ஆட்டுக்குட்டி சுவேதா
“உன்னுடன் நான் இனிக் கதைக்க மாட்டேன்” என அறுதியிலும் அறுதியாக உலகை நோக்கி ‘மாட்டேன்’ என்பது போல தலையையும் தூங்கு வெண் சிறு செவிகளையும் சிறு கொம்பு முனைகளையும் ஆட்டியபடி
சுவேதா என்கிற தூய வெண்ணிறமே உருவான ஆட்டுக்குட்டி இன்று முழுவதும் மெளன விரதம் பூணுவது என முடிவெடுத்தாள். அவளுக்குத் தன் அக்காவான பாலாடை மஞ்சள் வண்ணம் கொண்ட சுகந்தினியுடன் பிணக்கு.
சிறிய ஓட்டுக்குள்ளால் நத்தை தலை நீட்டுவது போல மேகங்களுக்குள்ளால் சூரியன் தோன்றிக் கொண்டிருந்தது. சுவேதா பலா இலைகளை மென்றபடி குடிசை வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள். சுகந்தினியைக் காணவில்லை. ஒவ்வொரு நாளும் குதித்தும் தாவியும் செல்லும் நதியைக் காணாதது போல ஏக்கம் சுவேதாவுக்குள் நுழைந்து பெருகிக் கொண்டிருந்தது.
சங்கிலிச் சோலை எனும் அரைநகரத்திலிருக்கும் பெரிய ஒழுங்கையின் இடப்பக்கம் உள்ள சிற்றொழுங்கையில் சுற்றிலும் கிளுவம் வேலிகளால் அடைப்புகளைக் கொண்ட மண்ணைக் குழைத்துச் சுவரைப் பூசி இடைக்கிடை கற்களும் தெரியும் அந்த ஒரேயொரு குடிசை பார்ப்பதற்குச் சிறியதாய் இருந்தாலும் அங்கே ஏராளமானவர்கள் வசித்தனர். படலையாக கருக்கு மட்டைகள் வான் நோக்கிய வேல்களென அடுக்கப்பட்டு முட்கம்பிகளால் பின்னப்பட்டிருந்தன. ஒரு சுருக்குக் கயிறால் வேலிக்கும் படலைக்கும் இணைப்பு போடப்பட்டிருந்தது. குடிசையின் முன்னால் இருபக்கமும் திண்ணைகள். சுகந்தினியும் அவளது அப்பாவும் அம்மாவும் குடிசைக்குள்ளே துயில்வார்கள். சுவேதாவும் அவளுடைய அம்மாவும் சிறு கொட்டகையில் படுத்துக் கொள்வார்கள். அவர்களுக்கு அருகில் இரண்டு பசுக்கள் கட்டப்பட்டிருக்கும். அவை சற்றுப் பெரியவை என்பதால் சுவேதா விலகியே நடப்பாள். வீட்டில் முக்கனி மரங்களும் பொன்னொச்சி மரமொன்றும் குறோட்டனும் எக்சோராவும் மிளகாய்ச் செடிகளும் உண்டு. வீரா என்கிற வீரமே இல்லாத நாய்க்குட்டி ஒன்று காவலுக்கென்று வளர்க்கப்பட்டது. பகல் முழுதும் ஒழுங்கையின் பிற நாய்களுடன் சுற்றிவிட்டு இரவு வீட்டுக்கு வந்து அனைவருக்கும் முன்னர் நித்திரைக்குச் செல்வது வீராவின் வழக்கம்.
சுவேதாவுக்கும் சுகந்தினிக்குமான பந்தமென்பது ஜென்ம ஜென்மமாகத் தொடர்வது. சுவேதா குட்டியாகப் பிறந்து மெல்ல விழி அருட்டிக் கண்ட முதல் உலகம் சுகந்தினியின் இரண்டு குண்டு மணி விழிகளின் பரவசத்தைத் தான். சுகந்தினியே நேரில் சென்று எழுத்துகளின் வரிசையில் பிள்ளைகளுக்குப் பெயர் வைக்கும் கொப்பியிலிருந்து ‘சு’ வரிசையில் பெண் பெயரைத் தேடி சுவேதா என்று வைத்தாள். தன்னை அவளின் அக்காவென சுகந்தினி ஒவ்வொரு நாளும் நினைவூட்டுவாள். “ஏய் குட்டி. இங்க பார். நீ என்ர தங்கச்சி. நான் தான் உன்ர அக்கா. அக்காவும் தங்கச்சியும் ஒண்டா விளையாடுறதுக்காகப் பிறக்கிற ஆக்கள் எண்டு அம்மா சொல்லுறவா. சாமி அதுக்குத்தானாம் என்னையும் உன்னையும் பெத்தது” என்பவளை நோக்கி “சரி தான்” என்பது போல ம்மே எனச் சுவேதா கத்துவாள்.
