எரியும் நெருப்பும் காற்றில்: 02

எரியும் நெருப்பும் காற்றில்: 02

சிவரமணியின் வாழ்வும் கவிதையும் என்ற தலைப்பில் சித்திரலேகா மெளனகுரு சிவரமணியின் கவிதைத் தொகுப்பிற்கு எழுதிய முன்னுரை அக்காலட்டத்தின் மகத்தான ஆவணங்களில் ஒன்று, அதன் பின்னணியில் 1985 இலிருந்தான விடுதலைப்போராட்டத்தின் தன்மை மாற்றத்தைத் தீர்க்கமாக எதிர்கொள்கிறது அவ்வாவணம். அதிலிருந்து இந்த ஆக்கத்திற்குத் தேவையான பகுதிகளை இப்பகுதியில் சேர்த்திருக்கிறேன்.

*

“சிவரமணி யாழ்ப்பாணம் ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். பெற்றோர் இருவருமே ஆசிரியர்கள். குடும்பத்தில் இரு பெண் பிள்ளைகள். சிவரமணி மூத்தவர். சிவரமணியின் தந்தையார் சிவானந்தன் அரசியல் இலக்கிய ஈடுபாடு கொண்டவர். குறிப்பாக இடது சாரி இலக்கிய சார்பும் அது தொடர்பான முற்போக்கு இலக்கியங்கள்பால் ஆர்வமும் மிக்கவர். சிவரமணியின் அரசியல், இலக்கிய ஈடுபாட்டுக்கு இதுவும் ஒரு உந்துதலாய் இருந்திருக்க வேண்டும். எனினும் சிவரமணி மிகவும் இளையவராய் இருந்த போதே, எண்பதாம் ஆண்டுகளின் முற்பகுதியில் தந்தையார் இறந்து விட்டார். சிவரமணி சுண்டுக்குளி மகளிர் கல்லூரியிலும், பின்னர் வேம்படி மகளிர் கல்லூரியிலும் கற்றவர். 1987 ஆம் ஆண்டு யாழ் பல்கலைக்கழகத்தில் கலைப்பிரிவுக்கு அனுமதி பெற்று அரசறிவியல், ஆங்கிலம், மொழியியல் ஆகிய பாடங்களைக் கற்றார். பொதுக் கலைமாணி இறுதிப் பரீட்சைக்குத் தோற்ற முன்னரே அவரது வாழ்வு முடிந்தது.

சிவரமணி இலக்கிய ஆக்கத்தில் மாத்திரமின்றி ஓவியம், இசை முதலியவற்றிலும் ஈடுபாடு கொண்டிருந்தார். சில கோட்டுச் சித்திரங்களும் நீர்வர்ண ஓவியங்களும் வரைந்திருந்தார். ஆனால் தனக்கு மிக மிக நெருங்கியவர்கள் தவிர வேறு எவரிடமும் இவற்றைக் காண்பிக்கவில்லை. சிறு சிறு கலை, கைப்பணிப்பொருட்கள் சேகரிப்பதில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது.

சிவரமணி

*

சிவரமணி வாழ்ந்த, கவிதை ஆக்கிய காலப்பகுதி இலங்கையின் நவீன அரசியல், சமூக வரலாற்றில் மிக முக்கியமானதாகும். கடந்த சுமார் பத்து வருடங்களை உள்ளடக்கிய இக் காலகட்டத்தில் இலங்கை வாழ் தமிழர் வாழ்வு பல்வேறு நெருக்கடிகளையும் முரண்பாடுகளையும் கருத்துகளையும் அனுபவங்களையும் சந்தித்தது. தேசியவாத அரசியலின் முற்போக்கானதும் பிற்போக்கானதுமான கருத்தோட்டங்கள் கலந்து செயற்பட்ட இக் காலப் பகுதி தமிழர் வாழ்வுக்கும் அதன் பிரச்சனைகளுக்கும் அலாதியான ஒரு தன்மையை அளித்தன. இந்தப் பின்னணியில் பல்வேறு சமூக கலாசார இயக்கங்கள் தோன்றின. செயற்பாடுகள் நிகழ்ந்தன.
குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பெண்களுக்கிடையே புதிய உற்சகமும் விழிப்பும் ஏற்பட்டதை 80 ஆம் ஆண்டின் ஆரம்பத்திலிருந்தே அவதானிக்கலாம். இந்த உற்சாகம் வெவ்வேறு பெண்கள் அமைப்புகளின் தோற்றத்திலும் அவர்களது அரசியல் ஈடுபாட்டிலும், கலை, இலக்கிய நிகழ்ச்சிகளிலும் வெளிப்பட்டது.

