‘கனவே திறந்து விடு, உன் கதவை’  

‘கனவே திறந்து விடு, உன் கதவை’   

(கருணாகரன்)

‘இந்த உலகம்
நம் முன் கற்களால் எழும்புகிறது’

கிரிசாந் எழுதிய ‘பால்யம்’ என்ற கவிதையில் இந்த வரிகளைப் படித்தபோது ஒரு கணம் அதிர்ந்து விட்டேன். ஏறக்குறைய இதையொத்ததாகவே சிவரமணியும் எழுதினார்.

‘…இரவு;
இரவினால் அதிகாரமிடப்பட்ட பகல்;
நாளைக் காலையில்
சூரியன் உதிக்குமா என்பதில் கூட
சந்தேகம் கொண்டுள்ள என்னிடம்
கனவுகள்
தம் அர்த்தத்தை இழந்தவைதான்..’

‘… வெளியே
பதற்றமற்று மௌனமாய் நிற்கும்
மரங்களின் நிழல்கள்
கீழே கிழிந்து போயுள்ளன…’

‘… எனக்குப் பின்னால்
எல்லாப் பரம்பரைகளும்
கடந்து கொண்டிருந்த வெளியில்
நானும் விடப்பட்டுள்ளேன்சொர்க்கமும் நரகமும்
இல்லாதொழிக்கப்பட்ட பரப்பில்
ஆழம் காணப்படாத சேற்றில்
எனது கால்கள் புதைகின்றன…’

சிவரமணியின் இந்த வரிகளை உருவாக்கிய காலம் 1980 களின் இறுதிப்பகுதி. கிரிசாந் இப்படி எழுதியது 2012 இல். சிவரமணியின் தேர்வும் முடிவும் பலருக்கும் தெரிந்ததே. ஆனாலும் அவர் தன்னை முடிந்த வரையில் உறுதியாக்கிக் கொண்டும் நிதானப்படுத்திக் கொண்டுமே இருந்தார்.

‘உங்களுடைய வரையறைகளின்
சாளரத்துக்குப் பின்னால்
நீங்கள் என்னைத் தள்ளமுடியாது
இதுவரை காலமும்
நிரந்தரமாக்கப்பட்ட சகதிக்குள் கிடந்து
வெளியே எடுத்து வரப்பட்ட
ஒரு சிறிய கல்லைப்போன்று
நான்
என்னைக் கண்டெடுத்துள்ளேன்

என. இருந்தாலும் சிவரமணியினால் தொடர்ந்து இந்தச் சமூகத்தோடும் உலகத்தோடும் சமரசம் கொள்ளவும் தாக்குப் பிடித்து நிற்கவும் முடியவில்லை. அதனால் அவருடைய தேர்வு, தன்னையே மாய்த்துக் கொள்ளுமளவுக்குச் சென்றது. அதற்கு நமது சூழலின் விளைவே பெருங்காரணம் என்பது அவருடைய கவிதைகளின் வழியாக நாம் உணர்ந்து கொள்ள முடியும். அதற்குப் பிறகு, 32 ஆண்டுகள் கழித்து, அதே சூழலில் இன்னொரு கவிஞரான கிரிசாந் இப்படி எழுதுகிறார். கிரிசாந்தின் இந்த இரண்டு வரிகளும் நமக்கு முன் உள்ள பல்வேறு தடைகளின் யதார்த்தத்தை – உண்மையைச் சொல்கின்றன; உணர்த்துகின்றன. நமக்கு முன்னே ஏராளம் தடைகள் உள்ளன. குடும்பம், அமைப்புகள், மதம், சமூகம், அதிகாரக் கட்டமைப்புகள், அரசு, பண்பாடு என எங்குமே தடைகளும் இறுக்கமான சூழலுமே உள்ளன. அவற்றுக்குள் ஒடுங்கி அல்லது அவற்றைச் சமாளித்து அல்லது அவற்றை ஏற்று வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறோம். இதொன்றும் புதிதல்லத்தான்.

மனிதர்களுக்கு முன், அவர்களுடைய வாழ்க்கைக்கு முன், எப்போதும் சவால்கள் இருந்து கொண்டேயிருக்கிறது. அதை எதிர்கொண்டே வாழ வேண்டியது யதார்த்தம். தவிர்க்க முடியாமலிருக்கும் அதிகார விதியும் கூட. ஆனால், இதை எந்தப் பருவத்தில் உணர்கிறோம்? எப்படி உணர்கிறோம் என்பது முக்கியமானது. முதிர் பருவத்தில், வாழ்வின் அனுபவச் சுமைகள் ஏறிய சூழலில் உணர்வதும் புரிந்து கொள்வதும் வேறு. அது இயல்பும் கூட. ஆனால், கிரிசாந், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் காலத்தில் – வளரிளம் பருவத்தில் இதை உணர்ந்திருக்கிறார். உணர்ந்தது மட்டுமல்ல, அதைக் கவிதையில் ஆழ உணர்வோடு வெளிப்படுத்தியிருக்கிறார். ஆக, இளமையிலேயே சூழலின் வலியை ஆழமாக உணரக் கூடிய ஆற்றலும் மன அமைப்பும் கிரிசாந்துக்கு அமைந்திருக்கிறது.

கிரிசாந் இந்தக் கவிதையை எழுதியபோது, அவருக்கு வயது 18. இந்த வயதில் தோள்களில் சிறகுகள் விரியும். காற்று நிரம்பி எடையற்றிருக்கும், மனம். திசையெல்லாம் வெளியாக விரிந்து, வானவில்லாய் ஒளிரும். எந்தக் கடினமான துயர்க் காட்டிலும் மகிழ்ச்சியின் மலர்கள் பூத்துக் குலுங்கும். இதை மீறி அல்லது இதிலிருந்து விலகி, யதார்த்த உலகினுள் நுழைவதும் அதை எதிர்கொள்ள முனைவதும் உண்மையின் ஆழங்களைத் தேடிச் செல்வதும் அசாதாரணமானது. அந்த அசாதாரணமே கிரிசாந்தை இப்படி எழுத வைத்திருக்கிறது.

‘இந்த உலகம் நம் முன்னே கற்களால் எழும்புகிறது’ என 18 வயதில் ஒரு இளைஞர், ஒரு மாணவர் சொல்ல நேர்வது என்பது, அவர் வாழ்கின்ற நிலைமையின் – சூழலின் தன்மையை வெளிப்படுத்துவதாகவே அமைகிறது. இப்படியான ஒரு நிலைதான் 1980 களில் எங்களின் முன்னேயும் இருந்தது. அதனால்தான் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களும் இளைய பெண்களும் ஈழ விடுதலைப் போராட்டத்தில் குதித்தனர். என்பதால்தான் இந்த வரிகளைப் படித்தபோது அதிர்ந்தேன்.

