காற்சட்டைக் கலாசாரம்
அண்மையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்குள் காற்சட்டையுடன் நுழைந்தவர்களை வாயில் காப்பாளர்கள் மறித்து உட்செல்லவிடாமல் தடுத்தமை சமூக வலைத்தளங்களிலும் வெகுசன வெளியிலும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. இதன் விளைவான உரையாடல்களில் உட்செல்ல முயன்ற தரப்பினரை மலினமாகச் சித்தரித்து தரக்குறைவாக ஏசி பல்வேறு கருத்துகள் பரிமாறப்படுகின்றன.
இந்தப் பிரச்சினைக்குள் நுழைவதற்கு முன் யாழ்ப்பாண மனநிலை ஆடை தொடர்பான வரையறைகளில் கடந்த காலத்தில் எவ்விதம் நடந்து கொண்டது, அதன் பொதுப்புத்தி எப்படியானது என்பதை விளங்கிக் கொள்வோம்.
சம்பவம் 01
சமூக செயற்பாட்டாளர் ரஜனி ராஜேஸ்வரி அவர்கள் நல்லூர் திருவிழாவிற்கு வேட்டி சட்டையுடன் சென்றார். தான் விரும்பிய ஆடையுடன் செல்வது அவரவர் சுதந்திரம் என்பது பாலபாடத்தில் சேர்க்கப்பட வேண்டியது. ஆனால் உடனே கொந்தளித்த பெரும்பாலான கலாசார போலீசார் வேட்டி கட்டினால் மேற்சட்டையை கழட்ட வேண்டியது தானே என்று அற்புதமான தர்க்கத்துடன் வந்தனர்.
ஆம்பிளையள் மாதிரி பொம்பிளை எல்லா விசயத்திலையும் இருக்கேலாது. பெண்ணியம் என்பது பெண்கள் வேலைக்குப் போதல், வருமானமீட்டல், வெளியில் செல்ல சுதந்திரம், ப்ளா,ப்ளா என்று ஒரு லிஸ்ட்டை பேசிக்கொண்டிருந்தனர். பத்திரிகைகளும் அதை ஒரு மோசமான செயலாகவே எதிர் கொண்டன.
குறைந்த பட்ச ஆதரவு கூட அவ்வேளையில் அவருக்குக் கிடைக்கவில்லை. பொம்பிளை பொம்பிளை மாதிரி இரு என்பதே இவ்வூரின் வழக்கு.
சம்பவம் 02
யாழ்ப்பாணம் கைலாசபதி அரங்கில் 2015 இல் வெனூரி பெரேரா என்ற சிங்கள ஆற்றுகைக் கலைஞர் ஒருவரின் ஆற்றுகை இடம்பெற்றது.
அதில் அவரது மேற்சட்டையை பார்வையாளருக்கு முதுகைக் காட்டியபடி அவிழ்த்தார். உடனே மாணவர்களின் முனகல் சத்தங்களும் கூக்குரல்களும் எழுந்து பரவியது. அவ் ஆற்றுகையில் பெண்களுக்கு இடம்பெறும் உடல்ரீதியிலான சித்திரவதைகளின் பல்வேறு தருணங்களை தனியாள் ஆற்றுகையாக நிகழ்த்தினார். அதற்கு சிலவாரங்கள் முதல் தான் வித்தியாவின் படுகொலை இடம்பெற்றது.
மேசையொன்றின் மீது கால்களைப் பரப்பியபடி வன்புணர்வின் போது துடிக்கும் உடலை அவர் நிகழ்த்திக் காட்டியபோது பாலியல் திரைப்படங்களில் எழும் ஒலிகளை எழுப்பியபடி மாணவர்கள் சிரிப்பலைகளில் மூழ்கியிருந்தனர். பெரும்பாலான பெண் மாணவர்கள் ஆண்களின் குரல்களால் உடல் நெளிய செயவதறியாது கலங்கியபடி இருந்தனர்.
