பித்தும் கவிதையும் : 01

பித்தும் கவிதையும் : 01

கவிதையால் மட்டுமே அடங்கக்கூடிய தாகமுடையவனாக இருப்பதே கவிதைக்கும் எனக்குமான உறவு.

*

வைரவர் கோயிலின் திருவிழாக் காலங்களில் குஞ்சுக்கண்ணா பாடும் தேவாரங்களைக் கேட்டு நின்றது கவிதையை அறிவதன் தொடக்க நினைவாக இருக்கிறது. எதிர் நிற்கின்ற தெய்வ உருவைக் குரலால் அழைத்துச் சொல்லால் உயிரளித்து “ஆரொடு நோகேன் ஆர்க்கெடுத்துரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால் வார்கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய்..” என்று நெஞ்சறைந்து உரிமையுடன் தெய்வமெழ வைக்கும் அந்தத் தேவாரங்களின் சொற்களிலே கவிதை எத்தனை அரிய சொற்களின் மூலம் ஒன்றை உயிருள்ளதாக்கி உறவாடி மீண்டும் கண் மலரச் செய்யும் என்பதைப் பார்த்திருக்கிறேன்.

அம்மா விரத காலங்களில் சூளமங்கலம் சகோதரிகளின் கந்த சஷ்டிக் கவசத்தினை ரேடியோவில் ஒலிக்க விட்டு சாம்பிராணிப் புகை வீடு நிறைய அமைந்த நாட்கள். தேவாரங்கள் பாடிக்கொண்டிருக்கும் போது ஏதோ ஒரு சொல் அவரின் அன்றாடத் துக்கத்தின் நுனியைத் தொட்டு நீள, கண்ணீர் மல்கி அவர் நிற்பதைக் கண்டிருக்கிறேன்.

அம்மாவின் மரணம் எதிர்பார்த்திராதது. முள்ளந்தண்டில் நோயாகி கால்கள் செயலற்று ஒரு நாள் விழுந்தார். வைத்தியசாலைக்கு அப்பா கொண்டு சென்று வந்தார். அறுவைச் சிகிச்சை செய்தார்கள். மீண்டு விடுவார் என்று சொன்னார்கள். மரணம் நேர எந்த அசுமாத்தமும் இன்றிய நாட்கள். அம்மாவைத் தேற்றவென உணவுகள் சமைத்துக் கொடுத்தார்கள், பிசியோதெரபி செய்ய வைக்க எனக்கும் அப்பாவுக்கும் சொல்லித் தந்தார்கள். தினமும் செய்து வந்தோம். படுக்கையில் இருப்பார். உறவினர்கள், நண்பர்கள், எனது நண்பர்களின் அம்மாக்கள் என்று தொடர்ந்து யாரேனும் பார்ப்பதற்கு வருவார்கள். நான் காலையில் உணவு கொடுத்து விட்டு அல்லது சிறிய உடற்பயிற்சிகளை அவ்வப்போது செய்து விட்டுப் பள்ளிக்கூடம் போய்வருவேன்.

