கொடிறோஸ் – வாசக வகைகள்

கிரிசாந் கொடிறோஸ் எழுத ஆரம்பித்த காலத்தில் இருந்தே புத்தகத்திற்காக ஆர்வத்துடன் காத்திருந்தேன். வாசித்த பின் ஒரே ஒரு ஏமாற்றம் குறு நாவலாக இல்லாமல் நாவலாக இருந்திருக்கலாம் என்பதாகும். நான் தீவிர இலக்கியத்திற்கு புது வாசகன். சில மாதங்களாக தொடர்ந்து நாவல்களையே வாசிப்பதனால் எனக்கு அப்படித் தோன்றி இருக்கலாம்.
கதையின் வெளிப்பாடு பற்றி தர்மு பிரசாத் பதிப்புரையில் குறிப்பிட்ட குறுநாவலின் தன்மையை போலவே பல சிறுகதைகளின் தொகுப்பு போலவும், நாவலின் ஒரு சுருக்கமாகவும் கொடிறோஸ் தோன்றியது.
என்னைப் பொறுத்தவரை புனைவு எழுத்தாளனின் முதன்மையான பணி எழுத்தின் மூலம் வாசகனை கதையினுள் வாழவைப்பதாகும். அதில் எந்த குறையும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கதையின் போக்கு நிதானமாக, வலைப்பின்னலான சமூகத்தின் விரிந்த நோக்குடன் தனி மனிதனின் நுண் உணர்சிகளை விவாதித்து, யாழ்ப்பாணத்தில் உள்ள திருநெல்வேலி பிரதேசத்தையும் மக்களின் வாழ்க்கை முறைகளையும் விபரித்து சென்றது. வாசித்து செல்கையில் கதாபாத்திரத்திரங்களின் உணர்வுகளை நானும் அடைந்து, அடைந்து கடந்து சென்றன்.
பின்வரும் விடயங்கள் இந்த இடத்தில் சம்பந்தம் இல்லாமல் இருக்கலாம். இருந்தாலும் ஒரு தீவிர இலக்கிய வாசகனாக சக வாசகர்களுக்கு பகிர்ந்து கொள்ள சொல்கிறேன்.
கொடிறோஸ் நாவலின் இரு விமர்சனங்களை கவனித்தேன்.
முதலாவது கடிதத்தில்
“வர்ணனை தான் கொஞ்சம் கூடி போச்சு. மற்றது முடிப்பு வந்து கொஞ்சம் பார்த்து இருக்கலாம் என்று நினைக்கிறேன். முடிப்பு கொஞ்சம் சப்பையா முடிஞ்ச மாதிரி இருக்கு. நான் எதிர்பார்த்த அளவுக்கு முடிப்பில்லை என்றாலும் பரவாயில்லை உங்களுடைய முயற்சிக்கு நான் பாராட்டுகின்றேன்”
இது உண்மையில் ஒரு தீவிர இலக்கிய படைப்பை கேளிக்கையாக அணுகும் போது ஏற்படும் உணர்வு. உதாரணமாக எனக்கு இன்று இரண்டு மணிநேரம் சும்மா இருக்கிறது. ஆகவே ஏதாவது செய்யலாம் என எண்ணி ஒரு திரைப்படம் பார்ப்பது போல. நானும் ஆரம்பத்தில் புனைவுகளை வாசிக்க ஆரம்பித்த போது வர்ணனைகளை skip செய்து வாசித்து கதையின் தரவுகளை மட்டுமே எடுத்துக்கொள்வது வழக்கம். அதில் உள்ள பிரச்சினை என்ன வென்றால் தட்டையான அனுபவம் மட்டுமே கிடைக்கும். ஆனால் சலிப்பை பார்காமல் வர்ணனைகளை உணர்ந்து வாசிக்கும் போது தான் எழுத்தாளனின் ரசனையை விளங்கிக்கோள்ள முடியும். அதன் பிரதிபலனாக எம் ரசனை அதிகரித்துக்கொண்டே இருக்கும். அதற்கு வாசிப்பை time passற்காக அணுகாமல். நேரம் ஒதுக்கி life style ஆக மாற்ற வேண்டும்
