முள்ளிவாய்க்கால் நினைவு கூரல் : JNU

இம்முறை மூன்றாவது முறையாக டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மே 18 நினைவு கூரலினைச் செய்திருக்கிறார்கள் அங்குள்ள தமிழ் மாணவர்கள். இரண்டு வருடங்களுக்கு முன்னர் பிரிந்தா ஜே என் யுவில் படித்துக் கொண்டிருந்த பொழுது அங்கிருக்கும் தமிழ் மாணவர்கள் நினைவு கூரலினைச் செய்ய விரும்பியிருந்தார்கள். அங்கு அப்பொழுது படித்துக் கொண்டிருந்த தமிழ் நாட்டு மாணவர்களும் பிரிந்தாவும் சிங்கள ஆற்றுகைக் கலைஞரான பிரபுத்தாவும் இணைந்து நினைவு கூரலினை ஒழுங்கு படுத்தியிருந்தார்கள். பிரிந்தாவும் நானும் அங்கு காட்சிப்படுத்த வேண்டிய கவிதைகளைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்தோம்.
(2023)
முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சினார்கள். பகிர்ந்தார்கள். இம்முறை நினைவு கூரலை ஜே.என். யு தமிழ் மாணவர் ஒன்றியம் நிகழ்த்தியிருப்பதன் ஒளிப்படங்களை நண்பர் தமிழ்நாசர் அனுப்பியிருந்தார். சில காலங்களுக்கு முன்னர் பிஜேபியின் மாணவர் அமைப்புகளில் ஒன்றான ஏபிவிபி குண்டர்களால் தாக்கப்பட்டவர். தமிழ் மாணவர்களுக்கான போராட்டங்களில் முன்னணியிலும் ஈழத் தமிழர்கள் குறித்த கரிசனையும் கொண்ட முன்களச் செயற்பாட்டாளர் தமிழ்நாசர். இம்முறை நிகழ்வை வழக்கறிஞர் ரித்து அனுபமா, மாணவர் சூரியக்குமார் ஆகியோர் முன்னிலையில் நின்று நடாத்தியிருக்கிறார்கள்.(2023)
தொடர்ந்து பாலற்ற உப்பற்ற கஞ்சியை அங்கிருக்கும் ஹிந்தியும் மலையாளமும் இன்னும் நாமறியாத பலமொழிகளும் பேசும் மாணவர்களின் நாவுகளிலும் படரட்டும். ஒரு கசப்பான பானம் நினைவில் தங்குவது போல.