ஒரு நாள் அம்மாவைக் கதிரையில் இருக்க வைத்து அப்பா உடலை அழுத்தி அவருக்கான உடற்பயிற்சிகளை செய்தபடி கதைத்துக் கொண்டிருந்திருக்கிறார். உடல் குளிரத் தொடங்க கை கால்களை உரஞ்சிச் சூடாக்கினார். சில நிமிடங்களில் தலையிலிருந்து பேன்கள் இறங்கி வரத் தொடங்கின. பின், உயிர் பிரிந்ததை அறிந்தார். என்னைப் பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் பள்ளிக்கூடம் விட்டு வரும் போது அம்மாவுக்குச் சீரியஸ் ஹொஸ்பிட்டல் போக வேண்டும் வா என்று ஆட்டோவில் அழைத்துச் சென்றார். அவரது சொல்லிலிருந்து சந்தேகமற்ற ஒரு நடுக்கம் நெஞ்சில் படர்ந்தது. வீட்டின் ஒழுங்கைக்குள் திரும்பவும், நீள நின்ற வாகனங்கள் மரணத்தை நிச்சயமானதாக அறிவித்தன. வீட்டுக்குள் சென்றேன். புலன்கள் முழுவதும் திறந்து கொண்டன. ஒவ்வொரு செயலும் இதைவிடத் தெளிவாய் இதற்கு முன்னர் என்னால் உணரப்பட்டதேயில்லை. அப்பா போர்ட்டிக்கோவில் கதிரையில் கத்தியழுதபடி இருந்தார். நான் உள்ளே கட்டிலில் சென்று பார்த்தேன். அம்மா இறந்து விட்டார். எதுவும் தோன்றவில்லை. மரணம் எதுவகையிலும் இத்தனை நெருக்கமாய் எனக்கு நிகழ்ந்ததில்லை. ஆகவே உணர்ச்சிவசமோ கண்ணீர்ப்பெருக்கோ எதுவும் உள்ளசையவில்லை. எழுந்து சென்று உடை மாற்றிவிட்டுக் கொஞ்ச நேரம் நின்று பார்த்தேன். பிறகு பக்கத்து வீட்டுக்குச் சென்றேன். அங்கே மரங்களைச் சுற்றிக் கொண்டிருந்தேன். மரணத்தை என்னால் உணரவே முடியவில்லை.

திரும்ப வீடு வந்தேன். அழுகை வரவில்லை. சொந்தக்காரர்கள் வந்து அம்மா செத்திருக்கிறார் அழாமல் இருக்கிறாய் என்று கேட்டுவிட்டுச் சென்றார்கள். அந்த வயதிற்கு உங்கள் யாரை விடவும் அவர் எனக்கு முக்கியமானவர். எனக்கே அழுகை வரவில்லை இவர்கள் ஏன் அழுகிறார்கள் என்று தோன்றியது. அப்பா அழுத அந்தச் சொற்களைக் கேட்டேன். மரணத்தை எத்தகையதாகப் பெருக்கி அறிந்து அதிலிருந்து மீள முடியாமையை உணர்த்தின அச் சொற்கள். இதெல்லாம் இவருக்கெப்படித் தெரியும் என்று ஆச்சரியமாக அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அடுத்த நாள் கிரியைகள். நள்ளிரவின் இருட்டில் அம்மாவின் உடல் வைக்கப்பட்டிருந்தது. தலைமாட்டில் ஒரு குத்துவிளக்கு எரிந்து கொண்டிருந்தது. யாரோ ஒரு முதிய பெண்ணின் குரலில் தேவாரம் பாடப்படுவது கேட்டது. விடியும் பொழுது அம்மம்மாவும் சில சொந்தக்காரரும் கூடியிருந்து கதைத்துக் கொண்டிருந்தனர். வாசலில் தண்ணி வாளி வைத்திருந்தனர். நள்ளிரவுக்குப் பிறகு வீட்டின் பின் கேற்றால் அம்மா எனது பெயரையும் தங்கையின் பெயரையும் சொல்லிக் கூப்பிட்ட குரல் அங்கிருந்தவர்களுக்குக் கேட்டதாம். நான் நல்ல நித்திரை என்று சொன்னார்கள்.

தம்பிக்கு மொட்டையடித்திருந்தார்கள். பறை வாசித்துக் கொண்டிருந்தனர். கிரியைகள் தொடங்க, தேவாரங்கள், திருவாசகம், பட்டினத்தார் பாடல்களென்று மரண வீட்டின் பாடகர்களாய் இருந்த இரு முதியவர்களும் மாறி மாறிப் பாடிக்கொண்டிருந்தனர். எல்லோரும் சடங்கைக் கவனித்துக் கொண்டிருந்த உணர்வு மேலிட்டது. அதன் மையமாய் நின்று உரலில் உலக்கையை ஓங்கிக் குத்தியபடி நானும் தம்பியும் நின்றிருந்தோம். உடலில் வியர்வை ஓடியது. பட்டினத்தார் பாடல்கள் அந்த முதிய கணீரென்ற நிச்சயமான குரலில் பாடப்பட்டுக்கொண்டிருந்த பொழுது நின்ற உடலை நெருப்புக் கயிற்றால் அறுப்பது போலிருந்தது. ஐயிரண்டு திங்களாய் என்று ஆரம்பித்து விறகிலிட்டுத் தீமூட்டுவேன் என்று அவர்கள் பாடிய போது மரணம் உடலுள் ஓங்கி வளர்ந்தது. உடல் நடுங்கத் தொடங்கியது. மரணத்தை உணரத் தொடங்கினேன். மரணத்தைக் கவனித்தேன். அது என் முன்னால் என் அன்னையின் வடிவில் படுத்திருந்தது. எவ்வளவு அழகான உடல். மலர்ந்த குங்கும முகம். இத்தோற்றத்தில் மரணம் பிரிவென்பதாகத் தோன்றவில்லை. பிறகு இப்பொழுது வரை.

