120: சிலைப் புன்னகை : 02

120: சிலைப் புன்னகை : 02

விருபாசிகையிலிருந்து எழுந்த நறுமணத்தின் தீந்தீற்றலொன்று வளியை நிறைத்து கனவில் பெய்து நாசி நுழைந்தது. வாசனையென்பது மானுடரை ஆழ இழுத்துக் கொள்ளும் விந்தை என எண்ணினான் பொன்னன். அம்மயக்கு வாசனை அவனைக் கேள்விகளின்றி அவளை நோக்கச் செய்தது. நோக்கில் அவள் எளிய அருள் கொண்டிருந்தாள். விழைவும் விலகலும் அற்ற சக இருப்பென நீடித்தாள். காற்றை உந்தி வெளியில் அந்தரத்தில் மிதக்கும் யட்சியொருத்தியென எழுந்தாள். மேனியின் அழகு கூர்ந்து வதனம் என்றாகி நின்றாள். அவனை நோக்குந்தோறும் அவள் அகன்று நின்று நோக்குக் கொண்டிருப்பதை பொன்னன் உணர்ந்து விழியொன்றினான். காலம் தோறும் ஒருத்தியை ஒருவன் அங்கனமே நோக்குகிறான். ஒருத்தியும் அவனை அங்கனமே நோக்குகிறாள் என எண்ணிக் கொண்டான்.

அவள் அந்தர வெளியிலிருந்து நீருள் என வானிருந்து இறங்கினாள். அவள் நீரைத் தொட்டு உள்ளிறங்க முன்னிருந்த ஒவ்வொரு நொடியும் பொன்னனின் அகம் அவள் செல்லும் பாதாளங்களுக்கும் உடன் நுழைவேனென நோற்புக் கூடியது. அவளின்றிப் பிறிதொருத்தி மண் நிகழப் போவதில்லை எனப் பற்றிக் கொண்டது. கழல்கள் நீரில் மூழ்கிய போது நீர் பனியாகி உறையத் தொடங்கியது. பொன்னன் அது கனவென்பதை ஒழிந்து நெஞ்சு விம்ம அவளை நோக்கி அன்னையைச் சிறுகுழவியெனக் கரங்களை நீட்டிக் காற்றில் நீந்தினான். சிறகுகள் அவனைப் பின்னே பின்னே என இழுத்துக் கொண்டன. சிறகுகளை உதறி வெறுங்கரங்களுடன் அவள் புதையுமிடத்தில் தொலைந்து விடத் தவிப்புக் கொண்டு வேட்டை மிருகத்தின் வாயில் அலறித் துடிக்கும் புறாவென அடித்துக் கொண்டான்.

அவள் இடை வளைவு நீரில் மறைந்த போது உருகிய பனிமலையொன்றில் எழுந்து நிற்கும் உமையெனத் தோன்றினாள். விழிகளில் மாறா நோக்குப் புன்னகையெனப் பொருளளித்தது. கொக்குகள் பெருமரங்களில் துயில்வன போல அமர்ந்திருந்தன. காற்றில் மூச்சடைக்கும் ஓசையின்மை பரவியது. ஒலிகள் அகன்றன. பொன்னன் தன் அகத்தில் எரியும் அனலின் ஒலியைக் கேட்டான். அதைச் சிறகுகளென எண்ணிக் கொண்ட போது அவனது மெய்ச்சிறகுகள் பற்றிக் கொண்டு அழற் சிறகுள் ஆகின. தீச்சுவாலைகள் படர்க படர்க என விரிந்தெழுந்தன. பொன்னனின் தேகம் தீயினில் நெய்யென உருகியது. பின்னர் தானே தீயென வியந்தது. நெருங்குந் தோறும் சிறகுகளால் காற்றை விசிறினான். பனிக்குளம் வியர்ப்பது போல நீர்மணிகள் உருண்டன. வெண்தாமரைகளில் அவன் அனற் துளிகள் பெய்து அவை கற்பூர மலர்களெனப் பற்றின. ஒவ்வொன்றும் கூம்பிய இதழ்கள் விரிந்தன. பல்லாயிரம் தீத்தாமரைகள் மானுடரில் காதல் நுழைவது போல எது தொட்டு என அறியாது பரவின.