சுகந்தினி தன்னை விட சற்றே உயரமாயிருக்கிறாள். அது கூடப் பரவாயில்லை அவள் இரண்டு கால்களிலும் நடப்பதைப் பார்த்து சுவேதாவும் அப்படி நடந்து பழகுவதுண்டு. கிளுவம் வேலியில் இரண்டு பின்னங் கால்களையும் ஊன்றியபடி முன்னிரு கால்களாலும் வேலியில் ஏற முயல்வாள். கிளுவம் வேலியிலிருந்து வழுக்கி விழுவதே அவளுக்கு சில இளங் காயங்கள் உண்டாகக் காரணம். பிறகு அந்தக் காயங்கள் வளர முன்னம் மாறிவிடும் எனச் சுகந்தினி அவளைத் தேற்றுவாள். அழுவாரைப் போல நிற்கும் சுவேதாவைப் பார்த்தபடி “அடியேய் குட்டி. நாலு காலிலையும் ஒழுங்கா நட. உனக்கு அக்கா உடுப்புத் தைச்சுப் போடப் போறன். அப்பேக்குள்ள நாலு காலுக்கும் சொக்சும் சின்னச் சப்பாத்தும் வாங்கித் தாறன். அழாதை” என்று சுகந்தினி ஆறுதல் சொல்வாள். சுவேதா ம்மே எனக் கத்தி அந்த யோசனையை ஆமோதிப்பாள்.
சுகந்தினி எப்பொழுதும் பாவாடையும் சிறிய கையில்லாத சட்டைகளும் அணிவாள். பாவாடை குடைச்சக்கரம் போல முறுகிச் சுழலுவதில் ஆனந்தம் அடைவாள். மா மரத்தில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் ஏறி நின்று கொண்டு கயிற்றைச் சுற்றி முறுக்கி மீண்டும் சுழலிலிருந்து அவிழ்ந்து சுழலுவாள். சுகந்தினிக்கு எதையேனும் முறுக்குவதில் அலாதியான ஈடுபாடு உண்டு. அப்படித் தான் சுவேதா ஏதேனும் சொல் பேச்சுக் கேட்காத பொழுதுகளிலும் அவளது தொங்கும் சிறு செவியை முறுக்குவாள். ம்மே எனக் கத்தியபடி சுவேதா தாவிக் குதித்து திக்கும் திசையும் தெரியாது ஓடுவாள்.
சுகந்தினி பின்னேரங்களில் ஒளிசாய்ந்து பொன்னொச்சி மரமலர்கள் பூத்து எரிகையில் செடிப் பிள்ளைகளுக்கு ரியூசன் எடுப்பது வழமை. சுகந்தினியின் அம்மா காலையில் வயலுக்குப் புற்கள் அறுக்கும் கூலி வேலைக்குச் சென்று விடுவார். இருள் படர்ந்து நெருங்கி வருகையில் பறவைகளுடன் சேர்ந்து கூடு திரும்புவார். அப்பா விறகு வெட்டுவதையும் காணி துப்பரவாக்குவதையும் நாள் வேலையாகக் கொண்டவர். ஆகவே சுகந்தினி பள்ளிக்கூடத்திலிருந்து மதியம் திரும்பியதும் சுவேதாவுக்கு ஏதாவது உணவு கொடுத்து விட்டு பசுக்களுக்குத் தண்ணீரைப் பார்த்து நிரப்பிய பின்னர் தனியாக இருந்து தாயம் விளையாடுவாள். அல்லது கெந்திக்கோடு.
பிறகு நேரம் போகையில் எழுந்து சுவேதாவின் கழுத்துக் கயிறைப் பிடித்து தனக்கு வந்த வேகத்தில் இழுத்துக் கொண்டு அருகிருக்கும் புல்வெளிக்குச் சென்று பூவரச மரத்திலோ அல்லது வேம்பின் அடியிலோ சுவேதாவைக் கட்டுவாள். அங்கிருக்கும் புற்களை மேயும் தருணம் அதுவென்றாலும் சுவேதாவுக்கு வெளியுலகைப் பார்க்கும் ஒரே வாய்ப்பும் அந்த வேளை மட்டும் தான். பெரிய ஒழுங்கையிலிருக்கும் நாய்களுக்குச் சுகந்தினியைக் கண்டால் பொறுக்காது. அவள் பள்ளிக்கூடம் போகும் பொழுதும் வரும் பொழுதும் குரைத்துக் குரைத்து அவளை விரட்டும். ஆகவே சுகந்தினி புல்வெளிக்கு அப்பால் தெரியும் பெரிய வீதிக்குச் செல்வது குறைவு. சுவேதாவுக்கு அந்த நாய்களின் குரைப்பொலியும் தொலைவில் அவற்றின் உருவங்கள் அசைந்து திரிவதும் மட்டுமே தெரியும். அந்த ஒழுங்கைக்கு சுகந்தினி சுவேதாவைக் கூட்டிச் செல்வதில்லை.