இன்னுமொரு கடிதத்தில் “சுகந்தன் போல பலர் இங்கு பல இழப்புக்களை தம்முள் புதைத்து வாழ்கிறார்கள். வாய் விட்டு அலறவும் தெம்பில்லை, இலகுவில் கடந்து வாழவும் வழியில்லை. ஆனால் வாழத்தானே வேண்டும். இனிய நினைவுகளையும் கசப்பான அனுபவங்களையும் சுமந்தபடி… தன் ஆசைகளை தன்னுள் அடக்கி வாழ்ந்து முடிக்கும் அம்மா highlight… அவரிற்கு ஆதரவாக இறுதி வரை இருந்த கணவர் சுப்பர்” இவ்வாறான அனுபவ பகிர்வு எழுவதற்கான காரணம் ஆழமற்ற மேலாட்டமான வாசிப்பு. இது sympathy களை தான் உருவாக்கும். கேள்விகளை அல்ல. இதனால் எம் வாழ்க்கை குறித்த poit of view எப்போதும் மாறாது. தீவிர இலக்கியத்தின் வேலை வாசகனுக்கு நிகர் வாழ்வனுபவத்தை அளிப்பது. அவ்வனுபவத்தை empathy செய்து எழும் கேள்விகளை ஆராய்வது, வாசித்தவர்களுடன் விவாதிப்பதன் மூலம் மட்டுமே இவ்வனுபவங்களின் ஊடாக எம் point of view ஜ சரிப்படுத்த முடியும். அவ்வாறு சரிப்படுத்தப்படும் போது எம் personality அதுவாக உயரும்.
மாக்கி
*
இந்தக் குறிப்பினை எனது நண்பரும் வாசகருமான மாக்கி எழுதியிருக்கிறார். அவரது குறிப்பை ஒட்டி சில விடயங்களை கவனப்படுத்தலாம். ஓர் இலக்கிய ஆக்கத்தின் மேல் இரண்டு பரந்தளவு மட்டத்திலான கருத்துகள் உண்டாகி வரும்.
ஒன்று, வாசக அபிப்பிராயங்கள். அவை பல்வேறு மட்ட வாசகர்களிடமிருந்து உணர்வுப் பிரதிபலிப்புகளாகவும் நேரடியான அவதானிப்புகள் கொண்டதாகவும் இருக்கும். பெரும்பாலும் கதையில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதை தங்களின் வாழ்க்கை அனுபவங்களுடன் ஒப்பிட்டு அது மெய்தான் எனத் தனக்குத் தான் உணரும் கணங்களைக் கொண்டு அந்த இலக்கியத்தின் மீதான தனது இணைப்பை உண்டாக்கிக் கொள்ளும் வாசல்களை அடைபவர்கள் ‘அடிப்படை வாசகர்கள்’. அது ஒவ்வொரு ஆக்கத்திற்கும் முதன்மையான அம்சங்களில் ஒன்று. ஒரு வாசகர் தன்னளவில் தன்னை இலக்கியத்துடன் இணைத்துக் கொள்ளும் சில அம்சங்கள் எவ்விதம் இலக்கியத்தில் உண்டாகின்றன என்பது ‘தீவிர வாசகர்களின்’ கேள்வி. என்றைக்குமுள்ள எதுவோ ஒரு கேள்வியையோ ஓர் அம்சத்தையோ கொண்டிருப்பது இலக்கியத்தின் அடிப்படை என்பதை அறிந்தவர்கள் அவர்கள். ஆகவே அதற்கு மேல் அந்த இலக்கியம் எந்த வகையான இலக்கிய அனுபவத்தை மற்றும் பார்வைகளை உண்டாக்கி அளிக்கின்றது என்பது அவர்களின் தேடலாக இருக்கும்.