அவர் இருக்கிறார். என் ஒவ்வொரு சொல்லிலும். அவர் என்னைக் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்னும் எண்ணம் ஒரு போதும் விலகியதில்லை. நான் நல்லவை செய்யும் பொழுதும் தீமைகள் புரியும் பொழுதும் குற்ற உணர்ச்சிகளில் தவிக்கும் பொழுதிலும் மாறாமல் அவரை உணர்ந்து கொண்டிருக்கிறேன். அவரே என்னைக் காக்கும் அறம்.

அம்மாவின் பிரிவின் பின் திக்கற்ற வாழ்க்கைகளுக்குள்ளும் பொருளற்ற திசைகளுக்குள்ளும் எந்த இலக்குமற்று அலைந்து, இலக்கியம் வாசிப்பது, ஊர் சுற்றுவது, நண்பர்களுடன் பொழுது கழிப்பதென்று ஆகியது. பதினெட்டாவது வயதில் எந்த நோக்கமுமற்று இருந்த எனக்குக் கவிஞனாகுவது தான் என் முழுவிருப்பும் என்பதை அறிந்து உணர்ந்தேன். தேவதேவனின் சொற்களில் சொன்னால் எந்தவோர் அற்புத விளக்கைத் தீண்டி விட்டேன், இப்படி எட்டுத் திக்கும் மதமதர்த்தெழுந்து ஆடியது என்று நினைவில்லை. ஆனால் நான் சொல்லாலானவன். சொல்லிலேயே திகழ்கிறேன் என்பதை அறிந்தேன்.

தமிழ்க் கவிஞர்களின் பித்துற்ற நிலையும் விட்டேற்றித் தனமும் என்னை ஈர்த்தன. அதுவே என் வாழ்வு. நான் மகத்தான கவிதைகளை எழுதும் நுண்ணுணர்வும் சொல்லினிமையும் கூடியவன் என்ற அகங்காரம் என் சமகாலத்தின் கவிதைகளையெல்லாம் வாசிக்க வாசிக்க அதிகரித்து. நான் உணர்வதை எந்தச் சொல்லும் சொல்லவில்லை. கவிதையில் சொல் என்ன சொல்கிறது என்பதை விட சொல் எப்படி அமைந்திருக்கிறது என்ற சொல்லமர்தல் முதன்மையானது என்பதை அறிந்தேன். அதன் நுட்பம் கருத்துகளில் அல்ல. அறிதலின் கருவியிலேயே உள்ளதென்பதை உணர்ந்தேன். கலையில் கற்பனையே கருவி. அது நிகழும் ஊடகம் தான் சொல்.