கவிதை உணர்த்த முற்படும் சூழலைக் குறித்தல்ல. அவருடைய நிலைமையைக் குறித்தும், இதை உணர்ந்து தவித்து வேதனையுறும் கிரிசாந்தின் (அவரொத்தோரின்) உளநிலையைக் குறித்தும். இன்னும் எத்தனை தலைமுறைகளைப் பலியெடுக்குமோ இந்தக் கற்களால் எழும் உலகம்?அறிவியலின் வளர்ச்சி, அமைப்புகளின் பெருக்கம், அரசாட்சிக் கட்டமைப்பு இன்ன பிற ஏற்பாடுகள் என ஆயிரமாயிரம் உண்டு. எல்லாம் மனித வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்வதற்காக என்றே சொல்லப்படுகிறது. இருந்தாலும் வாழ்க்கையின் நெருக்கடிகள் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றன. பல கோடிப் பேர் வாழக் கதியற்றிருக்கிறார்கள். இதைக்குறித்து மிஷேல் ஃபூக்கோ, லக்கான், தெரிதா, லியத்தார்ட், பௌதலியார்ட், டெலூஸ் போன்ற பின் நவீனத்துவச் சிந்தனையாளர்கள் விரிவாகப் பேசியிருக்கிறார்கள்.

‘இந்த உலகம் நம் முன்னே கற்களால் எழும்புகிறது’ என்று துயருறக் கூடிய ஏதோ பல தடைகள் நமக்கு முன்னே எப்போதும் இருந்து கொண்டேயிருக்கிறது. இருந்து கொண்டேயிருக்கிறது என்பதை விட, இடையறாது எழும்பிக் கொண்டேயிருக்கிறது. எழும்பிக் கொண்டேயிருக்கிறது என்றால், அது இயல்பாக நிகழ்கிறதா? அநேகமாக இல்லை என்றே சொல்ல வேண்டும். இயல்பாக நிகழ்வது என்றால், அது இயற்கையின் விளைவு. இயற்கையின் விளைவு, எப்போதும் நிகழ்வதல்ல. எப்போதும் நிகழாமல், எப்போதாவது நடப்பது அனர்த்தமாகும். அதை நாம் எதிர்கொள்வதும் கடப்பதும் வேறு. அதை இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து உயிரிகளும் இயற்கையின் அத்தனை அம்சங்களும் எதிர்கொண்டு கடந்தே ஆகின்றன. அது விதியும் இயல்பும் ஆகும்.

இங்கே கிரிசாந் சுட்டுவது அல்லது உணர்த்த முற்படுவது, நமக்கு முன்னுள்ள அதிகார சக்திகளால் உருவாக்கப்படும் தடைகளையே. சாதி, வர்க்கம், பால், சமூக – பண்பாட்டுத் தடைகளை, அதற்கும் மேலாக அரசியற் தடைகளை. இன்னும் இப்படிப் பலதை.இந்த இளைய வயதில் இதை உணரக்கூடிய அளவுக்கு கிரிசாந் இருக்கிறார் என்பது ஒன்று. இப்படித்தான் இந்தச் சூழல் இருக்கிறது என்பது இன்னொன்று. இதுவே என்னுடைய உளமும் உங்களுடைய உளமும் அதிரக் காரணம். ஆனாலும் கிரிசாந் தனக்குள் ஒருவிதமான சமனிலையைக் கொள்கிறார்.

‘…அதனாலென்ன
ஆழக்கிணற்றின் அடியாழத்தில் நமக்குள்
எந்தக் கதவுகளும் இல்லை’ என.

இந்த மூன்று வரிகளும் ஏற்கனவே குறிப்பிட்ட யதார்த்தத்தை மீறியெழுகின்ற – அதற்குப் பதிலீடான – நம்பிக்கையாக, நம்பிக்கையூட்டலாக முன்வைக்கப்படுகின்றன. அது வலிந்து நிறுத்தப்படுகின்ற நம்பிக்கையாகவும் இருக்கலாம். அல்லது யதார்த்தமாக – உண்மையாகவே மாறக்கூடிய சாத்தியங்களைக் கொண்ட நம்பிக்கையாகவும் இருக்கலாம். இப்படியான நம்பிக்கையோடும் நம்பிக்கையூட்டலோடும்தான் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்க்கை நகர்கிறது. இந்த நம்பிக்கையும் நம்பிக்கையூட்டலும் நமக்குள் நாமே கணமும் கொண்டிருப்பது.

இன்னொன்று வெளியே – சூழலில் – நாம் ஏற்படுத்திக் கொள்வது. என்பதால்தான் நமக்குள்ளும் நமக்கு வெளி உள்ள சூழலிலும் சமனிலை பேணப்படுகிறது. இதற்காக நிதமும் ஏராளம் சொற்களை அகத்திலும் புறத்திலும் உருவாக்கிக் கொள்கிறோம். இதில் பாதிக்கு மேல் நம்பிக்கை கொள்வதற்கான சாத்தியக் குறைவு என நாமே உணர்ந்தும் செய்கின்ற அதீத பிரகடனங்கள்; வலிந்து ஏற்றிக் கொள்ளும் நம்பிக்கைகள். அப்படியென்றால் இவை போலியானதா? இருக்கலாம். ஆனால், அவை அவசியமாக உள்ளன. அவசியமான ஒரு சிகிச்சையைப்போலவே. இனிச் சாத்தியமில்லை என்ற பின்னும் உயிர் தப்ப வைப்பதற்கு எடுக்கப்படும் மருத்துவ முயற்சியைப்போல, இது தவிர்க்க முடியாததாக உள்ளது.

என்பதால்தான் ‘நண்பா
எல்லையற்றது நம் பயணங்கள்
முடிவற்றது அதன் ஆழங்கள்..’

ஆழக் கிணற்றின் அடியாழத்தில் நமக்குள்
எந்தக் கதவுகளும் இல்லை..’என்று கிரிசாந் தொடர்ந்து எழுதுகிறார்.

இங்கே கவிதை, சட்டெனத் திரும்பி, இருவருக்கிடையிலான உறவாக, அதனுடைய சிடுக்கின் முடிச்சுகளாக மாறுகிறது. ‘ஆழக் கிணற்றின் அடியாழத்தில் நமக்கு எந்தக் கதவுகளும் இல்லை’ என்றிருந்தால், கவிதையில் குழப்பங்கள் ஏற்பட்டிருக்காது. வெளியே உள்ள பொதுச் சூழலைக் குறித்த எதிர்வினையாக – விவரிப்பாக இருந்திருக்கும். ‘நமக்குள்’ என்று இருவருக்கிடையிலான நிலையைச் சொல்லும்போது ‘இந்த உலகம் நம் முன் கற்களால் எழும்புகிறது’ என்ற பொது நிலை – எதிர்நிலை – மறுதலிக்கப்பட்டு, இருவருக்கிடையிலான உறவு நிலை கட்டவிழ்க்கப்படுகிறது.ஆக ஒரு முரண் இந்தக் கவிதையில் உண்டு. ஆனாலும் ஒன்றை கிரிசாந் தெளிவாக உணர்த்துகிறார், வெளியே சூழல், சவாலாக – எதிராக – எப்படியாக இருந்தாலும் (அதனாலென்ன) ஆழக் கிணற்றின் அடியாழத்தில் நமக்குள் எந்தக் கதவுகளும் இல்லை என்பது நாம் கொள்ள வேண்டிய பேராறுதல். மட்டுமல்ல, நாம் இணைந்தே வெளியே எழும்புகின்ற – எழுப்பப்படுகின்ற – கற்களால் எழும்புகின்ற உலகை எதிர்கொள்வோம் என.

