சூல் கொளல் : 01
பெருமழை வருவதற்கு முன் மேகம் கனிந்து காற்றில் கூடும் ஈரமென தமிழ்க்கவிதைக்குள் விடுதலை பற்றிய கனவு வந்து சேர்ந்தது. காலனித்துவ ஆட்சி முடிவடைந்து இலங்கை தனி நாடாக ஆவதற்கு முன்னிருந்தே இத் தீவில் சிங்கள, தமிழ் இனத்துவ முரண்பாடுகளுக்கான வரலாறுகள் உயிர்பெற்று இரு சர்ப்பங்களென வளர்ந்தன. காலனித்துவ ஆட்சிக்கெதிரான போக்கிலே சிங்களத் தேசியவாதமும் தமிழ்த்தேசியவாதமும் வளர்ந்து வால் நீண்டிருந்தன. சிங்களமும் பவுத்தமும் அநகாரிக தர்மபாலாவினால் முன்வைக்கப்பட்ட சமநேரத்தில் சைவமும் தமிழும் ஆறுமுகநாவலரால் முன்கொண்டு செல்லப்பட்டன. காலனித்துவ காலத்தில் இடம்பெற்ற யாப்பு உருவாக்கங்களிலும் தமிழ் – சிங்கள வித்தியாசங்கள், அதிகாரப் பகிர்வுகள் பற்றிய முரண்பாடுகள் கூர் பெற்றே வளர்ந்திருக்கின்றன.
சுதந்திர இலங்கையின் உருவாக்கத்திற்குப் பின் அதிகாரப் பகிர்வுகள் தொடர்பில் அரசியல் கட்சிகள் போராடுவதும் பின்னர் உடன்படிக்கைகள் நிகழ்வதும், அவ் உடன்படிக்கைகள் மதிப்பற்று காற்றில் வீசப்படுவதும் நடந்து வந்தது. இதற்கிடையில் சிங்களத் தேசியவாதம் இனவாதமாகப் பருத்திருந்தது. எதிர்காலத்தை நோக்கித் திட்டமிட்ட செயற்பாடுகளில் அரசு இறங்கியது. குடியேற்றத் திட்டங்கள், தனிச் சிங்களச் சட்டம், பவுத்தம் நாட்டின் முதன்மை மதம் போன்ற கருத்துகள் செயல்வடிவம் பெறத் தொடங்கின. இதனையிட்டு அச்சமடைந்த பிற சிறுபான்மைத் தலைமைகள் இதற்கெதிரான சத்தியாக்கிரகங்கள், பேரணிகள், கண்டனங்களை ஒழுங்கமைத்தன.
1949 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் கல்லோயா ஆற்றின் அணைக்கட்டோரம் ஆரம்பிக்கப்பட்ட குடியேற்றத் திட்டத்தில் 1956 அளவில் குடியிருத்தப்பட்ட மக்களில் ஐம்பது வீதமானவர்கள் சிங்கள மக்கள், ஏனையவர்கள் முஸ்லிம்கள், தமிழர்கள், வேடர்கள். இதில் பெரும்பான்மையாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களாக இருந்த பகுதிகளில் சிங்கள மக்கள் குடியேற்றப்பட்டமையால் அவ்வப்போது, சிறிய கலவரங்களும் முறுகல்களும் இருந்து வந்தன.
1956 தேர்தலில் வெற்றி பெற்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சி, தனிச் சிங்களச் சட்டத்தைக் கொண்டு வருவோம் என உறுதி பூண்டது. இதனைக் கண்டித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியினர், பாராளுமன்றத்தின் முன் அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஓர் அரச அமைச்சருடன் வந்த வன்முறைக் கும்பலினால் தமிழ்த் தலைவர்கள் தாக்கப்பட்டுப் படுகாயமடைந்தனர். பின்னர் அந்தக் கும்பல் அருகிருந்த நூற்றி ஐம்பதிற்க்கும் மேற்பட்ட தமிழ் மக்களின் கடைகளைத் தாக்கியழித்தனர்.