அவள் கூந்தலின் ஈறிலை நீருள் அமிழ்ந்த போது குளம் முழுக்கப் பனியடர்ந்து இறுகியது. பொன்னன் மூச்சுத் திணறினான். கரங்களை வாள்களெனச் சுழற்றி பனிப்பாளங்களை வெட்ட எண்ணினான். பாறையில் தீவிரல்கள் காற்றென வருடுவதைக் கண்டு சினங் கொண்டான். அவள் வேண்டும். அவள் எனக்குத் தான் என தீவிழிகளால் தீநீரை உகுத்தான். உகுந்து விழுந்த முதற் தீநீர் பனிப்படலங்களைச் கதிரவன் ஒளியென விலக்கி எறிந்தது. காற்றில் அனலடங்கி அனற் குழம்பின் துளிகளென அவனுடலை உருக்கி அழுதான். ஆணின் கண்ணீர் மலைகளை உருக்கும் என்ற குடிச்சொல் அவனை அறியாது எங்கோ கேட்டுத் தொலைந்தது.

நீருள் நீரைப் பிரித்து நெடுங்காலம் பாலையில் வற்றிய கைப்பள்ள நீரில் வாழ்ந்த பெருங்கடலின் கனவு கொண்ட மீனொன்று மீண்டும் நீர்நுனி தொட்டதைப் போல அவன் கரங்கள் நீரைப் பிளந்தன. இருகரங்களும் மீன்செட்டைகள் ஆகின. முகம் ஒடுங்கி மீனென்றானான். கற்பாறையில் செதுக்கிய மீனெனத் தன்னை எண்ணிக் கொண்டான். பிறகு மூச்சை அடைந்தான். நீருள் பல கோடி வண்ணக் குழைவுகளில் வார்த்த கடலுயிரிகளைக் கண்டு திகைத்தான். மீன் கூட்டங்கள் அவள் மேனியென ஒருங்கி பின் காற்றூதிய குமிழியெனக் கலைந்தன. நீர்ப்பாசிகள் மேனியை வருடச் செதில்களைச் சிலிர்த்துக் கொண்டான். இரு மீன் விழிகளும் இருதிசைக்கும் திறந்திருந்தன.

விருபாசிகை குளத்தினடியில் இருளென மறைந்தாள். அவன் அகம் குளத்தின் ஆழத்து மணலில் முட்டி முட்டி மோதியது. மணல் கலைந்து பிசிறி அடங்கியது. ஒவ்வொரு பருவையும் தொட்டு அனைத்து நீரையும் அளைந்து பாசிகளை உண்டேனும் மீன்களையும் பேராமைகளையும் இறால்களையும் தவளைகளையும் கொன்றேனும் அவளை இங்கிருந்து மீட்பேனென எளிய மீன்குஞ்சென நீருள் அலைந்த பொன்னன் எண்ணிக் கொண்டான்.

முற்றுளம் பொருந்திய காதலி மறைவதைப் போல இளையவருக்குத் துயரளிக்கும் பிறிதொன்று உண்டா. முழுத்தனிமை சூழவிருக்கும் வருங்காலம் அவனை அழலாக்கி விம்மச் செய்தது. அவனது மீன்விழிகளிலிருந்து இருதுளிக் கண்ணீர் கசிந்து பரவிய போது நீரணுக்கள் துடிதுடித்து விரிந்தன. பல்லாயிரம் முரசொலிகள் வெடித்துப் பீறிடுவதைப் போல அத்துளிகள் நீரைப் பிளந்தன. அணுவிடை தொலைந்தவள் நீருள்ளிருந்து மானுட சொரூபியாகத் தோன்றினாள். எளிய கருமீன்குஞ்சென அலைத்து வழிதொலைந்து நின்றவனை இருகைகளால் அள்ளிக் கொண்டாள். அவளது இருப்பை அறிந்த அக்கணம் அவன் கல்லுடல் பிரிந்தது. செட்டைகள் கலைந்து குழவிக் கரங்கள் பிறந்தன. குழவி முகம் எழுந்தான். குழவிக் கால்கள் கொண்டு விருபாசிகையின் மார்பில் உதைந்தான். குழவியென்றானவனைக் கழுத்தில் அணைத்து நீர் மேல் நீந்தி எழுந்து வானை நோக்கியபடி மிதந்து கொண்டு அவனை மார்மேலே கிடத்தி அவன் குழந்தை முகத்தை நோக்கினாள்.