இத்தகைய எதிர் அழுத்தச் சூழலைப்பற்றிய சித்திரிப்போடு கூடவே நம்பிக்கையூட்டலைச் செய்கின்ற கவிதைகள் தமிழ்ச் சூழலில் அதிகமுண்டு. கடந்த நூற்றாண்டிலிருந்து இப்போது வரை எழுதப்படுகின்ற கவிதைகளில் பாதிக்குக் குறையாதவை இத்தகையவை. ஈழப்போராட்டத்தைப் பிரதிபலிக்கும் கவிதைகள் அனைத்தினதும் பொதுவான தன்மை இது. அரசியலையும் சமூகத்தையும் எதிர்கொள்ளும் விதமான உள்ளடக்கம் கவிதைக்குள் ஏறத் தொடங்கியதிலிருந்து இந்தப் போக்கைக் காணலாம். இதில் முக்கியமான அம்சமாக இருப்பது, தாங்கக் கடினமான துயரத்தையும் தொடர்ந்து சிதைக்கப்படும் கனவுகளையும் அவநம்பிக்கை என்ற பெரும் இருட்புயல் அடித்துச் செல்லாதிருக்க, ஏற்படுத்தப்படும் நம்பிக்கைச் சிறு சுடர்களும் நிலத்தோடு வேரோடியிருக்கும் பசிய புற்களின் தளிர்களுமே. அதாவது சமனிலைப்படுத்தும் உளநிலையே. இது தனிமனித அகத்திலும் சமூக அகத்திலும் அவசியப்படுகிறது; அவசியப்படுத்தப்படுகிறது. ‘ஏதோ ஒரு நம்பிக்கையில்தான் வாழ்கிறோம்’ என்று சொல்லிக் கொண்டுதான் பல கோடிப்பேர் ஒவ்வொரு நாளும் தூக்கத்துக்குப் போகிறார்கள். ஒரு வாய் பதட்டமின்றிச் சாப்பிடுகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை இந்தச் சமாதானப்படுத்தலின் இழைகளால்தான் நெய்யப்பட்டுள்ளது.

இந்தப் பெரும்போக்குக்கு மாறாக – விலகலாக – தமிழ்க் கவிதையின் இன்னொரு பெருந்தொகுதி உண்டு. குறிப்பாகத் தமிழகக் கவிதைகள். அவை இன்னொரு நிலையில், இன்னொரு உணர்தளத்தில் உள்ளன. அவற்றில் பெரும்பாலானவையும் கவிதைக்கென உருவாக்கப்பட்டுள்ள அல்லது அதற்கென உருவாக்கப்படும் – உருவகிக்கப்படும் – பிரத்தியேகப் பிராந்தியத்தில் – அகத்திணையில் – இயங்குகின்றன. ‘எழுத்து’ பாரம்பரியத்தைத் தொடர்ந்து கொண்டிருப்பவையும் அவற்றிலிருந்து கிளைத்தவையும் இவை எனலாம்.

இவற்றின் தளம் வேறாக இருப்பதைப்போல, தன்மையும் வேறு. மாறாக சூழலையும் வாழ்க்கைச் சவால்களையும் இணைத்துப் பேசும் கவிதைகள் அங்கேயும் உண்டு. இவை முன்னிறுத்துவது, உயிர் வாழ்தலை; வாழ்க்கையை, அதனுடைய பௌதீக இருப்பை. இருந்தாலும் அவற்றுக்கான விவாதக் கவனம் இப்போது குறைந்துள்ளது.இன்றைய சூழலில் தமிழகத்தில் கூடுதலாகக் கவனப்படுத்தப்படுவது அகரீதியாக – உருவகிக்கப்படும் பிரத்தியேகப் பிராந்தியத்தில் – இயங்கும் ஆன்மீகத் தேடலையுடைய (Spiritual ideological poems) கவிதைகளையே. இது நேரடியாக மதத்தின் நிழலில் குடியமரும் ஆன்மீகமில்லை. பதிலாக இயற்கையின் உள்ளீடுகளோடு, அகத்தில் உருவகிக்கப்படும் அல்லது விடைதேட முற்படும் தனிமனித உணர்நிலையின் – தன்னில் தானே நிகழ்த்துகின்ற – நிறைவு கொள்ள முற்படுகின்ற – அகப் பயணத்தின் – (The spiritual journey towards a spiritual life beyond physical life) வெளிப்பாடாகும். இதற்கு காலம், இடம், சூழல் என்ற அடையாளங்களிருப்பதில்லை. இவற்றுக்கு அப்பாலான தரிசனத்தைக் காண முற்படும் தவிப்பே இவற்றில் மேலோங்கியிருப்பதுண்டு. அயலில், தம்மைச் சுற்றியுள்ள சூழலில் கூட பகிர்ந்தும் கலந்தும் கொள்ள முடியாத நிலையின் வெளிப்பாடு. ஏன் தமது குடும்பத்துக்குள் கூட இணைவு கொள்ள முடியாத தனித்திருத்தலின் வெளிப்பாடுகள் – அடையாளங்கள். ஆக இவற்றைப் பிரத்தியேகத்தின் சஞ்சாரங்கள் எனலாம். இதனால் தமிழகச் சூழலின் – பண்பாட்டின் – வரலாற்றின் தொனியை, அடையாளத்தைப் பெரும்பாலான நவீன கவிதைகளில் உணர முடியாத நிலை உண்டு. ஆனால், பிரபஞ்ச வெளியில் நிகழ்வன – திகழ்வன போன்ற ஓருணர்வை இவற்றில் பெறமுடியும்.

மறுதொகுதியினரான ஆத்மாநாம், சுகுமாரன், கலாப்ரியா, மு. சுயம்புலிங்கம், ஞானக்கூத்தன், விக்கிரமாதித்யன், யவனிகா ஸ்ரீராம், பாலை நிலவன், கலைவாணன், க.மோகனரங்கன், இளங்கோ கிருஸ்ணன், மனுஷ்ய புத்திரன், சுகிர்தராணி, குட்டி ரேவதி, லீனா மணிமேகலை, இசை, தொடக்கம் முத்துராசா, ச. துரை, திவ்யா ஈசன் வரையான இன்னொரு தரப்பு உயிர் வாழ்தலை, பௌதீக இருப்பை, மனித வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட கவிதைகளை (Poems based on survival, physical existence, and human life) உற்பவிக்கிறது. எல்லாவற்றையும் விட உயிர் வாழ்தலும் வாழ்க்கையின் நெருக்கடிகளும் அதற்குக் காரணமான அதிகார அமைப்புகளும் இயற்கையும் இவர்களுக்கு முக்கியமாக இருக்கிறது. கூடவே வாழ்க்கையின் மீறல்களையும் போதாமைகளையும் அபத்தங்களையும் எழுதுகிறார்கள். கிரிசாந்தின் கவிதைகள் இந்த இரண்டாவது தரப்பைச் சேர்ந்தவை எனலாம். ஈழக்கவிதைகளின் பொதுப் பண்பும் இந்தத் தரப்பை (காலம், சூழல், இவற்றோடிணைந்த வாழ்க்கையைப் பிரதிபலிப்பது) சேர்ந்ததே. இந்த அடையாளப்படுத்தல் வளரிளம் கவிஞருக்குச் சிலவேளை கல்லாக எழக் கூடும். ஆனால் எதையும் கடந்து நிற்கக் கூடிய, கடந்து செல்லக்கூடிய திராணியும் ஆற்றலும் கிரிசாந்துக்கு உண்டு. அதனால் அவர் எந்த அடையாளப்படுத்தல்களையும் அடையாளங்களையும் சலனமின்றி உதறி விட்டுச் செல்வார்.