இக் காலகட்டத்தில் தமிழ்த் தேசிய இயக்கத்தின்பால் மாணவர்களும் இளைஞர்களும் அதிகமாக ஈர்க்கப்படத் தொடங்கிய போது கணிசமான பெண்களும் இதில் இடம்பெற்றனர். தேசியக் குழுக்களது அங்கத்தவர்களாகவும், ஆதரவாளர்களாகவும் இவர்கள் செயற்பட்டனர். தேசியவாதக் குழுக்களும் தமது பெண்கள் அணிகளை அமைக்கத் தொடங்கின. ஈழப் பெண்கள் விடுதலை முன்னணி, தமிழ் பெண்கள் விடுதலைக் கழகம், சுதந்திரப் பறவைகள் என இவை அமைந்தன. ஆயுதப் பயிற்சி பெறுவதிலும், இராணுவ நடவடிக்கைகளிலும் பெண்கள் பங்குகொண்டனர்.

இவை தவிர அரசியற் குழுக்களைச் சாராத சுயாதீனமான சில பெண்கள் குழுக்களும் இக்காலகட்டத்தில் செயற்பட்டன. அன்னையர் முன்னணி( 1984-1987), யாழ் பல்கலைக்கழக பெண்கள் முற்போக்கு சங்கம் (1980- 1982), பெண்கள் ஆய்வு வட்டம், மாதர் மறுமலர்ச்சிப் பேரணி, தீவக மாதர் அணி, பூரணி பெண்கள் நிலையம், யாழ் பல்கலைக்கழக பெண்கள் சங்கம் ஆகியவை முக்கியமானவையாகும். (இவற்றுள் பெண்கள் ஆய்வு வட்டம், பூரணி, யாழ் பல்கலைக்கழக பெண்கள்ப்சங்கம் ஆகியவற்றில் சிவரமணி இணைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்).

பெண்கள் சஞ்சிகைகள் பல இக் காலட்டத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவந்தன… இவை தவிர சொல்லாத சேதிகள் எனும் பெண்களின் கவிதைத் தொகுதி ஒன்றும் வெளியானது. வாசிப்பதிலும் எழுதுவதிலும் ஒரு புத்தார்வமும் உற்சாகமும் வெளிப்பட்டது. கொழும்பிலிருந்து வெளிவந்த பெண்ணின் குரல் சஞ்சிகையின் அதிகளவான பிரதிகள் யாழ்ப்பாணப் பெண்களிடையே விற்பனையானது இதற்கு ஒரு உதாரணமாகும்.
தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் நிலை அவர்களது வெவ்வேறான பிரச்சினைகள், பெண் விடுதலை, பெண்ணிலைவாதம் ஆகியன குறித்து எண்பதுகளின் ஆரம்பத்திலிருந்து பெண்களிடையேயும் இளைஞர்களிடையேயும் இடம்பெற்ற கருத்துப்பரிமாறல்கள் வாதப் பிரதிவாதங்கள் பெண்களது கலை இலக்கிய முயற்சிகளிலும் பிரதிபலித்தன. பெண் விடுதலை, பெண்நிலைவாதம் தொடர்பான கருத்துப்பரிமாறல்களுக்கு தமிழ்த் தேசியவாதப் பின்னணி ஒரு ஏற்புடமையை அளித்திருந்தது. இக் காலத்தில் புதிதாக பல இளம் பெண்கள் கலை இலக்கியப் பரப்பில் காலடி வைத்தனர்.