அவள் நோக்கு அவன் அதன் முன் நேர்கொண்டதல்ல. அவள் பிறிதொருத்தியென ஆகியிருந்தாள். பனிக்குடமெனத் தழைந்த குளத்தின் நீரலைகள் மேலே மீன்கள் பலவண்ண ஒளிப்பிழம்புகளின் சிறகுகள் கொண்டு மிதந்தபடி நோக்கின. கருங்கல் ஓடுகள் கொண்ட ஆமைகள் அவள் மேனியைக் கற்பாறைகளெனத் தாங்கின. கொக்குகள் அலகு நீட்டி நோக்கின. கரைமரங்களில் மந்திக் கூட்டங்கள் ஒலியெழுப்பிக் கூக்குரலிட்டன. சூரியன் அகன்று இருள் தேவி அணைத்துக் கொண்ட புவியில் மின்மினிகள் பேராரமெனக் கோடி கோடியாய் எழுந்து பச்சைப் பசும் சுடர்மணிகளைத் திறந்து உலகைக் காட்டின. பச்சை இருளில் அன்னையும் குழவியும் அங்கு அக்கணம் நோக்கிக் கொண்டனர்.

குழவியென்றாகி வாய் பிதுக்கி உவ்வே எனச் செய்த பொன்னனை நோக்கி மறுவாய் பிரட்டினாள் விருபாசிகை. “அன்னையே” என்றான் பொன்னன். அச்சொல் காற்றில் வேய்குழல் நெளிவென விருபாசிகையின் செவியில் ஊறி நுழைந்தது. ஒருகணம் அச்சொல் அவள் செவிகளை இனித்து நுழைந்தது. அவள் அவனை நோக்கினாள். அலை வளைவுகள் கொண்ட இளங் குழலை. இரு வண்ணத்துப்பூச்சிகளெனப் படபடத்துக் கொண்ட இமைகளை. பசும்பொன்னென இருளில் துலங்கிய அவன் மேனியை. இருபடிகக் கட்டிகளென விழிகள் கொண்ட அவன் நோக்கை. அவள் நோக்கினாள். என்ன என இமைகள் தூக்கினாள்.

“அன்னையே நான் விழைவது எதை. அன்னையென்று என் முன் தோன்றி நிற்கும் உங்களது மெய்யுருவையா. இனிமையென ஒலிக்கும் உங்கள் குரலையா. அழகு எனச் சொக்கும் உங்கள் வதனத்தையா. கனியமுதூட்டும் மார்புகளையா. நான் விழைவது காமத்தையா. கலையையா. கனவையா. வாழ்வெனும் பெரும் பொருளின்மையைப் பற்றிக் கொள்ளும் விரல் நுனிகளையா. எதை நான் விழைகிறேன் அன்னையே. நான் கலங்கிய குளம் போல நிற்கிறேன். என்னுள் கனவுகள் ஒலிக்கும் பாடல்களைக் கேட்கிறேன். துயில்களில் சோர்ந்துறங்கி விழிமயங்கிச் சாய்கிறேன். ஒவ்வொரு கணம் என்னைக் கடக்கும் பொழுது தீராத காதலின் பேருவகைக்கென மெய்கூர்ந்து கிடக்கிறேன். உங்கள் விழி நோக்கி நான் கேட்கிறேன். உங்களில் சுரக்கும் எது நான். நான் ஏன் உங்களை கடக்கவே இயலவில்லை. என்றும் பெண்ணென ஏன் நிகழ்கிறீர்கள். சொல்க அன்னையே” என்றான் பொன்னன்.