கிரிசாந்தின் கவிதைகள் ‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ என்ற தலைப்பில் 2024 இல் தொகுப்பாக்கப்பட்டுள்ளன. அவர் எழுதத் தொடங்கி 12 ஆண்டுகளுக்குப் பின்னர் முதற் தொகுதி வந்துள்ளது. ஏற்கனவே அவருடைய சில கவிதைகள் ஏற்கனவே ‘மயான காண்டம் – பிந்திய பதிப்பு’ என்ற கூட்டுத் தொகுப்பொன்றில் வெளியாகி, கவனத்தைப் பெற்றன. ‘வாழ்க்கைக்குத் திரும்புதல்’ வெளியாகும்போது கிரிசாந்துக்கு வயது 30. இந்தத் தொகுதியில், தான் இலக்கியத்துக்கு வந்த வழிவரைபடத்தைப் பற்றி உணர்ச்சிகரமான –அதேவேளை அறிவார்ந்ததாக ஒரு நீண்ட முன்னுரையை கிரிசாந் எழுதியிருக்கிறார். இத்தகையதொரு முன்வரைபு புதிதாக எழுத வருவோருக்கு மட்டுமல்ல, ஏற்கனவே எழுதிக் கொண்டிருப்போருக்கும் பயனுடையது. மட்டுமல்ல, வாசகர்கள் நெருங்கிக் கொள்வதற்குரிய வாசல்களையும் திறக்கிறது. படைப்பின் வழியாக உருவாகும் நெருக்கமும் உறவும் ஒரு வகை. இத்தகைய முன்னீட்டின் வழியாக உருவாகும் உறவும் நெருக்கமும் ஒரு வகை. இந்த முன்னீட்டில், ‘கவிதையால் மட்டுமே அடங்கக் கூடிய தாகமுடையவனாக இருப்பதே கவிதைக்கும் எனக்குமான உறவு’ எனச் சொல்கிறார் கிரிசாந். இதொரு பிரகடனமே. ஆனால் அதை வெற்று அரசியல் கூச்சலாக இல்லாமல், கவிதையைக் குறித்த பிரக்ஞை பூர்வமான – அறிவார்ந்ததான தன்னுடைய புரிதலையும் பார்வையையும் தொடர்ந்து முன்வைக்கிறார். ‘கவிதையில் சொல் என்ன சொல்கிறது என்பதை விட, சொல் எப்படி அமர்ந்திருக்கிறது என்ற சொல்லமர்தல் முதன்மையானது என்பதை அறிந்தேன். அதன் நுட்பம் கருத்துகளில் அல்ல. அறிதலின் கருவிலேயே உள்ளதென்பதை உணர்ந்தேன். கலையில் கற்பனையே கருவி. அது நிகழும் ஊடகம்தான் சொல்’ என.

இதையொத்த கருத்தை 1990 களில் அமரதாஸின் ‘இயல்பினை அவாவுதல்’ கவிதை நூலுக்கு எழுதிய முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறேன். ‘அக உணர்வுத் தரிசனத்தைக் கவிதையாக்கும் பண்பு நிலையிலேயே அமரதாஸ் தனித்துவத்துடன் இயங்குகின்றார். அனுபவத்தைத் தூண்டும் உணர்வாகவும் அனுபவத்தைக் கோரும் உணர்வாகவும் அது இருக்கின்றது. அது உணர்வைக் கோருகின்றது; உணர்வை வெளிப்படுத்துகின்றது. இந்த இருநிலைச் செயற்பாட்டில் கவிதையும் நிகழ்கின்றது’ என.

அமரதாஸூம் கிரிசாந்தைப்போல உணரும் தன்மையை – உணர்த்தும் முறையை – சொல்லமர்தலை – யே தன்னுடைய கவிதைகளில் கொண்டிருந்தார். இந்த வகையில் ஏனையவர்கள் பா. அகிலன், எஸ்போஸ் போன்றவர்கள். சொல்வதையோ விவரித்துச் செல்வதையோ விட உணர்த்துவதாக. அதற்குரிய சொற்களைப் பொருத்தமான முறையில் உரிய இடத்தில் அமர்த்துவதாக. ஆனால், அமரதாஸைக் கடந்து கிரிசாந் சென்று கொண்டிருக்கிறார். கிரிசாந்தினுடைய விசை வேறு. திசைகளும் வேறு. கவிதையில் மட்டுமல்ல, கலை வெளிப்பாட்டிற்குரிய பொதுவான அடிப்படை, எதையும் விவரித்துச் சொல்வதை விட (சொற்களை வாரியிறைப்பதை விட) குறிப்பால் உணர்த்துவதேயாகும். பிரகடனங்களைச் செய்வதோ விவரித்துச் செல்வதோ அந்தப் படைப்பைப் பலவீனப்படுத்திவிடுகிறது.

நம்முடைய சாதாரண வாழ்க்கையிற் கூட அப்படித்தான். அதிகமாக அறிவுரை சொல்வதை விட, வாழும் முறையை – வாழும் கலையை – வாழ்ந்து காண்பிப்பது – வாழ்வினூடாகக் காண்பிப்பது அழகு. அதற்கே மதிப்புண்டு. அத்தகையவர்களே மதிப்பைப் பெறுகிறார்கள். அதிகமாகப் பேசுவோர், உளறுவாயர்களாக மதிப்பிறக்கமடைந்து நீர்த்துப்போகிறார்கள். என்பதாற்தான் சொல்லை விடச் செயலே சிறப்படைகிறது. இந்த வகையிலேயே இங்கே சொல் எப்படி அமர்ந்திருக்கிறது என்ற சொல்லமர்தல் கூடுதல் கவனம் பெறுகிறது. ‘கவிதையில் சொல் என்ன சொல்கிறது என்பதை விட, சொல் எப்படி அமர்ந்திருக்கிறது என்ற சொல்லமர்தல் முதன்மையானது என்பதை அறிந்தேன். அதன் நுட்பம் கருத்துகளில் அல்ல. அறிதலின் கருவிலேயே உள்ளதென்பதை உணர்ந்தேன்’ என்று கிரிசாந் சொல்வதற்கு அல்லது அவர் அப்படி உணர்வதற்கு ஆதாரமாக அவருடைய ‘தொடுகை’ என்ற கவிதையைச் சுட்டலாம்.

தண்டவாளக் கரைகள்
வெண்ணிறத் தோகைபோல் விரிகிறது

வழியில் பூமி

முதலாவதாகச் சந்தித்த பெண்ணுக்கு
கைகளிருக்கவில்லை
ஐந்து விரல்களையும் பிசைந்து
ஒருவேளை சோற்றை அவர் உண்ண முடியாது
சிவந்து மலரும் அவள் குழந்தையின் மூக்கை
சிந்த முடியாது
உயிர் ஒன்றாக்க் கலந்தவன் முகத்தை
வாழ்வே
இனித் தொடவே முடியாது
எப்பொழுதும் இரக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்த உலகத்தைச் சகிக்க முடியாது

என்றபோது எஞ்சிய உடலைக் கொண்டு
என்னைப் பார்த்தாள்சூரியன் எங்களுக்கு முன்
எரிந்து கொண்டிருந்தது.

