125: மழைக்குயில்
சூர்ப்பனகர் தனது இல்லத்தின் மேல்முகப்பில் தாழ்வாக இடப்பட்டிருந்த மூங்கில் கழிகளாலான கூரையின் கீழ் நின்று பட்டினத்தை நோக்கிக் கொண்டிருந்தார். இளமழையின் புகைத்தூவிகள் அந்தரத்திலிருந்து மண்ணுக்கும் மரங்களுக்கும் பருப்பொருட்களனைத்துக்குமென வீழ்வதை தன் சிவப்பேறிய விழிகளால் துழாவினார். அவரது நடை பருத்த வயிற்றின் நடனத்திற்கெனக் கால்கள் கொண்டது போல அதையே சிரசென்று எண்ணியது போல வேடிக்கையூட்டியது. சூர்ப்பனகர் தனக்குத் தானே தற்பகடி சொல்லிச் சிரிப்பவர். அவை பிறருக்குக் கேட்டுவிடக் கூடாதென்ற கூருளம் கொண்டவரும் கூட. ஓரிருமுறை அவரது உதட்டில் அனிச்சையாய் எழுந்த பகடிகளை தமிழ்ச்செல்வன் மொழிபெயர்க்க முயல கையை அசைத்து அதை ஒழி எனச் சொல்லுவார்.
“நெடுங்காலம் அரசு சூழ்தல்களில் அமர்ந்திருப்பவர்கள் அனைத்தையும் வேடிக்கையொன்றாகக் காணும் விழிகள் பெற்றுவிடுவர்” என தமிழ்ச்செல்வன் ஒருமுறை சொல்லிய பொழுது அவனது தோளில் அறைந்து உரக்கச் சிரித்து “அரசு சூழ்தல்களின் பயனின்மையை அறிந்தவர்கள் பகடியின்றியே புன்னகை சூடுபவர்கள். உன்னைப் போலவே” என்றார் சூர்ப்பனகர். சூர்ப்பனகருக்கு நகைச்சுவை தேவ இலை மலர்கள் அளவுக்கு முக்கியமானது. இரண்டு நிகர் மயக்குகள் என விளிப்பார். இசையென்பது ஞானத்தின் மயக்கு. அங்கு சொல்லின்றி அமைகிறது ஊழ்கம். சூர்ப்பனகர் இளமழைக்கு ஒடுங்கியிருந்த காகங்களையும் நாகணவாய்ப் புட்களையும் செண்பகங்களையும் நோக்கினார். கருமை வண்ணங் கொண்ட குயில் அவரது இல்லத்தின் முகப்பில் நின்ற வேம்பில் அமர்ந்தபடி நனைந்து கொண்டிருந்தது. அதன் செவ்விழிகளை நோக்கிய போது சிறிது புன்னகை கொண்டார். தானும் ஒரு குயில். மழைக்காலத்தில் குயிலின் குரலெனக் குடிகளிடை சொற்பெருக்காடி வருகிறேன் என எண்ணினார். கோடையில் வற்றியுலர்ந்த காலங்களில் மன்றுகளை மேவி ஒற்றைக் கூவலென அவர் குரல் எழுந்து மயக்கும். குடிகள் மெய்மறந்து அவரின் சொல் நுட்பத்திலும் பகடிகளிலும் கூர் மதியிலும் விழிமயங்க நோக்குவர். அறிவு மயக்கென எழும் குரல் அவருடையது என்பான் நீலன்.
