சூதர்கள், பாணர்கள், கவிஞர்கள்
அறங்களை ஆக்குதலும் காத்தலும் விரித்தலும் அவை வழுவும் போது சுட்டுதலும் கவிதையின் முதற் தொழில். தமிழ்க் குடியின் நெடுவரலாற்றில் கவிஞர்களின் பணி இதுவே. வாழ்க்கைக்கான மேலான கனவுகளை ஆக்கி அளித்தலும் அளிக்கப்பட்ட கனவைக் காத்தலும் சொற்களின் வழியே நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஓரு வகையில் மானுட நிகழ்வை அதன் எளிய அன்றாடத் தர்க்கங்களிலிருந்து விடுவித்து இந்த விலங்குக் கூட்டத்தின் மேலான தன்மைகளைப் புனையும் செயல் கலை. எது நேரிடினும் அறத்தின் பொருட்டு தனக்களிக்கப்பட்ட சொற்களை எழுதுதலும் அதன் பொருட்டு எத்தகைய எதிர்நிலைகளை ஏற்றலும் இவர்களின் கடமை.
சமஸ்கிருதத்தில் சூதர்கள் என்றும் பழந்தமிழ் மரபில் பாணர்கள் என்றும் நவீனத் தமிழ் மரபில் கவிஞர்கள் என்றும் அழைக்கப்படும் குலத்தின் இயல்புகள் இவை. உலகம் முழுவதிலும் ஒவ்வொரு மொழியிலும் கவிஞர்கள் இதைத் தான் செய்து வருகிறார்கள். ஒரு சமூகத்தின் முன் எளிய உடலுடன் நின்று அதன் பிரமாண்டமான இயல்பை ஆக்குபவர்களும் அவர்களே அதன் எல்லைகளை மறுவரையறை செய்து ஆழ்மனதில் பதியம் வைப்பதும் அவர்களே. அவர்கள் பாடிப்பாடி வரலாற்றை எழுதுகிறார்கள், விசாரணை செய்கிறார்கள். இதனால் தான், வாழுங் காலத்தில் அவர்கள் பெருந்திரளின் எரிச்சலை அள்ளி வாங்கிக் கொள்கிறார்கள். இந்த எதிர்விளைவுகளை ஒரு பொருட்டாக மதிக்காமல் இப் பெருந்திரளின் முன் நின்று இது அறம். இது அறமில்லை என்று மானுடத்தை முன்னோக்கி நகர்த்தும் சொல் கவிஞருடையது. பண்டைய காலத்தில் பூசாரிகளினதும் கலையாடிகளினதும் நாவில் உதித்த அதே சொற்கள். மந்திரம் போல்வது கவிதை. உணர்ந்து சொல்லும் சொற்களே மந்திரமும் கவிதையும் ஆகின்றன.
சூதர்கள் பற்றி ஜெயமோகன் எழுதிய வெண்முரசில் வரும் ஒரு கதையை முன்வைத்து குலப்பாடகர்களின் இடத்தையும் தன்மையையும் உணர்ந்து கொள்க.
பீஷ்மர் அஸ்தினபுரியின் இளவரசர்களுக்காக வென்று வந்த பெண்களில் ஒருவர் அம்பாதேவி. அம்பாதேவி இளவரசரைத் திருமணம் செய்ய மறுத்து தான் நேசித்த செளப நாட்டு மன்னரிடம் போக விரும்புவதாகக் கூறி, பீஷ்மரிடம் வாதாடி அங்கு செல்கிறார். குலநெறிமுறைகளின் படி அம்பாதேவியை ஏற்க முடியாதென்று அரசன் சொன்னதும் புண்பட்ட நாகம் போல் மீண்டும் அஸ்தினபுரிக்கு பீஷ்மரிடம் சென்று சேர்கிறார். அவர் தான் ஒரு பிரம்மச்சாரி என்று கூறி அம்பாதேவியை ஏற்க மறுக்கிறார். அங்கிருந்து கோபமாகச் சென்ற அம்பாதேவிக்கு எந்த நாடும் அடைக்கலம் கொடுக்கவில்லை. இந்த நிலையில் தசகர்ணன் என்னும் சூதர் சௌபநகரம் பற்றிச் சொல்வதாக அந்தப் பகுதி ஆரம்பிக்கும்.