இரண்டாவது மனிதனுக்கு
கால்களிருக்கவில்லை
நடனத்தின் போதை தலைக்கேற
கால்கள் இனி பூமியைத் தொடமுடியாதவனின்
கால்கள் இருந்த இடத்தைத் தொட்டுப் பார்க்கிறேன்

காலம் விறைக்கிறது.

(2015)

ஒரு தொடருந்துப் பயணத்தில் பார்க்க நேர்ந்த காட்சியும் சந்திக்க முடிந்த அனுபவமும் கவிஞர் உணர்ந்து கொண்ட முறைமையின் வழியாக நம்மிடம் பரிமாற்றப்படுகிறது. இந்தமாதிரியான சூழலையும் காட்சியையும் நாம் பல சந்தர்ப்பங்களிலும் எதிர்கொள்ள நேரிடுகிறது. 30 ஆண்டுகளுக்கு மேலாக யுத்தம் நடந்த நிலத்தில் தினமும் இப்படி ஏராளம் மனிதர்களையும் ஏராளம் காட்சிகளையும் பலரும் பார்த்துக் கடந்து கொண்டேயிருக்கிறோம். இந்த மனிதர்களைக் குறித்த நம்முடைய அக்கறைகள் என்ன? அவர்கள் மாற்றுத் திறனாளிகள், உதவிக்குரியவர்கள் என்ற ஒரு பொதுச் சித்திரம்தானே! அதற்குள் எழுந்து நடனமாடிக் கொண்டிருப்பது நம்முடைய அனுதாபம். அல்லது நாம் கொள்ள முயற்சிக்கும் கழிவிரக்கம். ஆனால், அவர்களுக்கு அது வேண்டியதில்லை. அது அவர்களை மேலும் உளரீதியாகச் சிதைத்து, வேதனைப்பட வைக்கிறது; சிறுமைப்படுத்துகிறது. அவர்களுடைய நிலையிலிருந்து நோக்கும்போதுதான் இது புரியும். இங்கே இந்தக் கவிதையில் இதற்கப்பாலான ஒன்று அல்லது பல எதிர்பார்க்கப்படுகிறது. அதுவே கவிதையின் நோக்கு அல்லது அதையே கவிதை தூண்ட விளைகிறது. இவ்வாறான காட்சிகளையும் மனிதர்களையும் எளிதிற் கடக்க முடியாமல் இருப்பது, அவற்றை – அந்த மனிதர்களின் நிலையை நாம் உணர்ந்து கொள்ளும் முறையினாலேயே. இல்லையெனில் இதெல்லாம் ஆயிரத்தில் ஒன்று. அதை மறுதலித்து, அந்த உணர்முறையைச் சாதித்து, பாதிக்கப்பட்டவர்களின் மீது நம் கவனத்தைக் குவிய வைத்து வெற்றியடைகிறார் கிரிசாந்.

ஒரு கவிதையும் அதை உற்பத்தி செய்யும் கவிஞரும் இவ்வாறான மனிதர்களின் மீதும் அவர்களுடைய நிலைமையின் மீதும் நமது கவனத்தைக் குவிக்கச் செய்வது பெரும் பணியும் பங்களிப்பாகும். அவர்களின் மீது நாம் கொள்ள விளைகிற அநுதாபம்வேண்டியதல்ல. அது அவர்களை மேலும் சிறுமைப்படுத்தும், நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதைக் கவிஞர் (கிரிசாந்) செய்திருக்கிறார். இதுதான் கவிஞருடைய முக்கியமான பங்களிப்பு. இங்கே ஒரு உளவியலாளர், ஒரு பொதுப்பணிக்குரிய சிந்தனையாளர், ஒரு வரலாற்றாளர் எனப் பல நிலைப்பட்டோர் தொழிற்படுகின்றனர்.

முக்கியமாக –எப்பொழுதும் இரக்கப்பட்டுக் கொண்டிருக்கும்
இந்த உலகத்தைச் சகிக்க முடியாது
என்றபோது எஞ்சிய உடலைக் கொண்டு
என்னைப் பார்த்தாள் எனும் போது நாம் திணறுகிறோம்.

அவள் இழந்த உடலை விட, அவளிடம் எஞ்சியிருக்கும் உடலே நம்மை அதிர வைக்கிறது. அவளை நாம் இரக்கமாகப் பார்ப்பதை அவள் சகிக்க முடியாமல் எதிர்வினையாற்ற முற்படுகிறாள். பொதுவாகவே எப்போதும் நாம் இழந்த ஒன்றுக்காகவே துயருறுவோம். அதையிட்டே நம்முடைய துக்கமும் பதட்டங்களும் இருக்கும். இங்கே அதை விடவும் மிஞ்சியிருக்கும் உடவே துயரத்தையும் பதட்டத்தையும் உண்டாக்குகிறது. ஏனென்றால் அது ஒரு முழுமனித உருவத்திற்குரியதல்ல. அதில் ஒரு பகுதியை இழந்து, மீந்திருப்பது. இங்கே இழக்கப்பட்டதை விட, மீந்திருப்பதே துயரமாக – பிரச்சினையாக இருக்கிறது. இழந்த உடலுக்கு – உறுப்புக்கு வலியில்லை. பல்லியின் வால் கூட சில கணம் துடித்துத் தவிக்கும். துண்டாடப்பட்ட மனித உடலுக்கு அந்த வாய்ப்பும் இல்லை.

ஆகவே அது வலியையும் துயரையும் அறியாது. ஆனால், மீந்திருக்கும் உடல் அப்படியல்ல. அது மீதிக்காலம் முழுவதும் வலியாகவும் துயராகவுமே மாறி விடுகிறது. அப்படி இழக்கப்பட்ட உடலுடன்தான் அவள் (அவ்வாறானவர்கள்) தங்களுடைய மீதிக் காலத்தை – ஆயுள்முழுவதையும் – வாழ்ந்த தீர வேண்டியுள்ளது. தன்னுடைய பணிகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. இந்த நிர்ப்பந்தத்தை அவள் (அவர்கள்) மீது திணித்தது யார்? அது ஏன் நிகழ்ந்தது – நிகழ்த்தப்பட்டது? அதற்குப் பொறுப்புச் சொல்வது – பொறுப்பேற்பது எவர்? அப்படிப் பொறுப்பேற்றாலும் அவர்களால் அவளுடைய (அவர்களுடைய) கவலைகளை – இயலாமைகளைப் போக்கி விட முடியுமா? அவள் இழந்த உறுப்பை (அங்கத்தை) மீள அளிக்குமா? இத்தகைய கேள்விகள் எழுகின்ற உணர்நிலையிற்தான் நானும் இவர்களுடைய நிலையைக் குறித்த சில கவிதைகளை எழுதினேன்.