தமிழ்ச்செல்வன் புகழ் மொழிகள் சொல்பவன் இல்லை ஆயினும் சில அரிதான சொல்லிணைவுகளையும் தருக்கிச் சுருக்கி அம்பு நுனியென அவர் அளிக்கும் சொற்தொடர்களையும் கேட்டு அவனது இதழ்ப் புன்னகை ஒரு நுண்ணலகு மேலும் விரிவதைக் காண்பார். அது ஒரு ஒப்புதல் போல. பாராட்டுப் போல ஒலிக்கும். சூர்ப்பனகர் அனைத்தையும் சொற்களால் நிரை வகுத்து சொற்களை மோத வைத்து சொற்களின் குருதி பூசி அமலையாடி தூவெண் நிறங் கொண்ட அறப்பெரு மலரென எஞ்சுவதை கண்டடையக் கூடியவர். களம் காண்பதும் ஒன்றை மெய்யிலேயே உருவாக்குவதும் அவரது இயல்பல்ல. கற்பனையும் அறிவும் கொண்டவரின் ஊழில் அறமெனும் தெய்வமும் இணைந்து கொண்ட பின்னர் செயலாளிகளுக்கு உண்டான ஆற்றலை இழந்து விடுவர் என்பான் நீலன். நீலன் தன் காலத்தில் குடிகளை மீட்க வந்த தெய்வம் என்றே சூர்ப்பனகர் எண்ணினார். அந்த தெய்வத்தை சூடியாடி வாக்குரைத்து செல்வழி காட்டும் பூசாரியென்றே தன்னை எண்ணிக் கொண்டார். காலம் ஒழிந்து பருவங்கள் பெயர்ந்து இக்கணம் இங்கு இப்படித் திகழும் பொழுது தெய்வத்தை முழுதறிந்த பூசாரி எவனுமில்லை என தனக்குத் தானே சொல்லிக் கொண்டு நகைத்தார். இனி இக்குடிகளின் ஊழ் எனத் தன் கைகளை இளமழையில் கழுவிக் கொண்டார்.
அவருக்கு அணுக்க வீரனான சானுவை அருகழைத்து துதியை மூட்டும் வண்ணம் பணித்தார். தேர்ந்த கரங்களால் புடைக்கப்பட்ட குதிரைக் கொம்பு போன்ற துதியில் தேவ இலை மலர்களை அவன் எடுத்து அடுக்குவதை ஆடலுக்கு அணிபூணும் இளவிறலியை ஒளிந்திருந்து சிற்றிடை வெளியால் நோக்குவதென கூர்மையாக நோக்கியிருந்தார்.
சூர்ப்பனகர் தனது இருக்கையில் சாய்ந்து கொண்டே புலரியில் அவர் கேட்ட இசையை திரும்பவும் அகத்திற்குள் ஒலிக்கத் தொடங்கினார். அந்த இசையை வாசித்த விறலியின் விரல்கள் காதலனின் குழலை வருடுவது போல இடைவிடாது பின்னி நடந்தன. அது காதலின் இசையும் கூட. அவரது எண்ணம் திசையிழந்து தன் இளமைக்குத் திரும்புவதை நோக்கியிருக்க சானு அவரது இடக்கையில் மூண்டிருந்த தீயிலைத் துதியை பொருத்தினான். அவர் அதை வாங்கி வாயில் பொருதி ஒரே இழுப்பில் பல்லாயிரம் கணங்களுக்கெனப் பெருக்கி நெஞ்சு நிறைத்தார். புகை இருமலுடன் அள்ளியிறைத்த குப்பைகளில் காற்றென வீசி வெளிவந்தது. அவரது மேனியில் நடுக்கு எழுந்து மெல்லிய தாளங்களாகி அடங்குவதை நோக்கிக் கொண்டிருந்தான். விழிகளில் மென்னீர்க்கசிவு புரள வெண்பட்டு ஆடையால் அதைத் துடைத்துக் கொண்டார் சூர்ப்பனகர்.
சானு அவரையே நோக்கிக் கொண்டிருந்தான். தேகம் கரடியினுடையதைப் போன்று அகன்று உருவழிந்து கொண்டிருந்தது. விழிச்சிவப்பிலும் கைவிரல் சுழிப்புகளிலுமே அவரது மெய் உயிர் எஞ்சியிருக்கிறதென எண்ணினான். அவரது குழலின் நீளம் முதுகுவரை சுருட்டிக் கட்டப்பட்டிருந்தது. மெல்லிய பட்டாடைகளையே அவர் அணிவார். தன்னை ஒருக்குவதிலும் சிறு சிட்டிகை அழகு கூட்டுவதிலும் மாறா விருப்புக் கொண்டவர். சிலகணம் அவன் தன் இடம் மறந்து ஆடியில் தன் மீசைக்கு கருவண்ணம் குழைத்து மெல்லிய சாயமிடும் சூர்ப்பனகரை நோக்கியிருந்தால் அவனைக் கடுஞ்சொல் பேசி வெளியே அனுப்புவார். அரிதாக அதை ஒரு ஏற்பெனக் கருதி அரசு சூழ்பவனின் முதுமையைப் போலவே முதுமையில் கூரிடும் இளமையின் அம்சமும் முக்கியமானது சானு என்பார்.