இதன் கொதிநிலை கல்லோயா வரை நீண்டது, ஆற்றில் கலந்த அமிலமென இனவாதம் பரவும் நெடியெழுந்தது. தமிழர்களால் சிங்களப் பெண் ஒருவர் பாலியல் வன்முறைக்கு ஆளானதாகவும் ஆயுதம் தாங்கிய ஆறாயிரம் தமிழர்கள் குடியேற்றத் திட்டத்தை நோக்கி வருவதாகவும் வதந்திகள் பரவின. கொதிப்படைந்த சிங்கள இனவாத கும்பல்கள் குடியேற்றத் திட்டத்திற்கான அரச வாகனங்களில் ஏறி அதிகாரிகள் சகிதம் வந்திறங்கி கல்லோயாவின் பள்ளத்தாக்கு வீதியெங்கும் அலைந்தனர். ஈழத் தமிழர்களினதும் இந்திய வம்சாவழித் தமிழர்களினதும் சொத்துக்கள் அழித்தெரிக்கப்பட்டன. நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யப்பட்டனர்.
தனிச் சிங்களச் சட்டத்தினை எதிர்த்து இடம்பெற்ற போராட்டங்களின் விளைவாக 1957 இல் அப்போதைய பிரதமர் பண்டாரநாயக்காவுக்கும் தந்தை செல்வாவுக்கும் இடையில் பண்டா – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. இதில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு – கிழக்கில் தமிழ் நிர்வாக மொழியாக இருக்கவும் உடன்பாடு எட்டப்பட்டது. இதனையடுத்து சிங்களத் தேசியவாதிகளும் பவுத்த துறவிகளும் இந்த உடன்படிக்கையை எதிர்த்தனர். ஐக்கிய தேசியக் கட்சியைச் சார்ந்த ஜெயவர்த்தனா கண்டிக்கு நடை பயணம் மேற்கொண்டு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். இதனையடுத்து பண்டா – செல்வா ஒப்பந்தம் காற்றிலெறியப்பட்டது.
இதற்கிடையில், பிரித்தானிய அரச கடற்படையினர் தமது திருகோணமலைத் தளத்தை மூடியதை அடுத்து நானூறு தமிழ்த் தொழிலாளர்கள் பணியிழந்தனர். இவர்களைச் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பொலனறுவை மாவட்டத்தில் குடியமர்த்த அரசு திட்டமிட்டது. இந்நடவடிக்கை அம்மாவட்டத்தில் உள்ள சிங்களவர் மத்தியில் எதிர்ப்பை உருவாக்கியது. சிங்களக் கும்பல்கள் அங்கு குடியேற வந்த தமிழர்களைத் தாக்கத் தொடங்கியது. இலங்கையின் பல பகுதிகளிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். புகையிரத நிலையத்திலும் பொது இடங்களிலும் கோயில்களிலும் சித்திரவதை செய்யப்பட்டும் உயிருடன் எரிக்கப்பட்டும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். கலவரத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாடசாலைகளில் அகதிகளாகினர். யாழ்ப்பாணத்திலிருந்து சிங்கள மக்களும் தெற்கிலிருந்து தமிழ் மக்களும் ஆயிரக்கணக்கில் இடம் மாற்றப்பட்டனர்.
1964 இல் மலையக மக்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்புவதற்கான சிங்கள இனவாதிகளின் நெருக்குதல்களைத் தொடர்ந்து அம்மக்களில் பெரும்பகுதியினர் இந்தியாவுக்கு அனுப்பப்படவும் ஒரு பகுதியினர் இலங்கையில் குடியுரிமை பெறவும் இன்னும் ஒரு பகுதியினர் நாடற்றவர்களும் ஆயினர்.