சுவேதா புற்களை மெல்ல நறுக்கி தன்னுடைய வெள்ளைக் கட்டிப் பற்களால் அரைத்தபடி வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தியபடியோ அல்லது செடிகளுக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து வெருட்டிய படியோ விளையாடும் சுகந்தினியை நோக்குவாள். முறுக்கு வாங்காத வரை நிம்மதி தான் என எண்ணியபடி சுகந்தினி செடிகளைப் போட்டு பிய்ந்து போகும் வரை அடிப்பதை அச்சத்துடன் நோக்கியபடியிருப்பாள். அந்த நேரங்களில் பயத்தில் சுவேதா புழுக்கைகளும் போடுவதுண்டு.
ஆனால் நேற்றைய தினம் மாலையில் நடந்தது வினோதமான ஒரு பிணக்கு. சுவேதாவின் வாழ்வில் அப்படியொரு கணத்தை அவள் எண்ணியதேயில்லை. மாலையில் வழமை போல பலா இலைகளைக் குற்றிச் சேகரிக்கவென வைத்திருந்த நீளமான கம்பியினால் பலா மரத்தினடியில் பழுத்து உதிர்ந்து கிடந்த இலைகளைச் சேர்த்து சுவேதாவுக்கும் அவளது அம்மாவுக்கும் சுகந்தினி அளித்தாள். இடையில் எந்த உரையாடலையும் அவள் செய்யவில்லை. வழக்கமாக “என்னடி குட்டி. சாப்பிட்டியே” என விசாரிப்பாள். அல்லது செல்லம் கொஞ்சுவாள். பள்ளிக்கூடம் சென்று திரும்புகையில் சில நேரங்களில் அவள் தலை மயிர் கலைந்து புத்தகப் பையைத் திண்ணையில் ஓங்கி எறிந்து விட்டு குறுக்கும் நெடுக்கும் முற்றத்தில் அலைவதுண்டு. அல்லது அம்மா அவளை அடிக்க விரட்டுகையில் ஓடிச் சென்று எங்கேனும் எவருமறியாமல் ஒளிந்து கொள்வாள். இருட்டு அவளை வந்து தொடுகையிலேயே வீடு திரும்புவாள். இத்தகைய நாட்களில் அவள் சுவேதாவை நெருங்குவதையோ பார்ப்பதையோ தவிர்ப்பாள்.
கருக்கு மட்டையால் செய்யப்பட்ட படலையைத் திறந்து கொண்டு அப்பா வருவதை கடைக்கண்ணால் பார்த்த சுகந்தினி அவரைப் பொருட்படுத்தாது வீட்டையே தலையில் தாங்குபவள் போலப் பொறுப்பாக நடந்து கொண்டிருந்தாள். அவளது நடத்தைகளில் வளர்ந்தவர்களின் பாவனைகள் வெளிப்பட்டது. கால்களை நிதானமாக எடுத்து வைத்தாள். ஒவ்வொன்றையும் நேர்த்தியாக அடுக்கி வைத்தாள். ஒவ்வொரு பாவனையையும் பெரியவர்களை விடச் சிறப்பாய் தனது அக்கா நடிப்பதாக சுவேதா எண்ணினாள். சுகந்தினியின் அப்பா திண்ணையில் அமர்ந்து கொண்டார். வியர்த்து நனைந்திருந்தார். அவரது வலக் காலில் மெல்லிய இரத்தக் கோடொன்று நீண்டிருந்தது. வேலை செய்யும் பொழுதுகளில் இடையிடையில் தன்னையும் அவர் வெட்டிக் கொள்வது வழமை.
சுகந்தினி முற்றத்தில் சிறிது நேரம் அங்குமிங்கும் பரபரத்து தத்துவெட்டியன் போல உலாவினாள். அப்பாவைப் பார்த்து விட்டு சுவேதாவை இழுத்து வந்து முன்னே வரிசையாக நடப்பட்டிருந்த குறோட்டன் மற்றும் எக்சோராச் செடிகளின் அருகில் நிறுத்தினாள். சுவேதா எந்த நோக்கமுமின்றி வானத்தையும் நிலத்தையும் குடிசையையும் செடிகளையும் கடைசியில் சுகந்தினியையும் பார்த்தாள்.
