கொடிறோஸ் – குறிப்பு 2

கொடிறோஸ் – குறிப்பு 2

யாழ்ப்பாணத்தில் வசித்துவரும் கவிஞர், எழுத்தாளர். இவரது கவிதைகள் “வாழ்க்கைக்கு திரும்புதல்” என்ற தொகுப்பிலும், ஆகாயம் பதிப்பகத்தால்
வெளியிடப்பட்ட “மயான காண்டம்” என்ற கூட்டுத் தொகுப்பிலும்
தொகுக்கப்பட்டுள்ளன. ‘புதிய சொல்’ என்ற கலை இலக்கிய எழுத்துச் செயற்பாட்டிற்கான இதழின் ஆசிரியர் குழுவில் ஒருவர். இது இவரது சமீபத்திய குறுநாவல்.

ஈழத்தில் இருந்து போரை
மையப்படுத்தாது, உணர்வை
மையப்படுத்தும் மற்றுமொரு நூல்.
சுகந்தன் என்னும் பதினோரு வயதுச் சிறுவனின் பார்வையில் நகரும் நாவல் பதினைந்தாவது வயதில் சுகந்தனின் வாழ்வில் ஏற்பட்ட மிகப்பெரிய மாறுதலுடன் தன்னை நிறைவு செய்து கொள்கிறது. கொடிறோஸ் யார்? சுகந்தனின் அம்மா.

காதல், காமம், வன்முறை, உயிர்கள் பலி, அதிர்ச்சித் திருப்பம் என்று எதுவுமேயில்லாத சுகந்தனின் Mundane வாழ்க்கையில், நாவலின்
இறுதிப்பகுதியைத் தவிர்த்து,
அப்பாவிடம் உடலெல்லாம்
புண்ணாகும்படி அடி வாங்குதல்,
சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ளுதல், உடன் பயிலும் ஆண்பெண் நண்பர்
காண, தேங்காய் பொறுக்குதல், மிக்சர் விற்றல், அப்பாவின் பிணைக்கடனுக்கு அம்மாவை தூஷணம் பேசியவனைக்
கற்பனையில் கத்தியால் குத்துதல்
போன்றவையே வரலாற்று
முக்கியத்துவம் வாய்ந்த சம்பவங்கள்.

இழப்பு நிச்சயம் என்று தெரியும் போது பிடிப்பு அதிகமாதல் இயல்பு. அது நாவலில் நன்கு வந்திருக்கிறது. கிரிசாந்தின் மொழி புனைவுக்கு
ஏதுவாகக் குழைந்து விரைகிறது.
யாழ்ப்பாணக்குடும்ப வாழ்வியல்
அதற்கான மொழியுடன் அழகாகப்
பதிவாகி இருக்கிறது. எல்லாவற்றையும் விட முக்கியமாக புலிகள் ஆதரவு அல்லது
எதிர்ப்பு என்ற நிலைப்பாட்டை விட்டு நகர்ந்து உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படைப்புகளாக, வேல்விழி,
தில்லை இவர்களைத் தொடர்ந்து
கிரிசாந்தும் அந்த வரிசையில்
இணைகிறார்.

சரவணன் மாணிக்கவாசகம்

TAGS
Share This