சூர்ப்பனகர் தன் இளமை முதலே துடுக்கும் அறிவு நாட்டமும் கொண்டவர் என்பதை சானு அறிந்திருந்தாலும் அதேயளவு உலகியல் இச்சைகளும் கொண்டவர் என்பதை அவரது அணுக்கரான பின்னரேயே அறிந்து கொண்டான். அவர் சென்று திரும்பும் சில இல்லங்களை அவன் பகலில் அறிவதில்லை. அவரிடம் கொஞ்சும் அழகிகளை சூர்ப்பனகர் பகலில் அறிவதேயில்லை. இசையும் தீயலையும் கூட ஒரு மந்தணமாகவே குடிகளிடம் உலவியதே ஒழிய அவர் பகலில் சூரியன் எனவும் இருளில் அறியாத் தெய்வமெனவும் வாழ்வு கொண்டவர் என்பதை அவன் போன்ற சிலரே அறிந்து கொண்டனர். அது இயல்வதே என எண்ணவும் செய்தான் சானு. அவனது உடனிருப்பில் உள்ள நோக்கு தன்னைத் தானென அமைய ஒப்புகிறது என அறிந்த பின்னரேயே அவர் அவனைத் தன் அணுக்கனென ஆக்கிக் கொண்டார்.
சானுவின் மூத்த சகோதரர்கள் சூர்ப்பனகரும் நீலனும் கற்ற கல்விச் சாலைகளிலிருந்து இனிய பண்டமொன்றைக் கொண்டு வருபவர்களென அவர்கள் பற்றிய கதைகளை அவனிடம் சொல்லி வந்தனர். அவர்கள் வனங்களிலிருந்து தொல்கதைகளில் வரும் பெருவீரர்களென சூழ்கைகளை வகுத்து அரசை நிறுவி பெருங்கனவொன்றை மண் நிகழ்த்தவிருக்கிறார்கள் எனச் சொல்லினர். குடிகளிலிருந்து பேரரசெனன எழும் எவருக்கும் அமைய வேண்டியது சொல் சூழும் நுட்பரின் துணை. அது முதன்மைத் தெய்வங்களைப் போல்வது. ஒருவருக்கு அமையும் சுற்றமும் சூழமுமே அவர் எவரொன்றாக ஆகுவதையும் முற்றுறுதியாக்குகிறது. அவனது கடைசிச் சகோதரன் புலிகள் படையில் இணைந்த நாளை எண்ணினான் சானு. அதுவே அவன் நின்றிருக்கும் இக்கணத்தின் பாதையின் ஊழையும் அளித்தது.
*
நிசியிருளில் ஆநிரைகளில் குலுங்கலென மணியோசை கேட்டுக் கொண்டிருந்தது. சானுவின் இளைய தமையன் நீரன் பட்டிகளில் மாடுகளை அணைத்த பின்னர் தீப்பந்தங்களை ஒளிர வைத்து அருகிருந்த கருங்கற்பாறைகளில் அமர்ந்து கொண்டான். அவை சிறிய யானை முதுகுகள் போலத் தோன்றின. வனத்திலிருந்த எழுந்த காற்றில் அலையலையாத் தழைமணம் எழுந்தது. பட்டியிலிருந்து பசும்புல்லும் சாணியும் குழைந்த வாசனை இனியதென்று வீசியது. மனையின் பின்புறத்தில் அம்மா நட்டு வளர்த்த மல்லிகைக் கொடி இருகைகளாலும் மனையை அள்ளிப் பற்றுவது போல சடைத்து நீண்டு மலர்ந்திருந்தது. வானில் விண்மீன்கள் துளிப் புன்னகைகள் என ஒளிகொண்டிருந்தன. நீரன் சானுவிற்கு மட்டும் கேட்கும் குரலில் “இளையவனே. இன்று நான் செல்கிறேன்” என்றான். சானு அச்சொற்களின் பொருளை ஆழத்தில் உணர்ந்தாலும் நடுக்குக் கொண்டு “எங்கு” என்றான். அக்குரல் அவனில் எங்கிருந்து எழுந்தது என வியந்தான். அக்குரலின் ஒலி பிறிதெவருடையதோ போல ஒலித்தது. ஒவ்வொரு இளையவனுக்கும் அவன் மூத்தவன் வனக்கரைகளிலும் வண்டில்களின் இரைச்சல்களுக்கிடையிலும் இருளிலும் கல்விச் சாலைகளிலும் குளக்கரைகளிலும் வாவிக்கரைகளிலும் சொல்லியவை அதே சொற்கள். சொல்லிச் சொல்லி அச்சொற்கள் எதன் பொருளென ஒவ்வொரு இளையவரும் குடியில் அறிவார். அது ஒரு புறப்பாடு. அது ஒரு அழைப்பும் கூட. அது தொடர்ச்சிக்கென அளிக்கப்படும் ஒரு சரடுக் கோர்வை.