“அந்நகரில் இருந்து ஒவ்வொரு நாளும் கூட்டங்கூட்டமாக மக்கள் வெளியேறி பாஞ்சாலத்துக்கு சென்று கொண்டிருக்கிறார்கள் என்றார் தசகர்ணன். பெண்சாபம் விழுந்த மண் என்று சௌபத்து நிமித்திகர் சொன்னார்கள். நகர்நீங்கி காடுசென்று கொற்றவையாகி வந்து ஷத்ரியர்புரிகளுக்கெல்லாம் சென்ற அம்பாதேவி அந்நகருக்கு மட்டும் வரவில்லை. அவள் மீண்டும் வருவாள் என்று எண்ணி அனைத்துக் கோட்டைவாயில்களையும் மூடிவிட்டு சால்வ மன்னன் நடுங்கிக்கொண்டிருந்தான். அவள் பாஞ்சாலத்துக் கோட்டைவாயிலில் ஒரு காந்தள் மலர் மாலையைச் சூட்டிவிட்டு காட்டுக்குச் சென்றுவிட்டாள் என அறிந்ததும் நிறைவடைந்தவனாக கோட்டைவாயில்களைத் திறக்க ஆணையிட்டான். அதுவரை கோட்டைக்குள்ளும் புறமும் எவரும் அனுமதிக்கப்படவில்லை.
கோட்டைவாயில் திறந்த அன்று குலதெய்வமான சண்டிதேவிக்கு ஒரு பூசனை செய்து சூதர்களுக்கெல்லாம் பரிசுகள் வழங்க சால்வன் ஒருங்குசெய்தான். வாரக்கணக்கில் கோட்டைக்கு வெளியே தங்கியிருந்த சூதர்கள் ஊர்மன்றுக்கு வந்தனர். நகரமெங்கும் முரசறைந்து அனைவரும் வரவேண்டுமென்று ஆணையிட்டிருந்தமையால் நால்வருணத்து மக்களும் மன்றில் வந்து கூடியிருந்தார்கள். செங்கோலேந்திய காரியகன் முன்னால் வர வெண்குடை ஏந்திய தளபதி பின்னால் வர உடைவாளும் மணிமுடியுமாக வந்து மேடையில் இடப்பட்ட சிம்மாசனத்தில் அமர்ந்த சால்வன் அங்கே வாழ்த்தொலிகளே எழவில்லை என்பதை ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டான். அவன் பரிசில்களைக் கொண்டுவரும்படி சொன்னான்.
அரண்மனை சேவகர்களால் பொன், வெள்ளி நாணயங்களும் சிறு நகைகளும் அடங்கிய ஆமையோட்டுப்பெட்டி கொண்டுவந்து மன்றுமுன் வைக்கப்பட்டது. முறைப்படி முதுசூதர் வந்து மன்னனை வாழ்த்தி முதல்பரிசு பெறவேண்டும். தொங்கிய வெண்மீசையும் உலர்ந்த தேங்காய்நெற்று போன்ற முகமும் கொண்ட முதுசூதரான அஸ்வகர் எழுந்து தள்ளாடிய நடையில் சென்று மன்றுமேல் ஏறினார். முறைப்படி அவர் தன் வாத்தியத்துடன் வரவேண்டும். வெறுமே மன்றேறிய அவர் இருகைகளையும் விரித்து மக்களைநோக்கித் திரும்பி “சௌபநாட்டின் குடிகளை அழிவில்லாத சூதர்குலம் வணங்குகிறது. இங்கே நாங்கள் பெற்ற ஒவ்வொரு தானியத்துக்கும் எங்கள் சொற்களால் நன்றி சொல்கிறோம்” என்றார். அவரது குலம் ‘ஆம் ஆம் ஆம்’ என்றது.
சூதர் “இந்தமண் மீது பெண்சாபம் விழுந்துவிட்டது. இங்குவாழும் கற்பரசிகளினாலும் சான்றோர்களாலும்தான் இங்கு வானம் வெளியால் இன்னமும் தாங்கப்படுகிறது” என்றார். சால்வன் திடுக்கிட்டு எழுந்து நின்றான். சூதர் உரக்க “இனி இந்த நாட்டை சூதர் பாடாதொழிவோம் என இங்கு சூதர்களின் தெய்வமான ஆயிரம்நாகொண்ட ஆதிசேடன் மேல் ஆணையாகச் சொல்கிறோம். இந்நாட்டின் ஒரு துளி நீரோ ஒருமணி உணவோ சூதர்களால் ஏற்கப்படாது. இந்த மண்ணின் புழுதியை கால்களில் இருந்து கழுவிவிட்டு திரும்பிப்பாராமல் இதோ நீங்குகிறோம். இனி இங்கு சூதர்களின் நிழலும் விழாது. பன்னிரு தலைமுறைக்காலம் இச்சொல் இங்கே நீடிப்பதாக!” முதுசூதர் வணங்கி நிமிர்ந்த தலையுடன் இறங்கிச்சென்றார்.