மூன்றாவது வாசகர் தளத்தை ‘தேர்ந்த வாசகர்’ எனக் கொள்ளலாம். தேர்ந்த வாசகர்கள் இலக்கியத்தின் சமதையான ஓட்டக்காரர்கள். கடந்ததும் இன்றும் இலக்கியத்தில் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதன் திரண்ட வார்ப்புகள். அவர்களே மெய்யான இலக்கியத்தைக் கண்டடைந்து அதை என்றைக்குமுள்ள சமூகத்தின் ஆழ்மன நீரோட்டத்தில் கலப்பவர்கள். அவர்களது நோக்குகள் எழுத்தாளரின் பயணத்தில் முக்கியமானவை.
கொடிறோஸ் தொடர்பில் இதுவரை வந்திருக்கும் குறிப்புகள் நேரடியான மனவெழுச்சி சார்ந்தவை. ஆனால் என்னளவில் மகிழும் விடயம் ஒன்றுண்டு. நான் வாழ்வது மேம்பட்ட காலத்தில் என்ற எண்ணத்தை கொடிறோஸ் எனக்கு அளித்துள்ளது. வாழ்க்கைக்குத் திரும்புதல் எனது முதலாவது கவிதைத் தொகுப்பு. முன்னரும் அக்கவிதைகள் பல இடங்களில் வெளியாகியிருந்தவை. இன்று வரை நோக்கினால் ஒரு குறிப்பு மட்டுமே லலிதகோபன் எழுதியது வெளியாகியிருக்கிறது. அவரும் ஒரு தீவிர வாசகர். இலக்கியம் எனும் பள்ளியில் தன்னை இணைத்துக் கொண்டவர். குன்றாத வாசிப்பும் இலக்கியம் அளிக்கும் அன்றாடப் பரவசமும் உள்ளவர். அதைத் தவிர ஒரு சிறு குறிப்பும் கூட எனது கவிதைகள் பற்றி இதுவரை வெளியாகியிருக்கவில்லை. யாரும் எழுதவில்லை. புத்தக வெளியீட்டில் உரையாற்றிய தானா விஷ்ணு மற்றும் கருணாகரன் ஆகியோரது கருத்துகளையும் சேர்த்தால் மொத்தம் மூன்று வகையான பார்வைகள் எனது கவிதைத் தொகுப்பிற்கு இதுவரை கிடைத்திருக்கின்றது.
கவிதைகளுக்கு இத்தகைய சிக்கல் மேலும் கூர்மையானது. கவிதைகளுக்கான வாசகர்கள் இரகசிய சமூகமொன்றின் இரகசிய உறுப்பினர்கள் போன்றவர்கள். ஆனால் கவிதை எங்கோ எப்படியோ வாழும் என்ற எண்ணம் பேய்கள் பற்றிய ஒரு நம்பிக்கையைப் போல எனக்குள் வாழ்கிறது. ஆகவே அவர்கள் கவிஞர்களை விட மெளனமானவர்கள். வேறு எந்த விமர்சகரோ எழுத்தாளரோ அதைப் பற்றி கவனம் செலுத்தவில்லை.
அது நான் ஏற்கெனவே அறிந்த ஒன்று தான். பெரும்பாலும் கவிதைகளுக்கு வரும் கட்டுரைகளோ குறிப்புகளோ அரிதானவை. புதிய கவிஞர்களைக் குறித்தும் கவிதைகள் பற்றியும் நானே தொடர்ந்து எழுதி வருகிறேன். எதிர்காலத்தில் அதுவொரு முதன்மையான ரசனைத் தரப்பாக மாறும். அதுவே வரலாற்றின் இயற்கை விதி.