நீரன் அமைதியாக இருந்தான். அது சானுவிற்கு மேலும் அச்சத்தை ஊட்டியது. தேகம் குளிர்ந்தது. தோல் வியர்த்து கசகசக்கத் தொடங்கியது. கால்களின் விரல்களிலும் வியர்வையின் ஈரலிப்பை உணர்ந்தான். தன்னிடம் மட்டுமே சொல்லப்படும் மந்தணம் அதுவென்ற எண்ணம் சிறுவனான சானுவை இடிகளுக்கிடையில் மானென நடுங்கச் செய்தது. ஆனால் நீரன் விண்மீன்களை நோக்கியபடி கருங்கல்லில் சாய்ந்தான். கைகளிலிருந்த அழுக்கைத் துடைத்துக் கொண்டு தலையின் பின் புறம் கோர்த்துக் கொண்டான். மீளவும் குரலை ஒருக்கிக் கொண்டு “எங்கு செல்கிறீர்கள் மூத்தவரே” என்றான் சானு. அக்கேள்வி தேவையற்றது என்பது போல நீரன் வலக்கையால் ஒழி என்பது போலச் சைகை செய்தான். பிறகு அவனை நோக்கிய பின்னர் “ஒவ்வொரு இளையவரும் இன்று மனை நீங்கி எங்கு சென்று கொண்டிருக்கிறார்களோ அங்கு தான் நானும் செல்கிறேன் இளையவனே. ஒவ்வொரு மகனும் மகளும் அன்னையரிடம் விடைபெறாமல் செல்லுமிடம். தந்தையைரை அதன் பின்னர் விழிநோக்கிச் சொல்லெடுக்க முடியாத இடம். இளையவர்களையும் தோளர்களையும் மட்டும் மீளவும் இனிமையுடன் காணக்கூடிய இடம். எங்கள் மூத்தவர்கள் சென்ற இடம். அதோ எறிக்கின்றனவே விண்மீன்கள் அவற்றிடம் கூட விடைபெறாமல் செல்லுமிடம். வனக்குடிலுக்குச் செல்கிறேன். அதுவே என் அகம் ஒவ்வொரு கணமும் மீட்டிக் கொண்டிருந்த நினைவு. நான் வனத்திற்குரியவன் இளையவனே.
இன்று எங்கள் கல்விச்சாலைக்கு அருகிலிருக்கும் மன்றில் புலிகளின் அவையொன்று நிகழ்ந்தது. கடந்த பருவப் போர்களில் மாண்ட மாவீரர்களுக்கான நினைவாலயத்தை அகலிக்கும் பணிக்கென நிதி ஒதுக்கிடுதல் பற்றியும் புதிய வீரர்களை இணைத்துக் கொள்வதும் பேசப்பட்டன. நானும் எனது தோழர்கள் சிலரும் அங்கு சென்று இருக்கை இல்லாமல் சாளரங்களில் ஏறியமர்ந்து மன்றை நோக்கினோம். நம்பவொண்ணாத காட்சியொன்றை நான் கண்டேன் சானு. அதோ அம்மன்றின் நடுவே அமர்ந்திருந்தவர் நீலழகர். அவரது இடப்பக்கம் சூர்ப்பனகரும் வலப்பக்கம் தமிழ்ச்செல்வனும் அமர்ந்திருந்தார்கள். அமர்ந்திருந்த நீலழகரை நோக்கியே மன்றில் அனைத்து விழிகளும் ஊன்றியிருந்தன. பத்தியில் நீலஒளிகொண்ட நாகத்தை சிறுநாகங்களென கூட்டம் அவரை உற்றிருந்தது. கண்டேன் இளையவனே. எனது பெரியோனைக் கண்டேன். நோக்கிலேயே அவர் வசியம் கொண்டவரென்பது எவ்வளவு மெய்மை என்பதை நீயும் அறியும் நல்லூழ் வாய்ப்பதாக.