அருகிருந்த கிளுவ மரத்தின் இளந்தடியொன்றை எட்டிப் பறித்த சுகந்தினி சுவேதா கண்ணிமைத்துத் திறக்கும் நேரத்தில் முன் வரிசையில் நின்றிருந்த செடிகளைத் தாக்கத் தொடங்கினாள். “சொல்வழி கேக்க மாட்டியளே. இதுக்கே கோத்தையும் கொப்பரும் பள்ளிக்கூடம் அனுப்பிறவை. ஒழுங்காப் படிக்க மாட்டியளே. சனியள். நாயள். குப்பைச்சி. குப்பைச்சி. என்னடி உது உடுப்பு. தோய்க்கிறேல்லையே. நீ முதல்ல குளிக்கிறனியே. குப்பைச்சி. குப்பைச்சி” எனப் பெருங்குரலில் கத்தியபடி அடித்து இலைகளெல்லாம் சில்லம் பல்லமாய்ப் பறக்க வெறிபிடித்தவள் போல தன் கையால் இயன்ற திசைக்கெல்லாம் சுழற்றி ஓங்கி ஓங்கி அடித்தாள். ஒவ்வொரு விசிறலுக்கும் அவளது விழிகள் பயங்கரமாய் விரிந்தன. உடம்பு வில் வில்லென்று துடித்தது.
அப்பா திண்ணையிலிருந்து படபடவென இறங்கி காலைத் தாங்கித் தாங்கி ஓடிவந்து சுகந்தினியின் கையிலிருந்த கிளுவந் தடியைப் பிடுங்கினார். “உனக்கென்னடி விசரே. வடிவுக்கு வளக்கிற பூக்கண்டுகளை அடிச்சுப் பிய்க்கிறாய்” என்றார். சுகந்தினி சுவேதாவைப் போல பயந்தவள் இல்லை. றாங்கியானவள். அப்பாவுக்கு முன்னால் கோபம் மூக்கில் வேர்த்து முட்டியபடி நிற்க “தடியத் தாங்கோ. தடியத் தாங்கோ” எனத் திரும்பத் திரும்பச் சொன்னாள். “இவைக்கு வெளுத்தால் தான் சரி. குப்பைச்சியள். ஊத்தை உடுப்புப் போட்டிருக்குதுகள். ஈரோடையும் பேனோடையும் திரியுதுகள்” எனச் சொல்லிக் கொண்டே கைகளால் எட்டித் தடியைப் பறிக்க முனைந்தாள். அப்படிச் சொல்கையில் சுவேதா தானறிந்த அக்கா அவளே அல்ல என எண்ணியபடி நடுக்கம் படர பின் கால்கள் வாடித் தயங்க நின்று கொண்டிருந்தாள்.
அப்பா மெதுவாகக் கைகளைப் பின்னால் கட்டிக் கொண்டு தடியை மறைத்தார். சுகந்தினி பாவடையைச் சற்றுத் தூக்கிவிட்டு சீர்ப்படுத்திக் கொண்டு தன் நகங்களால் அப்பாவின் கைகளைக் கீறி அவரைக் கிள்ளி அடித்து “தா. தா” எனக் கத்தினாள். சுவேதா பயந்து போய் விலகி ஓடினாள். அப்பாவிற்கு சினம் எக்கணத்தில் பற்றியதென சுவேதா காணவில்லை. திரும்பி வந்து பார்த்த போது அவர் அதே தடியால் சுகந்தினியை அடித்துக் கொண்டிருந்தார். கால்களின் கீழே வரி வரியாகச் சிவப்புக் கோடுகள் விழுந்து படியத் தொடங்கின. அவள் துள்ளித் துள்ளி அடிவாங்குவதைப் பார்த்து சுவேதாவுக்குப் பாவமாய் இருந்தது. சுகந்தினியின் அருகில் பாய்ந்து சென்ற சுவேதா ம்மே ம்மே எனக் கத்தி அப்பாவை இடை மறித்தாள். படலை திறக்குமொலி கேட்க மூவரும் அத்திசையை நோக்கினர். தலைக்கு மேலே புல்லுக்கட்டுடன் கையில் அரிவாளுடன் வந்த அம்மா அதிர்ந்து போய் புல்லுக்கட்டைச் சரிய விட்டார்.