‘பெண்களது இந்தக் கலை இலக்கிய வெளிப்பாடுகள் சமகாலத் தமிழ் கலை இலக்கியப் பரப்புக்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்தன. அதன் பொருட் பரப்பை விசாலித்தன. பெண்கள் தமது சமூக நிலமை, இருப்பு முதலியனவற்றைப் பற்றி தமது கண்ணோட்டத்தின் கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளியிடும் நிலை ஒரு புதிய அம்சமாயிற்று. முன்பு பேசப்படாத பல விடயங்கள் இலக்கியத்தில் பேசத் தொடங்கின.

பெண்களது பிரச்சினைகளை அவற்றிலும் குறிப்பாக சீதனம், கல்வியின்மை போன்றவை பற்றியே அதிகளவில் சீர்திருத்த நோக்கில் பேசுவதையே வழக்கமாயிருந்த தமிழ் இலக்கிய உலகில் இது ஒரு திடீர் திருப்பமாயிற்று. ஆண் பெண் அசமத்துவ உறவின் வெவ்வேறு பரிணாமங்கள் பெண்களது வாழ்வில் இவற்றால் ஏற்படும் பாதிப்புகள் ஆகியவை பற்றிய பெண்நிலை கருத்துகள் சிறிய அளவிலாயினும் இலக்கிய ஆக்கங்களில் இடம்பெற்றன. ஆணாதிக்கம் பெண் ஒடுக்குமுறை என்ற கருத்தாக்கங்கள் இலக்கிய வடிவம் பெறத் தொடங்கின.

இவ்வகையில் சமூகப் பாரம்பரியத்தால் பெண்களுக்கென வரையறுக்கப்பட்ட பாத்திரங்கள் பற்றிய வினாக்களும் விமர்சனங்களும், பலாத்காரம், காதல், ஆண்- பெண் உறவு பற்றிய பெண்நிலைக் கருத்துகளும் இலக்கிய வெளிப்பாடு பெற்றன. தமது அனுபவ திரட்சியையும் உணர்வுகளையும் மன உருக்கத்தையும் பெண் எழுத்தாளர்கள் கவிதையிலும் சிறுகதையிலும் வெளிப்படுத்த ஆரம்பித்தனர். இப்புதிய போக்கினுடைய ஒரு தீர்மான வெளிப்பாடு தான் 1986 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிரசுரமாகிய சொல்லாத சேதிகள் என்ற கவிதைத் தொகுதியாகும்.

பெண்களது ஆக்கங்கள் மாத்திரமல்லாது பொதுவாகவே இக்காலத்தில் நிகழ்ந்த கலை இலக்கிய நிகழ்ச்சிகள் பலவற்றின் மையப் பொருட்களில் பெண்கள் பிரச்சினையும் ஒன்று இருந்தது. குறிப்பாக இக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த பிரபலமான பல நாடகங்கள் பெண்கள் பற்றிப் பேசின. மண் சுமந்த மேனியர், தியாகத் திருமணம், சரிபாதி, மாதொருபாகம், தாயுமாய் நாயுமானார், சக்தி பிறக்குது ஆகியவை இவற்றுள் முக்கியமானவையாகும்.

இத்தகையதோர் பின்னணியில் தான் சிவரமணியும் எழுத ஆரம்பித்திருந்தார்.