மன்றில் பலகுரல்களும் ஒலித்தெழுந்தன. மாவீரர்களைக் குடிகளுக்கு அளித்த குடும்பங்கள் தெருக்களில் வாடுகின்றன. அவர்களுக்கு அன்னமும் செல்வமும் திரட்டி மனை காத்து நின்றிருக்க வேண்டியவர்கள் விண்ணுக்கு ஏகினர். கைவிடப்பட்ட அன்னையரும் தந்தையரும் முதுமக்களும் இளம் மனைவிகளும் குழவிகளும் என்ன செய்வதென்று சொற்கள் பாய்ந்தெழுந்தன. அவருக்கு எதிராகக் குடிகள் நாவெழுப்பத் துணிவர் என்று
நான் எண்ணவேயில்லை இளையவனே. நீலழகர் முகத்தில் சலனமின்றி உவகையோ கசப்போ துயரோவின்றி அமர்ந்திருந்தார். அவரின் சொல்லின்மை நீண்டிருந்தது. மலைச்சிகரத்தில் தலை கொண்டிருக்கும் பாம்பொன்றின் வால் அம்மலையின் அடிவாரத்தில் வேர்நுனியெனத் தெரிவதைப் போல என எண்ணிக் கொண்டேன்.
சொற்கள் கோரிக்கைகளென எழுந்து பின்னர் கசப்பு ஊடிழையோடி அவநம்பிக்கையும் கூச்சலும் பொழிந்து இளிவரலென்றாகி தூற்றலென்றாகி ஓய்ந்தது. அத்தனை சொற்களையும் தன் மேல் அலையடிக்கும் கடலைக் கரையெனக் கேட்டிருந்தார் நீலழகர். அவரது முகம் இன்று பிறந்த இளங்குழவியின் ஒளி கொண்டிருந்தது. அத்தனை வசவுகளும் கடுஞ்சொற்களும் அவரை எரித்து ஒளிகொள்ளச் செய்தன என எண்ணினேன். இறுதியாக அன்னையொருத்தியின் குரல் சீறல் ஒலியுடன் எழுந்தது “எதற்கான இன்னும் பிள்ளைகளைக் கேட்கிறீர்கள். இந்த நிலம் முழுவதையும் நடுகற்களால் நிறைப்பதற்கா. எனது அடிவயிற்றின் அனல் உங்களிடம் மன்றாடுகிறது நீலரே. இக்கொடும்போரை நிறுத்துக. எங்கள் வயிறுகள் உலர்ந்து போய்விட்டன. மார்புகளில் காற்றே நிறைந்து பெருகுகிறது. என் மகவு. அய்யோ. அவன் இதழ் என் முலை தொட்ட அந்த நாள் இன்னும் இப்பொழுதென நினைவில் சுரக்கிறது. அவன் இன்று மாபெருங் கருங்கல்லில் ஒரு பெயர். அதில் என் முலைகளை மோதி குருதி பெருக்கிச் சொல்வேன். கோனே. நீ ஆளும் நிலத்தில் உனக்கு ஒரு பிடி மண்ணும் எஞ்சாது போக. நீ மடிந்ததன் பின் உனக்கு ஒற்றை நடுகல்லும் இம்மண்ணில் அமையாது ஒழிக” எனச் சொன்னவள் மூர்ச்சையடைந்து வெட்டுண்ட வாழைத் தண்டென விழுந்தாள். அனலில் பட்ட தளிர் முனையென அவள் விரல்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. மன்றில் ஒலித்த சிறுகுரல்களின் ஓசையும் ஒழிந்து காற்றுப் புகுந்த உலோகக் கலமென மன்று ஒலிகொண்டது. ஆடைகள் உரசியோ அணிகள் முட்டுண்டோ ஒலியெழும். எழுந்தால் பிறர் நோக்கு தம் மீது விழுந்தகலும் என அஞ்சிய கூட்டம் அசைவும் ஓசையுமின்றி நீலழகரை நோக்கியது.
நீலழகர் எழுந்து இருகரங் கூப்பி மன்றுக்கு வணக்கம் சொன்னார். அறியாமல் பலருடையதும் கரங்கள் குவிந்து அகன்றன. சூர்ப்பனகர் மன்றின் சாளரத்துக்கு வெளியே நோக்கியிருந்தார். தமிழ்ச்செல்வன் குடிகளை நேர்நோக்கியிருந்தார். அவரது முகத்தின் சலனமின்மை நீலழகரின் ஆடிப்பாவை போலத் தோன்றியது.
