வாசிப்போர் மனங்களை பற்றிப் படர்கிறது ‘கொடிறோஸ்’

வாசிப்போர் மனங்களை பற்றிப் படர்கிறது ‘கொடிறோஸ்’

25 வருடங்களுக்கு முன்னான யாழ்ப்பாணத்தின் சமூக வாழ்வை அதன் கலாசார சூழல், ஆசாரம்,
அறிவு, அறிவீனம், நிறைவு மற்றும்
போதாமைகள் என்பவற்றை மிகவும் இயல்பாக வாசகர் மனதில் மனதில் பதிய வைப்பதில் கிரிசாந் வெற்றி பெறுகிறார்.

பல எழுத்தாளர்கள் யாழ்ப்பாண சமூக வாழ்வியலை தங்கள் நாவல்களின் எழுதியிருந்தாலும்
நவீனமும் பழமையும் கலந்த கவித்துவம் செறிந்த அதே நேரம் எந்த நிலை வாசகரையும் சலிப்படையச் செய்யாத ஒரு தேர்ந்த மொழிநடையில் இது எழுதப்பட்டிருக்கறது .

கடந்த காலத்தை நினைத்து நினைவிடை தோய்தல் நிலையில் பல நாவல்கள் எழுதப்பட்டிருந்தாலும் கதை சொல்லப்படுகின்ற விதத்தில் வாசகர்களை கதை கேட்கும் மன நிலையில் வைத்திருக்காது
பாத்திரங்களின் ஒன்றாக கலந்து வாழ செய்கின்ற ஒரு ரசவாதம் கதையில் நிகழ்ந்திருக்கிறது.
புதியதோர் வாசிப்பு அனுபவத்தை பெற விரும்புபவர்கள் நிச்சயமாக இந்தக் குறுநாவலை வாசிக்க வேண்டும்.

இந்தக் குறுநாவலை வாசிப்பவர்கள் பல இடங்களில் ஆச்சரியப்படவும் உணர்ச்சிவசப்படவும் கோவப்படவும் இரக்கப்படவும் பல இடங்கள் உண்டு. வாசகர் தம் தம் வாசிப்பு மன நிலைகளுக்கு ஏற்ப அந்த அந்த உணர்வை வாசித்து பெறுவதே சரியானதாக இருக்கும் என நம்புகிறேன்.

குறுநாவல் பேசுகின்ற ஒவ்வொரு களமும் தவிர்க்கப்பட முடியாததாக இருந்தாலும் சில இடங்கள் ஆழமாக மனதில் பதிந்து விடுகிறது
ஒன்றை மட்டும் உதாரணமாக குறிப்பிடலாம். ஒருவன் தான் கடந்த கால வரலாற்றை நினைவு வைத்து அல்லது சார்ந்தவர்கள் கதைகளை கேட்டு அதை உணர்வோடு எழுதல் சாத்தியம் ஆனால் தான் பிறப்பதற்கு முன்பே நிகழ்ந்த தாய் தந்தையரின் திருமண நிகழ்வை குறிக்கும் கலர் மங்கிப்போன பழைய போட்டோ பிரதிகளை மட்டும் கொண்டு அவர்களின் காதலை அன்பை ஆசைகளை கனவுகளை
கற்பனை என கருத முடியாத அளவிற்கு மிக நெருக்கமாக எழுதி இருப்பது இந்த நாவலின் பெரும் பாய்ச்சல் அல்லது சாதனை என்றே குறிப்பிடலாம்.

இக்கால அவசர வாழ்வு சூழ்நிலையில்நீண்ட நாவல்களை வாசிப்பது பலருக்கு முடியாதிருக்கிறது. இதுஒரு குறு நாவல் நூறு பக்கங்கள் தான்
உணர்வு ஒன்றி வாசிப்பவர்கள் ஓரிரு நாட்களில் வாசித்து விடலாம். ஆனால் ஆனால் 100 பக்கங்களை தான் நீங்கள் வாசிக்கிறீர்கள். ஆனால் அது ஆயிரம் பக்கங்களை உங்கள் மனதில் எழுதுகிறது. என் மனதில் படர்ந்த கொடிறோஸ் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பக்கங்களிலும் ஒவ்வொரு கிளை விட்டு பூக்கிறது. ஒவ்வொரு பூவிலும் தாய்மையின் சிரிப்பு.

(தற்போது யாழ்ப்பாணத்தில்
வெண்பா புத்தக சாலையில் கிடைக்கிறது)

வேலணையூர் தாஸ்

TAGS
Share This