ஆற்றுகை முடிந்த பின்னர் அரங்கில் அவரிடம் கேள்விகள் எழுப்பட்டன. அவர் சிரித்தபடி, அங்கிருந்த ஆண்களும் இந்தப் பார்வையாளர்களும் முழுவதும் இணைந்ததே எனது மேடை அது இந்த அரங்கு முழுவதற்குமான ஆற்றுகை. அவர்கள் எழுப்பிய ஒலிகளும் இந்த அரங்கின் பகுதியே. ரேப்பிஸ்ட்டுகள் எங்கோ காட்டிற்குள் ஒளிந்திருப்பவர்கள் அல்ல. அவர்கள் இங்கே இப்போதும் இருப்பவர்களே என்பதாக அவ்வாற்றுகை நிகழ்த்தப்பட்டது.
பின்னர் ஒரு வயதான பெண் விரிவுரையாளர் சொன்னார், ஏன் பெடியள் கல்லெடுத்து அடிக்காமல் விட்டாங்கள் என்று தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தினார்.
இவ்வகையில் பெண்ணுடல் மீது மட்டுமல்ல ஆணுடல் மீதும் அவர்களின் கலாசார பார்வை எத்தகைய பொதுப்புத்தியை கொண்டிருக்கிறது என்பதை விளங்கிக் கொள்ள அண்மையில் நடந்த சம்பவம் உதவியிருக்கிறது. அடுத்தவரின் உடல்மேல் வரையறையில்லாத உரிமையை இச் சமூகம் கொண்டிருக்கிறது. எதை அணிய வேண்டும் எப்படி நடக்க வேண்டும் என்பதை மரபு, கலாசாரம் போன்றவற்றின் மூலம் நியாயப்படுத்தலைச் செய்கிறது.
காற்சட்டை அணிந்து செல்வது எவ்வகையில் அநாகரிகமானது என்றே பிடிபடவில்லை. எவ்வளவு எளிமையான கேள்வி இது. உடனேயே நீதிமன்றத்திற்கு, பாராளுமன்றத்திற்கு இப்படிச் செல்லமுடியுமா என்று கேட்டிருக்கிறார்கள் சிலர்.( நான் பத்தாம்மாண்டு படிக்கும் போது பாராளுமன்றத்திற்கு காற்சட்டையுடன் போயிருக்கிறேன். பள்ளிக்கூடக் காற்சட்டை தான்🤣.) அங்கு அவ்வரையறைகள் உள்ளன என்பது ஏற்கெனவே சட்டபூர்வமான நடைமுறை. கழுத்து வரை பட்டன் அணிய வேண்டும், சேர்ட் உள்ளே விட்டிருக்க வேண்டும். கால் மேல் கால் போட்டு அமரக் கூடாது என்று அதற்கான வரையறைகள் உண்டு. அப்ப நீதிமன்றத்திற்குப் போவது போல் தான் பல்கலைக்கழகத்திற்கு போக வேண்டுமா? அங்கே என்ன குற்றவாளிகளையா கூட்டி வைத்திருக்கிறார்கள். கோயிலில் உள்ளே செல்லும் விதிமுறைகளைக் கூட ஒழுங்குபடுத்துகிறார்கள். வெளியே வேட்டித் துண்டு கொடுக்கும் நல்லூர் கூட யாழ்ப்பாணத்தில் தான் உண்டு. ஆனால் ஒரு கல்வி நிலையம் இவ்வளவு பிற்போக்கான கலாசார நெறிமுறைகளைக் கொண்டிருக்க வேண்டுமா? ஆடை விதிமுறைகள் இருக்கலாம், காற்சட்டையில் என்ன கெட்டு விடப்போகிறது.
உடனே பிகினி அணிந்து வரலாமா என்பது போலவும் கேட்டிருக்கிறார்கள். ஏன் இவ்வளவு உச்சமான நிலைகளை உதாரணத்துக்கு கொண்டு வருகிறார்கள். காற்சட்டை போடுவது அவ்வளவு நாகரிகமில்லையா? இந்த நாகரிக லிஸ்ட் எல்லாம் எங்கு தயாரிக்கிறார்கள்? யாழ்ப்பாணத்தின் கலாசாரத்தை தயவு செய்து காற்சட்டைக்குள் வைக்க வேண்டாம்.