நீலழகர் தனது கரங்களை இருபுறமும் தொய்ய வைத்து தோளை நிமிர்தி மாறா நோக்குடன் குடியவையை சுற்றிலும் நோக்கினார். அவர் பார்வை தொட்டகன்ற தேகங்களில் விம்மலொன்று எழுந்தணைவது ஒலியெனவே கேட்டது. காற்றில் விசையொன்று ஏறி தந்திகளை மீட்டுவது போல. ஒவ்வொருவரின் முகமும் அவரை நோக்கியும் அவர் நோக்குத் தொட்ட பொழுது தாழ்ந்தும் அமைந்தன.
“குடிகளும் மன்றும் அறிக. நான் எளியவன் என்பதை எக்காணமும் நான் அறிவேன். அரசனென்றோ தெய்வமென்றோ உங்களுக்கு முன் நின்றிருப்பது நானல்ல. நான் எளிய பரதவக் குடியின் மகன். இந்த நிலத்தின் ஒவ்வொரு இளையவரையும் போல விடுதலை பெற்று வாழ விழைபவன். எளியவன் என்பதாலேயே என் விடுதலை மறுக்கப்படலாகாது. அதற்கு உரிமையற்றவன் என்று ஆகி விட மாட்டேன். எனக்கு விடுதலை பற்றியொரு கனவின் விதையிருந்தது. அதை நான் எனது நிலத்திலேயே ஊன்றினேன்” இடப்புறம் கையசத்து “கற்றோர் என் கனவைச் சொல்லென்றாக்கினர்” பிறகு வலப்புறம் கையசைத்து “தோழர்கள் அதை மெய்யென்று ஆக்கினர்” குடிகளை நோக்கிக் கைநீட்டி “குடிகளே அதைக் களம் வென்று நிலைநாட்டினர். இங்கு வென்றமைந்தது நீலழகன் என்ற எளிய பரதவக் குடி மகன் அல்ல. தமிழ்க்குடியின் விடுதலை என்ற பெருங்கனவு. எனக்கு என் கனவை அளித்தது நீங்களே. நீங்கள் கோரிய தெய்வமே நான் வணங்கி தலைகொடுத்து நின்றிருப்பது. நீங்கள் சொல்கொண்டு ஓயாது அழைத்த தெய்வமே என் தோள்களில் விசையென்று அமைந்தது.
அறிக. எனக்கு அமுதும் நீரும் ஊட்டியது உங்களின் மனைகளே. என் படைக்கென எழுந்த ஒவ்வொருவரும் என் உடன் பிறந்தோரே. ஒவ்வொரு பருக்கை அன்னமும் எங்கிருந்து வருகிறதென நான் அறியேன். ஆனால் உங்களின் மகவுகளின் முகங்களின் வழி உங்களை நான் பார்க்கிறேன். அவர்களைத் தொடும் பொழுது உங்களையே தொடுகிறேன். அன்னையரே. அறிக. நான் உங்கள் கருவில் உதித்த மகவுகளின் மெய்யுரு என்றே என்னை எண்ணிக் கொள்கிறேன். களங்களில் நின்று பல்லாயிரங் கைகள் கொண்டு போரிடுவது நானே. நானென்றால் என்னில் உறையும் அன்னைத் தெய்வங்களாகிய நீங்களே. என்னில் எழுந்தது நீங்களே. அன்னையரின் முலைப்பாலில் சுரக்காத எதுவாகவும் ஒருவர் ஆவதில்லை. என்னைப் பழியிடுக. வசவு சொல்க. தீச்சொல்லிட்டுப் பொசுக்குக. எஞ்சாது குலமொழியச் சாபமிடுக.
ஆனால் நான் என்றைக்கும் இருப்பேன் அன்னையரே. மன்றுகளிலோ திண்ணைச் சொல்லாடல்களிலோ அல்ல. தனித்து வான் நோக்கி நிசிகளில் நீங்கள் சிந்தும் விழிநீரை அறிந்தவன் நான். அன்னையரே. உங்களின் மகவென்று இம்மன்றின் முன் இருகரம் ஏந்தி யாசிக்கிறேன். என் பிழைகள் பொறுத்தருள்க. அன்னையரும் விலக்கி விட்ட குழந்தைக்கு ஆறுதலெனவும் நிலைத்திருக்கவும் எப்பிடிசுழியும் இல்லை. அதுவே மானுடர் அடையும் முற்றிலா நரகம். அதுவே எனக்காயினும் நான் இழைத்தவற்றின் பொருட்டு அதை ஏற்கிறேன்” எனச் சொல்லி இருகரத்தையும் தலைமேல் குவித்து வணங்கினான். விழிகளில் ஒரு கலக்கமும் இல்லா நோக்கு. எரியும் வெண்மையை நோக்கியிருக்கிறாயா இளையோனே. இன்று நான் கண்டேன். எரியும் தூய்மையின் பேரொளிக்கு நிகரென எதுவும் புடவியில் இல்லை. அதுவே நீலரின் இருவிழிகள்.