“அறிக மைந்தா. காதலா. களித்தோழா. அனைத்துமென்றாகி நான் சுமப்பது என்னையே. என் ஆணையே நான் பெற்றுக் கொள்கிறேன். ஒவ்வொரு பருவத்திலும் ஒவ்வொரு முத்தங்களாக அவர்களைத் தொடுகிறேன். குழவியில் தந்தையென்றும். காதலில் இணையென்றும். பேற்றில் மகவென்றும். நட்பில் தோழனென்றும் நான் என்னையே ஆக்கிக் கொள்கிறேன். நான் விழைவதை அன்றிப் பிறிதொன்றை நான் ஏற்பதில்லை. நான் அனுமதிக்காத ஆண் என்னைக் காதலிக்க ஒண்ணாது.

நான் என்னை அங்கனமே ஒவ்வொரு பெண்ணிலும் அமைத்து எழுகிறேன். தன்னைத் தந்தையென்று எண்ணாத ஆண்களே இளையவர்கள். தன்னை மகவென்று உணராத தந்தையரே பெருந்தொகை. தங்களை எதுவென்று ஆண் வகுத்துக் கொள்ளும் ஒவ்வொரு தருணத்திலும் அவன் காலம் பிந்துகிறான். என்றைக்கும் அவன் வற்றாத அன்பு மூக்குரசி மெய்சிலிர்த்து உள்ளுணர்ந்து அறிவது அன்னையையே. ஆகவே ஆண் அனைத்துப் பருவங்களிலும் அன்னையையே தேர்கிறான். பெறுவதால் அன்னை. இணை பிறப்பதால் சகோதரி எனும் அன்னை. தோழியென்றாகும் அன்னைகள். காதலியென்றாகும் அன்னைகள். சுற்றமும் சூழமும் என்று அன்னையரே ஒவ்வொரு திக்கிலும் எழுபவர்கள். அன்னையல்லாத பெண்ணே இல்லை.

ஆகவே மைந்தா. நீ என்னை விழைவது என் பொருட்டே. அச்சம் அகன்று என்னை நோக்குக. என் முன் நீ சிரசைக் கொடுப்பதில் தயக்கமென்ன. அஞ்ச வேண்டாம். நானே உன் கருப்பை. நானே உனது முலைப்பால். நானே உனக்கு உண்டியளித்தவள். நானே உன் காத்தல் தெய்வம். காப்பதையன்றிப் பிறிதெதுவும் அருளாத பேரன்னையே பெண். உன்னை ஒவ்வொரு இருளிலும் ஒளியென்றாகிக் காப்பது நானே. மடியிட்டு. தோள்தொட்டு. மார்பில் கிடத்தி நானே உன்னை வருடுபவள். ஓயாது என் விரல்கள் ஒவ்வொருத்தியிலும் முளைத்து வந்து உன்னைத் தொடுகின்றன. ஆகவே மகனே. என்னை நீ கடக்க வேண்டியதில்லை. நான் உன் தெய்வம். உனக்குக் குருதியளித்தவள். அதை நீ திருப்பியளிப்பதால் நிறைவடைவாய். உன் அகங்காரம் பணிய வேண்டிய பாதங்கள் நானே” என்றாள் விருபாசிகை. அவளது உதட்டில் எழுந்த நறுமணம் முலைப்பாலென மணந்தது. பொன்னன் சொக்கிய விழிகள் மயங்குவது போல் தோன்ற கனவில் குழவியென கைகளை ஆட்டி விரல்களால் பொன்னைத் தா பூவைத் தாவென ககனத்தை நோக்கி விரித்துக் கொண்டிருந்தான்.