என்னளவில் அப்படியொரு நடைமுறையை அவர்கள் கொண்டிருக்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவத்தின் பின்னரே அறிந்தேன். அதாவது, எழுதா நடைமுறைகள்.
காற்சட்டை அணிந்து சென்றவர்களின் நண்பியொருவர் அப்படி ஏதும் நடைமுறைகள் சட்டபூர்வமாக எழுத்தில் உள்ளதா என்று கேட்டமை வாயில் காப்பாளர்களையும் அங்கிருந்த மாணவர் குழுவொன்றையும் சீண்ட, உனக்கேனடி காட்ட வேண்டும் என்று ஒருமையில் அழைக்கும் உரிமையை வழங்கி விட்டது. யாரோ ஒரு பொது மகள்/ மகன் எங்கள் பல்கலைக்கழகத்தைப் பார்த்து இப்படிக் கேட்க முடியுமா? உனக்கேனடி காட்ட வேண்டும் என்று பொங்கி எழுந்து விட்டார்கள். கேள்விக்கிடமற்ற அடிபணிவையே அவர்கள் விரும்புகிறார்கள்.
அது தான் போக சமூக வலைத்தளத்தில் உள்ளவர்களில் ஒரு பகுதியினராவது இதை விளங்கிக் கொள்வார்கள் என்று அப்பிரச்சினையை அங்கு கொண்டு சென்றால் இதற்கு அந்த வாயில் காப்பாளர்களும் மாணவர்களுமே பரவாயில்லை என்னுமளவிற்குக் வசைகளை வாரியிறைத்திருக்கிறார்கள். பல்கலைகழகம் என்பது கோயிலுக்கு சமானம் என்பதில் தொடங்கி வாயில்காப்பாளர்கள் அடிக்காமல் விட்டது கண்டனத்துக்குரியது வரை மோசமான கருத்துகளையும், தனிமனித தாக்குதலையும், அவமதிப்புகளைக் காசா பணமா என்பது போல் அள்ளியிறைத்திருக்கிறார்கள்.
ராகிங் நேரங்களில் பெண்கள் கட்டாயம் பாவாடை சட்டை தான் அணிய வேண்டும் என்ற உன்னத நடைமுறைகளைக் கொண்டிருந்த மக்களல்லவா.
இந்தப் பிரச்சினையைப் பொறுத்த வரையில் அங்கு நடந்த திரைப்பட விழாவிற்கு அவர்கள் அப்படிச் செல்ல முடியும் என்று நினைத்து சென்று விட்டார்கள். வாயில் காப்பாளர்கள் நிதானமாகவே தமது நடைமுறைகளை விளக்கி அவர்களை உள் நுழையாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அவர்கள் தமது எஜமான்களைப் போல் குலைத்து விட்டார்கள். மாணவர்களும் நீங்கள் அந்த LGBTQ குரூப் தானே என்று சங்கை அறுப்பதைப் போல் கையைக் காட்டியபடி எகிறி வராமல் மனிதர்கள் போல் நடந்து கொண்டிருக்கலாம். அல்லது சுவஸ்திகாவை அடித்து விரட்டியது போல் இவர்களையும் அடித்து விரட்ட வேண்டும் என்று சொல்லாமல் மென்மையாகவும் புன்னகையுடனும் நிகழ்ந்திருக்க வேண்டிய அந் நாளை வாயில் காப்பாளர்களும் மாணவர்களும் ரவுடித் தனமாகவே எதிர் கொண்டனர். அவர்களுக்குப் பெரும்பான்மை சமூகம் பின்னைய நாட்களில் தனது ஏகோபித்த ஆதரவையும் பாராட்டையும் குவித்திருக்கிறது. அடுத்த முறை வேறு யாரையோ வேறு எதற்கோ அவர்கள் அடித்து விரட்டினால் மகிழ்ச்சியையும் கடமையை நிறைவேற்றியமைக்காக சான்றிதழ்களும் வழங்கப்படலாம். இப்படியான காற்சட்டைப் பிரச்சினைகளுக்காகப் பொங்கியெழும் மாணவரோ மக்களோ அங்கிருக்கும் எந்த முக்கியமான பிரச்சினைகளுக்கும் பொங்குவது குறைவு.