அவர் சொல்லுத்து மெல்ல அணைவது போல் சென்ற பின்னர் தொடர்ந்தார். அவர் பேசிக் கொண்டிருந்த பொழுது தீச்சொல்லிட்ட அன்னை மெல்ல எழுந்தாள். நடுவயது கூடியவள் போலிருந்தாள். அவளது தேகத்தில் நடுக்கு அப்பொழுதும் அடங்கியிருக்கவில்லை. அவளை நோக்காது குடியவையை நேர் நோக்கி நீலழகர் சொல்லுரைத்தார். ஒரு உச்சகணத்தில் “அறிக என் குடி. நான் இறப்பிற்கு அஞ்சி அரசனென்று இங்கிருப்பவனல்ல. கணம் தோறும் களத்திலும் எஞ்சும் துயில் கணங்களில் மடிந்த என் இளையோருடனும் ஆசிரியர்களுடனும் மூத்தோருடனுமே இருந்து கொண்டிருக்கிறேன். நான் கனவைக் காண்பவனில்லை. வாழ்பவன். இங்கு இக்கணம் சங்கறுத்து விழுந்தால் இங்கிருக்கும் ஓரன்னையாவது குளிர்வாள் என்றால் இக்கணமே உருகத்தை ஏந்தி என்னைக் கொல்க. அல்லது நானே என்னை அறுத்துக் கொள்கிறேன்” எனச் சொல்லி எண்ணியிராக் கணத்தில் வலக்கையில் இடையிலிருந்த உருகத்தை உருவிக் கழுத்தின் முன் நீட்டிக் கொண்டார். குடியவை அரண்டெழுந்தது. கூச்சல்கள் பேரலைகளென சுழன்று மன்று பித்தாடியது. சூர்ப்பனகர் மெல்ல எழுந்து நின்று நீலழகரை நோக்கினார். தமிழ்ச்செல்வன் நீலழகரின் அருகே சென்று குடியவையை நோக்கிய பின்னர் தன் உடைவாளில் கையூன்றி நின்றிருந்தார்.
சர்ப்பங்களிடையில் நடக்கும் புலியென தீச்சொல்லிட்ட அன்னை எழுந்து மன்றின் மேலேறி நீலழகரின் கையிலிருந்த உருகத்தை மகவின் கையிலிருக்கும் கெடுபொருளொன்றை அன்னையென விலக்கி எடுத்தாள். நீலழகரின் விழிகள் அன்னையைத் தொட்டு ஊன்றின. “அய்யா” எனப் பெருங்குரலில் விம்மிக் கொண்டு அவரின் மார்பில் புதைந்து அழுதாள். அவரை ஒருகரத்தால் அணைத்தபடி குடியவையை ஒருகணம் நோக்கினார் நீலழகர்.
என்ன சொல்வேன் இளையோனே. நம் முன் நின்றிருப்பது நம் குடிகாக்க எழுந்திட்ட தெய்வம். அது கோருவது உன் உயிரென்றாலும் நீ கொடுத்தே ஆக வேண்டும். பெருங்கனவுகள் சுமக்கும் மனிதர்கள் எல்லாக் காலங்களிலும் தோன்றுவதில்லை. கனவுகள் தோன்றிவிடும். ஆனால் சுமந்து அதை ஆற்றி நிகழ்த்தி வென்றமைபவர் நிகழ்வதே அரிது. இன்று நம் குடியில் நமக்கொரு வாய்ப்பு எழுந்துள்ளது. நழுவினால் இன்னும் நூறு நூறு ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருக்கும். பெருங்கனவுக்கெனத் தலை கொடுக்கச் செல்லும் ஆயிரமாயிரம் இளையவர்களை நோக்கும் பொழுது நடுக்கம் தோன்றுவது குடிகளின் இயல்பே. ஆனால் அக்கனவு அவர்களை எரித்தே அடங்கி அதன் சாம்பலிலேயே எழும் என அறிந்த இளையோரில் கூடும் விசை ஆயிரமாயிரம் நீலன்களின் பெருக்கு. பல்லாயிரம் கோடி முறைகள் கேவி அழைத்த அன்னையரின் சொல். அதை நான் கேட்டு விட்டேன். இனி மீள்வில்லை” என்றான் நீரன்.