ஒற்றைக் காலுடன்தான்
கால் நூற்றாண்டுக்கும் மேலாகத் தினமும்
மலங்கழிக்கிறான்
வேலைக்குப் போய் வருகிறான்
புணர்கிறான்
பிள்ளையை மடியில் வைத்துக் கொஞ்சுகிறான்
வயதாகித் தளர்ந்த தாயைக் குளிப்பாட்டுகிறான்
செல்லமாக விளைந்திருக்கும்
நாய்க்குட்டியுடன் விளையாடுகிறான்
இந்த உலகத்தின் ருசி
கெட்டுப் போய் விடக் கூடாதென்று
இரண்டு ஆடுகளை வளர்க்கிறான்.
பூங்கன்றுகளுக்குத் தண்ணீர் விடுகிறான்
தன்னுடைய கனவுகளில் பாதியான
தோட்டத்தைச் செழிப்பாக வைத்திருக்கிறான்
உங்களுக்குத் தினமும் பால் கொண்டு வருகிறான்
விரைந்து செல்லும் வாகனங்களுக்கிடையில்
தடுமாறியபடி வீதியைக் கடக்கிறான். இல்லாமலேயாகி விட்ட ஒற்றைக் காலைத்தான்
அவன் பொன்னாகவும் மண்ணாகவும் ஆக்கி
வாழ்ந்து கொண்டிருக்கிறான்.ஒற்றைக் காலுடன்தான்
தன்னுடைய இளமையிலிருந்து
முதுமைக்குப் பயணித்திருக்கிறான்
உங்களின் முன்னே.அவனுடைய ஒற்றைக் கால்
இல்லாமலாகி
கால் நூற்றாண்டாகி விட்டதென்பதை
என்றேனும் நீங்கள் நினைத்ததுண்டா?

(மௌனத்தின் மீது வேறொருவன் – பக்:104,105)

ஒற்றைக் காலுடன் அவன்
பூமியின் இந்தப் பக்கத்துக்கும்
அந்தப் பக்கத்துக்குமாக நடக்கிறான்
வரலாற்றைக் கடந்து போக முற்படுகிறான்
தினமும் உங்களையும் கடந்து செல்கிறான்
உங்களின் முன்னே நிற்கிறான்
உங்களோடு நிற்கிறான்
உங்களுக்காக நிற்கிறான்
மீதமுள்ள காலமெல்லாம் கூட
ஒற்றைக் காலுடன்தான்
நிற்க வேண்டும் அவன்.

(மௌனத்தின் மீது வேறொருவன் – பக்:107)

என்னுடைய கவிதைகளில் விவரிப்பு முறையே தூக்கலாக உள்ளது. நான் உணர்ந்ததை விவரிக்கும் முறையாக. விவரிப்பின் வழியே நிலையை உணர்த்த முற்படுவதாக. கிரிசாந், இதை மறுதலிக்கிறார். அவருடைய உணர்தல் > உணர்த்தல் முறைமையில் இது வேறுவிதமாக அமைகிறது. தன்னுடைய உணர்தலை தன் வழியான உணர்த்துதலாகச் செய்யும்போது, ஆழமும் தீவிரமும் கூடுகிறது. இங்கே அவர் சொல்லும் ‘கவிதையில் சொல் என்ன சொல்கிறது என்பதை விட, சொல்லமர்தல் முதன்மையானது. அதன் நுட்பம் கருத்துகளில் அல்ல. அறிதலின் கருவிலேயே உள்ளது’ என்பதைக் கவனிக்கலாம்.

நடனத்தின் போதை தலைக்கேற
கால்கள் இனி பூமியைத் தொடமுடியாதவனின்
கால்கள் இருந்த இடத்தைத் தொட்டுப் பார்க்கிறேன் காலம் விறைக்கிறதுஇந்த நிலையை மேலும் விளக்க முடியாது. நெஞ்சடைத்துக் கண்களில் நீர் பொங்க, காலம் திரைகிறது. ஒலிக்கும் இசையும், எதிரே உள்ளவர்களின் நடனமும் நரம்புகளில் தாளத்தை மீட்ட, கால்கள் இயல்பாகவே தாளமிட முனையும். ஆனால், அப்படித் தாளமிடக் கால்கள் இல்லை. அந்தச் சூழல் எப்படி இருக்கும்?கால்கள் இருந்த இடத்தை மனதால் தொட்டுப்பார்க்கிறார் கிரிசாந். இதுதான் ‘இதயத்தின் தொடுகை’ என்பது. நம் ஒவ்வொருக்கும் மெய்யாகவே இதயம் இருக்குமானால், நிச்சயமாக அது அந்தச் சூழலை, அந்த நிலையை, அந்த அந்தரிப்பை தொட்டே தீரும். அதையே விளைகிறார் கிரிசாந்.

இலக்கியத்தின் அடிப்படையே இதுதான். கவிதை ஒளியுடைய தெய்வமாக, விதைகளாயிரம் கொண்ட பயிராக எழுந்தருள்வது இப்படித்தான். இங்கே கவிதையின் சொற்கள் உயிர்கொள்கின்றன. என்பதால்தான் கவிதை கால நீட்சியில் ஒளியும் விதையுமாக இருக்கிறது.

கிரிசாந்தின் இந்தக் கவிதைத் தொகுதியில் நேரடி அரசியலோ, நேரடியான சமூகக் கருத்தாங்கங்களோ முன்வைத்துப் பிரகடனப்படுத்தப்படவில்லை. அதற்கான சமூக, அரசியற் சூழலும் இப்பொழுது ஈழத்தில் இல்லை. காதலும் அன்பும் இயற்கையின் பேரழகும் உண்டு. காலமும் சூழலும் இடையூடாட்டம் கொள்கின்றன. எதிலும் நிறைவு கொள்ளத் தவிப்பதுவே கிரிசாந்தினுடைய கவிதைப் புலம். அதற்குள் சலனங்களும் துயரின் நிழலாட்டமும் காலத்தின் ஊடுருவலும் உண்டு. இன்றைய ஈழ அனுபவமே வேறு. அது நம்பிக்கைகள் வற்றியுலர்ந்த நிலம். துயர வெடிப்புகளே நிலமெங்கும் உளமெங்கும் விரிந்து கிடக்கின்றன.

‘வெளிச்சம் கொள்ள நேராத வீடுகள்
காத்திருக்கின்றன
என் தந்தையிடமிருந்து எனக்கு
என்னிடமிருந்து இன்னொருமுறை
என் மகனுக்கு….’

(என் தந்தையின் வீடு – வாழ்க்கைக்குத் திரும்புதல்) என்று கிரிசாந் இதை எழுதினால், பா. அகிலனோ,

‘வெறிச்சோடின ஒரு நூறாயிரம் ஆண்டுகள்

இனிக் காரணமில்லை

காத்திருக்க எவருமில்லை என்றபோதும்

பின்னும் கிடந்தழுந்தின நாட்கள்

தாய் வெந்து முதுமை கிடந்த இடத்தில்

அவனில்லை

அவரில்லை

எவருமில்லை

பாழ்

(தாயுரை 02 – சரமகவிகள்) என்று எழுதுகிறார்.