ஓடிவந்து அப்பாவின் கையிலிருந்த தடியைப் பிடுங்கி வீசினார். அப்பாவைப் பார்த்து அம்மா ஏசத் தொடங்கிய சில கணங்களுக்குள் பாய்ந்து சென்று அந்தத் தடியை எடுத்த சுகந்தினி சுவேதாவைப் பார்த்தும் பாராமல் அழுது முட்டி வீங்கி பார்வை மறைக்கும் கண்ணீருடன் அடிக்கத் தொடங்கினாள். சுவேதா பாய்ந்து துள்ளினாள். சுகந்தினி கலைத்துக் கலைத்து அடித்தாள். “குப்பைச்சி. குப்பைச்சி. சனியன்” என இடைவிடாது பேசிக்
கொண்டிருந்தாள். சுவேதா ஒரு மூலையில் சென்று சிக்கிக் கொண்டு ம்மே ம்மே எனப் பெருங்குரலில் கத்தியபடி நடுங்கினாள். சுவேதாவின் உடல் அதுவரை அறியாத நோக்கொண்டு திமிறியது. சில நொடிகள் சுவேதாவின் முகத்தைப் பார்த்து விழிகளில் உறைந்திருந்த திகைப்பை நோக்கிய பின்னர் கையிலிருந்த தடியை விசிறி எறிந்து விட்டுக் கிணற்றடிக்குச் சென்றாள். நீரள்ளி ஊற்றுமொலி பளார் பளார் எனக் கேட்டது.
இரவு முழுவதும் சுவேதா நடுங்கிக் கொண்டிருந்தாள். உடம்பில் சுகந்தினி அடித்த இடங்கள் கோடுகளாக நொந்தன. எவரும் வந்து இரவில் அவளைப் பார்க்கவுமில்லை.
இரண்டு சிறு கொம்புகள் வைத்தது போன்ற பிறை நிலவு வானில் ஒட்டிக் கொண்டிருந்தது. சுவேதா இருட்டில் உறைந்திருந்த குடிசையையும் வானையும் சரிந்து படுத்தபடி பார்த்தாள். குளிர்ந்த செம்மண் உடலின் படுபக்கத்திற்கு களிம்பு பூசியதைப் போல இதமாயிருந்தது. நிலவில் சுகந்தினி ஊஞ்சலில் அமர்ந்திருப்பவள் போலத் தோன்றினாள். சுவேதா விழிகள் அரைத்துயிலில் சரியும் வரை பிறை ஊஞ்சலை பார்த்திருந்தாள். எப்பொழுது நித்திரையானேன் என அறியாமல் விழித்த சுவேதாவின் உடலில் அதே கோடுகள் மீண்டும் வலித்தன. அதிகாலையில் முதல் வேலையாக இனிமேல் சுகந்தினியுடன் பேசுவதில்லை என முடிவெடுத்த சுவேதா பின்னர் சற்று அதை மாற்றிக் கொண்டு தன்னை அவள் அடித்ததற்கு வருந்தாத வரை ஒரு சொல்லும் ஒருவருடனும் கதைப்பதில்லை என முடிவெடுத்தாள். ஆயிரம் தானிருந்தாலும் சுகந்தினியின் தங்கையல்லவா. அவளின் றாங்கித்தனம் தனக்கும் இருக்க வேண்டுமென எண்ணிக் கொண்டாள்.
காலையிலிருந்து சுவேதா சுகந்தினியைக் காணவில்லை. பள்ளிக்கூடம் போக முன்னர் வந்து “போட்டு வாறண்டி” எனச் சொல்லி கையசைத்து விடை பெற்றுக் கொள்வாள். ‘ம்மே’ எனச் சொல்லி சுவேதாவும் பதிலுரைப்பாள். இன்று அவளது துள்ளும் கால்கள் தொம் தொம்மென ஒலிக்கும் ஓசை முற்றத்தில் கேட்கவில்லை. கயிறு கட்டப்பட்டிருப்பதால் ஒளிந்து நின்று வேவு பார்க்கவும் வழியில்லை. சூரியன் மெல்ல பொன்னச்சி மரத்தின் உச்சியில் ஒளிச்சாறு பூசிக் கொண்டிருந்த போது சுகந்தினியின் அப்பாவின் தலை போல குடிசை ஓசையற்று இருந்தது.