*

எங்கள் ஒழுங்கையிலிருந்த றமணன் அண்ணா ( தி. செல்வமனோகரன்) வீட்டுக்குச் சிறு வயதில் விளையாடச் செல்வோம். அவரது துணைவியான ஜெசி அக்கா குழந்தையில் என்னைத் தூக்கிக் கொண்டு போய் வைத்திருப்பா என்று சொல்லியிருக்கிறார்கள். நானும் பக்கத்து வீட்டுப் பெடியன்களும் ரெஸ்லிங் பார்ப்பது ( சில வேளை ரெஸ்லிங் விளையாடவும் செய்வார்கள்), மீன்கள் வளர்ப்பதைப் பார்ப்பது என்று அவர்களது வீட்டில் சுற்றிக் கொண்டிருப்போம். அவர் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தேர்ந்தெடுத்த இலக்கியம், ஆன்மீகம், தத்துவம், வரலாறு, அறிவியல் சார்ந்த புத்தகங்களையும் இலக்கிய இதழ்களையும் வீட்டில் வைத்திருந்தார். ஒரு தடவை அவற்றை அடுக்கிக் கொடுக்க நானும் இன்னும் சிலரும் உதவினோம். புத்தகங்களில் இலக்கங்களைப் பதிவது, அவற்றை எழுதுவது போன்ற அவற்றைப் பட்டியற்படுத்தி அடுக்கும் வேலை. அதற்கு உபகாரமாக அவர் சில புத்தகங்களையும் இதழ்களையும் தந்தார், அதைக் கொண்டு வீட்டில் ஒரு நூலகம் உருவாக்கி நண்பர்களுக்குள் புத்தகப் பரிமாற்றம் செய்தேன். ஆறாம் வகுப்பளவில் ஒரு பிறந்த நாளிற்கு பாரதியார் கவிதைகள் சிறிய அளவிலான முழுத்தொகுப்பு ஒன்றை றமணன் அண்ணா பரிசளித்தார். பாரதியார் கவிதைகள் என்னை வசீகரித்தன. குறிப்பாக வசன கவிதைகளின் அமைப்பும் சொற்களும் நீண்டகாலம் மனதைப் பாதித்தன.

றமணன் அண்ணா வீட்டுக்கு முன்னே சிறிய ஒழுங்கைக்குள் ஒரு வைரவர் கோயிலுண்டு. அதைச் சின்ன வைரவர் கோயில் என்று அழைப்பார்கள். அங்கு சில நித்தியகல்யாணி மரங்களும் அகலமான கிணறும் இருந்தன. அறுகம்புற்களும் முளைத்திருக்கும். வீட்டுத் தேவைகளுக்காக அறுகம்புல் பிடுங்கச் செல்கையில் அங்கே கொஞ்ச நேரம் இருந்து விட்டு வருவேன். ஒரு வகை அமைதி உண்டு அங்கே. சின்ன விளக்கு, சூலம். சில தடவை பூசைகளும் செய்திருக்கிறேன்.

றமணன் அண்ணாவிடம் புத்தகங்களை இரவல் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். உளவியல், ஆன்மீகம், தியானம், மெஸ்மரிசம், ஹிப்னாட்டிசம் எல்லாம் வாசித்து போவோர் வருவோர் மேலெல்லாம் பிரயோகம் செய்து பார்த்த காலம். மணித்தியாலக்கணக்கில் சாமியறையின் சுடர் விளக்கைப் பார்த்தபடியிருப்பேன். தியானம் பல வருடங்கள் தொடர்ந்து பயிற்சி செய்தேன். சில தடவைகள் குண்டலினியை எழுப்பவும் முயற்சி செய்தேன். சரியான ஆசிரியர்கள் இல்லாமல் அதைச் செய்தால் ஆபத்து என்பதை அறிந்து அந்தப் பயிற்சிகளைக் கைவிட்டேன். பதின்னான்கு வயதில் ஒரு நாளிரவில் உயிர் உடலை விட்டு அந்தரத்தில் மிதப்பதை உணர்ந்து திடுக்கிட்டுச் சில நொடிகள் மிகப் பயந்து வியர்த்து உயிர் மீண்டால் சரி என்றாகிவிட்டது. அது கனவா அல்லது தியானங்களின் விளைவான உருவெளித் தோற்றமா என்பது தெரியவில்லை. ஆனால் உணர்ந்தது உண்மை. ஆகவே தொடர்ந்து கடுமையான பயிற்சிகளைத் தவிர்த்து அடிப்படையான தியானப் பயிற்சிகள், மூச்சுப் பயிற்சிகளைச் செய்தேன்.