மேற்கூறியவை மாத்திரமல்ல சமூக அமைப்பு, கலாசாரம் பற்றிய வினாக்களும் தர்க்கங்களும் இளைஞர் மத்தியில் இடம்பெற்றிருந்தன. பெண்களது விழிப்புணர்வு, பெண் விடுதலைக் கருத்துகள் ஆகியவை காரணமாக தவிர்க்கமுடியாதபடி வாழ்வின் சகல அம்சங்களைப் பற்றியும் மறுபரிசீலனை கருத்துப் பரிமாறல் ஆகியவை சிறிய அளவிலாவது காணப்பட்டன. திருமணம் குடும்பம், ஆண் – பெண் உறவு, காதல், கற்பு பற்றி பல வினாக்கள் எழுந்தன. இவற்றுடன் இலக்கியம் கலை ஆக்கம், அரசியல் கட்சி, தலைமையும் தொண்டர்களும் போன்றவை பற்றிய கருத்துத் தேடல்களும் இடம்பெற்றன.
மொத்தத்தில் இக் காலத்தில் திறந்த மனதுடன் தம்மை சுற்றி நிகழ்பவற்றை அவதானிக்கும் உணர்திறன் மிக்க இளம் தலைமுறையினருக்கு அவர்களது புத்தியை விசாலிக்கக் கூடிய உலகப் பார்வையை ஆழமாக்கவல்ல பல்வேறு சந்தர்ப்பங்கள் இருந்தன.

இக்காலத்தில் தான் சிவரமணி வளர்ந்து கொண்டிருந்தார், எழுதத்தொடங்கியிருந்தார்.

1985 ஆம் ஆண்டிலிருந்து பெண்கள் ஆய்வு வட்டத்தின் அங்கத்தவராக இணைந்த சிவரமணி பல கலந்துரையாடல்கள், கருத்தரங்குகளில் ஆர்வமாகப் பங்கு பற்றினார். கவிதா நிகழ்வு போன்ற கலை நிகழ்ச்சிகளிலும் ஈடுபட்டார். கலந்துரையாடல்களின் போது அவர் வெளிப்படுத்திய உற்சாகத்தையும் கூர்மையான உணர்திறனையும் தன்னை சுற்றியுள்ள விடயங்கள் பற்றிய காத்திரமான விமர்சனத்தினையும் கண்டு வியப்புற்றிருக்கிறேன். மிக இளம் வயதிலேயே உலக நடப்புகளை அறிந்து புரிந்து கொள்ள விரும்புகிற ஆர்வத்தையும் அவரது பல்துறை வாசிப்பு நாட்டத்தையும் கண்டு மகிழ்ச்சியும் திருப்தியும் அடைந்திருக்கிறேன்.
தமிழ்ப் பெண்களிடையே வளர்கின்ற விழிப்புணர்வினதும் விடுதலை ஆர்வத்தினதும் தற்துணிவினதும் ஒரு தனியாள் அடையாளமாக அவர் தென்பட்டார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் 1988 ஆம் ஆண்டிலிருந்து செயற்படத் தொடங்கிய பல்கலைக்கழக பெண்கள் சங்கத்தின் நிகழ்ச்சிகளில் சிவரமணி தவறாது பங்கு கொண்டார். அவர் பங்குபற்றுகின்ற கலந்துரையாடல்கள் சிந்திக்கத் தூண்டுவனவாக மாத்திரமின்றி சலசலப்பையும் ஏற்படுத்துவனவாக அமைந்தன. இச் சங்கத்தின் மாதாந்தக் கூட்டமொன்றில் ‘வெகுசனத் தொடர்பு சாதனங்கள்- கருத்துநிலை, பெண்கள்’ தொடர்பாக அவர் வாசித்த கட்டுரை முக்கியமானது. யாழ்ப்பாணம் உடுவிலில் இயங்கும் பூரணி பெண்கள் நிலையத்தின் ஆதரவாளர்களில் ஒருவராகவும் சிவரமணி இயங்கினார். வாழ்க்கை ஆதாரங்களை இழந்த வறிய கிராமத்து இளம் பெண்களைக் கொண்டு இயங்கிய அந்த நிலையத்தில் பெண்களிடையே கல்வி அறிவை வளர்க்க ஒழுங்கு செய்யப்பட்ட வகுப்புகள் சிலவற்றை அவர் நடத்தினார். யாழ்ப்பாணத்தில் சாந்திகம் உளவளத் துணை நிலையத்திலும் அவர் பயிற்சி பெற்றார். இந்தப் பயிற்சியின் மூலம் போர் நிலையால் உளரீதியாகப் பாதிப்படைந்த சிறுவர்கள், பெண்கள் மத்தியில் பணியாற்றுவதற்கும் அவர் தன்னை தயார்ப்படுத்தலாம் என்றும் கருதினார். சிவரமணிக்கு தென்னிலங்கையில் இயங்கிய சில பெண்கள் அமைப்புகள், மாணவர் அமைப்புகளிலும் தொடர்பிருந்தது. இத்தகைய தொடர்புகளும் அவரது பார்வை விசாலிப்புக்கும் பரந்த நோக்கிற்கும் துணை செய்தன.

