ஒரு கவிதையும் ஒரு ஓவியமும்
நண்பரும் ஓவியருமான கேரளாவைச் சேர்ந்த விஷ்ணு எனும் ஓவியரும் அவரது தோழி ஷ்ரீகலாவும் எனது கன்னி அம்மன் என்ற கவிதையின் சில வரிகளை மொழிபெயர்த்து அதற்கு சிறு ஓவியமொன்றையும் வரைந்து சென்ற ஆண்டு பரிசாக அனுப்பியிருந்தார்கள். ஒரு கவிதை மலையாளத்தில் விளங்கப்பட்டு ஆங்கிலத்தில் கடக்கும் பொழுது மூன்று மொழிகளில் ஒரேகாட்சி மீள மீள நிகழ்வதன் அழகை நோக்கினேன். அதற்கு ஓவிய மொழியிலும் நான்காவதாக ஒரு பார்வை உருவாகுகையில் அதன் எல்லையின்மை அளிக்கும் உவகையே இலக்கியத்தில் திரும்பத் திரும்ப எதிர்ப்படும் குளிர்காற்று.
கன்னி அம்மன்
தூக்கணாங் குருவிக் கூடுகள்
நுனிகளில் தொங்கும் முதிய மரம்
‘நேற்று
நான் வருவேன் என்று
நினைத்தாயா’என்றேன்
மஞ்சளாய் வெடித்தது சூரியன்
வாய்க்காலின் வெள்ளம் உடலேறியது
குழந்தைக்குள் சிரிக்கிறாய்
வயல் நெல் நிரப்பிற்று
மீண்டும்
நெடுங்காலத்திற்குப் பிறகு
தனது கருவறையில் அமர்ந்திருக்கும்
கன்னி அம்மனைப் போல்
வீற்றிருக்கிறாய்
நெடும் பள்ளத்தில் வீழும்
பேரருவியாய்
திரும்பிச் சொல்கிறாய்
சில வரிகளை
பின்
பாதைகள் எங்கும் செல்லக் காத்திருக்கின்றன
கருவறை இருட்டு
மூக்குத்தி வெளிச்சம்.
(2016)