வெடிமணியமும் இடியன் துவக்கும்

வெடிமணியமும் இடியன் துவக்கும்

மதிசுதாவின் வெடிமணியமும் இடியன் துவக்கும் சிறு படம் பார்த்தேன். தொடக்கத்திலே மதிசுதா ஒரு முழு நீளப்படத்திற்கு எழுதப்பட்ட திட்டமிடப்பட்ட, கதையைப் பொருளாதாரப் பிரச்சினைகளால் சிறுபடமாக எடுத்து முடித்ததாகப் போட்டிருந்தார். ‘நல்லபடம்’ எடுக்க வேண்டும் என்ற ஆர்வமுள்ளவர்களுக்கு ஈழ சினிமா கொடுக்க கூடிய முதல் நெருக்கடி, பணம். எனக்கு அதில் எப்போதும் ஆதங்கம் உண்டு. அச்சூழலை மாற்ற வேண்டும் என்பதிலும் பெருத்த உடன்பாடு உள்ளது.

ஆனால் இது படத்திலே எழுதப்பட்ட ப்ரேமாக சேர்க்கப்பட்டிருப்பது ஒரு வகை முன் தீர்மானத்தையும் கழிவிரக்கத்தையும் கோருகிறது. மதிசுதா ஒரு கலைஞராகப் பேட்டி ஒன்றில் கூற வேண்டியதை ஏன் கலையாக்கமொன்றினுள் கொண்டு வருகிறார். இந்தக் கழிவிரக்கத்துடன் எதற்கு பார்பவரைக் கதைக்குள் அனுப்ப வேண்டும்? அத்தோடு முழுநீளப்படமாகத்தான் எடுப்பேன் என்று முடிவெடுத்தபின் ஏன் தன்னைச் சமரசப்படுத்த வேண்டும் என்பதை மதிசுதா யோசிக்கலாம்.

சரி, ஆதங்கப்படும் அளவுக்கு படமிருக்குமா என்று பார்த்தால், கதையில் இயக்குனர் மசாலாவிற்காகக் கலந்த அன்பு ,உணர்வு வசப்பட்டு கதையின் பைப்பை உடைத்துக்கொண்டு பீறிட்டுக் கொள்கிறது. ஒரு நல்ல படத்திற்கு எது முதல் முக்கியம்? ஒரு நல்ல கதை.

வேட்டையின் தர்மத்தைப் – போராட்டத்துடன் இணைக்க நினைக்கிறார் இயக்குனர். உணர்வு வசப்படாமல் பார்த்தால், சரி பிழைகளுக்கு அப்பால் எல்லா போராட்டங்களும் அவையளவில் முக்கியமானவை, ஒரு கூட்டு அறத்தின் முதற்காரணத்தினால் பிறந்தவை என்பது எல்லோரும் ஏற்றுக்கொண்ட ஒன்று. கூடவே ஆயுதப்போராட்டமாக அது தன்னை வளர்த்துக்கொள்ளும் போதும், இந்தச் சமூகத்திடம் நியாயமிருந்தது. எனினும் ஆயுதப்போராட்டம் விரும்பி எடுக்கப்பட்டதாகவோ அது இறுதியான மகத்தான தீர்மானமாகவோ இருப்பதில்லை. அதாவது இந்தச்சமூகத்திடம் ஆயுதம்- வன்முறை திணிக்கப்படுகிறது என்பதே உண்மை. ஆயுதம் என்றாலும் சனநாயபூர்வமான நீதியுள்ள சமூகத்தை உண்டாக்குவது தானே அத்தனை விடுதலைப் போராட்டங்களினதும் இலக்கு? சாகவோ சாகடிக்கவோ பயிற்றப்பட்ட மந்தைகளை இராணுவ அமைப்புக்களோ தீவிரவாத அமைப்புக்களோதான் கொண்டிருக்கும். விடுதலைப் போராட்டம் என்பது விடுதலையடைவது இல்லையா? அதாவது ஒடுக்குமுறையாளரின் ஆயுதத்திலிருந்து மட்டுமில்லாமல் நம்முடைய ஆயுதங்களில் இருந்தும் நம்மை விடுவித்துக்கொள்வது தான் அசலான விடுதலை என்று நினைக்கிறேன்.

நிற்க

வேட்டையின் அறம் – விடுதலைப்போரின் அறம் இரண்டும் ஒரு பொதுப்பார்வையில் தொடர்புள்ளவை எனலாமே தவிர ஆழ்ந்து இறங்கினால் இரண்டும் வெவ்வேறுதான். ஏனென்றால் வேட்டை முடிவில்லாத பசியோடு சேர்ந்து வாழ்வது. விடுதலைப்போராட்டம் விடுவிப்பின் பின் ஆயுத வன்முறைய இல்லாமல் செய்யவோ, சனநாயகப் பொறிமுறைக்குள் கொண்டு வரவோ வேண்டியது. அது உன்னதமானதோ இறுதியானதோ இல்லை.

இங்கே உணவுப்பண்பாட்டுக்கான வேட்டையோ, அதன் பழக்குதலோ தொழிநுட்பம், மானுடத் திறன் சார்ந்த விடயம். ஆனால் இரண்டும் கொண்டுள்ள அறம் சார் தேவை, அதை ஒரு பெருமையாகவோ, வீரப்பிரதாபங்களாகவோ முன் வைக்கப்படும் போது அது வன்முறையின் ‘இன்புறுதல்’ மனோநிலையின் இன்னோர் பகுதியாகவே இருக்கிறது.