தேவாரப் புத்தகங்கள் வாசிப்பது பிடிக்கும், வெள்ளிக்கிழமைகளில் பாடும் சிவபுராணமும் கோளறு பதிகமும் பஞ்ச புராணங்களும் பஜனைப் பாடல்களும் ஆர்வமூட்டின. சிறு வயதில் பக்தியாக. பிறகு அதன் கவிதைக்காக. நாயிற் கிடையாய்க் கிடந்த அடியேற்கு என்ற காட்சி எவ்வளவு அழுத்தமான மனநிலை.

பன்னிரண்டு அல்லது பதின்மூன்று வயதில் கடவுள் என்பது பற்றியும் மதம் பற்றியும் சந்தேகங்கள் வலுவடைந்தன, ஆன்மீகம் சார்ந்த ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரது பார்வைகள், கடவுள், மதம் பற்றிய புதிய வெளிச்சங்களை வழங்கின. என் மனநிலைக்கு ஓஷோ தான் நெருக்கமானார். அவரது பெரிய சைஸ் புத்தகங்களையெல்லாம் ஊர்ப் பொது நூலகத்தில் வாங்கி வாசித்தேன். நான் வாசிக்கும் ஆர்வத்தைப் பார்த்த அங்குள்ள நூலகர்கள் தங்களது அட்டைகளிலும் என்னைப் புத்தகம் எடுக்க அனுமதித்தார்கள். இவ்வளவும் உண்மையாகத் தான் வாசிக்கிறியா என்பதை விளங்கவைக்கப் பல நாட்கள் அந்த புத்தகங்களில் உள்ளவை பற்றி அவர்களுக்கு விபரித்திருக்கிறேன்.

ஞானமடைதல் பற்றிய பல்வேறு கருத்துகளின் வழியும் ஓஷோ அறிமுகப்படுத்திய சென்னும் புத்தரும் நகைச்சுவைகளும் கடவுளுக்கெதிரான விசாரணைகளும் என் பகுத்தறிவு இனிமேல் பக்தி நிலைக்குத் திரும்பவே முடியாத விலகலை அளித்தன. பின்னர் நானே அறியக்கூடிய தெய்வத்தை என் உள்ளுறையும் அகத்தை நோக்கிய பயணத்தை புத்தரின் வழியிலும் யேசுவின் வழியிலும் இன்னும் ஏராளம் ஞானியரின் வழியிலும் அடைய முயன்றேன்.

பத்தாம் வகுப்புப் படிக்கும் பொழுது இலங்கை வரலாறு தொடர்பான முக்கியமான புத்தகம் ஒன்றை றமணன் அண்ணாவிடம் வாங்கி எங்கு வைத்தேனெனத் தெரியாது தொலைத்து விட்டேன். திரும்ப வேறொரு புத்தகத்தை அதற்கு மாற்றீடாக வாங்கிக்கொண்டு சென்ற போது அவர் கோபமடைந்து எனக்குப் புத்தகங்கள் தருவதை நிறுத்தி விட்டார். சில வருடங்கள் நான் அவரிடம் செல்வதைக் குறைத்து விட்டேன்.

*

(எழுத்தாளன் என்றால் கூட்டத்தில் ஒரு கோணல் தான்)

அதன் பின் ஊர் நூலகத்தில் அதிகமான நேரத்தைச் செலவழிக்க ஆரம்பித்தேன். பாடசாலை விடுமுறைக் காலங்களில் பகல் முழுவதும் அங்கேயே இருந்து புத்தகங்களை வாசிப்பேன். கவிதைப் புத்தகங்கள் அனைத்தையும் போன ஒரு மாதத்திலேயே வாசித்து முடித்து விட்டேன். நூலக பட்ஜெட்டில் புதிய புத்தகங்களை நல்லூர்த் திருவிழா நேரம் சலுகை விலையில் வாங்க அந்த நூலகர் எனக்கு வாய்ப்பளித்தார். நான் விலை உயர்ந்த கவிதை மற்றும் ஆன்மீகப் புத்தகங்களை வாங்கினேன். அப்துல் ரகுமான், பா. விஜய், வைரமுத்து, கலீல் ஜிப்ரான், ஓஷோ, சென் கதைகள் என்று அள்ளி வாங்கினேன். பிறகு அவையும் வாசித்துத் தீர யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்குச் சென்று வாசிக்க ஆரம்பித்தேன்.

உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது தீராநதியில் கவிதை ஒன்று பிரசுரமானது. அப்போது கல்கியின் உதவி ஆசிரியராக இருந்த அமிர்தம் சூர்யா முகநூலில் நான் எழுதிய கவிதைகளைப் பார்த்து கல்கிக்கும் அனுப்பச் சொல்லி சில கவிதைகள் பிரசுரமாகின.

அந்தக் காலகட்டத்தில் வேலணையூர் தாஸ் அண்ணாவின் அறிமுகம் கிடைத்தது. முகநூலில் என் கவிதைகளை வாசித்து விட்டு “கதைப்போமா?” என்று கேட்டார். எனது பள்ளிக்கூடத்திற்கு அருகில் தான் அவரது வீடிருந்தது. வீட்டிற்குச் சென்றேன், யாழ் இலக்கியக் குவியம் என்ற அமைப்பினை நடத்தி வருவதாகவும் இலக்கியத்திற்கும் வாசிப்புக்கும் உள்ளே வரும் இளைய தலைமுறைக்கான வெளிகளை உருவாக்குவது அந்த அமைப்பின் நோக்கம் என்றும் திட்டங்களை விபரித்தார். எனக்கு அவர் வழியாகவே இப்படியான இலக்கியச் செயற்பாடுகள் நடக்கின்றன என்ற அறிமுகம் கிடைத்தது. பிறகு கூட்டங்களுக்குச் செல்ல ஆரம்பித்தேன் ஆதி பார்த்திபன், பிறை நிலா கிருஷ்ணராஜா, மதுஷா மாதங்கி, யதார்த்தன் போன்ற பல இளம் தலைமுறையைச் சேர்ந்த வாசிப்பு எழுத்து என்று ஆர்வமுள்ளவர்களும் கூட்டங்களுக்கு வந்தனர். இலக்கியக் குவியமூடாக புத்தகங்களுக்கான அறிமுகங்கள், விமர்சனங்கள் செய்தோம்.

எனது தொனி ஆரம்பத்தில் மிகக் கடுமையானதாக இருந்தது. நல்ல கவிதைகள் தொகுப்பில் அமையவில்லையென்றால் ஈவிரக்கமற்றுப் பேசுவேன். இதனால் படிப்படியாக கவிதைகள் குறித்த உரையாடல்களில் தீவிரமாக உள் நுழைய ஆரம்பித்தேன். ஏன் ஒன்று கவிதை இன்னொன்று இல்லை என்பதை விளக்க வேண்டியிருந்தது.