சுகந்தினியின் அம்மா தண்ணீர் அள்ளி சுவேதாவுக்கும் அவளது அம்மாவுக்கும் வைத்தபடி புறுபுறுத்துக் கொண்டிருந்தாள். குடிசையைப் பார்த்துக் கொண்டே “பள்ளிக்குடம் போற கள்ளத்தில காய்ச்சல் எண்டு நடிக்கிறியேடி” எனக் கத்தினார். சுகந்தினியின் அம்மா சுகந்தினியைப் பொரிபொரியெனப் பொரிந்து தள்ளுவது வழக்கமென்றாலும் அன்றைய ஏச்சில் சற்று வெக்கை கூடியிருந்ததை சுவேதா அவதானித்தாள். அவதானிக்கும் பொழுது தலையைத் திருப்பி நோக்கி பின் தலையை ஆட்டித் தான் அதைக் கவனிக்கவில்லை என உலகுக்கு மறுப்பாள். சுவேதாவின் காலடிகள் தம் தம்மென விழுந்து அரைபட்டுக் கிணற்றடியில் நீர்வார்க்குமொலி கேட்டது. “காய்ச்சலோட இப்ப ஆரடி உன்னக் குளிக்கச் சொன்னது” என மீண்டும் கத்தினார் அம்மா.
சருவச்சட்டிகள் வைக்குமிடம் சற்று நேரத்தில் சீனா வெடிகளைக் கொழுத்தி எறிந்ததைப் போல சலாம்புலாமென ஓசையிட்டது. “வாறனடி உனக்கு இப்ப” என இரைந்து கொண்டே போன அம்மா சில நிமிடங்கள் ஒலிகளை நிறுத்தினார். பின்னர் “என்ர பிள்ளை பள்ளிக்கூடம் போக வேண்டாம். அழாதையணை. என்ர செல்லமல்லே. உன்னை என்ன சொன்னாள் அவள். அவளெல்லாம் ஒரு ரீச்சரே. என்ர கண்ணுமணியல்லே. சாப்பிடடி குட்டி. நீயென்ர முத்தல்லே” என பெரிய ஆட்டைப் போல அம்மா கத்துமொலியைச் சுவேதா கேட்டாள்.
மத்தியான நேரம் மரங்களின் நிழல்கள் தங்களுக்குத் தாங்களே கூடாரமிட்டுக் கொண்டு குடிசையைச் சுற்றிலும் நின்றன. சுகந்தினி சுவேதாவின் அருகால் சென்று வீட்டு மூலையில் நின்ற பொன்னொச்சி மரத்தை நோக்கிய பின் சுவேதாவை நோக்காமல் தலையை மற்றப்பக்கம் திருப்பிக் கொண்டு சென்றாள். சுவேதாவால் அதைப் பொறுக்கவே முடியவில்லை. பந்திப்பாய் அவிழ்வதைப் போல சரக்கென்று விரிந்த நாவைக் கட்டுப்பட்டுத்தி தன் போராட்டத்தில் அவள் உறுதியாயிருந்தாள். சுகந்தினியே வந்து முதற் சொல் உரைக்காமல் இந்த உலகத்திற்கு நான் எதையும் சொல்ல மாட்டேன் என மீண்டும் சபதமெடுத்துக் கொண்டாள்.
சூரியன் வீட்டுக்குப் பின்னால் இறங்கிய பொழுது அம்மாவின் முகம் போல குடிசையின் நிழல் நீண்டு முற்றத்தில் விழுந்தது. அம்மா அன்று வயல் வேலைக்குச் செல்லவில்லை. அவர் சுவேதாவின் கழுத்துக் கயிறைக் கழற்றி விட்டார். சுவேதா மெல்ல தன் உடலை நடுக்கி உயிரேற்றுக் கொண்டாள். முற்றத்தின் விளிம்பில் நடந்து வந்த போது சுகந்தினி ஊஞ்சலின் கயிற்றை அதற்கு அருகிலிருந்து சடை பின்னுவதைப் போல முறுக்கிக் கொண்டிருந்தாள். சுவேதா அவளை நோக்காது வளர்ந்தவள் போல பாவனை செய்து கொண்டு “எனது இலையை நானே பொறுக்கிச் சாப்பிடுவேன். நீ எனக்குத் தீத்திவிடத் தேவையில்லை” என முணுமுணுத்தபடி நடந்தாள். சுகந்தினி தன்னை ஏறெடுத்தும் நோக்கவில்லை எனக் கண்டவள் அவளுக்கு அருகில் விழுந்திருந்த சில மாவிலைகளை மணப்பது போல மூக்கை உரசி உரசி அப்பால் நடந்து சென்றாள். “நீயென்பவள் இருப்பதையே நான் கவனிக்கவில்லை அக்கா” என மனதிற்குள் முனகியபடி சிறு பஞ்சுக் கரம் போன்ற வாலைச் சுற்றிச் சுற்றி நடந்தாள்.