பிலிப்பைன்ஸ், இந்தியா போன்ற நாடுகளில் கருத்தரங்குகளில் கலந்து கொண்டிருக்கிறார். அங்கெல்லாம் தனது தயக்கமற்ற நேர்மையான உரையாடல்களக பயனுள்ள பல சிந்தனைகளை ஏற்படுத்தியுள்ளார். இக் கருத்தரங்குகளில் அவருடன் கலந்து கொண்டோர் இதனைக் கூறியுள்ளனர்.
எனினும் இத்தகைய பொது நல செயலூக்கமும் தற்துணிவும் சுதந்திர விகசிப்பும் கொண்ட இளம் பெண்களை எமது சமூகம் எவ்வாறு நோக்குகிறது? இத்தகைய பெண்களை ஏற்றுக்கொள்ளுமளவு அதன் கருத்துநிலை தாராண்மைத் தன்மை உடையதாய் அமைந்துள்ளதா? எத்தகைய தடைகளை அவர்கள் வழியில் அது ஏற்படுத்துகிறது என்பவை முக்கியமான வினாக்களாகும். இது பற்றிய சமூக கருத்து நிலை ஆராய்ச்சி விரிவாக்கத்திற்கு இது இடமன்று. எனினும் சுருக்கமாக ஒன்று கூறலாம். சுதந்திர எண்ணமும், ஊக்கமும் கொண்டவர்கள், குறிப்பாகப் பெண்கள் தமது மூச்சுத் திணறுவது போல உணரும் ஒரு பாலைவனச் சூழலே இலங்கைத் தமிழ்ச் சமூகத்தின் பல தளங்களிலும் முதன்மையாகக் காணப்படுகிறது. இடையிடையே தளிர்விட முயலும் புதிய சிந்தனைகள், முற்போக்கான ஆர்வங்கள், முயற்சிகள் பலத்த நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. இது பொதுவானதொரு விரக்திக்கும், செயலின்மைக்கும் வழிகோலக் கூடிய அபாயத்தை உள்ளடக்கியது…
பொதுவாகவே 80 களில் ஆரம்பத்தில் பெண்களிடையே குமிழியிட்ட புத்தார்வமும், செயலூக்கமும் பிற்பகுதியில் குறைந்து போனமைக்குச் சில அரசியற் காரணங்களும் இருந்தன. குறிப்பாக 87 ஆம் ஆண்டிற்கு முன்னர் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த போதிலும் பெண்கள் அமைப்புகள் உற்சாகமாகச் செயற்பட்டன. நான் முன்னர் குறிப்பிட்ட பெண்கள் சஞ்சிகைகள் 84,85,86 ஆம் ஆண்டுகளில் வெளிவந்தவையாகும். தேசிய விடுதலை என்ற கருத்தாக்கப் பின்னணியும் இவை யாவற்றுக்கும் ஏற்புடமையையும் உற்சாகத்தையும் அளித்திருந்தது.