இந்தச் சமகாலத்தில் றமணன் அண்ணா நான் இவ்வளவு ஆர்வமாக இருப்பேன் என்று தெரியாது என்று சொல்லி மீண்டும் புத்தகங்கள் தரத் தொடங்கினார். இடைப்பட்ட காலத்தில் அவர் வீட்டுப் பிணக்கொன்றினால் சிறியதொரு தாழ்வாரமுள்ள ஒடுங்கிய ஒரு கடைப்பகுதியில் வாழ்ந்து வந்தார். இரண்டு பெண் குழந்தைகளையும் அந்தப் புத்தகங்களையும் மழைக்காலங்களில் கூட ஜெசி அக்காவும் றமணன் அண்ணாவும் காப்பாற்றினார்கள். அவர்களின் அந்த நெருக்கடியான காலகட்டம் மனதைத் தொந்தரவுபடுத்தியது. நான் புத்தகத்தைத் தொலைத்தது சண்டைக் காலமென்பதால் அதனை மீளவும் வாங்க முடியாது, அது போக ஏற்கனவே அவருக்கு நிதி நிலமையும் மோசமாக இருந்த காலம். அதனால் தான் நான் தொலைத்ததற்கு அவர் கோபப்பட்டிருந்தார். பிறகு புத்தகங்கள் தரத் தொடங்கினார்.
அவர்கள் வீடு கட்டிக் கொண்டதற்குப் பின் அவர்கள் வீட்டில் என்னுடைய இரண்டாவது இளமைக் காலத்தைச் செலவிட்டேன்.
ரஷ்ய இலக்கியங்கள், வேறு மொழிபெயர்ப்பு இலக்கியங்கள், சிறிய தத்துவ அறிமுகப் புத்தகங்கள் என்று தொடங்கி ஈழத்து இலக்கியத்தின் பல்வேறு போக்குகளையும் எழுத்தாளர்களையும் முறையாக அறிமுகப்படுத்தினார். வாசிப்பில் என்னை நெறிப்படுத்திய அவரது வாசிப்பின் மீதானதும் இலக்கியத்தின் மீதானதுமான தீராத ஆர்வமுள்ள கண்களை நன்றியுடன் நினைத்துக் கொள்கிறேன். தேர்ந்தெடுத்து வாசித்த சபரியளித்த கனிகளின் சுவை கொண்ட புத்தகங்கள் அவை. அந்தத் தேர்வுகள் பன்முகமானவை. ஜெயமோகன் மீது இணையவெளியில் இருந்த பொது வெறுப்பினால் பெரிதாக அவரை வாசித்திருக்கவில்லை. ஜெயமோகனுடைய இலக்கிய முன்னோடிகள் வரிசை என்ற ஆளுமைகள் பற்றிய மதிப்பீட்டுப் புத்தகங்களை வாசி என்று றமணன் அண்ணா தந்தார். அவை நானறிந்த இலக்கிய மதிப்பீட்டு முறைகளிலிருந்து விலகி மொத்தத்தையும் தொகுத்தறிந்து மதிப்பிடும் இயல்பைக் கொண்டிருந்தன. அதிலிருந்த இலக்கிய நுட்பங்கள், அவதானிப்புகள் இலக்கியம் எழுதும் ஒருவரின் எழுத்துக்கும் விமர்சகர்களின் மதிப்பீடுகளுக்கும் இடையிலிருந்த இடைவெளியை பகல் வெளிச்சம் போல் அவ்வளவு துலக்கமாய்க் காட்டின.

சுந்தரராமசாமியின் இவை என் உரைகள் என்ற தொகுப்பிலிருந்த உரைகளும் எனக்கு வேறொரு வாசிப்புத் தளத்தை வழங்கி பார்வைகளை விரிவாக்கின. நான் ஏற்றுக் கொள்ளும் நோக்கிலமைந்த கருத்துகளை நோக்கி இவை முக்கியமானவை என்று றமணன் அண்ணா சொன்ன எல்லாமே இன்று வரை முக்கியமானவையாகவே இருக்கின்றன. அவரது வாசிப்பின் நுண்ணுர்வினால் உண்டாகிய மதிப்பீடு நான் மிக மதிக்கும் ஒன்று. திருவாசகத்தையும் பழந்தமிழ் இலக்கியங்களைப் பற்றியும் அவர் என்னிடம் தீராமல் பேசியிருக்கிறார். நான் அவ்வளவு ஆர்வம் காட்டுவதில்லை. நவீன கவிதைகளே என்னை ஆட்கொண்டிருந்த காலம் அது. திருவெம்பாவை பற்றியும் ஆண்டாளின் கவிதை பற்றியும் நின்ற நிலையில் ஓர் இரவில் உடலசைத்து “முத்தன்ன வெண்ணகையாய் முன் வந்தெதிரெழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்றள்ளூறித் தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடைதிறவாய்” என்று சொன்ன போது கவிதையின் இசைத்தன்மை பற்றிய என் புலன்கள் வியப்புடன் திறந்து கொண்டிருந்ததை நினைவு கூர்கிறேன்.