உதாரணத்திற்கு, பல்கலைக்கழகத்திற்குள் குமாரவடிவேல் குருபரன் என்ற மெய்யான புத்திஜீவி ஒருவர் சட்ட பீடத்தில் விரிவுரையாளராக இருந்து அரசியல் ரீதியில் பல்வேறு முக்கிய விவாதங்களுக்கான களங்களையும் வெளிகளையும் உருவாக்க உழைத்துத் தள்ளினார். இப் பல்கலைக்கழகம் தனது குழந்தைத்தனங்களில் இருந்து கொஞ்சமாவது வளர்ந்து விடும் என்ற நம்பிக்கை அப்போது இருந்தது. ஆனால் அங்குள்ள சில்லறை அரசியல் தரப்புகளாலும் அரச நெருக்கடிகளாலும் அவர் பதவி பறிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டபோது அறிக்கை விட்டுவிட்டு கமுக்கமாக இருந்தார்கள் மாணவப் புரட்சியாளர்கள். இவர்கள் வலிந்தவர் கிடைத்தால் வைத்து வாயிலேயே குத்துவார்கள் அரசுக்கும் அதன் ஏவலாளர்களுக்கும் எதிராக நிற்கும் ஒருவரைக் காக்க எந்த எல்லைக்குச் சென்று போராடியிருக்க வேண்டும்? இதுவே ராகிங் செய்து யாரையேனும் அவுட் ஒப் பவுன்ஸ் செய்திருந்தால் சாகும்வரை உண்ணாவிரதம் என்று பல்கலை வாசலில் பந்தலைப் போட்டிருப்பார்கள்.
பல்கலைக்கழகத்திற்குள் மாணவரை அரசியல் அறிவூட்டி பண்படுத்தும் ஒருவரைக் காக்க யாரையும் எதிர்க்கத் துணியாதவர்கள், காற்சட்டை போடுவதைக் கண்டு பண்பாடு கெட்டுவிட்டதாக அழுது புலம்புவதைப் பார்க்க பரிதாபமாயிருக்கிறது.
இந்த சர்ச்சையின் தொடர்ச்சியாக முக்கியமான எதிர்வினையொன்றை இயக்குனர் விசாகேச சந்திரசேகரம் செய்திருந்தார். திரைப்படவிழாவில் விசாகேச உரையாற்றிய கலந்துரையாடலுக்குச் செல்லவே குறித்த காற்சட்டை அணிந்த பார்வையாளர்கள் சென்றிருந்தனர். அவர்களிற்கு நிகழ்ந்தமைக்கு எதிராகவும் தோழமையை வெளிப்படுத்தும் வகையிலும் அப் பிரச்சினை நடந்த மாலையே, கார்கில்ஸில் இடம்பெற்ற திரைப்பட விழா விருது வழங்கலில் விசாகேச காற்சட்டை அணிந்து சென்று விருது வழங்கி வைத்தார். ஒரு கலைஞனின் செயலாக அது ஓர் முக்கியமான எதிர்வினை.
சமூக வலைத்தளங்களைப் பொறுத்தவரையில் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் ஏதாவது ஒரு தரப்பினை எடுத்துவிட்டார்கள் என்றால் அதையே பிடித்துத் தொங்குவார்கள். அவர்களின் ஆணவம், நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள விடாது. பகுத்தறிவுடன் சிந்தித்துப் பார்க்க விடாது. அங்கு இனி உய்வில்லை.
அதேநேரம் பல்கலைக்கழகத்தைப் பொறுத்த வரையில் காக்க வேண்டியது அரசியல் பண்பாட்டையா கலாசாரப் பண்பாட்டையா என்று ஒரு தெரிவை முன் வைத்தால் எல்லோரும் மீசையை முறுக்கியபடி கலாசாரத்தைக் காக்கவே வேட்டியை வரிந்து கட்டுவார்கள், முழங்கால் தெரிய.