அன்னையர் அறமிழத்தல்

அறம் என்றால் என்ன என்பதற்கு ஜெயமோகன் தன் உரையொன்றில் கூறிய கதையொன்று அறத்தின் அடிப்படையைத் தீர்க்கமாக முன்வைப்பது. தோமஸ் அல்வா எடிசன் மின்சாரத்தைக் கண்டு பிடித்த பின்னர் முதலீட்டாளர்களைக் கவர்வதற்காகவும் அதன் சக்தியை மக்களுக்குக் காட்டவுமென ஒரு முதிய யானையை விலைக்கு வாங்கி அதன் மீது மின்சாரத்தைப் பாய்ச்சி கொன்று காட்டினார். எடிசன் செய்ததன் பின்னுள்ள நியாயங்களைப் பற்றி ஜெயமோகனின் நண்பரொருவர் சொல்லிய வாதங்களில் முதலாவது அதுவொரு முதிய யானை. இன்னும் கொஞ்ச நாட்களில் எப்படியோ இறந்து விடும். இரண்டாவது அவர் அதை விலை கொடுத்து வாங்கியிருக்கிறார். ஆகவே ஒரு விலை கொடுத்து வாங்கிய விலங்கைக் கொல்வதில் என்ன தவறு? சட்டபூர்வமாக எந்தத் தடையுமில்லை. மூன்றாவது வாதமானது, மின்சாரமென்பது மானுட குலத்திற்கே எவ்வளவு பெரிய ஆற்றல், அதைக் கண்டுபிடிக்க, மக்களுக்குக் காட்டி ஆராய்ச்சிகளுக்குப் பணம் பெறுவதற்காக யானை போன்ற பெரிய விலங்கைக் கொல்வதில் என்ன தவறு. இவ்வாறு யோசிக்கத் தொடங்கினால் ஒரு நூறு அல்லது இருநூறு நியாயங்கள் சொல்லலாம். ஆனால் யானையைக் கொன்றது எந்தநிலையிலும் அறமில்லை என்று சொல்லும் சமரசமற்ற கருணையே அறம். அதன் குரல் ஒலிக்காத சமூகம் தன் அடிப்படையையே இழக்கும் எனச் சொல்லியிருந்தார்.
அண்மையில் ஒரு ஆசிரியை வயிற்றில் குழந்தையோடு தன் கணவனால் தலை அரியப்பட்டு காட்டின் கரையில் வீசப்பட்டுக் கிடந்த சம்பவத்தை பெரும்பாலானவர்கள் அறிந்திருப்பர். சமூக வலைத்தளங்களுக்கு இத்தகைய படுகொலைகள் இனிய தீனியாக தங்கள் வக்கிரங்களுக்கான வாதங்களை அடுக்கி விளையாடும் களிக்கூடலாய் இருக்கும். பெண்கள் மீது நிகழ்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் வன்முறைகளை எளிய சராசரிகள் விளங்கிக் கொள்வது ஓர் ஒழுக்கப் பிரச்சினையாக மட்டுமே. அதற்கு மிஞ்சி அங்கும் குடியறத்தின் தொல் அறங்கள் ஒலிக்க வாய்ப்பில்லை. அப்பெண்ணின் வயிற்றில் வளர்ந்து கொண்டிருந்தது அவளது பாவத்தின் சம்பளம் என வகுத்திருப்பது ஆச்சரியமளிக்கும் ஒன்றல்ல. ஆனால் நேற்றுக் காலை இரண்டு மூத்த பெண் ஆசிரியர்கள் பஸ்ஸில் கதைத்துக் கொண்டிருந்ததைக் கேட்டு அதிர்ச்சியாக இருந்தது. அவர்களை நான் அறிவேன். என்னருகில் அமர்ந்து சில கதைகளைச் சொல்லி அப்பெண்ணின் மீதான ஆணின் கோபத்தின் நியாயத்தைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.
“என்ன தான் இருந்தாலும் அவா டைவேர்ஸ் வாங்கிட்டு இன்னொரு கலியாணம் கட்டியிருக்கலாம்” என்றார் ஒருவர்.
மற்றையவர், “ச்சீ. என்ன சொல்லுறியள்! அவாக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும். பொம்பிளையள் இப்பிடி போனா ஆம்பிளையள் என்ன செய்வாங்கள். அவன் வெட்டினதில என்ன பிழை. பார்த்தனியளே பேஸ் புக்கில, வெட்டினவன் நெத்தியில வீபூதிக் குறி பூசியிருக்கிறான். அவான்ர கள்ளப் புரியன் பியர் குடிச்சுக் கொண்டு திரியிற காவாலி. இவாவும் ஒரு ரீச்சரே. இவளுகளால தான் ரீச்சருகளுக்கு மரியாதையே போச்சு” என்றார்.