படலை திறந்திருந்தது. பின்னேரச் சூரியனின் ஒளி தோகை போல விரிந்து புல்வெளியிலும் ஒழுங்கையிலும் படிந்திருந்து விசிறியது. அம்மா ஒழுங்கை வாசலில் நின்றிருப்பது தெரியவே சுவேதா மெல்ல நடந்து வெளியே சென்றாள். கயிறின்றி நடப்பதை விட சுகந்தினியின்றி நடப்பது அவளுக்குப் புதியதாய் இருந்தது. ஒரு வெடுக்கில் பாய்ந்து ஒழுங்கை முனை வரை ஓடிச் சென்றாள். அம்மா அப்பால் சென்று மறைவதைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பெரிய ஒழுங்கையின் நாய்கள் வீராவைக் கடித்து விரட்டிக் கொண்டிருந்தன. வீரா தன் முழு வீரத்தையும் திரட்டி வள் வெள்ளென ஈனசுவரத்தில் முனகியது. வாளைப் போல வாலைச் சுழற்றியது. வீரா தன்னை விட நான்கு மடங்கு பருத்த நாய்களிடம் மோதிக் கொண்டிருந்தது. மண்ணிற வண்ணம் கொண்ட நாயொன்று தன் பெரிய தோற்பை போன்ற வாயைத் திறந்து கூர்மையான பற்களில் எச்சில் ஒழுகக் குரைத்துப் பாய வீரா “செத்தேன் பிழைத்தேன்” என ஓடத் தொடங்கி சுவேதாவை நோக்கி வந்தது. அந்த ஒழுங்கை முனைவரை துரத்தி வந்த பெரிய நாய்கள் வீரா ஒழுங்கைக்குள் சென்றதும் அங்கிருந்தபடியே வீராவைக் குரைத்து வெருட்டின. சுவேதா தன் குரலையும் அந்த அநீதிக்கு எதிராக எழுப்ப வேண்டும் எனச் சத்தியாவேசம் கொண்ட போதும் மெளனப் போராட்டத்தைக் கைவிட மனம் ஒப்பவில்லை.
வீரா சுவேதாவைத் தாண்டி மின்மினிப் பூச்சி போலப் பறந்து சென்று வீட்டுப் படலையில் நின்று பெருங்குரலில் குரைத்தது. ‘நீயெல்லாம் ஒரு நாயா’ என்பது போலப் பார்த்த சுவேதா வீராவுக்கும் பெரிய நாய்களுக்கும் இடையில் சமாதான தேவதை போல நின்றிருந்தாள். பெரிய நாய்கள் சுவேதாவைக் கண்டு குரைக்கத் தொடங்கி மெல்ல உறுமி நெருங்கிய போது தான் சுவேதா தான் ஒரு ஆட்டுக்குட்டி என்பதை மெய்க்கணத்தில் கண்டு நடுக்குக் கொண்டாள். சுகந்தினியை நோக்கி ஓடிவிட வேண்டுமெனத் திரும்பிய போது எதுவோ ஒன்று ஓங்காரமாய் அவளுக்குள்ளிருந்து எழுந்து வர ஓசையே எழுப்பாமல் தனக்குக் கால்கள் இருப்பதையே மறந்து காற்றில் பாய்ந்து படலையை நோக்கி விரைந்தாள்.
படலை வாசலில் நின்ற வீரா பறந்து வந்த சுவேதாவைக் கண்டு ஆவ் என வாயைத் திறந்து கிலிபிடித்து முற்றத்தில் பாய்ந்து எங்கென்று தெரியாமல் ஓடி மறைந்தது. சுவேதாவின் உடல் அவள் கட்டுப்பாட்டை மீறி வெடவெடவென நடுங்கத் தொடங்கியது. புழுக்கைகளும் சாரை சாரையாக விழுந்து கொண்டிருந்தன. சுகந்தினி படலையைக் கடந்து சுவேதாவுக்கு முன் சென்று பெரிய நாய்களை நோக்கினாள். சுகந்தினி “வள் வள். ஊ ஊ” எனக் குரைத்தாள். அவளது குரலைக் கண்ட நாய்கள் முதலில் யோசித்தாலும் பின்னர் இவள் ஒரு சிறுமியென எண்ணியவர்கள் போல திரும்பக் குலைத்து ஒழுங்கையைக் குரைக்கும் இசைப்போர் ஆக்கினர். சுவேதா தானும் சேர்ந்து குரைக்க வேண்டுமெனத் தொண்டையைக் கரகரப்பாக்கிக் கொண்டாள். சுகந்தினியைப் பார்த்தாள். சுகந்தினி தன்னை மறந்து ஒரு வெறி நாய் போலக் குரைத்தபடி ஒழுங்கையின் முனைவரை ஓடினாள். கையில் ஒரு கிளுவந்தடி. பெரிய நாய்கள் அவள் தங்களை நெருங்கிவிட்ட கணத்தில் வால்களைச் சுழற்றித் திருப்பியபடி படையைப் பின்னகர்த்தி ஓடின.