1965 இல் டட்லி – செல்வா ஒப்பந்தம் கைச்சாத்தாகியது. அதிலும் சிறுபான்மை மக்களின் உரிமைகள் முன்னிறுத்தப்பட்டன. 1967 இல் இலங்கைக் கல்வித் தரப்படுத்தல் சட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன. அக்காலத்தில் கல்வியிலும் பல்கலைக்கழகங்களிற்குத் தேர்வாகும் மாணவர்களின் எண்ணிக்கையிலும் தமிழர்களே அதிகமாக இருந்தனர். பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வாழும் நாட்டில், ஒரு சிறுபான்மை இனம் கல்வியில் ஆதிக்கத்தைக் கொண்டிருப்பதும் அதன் மூலம் உயர்பதவிகள் அவர்களுக்குச் சென்று சேர்வதும் நியாயமற்றது என்ற இனவாதக் குரல் வலுத்தது. ஆகவே இனவிகிதாசாரப் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டது. இதன் மூலம் கோட்டா நடைமுறைக்கு வந்தது. இது தமிழ் மக்களிடையே பாரிய எதிர் விளைவுகளை உண்டாக்கியது. தமிழ் மக்களின் வாழ்வாதாரத்திற்கான பிரதான மூலங்களில் கல்வி முதன்மையானது. அதேவேளை அவர்களுடைய பெருமிதம் மற்றும் அடையாளம் சார்ந்ததாகவும் கல்வியே இருந்தது. தரப்படுத்தலைக் கண்டித்துப் பேரணிகளும் ஊர்வலங்களும் இடம்பெற்றன.
இத்தகைய பின்னணிகளின் பின் 1974 இல், இடம்பெற்ற நான்காவது தமிழாராய்ச்சி மாநாடு யாழ்ப்பாணத்தில் ஐம்பதினாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்களிப்புடன் சிங்கள பவுத்த மேலாதிக்கத்திற்கு எதிராக ஒரு கலாசார எதிர்வினையாகவே முன்வைக்கப்பட்டது. அன்றைய இரவு நிகழ்வின் போது ஒன்பதுபேர் கொல்லப்பட்டனர். அரச படையினரின் தாக்குதல், மின் கம்பி அறுந்து வீழ்ந்தமை, வாகன நெருக்கடிகள் போன்ற குழப்பங்களுக்கிடையில் மக்கள் மாண்டனர். இது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் மன அதிர்வுகளை உண்டாக்கியது. அக்காலச் சூழ் நிலையில் அவசரகாலச் சட்டங்கள், அரசின் ஒடுக்குமுறைகள், தமிழ்ப்பிரதேசங்களில் உள்ள சிங்கள இராணுவம், பொலிசின் நடைமுறைகள் பற்றிய வெறுப்புணர்வு வளர்ந்து கருமுற்றியிருந்த காலம். மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக உண்டாக்கப்பட்ட நினைவுச் சின்னங்கள் இரண்டு தடவைகள் அழிக்கப்பட்டன. மக்கள் மனத்தில் எழுந்து விரிந்து கொண்டிருந்த உஷ்ணத்தை அ. யேசுராசாவின் இக் கவிதை அந்த நேரத்தின் மக்கள் மனதைப் பேராடியெனக் காலத்தின் முன் விரிக்கிறது.
கல்லுகளும், அலைகளும்
அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
எங்களது பெண்கள் குழந்தைகள், முதியோர்
‘வேட்டை நாய்களால்’ விரட்டப்பட்டனர்
‘கைப்பற்றப் பட்ட பூமியில்
அந்நியப் படைகளாய் அபிநயித்த சக்திகள்’
ஒன்பது உயிரின் அநியாய இழப்பு,
ஓ…! அன்றிரவிற் கொடுமைகள் நிகழ்ந்தன.
துயர்நிறை நெஞ்சோடும்
மரத்தில்
நாம், ஒரு சின்னமெழுப்பினோம்;
சிந்தப்பட்ட இரத்தத்
துளிகளாய்ச் சிவந்த ‘செவ் விரத்தம்பூக்கள்’
நாள்தோறும் சின்னத்தினடியில்,
எதையோ எமக்கு உணர்த்திக் கிடக்கும்.