பொன்னன் முத்தினியின் கூந்தலில் இறுதிப் புரி இழையையும் முடிந்த பின்னரும் நோக்ககலா விழியுடன் விருபாசிகையை நோக்கியிருந்தான். அவளது விழிகளின் நோக்கில் மின்னல் மலர்கள் அவிழ்ந்தன. பொன்னனது அகம் கூவல் கொண்டு எழுந்தது. இத்தனை ஆயிரம் களியுடல்கள் நின்றாடிய இரவில் என்னை ஏன் தேர்வு செய்தாய் என் தேவியே. நான் எதனால் தேர்வுகொண்டு உன் பெருங்கோயில் வாயிலில் அமர்ந்திருக்கிறேன். எண்ணிக் கொண்டே அவளருகில் சென்று அமர்ந்தான். அவள் அவனை நோக்கிப் புன்னகைத்தாள். கருமைக்கு ஒரு புன்னகையிருந்தால் அதுவே பேரழகிகள் சூடுவது என எண்ணினான். விருபாசிகை தீயிலைத் துதியை அவனிடம் நீட்டினாள். பொன்னன் வாங்கி இழுத்து நெஞ்சு நிறைந்து சொன்னான் அவளிடம் “தேவி நீ அணங்கு. பெருங்கோயில்களில் எழுந்து நிற்கும் மாதெய்வம். கனவுகள் எங்கிலும் சிறகடிக்கும் தேவதை. உன்னை அல்லால் பிறிதெவரை ஒருவன் அடைய ஒண்ணுமா. ஆனால் நான் உன்னை அடைந்தேன். உன்னால் அளிக்கப்பட்டவன் நான். என்னை உனக்கு அளிக்கிறேன். குழவியென்று முத்தமிடு. காதலனென்று மார்பறை. நோக்கால் கொல். அழகியென்றாடி என்னை அசைவிழக்கச் செய். உன் நோக்கில் கட்டியிழு. என்னைக் கைவிடு. நோக வை. திசையழி. பருவங்கள் தோறும் என்னைச் சூடிச் செல்வதாக உன்னைப் பற்றிய பாடல்களை நான் எங்கோ நாடோடியின் யாழில் இருந்தெழும் ஓசையில் கேட்டுக் கொள்கிறேன். நான் அறிவேன். இங்கனம் நீ நிகழ்ந்தது எதன் பொருட்டுமல்ல. நானும் உனக்கு ஒரு பொருட்டல்ல. ஆனால் இங்கு நீ திகழ்ந்தாய். ஆகவே மானுடம் நன்றியுடையதாகுக. உன்னைச் சரணடைவதால் நான் எரிவேன். கற்பூரப் புல்வெளிகளில் பேரெரியென” என்றான்.

விருபாசிகை இமை மறந்து விழிக்கருவூலம் மின்ன அமர்ந்திருந்தாள். இழுத்துப் புகையை மார்பில் பெருக்க எழுந்தவனை அணைத்து உதட்டைப் பிரித்து நாவால் தொட்டாள். அவள் முலைகள் குலுங்கியார்த்தன. எச்சில் அமுதத்தில் நனைந்து இன்மணங் கொண்டு தேகம் மலர்த்தியது. இளமழை காற்றை ஒருகணம் ஓங்கியறைந்து ஓம் என்றது. துகில்கள் சரிய பேரதானத்தில் விழும் ஒருபெருங் கூடல் இருபெரும் மத்தகங்கள் என முட்டிக் கொண்டன. உதடுகள் உண்ணும் இரு தெய்வங்கள் அவர்களில் எழுந்து போர்புரிந்தன. என்றைக்கும் அம்முத்தம் ஒரு கொல்தெய்வத்துக்குத் தன்னைப் பலியிட்டவனுக்கே அருளப்படுகிறது. ஓம். அவ்வாறே ஆகுக.

TAGS
Share This