ஒரு வியத்தல்
கவிஞர் இசையின் வலைப்பூவில் அண்மையில் அவர் பதிவிட்டிருந்த கவிதைகளை வாசித்துக் கொண்டிருந்தேன். இரண்டு கவிதைகள் கவனத்தை ஈர்த்தன. முதலாவது கவிதை ‘ஒன்று விட்ட சித்தப்பா’. அக்கவிதையின் சொல்லொழுக்கில் ஒரு நீர்வீழ்ச்சியின் அழகு கொண்ட மொழி வீழ்கிறது. மனிதர் துவண்டு நம்பிக்கையிழக்கும் பொழுது அளிக்கப்படும் சொற்கள் கொள்ளும் பேரழகைக் கவிதையெனவும் சொல்லலாம். தெய்வீகம் என்பது தருணம் தான். அக்கணத்தில் அந்தச் சித்தப்பாவின் நாவில் எழுந்தது மானுடம் எனும் அகலாப் பெருநெருப்பின் நீர்மை.
*
ஒன்று விட்ட சித்தப்பா
நம்பியிருந்த நிலம்
அவனை
தலைகுப்புறக் கவிழ்த்துவிட்டது.
சாக்கடைக்குள் உருளவில்லையாயினும்
ஓரமாய்ச் சரிந்து விட்டான்.
வாந்திக்குள் விழுந்து கிடக்கும்
நாற்றத்தைத் தேடி யார் வருவார்கள்?
அவனே கண்விழித்து
அவனே கை ஊன்றி
அவனே எழுந்தால்தானே உண்டு?
ஆனால் கதை அப்படியில்லை
ஒரு ஆட்டோவுக்குள்ளிருந்து
5 பேர் ஓடி வந்தனர்
வரவே மாட்டேன் என்கிற முகத்தை
தூக்கிக் கொண்டு
அவன் மனைவி வந்திருந்தாள்
அதில் ஒருவர்
ஒன்று விட்ட சித்தப்பாவாம்
கண்ணீர் வழிய வழிய
அவன் மோவாயில் கொஞ்சி
கூப்பாட்டில் வினவுகிறார்
“ஐயோ…ராசா! உனக்கு என்னதான் வேணும்னு சொல்லு…”
இங்கு கொட்டிக் கிடக்கும்
இவ்வளவில்
ஒன்றைக் கூட கேட்க மாட்டேன்
ஆனாலும் சித்தப்பா
என்னை ஒரு முறை இப்படிக் கேளேன்.
*
அடுத்த கவிதை இது,
ஒளித்தெய்வத்தின் ஒரு லீலை
நீ
தலைகுனிந்து வணங்குகையில்
சுடர்
விளக்கிலிருந்து
உன் கன்னங்களுக்குத் தாவுகிறது.
தீ இனிது;
கன்னங்கள் இனியன;
உயிர் சுவையுடையது;
தீ நின்று எரியட்டும்!
தீயை வாழ்த்துகிறோம்!
கன்னங்களைப் புகழ்கிறோம்!
கன்னங்களில் எரிகிற தீயே !
உன்னைத் தொழுகிறோம்.
பாரதியின் வசன கவிதைகளினால் ஒரு புதிய கீர்த்தனை. ஒற்றை உறுப்பும் ஒவ்வொரு உறுப்பாகவும் நின்று எரியும் வேட்கையைப் பாடும் பாடல். ஒரு வியத்தல்.