முன்னையவர் விடாது தொடர்ந்தார். “ஆமான ஆம்பிளையள் அப்பிடித் தான் செய்வாங்கள். என்ர இவரும் கதையக் கேட்டுட்டு அவன் தான் ஆம்பிளை எண்டார். பிள்ளையளுக்கும் வீட்டில சொன்னான், உப்பிடிச் செய்தா உப்பிடித் தான் ஆகுமெண்டு” என்றார்.
இருவரது குரலிலும் தெரிந்த தீவிரம் என்னை அச்சமூட்டியது. அன்னையராகியிருப்பவர்கள். குடிகளின் அறத்தை கன்னத்தில் அறைந்து சொல்ல வேண்டியவர்கள். “என்ன தான் இருந்தாலும் ஒரு பொம்பிளையத் தொட்டு அடிக்கவே கூடாது, வெட்டியா எறிஞ்சிருக்கிறாய் நாசமறுவானே. நீ புழுத்துப் போவாய். பொம்பிளையின்ர தலைய வெட்டின நீயொரு மனிசனே” என்று கேட்டிருப்பதே ஆதாரமான அறம். அவளது வாழ்க்கையையும் அதன் கதையும் எவருக்காவது தெரியுமா? அதன் ஒரு துண்டைப் பிடித்துக் கொண்டு அவளின் முழுக்கதாபாத்திரத்தையும் கதைகளால் உண்டாக்கி ஊதிப் பெருக்குகிறார்கள். இந்தக் கதைகளுக்குப் பின்னால் ஏதேனும் உண்மை இருக்குமா? எஞ்சியிருந்த அவளின் உடலைப் போல மிகுதிக் கதைகள் அவளுக்கும் உண்டு. அவள் வயிற்றில் கிடந்து மூச்சு முட்டித் துடித்துக் கருவறையில் மடிந்த அந்தக் குழந்தைக்கு இன்னும் தொடங்காத கதை உண்டு. அவள் இப்போது அந்தரத்தில் தொங்கும் தன் தலையுடன் இந்தக் கூட்டத்தின் கூக்குரல்களையும் அறச்சீறல்களையும் ஒழுக்கவாத பிடிகாப்புகளையும் பார்த்தால் என்ன எண்ணியிருப்பாள். அந்த மூர்க்கன் அவளுக்கு அளித்திருப்பது இந்தக் கேடுகெட்ட குடிகளிடமிருந்து விடுதலையை அல்லவா?
இப்பெண்ணின் படுகொலை நம் காலகட்டத்தின் மாபெரும் அறவீழ்ச்சிகளில் ஒன்று. கருவுடன் இருக்கும் எந்த உயிரும் மானுட அறத்தின் ஆதார நிலையில் பாதுகாக்கப்பட வேண்டியது. அதனைச் சோதனையிடுவது கூட அரிதானது. இராணுவக் கெடுபிடிகள் இருந்த காலங்களில் கூட கருச்சுமக்கும் பெண் என்பவள் கூடுமானவரையில் பாதுகாப்பாகவே இருந்தாள். ஆனால் இந்த 2025 இல் ஒருவன் ஒரு பெண்ணை நடு வீதியில் வைத்து இரும்புக் கம்பியால் அடித்து அவளது முள்ளந்தண்டை குலைத்து வேலைக்கும் செல்ல முடியாமல் வீட்டில் கிடத்தலாம். சின்னச்சாளம்பனில் பெண்ணுக்கு அடித்தவன் சில வாரங்களுக்கு முன்னர் விடுதலையாகி இருக்கிறான். அந்தச் சம்பவம் குறித்து ஒரு சிலருக்கேனும் ஞாபகம் இருக்குமென்று நினைக்கிறேன். சமூக வலைத்தளங்கள் கூச்சலிட்டு நீதி கோரின. அறம் பாடின.
இன்று இப்பெண் ஒழுக்கங் கெட்டவள் என முத்திரை குத்தியிருக்கிறார்கள். அவளுக்கு கணவனுடன் குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்கிறார்கள், அவளுக்கு இன்னொரு இளைஞனுடன் உறவு இருந்ததாகச் சொல்கிறார்கள். அவளுடன் உறவிலிருந்த இளைஞன் அவளது கணவனுக்கு அவளுடன் தனித்திருக்கும் ஒளிப்படங்களை அனுப்பி சிறு சண்டைக்காகவோ பழிவாங்குதலாகவோ செய்திருக்கிறான் எனச் சொல்கிறார்கள். சமூக வலைத்தளங்கள் பெரும்பாலும் எளிய மொண்ணைகளால் ஆனது. அவர்கள் அனைத்தையும் மானுடரின் கால்களின் இடையில் தேடுபவர்கள். அதற்கு மிஞ்சி ஒழுக்கமென்றாலோ அறமென்றாலோ என்னதென்று அறியாத இணைய மந்தர்கள். ஆனால் அன்னையர் அவளைக் கொன்றது பிழையில்லை எனச் சொன்னால் பெண்ணை அவள் அனுமதியின்றித் தொடுவதே மாபெரும் அறமீறல் என வகுத்த தொல்லறத்தை அழியவிட்டு வேடிக்கை பார்ப்பவர்கள் ஆவோம்.