ஆனால் 80 களின் நடுப்பகுதியிருந்து தேசியக் குழுக்களிடையே வளர்ந்து வந்த எதேச்சாதிகாரப் போக்கு வெளிப்படையாகவே தென்பட்ட அதிகாரத்திற்கான போட்டி ஆகியவை ஜனநாயகத் தன்மைக்கு கெடுதி விளைவித்ததுடன் குழுக்கள் எதனையும் சாராமல் பொதுவான தேசிய விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவு அளித்தவர்கள் பலரையும் விரக்தி அடையச் செய்தன. அத்துடன் 87 இன் பிற்பகுதியில் இந்திய அமைதிப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற யுத்தம் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடி நிலை சமூகத்தில் சுயாதீனமான அமைப்புகள் சுதந்திரமாக இயங்கத்தக்க சூழலை இல்லாமல் செய்தன. அத்துடன் 1990 ஜூன் நடுப்பகுதியில் மீண்டும் ஏற்பட்ட போர் நிலமை தேசிய விடுதலை இயக்கங்கள் எனக் கூறிக் கொள்பவற்றின் எதேச்சதிகாரம், வன்முறை ஆகியவற்றால் முன்பு இயங்கிய பல அமைப்புகள் செயலிழந்தன. அல்லது அவற்றின் செயற்பாடுகள் மிகக் குறைந்தன. மாற்றுக்கருத்துகளுக்கு முகம் கொடுத்தல், விமர்சனத்துக்கு செவி சாய்தல், பொது வேலைத்திட்டங்களில் ஒன்றிணைதல் ஆகியவற்றுக்கு இடமில்லாது போயிற்று. இது சமூகத்தில் பின்னுக்குத் தள்ளப்பட்டிருந்த பிற்போக்கான கருத்துகளும் சக்திகளும் துணிவாக வெளிப்படக் கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கியது. குறிப்பாக பெண்களிடையே ஊற்றெடுத்த உற்சாகம் செயலூக்கம் ஆகியவற்றுக்கு ஆரம்பத்தில் தேசிய விடுதலை என்ற கருத்து நிலை வழங்கியிருந்த ஏற்புடமையின் காரணமாக அவற்றைத் துணிந்து எதிர்ப்பதற்கு தைரியமற்றிருந்த பழமைவாத சக்திகள் துணிவாக வெளிப்பட்டன.
ஒரு உதாரணத்தை மாத்திரம் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அதன் ஆரம்பத்திலிருந்தே பல முற்போக்கான அரசியல், சமூக, கலாசார செயற்பாடுகளின் தளமாக இயங்கி வந்துள்ளது. தமிழ்த்தேசியவாதத்தின் முற்போக்கான ஓட்டங்கள் இக் கல்வி நிலையத்தில் சங்கமித்ததை எவரும் மறுக்க முடியாது. அவ்வாறே பெண்களது பல முற்போக்கான செயற்பாடுகளுக்கும் இது ஆதரவளித்து வந்தது. ஆனால் சமூகத்தில் முன்னுக்கு வந்த சமூகப்பழமை வாதம் பல்கலைக்கழகத்திலும் பிற்காலத்தில் தலை காட்டியது. 1989 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தில் பெண்களின் விழிப்புணர்வுக்கும் பெண்ணிலைவாதத்திற்கும் எதிரான பிற்போக்குச் சக்திகளின் குரல் வெளிப்படையாக ஒலித்தது. பல்கலைக்கழகத்திற்கு அனுமதி பெற்ற புதிய மாணவிகளின் ஆடை அணிதல் முறைக்குச் சிரேஷ்ட மாணவர்கள்( ஆண்கள்) விதிக்கும் சில கட்டுப்பாடுகளில் ஆரம்பித்து பெண்நிலைவாதத்திற்கும், பெண்நிலைவாதிகளுக்கும் எதிரான கோஷங்களைத் தாங்கிய சுவரொட்டிகளாக இவை வெளிப்பட்டன. சிவரமணி இக்காலகட்டத்தில் பல்கலைக்கழக மாணவி என்பதும் கேலிக்கும் தாக்குதலுக்கும் ஆளான பெண்களில் ஒருவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே வருடத்தில் தான் பல்கலைக்கழக மருத்துவ பீட விரிவுரையாளரும் பெண்நிலைவாதியுமான ரஜனி திராணகம இலங்கையில் சகல அரசியற் தரப்பினரதும் மனித உரிமை மீறல்களை வெளிப்படையாகக் கண்டித்ததற்காக யாழ்ப்பாணத்தில் ‘ இனந்தெரியாத’ நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இத்தகைய நெருக்கடியான காலகட்டத்திலும் யாழ் பல்கலைக்கழகப் பெண்கள் சங்கமும், 89 ஆம் ஆண்டு உருவான பூரணி பெண்கள் நிலையமும் பெண்கள் ஆய்வு வட்டமும் சுயாதீனமாக இயங்கி வந்தன. சிவரமணி இவற்றுடன் சேர்ந்து செயற்பட்டார்.