அவரது இளவயதில் தூண்டி என்ற பெயரில் இலக்கியத்திற்கான இதழொன்றையும் அறிவிசை என்ற விஞ்ஞானத்திற்கான இதழொன்றையும் நடத்தி வந்த கதைகளெல்லாம் கேட்கும் போது சாகசக் கதைகள் போன்று இருக்கும். அவர் ஒழுங்குபடுத்திய கூட்டங்கள் பற்றிய நினைவுகளைப் பகிர்வார். ஈழத்து இலக்கியத்தின் மூத்த தலைமுறையினரான அ. யேசுராசா, சு. வில்வரத்தினம், சண்முகம் சிவலிங்கம், மு. தளையசிங்கம், எஸ். பொன்னுத்துரை முதல் கோட்பாட்டு அடிப்படையில் விமர்சன முறைகளை விரித்த கா. சிவத்தம்பி, கைலாசபதி வரை இலக்கியத்தின் எதிரெதிர் முகாம்களையும் இணைத்து கடந்த காலத்திற்கான மன வரைபடத்தை உருவாக்கித் தந்தார்.

மூத்த எழுத்தாளரும் இதழியலாளரும் சினிமா வட்டங்களில் ஆர்வமுடன் செயற்படுபவருமான அ. யேசுராசாவின் அறிமுகமும் இவரால் ஆனதே. அலை இதழ்களை றமணன் அண்ணா வாசிக்கச் சொன்னார். வாசித்தேன். அதிலிருந்த இலக்கியத்தின் மீதான தீவிரம் என்னைப் பாதித்தது. இன்று வரையிலும் ஈழத்து இலக்கிய இதழியல் சூழலில் “அலை” இதழைச் சாதனை எல்லையாக கருத முடியும். யேசுராசாவின் கவிதைகளும் எனக்குப் பிடிந்திருந்தன. குறிப்பாக அவரின் மொழிபெயர்ப்பில் வெளியான அன்னா அக்மதோவாவின் கவிதைகளும் உள்ளடங்கிய “பனிமழை” தொகுப்பு தமிழில் முக்கியமான ஒன்றாகவே இன்றும் கருதுகிறேன். மூத்த தலைமுறையினரில் பலருடனும் பழகும் வாய்ப்புகள் அமைந்தாலும் இலக்கியத்தை வாசித்தறிந்தவராக யேசுராசா அவர்களின் மதிப்பீடுகளும் சொற்களும் என் பார்வைகளை ஆழமாக்க உதவியவை. எங்கேனும் கதைத்துக் கொண்டிருக்கும் போது அவர் சொல்லும் வார்த்தைகள் வாசிப்பிலிருந்து அவர் சொல்லும் விடயங்கள் எப்பொழுதும் ஆர்வமூட்டக்கூடியவை. நம்மைச் செழுமைப்படுத்தக் கூடியவை. மதிப்பீடொன்றில் நான் தடாலடியான கருத்துக்களைச் சொல்லிய போதொன்றில், “பைபிளில் ஜீசஸ் சொல்லுவார், தேவனுக்குரியதை தேவனுக்கும் சாத்தானுக்குரியதை சாத்தானுக்கும் கொடுக்க வேண்டும்” என்று யேசுராசா சொல்லியது இன்று வரை யாருடைய பங்களிப்பை மதிப்பிடும் பொழுதும் உடன்வருகின்றன. வாசித்த சில பகுதிகளை அவர் நினைவிலிருந்து மீட்டிச் சொல்லும் போதெல்லாம் எவ்வளவு நுட்பமாக ஆர்வத்துடன் வாசித்திருந்தால் அவர் அதனை இத்தனை தீவிரத்துடனும் நடைமுறையுடன் இணைத்தும் முன்வைப்பார் என்று நினைத்திருக்கிறேன். ஒரு தடவை நிகழ்வொன்றில் குல்சாரி நாவலில் ஆட்டுத் தொழுவமொன்றில் மழை நாளிரவில் நடக்கும் காட்சியையும் உரையாடலையும் அவர் விபரித்துச் சொன்னார். கால்கள் புழுக்கை நிலத்தில் நிற்பது போன்றும் அந்தக் காட்சி கண் முன் நிகழ்வதும் போன்றும் தோன்ற வைத்த விபரிப்பு அது. அவரின் தீவிரமுள்ள உடல் மொழியும் உறுதிப்பாடான கருத்து நிலைகளும் என்னைக் கவர்ந்தன.

(வாழ்க்கைக்குத் திரும்புதல் கவிதைத் தொகுப்பிற்கான முன்னுரையின் முதற் பகுதி)

TAGS
Share This