நான் சமூக வலைத்தளங்களை நேரில் பார்ப்பவனல்ல. நண்பர்கள் சொல்வது தான். ஆனால் அன்றாடத்தில் சந்திக்கும் நூற்றுக்கணக்கானவர்களிடம் சமூக வலைத்தளங்களின் ஒழுக்கவாத மொண்ணை நாக்குகள் ஒலித்துக் கொண்டேயிருப்பதைச் சகிக்க முடியவில்லை. ஒட்டுமொத்தமாகக் கூடி அவள் வயிற்றிலிருந்த குழந்தை ஒரு ஊளைச் சதையென்றோ பாவப் பிண்டமென்றோ முடிவு இறுத்து விட்டார்கள். அவள் நடத்தை கெட்டவள். அவளது கள்ளக் காதலன் ஒரு பொறுக்கி. அவளது கணவன் பட்டை பூசிய வீரத்திருமகன். இந்த கூக்குரல்களுக்கு நடுவில் எவராவது அறம் தெரிந்தவர்களோ பெண்ணியவாதிகளோ அப்பெண்ணின் படுகொலைக்கு நீதி கேட்டு அவளுக்காக நின்றிருக்கின்றனரா என விசாரித்தேன். என் கைக்கு எட்டியவரை அப்படி எதுவும் கிடைக்கவில்லை. வழமையாகப் படுகொலை செய்யப்படும் பெண்களுக்கு நீதி கேட்டோ, ஆறுதலாகவோ இருக்கும் அமைப்புகள் இப்பெண்ணுக்கு எந்த நீதியைக் கோருவார்கள் எனவும் காத்திருக்கிறேன். ஒழுக்கவாதம் தானா பெண்ணியம் என்பதை முண்டமாகக் கிடக்கும் அப்பெண் எமக்குச் சொல்லப் போகிறாள்.ஆகவே நான் இதை எழுதியாக வேண்டி இருக்கிறது.
ஒரு முழுவாழ்க்கையை எளிய ஒழுக்கங்களைக் கொண்டு மதிப்பிட முடியாது. அப்பெண்ணின் நெருக்கடிகளும் வாழ்வும் தேர்வும் முழுமையாக எந்த நிபந்தனையுமின்றி மதிக்கப்பட வேண்டியது. அவளைக் கொல்ல எந்த நியாயமும் எவனுக்கும் இல்லை. அன்னையர் எழுந்து அவன் கைகளில் கொத்தாகப் பிடித்து அள்ளிய அவள் தலையை தாங்கிக் கொண்டிருக்க வேண்டும். அவள் வயிற்றில் வளர்ந்தது ஒரு குழந்தை என சொல்லியிருக்க வேண்டும். அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்து உமிழ்ந்து “விடடா அவளை” என அறத்தைச் சொல்லியிருக்க வேண்டும். இன்று அவனுக்கு அளிக்கும் கதாநாயக பிம்பங்கள் ஒவ்வொன்றும் மேலுமொரு பெண் அல்லது குழந்தை கொல்லப்படுவதற்கு நாம் சமூகமாக அளிக்கும் அறக் கத்தியின் பிடிகள் என உணர வேண்டும்.
ஒழுக்கமென்பதும் அறமென்பதும் முற்றிலும் வேறானவை. இரண்டுக்கும் பொதுத்தன்மைகள் உண்டு. அதேவேளை துல்லியமான வேறுபாடுகளும் உண்டு. எனக்கு பிறிதெவரைப் பற்றியும் இக்கணத்தில் கவலையில்லை. அன்னையருக்கு மட்டும் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். மனதின் ஆழத்தில் அவள் நீங்களே. அவள் ஏன் அப்படிச் செய்தாள் என்பதை நீங்களாக அமர்ந்து எண்ணிக் கொள்ளுங்கள். உங்கள் சொந்தச் சதையும் இரத்தமுமென.
ஒழுக்கமென்பது அவரவர் விரும்பும் ஆடைகளைப் போன்றவை. உங்கள் வீட்டில் இருப்பவை அவை. அவை உங்களின் தெரிவு. ஆனால் அறமென்பது கெளரவர் சபை நடுவே பாஞ்சாலி கோரிய ஒரு துண்டு மறைப்பு. தன் உடலைத் தான் மறைக்க விரும்பிக் கேட்டுக் கொண்ட அடிப்படை. அதுவே அறம். மானுட வாழ்க்கையில் ஒழுக்கம் ஒரு அளவு கோல் மட்டுமே. அறம் தான் அடிப்படை. வெட்டப்பட்டு முண்டமாகிக் கிடந்த அவள் உடலைப் பார்த்த ஒரு அன்னை சொன்னார் “வேசையாடினா உதான் நடக்கும்” என்று. எழுந்து அவள் கன்னத்தில் அறைந்து “வாயை மூடடி கிழவி. நீயெல்லாம் ஒரு மனுசியே” எனச் சொல்ல வேண்டும் போலிருந்தது.