ஆனால் கொடிறோசுக்குக் கிடைத்த கடிதங்கள் நான்கு வரிகளாகவோ அல்லது ஒரு பந்தியாகவோ கூட இருந்தாலும் அது ஒரு கதைக்கு நிகழும் எதிர்வினையாகவே கொள்கிறேன். கதைக்கு அது நிகழும். நேரடியாக உரையாடும் பாவனை கதைக்கு உண்டு. கற்பனையின் மூலம் தன்னை அங்கு பொருத்தி ஒரு நிகர்வாழ்வின் அனுபவத்தை பெற முடியும் வாய்ப்பும் உண்டு. ஆகவே ஒவ்வொரு குறிப்பும் வரியும் கொடிறோஸ் அளித்திருக்கும் நிகர்வாழ்க்கைக்கான கற்பனை வெளியை அனுபவித்ததன் வெளிப்பாடு. ஆகவே அதில் குறையோ நிறையோ இல்லை. ஆனால் இங்கு நான் கவனப்படுத்த விரும்புவது இங்கிருக்கும் எழுத்தாளர்களில் நூற்றுக்குத் தொண்ணூற்று ஆறு பேருக்கு இதுவரை இத்தகைய தொடர் குறிப்புகளோ கடிதங்களோ வந்ததில்லை. பெரும்பாலும் சக எழுத்தாளர்கள் எழுதும் மதிப்பீட்டுக் குறிப்புகளே உண்டு. ஒரு விதிவிலக்காக சயந்தனின் ஆதிரை, அஷேரா நாவல்களுக்கு மொத்தமாக ஐம்பதுக்கும் மேலான குறிப்புகள் வெளியாகியிருக்கின்றன. அவை அவரது தளத்திலும் உண்டு. ஷோபா சக்தியும் அ. முத்துலிங்கமும் தமிழின் முதன்மை எழுத்தாளர்களின் இடத்தை பெற்றவர்கள். அவர்களுக்கும் கட்டுரைகளும் குறிப்புகளும் எழுதப்படுவதுண்டு. ஆனால் அவர்களுக்கும் இயல்பான, தொடர்ச்சியான உரையாடும் ஒரு வாசகத் திரட்சி உருவாகி வரவில்லை. உரையாடல் மிக அரிதாகவே வெளியாகின்றது.
எமது எழுத்தாளர்களை நோக்கி வாசகர்கள் உரையாடாமைக்கு முதன்மையான காரணம் இங்கிருக்கும் எவருக்கும் தன்னை ஓர் எழுத்தாளராக சமூகத்தின் பேருருவத்தின் முன் எழுந்து நிற்கச் செய்யும் தற்துணிவும் நிமிர்வும் இல்லை. எனக்கு அது உண்டு. நான் தொடர்ந்து வாசகர்களிடம் எழுத்தாளர்களுடன் உரையாடுங்கள், விவாதியுங்கள் என்று ஒரு மடிப்பிச்சைக்காரனைப் போலக் கோரிக்கொண்டே இருப்பவன். எனது கோரிக்கை கொஞ்சம் கொஞ்சமாகச் செவிமடுக்கப்படுவதன் விளைவுகளைப் பார்க்கிறேன். இரண்டாவதாக எழுத்தாளர்களுக்கு வாசகர்களுடன் உரையாடுவதில் தாழ்வுச்சிக்கல்கள் நிறைய உண்டு. சக எழுத்தாளர்களுடன் உரையாடும் பொழுதே கூட தாழ்மை வெளிப்படுபவர்களும் இருக்கிறார்கள். ஏனெனில் பெருமளவானவர்களுக்கு தான் எழுவது இலக்கிமா எனும் எண்ணமுண்டு. அவை எங்கேனும் சுட்டிக்காட்டப்பட்டால் இயல்பாகவே புண்படுபவர்களும் கூட. ஆகவே தான் நல்லெண்ணம் கருதி அவர்கள் இலக்கியத்தில் கருத்திலெடுக்கப்பட்டு உரையாடப்படுவதில்லை.