அச்சொற்களைக் கனவிலெனக் கேட்டபடி துயின்றிருந்தான் சானு. கனவில் நீரன் சொன்ன ஒவ்வொரு சொற்களும் காட்சிகளென்று தோன்றின. தீச்சொல்லிட்ட அன்னையின் மூச்சைத் தன் மார்பிலென உணர்ந்தான் சானு. அரண்டு விழித்த பொழுது குட்டி வேழத்தின் முதுகு போன்றிருந்த கருங்கல்லில் காற்று தொட்டகன்று போய்க் கொண்டிருந்தது.
வனத்தின் இருளில் மரங்களின் உச்சிகள் மட்டும் இருளையும் மரங்களையும் வேறுபடுத்திக் காட்டின. அவ்விருளில் நீரன் எத்தனை தொலைவு சென்றிருப்பான் என எண்ணிய பின்னர் எழுந்து மனைக்குள் சென்று எவருக்கும் எதுவும் சொல்லாமல் உறங்கினான். அவனது கனவில் நீரன் உருவிய வாளுடன் புரவியில் ஏறி மேகங்களில் பாய்ந்து தாவினான். இளையவனே என்ற அவனது கூக்குரல் ஒரு அசரீரியென அன்று முதல் அவனைத் தொடர்ந்து கொண்டிருந்தது. அவன் மட்டுமே கேட்கும் அவன் ஆழகத்தின் குரலென நீரன் ஆகியிருந்தான். நீரன் கொல்லப்பட்ட இரவு அச்செய்தி மனைக்கு வந்து சேர்ந்த பொழுது இருளில் அச்சரட்டைப் பற்றியபடி நீரனின் குரல் துணைக்கிருக்க அவன் வனத்துள் சென்றான்.
*
சானு சூர்ப்பனகரின் விழிகள் மயக்கில் நெளிந்து அடங்குவதை நோக்கிய பின்னர் அவரது கைகளிலிருந்த தீயிலைத் துதியை எடுத்து அணைத்தான். சூர்ப்பனகர் விழித்து அவனை நோக்கி “தாகம்” என்றார். மூங்கில் குடுவையில் நீரைக் கொணர்ந்து அளித்தான் சானு. சூர்ப்பனகர் நீரைக் குடித்த பின்னர் பட்டாடையால் வாயைத் துடைத்துக் கொண்டு விழிகளைக் கசக்கிய பின்னர் இளமழையை நோக்கினார்.
“இந்த மழை விந்தையாக இருக்கிறது சானு” என்றார் சூர்ப்பனகர். “ஓம். அமைச்சரே. இம்மழை அணுவிடை மாறாது ஒன்று போலவே தோன்றும் சோதரரின் பெருக்குப் போலப் பொழிகிறது. ஒவ்வொன்றும் ஒன்றே போலிருக்கிறது” என்றான் சானு. சூர்ப்பனகர் அவனை நோக்கிய பின்னர் “ஓம். இந்த நிலத்தில் இம்மழை தான் பொழிய முடியும்” என்றார். பிறகு காற்றில் சுட்டு விரல் சுழித்துக் கணிக்கத் தொடங்கியது. முதலில் கூடியது. பின்னர் இல்லையென்று மறுத்துக் காற்றை அழித்துத் திரும்பவும் எழுதியது. பின் முடிவிலாத அந்தக் கணக்கை அவர் கை எழுதிக் கொண்டேயிருந்தது. சானு அருகிருந்த சிற்றிருக்கையில் அமர்ந்து கொண்டு இளமழையை நோக்கியிருந்தான். வேப்பமரத்திலிருந்த குயில் சிறகசைத்து எழுந்து தாழ்ந்தபடி முன்முகப்பின் தண்டொன்றில் வந்தமர்ந்தது. சிறகுகளைச் சிலிர்த்து நீரை விசிறியது. பிறகு குனிந்து துயிலிலெனக் கை சுழற்றிக் கொண்டிருந்த சூர்ப்பனகரை நோக்கியது. அதன் செவ்விழிகளை நோக்கிய சானுவுக்கு இளம் புன்னகையொன்று உதட்டில் ஒட்டியது. சிறகுலர்த்துவது போல புன்னகையை உதறிக்கொண்டு சிரித்தான்.