மறுபடியும் இரவில்
கொடுமை நிகழ்ந்தது,
செத்த உடலை
ஓநாய்கள் சிதைப்பதாய்,
மரச் சின்னத்தை
‘அவர்கள்’ அழித்தனர்.
மக்கள் வலியவர்கள்
மறுபடி வெளியிடை
எழுப்பினர் கற்றூண்;
தம் நெஞ்சின் வலிய
நினைவுகள் திரண்டதாய்!
மீண்டும் ஓர்முறை ‘காக்கியின்நிழல்’
கவிந்து படிந்தது,
‘அதிகாரசக்திகள்’ கற்றூணை விழுத்தினர்.
அலைகள் ஓய்வதில்லை,
மறுபடியும் மக்கள் எழுப்பினர் சின்னம்;
கல்லுகளில் ஒன்பது, மெழுகு திரிகள்.
மெழுகு திரிகள் குறி யீடாய்நின்றன:
தியாகச் சுடரைத்
தம்முள் கொண்டதாய்…
கற்களின் புறத்தில்
மக்கள் தம் சுடுமூச்சு
நாளும் நாளும் பெருகியே வரும்.
அடக்கு முறைகள் நிகழ நிகழ
உஷ்ணவட்டம் விரிவடைகிறது!
உஷ்ண வட்டம் நிதமும் தாக்கையில்
கல்லும் உயிருறும், நாட்கள் வரும்;
கல்லும் உயிருறும் நாட்களும் வரும்!
கற்கள் உயிர்த்துச் சுடரைவீசையில்
அடக்கிய சக்திகள் தப்பமுடியுமா?
அடக்கியசக்திகள் தப்பமுடியுமா?
சோதிச் சுடாில் தூசிகள் பொசுங்கல்,
நியதி.
கற்கள் உயிர்த்துச் சுடரை வீசையில்
மக்கள் சும்மா படுத்துக்கிடப்பாரா?
கற்கள் உயிர்க்கையில்…கற்கள் உயிர்க்கையில்…
மக்களும் அலையாய்த் திரண்டே எழுவர்!
மக்கள் அலையாய்த் திரண்டு எழுகையில்
பொசுங்கிய தூசிச் சாம்பல்கள் யாவும்
அந்த அலையிற் கரைந்துபோகும்!
அந்த அலையிற் கரைந்தே போகும்!
(1977)
இக் கவிதை எழுதப்பட்ட காலத்திற்கு முன்னர், தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தனித் தமிழ் அரசே என்ற வட்டுக்கோட்டைத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது. தமிழ் மக்கள் அந்தத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியை அனைத்துப் பிரதேசங்களிலும் வெல்ல வைத்து தமது மனநிலையை வெளிப்படுத்தினர். இதனால் கொதிப்படைந்த சிங்கள இனவாதிகள் 1977 தேர்தல் வெற்றியின் பின், தமிழ் மக்களை அனுராதபுரம், கொழும்பு போன்ற பல பகுதிகளிலும் தாக்கினர்.
இதே காலகட்டத்தில் தமிழ் மக்களின் மீது நடாத்தப்பட்ட வன்முறைகளாலும் படுகொலைகளினாலும் உணர்வெழுச்சியடைந்த இளைஞர்கள் பலர் சிறு சிறு தாக்குதல்களையும் கொலைகளையும் மேற்கொள்ளத் தொடங்கியிருந்தனர். 1975 இல் அப்போதைய யாழ்ப்பாண மேயர் அல்பிரட் துரையப்பாவை விடுதலைப் புலிகள் சுட்டுக் கொன்றனர். இக் காலப்பகுதியில் அரசியல் கட்சிகளின் உணர்ச்சிகரப் பேச்சுகளாலும், அப்போது வெளியாகிக் கொண்டிருந்த அரசியல் சிந்தனைகளாலும் உந்தப்பட்ட ஓர் இளம் தலைமுறை ஆயுத வழியின் மூலமே தமக்கான தனி நாட்டினை உருவாக்க முடியும் என்ற நம்பிக்கை கொண்டது.