மேலும் வாசகர்களுடன் இலக்கிய விவாதம் புரிந்து பயிற்சியற்ற எழுத்தாளர்களையும் எழுத்தாளர்களுடன் உரையாடி பழக்கமற்ற வாசகர்களினாலும் ஆனதே ஈழத்து இலக்கியச் சூழல். பெரும்பாலானவர்கள் பேச்சில் சலிப்புத் தட்டுபவர்கள். தகவல்களை அள்ளி இறைப்பவர்கள். தனக்கென்று சிந்தனைப் பள்ளியையோ ஆசிரியர்களையோ கொண்டிருக்காதவர்கள். ஆகவே அவர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கும் ஒரு குடிகாரனின் சாறத்தைப் போன்றவர்கள் (எந்த நேரமும் கழன்று விழக் கூடியவர்கள் என்ற அர்த்தத்தில்). இவை எமது சூழலின் வாசக அபிப்பிராயங்கள் பற்றிய என் சுருக்கமான பார்வை.
விமர்சன மதிப்பீடு நிகழ எந்தவொரு ஆக்கத்திற்கும் சில காலம் ஆவதுண்டு. அது வரலாற்றில் வைத்து நோக்கி இலக்கிய ஆக்கத்தை மதிப்பிடுவது. ரசனையின் தரப்பினை சார்ந்தது. நான் எழுதும் எழுத்து முறையின் ஆக்கம் பற்றிய ரசனை மரபு ஈழத்தில் சிறு நார் போன்றது. பெரும்பாலான நாவல்களோ குறுநாவல்களோ எழுத்தாளர் தர்மு பிரசாத் அடிக்கடி குறிப்பிடுவது போலக் கதைச் சுருக்கங்களே. கதைகளின் தொகுப்பை நாவலென்று மயங்கும் எழுத்தாளர்களும் வாசகர்களுமே இங்கு பயிற்றப்பட்டிருக்கிறார்கள். துயரமான நூறு கதைகளின் திரட்டை நாவல் என்று நம்புகிறார்கள். நான் ஏற்கும் நாவல் எனும் வகைமை எனது இலக்கிய ஆசிரியர் ஜெயமோகன் குறிப்பிடுவது போன்று வரலாற்றையும் தத்துவத்தையும் இரண்டு சிறகுகளாகக் கொண்டது. மேலும் மொழிநடை, சித்தரிப்புகள், நுண்தகவல்கள் ஆகியவற்றால் பெரும் கற்பனை வெளியை உண்டாக்கி அளிக்க வேண்டியது. உருவாக்கப்பட்ட வரலாற்றின் சட்டகத்தில் அக்கதை தன் அடிப்படையான கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும். அதற்கிடையிலான ஓர் ஆடலே நாவல். இரண்டு அந்தங்களுக்கு இடையில் ஆடும் ஏணையென்றும் சொல்லலாம்.
இத்தகைய பின்னணியில் ஓர் இளம் எழுத்தாளர் எதிர்கொள்ளும் முதன்மையான சிக்கல் நமது சூழல்தான். நாம் கதைகளின் நம்பகத்தன்மையை புனைவு எனும் வெளியில் எதிர்பார்க்கும் வாசக, எழுத்தாளர் படையை எதிர்கொண்டாக வேண்டும். ஈழத்திலிருப்பவர்கள் பெரும்பாலும் அடிப்படை வாசகர்கள். தீவிர வாசகர்கள் மிக மிக அரிதான வகை உயிரிகள். தேர்ந்த வாசகர்கள் அதை விடவும் அரிதானவர்கள். ஆகவே அடிப்படை வாசகர்களும் இலக்கிய சராசரிகளும் புனைவு என வெளியிடப்படும் கதைகளில் அவர்கள் அறிந்த உண்மைகளைக் கொண்டு உசாவல்களை நிகழ்த்துவார்கள். வரலாற்றை எவ்விதம் ஓர் எழுத்தாளர் கற்பனை செய்ய விரும்புகிறாரோ அவ்விதம் கற்பனை செய்யும் முழுச் சுதந்திரம் அவருக்கு உண்டு. ஏனெனில் அங்கு வரலாறு முதன்மையானதில்லை. ஒரு புனைவை விட வரலாறு புனைவுத் தன்மை மிகுந்தது. புனைவுக்குள் நிகழும் வரலாறு புனைவு உண்மை மட்டுமே. அங்கு விவாதிக்கப்படும் தத்துவார்த்தமான கேள்விக்கான பதில்களை நோக்கியே புனைவு செயற்படும். அந்தப் புனைவுண்மை நிகருண்மையாகும் தகுதி கொண்டு உருவாகி வருவதும் உண்டு. மேலும் இலக்கிய வாசிப்பு அன்றாடத்தின் சலிப்பை வென்று கற்பனையின் மூலம் வாழ்க்கையின் பல்வேறு கோணங்களை வாழ்ந்து அறிவது. ஆகவே அதற்கான அம்சங்களைக் கொண்ட இலக்கியங்களை எழுதுவதில் தயக்கமின்றி ஈடுபட வேண்டும்.