சால்வன் கை அவனையறியாமலேயே உடைவாள் நோக்கிச் சென்றது. அமைச்சர் குணநாதர் கண்களால் அவனைத் தடுத்தார். சால்வன் கண்களில் நீர் கோர்க்க உடம்பு துடிக்க செயலிழந்து நின்றான். அவனையும் இறந்த அவனது மூதாதையரையும் பிறக்காத தலைமுறைகளையும் நெஞ்சுதுளைத்துக் கொன்று குருதிவழிய மண்ணில் பரப்பிப்போட்டுவிட்டு அந்த முதுசூதன் செல்வதுபோலப்பட்டது அவனுக்கு. மெல்லிய சிறு கழுத்தும், ஆடும் தலையும் கொண்ட வயோதிகன். அடுத்தவேளை உணவுக்கு காடுகளையும் மலைகளையும் தாண்டிச்செல்லவேண்டிய இரவலன். ஆனால் அளவற்ற அதிகாரம் கொண்டவன்.
மண்ணில் கால்விழும் ஓசை மட்டுமேயாக சூதர்கள் திரும்பிச்செல்வதை சால்வன் பார்த்துக்கொண்டிருந்தான். ஓடிப்போய் அவர்களின் புழுதிபடிந்த கால்களில் விழுந்து மன்றாடுவதைப்பற்றி எண்ணினான். ஆனால் அவர்கள் சொல்மீறுபவர்களல்ல. அவன் உடல்மேல் அவர்கள் நடந்துசெல்வார்கள். சென்று மறையும் சூதர்களை திகைத்து விரிந்த விழிகளுடன் நகரமக்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அந்த வாத்தியங்களுக்குள் தங்கள் மூதாதையர் உறைவதுபோல. அவர்களும் இறுதியாக பிரிந்து செல்வதுபோல. இறுதி சூதனும் மன்றில் இருந்து வெளியேறியபோது சால்வன் பெருமூச்சுடன் தன் செங்கோலையும் உடைவாளையும் வீரர்களிடம் கொடுத்துவிட்டு தளர்ந்த காலடிகளை எடுத்து வைத்து மேடையில் இருந்து இறங்கினான்.
அப்போது கூட்டத்திலிருந்து ஒரு பெண்குரல் கல் போல அவன் மேல் வந்து விழுந்தது. கரிய உடலும் புல்நார் ஆடையும் அணிந்த முதிய உழத்தி ஒருத்தி எழுந்து வெண்பற்கள் வெறுப்புடன் விரிந்து திறந்திருக்க, இடுங்கிய கண்களில் இருந்து கண்ணீர் வழிய, அவிழ்ந்து தோளில் தொங்கிய தலைமயிர் காற்றிலாட, கைநீட்டி கூச்சலிட்டாள். “எங்கள் வயல்களின்மேல் உப்புபோல உன் தீவினை பரந்துவிட்டதே… உன்குலம் அழியட்டும்! உன் நாவில் சொல்லும் கையில் திருவும் தோளில் மறமும் திகழாது போகட்டும்! நீ வேருடனும் கிளையுடனும் அழிக! உன் நிழல்பட்ட அனைத்தும் விஷம்பட்ட மண்போல பட்டுப்போகட்டும்!”
சால்வன் கால்கள் நடுங்கி நிற்கமுடியாமல் தளபதியை பற்றிக்கொண்டான். அத்தளபதியின் கையிலிருந்த வெண்குடை சமநிலைகெட்டுச் சரிய அதை அமைச்சர் பிடித்துக்கொண்டார். அனைவருமே நடுங்குவதுபோலத் தோன்றியது. கிழவி குனிந்து ஒருபிடி மண்ணை அள்ளி தூற்றிவிட்டு ஆங்காரமாக “ஒழிக உன் நாடு…! எங்கள் மூதாதையரைத் துரத்திய உன் செங்கோலில் மூதேவி வந்து அமரட்டும்!” என்று கூவியபடி நடந்து நகருக்கு வெளியே செல்லும் பாதையில் சென்றாள். அவள்பின்னால் அவள் குலமே சென்றது”.
