மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்!

மலரினைச் சாத்துமென்!

இரத்தமூறிடும் கால இடுக்கில்
புதைக்கப்பட்ட நண்பரின் மேலொரு மலரினைச் சாத்துமென்
மரண ஊற்றில் கரைந்தவர் முகங்களைத் தேடுதல் அபத்தமேயாயினும்
உயிர்களை இழந்தும்
ஆழப்பாயும் வேர்களின் வீர்யம்
மண் தான் அறியும்
இரைச்சலை மேவி இசைக்கும் நாளில்
எம் நண்பர்கள் இசைத்த கீதங்களாலொரு
மலரினைச் சாத்துமென்!

அஸ்வகோஷ்

*

உடல்

கடலோரம் தலை பிளந்து கிடந்த உடல்

இறப்பிலும் மூட மறுத்த கண்களின்
நேர் கொண்ட பார்வையில் மிதக்கிறது:
எதிர்ப்பு,
ஆச்சரியம்,
தவிப்பு,
தத்தளிப்பு,
கொதிப்பு,
ஆற்றாமை,
முடிவற்ற ஒரு பெருங்கனவு.

சேரன்

*

செம்மணி 04

உப்பு வயல்களின் கீழே
துரதிர்ஷ்டவசமான அந்த மனிதர்களை
அவர்களின் தேகத்தை உலரவிடாது
பெருகும் நேசர்களின் கண்ணீரை
கரிய நீர் புற்களின் மேலே விடாது காயும்
பயங்கர நாட்களின் சாம்பரை
தீண்டுவார் யாருமில்லை

விளம்பரப் பதாகைகளின் கீழே
மறத்தலின் விளிம்பிலிருந்தன அவர்தம் நினைவுகள்…

கல்லாலல்ல;
நீராலுமல்ல;
வளியாற் கட்டுகிறேன்
விடாது பின்தொடருமொரு ஒலியால்
அவர்களிற்கொரு நினைவிடம்.

பா. அகிலன்

*

நெய் உறிஞ்சிய தீபத்தின் ஒளி
பெருவெளிக்குத் திரும்புகின்றது

புதைக்கப்பட்டவர் யார்?
காற்றில் கரைந்துபோனவர் யார்?
புதிரின் ஆழ் இடுக்குகளில்
சொருகப்பட்டிருக்கின்றன சாவுகள்

இனி வரப்போவது யாருமில்லை
ஆயினும்
நினைவுகளின் புதைவிடத்தில்
நான் இரண்டு பூக்களை வைக்கின்றேன்

நினைவு கூரக்கூடிய
நினைவு கூர முடியாத
எல்லோருக்குமாகவும்.

சித்தாந்தன்

*

அவர்கள் எமது நினைவிடங்களைச் சேதப்படுத்துகிறார்கள்
அவமதிக்கிறார்கள்
அல்லது
திருடுகிறார்கள்

எமது சுடர்களின் ஒளி அவர்களுக்கு அச்சமூட்டுகின்றது

தாயின் கண்ணீர் அவர்களை
நிலை குலையச் செய்கின்றது

அவயவங்களை இழந்த,
உடலெங்கும் தழும்புகள் கொண்ட எனது மனிதர்களின் முன்
அவர்களின் தலைகள் தாழ்ந்துள்ளன

பிரகடனச் சொற்கள்
அவர்களை நிம்மதியிழக்கச் செய்கின்றன

பதற்றமுற்று
அவர்கள்
அவசரஅவசரமாக எனது நாட்காட்டியின் சில தாள்களைக் கிழித்து
தடயமின்றி அழிக்கிறார்கள்

நானோ
நிதானமாக
மிக நிதானமாக
எனது குழந்தைகளின் பாத்திரங்களை
உப்பற்ற,
எந்தச் சுவையுமற்ற
கஞ்சியினால் நிரப்புகின்றேன்

முடிவுறாத தாகத்தை
அருந்தும் படிக்கு

(2021 May 18)

*

மயானகாண்டம் – பிந்திய பதிப்பு

மகனே லோகிதாஸ்!
பிணக்காட்டின் சாம்பர் வெளியெங்கும்
பொய்மையின் துகள்கள்

மரணம் கனக்கும் உனதுடலை தாங்கி நிற்கின்றேன்

மனங்கொள்ளாத் துயருடன்
என் காலடியில் முடிந்துபோன பாதையொன்றிலிருந்தே
உன்னைக் கண்டடைந்திருந்தேன்

மூன்று காசுகளையும்
வெள்ளைத்துணி ஒன்றையும் ஈயாத
அவர்களின் இறுதி இரக்கத்தையும் நிராகரித்தாயிற்று

அந்தோ!

வானிலிருந்து இறங்கி வருகிறது
உண்மையின் மெல்லிய இறகொன்று
காற்றில் அந்தரித்தலைந்து
ஈற்றில்
சிதையில் வீழ்ந்து பொசுங்கிற்று
அதுவும்

துரோகத்தின் பசிய நிழல் படர்கிறது
சலித்துப்போன கனவொன்றின்
பழுப்பேறிய பிரதி மீது

இனி
இங்கு நிற்பதில் பயனேதுமில்லை
திரும்பிவிடலாம் நாம்

வரலாற்றின் நீண்ட மௌனத்தை
முன் ஏகிக் கடக்கும் பின்னொரு நாளில்
அவர்கள் அறியட்டும்
எந்த உண்மையும் உன்னை உயிர்ப்பிக்கவில்லை என்பதை.

பிரியாந்தி

TAGS
Share This