ஈழத்திலிருக்கும் விமர்சன மதிப்பீட்டின் பிரதானமான இரண்டு தரப்புகள் தமிழ்த்தேசிய ஆதரவு, எதிர் அரசியல், இடதுசாரி அரசியல் ஆகியவற்றின் வெளிப்பாடு கொண்டவை. அரசியல் சார்பு நிலைகளுக்காக எழுதப்படும் இலக்கியங்கள் உள்ளார்ந்த தத்துவார்த்த வறுமை கொண்டவை. காலகட்டத்தின் பிரதிபலிப்பென எஞ்சுபவை. இலக்கியம் தன்னளவில் ஓர் அறிதல் கருவி. அதற்கு தமிழ்த்தேசியமோ இடது சாரிச் சிந்தனைகளோ பெண்ணியமோ எதுவும் முதன்மையானதல்ல. அவை சிந்தனைகள். அவற்றிற்கும் வாழ்க்கையின் ஆதார விசைகளுக்கும் விழைவுகளுக்கும் இடையில் நிகழும் முரணுரையாடலை அதன் உச்சங்கள் வரை கொண்டு சென்று மோதி புதிய வெளிச்சங்களை அடைவதே இலக்கியத்தின் அடிப்படை. ஆகவே தான் இலக்கியம் எது ஒன்றையும் சார முடியாதது. ஒன்றின் குரலென ஒலிக்க இயலாதது. அது குரல்களின் தொகுப்பு. நியாயங்களின் விவாதக்களம். அறங்களின் வேள்வி.
வாழ்க்கையைப் பற்றிய நோக்கும் ரசனை மரபும் கொண்டே விமர்சனத் தரப்பும் இனி இங்கே உருவாகி வரும். அதற்கு அத்தகைய தன்மைகளை மேம்படுத்தும் ஆக்கங்கள் உருவாகி வர வேண்டும். எல்லோரிடமும் எழுதுவதற்கான லைசன்ஸ் உண்டு. வாகனம் தான் இல்லை. அனைவருக்கும் வாகன யோகம் வாய்ப்பதாக. ஆகவே மீண்டும் சொல்கிறேன், ஓர் ஆக்கம் சூழலில் முன்வைக்கப்பட்டால் அவை வாசகர் தரப்பினால் எதிர்கொள்ளப்பட வேண்டும். மிகையோ குறையோ பொருட்டில்லை. கவனிப்பே முதன்மையாக ஒரு சூழலின் தன்மையாக இருக்க வேண்டும். ஒரு புனைவு தன் சமூகத்தின் ஆழகத்தின் நீராடி என்பதை அறிய வேண்டும். அதில் தன்னுருவைப் பார்த்துக் கொள்ள வேண்டும். அதன் வழி தன் நம்பிக்கைகளையும் புரிதல்களையும் மறுபரிசீலனை செய்து வளர்பவரே இலக்கியத்தால் பயனடையும் வாசகர். ஏனையோர் ஆடைக் கடையில் உருவ பொம்மைகளைப் போன்றவர்கள். அணிந்து அழகு கொள்பவர்களுக்கே கடை பயனுள்ளது என்பது கொஞ்சமும் கூடத் தாழ்மையில்லாத என் கருத்து.