*
சொல்லில் திகழ்பவர்களின் வரலாற்றுப் பாத்திரத்தை கவித்துவமான உச்சத்தில் நிகழ்த்தும் ஒரு காட்சி இது. மனித குல வரலாற்றில் அறம் அழிவதைச் சுட்டுதலும் அதற்கென அதை நிகழ்த்தியவரை சொல்லில் பாடாமல் விடுவதும் ஒரு மாபெரும் தண்டனையாக சித்தரிக்கப்பட்டிருக்கிறது. அடைக்கலமென்று வந்த பெண்ணைக் கைவிட்டமை அறமல்ல என்பதால் அதைச் செய்த மன்னனைப் பாடாதொழிவோம் என்றனர் சூதர்கள். மானுட வரலாற்றில் ஒரு பெயர் என்னவாக மக்களால் நினைக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரம் சூதர்களினதும் பாணர்களினதும் கவிஞர்களினதும் நாவிலுள்ளது. அதிலிருந்தே வரலாறு எழுகிறது. வரலாற்றின் மனிதர்கள் மனித ஆழ்மனத்தில் விதைக்கப்படுகிறார்கள். அவர்கள் எதுவாக எஞ்சுவார்கள் என்னும் இடத்தை வகுத்தளிப்பவர்கள் பாணர்களே.
வரலாறு இன்று ஒரு துறையாக வளர்ச்சியடைந்திருக்கிறது. ஈழத்தில் நிகழ்ந்த தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்கான ஆயுத வழிப் போராட்டம் எழுந்து அணைந்திருக்கிறது. அதைப் பல்வேறு தரப்பினரும் வரலாறாக முன் வைத்து எழுதி வருகிறார்கள். நான் ஒரு வரலாற்றாசிரியரின் குரலை விட குலப்பாடகராகிய கவிஞர்களின் குரலையே நம்புகிறேன். அவர்கள் கவிதைகளின் வழி அந்தப் பெரும் போரை மொழிக்குள் எழுதியிருக்கிறார்கள். அதன் கனவுகளை நியாயங்களை அடக்குமுறைகளை அற மீறல்களை கவனிக்கப்படாத குரல்களை எல்லாம் கவிதையில் நிலைநிறுத்தியிருக்கிறார்கள். நான் இப்போராட்டத்தின் சித்திரத்தை ஒரு மாபெரும் பாறையில் ஆயிரக்கணக்கான வரிகளால் வரையப்பட்ட ஓவியத் தொகுப்பாக்கிக் கொண்டவன். பாணர்களினதும் கவிஞர்களினதும் குலமரபின் இன்றைய குரல். அதன் அறங்களைக் காப்பதே என் குல அறம். என் நாவிலிருந்து குல மூத்தோர் எழுவதாக.
சன்னங்கள் மழை போல் வீழ, கடல் தன் கரங்களினால் ஓயாது கரையடித்து அலற, பெருங்காற்று வீசியெழுந்து, மரங்களை ஊடுருவி, மெளனமாகி, உறைந்து நின்று, மீண்டும் வீசிவிழுந்து, குருதி வீதிகளில் நடந்து, பிணங்களில் நெருப்புருகும் மணம் நிறைய, மயிரெரியும் நாற்றம் எழ, ஓலமிட்டு ஆயிரங் கிளைகளாய்க் கொட்டி உடையும் மின்னலின் பேரொளியில் போர் மீள நிகழ்வதாக.
*
மானுட அவலங்கள் மாபெரும் உணர்வுக் கொப்பளங்களாக வரலாறெங்கும் உள்ளது. மன்னராட்சி கால மரபுகளுக்கும் நெறிகளுக்கும் மாற்றான ஜனநாயக வழியிலமைந்த மக்களாட்சி என்ற அரசியல் தத்துவம் நிலைபெற்று வாழும் காலத்தில் ஆயுத வழி மூலமான விடுதலை என்ற எண்ணம் இதுவரை பல லட்சம் மக்களைத் தின்று செரித்துள்ளது. அதன் புதைமேட்டின் அடுக்குளுக்குள் கோடிக்கணக்கான எளிய மனிதர்கள் புதைபட்டிருக்கிறார்கள். வீரயுகம் என்பது ஆயுதம் கொண்டு போர் புரிந்த முன்வரலாற்றிலிருந்து கட்டியெழுப்பப்பட்டு தமிழ் மனத்தில் அதற்கான அற நியாயங்களை உருவகித்து அளித்திருக்கிறது. புறப்பாடல்களின் வழியும் தமிழ் மன்னர்களின் வரலாற்றுக் கதைகளின் வழியும் நவீன தேச அரசுகளின் உருவாக்கத்தின் வழியும் அரசொன்றை உருவாக்கும் கனவைத் தமிழ் மக்களில் பெரும்பான்மைத் தரப்பினர் அடைந்தனர்.