அக்காலத்தில் இராணுவத்தினரால் இத்தகைய இளைஞர்களைத் தேடும் படலங்கள் நிகழ்ந்தன. அரச ஒடுக்குமுறைகளால் மனம் துவண்டு போயிருந்த மக்கள், இளைஞர்களின் இவ் வன்முறைச் செயல்களால் ஒரு விதமான மனத்துணிவைக் கொண்டனர். இதனால் இராணுவப் பிரசன்னம் தமிழர் பகுதிகளில் இன்னும் அதிகரித்தது. அப்படி அதிகரிக்க அதிகரிக்க இராணுவம் கவிதைகளுக்குள்ளும் நுழைந்து பூட்ஸ் ஒலிகள் கேட்கத் தொடங்கின. எம். ஏ. நுஃமானின் இந்தக் கவிதை 1977 இல் எழுதப்பட்டது, யாழ்ப்பாண நகரம் தன் அன்றாட இயல்பை இழந்து, இராணுவம் உள்நுழைவதை, வரையப்பட்ட இரண்டு சித்திரங்கள் போல் எழுதிச் செல்கிறது.
நேற்றைய மாலையும் இன்றைய காலையும்
1
நேற்று மாலை
நாங்கள் இங்கிருந்தோம்
சனங்கள் நிறைந்த யாழ்நகர்த் தெருவில்
வாகன நெரிசலில்
சைக்கிளை நாங்கள் தள்ளிச் சென்றோம்.
பூபால சிங்கம் புத்தக நிலைய
முன்றலில் நின்றோம்
பத்திரிகைகளைப் புரட்டிப் பார்த்தோம்.
பஸ்நிலையத்தில் மக்கள் நெரிசலைப்
பார்த்தவா றிருந்தோம்.
பலவித முகங்கள்
பலவித நிறங்கள்
வந்தும் சென்றும்
ஏறியும் இறங்கியும்
அகல்வதைக் கண்டோம்.
சந்தைவரையும் நடந்து சென்றோம்
திருவள்ளுவர் சிலையைக் கடந்து
தபாற்கந்தோர்ச் சந்தியில் ஏறி
பண்ணை வெளியிற் காற்று வாங்கினோம்.
றீகலின்’ அருகே
பெட்டிக் கடையில்
தேனீர் அருந்தி – சிகரட் புகைத்தோம்.
ஜாக் லண்டனின்
‘வனத்தின் அழைப்பு’
திரைப்படம் பார்த்தோம்.
தலைமுடி கலைந்து பறக்கும் காற்றில்
சைக்கிளில் ஏறி
வீடு திரும்பினோம்.
2
இன்று காலை
இப்படி விடிந்தது
நாங்கள் நடந்த நகரத் தெருக்களில்
காக்கி உடையில் துவக்குகள் திரிந்தன.
குண்டுகள் பொழிந்தன;
உடலைத் துளைத்து
உயிரைக் குடித்தன.
பஸ்நிலையம் மரணித்திருந்தது.
மனித வாடையை நகரம் இழந்தது
கடைகள் எரிந்து புகைந்து கிடந்தன
குண்டு விழுந்த கட்டடமாக
பழைய சந்தை இடிந்து கிடந்தது
வீதிகள் தோறும்
டயர்கள் எரிந்து கரிந்து கிடந்தன.
இவ்வாறாக
இன்றைய வாழ்வை
நாங்கள் இழந்தோம்
இன்றைய மாலையை
நாங்கள் இழந்தோம்.
