒருநாள் ஆணும் பெண்ணும் விழைவகன்று போகலாம். ஆயினும் சிலையில் செதுக்கிய புன்னகையெனப் பெண்ணின் நெறியே என்றைக்கும் ஆளும். ஆண் அதன் கரவுலகைச் சேர்ந்தவன். அதுவும் ஓர் அழகே” என்றான் பொன்னன். கொக்குகள் வெண்சிறகுகளை விரித்து விசிறிக் கொண்டு மீண்டும் ஒடுங்கும் வரை ககனத்தின் ஒளிப்பெருக்கு செங்குழம்பில் இளங் கையென உருமாறிக் கொண்டிருந்ததை நோக்கியிருந்தாள் விருபாசிகை. குளிரலான காற்று அவளை விழுங்கிக் கொண்டிருந்தது. மேனியில் சிலிர்க்கும் கூச்சத்தை அனலாக்கிக் கொண்டாள். கதகதப்பான வெம்மையொன்று அவள் செவிகளில் ஓடியது.

TAGS
Share This