கவிதை தெய்வமன்றோ
தமிழில் சொற்களுக்கு அளிக்கப்படும் உயர்ந்த மதிப்பு கவிதை. எம்மொழியையும் போல. ஆதியில் வார்த்தை இருந்தது என்பது பைபிளின் நம்பிக்கையும் கூட. அவ்வார்த்தையே தேவனோடு இருந்தது. தேவனாகவும் இருந்தது எனச் சொல்லப்படுகிறது.
தமிழில் தெய்வங்களை அழைக்கும் பதிகங்கள் கவிதைகளாக இருந்த பண்பாட்டு புறச்சூழல் கவிதைகளுக்கு உண்டு. எனது கவிதைத் தொகுதியான வாழ்க்கைக்குத் திரும்புதலை என் ஆசிரியர்களென நான் வகுத்துக் கொண்ட அனைவருக்கும் அளித்து விட்டேன். அதில் முதலாவது தொகுதியை என் கையால் தந்தைக்கு அளிக்க வேண்டுமென எண்ணினேன். அவரது இளவயது முதல் வியாபாரியாக இன்றளவும் நீடிப்பவர். வணிகம் அளிக்கும் உலகியல் விவேகத்தை அதிக விலை கொடுத்து அறிந்து கொண்டவர்.
எத்தொழிலையும் யோகமென ஆற்றுபவர்கள் அடையும் இளமையும் தேக ஆரோக்கியமும் கொண்டவர். செயலின் நிறைவினால் மட்டுமே வாழ்க்கையை பொருளாக்குபவர்களில் ஒருவர். அவரது கடையில் வைத்துத் தொகுப்பைக் கொடுத்த போது அதை வாங்கி நோக்கிவிட்டு அருகிருந்த அவரின் சாமிப்படங்களின் அருகே வைத்தார். முன்னட்டையில் காளிங்க நடனம் புரியும் கண்ணனின் சோழர் காலச் சிலையொன்றின் படமிருந்தது. கல்வியை தெய்வமென எண்ணும் மக்களில் ஒருவர். கற்றவர்களையும் அறிவையும் மதிக்கப்படும் இடத்தில் வைக்கத் தெரிந்த ஒருவர். அவரிடம் கொடுத்த போது எடுக்கப்பட்ட ஒளிப்படம் கவிதை இன்னும் தெய்வத்தின் இடத்தில் அமர்ந்திருக்கிறது என்பதற்கொரு சாட்சி.