படத்தில் இருக்கும் அல்லது கதையில் இருக்கும் பெரிய கோளாறே வன்முறை மீதான அதீத உணர்வும், புனிதப்படுத்தலும்.
விடுதலைப் போருக்கு எடுத்த துவக்கு நீதியின் பொருட்டு எடுக்கப்படுவது, அது உன்னதம் செய்யப்பட்ட லட்சியங்களை வன்முறையை ‘ஒரு சாதனையாக’ கருதத் தொடங்கும் போது அது நீதியைக் கடந்து செல்கிறது. இந்தப்படத்திலும் அதுதான் நடக்கிறது. படத்தில் அப்படி ஒரு பிசுறு அடிக்கும் போதுதான் கதை இழந்து போய் உணர்ச்சியே மிஞ்சுகிறது.

மதிசுதாவிடம் எனக்குள்ள பிரியத்திற்கு முக்கிய காரணம் அவர் நிலத்தில் வாழக்கூடியவர், அந்த வாழ்க்கையையே கதையாக்க வேண்டும் என்பவர். குறிப்பாக இந்தியச்சூழலுக்கு எடுபடாமல் நிலத்தின் ‘மொழியை’க் கையாள முயற்சியேனும் செய்தவர். ஆனால் படத்தில் இருக்கும் மொழியும் அதன் நாடகீயமும் பாத்திரங்களுக்குள்/ கதைக்குள் செல்ல விடாமல் வெட்டி வெட்டி நிறுத்துகின்றன. அதுவும் ‘பெட்டைமிருகம்’ என்ற பதத்தை கேட்கும் போது அவ்வளவு தூரம் அந்நியப்பட்டேன். அங்கே பெட்டை வேறு மிருகம் வேறாக நிற்கும் மொழித்தோரணை அசூசை மனநிலையைப் பிறாண்டி விட்டது.

பொதுவாக வேட்டையின் போது பெண் மிருகத்தை அல்லது பிள்ளைத்தாச்சிப் பெண் விலங்கை அதன் இனம் பெருகும் நோக்கில் வேட்டையிலிருந்து விடுவிக்கும் வேட்டைச் சமூகங்கள் இருக்கின்றனர். இங்கே பெண் என்பதால் விடுவிக்கிறோம் என்பது அறவுணர்வு கிடையாது. அது இனப்பெருக்கம் பற்றிய கரிசனை என்றுதான் சொல்ல வேண்டும். மற்றபடி ஆண் மிருகத்திற்கு நீதி தேவையில்லை பெண் மிருகத்திற்கு தேவை என்பதெல்லாம் வெறும் புரட்டுகளும் உன்னதமாக்கல்களும்.

ஓநாய்கள் வேட்டையாடும் போது கூட ஒரு தொகைப் பெண் மிருகங்களையும் ஆண் மிருகங்களையும் தப்பவிடும். அங்கிருப்பது கருணையோ அறவுணர்வோ கிடையாது. அது ‘நற்குணங்களின்’ நீண்ட பட்டியலினுள் சோராது. அது இயற்கையின் உணவுச் சங்கிலியில் வந்து சேர்ந்த தந்திரம்.

மதிசுதா

படத்தில் வெடி மணியம் பெண் மிருகத்தைச் சுட்டதில்லை என்பதைப் அவரின் ‘நற்குண’ உருவாக்கத்திற்கு உதவுமாறு இயக்குனர் கையாளும் மொழியும் நாடகீயமும் சலிப்பை ஏற்படுத்துகின்றன. வசனங்கள் பழைய வானொலி நாடகங்களை ஞாபகப்படுத்தும் மொழியமைப்பு- இயல்புகளுடன் இருக்கின்றன. மதிசுதாவிற்கு சினிமாவின் மொழியும் சினிமாக்கான மொழியும் கைகூடுவதற்கு காலம் எடுக்கும் என்று நினைக்கிறேன். மறைந்த நடிகர் ஜேசுதாசனும் சரி அவரோடு தோன்றிய பிறரும் சரி கதையை உள்வாங்கிக் கொண்டு இயல்பாக விட்டிருந்தால் கூட நடித்திருப்பார்கள் போலுள்ளது. ஆனால் எழுதிக்கொடுத்த மொழி அவர்களை இழுத்து விழுத்திக்கொண்டே இருக்கிறது.

ஒரு கலைவெளிப்பாடு தான் நம்பும் வாழ்கையை , தான் நம்புகின்ற வாழ்க்கையாகவே வெளிப்படுத்தும் இயல்புள்ளது. அது உன்னதங்களும் உணர்வு வசப்படல்களும் பீறிடும் உடைந்த குழாயாக இல்லாமல் தன்னைப் பார்த்துக்கொள்ளும்.

ஒரு நீதிக்கதையேனும் சொல்ல முதல் நாம் அதனுடைய நீதியை முதலில் விளங்கிக்கொள்ள வேண்டும். வியாக்கியானப்படுத்த வேண்டும். ஏனென்றால் ஒரு கதையில் எது அதி முக்கியமானதென்றால், அது அதன் கதையேதான்.

(2020)

TAGS
Share This