*
இந்தச் சித்திரத்தின் காலத்தில், தமிழ் இளைஞர்களையும் பொது மக்களையும் இராணுவம் அச்சுறுத்தியது. அரசின் கால் நகங்களின் கூரெனவும் வேட்டைப் பற்களின் கிழிமுனையெனவும் இராணுவம் செயற்பட்டது. மக்களின் அன்றாடத்தை அவர்கள் நிலைகுலைத்தனர். விசாரணையின் பெயரில் வீடுகளுக்குள் நுழைந்தனர். பெண்களுடன் பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டனர், இளைஞர்களைச் சந்தேகத்தில் சுட்டுப் படுகொலை செய்தனர். அதன் பின் அவர்களின் பெயரைப் பயங்கரவாதிகள் என்று கூறினர். இப்படியாகத் தமக்கென நாடும் அரசும் வேண்டுமெனக் கூறிய மக்கள் தேசத்தைப் பிரிப்பவர்கள் என்பதிலிருந்து பயங்கரவாதிகள் என்றாகினர். இந்த நாடு தனதில்லையென்ற உணர்வு முற்றினர். இம்மனநிலை மெளனமாகவும் உறுதியாகவும் ஒலிக்கும் யேசுராசாவின் கவிதை இது,
உன்னுடையவும் கதி…
கடற்கரை இருந்து நீ
வீடு திரும்புவாய்
அல்லது,
தியேட்டாில் நின்றும்
வீடு திரும்பலாம்.
திடீரெனத் துவக்குச் சத்தங் கேட்கும்,
சப்பாத்துகள் விரையும் ஓசையும் தொடரும்:
தெருவில் செத்து நீ
வீழ்ந்து கிடப்பாய்
உனது கரத்தில் கத்திமுளைக்கும்:
துவக்கும் முளைக்கலாம்!
‘பயங்கர வாதியாய்ப்’
பட்டமும் பெறுவாய்,
யாரும் ஒன்றும் கேட்க ஏலாது.
மௌனம் உறையும்:
ஆனால்
மக்களின் மனங்களில்,
கொதிப்பு உயர்ந்து வரும்.
எந்த மக்கள் தொகுதியும் தான் அச்சுறுத்தப்படும் போதும் சுயமரியாதை இழக்கும் பொழுதும், தன்னுடையதில்லை இந்த நாடு என்று உணருங்காலம் வரும். அது ஒரு நாளில் உருவாவதல்ல. சிங்கள இனவாத நோய், தொற்றி, வளர்ந்து, சிங்கள மக்களின் நரம்பு மண்டலங்களெல்லாம் பரவி, தகித்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அதற்குள்ளிருந்து தப்பித்துத் தனக்கென ஓருடலை அடையும் ஒடுக்குமுறை நினைவுகளின் தொகுப்பாக அவ்வெண்ணம் மாறும். ஒவ்வொரு முறை சிங்கள இனவாதம் தீப்பிடித்து எரியும் போதும், அழிக்கப்படும் அப்பாவிப் பொதுமக்களின் நினைவுகள் உயிருடன் இருப்பவர்களை உந்தித் தள்ளும். சிங்கள இனவாதக் குரல்களின் ஒலி, எல்லோர் காதுகளிலும் அசரீரியெனக் கேட்டுக்கொண்டிருந்த காலத்தில் யேசுராசாவின் இக் கவிதை உறுதி கொள்கிறது.
எனது வீடு
அவர்கள் சொல்லினர்
இந்தவீடு,
எனக்குச் சொந்தமில்லையென.
வெறுப்பு வழியும் பார்வையால்,
வீசி யெறிந்த
சொல் நெருப்பினால்
பல முறை சொல்லினர்,
இந்த வீடு
எனக்குச் சொந்தமில்லையென.
நானும் உணர்கிறேன்
இப்போது,
இது என்னுடைய தில்லையென;
நாளை எனக்கு ஒன்றுமில்லை,
இன்றும் நிச்சயமற்றது.
எனது வீட்டுக்குச் செல்ல வேண்டும்:
நான், போவேன்!