இங்கு நான் மேலே விபரித்த சூழல் தான் குறிப்பாகப் பெண்களுக்கு ஒரே சமயத்தில் நம்பிக்கையையும், நம்பிக்கையின்மையையும் வெளிக்காட்டிய சூழலாகும். ” வாருங்கள் தோழியரே வையகத்தை வென்றெடுப்போம்” என ஆரம்பத்தில் எழுத முடிந்த சிவரமணிக்கு 89 இன் இறுதியில்

“…நாங்கள் எழுந்தோம்
உலகை மாற்ற அல்ல
இன்னொரு இரவு நோக்கி”
என தன்னைச் சுற்றியுள்ள யதார்த்தத்தை உணர்ந்த சோர்வைத் தான் கவிதையில் வெளிக்காட்ட முடிந்தது.

சிவரமணி வாழ்ந்த, விகசித்த, இறந்துபோன இந்தக் காலகட்டம் இலங்கைத் தமிழர் வாழ்வில் மிக முக்கியமானது. சில வெற்றிகளதும், பல தோல்விகளதும் சாட்சியமாக உள்ளது.

இத்தகைய பின்னணியில் வாழ்ந்த சிவரமணி தனது இறப்பிற்கு முன்பான இரண்டு வருடங்களிலும் பல நெருக்கடிகளுக்கு உக்கிரமாக ஆளானார். நியாயத்திற்காகவும், பெண்கள் உரிமைக்காகவும் அவர் கதைத்த போதும், செயற்பட்ட போதும், கேலி செய்யப்பட்ட, துன்புறுத்தப்பட்ட நிகழ்ச்சிகள் சில 1989 இல் நடைபெற்றன. ஆனால் சிவரமணி விட்டுக்கொடுக்கவோ சமரசம் செய்யவோ முயலவில்லை. திருமணம் செய்யுமாறு அவரை வற்புறுத்திய உறவினர்களுடனும் அடிக்கடி அவர் முரண்பட நேரிட்டது.
நான் மேலே கூறியவாறு தன்னுணர்வும், சுதந்திர ஆர்வமுமுள்ள பெண்களுக்கு எமது சமூகத்தில் வாழ்க்கை நிரந்தரமான ஒரு போராட்டமே. தனது கருத்துக்களினதும் ஆர்வங்களினதும் வாழ்வா? சாவா? என்ற போராட்டம். சிவரமணியும் போராடினார். தமது கருத்துக்களையும் ஆர்வங்களையும் உயிர்ப்புடன் வைத்துக்கொள்ள முனைந்தார். ஆனால் விட்டுக்கொடு! சமரசம் செய்! என வினாடிக்கு வினாடி எச்சரித்துக்கொண்டிருக்கும் சமூகத்துடன் தான் முற்றிலும் உயிர்ப்புடன் வாழமுடியாது என உணர்ந்தார் போலும்!


(1993)

சித்திரலேகா மௌனகுரு

TAGS
Share This