1980 களில் / முகில்களின் மீது நெருப்பு /தன் சேதியை எழுதியாயிற்று / இனியும் யார் காத்துள்ளனர்? / சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து /
எழுந்து வருக’ என்று செய்யப்பட்ட பிரகடனம், முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின் (2009) ‘காடாற்று’ என்பதாக அதே கவிஞரால் (சேரன்) பாடப்பட வேண்டியதாயிற்று. கிரிசாந் சாம்பல் மேடாகிய காலத்தினதும் சிதிலமடைந்த நிலத்தினதும் குழந்தை – கவிஞர். (கவனிக்க: குழந்தைக் கவிஞர் அல்ல). ஆனால், புதிய விதை.

கழிவிரக்கமும் புலம்பலும் ஆற்றாமையும் பழி மனமும் சூழ்ந்த சூழலில் முளைக்க நிர்பந்திக்கப்பட்ட செடி. இருந்தாலும் அதிலிருந்து தன்னை விலக்கி வைத்து, வரலாற்றையும் சூழலையும் நோக்கும் உளமும் பார்வையும் அவருக்குள்ளே வளர்ந்துள்ளது. அதைத் தன்னுடைய வாசிப்பினாலும் தான் கொண்ட உறவுகள் மற்றும் நட்புச் சூழலினாலும் உருவாக்கிக் கொண்டவர், வளர்த்தெடுத்தவர். என்பதால்தான் ‘விடியும்போது வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்’ என்று உறுதி கொண்டு அவரால் எழுதக் கூடியதாக இருக்கிறது.

சமகாலக் கவிதையாளர்களில் அல்லது முன்னோடிகளின் மத்தியில் கிரிசாந்தின் இடம் என்ன? அவருடைய கவிதைகளின் அழகியல் எத்தகையது? அவருடைய கவிதைகள் முன்வைக்கும் அல்லது உள்ளீடாகக் கொள்ளும் அரசியல்? அவருடைய கவிதைகளின் தனித்துவம் அல்லது அடையாளம் என்ன ? என்பதைக் குறித்துப் பேச வேண்டும்.

முதலாவது, கவிதை என்றால் என்ன என்பதைக் கிரிசாந் புரிந்துள்ளார். இது அவருக்கும் நமக்கும் கிடைத்துள்ள வெற்றி. அதைப் புரியாமல்தான் ஏராளம்பேர் எழுதிப் புத்தகத்தையே அழகாக (உள்ளீடற்ற விதமாக) அச்சிட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதற்கு சமூக வலைத்தளங்களிலும் மக்கள் அரங்குகளிலும் விழாக்களும் விளம்பரங்களும் வேறு நடக்கிறது. பொதுவெளியில் எது கவிதை என்று தெரியாத அல்லது இதுதான் கவிதை என்று அவற்றைக் கண்டு மயங்குகின்ற ஒரு துயரமான நிலை உண்டு. அத்தகைய சூழலில் ஒருவர் கவிதையைப் புரிந்து கொண்டு அதில் இயங்குவது முக்கியமானது. கிரிசாந்துக்கு அந்தப் புரிதல் உண்டு. அவருடைய கவிதைகளையும் விட அவருடைய விமர்சனங்கள் முக்கியமானவை. தன்னை ஒரு விமர்சகராக கிரிசாந் இன்னும் கட்டமைத்துக் கொள்ளாது விட்டாலும் அவர் எழுத்திலும் அரங்குகளிலும் முன்வைக்கும் ரசனைசார் விமர்சனம் முக்கியமானது. கவிதை வாசிப்பிலும் பரந்த பரப்பு அவருடையது.

இந்தப் பின்னணியில் உருவாகிய அவருடைய முதற்தொகுதி இது. தன்னுடைய இளைய பருவமான 18 வயதிலிருந்து எழுதப்பட்ட கவிதைகளை இதில் சேர்த்திருக்கிறார். இதில் அவருடைய கால அரசியல் தொனிக்கிறது. ஆனால், அது பிரதிபலிப்பாகவே வருகிறதே தவிர, பிரகடனமாக வரவில்லை. உதாரணம், யுத்தத்தைப் பற்றிப் பேசாத ஆனால், யுத்தத்தின் விளைவைப் பற்றிப் பேசும் ‘தொடுகை’ போன்ற கவிதைகள். அவருடைய அரசியல் மக்கள் நிலைப்பட்டது. அவர்களுடைய பாடுகளும் உணர்வும் சார்ந்தது. அதற்கான அழகியலை அவை கொண்டுள்ளன. மொழிச் செழுமையும் கட்டிறுக்கமும் சொற்தேர்வும் கொண்ட செம்மை அவற்றில் உண்டு. வெளிப்பாட்டு முறைமையில் தணிந்த தொனியில் கொள்ளும் உணர்த்து முறைமையினாலான வெளிப்பாடு அவருடைய அழகியலாகின்றன.

முதற்தொகுதியிலேயே ஒருவருடைய அடையாளத்தைக் காண்பதோ மதிப்பிடுவதோ பொருத்தமானதல்ல. ஆனாலும் கிரிசாந்தினுடைய கவிதைகள், குழப்பங்களும் தயக்கங்களுமற்ற தன்மையில் தம்மைச் சுயாதீனமாக முன்வைக்க முயற்சிக்கின்றன. பிரயத்தனங்களற்ற வெளிப்பாட்டில் விளைந்தவை எனலாம்.

இதேவேளை ஒரு வளரிளம் கவிஞருக்குரிய வழித்தடத்தில் முன்னோடிகளின் செல்வாக்கினாலான நிழலமர்தல்களை இந்தக் கவிதைகளில் காண முடிகிறது. பா. அகிலன், சுகுமாரன், அன்னா அக்மதோவா போன்றோருடைய நிழல்கள் அவை. இவற்றின் பிரதிபலிப்பாக அல்லது அடையாளமாக ‘நானொரு துயரம் நானொரு வாழ்வு’, ‘சங்கீதக் குறிப்புகள் 02, 03’, ‘பிரிவெனும் முடிவிலாத் திரைகள்’, ‘அப்பாவும் கோவர்த்தன கிரியும்’ … போன்றவை. இதை விட பரிசோதனை வடிவத்திலான கவிதைகளும் உண்டு. அவை ‘மலரும் அறை’, ‘பாடிக்கொண்டிருப்பவனின் குரல்’, ‘கனவுச் சொல்’ ஆகிய கவிதைகள் உள்ளன. இதேவேளை அவர் சொல்கின்ற சொல்லமர்தல் முழுமை பெறத் தவறுகின்ற கவிதைகளும் உண்டு. அதனால் அவை மேலெழுந்தவாரியான தன்மையில் சாதாரணமாகி விடுகின்றன. இறுதிக் கவிதையான ‘ஆறாம் நாட் பெருக்கில்…’, மற்றும் ‘சிக்கெனப் பிடித்தல்’, ‘அந்தரத்தில் மிதப்பவள்’, ‘மூசி’, ‘அவள் அப்படிச் சொன்னபோது’ போன்றவை இவ்வகை கொண்டவை.

கிரிசாந்தைப் படிக்கும்போது ஹரி ராசலட்சுமி, எஸ்போஸ், நட்சத்திரன் செவ்விந்தியன் மூவரும் நினைவில் எழுகின்றனர். மூவரும் இளமையை இலக்கியத்தில் தீவிரமாக்கிக் கொண்டவர்கள். எழுதியும் உரையாடியும் தங்களின் ஒளியைப் பரப்பியவர்கள்.