அவளின் கையை விடப் பெரிய கல்லொன்றை எடுத்து தன்னால் முடிந்த வரை பெரிய நாய்களை நோக்கி ஓங்கி எறிந்தாள். பெரிய நாய்கள் வீடுகளுக்குள் சென்று குரைத்து ஓலமிட அவர்களின் எஜமானர்கள் வெளியே வந்து ஒழுங்கையைச் சுற்றிலும் நோக்கி சுகந்தினியைக் கண்டனர். ஒரு கணம் நின்று தயங்கிய சுகந்தினி அவர்களைப் பார்த்து வள் வள்ளென வெறிபிடித்துக் குலைத்து ஊ ஊவென இரண்டு கைகளையும் பேய்களைப் போல வைத்தபடி ஊளையிட்டாள். அவளது பாவாடைச் சக்கரம் சுழன்று திரும்பியது. உடலில் வேறெவரோ வந்து இறங்கியது போல ஆவேசமாகக் கூச்சலிட்டாள்.
பின்னர் சட்டென்று திரும்பி விழித்துக் கொண்டு நின்ற சுவேதாவை நோக்கி ஓடி வந்தாள்.
சுகந்தினி தன்னை நோக்கி ஓடிவந்த ஒவ்வொரு கணத்தையும் சுவேதா திறந்திருந்த இரண்டு கறுப்பு போளைக் கண்களும் மினுங்க நோக்கினாள். போரொன்றில் ஒற்றையாய் வென்று திரும்பும் தன் அக்காவை அழைக்கவெனத் தன் அடிவயிற்றிலிருந்து முதற் பால் சுரப்பதைப் போல ம்மே எனத் திசைகளை உலுக்கிக் கத்தினாள். அது ஒரு இசை போல காற்றில் பரவியது. அந்த ஒரு கத்தலில் சுகந்தினியின் விழிகள் மழை தேங்கிய இலைகளைக் காற்று அலைத்துக் கொட்டுவது போல கண்ணீரை இறைக்கத் தொடங்கின. சுவேதா அடிக்கால்கள் துள்ளியெழ அந்தரத்தில் பாய்ந்து பாய்ந்து கத்தினாள். ம்மே. ம்மே என வாழ்த்தினாள். நானும் உன்னுடன் இங்கு நின்றிருக்கிறேன் என ம்மே கொட்டினாள். ஓடி வா அக்கா என ம்மே பாடினாள்.
சுவேதா துள்ளியெழுந்த அந்தரக் கணமொன்றில் அவளை அள்ளியணைத்து மார்போடு சேர்த்துக் கொண்டு சுகந்தினி முத்தமிட்டுத் தள்ளினாள். சுவேதா அவளது கழுத்தையும் கன்னங்களையும் நாவால் நக்கிச் சிலிர்த்தாள். வீரா படலை வாசலில் நின்று சிரிப்பது போல முழுப்பற்களும் தெரிய வாயைத் திறந்தபடி நின்றான். ஒழுங்கை முனையில் மீண்டும் படைதிரட்டி வந்திருந்த பெரிய நாய்கள் குரைப்பு எழாமல் சுகந்தினியையும் சுவேதாவையும் நோக்கினார்கள். சுவேதாவை ஒரு மேகப் பொதியெனத் தூக்கியபடி சுற்றிச் சுழன்றாள் சுகந்தினி. காற்றில் உருப்பட்ட அனைத்தும் மங்கலாகிக் குழைய சிரித்துச் சிரித்து விக்கெலடுத்த சுகந்தினியுடன் சேர்ந்து இருவர் மட்டுமேயென மிதந்து “அக்கா. அக்கா” எனக் கத்தினாள் சுவேதா. சுகந்தினி முத்தமிட்டு முத்தமிட்டு அழுத கண்ணீரின் ஒரு துளி சுவேதாவின் நாவில் பட்டு நின்று நடுங்கி தொண்டைக்குள் நுழைந்தது. ஒரு துளி அன்னையின் பால்.
முகப்பு ஓவியம் : பிரகாஷ் கமல்