தமிழ்மக்களின் அரசியல் உரிமைகளை பவுத்த சிங்களப் பேரினவாத அரசு காலனிய விடுதலையிருந்து கிடைத்த புதிய சுதந்திர நாட்டிற்குள் மறுத்தே வந்திருக்கிறது. சிங்கள மொழியும் மதமுமே முதன்மையானதாகவும் ஏனைய மக்களை இரண்டாம் பட்சமானதுமாக நடத்துவது மக்களின் அன்றாட அனுபவமாக ஆகியிருந்தது.
சுயமரியாதையுள்ள எந்த மக்கள் கூட்டமும் தன்னுடைய மொழியும் நம்பிக்கைகளும் இழிவுபடுத்தப்படுவதை ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. போராடி அவற்றுக்கான சம உரிமைகளை நிலைநாட்டுவதே அவர்கள் செய்யக்கூடியது. அதற்கான வழிகளாக ஆரம்பத்தில் சில சத்தியாக்கிரக நடவடிக்கைகளையும் பேரணிகளையும் ஊர்வலங்களையும் மேற்கொண்டனர். அரசின் அடக்குமுறைகளும் செயல்களும் திட்டமிட்டு பலவகைகளிலும் முன்னகர தங்களுக்கான அரசியல் விடுதலையென்பது தங்களுக்கான தனி நாடு தான். அது தமிழீழம் தான் என்று அன்றிருந்த அரசியல் தலைமைகள் ஆக்கி அளித்த கனவை மக்கள் தங்களின் கனவாக வரித்துக் கொண்டனர். அக் கனவை நிறைவேற்ற அவர்களுக்கான தேர்தல் ஆணையை மக்கள் வழங்கினர். ஆனால் தேர்தலின் பின் மக்களால் வழங்கப்பட்ட ஆணையை நிறைவேற்ற முடியாமல் அரசியல்வாதிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டனர்.
இலங்கை அரசு தெற்கிலிருக்கும் பவுத்த சிங்களப் பேரினவாதத் தரப்பின் மூர்க்கமான எதிர்வினைகளுக்கு அஞ்சி, வாலாட்டும் வளர்ப்பு நாய்க்குட்டி. அதனால் எதையும் வாக்களித்தபடி நிறைவேற்ற முடியவில்லை. இதற்கிடையில் இளைஞர்கள் மனங்களில் ‘கொதிப்பு உயர்ந்து வந்தது’*. நடக்கும் அநீதிகளுக்கு எதிராக ஆயுத வழியில் விடுதலை பெறலாம் என்ற எண்ணம் வலுக்க பல இயக்கங்கள் தங்கள் அறிதல்களுக்கேற்ப விடுதலைக்கான கனவை ஒன்று சேர்ந்து உருவாக்கினார்கள்.
மூத்த தலைமுறையின் தாமதமாகும் பேச்சுவார்த்தைகளாலும், அரசின் ஏகபோகப்போக்கைப் பொறுக்க முடியாமலும், தமிழ் மக்கள் தங்கள் உரிமைகளைப் பற்றிப் பேசும் ஒவ்வொரு தடவையும் கொல்லப்படும் அப்பாவி உயிர்களுக்காகவும், கலவரங்களில் மக்கள் அழிந்து செல்வதைத் தடுக்கவும், இளைஞர்கள் தங்களின் கோபத்தின் ஆற்றலிலிருந்து தமிழீழக் கனவுக்கான தாகத்தை ஏந்தினர். தாகம் எழுந்தது. இளமையின் போர் தொடங்கியது.
* அ. யேசுராசாவின் கொதிப்பு உயர்ந்து வரும் என்ற கவிதை வரி இதில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
- அட்டைப்பட ஓவியம்: ரமணி