1990 – 2000 இவர்களுடைய எழுச்சிக்காலம். எஸ்போஸ் இதயமற்றவர்களாலும் முகமற்றவர்களாலும் இளவதிலேயே கொல்லப்பட்டார். நட்சத்திரன் செவ்விந்தியன் தளம் விலகிச்சென்றார். ஹரி, பிறிதொரு தளத்தில் விரிவு கொண்டார். இன்னொரு தளத்தில் சித்தாந்தன், த. அகிலன், தானா விஷ்ணு, அமரதாஸ், றஸ்மி, றியாஸ் குரானா, மஜீத், சயந்தன், தான்யா, பிரதீபா, அஸ்வகோஸ், இளங்கோ (டிஸே) ந. மயூரரூபன் போன்றோர் செயற்பட்டு விளைந்தனர். அவர்களுடைய அடையாளங்கள் முத்துகளெனப் பரவிக் கிடக்கின்றன. ஒன்றில் ஒன்று ஊடாடியும் ஒன்றை ஒன்று நிரவியும் ஒன்றை ஒன்று உராய்ந்தும் நிகழும் பயணம் இது. இதில் மேலும் பல பரல்களும் வேர்களும் இணைவும் கலவையும் கொள்கின்றன.

கிரிசாந்தைப் படிக்கும்போது (அவருடைய கவிதைகள், கதைகள், அவர் எழுதி வரும் கட்டுரைகள், விமர்சனங்கள் அனைத்தையும் குறிக்கும்) தன்னுடைய இளமையை – வாழ்வை இலக்கியத்திற்கென அவர் அளித்துள்ளதை உணர முடிகிறது. இதை அவர் மேலோட்டமாகச் சொல்லியிருந்தாலும் அதற்கப்பால் அவற்றில் தீவிரமாக ஈடுபடும் அர்ப்பணிப்பை உணர்கிறேன். இந்தக் காலத்தில் நம்முடைய சூழலில் இது நம்பக்கடினமான ஆச்சரியம் மட்டுமல்ல, சற்று ஆழமாக யோசிக்க வேண்டியதுமாகும். ஏனென்றால் ஈழத்துத் தமிழ்ச் சூழலில் தன்னுடைய இளமையை இலக்கியத்துக்கென ஒப்படைப்பதென்பது, வாழ்க்கையைப் பலிபீடத்தில் வைக்கத் துணிவதாகும். ஆனால் அதைத் தெரிந்தே துணிந்துள்ளார் கிரிசாந்.

விடுதலைப்போராட்டத்தின் போது அவ்வாறு தங்கள் வாழ்வையும் இளமையையும் பலிபீடத்தில் வைத்த பல்லாயிரக்கணக்கானோரை அறிந்தவன் நான். அவற்றுக்கு வரலாற்றில் எந்தப் பெறுமானமும் இல்லாமற் போனது என்பதையும் பார்த்துக் கொண்டேயிருக்கிறேன். ஆனால், தம்மை ஒப்புக் கொடுக்கும் போதுள்ள இத்தகையவர்களின் உள எழுச்சியும் அது அடைகின்ற உவகையும் சாதாரணமானல்ல. அது பரிதியை நிகர்த்த ஒளிக்கோளம். தன்னுடைய வாழ்வின் குருதியை அளித்து விளைய முயலும் செயலானது வெற்றி தோல்விகளுக்கு அப்பாலான பெறுமதியைக் கொண்டது. இதை நம்முடைய சமூகம் சரியாகக் கொள்வதில்லை. இருந்தும் அதையிட்ட துயரமேதும் இவர்களுக்கில்லை. அது கிரிசாந்திடமும் இருக்கும் என எண்ணுகிறேன். ஏனெனில் இழப்பைப் பற்றிய சிந்தனையை விட எதைச் செய்கிறோம் என்ற விளைவே இவர்களின் ஆன்மாவில் விளைவது.

எது கடைசியில்
மிகமிக ஆழமான பள்ளத்தாக்கோ

அதில் நான் வீழ்வேன்

மீண்டும் எழ முடியாதபடி
காயம்பட்ட உடலுடன்
கைகள் உயர்த்தி அழைக்க முடியாத தொலைவில்
கைவிடப்படுவேன்

கால்நுனிகள் அசைய முடியாதபடி தறையப்படுவேன்

விழிகள் ஆகாயத்திற்குத் திறந்தபடி
தைக்கப்பட்ட இமைகளுடன்

கழுகள் கொத்திப் பார்வை மறைவதை
சூரியன் அப்படி ஒரே ஒருமுறை என்றெய்க்குமாக
அஸ்தமிப்பதைப் பார்ப்பேன்

பாவங்களின் சாம்பற் தணலில் உடல் வேக.

யாரும் கவனிக்காத வகையில் சிறுகச் சிறுகச் சாவேன்

ஒரு அழைப்புப்போல அல்ல
ஒரு பாவத்தைப்போல நிராகரிக்கப்படுவேன்.

சாகட்டும், சாகத்தான் வேண்டும் என்பது நிச்சயமாக
மனங்களில் உரக்கக் களித்துச் சாவேன்.

ஓர் ஒப்பில்லாத் துயரின் எந்த அசுமாத்தமுமின்றி
உப்பின் நீரின்றி.

வேண்டி நிற்கும் மரணம்போலஅழியட்டும் இப்பாவி
அழியட்டும் அச்சாம்பலும்

கண்ணீருடன் விடைகொடுக்க யாருமின்றிச் சாவது துக்கமல்ல

ஒரு விருப்பம் போல சாவு
ஒரு முழு வாழ்க்கையையும் போன்றது

(சுய அழிவு – வாழ்க்கைக்கு திரும்புதல்)

சுய தெளிவாடு வாழவும் வாழ்வை ஒப்பற்ற நிலையில் மகிழ்வோடு மரணத்துக்கு அளிக்கக் கூடிய இந்தத் துணிவும் எதற்கும் தயார் நிலையிலான மனமும் வாய்க்கும் உளத்தின் முதிர்ச்சி, ஆயிரமாயிரம் ஓவியங்களாக வெளியெங்கும் நிரம்பிக் காற்றில் மிதக்கிறது. பலகோடி சிலைகள் உயிர்கொண்டு ததும்பி உலாவுகின்றன.

கண்களை மூடிக் கொள்கிறேன்.‘கனவே திறந்து விடு, உன் கதவை’.

இருந்தாலும் முதற் கவிதையான பால்யமும் இறுதிக்கு முதற் கவிதையான சுய அழிவும் நீங்காத பதட்டத்தையே உண்டாக்குகின்றன. ஓரிளைஞர், ஒரு கவி, ஒருபோதும் உணரக்கூடாத, மனதில் தேங்கக் கூடாத, யாருடைய வாழ்விலும் நேர்கொள்ளக் கூடாதது இந்த நிலை. துன்பியல் கலையில் ருசியாகவும் அதுவொரு அழகியலாகவும் இருப்பதுண்டு. வாழ்வில் அது கண்ணீரில் மிதக்கும் இரத்தம். நெருப்பில் வீழும் மலர்.

00

கருணாகரன்

நன்றி : வையம்

*

தன்னுரை : வாழ்க்கைக்குத் திரும்புதல்

பித்தும் கவிதையும் 01

பித்தும் கவிதையும் 02

TAGS
Share This